அந்த நாள் வரவேண்டும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 29, 2024
பார்வையிட்டோர்: 1,910 
 
 

(1973ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தபாற்காரனின் வருகையினை ஆவலோடு காத்திருந்த அவர், அவன் வந்து போனதையும் மறந்து அதிர்ச்சியில் அவன் கொடுத்துவிட்டுப் போன கடிதத்தைப் பிரித்தது பிரித்தபடியே சமைந்து போயிருந்தார். கொடூரமான கடிதம். 

அந்த வீடே அந்த நிமிஷங்களில் மௌனத்தின் கைதியாகி விட்டது. சாமிநாதரின் மகள் புனிதவதி. சுவாமி அறையினுள் விசும்பிக் கொண்டு பயத்தின் நிழலின் கீழே குறுகிப் போய் அசைவற்று நின்றாள் வாசற்கதவு திறந்து விடுகிறாற்போல அசைகையில் அவளின் இதயம் திக்கென்று அடித்துக்கொள்கின்றது. தன் தகப்பனாரின் முன் அவள் மீண்டும் எப்படி விழிக்கப் போகின்றாள்? அந்த முதிய தந்தையின் துன்பம் கீறி உழுத முகத்தினை எப்படி எதிர்கொண்டு நோக்குவது என்ற எண்ணந்தான் அவளது அச்சத்தின் மூலவேராக இருந்தது. 

அவளின் கடுமையான உழைப்பு, தியானம், வேண்டுதல்கள் எல்லாமே பொய்த்துப் போய் விட்டன. இதோ இந்தக் கடவுளர்களை வேண்டி அவள் எல்லா விரதங்களுமிருந்தாள். நேர்த்திக் கடன்கள் வைத்தாள். கோயில் மணியோசை கேட்கின்ற வேளைகளிலெல்லாம் குவிந்த கரங்களும் பணிந்த நெஞ்சமும் ஒரு வரத்தை ஒரேயொரு வரத்தினைத் தானே கேட்டன. 

பதினெட்டு வயதுகளின் நம்பிக்கையாக, ஊன்று கோலாக அவளுக்கிருந்த தெய்வ நம்பிக்கையின் ஆணிவேர் அறுந்து கொண்டிருக்கின்றது. 

‘முருகா, கடவுளே நான் உனக்கு முன்னாலே நின்று எத்தனை வேண்டுதல்கள் செய்தேன். இந்த ஏழைக் குடிசையிலை உனக்கு விளக்கு வைச்சு ஓயாமல் வணங்கினன். என்ரை ஐயாவினுடைய ஒரேயொரு நம்பிக்கையான எனக்கு இப்ப செய்யாத அருளை இனியா நீ செய்யப் போகிறாய்?’ 

புனிதவதி பொருமிப் பெருமூச்செறிந்தாள். 

அவளின் அழுகைக்கு இரங்காதது ஒரு தெய்வமா?… தெய்வம் தெய்வம் தெய்வம்… 

காசு கொடுத்துக் கேள்விப் பேப்பர் எடுத்துத்தான் சோதனை பாஸ் பண்ணினவன் என்று மறைமுகமாகக் கூறப்பட்ட கணேசன் அவனது பட்டாளம் ஆகிய எல்லோருமே தேர்வினில் சித்தியடைந்து விட்டார்கள். கணேசனும் அவனது பட்டாளமும் அந்த ஊரிலே என்ன அடாதுடித்தனம் செய்யவில்லை? ஆனால் அவையெல்லாம் இப்போது கழிந்து மறந்து போன நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன. அவர்கள் பணக்காரர்கள். வசதிபடைத்தவர்கள். அந்தஸ்திற்காகப் பரீட்சை முடிவினை எதிர்பார்த்திருந்தவர்கள். இப்போது தேர்வில் வெற்றி பெற்ற கெட்டிக்காரர்கள். 

புனிதவதிக்கோ இந்தக் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை முடிவு வாழ்வுப் பிரச்சினையாக இருந்து வந்தது. ஆனால் மூன்றாவது முறையாகவும் அவள் பரீட்சையிலே தோல்வி கண்டுவிட்டாள். 

அவளின் கண்களிலே கண்ணீர் மல்கியது. 

அந்தப் புகைபடிந்த லாம்பின் கீழே தூங்கி விழுந்து விழுந்து அவள் படித்தாள். நித்திரையினை முறியடிப்பதற்காக கால்களை நீரூற்றிய வாளியினுள்ளே தோய வைத்துக்கொண்டு அவள் புத்தகக் குறிப்பினை மன நினைவினுள்ளே மீண்டுமொருமுறை எழுதினாள், உடல் தொய்ந்து தளர் கையில் எல்லாம் கண்களின் களைப்புச் சோர்தலிலெல்லாம் அவள் மிகவும் சிரமப்பட்டுத் தன்னைச் சுதாரித்துக் கொண்டு தன்னை மீறியதோர் திடத்தோடு பாடங்களைப் படித்தாள். அசுரதவம். 

வெளிக்கதவு காற்றிற்கு அசைந்து ஆடியது. 

அந்தப் பகல்தனில் மௌனமானது அந்தகாரமொன்றை விரித்தாற் போலிருந்தது புனிதவதிக்கு. 

மூன்றாம் மூறை. 

இம்முறை அவள் நிச்சயமாக நம்பி எதிர்பார்த்திருந்தாள். 

ஐந்து பாடங்கள் பாஸ் – தமிழ்ப்பாஷை, இலக்கியம், சமயத்திற்கு ‘சி’ என்ற திறமைச்சித்தி, போன முறையும் இதே பாடங்கள்தான். அதற்கு முன்னர் நான்கு பாடங்கள் இரண்டு திறமைச் சித்திகள். பீடியும், சிகரெட்டும், உலர்த்துமாய்த் திரிந்தவர்கள் ஆறு திறமைச் சித்தியோடு பாஸ் பண்ணியிருக்கிறார்கள். 

இரவும்,பகலும், உறக்கமும், விழிப்பும் அதே தவமாய் அந்த நினைவின் வழிபாடாகவே இருந்து வந்த புனிதவதி மாபெரும் வீழ்ச்சியினை அடைந்து விட்டாள். அவள் பயில்கின்ற சரித்திரப் பாடத்தில் வாழும் நெப்போலியன் கூட. இப்படி வீழ்ச்சியின் துயரை அனுபவித்துப் பொருமியிருப்பானோ என்பது சந்தேகத்திற்குரியது. 

மூன்றாவது முறை. பதினெட்டு வயது. பரீட்சை மண்டபத்திற்குள் இனி நுழைந்தால் அவள் எல்லோராலும் ‘அம்மா’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படலாம். 

“பிள்ளை இம்முறை நீ கட்டாயம் சோதினை பாஸ் பண்ணுவாய். முந்தின முறையில் பேப்பர் திருத்தினவங்கள் பெண்சாதியோடை சண்டை பிடிச்சதுக்குப் பிறகு திருத்தியிருக்கிறாங்கள். அதோடை உனக்குக் கால முஞ்சரியில்லை. இம்முறை நீ நல்லாகப் படிச்சிருக்கிறாய் காலமும் நல்லது. கடவுள் ஒருநாளும் எங்களைக் கைவிடமாட்டார்” சாமிநாதர் ஆழ்ந்த நம்பிக்கையின் வசப்பட்டிருந்தார். 

”ஐயா, என்ரை ஐயா, என்னிவை எவ்வளவு நம்பிக்கை வைச்சிருந்தீங்கள்! என்னாலை உங்கடை நம்பிக்கையை நிறைவேற்ற முடியவில்லை, நீங்களே சொல்லுங்க நான் படாத பாடுபட்டுப் படிச்சன். எல்லா விரதங்களும் பிடிச்சன். நம்பிக்கையோடைதான் சோதினை எழுதினன். இதுக்கு மேலை நான் என்ன செய்ய?”
புனிதவதியின் நெஞ்சினுள் விசும்பலொன்று சுழித்தது. 

புனிதவதிக்கு கணக்குப்பாடம் ஜென்மசத்துரு. ஆசிரியர் கணித பாடம் படிப்பித்துக் கொண்டிருக்கும்போது வெகு கவனமாகக் கவனித்திருக்கையில் அப்போது எல்லாமே விளங்குவது போலவே தோன்றும். பிறகு தனியே இருந்து கணக்கைச் செய்யப் பார்த்தால் எல்லாமே குழம்பிப் போகும். சிகம்பர சக்கரத்தைப் பேய்பார்த்த நிலையாகிவிடும். அக்கினி கொதித்து எரிகிறாற் போல் இருக்கும் அவளின் மூளைக்குள்ளே. கணக்குப் பாடத்தை அவள் சாதுரியத்தோடு பயில முயன்றும் தொடர்ந்து தொடர்ந்து தோல்வி கண்டாள். 

கணக்குக் கட்டாய பாடம் கணக்குப் பாஸ் பண்ணாதவளை யார்தான் படித்தவளென்று மதிக்கப் போகின்றார்கள்? 

கணிதபாடம் கைவரப் பெறாத கையறு நிலையின்போது சில வேளைகளில் புனிதவதி யோசிப்பதுண்டு. இந்தக் கணக்குப்பாடத்தைக் கட்டாய பாடம் என்று உயிரை வருத்துகிறார்களே. இந்தக் கணக்கினால் வட்டியும் முதலும், சரக்குமுதல், பரப்புப்பற்றி மூளையைக் கசக்கிக் கசக்கிப் படிப்பதனால் வாழ்க்கைக்கு என்ன லாபம் இருக்கிறது? வாழ்க்கைக்கு என்ன லாபம் இருக்கிறது? வாழ்க்கைக்கு என்ன பயன்பாடு இருக்கின்றது? பிறகு யோசிப்பாள். எனக்கு வரமாட்டாதென்பதினால் கணிதத்தால் என்ன பயன் என்று கேட்கிறேன்? பெற்ற தாயைப் பிஞ்சுப் பருவத்திலேயே இழந்து போன புனிதவதிக்கு எல்லாமாக இருந்து வளர்த்த சாமிநாதர் தன் இறுதிக்கால நிழலாக அவளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார். பியூப்பிள் ரீச்சர். பிறகு ஆசிரிய பயிற்சி. திருமணம் பேரப்பிள்ளைகளோடு கொஞ்சுதல் – எவ்வளவு சுகமான கற்பனைகள்! மனதுறங்கும் பூப்படுக்கையான முதுமைக் கனவுகள். 

இப்போது, இப்போதோவெனில்? 

மூன்றாம் முறை பதினெட்டு வயது, ஐந்து பாடங்கள். 

கோயில் மணி பன்னிரண்டை நினைவூட்டி ஒலிக்கின்றது. 

இன்று ஆறு மணி உதயகாலப் பூசையை மணி நாதம் நினைவூட்டு கையில் புனிதவதி பக்திப் பூவாக மலர்ந்து பிரார்த்தித்தாள்! 

புனிதவதி மெளனமாக நிற்கிறாள். இப்போது வெறும்மனம். 

எல்லாமே பொய் எல்லாமே பொய்… பக்தியென்பது பொய். திறமையென்பது பொய். பொய். வாழ்வு என்பதே பொய். உணர்ச்சிக்கு அடிமையாகிவிட்ட அவளின் நெஞ்சமானது அவளது நம்பிக்கைகளையே பழித்து நிராகரிக்கின்றது. 

பதினெட்டு வயது பொருமிப் பொருமி வெறுப்போடு மனஞ் சினக்கிறது.  

இரண்டு 

நான் ஒரு வெறும் மண்டூகம் மூளையில்லாத மொக்குப் பிறவி, என்னைவிட வயது குறைஞ்சதுகள் எல்லாம் சோதினை பாஸ் பண்ணியிருக்க நான் மட்டும் மூன்றாம் முறையும் பெயில் விட்டிருக்கிறன். இனி எப்படி நான் ஆக்களின்ரை முகத்திலை முழிக்கிறது?” 

இறந்துபோன தாயோடு அவள் மானசீகமாகப் பேசிக்கொண்டாள். 

“அம்மா, நீ என்னைப் பெத்தநேரம் ஒரு அரிசி மூட்டையைப் பெத் திருக்கலாம். அல்லது ஒரு பொடியனாக என்னைப் பெத்திருக்கலாம். கூவி வேலை செய்தாவது ஐயாவைச் சுகமாக வைச்சுப்பார்க்க முடியும். இந்த மூளைகெட்டவளுக்கு நீங்க செலவழிச்ச காசைச் சேர்த்து வைச்சிருந்தால் இண்டைக்கு நீங்க ஒரு மாளிகையே கட்டியிருக்கலாம். ஐயா, என்னை வைச்சு நீங்க எத்தினை கனவு கண்டீங்கள் எல்லாவற்றையுமே நான் பொய்யாக்கி, உங்களுக்குப் பாரமாகி…” 

புனிதவதியின் மார்புச் சட்டை நனைந்து ஈரமாகிவிட்டது. தலை கனத்து வலிக்கிறது. எப்படியோ சமைத்து முடித்துவிட்டது. மனதை நிலைப்படுத்தி சமைத்து முடித்துவிட்டு குசினிக்குள் இருந்து யோசித்த படியே, வெளியேபோன தகப்பனாரை எதிர்நோக்கிக் காத்திருந்தாள் புனிதவதி. 

இனிச் சிலவாரங்களுக்கு அவள் வெளியே தலைகாட்ட முடியாது. சோதினை மறுமொழியை அறிந்து கேட்பவர்கள், அறியாமல் விசாரிப்பவர்கள், அனுதாபங் கூறுபவர்களின் நச்சரிப்புக்கள் பலமாகக் கால்கள் பதிந்து அணிவகுத்து வந்து நெஞ்சினைத் துன்புறுத்திக் குடையும். 

ஐந்து பாடம். மூன்றாம் முறை. பதினெட்டு வயது. பின்னாலே துரத்தித் தொடரும் ஏளனச் சிரிப்புகள். 

மொக்குப் பெட்டை. 

அம்மாவாகிற வயதிலை சோதினை எடுக்கப் போகிறாவாம்.

இரக்கமற்ற நாக்கு. பரிகசிப்பு. நெஞ்சைச் சுடும் அக்கினிச் சிரிப்புகள்.

புனிதவதி தன்னைத்தானே மீண்டும் நினைத்துப் பார்த்தாள்.

நான் மொக்கா, மண்டூகமா, மூளையில்லாதவளா? 

 ஜி.சி.ஈ. வகுப்புவரை அவள் எந்த வகுப்பிலும் ஒரு முறைக்கு மேலே இருந்ததில்லை. இப்போது கூட சமயபாடம் அவளுக்கு வரிக்குவரி மனனம். தமிழிலக்கியம், பாஷை சுகாதாரம் எல்லாம் தண்ணீர்பட்ட பாடு. ஆனால் அவள் கணிதபாடம் செய்யமாட்டாள். அவளால் வேகமாக எதையுமே எழுதமுடியாது. இப்பொழுது அவளை அழைப்பித்து வேண்டுமானால் எல்லாப் பாடத்தையும் கேட்டால் அப்படியே திருப்பிச் சொல்லுவாள். அப்படியானால் புனிதவதி மொக்கா, மண்டூகமா, மூளையில்லாதவளா? 

ஜீ.சி.ஈ சோதினைக்கு நான் நாலு வருஷங்கள் படிச்சன். நாலு வருஷமாகப் படிச்ச பாடங்களை மும்மூன்று மணித்தியால சோதினையளை வைச்சு எப்பிடிக் கெட்டிக்காரிமொக்கு என்று அளவிடமுடியும்? குறிப்பிட்ட கேள்வி வருமெண்டு நினைச்சுப் படிச்சு அந்தக் கேள்விகளே சோதி னைக்கு வந்து அதை நல்லா எழுதிப் பாஸ் பண்ணிறவன் கெட்டிக்காரனா? அல்லாட்டில் என்னைப் போலை எல்லாத்தையும் படிச்சும் ஒண்டு ரெண்டு பாடம் செய்ய முடியாததாலை பெயில் விடுகிறவை, மூன்று மணித்தி யாலத்துக்கை மறுமொழி செம்மையாக எழுத முடியாமல் குண்டடிக் கிறவை மண்டூகங்களா? 

புனிதவதியின் மனதினுள்ளே சிந்தனைகள் முறுகி முறுகிப் பரவின. மனதினை அழுத்துகின்ற வேதனைச் சுமைகளிடையே அமைதியைத் தோற்றுவிக்கும் சிந்தனை மெல்லவே ஊற்றெடுக்கையில் நெஞ்சு சிறிது லேசாவது போல புனிதவதி உணருகின்றாள். துன்பங்கள் நசிக்கையில் அந்த நசிப்பின் துயரிடையே அந்த நசிப்பினை எதிர்கொள்ளும் துணிவும் கர்ப்பந்தரிக்கின்றது. 

வெனியே யாரோ செருமும் ஓசை கேட்கின்றது. நிச்சயமாக அது தகப்பனின் செருமல் அல்ல என்பதனைப் புனிதவதி நன்றாக அறிவாள். அப்படியாயின் வருவது யாராயிருக்கலாம்? காலைத் – தேய்ப்பதுயார்? 

“தங்கச்சி … புனிதம்” 

வெண்கலக் குரலுக்குரியவர் ‘கிளாக்கர் மாமா’ என்ற அருணேசர். புனிதவதி தன்னைச் சுதாரித்துக்கொண்டு எழுந்து வெளியே போனாள். வெய்யிலின் வெம்மை தாங்கமுடியாத அருணேசர் நெற்றி வியர்வையை விரலினால் வழித்து விசிறிக்கொண்டு, முன்புறத் திண்ணையிலிருந்த சாய் மனைக் கதிரையிலே உட்காரப் போனார். 

“என்ன மாமா வெய்யிலுக்குள்ளாலை விழுந்தடிச்சுக் கொண்டு எங்கை போயிட்டு வாறிங்கள்.”

குரலை உற்சாகப் படுத்திக் கொண்டு கேட்டாள் புனிதவதி. 

“நொத்தாரிசிட்டை வந்தனான். அண்ணர் நேற்றுப் பின்னேரம் வீட்டுக்கு வந்து தேடினவராம் அதுதான் வந்தனான் அண்ணரை எங்கை காணவில்லை?” 

இளவயது முதலாக நட்புக்கொண்டு ஒருவருக்கொருவர் உற்ற துனையானவர்கள் அருணேசரும் சாமிநாதரும். ஒருவர் நினைப்பதனை மற்றவர் மனதாரச் சொல்லுகின்ற அத்தியந்த சினேகிதம் அவர்களுக்கிடையே நிலவியது. 

“வெளியிலை போயிட்டார். இப்ப வந்திடுவார். பொறுங்க நான் மோர் கொண்டு வாறன்” அவள் துருதுருப்போடு கூறுகின்றாள். 

“மூண்டு மணியாகிப் போச்சு. இந்த வெய்யிலுக்குள்ளை எங்கை போனவர்?”

அவரின் கேள்விதனையே கவனிக்காதவள் போல மோர் எடுப்ப தற்காக உள்ளே போய்விட்டாள் புனிதவதி. 

மோரைக் குடித்துக்கொண்டே அவளைப் பார்த்தார் அருணேசர் 

“என்ன, முகம் நல்லா வாடியிருக்குது?” 

மிகவும் பிரயத்தனத்தோடு புனிதத்தின் குரல் சமாளிக்கின்றது. “என்ன, என்ன சொன்னீங்கள்? (குரலினை இழுத்து நிறுத்தும் முயற்சி தோல்வியடைகின்றது. பொய் சொன்னவுடனேயே பிடிபடும் இயல்பு அவளுக்கு) நான் வழமை போலத்தானே இருக்கிறன்.” 

அவள் சொல்லி முடியுமுன் அருணேசர் மென்முறுவலோடு கூறினார்.

“புனிதம், எனக்கு எல்லாம் தெரியும்…” 

புனிதவதி கூசிக்குறுகித் தலை குனிந்தாள். கண்களிலே நீர் துளும்பிற்று.

“மாமா, சோதினை முடிவு இப்படி வருமெண்டு நான் எதிர்பார்க்கவேயில்லை. ஐயாவும் அந்தக் கவலையிலைதான் எங்கையோ வெளியிலே போய்விட்டார்”

அருணேசர் அவளைப் பார்த்த பார்வையினை எடுத்து வெளியே முற்றத்திலே வீசினார். அலட்சியபாவம். 

“நீதான் குழந்தைப் பெட்டை. அண்ணன் கூடக் குழந்தையாகிப் போய் விட்டாரோ? இதுவும் நல்லதுக்குத்தான். அங்கை அண்ணரும் வாறார். அவரோடை நான் கன விஷயங்கள் கதைக்க இருக்குது” 

புனிதவதி வாடிய உருவினோடு வந்த தகப்பனைக் கண்டதும் உள்ளே போய்விட்டாள். எனினும் அவளின் சிந்தனைகள் அவர்களின் பக்கத்திலேயே தரித்துவிட்டன. 

மூன்று 

ஒரு வரண்டு வாடிய சிரிப்பினோடு அருணேசரைப் பார்த்து வீட்டு முன் திண்ணையிலே ஏறிப் பார்வையினைக் கூசிக்கொண்டே கதிரையில் உட்கார்ந்தார் சாமிநாதன். வாழ்விலே பல பேரிடிகளையெல்லாம் தாங்கி, மனம் ஆறுதலுற்று மகளின் புன்னகைக்காகத் தன்னுடைய முகத்தின் துன்பங்களினையெல்லாம் அழுத்தித் துடைத்தெறிந்திருக்கிறார் சாமிநாதன். ஆனால் பல கற்பனைகளைச் செய்து நம்பிக்கைகளை வளர்த்து நாளிலும், பொழுதிலும், கனவுகளிலும் நடக்கபோகின்றது என நினைத்திருந்த ஒரு விஷயம் தன்னை முற்றிலுமே ஏமாற்றிவிட்டுச் சென்றதனை எண்ணுகின்ற போதினிலெல்லாம் அவரது மனம் தவிக்கின்றது. ஆறுதலிழந்து குழம்புகின்றது. 

“என்ன இது. வந்த நேரம் துவக்கம் நானுந்தான் பாக்கிறன். தகப்பனும் மகளும் அழாத குறையாக நிக்கிறீங்கள் என்ன விஷயம்?”

உள்ளேயிருந்த புனிதவதி காதினைக் கூர்மையாக்குகின்றாள்.

“எதையெண்டு சொல்ல? ஒரு பெரிய நம்பிக்கையே மண்ணோடு மண்ணாகிப் போச்சுது, இனி என்ன செய்யிறதெண்டே தெரியாமலிருக்குது’ 

சாமிநாதரின் குரல் அழுகிறாற்போல அலுத்துக்கொள்கிறது.

“என்ன விஷயம்? எதைச் சொல்லுறீங்கள்?” 

“புனிதத்தின்ரை விஷயந்தான். சோதினை முடிவு வந்திட்டுது”

சாமிநாதரின் வாயிலிருந்தே விஷயத்தினை வரவழைத்துக் கொண்டவராய் அருணேசர் சிரித்தார். பிள்ளைச் சிரிப்பு. 

“அடடே, இதுக்குத்தான் இவ்வளவு துக்கம் கொண்டாடுறீங்களா?” அருணேசர் பிடரிப் பக்கமாகத் துடைத்துக்கொண்டு சில நிமிஷங்கள் மெளனமாக இருந்து விட்டுக் கூறத்தொடங்கினார். 

“இந்தச் சோதினை முடிவு எதிர்பார்த்திருந்த உங்களுக்கும் பெரிய ஏமாற்றமொண்டைத் தந்திருக்கிறது இயல்பும் உண்மையுந்தான். ஆனால் அதுக்காகப் பெரிய கவலையையும் துக்கத்தையும் வாழ்க்கையில் நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுறது சரியெண்டு எனக்குப் படவில்லை.” 

“இதுக்கு ஆரைக் குறைசொல்லிறதெண்டு எனக்குத் தெரியேல்லை. கடவுளைக்கூ நம்பமுடியவில்லை. காசுள்ளவனோடைதான் கடவுளும் நிக்கிறார்” 

சாமிநாதரின் தொய்ந்த குரலிலே காயம்பட்ட துடிப்பிருந்தது. கடவுளையே அனுதினமும் நெஞ்சார அழைக்கும் அவரின் சலிப்பான குரல், புனிதவதியின் மனதினைத் தொட்டது. நம்பிக்கைத் துரோகம் செய்யும் எதுவுமே மனிதனால் வெறுக்கத்தக்கதாகி நிராகரிப்பிற்குட்பட்டு விடுகிறது என்பதை அவள் அடிமனமானது அப்போது உணர்ந்து கொள்ளு கின்றது. 

“இதைப்பற்றி நீங்களோ, புனிதமோ வருத்தமடையவோ குறைபட்டுக் கொள்ளவோ தேவையில்லை. குறையெல்லாம் எங்கடை கல்வியமைப்பிலும், சமுதாய அமைப்பிலுந்தான் தங்கிருக்குது. அத்திவாரம் பிழையெண்டால் எல்லாந்தான் பிழைச்சுப் போய்விடும்” 

“ஆனால் வாற கஸ்டமெல்லாம் ஏழைகளுக்குத்தான் வருகுது. காசுள்ளவன்தான் எல்லாத்திலும் முன்னுக்கு நிக்கிறான்” 

சாமிநாதரின் குரலிலே அருவருப்பு முணுமுணுக்கின்றது. 

“சோதினை வைக்கிறதின்ரை அர்த்தம் எங்கடை நாடுகளிலை திறமையுடையவனைத் தெரியிறதுக்காகவோ, மதித்து உற்சாகப்படுத்திறதுக்காகவோ இல்லை. கொஞ்ச உத்தியோக இடங்களும் கூடின உழைப்பாளியளும் இருக்கிற எல்லா இடத்திலுமே இந்தச் சோதனை முறை இருக்கும். ஐம்பது காலியிடங்களுக்கு ஆறாயிரம் பேர் போட்டி போடுகிற நாடுகளிலை பணமுள்ளவனும், ஆளணி உள்ளவனும் முண்டியடிச்சுக்கொண்டு அந்த ஐம்பது பேருக்கை வாறத்துக்குத் தெண்டிப்பான்.” 

சாமிநாதர் விரக்தியோடு சிரித்தார். 

“எங்களைத் தேறுதல் படுத்துறதுக்காக இலட்சிய வாதம் பேசுறீங்கள் நீங்கள்.” 

புனிதவதிக்கு நெஞ்சு திக்கென்றது, தகப்பனாரின் எடுத்தெறிந்த பதிலினைக் கேட்டு. இதுவரை நாளும் அருணேசருடைய கருத்துக்களிலிருந்து தன்னுடைய தகப்பனார் மாறுபட்டதில்லையென்பதனைப் புனிதவதி நன்றாக அறிந்திருந்தாளாதலால் இன்று அருணேசர் சொன்னதை அப்படியே சாமிநாதர் தட்டிவிட்டுப் பதில் சொன்னபோது புனிதவதியின் மனம் துணுக்குற்றது. அவளின் மனம் பரபரப்படைகையிலே அருணேசரின் குரல் கம்பீரத்தோடு கேட்கின்றது. 

“உங்களைச் சமாதானப் படுத்துறதிற்காக நான் இதைச் சொல்லவில்லை. நல்லா ஒரு முறை யோசிச்சுப் பாருங்கோ. வெறுமனே உணர்ச்சி வசப்பட்டுக் கதைக்கிறதாலை ஒரு விஷயமும் தெளிவாகிறதில்லை. இந்தக் கல்வியமைப்பு கொலோனியல் காலத்தைச் சேர்ந்தது. வெள்ளைக்காரன் தோட்டத்துக்கு கிளாக்மாரை எடுக்கிறதுக்காகத்தான் இந்தக் கல்வியமைப்பை இலங்கையிலை தோற்றுவித்தான். தம்முடைய தோட்டப்பயிர் ஏற்றுமதி இறக்குமதியை எழுதிக் கணக்கிட அவர்களுக்குத் தேவையானவர்களை உருவாக்கவே அவன் விரும்பினான். பாஷையையும், கணிதத்தையும் அதனாலைதான் கட்டாய பாடமாக்கினான். தன்ரை பொருளாதார நிர்வாகத்தினை ஒழுங்காக நடத்துவதற்கு வெள்ளையன் ஏற்படுத்திய கல்வித் திட்டத்தை சில மாறுதல்களோடை இன்றை வரைக்கும் நாங்கள் பின்பற்றி வருகிறம்” 

புனிதவதி அறை மூலையிலுள்ள கதிரையிலே நாடியைக் கையினில் ஊன்றியபடியே உட்காருகின்றாள். காற்றுத்திவலை மெல்ல அறைக்குளே ஊருகிறது. 

“பாஷையறிவுள்ளவன் கணிதத்திலை வல்லவனாயிருக்கிறதில்லை. கணிதமூளை மொழித்துறையிலை பயன்படுகிறதில்லை. இரண்டுமே இளமனதுக்கு முரணான துறைகள். இதில் சில புறநடைகளிருக்கலாம். கணக்குப் பாடத்தினைத் திருப்திகரமாகச் செய்ய முடியாத காரணத்தாலை எத்தனையோ திறமைசாலி மேற்படிப்புக்குப் போகமுடியாத நிலைமை இந்தத் தேசத்திலையிருக்குது. கிராமங்களிலை உள்ள பிள்ளைகளுக்கு வாய்ப்பில்லாத காரணத்தாலை அவர்களின்ரை அறிவு காட்டுப் பூக்களைப் போல யாருக்குமே பயன்படாமல் கருகிப் போயிடுது. அவனவன் திறமைக்கும் இயல்புக்கும், தேசமக்களின் நன்மைக்குமேற்ற கல்வி இலங்கையில் இல்லை. இயல்புகளும் திறமைகளும் ஆளுக்காள் வேறுபட்டிருந்தாலும் ஒரே பாடத் திட்டம், ஒரே பரீட்சைக்குள்ளேதான் எல்லாருமே அடங்கிப் போக வேண்டியிருக்குது. வட்டத்துவாரத்துக்குள்ளை சதுரப் பலகையைப் போட்டு அடைக்கிற முயற்சிதான் இந்தத் தேசத்திலை நடக்குது” 

புனிதவதி தன்னோடு படித்தவர்களை நினைவிலே அடுக்குகின்றாள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதைகள். தங்கள் வாழ்க்கையை பரீட்சை பற்றிய பயங்களினால் திசைமாற்றிய சிநேகிதிகள் ராஜகுமாரி, கமலாம்பிகை, சரஸ்வதி, பூமணி, மகேஸ்வரி இன்னும், இன்னும். 

“படிப்பு அறிவிற்காகவும், மன எழுச்சிக்காகவும் இல்லாமல் உத்தியோகத்திற்காக என்ற நிலமை வந்திட்டுது. தராதரப் பத்திரங்கள் அறிவுக்கு அளவுகோலாகவும், சம்பளத்துக்கு அடையாளப் பத்திரங்களாகவும் உள்ளன. டொக்டராகவும், இஞ்சினியராகவும் வாறதுக்கு மாணவர்கள் விரும்புறத்திற்கு காரணம் சேவை மனப்பான்மையில்லை. உத்தியோகம் இலகுவாகக் கிடைக்கும் என்பதுதான் அதற்குக் காரணம். அந்தத் துறைகளிலும் நல்ல கல்லூரிகளிலை படிக்கிற காசு வசதியுள்ளவர்களுக்குத்தான் கூடிய வாய்ப்பிருக்குது” 

“எந்தத் துறைக்கல்வி தேச முன்னேற்றத்தையும், பொது சனங்களின் நலனையும் மனதிலை வைத்திருக்குது? தேசத்தின் நிர்மாணத்தையோ பொதுசனங்களின் நல்வாழ்வையோ. மாணவனுடைய இயல்பான திறமையை வெளிக்காட்ட வாய்ப்பளிக்கிறதாகவோ எங்களின்ரை கல்வித் திட்டம் இல்லை. உத்தியோக வேட்டைக்கு மாணவனை ஆயத்தப்படுத்து கிற பயிற்சிக் களங்களாகத்தான் எங்களின்ரை பாடசாலைகள் இருக்கின்றன” 

சுமாமிநாதரின் பெருமூச்சு இடையிட்டது. அருணேசரின் அடங்கிய குரல் மந்திர வார்த்தைகளே போன்று கணீரிட்டது. 

“நீங்கள் என்னுடைய வாழ்க்கையையே எடுத்துப் பாருங்க. நான் ஒரு வீணை வித்துவானாக வர ஆசைப்பட்டன். என்ரை இயல்புப்படி நான் போயிருந்தால் நான் சிட்டி பாபுவைப் போலவோ பாலச்சந்தரைப் போலவோ வீணைவாசிப்பிலே முன்னணிக்கு வந்திருக்க முடியும். ஆனால் அது நடக்கவில்லை. (பெருமூச்சு சுழித்தது) 

“என்ரை படிப்பு என்னை வேறு திசைக்கு இழுத்துக் கிளாக்கனாக்கியுள்ளது. வீணை வாசிக்க வேண்டிய கையாலை பேனையைத் தூக்கியுள்ளேனே என்ற கவலை என்னை அடிக்கடி வதைக்கிறதுண்டு. நான் சாகும் போதும் இந்த அமைப்பினை நெஞ்சாரச் சபிச்சுக்கொண்டுதான் செத்துப் போவன்” 

இதுவரை எதுவுவே பேசாதிருந்த சாமிநாதன் மெல்லக் கூறினார். 

“எங்கடை வாழ்க்கைதான் பாழாகிப் போட்டுது எங்கடை தலைமுறையின்ரை வாழ்க்கையுமா இப்பிடிப் போகவேணும்?” 

அருணேசர் சிரித்தது கேட்கின்றது. 

“அவரவர் இயல்புக்கேற்ற கல்வி, எல்லோருக்கும் நம்பிக்கையான வாழ்க்கை. பலரைச் சுரண்டி ஒருவன் சொகுசாய் வாழுகிற நிலைமை இல் லாத சமுதாய அமைப்பு – இத்தன்மையில்லாத எந்த சமுதாயத்திலையும், ஒரு தலைமுறையல்ல, நூறு தலைமுறைகள் இப்பிடி அழுகையிலும் அவதியிலுந்தான் கருகிக் கருகிச் செத்துப் போகும்” 

சாமிநாதன் எதையோ நினைத்துக்கொண்டு கேட்டார். 

“புனிதம் நல்ல கெட்டிக்காரி. பெயிலானது அவளுக்குச் சரியான கவலை” 

புனிதவதி சிலிர்த்துப்போய் நின்றாள். அருணேசர் குரலிலே ஆத்திரம் சிறகடித்தது: 

“புனிதம் நல்ல குணவதி. பொறுமைசாலி. அவள் சிறந்த குழந்தைகளிற்கு ஆசிரியையாக இருக்கத் தகுதி பெற்றவள். ஆனால் அவள் அப்பிடி ஆகமுடியாது. பத்து வருஷப் படிப்பின் அறிவை வகுப்பறைக்கு வெளியிலை ஒருவித பயனும் தராத அறிவை – சில மணித்தியாலங்களுக்கை சோதித்துத் திறமையினை அவதானித்து முடிவு சொல்கிற இந்தக் கல்வியமைப்புக்கு, சிறப்பியல்புகளையோ, தனித்திறமைகளையோ கண்டு அவற்றுக்கு வழிகாட்டத் தென்போ, தகுதியோ இல்லை” புனிதவதியின் சிந்தனையில் பசுமையின் நிழல் படிந்து பரவியது. தன்னுட்தானே குறுகிப் போய் நின்ற அவளை, அருணேசரின் வார்த்தைகள் நிம்மதியின் கரங்களாகி அணைத்துத் தடவி இதப்படுத்தின. 

”சோதினை பெயில் ஆன உடனை தற்கொலை செய்யவும் மன நோயடையவும் இளைஞர்களைத் தயாராக்கின்ற சமுதாய அமைப்பிலை நாங் கள் வாழ்கின்றோம். மனிதனிலை பயனில்லாதவன் மொக்கன் என்று யாருமே இல்லை. ஏதோ ஒரு விதத்திலை ஒவ்வொருவனும் திறமைசாலி. அவனது இயல்பூக்கத்தையும், திறமையையும் அறிந்து அதைத் தூண்டிப் பிரகாசிக்க வைக்கிற சமுதாய அமைப்பும் கல்வி முறையும் தான் இப்ப உள்ள சகல பிரச்சினைகளுக்கும் ஒரேயொரு மருந்து. அந்த அமைப்பு உருவாகும் வரை புனிதம், புனிதத்தின்ரை மகள், மகளின்ரை மகள் என்று எல்லாரும் இப்பிடித்தான் தோல்வியினை எதிர்நோக்க வேண்டி வரும்..” 

புனிதவதி பரபரக்கின்றாள், அவருடைய சொற்கள் அளித்த நிதானத்தின்கீழே அந்தப் பொற்காலம் தன்னுடைய மகளின் காலத்திலேயே அல்லாமல் தன்னுடைய காலத்திலேயே நிஜமாகி விடவேண்டுமென்று ஆவலோடு ஏங்கிக் காத்திருக்கின்றாள் புனிதவதி.

– ஒளி நமக்கு வேண்டும் (குறுநாவல்கள்), முதற் பதிப்பு: ஜூலை 1973, மலர் பதிப்பகம், மட்டக்களப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *