அந்தக் குழந்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 11,090 
 
 

வாழ்க்கையில் இரண்டு துன்பங்கள் உண்டு. ஒன்று, தான் விரும்பியதை அடையாமல் போவது; இரண்டு, தான் விரும்பியதை அடைவது என்று தனது நாடகம் ஒன்றில் எழுதியவர் அறிஞர் பெர்னாட்ஷா! விரும்புகிற வாழ்வை உருவாக்கிக்கொள்வது எல்லோருக்கும் எளிதல்ல. கிடைக்கின்ற வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்வதும் சுலபமில்லை. யாரைக் கேட்டாலும் எதிர்பார்த்ததுபோல இல்லேப்பா என்றுதான் பதில் வருகிறது. எனது கற்பனையில் யாரைக் கண்டெடுத்துக் காத்திருந்தேனோ அப்படியே மனைவி வாய்த்துவிட்டாள் என்று மன நிறைவு கொண்டோர் இருக்கலாம்தான். அவர்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். திருமண-மான புதுசில் அப்படிச் சொன்னவன்தான் மருது!

unmai - Mar 16-31 - 2010பெண் பார்க்கச் சென்ற மருதுவுக்கு, காவேரியைப் பார்த்ததும் உள்ளுக்குள் பட்டாம் பூச்சி பறக்க ஆரம்பித்தது. கலகலப்பான சூழலில் தலை அசைத்துச் சம்மதம் தெரிவித்த-போது காவேரியும் கிளர்ச்சிக்குள்ளானாள். பெண்-களுக்கே உரிய புலம் பெயர்ந்த வாழ்க்கைக்கு அப்போதே தன்னைத் தயார்ப்படுத்திக்-கொண்டாள். புது மணப்பெண்ணாக மருதுவின் வீட்டில் நுழைகிறபோது வலது காலை எடுத்து வைத்தாளோ இல்லையோ ஒலிபெருக்கியில் ஒலித்த பாடல் அவளுக்கு அப்படித்தான் ஆணையிட்டது!

தொடக்கப் பள்ளி ஆசிரியன் மருதுவின் வாழ்க்கை, தொடக்கத்தில் தென்றல் வீசும் பொதிகையாகவே இருந்தது. சூட்டோடு சூடாகக் காவேரி ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்ததும் சூறாவளி சுழன்றடித்தது. குழந்தை வளர வளர அமைதியும் ஆனந்தமும் அங்கிருந்து விலகத் தொடங்கின. இரண்டு வயதுகூட நிரம்பாத அழகும் ஆரோக்கியமும் உள்ள குழந்தைதான் என்றாலும், அன்பு காட்டிச் சீராட்டி மகிழும் ஆர்வம் அவனிடம் இல்லாமற் போனது.

யார் என்ன சொன்னார்களோ, எதனால் இந்தத் தடுமாற்றமோ பிள்ளைக் கனி அமுதைத் தன் கொள்ளிக் கண்களால் சுட்டெரித்தான். அன்பும் அரவணைப்பும் அருகிப் போயின. அவனை நோக்கித் தவழ்ந்து வரும் குழந்தையைக் கரப்பான் பூச்சியைப் பார்ப்பதுபோல் அருவருப்புக் கொள்வான். மழலை மலைத்து நிற்பதைப் பார்த்துத் தாய் ஓடி வருவாள். தூக்கி ஆறுதல் தருவாள், தேற்றுவாள்.

கணவனின் நடவடிக்கைகள் அவளுக்குப் புதிராகவே இருந்தன. அவர்களுக்குள் அந்நியோன்யம் அறவே இல்லை. முகம் பார்த்துப் பேசுவதும் அரிதாகவே இருந்தது. பிரச்சினைகளை மனம் விட்டுப் பேசிக்-கொள்ளாத அந்த வீடு மயான பூமியாய் மாறிக்-கொண்டிருந்தது.

சில முகங்கள் அவர்களின் குணத்தைப் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கும். இன்னும் சில முகங்களின் நெளிவு சுளிவுகள் வேறு எதையாவது வெளிப்படுத்தும். இது எதுவுமே இல்லாமல், இன்ன வகையென்று விவரிக்கவும் முடியாமல் இருந்தது மருதுவின் முகம்! குழந்தையைக் கொண்டாடும் வகையற்றுப் போனான். இதற்கெல்லாம் கடின மனம் வேண்டும். அது அவனிடம் இருந்தது.

தன்னிடமும் சேயிடமும் வேண்டா வெறுப்பாக அவன் நடந்து கொள்வதை எண்ணி, மனம் புழுங்கித் தனிமையில் பலமுறை அழுதிருப்பாள். சமைத்த உணவை இருவருமே சரியாகச் சாப்பிடாமல் வீணாகிப் போன-தெல்லாம் அன்றாட நிகழ்வுகள்!

எத்தனை நாளைக்குத்தான் சகித்துக்-கொண்டிருக்க முடியும்? ஒரு நாள் குழந்தையை அணைத்தபடி, கண்ணீரும் கம்பலையுமாக அவன் முன் நின்றாள்.

ஏன் இப்படி நடந்துக்கிறீங்க, நான் என்ன தப்புப் பண்ணினேன்? இந்தக் குழந்தை என்ன தப்புப் பண்ணிச்சு? என்றாள் நடுக்கக் குரலில். பதில் இல்லை அலட்சியம் தெரிந்தது.

இப்போ சொல்லப் போறிங்களா இல்லையா? குமுறினாள்.

இந்தக் குழந்தைக்குத் தகப்பன் யாருன்னு சொல்லவேண்டியது நீதான் என்று சட்டெனப் பதில் வந்தது. சுரீரென்று சாட்டையால் அடித்தது போலிருந்தது. ஆயிரம் தேள்கள் ஒரே நேரத்தில் கொட்டியது போன்ற வலி. நொறுங்கித்தான் போனாள். அவனது கொடூர முகம் அந்தப் பெண்ணுக்கு அப்போதுதான் தெரிந்தது.

ஒரு பெண்ணால் உடனடியாகப் பதில் சொல்லக்கூடிய கேள்வியா அது? திண்டாடிப்-போனாள். திசை தெரியாமல் தவித்தாள். அருவியாய்க் கொட்டிக் கொண்டிருந்த கண்ணீரை முந்தானையில் துடைத்தாள். ஏதோ ஒரு முடிவுக்கு வந்து விட்டவள் போல் தன் துணிமணிகளை ஒன்று சேர்த்துப் பெட்டியில் திணித்தாள். அதைக் கண்டு அலட்டிக் கொள்ளாமல் மேஜையில் கிடந்த நாளிதழ் ஒன்றை அனிச்சையாய்ப் புரட்டிக்கொண்டிருந்-தான் அவன். அச்சம் தரும் அமைதி அங்கே மண்டிக்கிடந்தது!

மருதுவின் அசாதாரண நிலைப்பாடு, அத்து மீறலான கேள்விபற்றியெல்லாம் பொருமிக்-கொண்டிருக்கவில்லை. அவளது அப்போதைய முடிவு விலகியிருத்தல். தேவை இடைவேளை அல்ல, இடைவெளி!

ஆதரவு இல்லாத வீட்டில்கூட இருக்கலாம். அழுது வடிகிற வீட்டில் அரை நொடிகூட இருக்கக் கூடாது என்று எந்தப் புத்தகத்தில் படித்தாளோ, யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறினாள். பிறந்தகம் நோக்கிப் பயணித்தாள். அவனுக்கு அது சரியெனப்பட்டது.

விரும்புகிற போதெல்லாம் விலை கொடுத்து வாங்கக் கூடியதா நிம்மதி? அவனுக்குள் எழுந்த அய்யம் அவனை அலைக்கழித்தது. தனிமை வாட்டியது. மனமோ கழுத்தறுப்பட்ட கோழி-போல் அடித்துக்கொண்டது. காவேரியைக் கை கழுவவோ, தலைமுழுகவோ அவன் உள்ளம் இடம்தரவில்லை. குறுக்கே வருவது அந்தப் பால் மணம் மாறாப் பச்சிளம் குழந்தைதான்!

ஒரு திங்கள் உருண்டோடியது. நிபந்தனைக்கு உடன்படுத்திக் காவேரியை வழிக்குக் கொண்டு வரும் திட்டம் ஒன்று அவனிடமிருந்தது. அப்போதே செயல்படுத்தக் காவேரியைத் தேடிப் போனான். அவளது வீட்டிற்குள் நுழைந்தவனை எந்த முகச் சுளிப்புமின்றி வரவேற்றார்கள் அங்குள்ளவர்கள். நடந்ததை அவர்களிடம் சொல்லி அவள் அழவில்லை என்பது புரிந்தது.

விதவை, கைம்பெண், தனிமரம் என்று எப்படி அழைத்தாலும் நம் பெண்கள் தாங்கிக்கொள்-வார்கள். வாழாவெட்டி என்று சொல்லி-விட்டால் பதறித் துடிப்பார்கள். காவேரியின் மனநிலையும் அதுதான்.

இரவு மணி பத்து இருக்கும். காவேரியைக் கைப்பிடியாய் அழைத்துக்கொண்டு மாடி ஏறினான். குழந்தை தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தது.

மாடியிலுள்ள அறையைத் திறந்து விடி விளக்கைப் போட்டான். விளக்குமட்டுமல்ல, அவர்களுக்-குள்ளும் எரிந்து கொண்டிருந்தது. கதவுகள் சாத்தப்பட்டன. இருக்கைகளில் இருவரும் அமர்ந்தார்கள். மருது மெல்ல பேச்சைத் தொடங்கினான். அவனது பேச்சில் கனிவும் கொஞ்சம் தேனும் கலந்திருந்தது. காவேரி சிலிர்த்துப் போனாள். நேரம் செல்லச் செல்ல அவனது பேச்சு திசை மாறியது. இனிமையும் மென்மையும் குறைந்து விசம் வெளிப்-பட்டது. அதன் நெடி தாங்க முடியாமல் எழுந்து ஓட யத்தனித்தாள். அவன் அவளது கரங்களைப் பலமாகப் பற்றி உட்கார வைத்தான்.

சேர்ந்து வாழணும்னா நான் சொல்றதைக் கேட்கணும். இல்லேன்னா நம்ம கணக்கு இத்தோட தீர்ந்ததா அர்த்தம் என்று முத்தாய்ப்பாக முடித்தான். திணிக்கப்பட்ட அத்திட்டம் அவளை ஊமை ஆக்கியது. அதுவே சம்மதம் என்றாகியது. மறுநாள் ஊர் வந்து சேர மூன்று மணி நேரம் பயணம். பேருந்தில் நெருக்கமாய்த்தான் உட்கார்ந்-திருந்தார்கள். பேசிக்கொள்ளவில்லை. குழந்தை அழுவதும் உறங்குவதுமாய் இருந்தது. காவேரியின் முகம் கருத்து இதயம் கனத்திருந்தது.

எவ்விதச் சல சலப்பும், கோபதாபமும் இன்றி வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. எந்த நாளுக்காகக் காத்திருந்தானோ அந்த அனுகூலமான நாள் வந்தேவிட்டது. கோடை விடுமுறை. பக்கத்து வீடுகளில் பூட்டுகள் தொங்கின. ஆள் அரவமற்ற சூழல்! வீட்டின் நிலவறையின் ஒரு ஓரத்தில் கொஞ்சம் சிமென்ட், கொஞ்சம் மணல், மண்வெட்டி, கடப்பாரை போன்ற தளவாடங்கள் இருந்தன. அறையின் மய்யம்தான் இலக்கு. முன்னெச்சரிக்கையாகக் கதவுகள், சன்னல்கள் சாத்தப்பட்டன. மின்-வெட்டினால் வானொலி, தொலைக்காட்சி, மின்விசிறி இயங்கவில்லை.

கடப்பாரையைக் கையிலெடுத்த மருது ஆவேசம் வந்தவனைப்போல் குறிப்பிட்ட இடத்தில் குழி பறித்தான். தடாலடியாய், தனி ஆளாய் அவன் செயல்படுவதைக் காவேரியின் அணைப்பிலிருந்தபடி பரபரப்புடன் பார்த்துக்-கொண்டிருந்தது குழந்தை. சிறிது நேரத்தில் பயந்து அலறியது. அந்தக் குழந்தை அறியுமா தகப்பன் தனக்குத்தான் குழி பறிக்கிறான், இன்னும் சிறிது நேரத்தில் உயிருடன் புதைக்கப்-போகிறான் என்பதை.

குழந்தையின் அலறல், சுடுகாட்டுச் சூழல் காவேரியைப் பேசவைத்தது. குழந்தை பயப்-படுது… வேண்டாங்க என்றாள் கடைசி முயற்சியாக. அவன் காதில் போட்டுக்கொள்ளவில்லை. காரியத்தில் கண்ணாயிருந்தான்.

வீடுகளுக்குக் கதவுகளையும், சன்னல்களையும் கண்டுபிடித்தவன் மகாபுத்திசாலி. கதவுகள் மட்டும் அல்லாமல் போயிருந்தால் குடும்பச் சண்டை-களின் அவலங்கள் தெருவெல்லாம் எதிரொலித்து நாற்றமெடுக்க ஆரம்பித்துவிடும். அப்போது வீட்டின் காம்பவுண்ட் கதவை யாரோ பலமாத் தட்டுவது கேட்டது.

கையிலிருந்ததை அப்படியே போட்டுவிட்டு ஓசைப்படாமல் ஒரு சன்னலை மட்டும் லேசாகத் திறந்து பார்த்தான். அவனைப் போலவே ஆசிரியர் பணியிலிருக்கும் வகுப்புத் தோழன் அன்பு நின்று கொண்டிருந்தான். தனக்குள் எதையோ புலம்பிக்கொண்டு, சன்னலைச் சாத்திவிட்டுத் தன்னை ஓரளவு சரி செய்தபடி வெளியே வந்தான். எச்சரிக்கையாய் கதவு சாத்தப்பட்டது. நண்பனை வரவேற்று வரவேற்-பறையில் உட்கார வைத்தான்.

என்ன மருது…உடம்பெல்லாம் ஒரேயடியா வேர்த்துக் கொட்டுது?

ஞாயிற்றுக் கிழமைதானே வீட்டை ஒழுங்கு பண்ணினேன். கரண்ட் கட் வேற. அது இருக்-கட்டும். எங்கே ஆளையே பார்க்க முடியலே. கல்யாணச் சாப்பாடு போட இன்னும் மனசு வரலையா… என்று சமாளித்தான்.

அதுக்குத்தான் வந்திருக்கேன்…எங்கே தங்கச்சி?

பாத்ரூம்ல… பொடியன் தூங்குறான். பரவாயில்லே நீ வந்ததாச் சொல்லிடுறேன்

பணிவுடன் அன்பு அழைப்பிதழை நீட்ட எழுந்து நின்று வாங்கினான்.

பொண்ணு யாரு எந்த ஊருன்னு சொல்லலையே…

விடுதலை பேப்பர்ல ஒரு விளம்பரம் பார்த்தேன்

விளம்பரமா…?

அறிவிப்புனு வச்சுக்கோயேன் வாழ்-விணையர் தேவைனு போட்டிருந்துச்சு. திருமணமாகி இரண்டு குழந்தைக்குத் தாயாகி அண்மையில் விபத்து ஒன்றில் கணவனை இழந்த 28 வயதுப் பெண்ணுக்கு இணையர் தேவை. ஜாதி மதம் தடை இல்லைனு போட்டிருந்துச்சு. முகவரிய எடுத்துக்கிட்டுப் பெண்ணோட ஊரு ஈரோட்டுக்குப் போனேன். பொன்மாலைப் பொழுதுல அவங்களச் சந்திச்சேன். மனம் விட்டுப் பேசினோம். எனக்கு இது முதல் திருமணம்னு சொன்னதும் ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டாங்க. ரெண்டு பேருக்கும் பிடிச்சுப்போச்சு. அன்னிக்கே அவங்க வீட்டோட பேசி திருமணத்துக்கு நாள் குறிச்சுட்டேன். அந்த ரெண்டு பிள்ளைகளையும் வாரி அணைச்சுக்கிட்டேன். மூத்தவனுக்கு வயசு நாலு. பெண் குழந்தைக்கு வயசு ரெண்டு…

என்னப்பா பைத்தியக்காரத்தனமா இருக்கு. யாருக்கோ பிறந்த குழந்தைக்கு உன்னோட இன்சியலைப் போட்டுக்கப் போறியா? இப்ப வேணும்னா அந்தப் பிள்ளைங்க மேல உனக்குப் பிரியம் இருக்கலாம். உனக்குனு பிள்ளைப் பிறந்துட்டா அந்தப் பிள்ளைங்க வேப்பங்காயா கசக்க ஆரம்பிச்சுடும்… கரெக்ட்…அதனாலதான் திருமணம் நிச்சய-மான மறுநாளே ஒரு டாக்டர்கிட்ட வாசக்டமி பண்ணிக்கிட்டேன். அதாவது, குடும்பக் கட்டுப்பாடு., இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்…

மருதுவின் கண்கள் வியப்பில் விரிந்தன. பொட்டில் அடித்தாற்போல் இருந்தது அவனுக்கு. இதயத் துடிப்பு அதிகரிக்க லேசாக நடுங்கினான். தொண்டை கமற, நாக்குக் குழற, சில வார்த்தைகளை மட்டும் அவசரமாகக் கொட்டினான். மகிழ்ச்சி…கல்யாணத்துக்கு ஆக வேண்டியதைப் பாரு… குடும்பத்தோட வந்துடுறேன்… வாழ்த்துகள் என்று சொன்னவன் வாசல்வரைப் போய் வழியனுப்பிவிட்டுத் திரும்பினான். மூடிய கதவைப் பதைக்கும் நெஞ்சுடன் தள்ளினான். எதிரே குழந்தையுடன் கண்ணீர் மல்கக் காவேரி நின்று கொண்டிருந்-தாள். ஒரு நொடிகூடத் தாமதிக்கவில்லை. குழந்தையை வாங்கி அன்பொழுகச் சின்னக் கன்னங்களில் முத்த மழை பொழிந்தான். காவேரியை இறுக அணைத்துக்கொண்டான்.

மூவரும் சிதிலமடைந்து கிடக்கும் நில-வறையில் நுழைந்த போது மின் விசிறி சுழல, கனன்று கொண்டிருந்த வெப்பக் காற்று சொல்லாமலே அங்கிருந்து விடைபெற்றது!

– அக்டோபர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *