கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 27, 2022
பார்வையிட்டோர்: 4,200 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வானத்தில் அங்குமிங்கும் சிதறிக் கிடந்த மேகங் கள் தங்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு ஒன்று கூடிக் கருமுகிலாகத் தோற்ற மளித்தன. பளிச் பளிச்சென்று நெளிந்து கொண்டு பாய்ந்த மின்னல்களுக்கிடையே இடியின் குமுறல் ஆங்காங்கு எழுந்து கொண் டிருந்தது. காற்றின் வேகம் அதிகரித்தவுடன் சாரல், சுழன்று சுழன்று அடிக்கத் தொடங்கியது. சிறிது நேரத்திற்குள். ‘சோ’ வென்று விம்மிக்கொண் டிருந்த அச்சாரல், ‘ஹோ’ வென்று பிலாக்கணத்தை யெழுப்பிக்கொண்டு மழையாகப் பொழிய ஆரம்பித்தது. இயற்கையின் விசித்திர விளையாடல்கள் வெளியுலகில் நிகழ்ந்து கொண் டிருக்கையில், ஐன்னலின் துருப்பிடித்த இரும்புக் கம்பி களை இறுகப் பிடித்துக்கொண்டு சோகமே உருவெடுத்து அறையில் நின்று கொண் டிருந்த பாத்திமாவின் உள்ளத் தில் கொந்தளித்த சிந்தனை அலைகள் ஒன்றோ டொன்று ஆவேசத்துடன் மோதிக்கொண்டு மூர்க்கப் போராட் டத்தை உருவாக்கிக்கொண் டிருந்தன. அவ் வனிதையின் விழிகளிலிருந்து ததும்பி வழிந்தோடிய கண்ணீர் புறத் திலே சக்கைபோடு போட்டுக்கொண் டிருந்த மாரியைக் கண்டு ஏளனமாக சிரித்திருக்க வேண்டுமென்று சொல்லி விடலாம். சுழன்று வீசும் கடுங்காற்றின் உக்கிரத்தில் சிக்கிக்கொண்டு படார் படாரென்று அடித்துக்கொண்ட ஜன்னல் கதவுகளின் மீது அவள் பார்வை வீழ்ந்த போதெல்லாம், அவள் நெஞ்சை யாரோ கோடரியால் பிளப்பதாக உணர்ந்து கலங்கி நின்றாள். குழுமியிருந்த உறவினர்களின் சந்தடி, முதியோர்களின் கிண்டல் பேச்சு

கள், வெங்கலப் பாத்திரங்களின் கடப்படா சப்தம். ‘வாண்டுகளின்’ கூச்சல் இவை வீட்டிற்குள் அமர்க் களப் பட்டுக்கொண் டிருந்தபோது பாத்திமா ஒன்றை யும் செவிமடுக்கவில்லை. சொல்லொணா வேதனையும் மனக்கசப்பும் அவள் மதிவதனத்தில் மாறிமாறிப் பிரதிபலித்தன. உடலிலே ஓர் நடுக்கம்! நெஞ்சிலே ஓர் பதற்றம்! அறிவிலே ஓர் குழப்பம்.

“பாத்திமா … ஜன்னலை மூடாமே என்ன செஞ்சுட் டிருக்கே… நல்ல குழந்தே” என்று அன்பு ததும்பும் குரல் அவள் செவிகளில் லேசாக வீழ்ந்ததும் கம்பிகளின் மீது சாய்ந்திருந்த அவள் சிரம் சற்று அசைந்தது. பிடித்திருந்த பிடி தளர்ந்தது. தந்தையின் சாந்தம் பொலியும் முகத்தை அண்ணாந்து பார்த்தாள். மறுகணத்தில் அவரை இறுகக் கட்டிக்கொண்டு கண்ணீர் தாரை தாரையாக உகுத் தாள்.

“எனக்காக எவ்வளவு கஷ்டங்களை நீங்கள் அது பவிக்க வேண்டியிருக்கு வாப்பா’ என்று நாக்குழற அவள் கதறியதும், இப்றாஹீம் குழப்பமடைந்து ஸ்தம்பித்து நின்று விட்டார். அலங்கோலமாகக் கிடந்த மகளின் குழ லைத் திருத்திவிட்டு, “உலகத்திலே எப்போ பொறந்துட் டோமோ, படவேண்டிய தெல்லாம் பட்டே தீரணும், பாத்திமா” என்று சாந்தமாகச் சொல்லிக்கொண்டே ஜன்னல் கதவுகளை மூடினார்.

“உங்களுக்கு மகளாக நான் பிறந்திருக்காவிட்டால் எவ்வளவு நல்லதாய் இருக்கும்” என்றாள் பாத்திமா மிக்க வேதனையுடன்; துக்கம் அவள் தொண்டையை அடைத்தது.

“சே, அப்படி ஏம்மா பேசறே? அல்லாஹ்வின் கருணை மீதா பழி போடுறே? நம்ப சமூகத்தெ மனமார ஏசு!” இப்றாஹீமின் சொற்களில் எரிச்சலும் வெறுப்பும் கிளர்ந்து மறைந்தன. பாத்திமா மௌனம் சாதித்தாள்.

“யாரோ ஒருவன் பைத்தியக்காரக் காரியத்தைச் செஞ்சுட்டா, அதற்கு நம்ப சமூகம் தாளம் போட்டுக் கும் மாளம் அடிக்குதே! அதை நினைச்சா என் வயிறு எரியுதம்மா!” என்றார், மிக்க வெறுப்புடன்.

இப்றாஹீம் இடித்துக் கூறிய அந்தப் பைத்தியக்காரக் காரியத்தைச் செய்தவர் மஸ்தான் ஸாஹிப். அக்கரையில் ஏராளமாகச் சம்பாதித்த அவர், சமீபத்தில் தான் கிராமத் துக்குத் திரும்பினார். செல்வத்தில் திளைத்தவராதலால். தமது ஆறு பெண்களின் திருமண விஷயங்களை முடிக்கும் பணி அவருக்குக் கிள்ளுக் கீரையாக இருந் தது. சில மாதங்களுக்கு முன் அக் கிராமத்தில் ஓர் ‘அடாத காரியத்தை அவர் செய்துவிட்டார்.

ஊரே ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டது. பலருக்கு வெகு நாட்கள் வரை புரியாத புதிராக அது நிலைத்து நின்று விட்டது. தம் மூத்த மகள் நிக்காஹ் விஷயத்தில் மஸ் தான் ஸாஹிப் நடந்து கொண்ட விபரீதப் போக்கு, கிரா மத்தில் பரபரப்பை உண்டாக்கிவிட்டது. கல்யாண நாளன்று தமக்கு வரப்போகும் மருமகனுக்கு அவர் ஆயி ரம் ரூபாய், சுளையாக , தம் காணிக்கையாக அளித்துவிட் டார். அதுமாத்திரம் அல்ல. தாம் செய்துவிட்ட பரோப காரச் செயலை ஊராரிடம் பறைசாற்றியும் விட்டார். இச் செய்தி யாவரையும் திடுக்கிடச் செய்தது. இம்மாதிரியான சம்பவம் அக் கிராமத்தில் அதற்கு முன் நடைபெற்ற தில்லை என்று எண்பது வயது ஹுஸேன் பாவாகூடச் சொல்லிவிட்டார். தாம் மருமகனுக்குக் காட்டிய பெருந் தன்மை கிராமத்தில் விபரீதத்தை உண்டாக்கி விட்டதை அவர் பின்னால் தான் தெரிந்துகொண்டார்.

மணமகனுக்கு அவரளித்த காணிக்கை’ நாளடை வில் கட்டணத் தொகையாக மாறிக் கிராமத்தில் தலைவிரித் தாடியது. பெண்களைப் பெற்ற பாக்கியவான்கள் மனம் பதறினார்கள். நிக்காஹ் என்ற மங்கல நிகழ்ச்சி மார்க்கட் நிலவரம்போல் குடும்பங்களில் அமைந்துவிட்டது.

மஸ்தான் ஸாஹிப் தோண்டி வைத்த படுகுழியில் வீழ்ந்து தத்தளித்த குடும்பங்களில் இப்றாஹீம் குடும்பமும் ஒன்றாகும். தம் மகள் பாத்திமாவின் நிக்காஹ்விற்கு எல்லா ஏற்பாடுகளையும் இப்றாஹீம் செய்து முடித்திருந் தார். தம் நிலைமைக் கேற்றபடி நகைகளையும் துணி மணிகளையும் வாங்கி வைத்திருந்தார். கல்யாண தினத்தன்றோ, அன்றி அதற்கு முன்பாகவோ முன்னூறு ரூபாய் ‘கட்டணமாக மணமகனுக்குக் கொடுத்து ஆசீர்வதிக்கும்படி சம்பந்தி வீட்டார் தாக்கீது அனுப்பியிருந்தார்கள். அதற்கும் இப்றாஹீம் உடன் படும்படி நிலைமை ஏற்பட்டது. ஆனால் அவர் எதிர்பார்த்த பணம் கடைசி நேரத் தில் காலை வாரிவிட்டதைக் கண்டு அவர் திகிலடைந்தார்.

வேறு ஒருவழியும் அவருக்குப் புலப்படவில்லை. கல்யாண தினம் நெருங்கிக்கொண் டிருந்தது. பணம் கிடைக்கா விட்டால் தம் கதி அதோகதி யென்று அவர் அறியாமலில்லை. ஒரு வேளை நிக்காஹ்வே முறிந்து விட லாம் என்ற பீதி அவருக்கு உண்டாயிற்று. அதனால் விளையும் கேடுகள், ஊராரின் புரளிப் பேச்சுக்கள், குடும்ப கௌரவத்தின் தாழ்வு, தம் மகளின் எதிர்கால வாழ்வின் சீரழிவு இவையெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அவரைப் பயமுறுத்தின. அங்குமிங்கும் ஓயாமல் அலைந்ததால் அவர் மிதியடிக் கட்டைகள் தேய்ந்து விட்டன. ஏமாற்ற மும் ஏக்கமும் போட்டி போட்டுக்கொண்டு அவரை வாட்ட அவர் உயிர் ஊசலாடிற்று.

“பாத்திமா …இனி உனக்கு ஒரு கவலையும் இல்லை; உன் வாழ்வையும் என் மானத்தையும் காப்பாற்றிவிட்டேன்” என்றார் இப்றாஹிம் சற்று வீராப்புடன்.

“பணம் கிடைச்சுச்சா வாப்பா?” என்று வியப்புடன் கேட்டாள் பாத்திமா.

“அதைப்பத்தி நீ ஏன் அலட்டிக்கிறே? ஒரு கதவை ஒருத்தன் மூடிட்டா அறுபது கதவுகளை அல்லாஹ் திறக்க மாட்டானா? பணமும் கிடைச்சுடுச்சு. நாளை நிக்காஹ்விலே ஜமா அத் முன்னாலே அதையும் வச்சுடுவேன்.”

“பாத்திமா…குலாம்’ என்று நம்மவங்க சொல்றதே நீ கேள்விப் பட்டிருப்பே. அது யாரைக் குறிப்பிடும்னு உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார் இப்றாஹீம்,

கம்மிய குரலில்,

தந்தையாரிடமிருந்து கிளம்பிய அர்த்தமற்ற எதிர் பாராத இந்தக் கேள்வி பாத்திமாவை ஒரு உலுப்பு உலுப்பி அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“ஏன் வாப்பா அப்படிக் கேக்குறிங்கே?” என்றாள்.

“ஒன்றுமில்லேமா … அந்தக் காலத்திலே அடிமை வழக் கம் இருந்துச்சுன்னு சொன்னாங்க. நம்ம ரஸுலுல்லாஹ் (தீர்க்கதரிசி ) அதெல்லாம் ஒழிச்சிட்டாங்க என்று சரித்திரம் சொல்லுது. ஆனால் அதை நான் நம்பமுடிய வில்லை பாத்திமா” என்றார் இப்றாஹிம்.

பாத்திமா வாயடைத்து நின்றாள். மேலும் தொடர்ந்து இப்றாஹிம், “நாளைக்கு நிக்காஹ் கூடத்திலே உக்காரப் போறவன் உன் களுத்திலே கருவமணி உளுந்தவுடனே உன் கணவனாகப் போகப் போறான் இல்லியா? அவனை மருமகன்னு உன் தாய் பெருமையா எல்லார் கிட்டயும் பேசப் போவுது. உன் தங்கச்சி அவனை மச்சான்னு செல்லமாக் கூப்பிட்டு விஷமம் செய்யும். மாப்பிள்ளைன்னு மத்தவங்க அவனைத் தலைமேலே வச்சு ஆடுவாங்க. ஆனால் எனக்கு அவன் என்ன முறை தெரியுமா பாத்திமா?” என் றார் ஆர்வத்துடன் விழிகள் வெளியே வந்து விடும்படி

கைகளைப் பிசைந்து கொண்டு திக்பிரமையுடன் நின்று கொண்டிருந்தாள் பாத்திமா.

“சொல்லு குழந்தே… வாய்விட்டுச் சொல்லேன்” என் றார் இப்றாஹீம் பொறுமை யிழந்தவராய்.

“வாப்பா…எனக்கு ஒண்ணும் தோணலே” என்று சொல்லிச் சிரங்கவிழ்த்து மௌனமாக நின்றாள் பாத்திமா.

“இதோ நானே சொல்லிவிடுகிறேன் பாத்திமா . நாளைக்கு உனக்குக் கணவனாக வரப்போகும் அவன் நான் பேரம் செய்யப் போகும் அடிமை, குழந்தே!” என்றார் இப் றாஹீம் ஆவேசத்துடன், வரட்டுச் சிரிப்பை யெழுப்பி விட்டு.

மேலும் தொடர்ந்தார். “இந்த முந்நூறு ரூபாய்ப் பிச்சைக் காசுக்கு அவன் விலையாகப் போய்விட்டான். நாளைக்கு அந்த நிக்காஹ் ஜமா அத் முன்னாலே , பணத்தை அவன் அப்பன் முகத்திலே வீசிவிட்டு, அவனை அடிமை யாக வாங்கப் போறேன் பாத்திமா. அவன் மதிப்பு அவ்வளவுதான் ” என்றார் இப்றாஹீம் மிக்க உணர்ச்சியுடன். அவர் உடல் நடுங்கிற்று. பெருமூச்சு அடிவயிற்றிலிருந்து மேலெழுந்தது.

“வாப்பா…நான் தான் பாவி. உங்களுக்கு மகனாகப் பிறக்காமே மகளாகப் பிறந்துவிட்டேன்” என்று சொல்லித் தேம்பித் தேம்பிக் கண்ணீர் சொரிந்தாள் பாத்திமா.

“மற்றதையும் சொல்லிவிடுகிறேன். இப்பவே கேட்டு விடு” என்று பேச்சைத் தொடந்தார் இப்றாஹீம்: “எது எப்படிப் போனால் என்ன…? இந்தக் கிழத்தே விட்டு விட்டு நாளைக்கு அவனோடே நீ போயிடப் போறே. எந்த வீட் டில் என் ஜீவனத்தை ஆரம்பிச்சேனோ, எந்த வீட்டிலே உன்னைப் பெற்று வளர்த்து இந்த நிலைக்குக் கொண்டு வந்தேனோ, எந்த வீட்டிலே உன் நிக்காஹ்வையும் நாளைக்கு முடித்துவிடப் போகிறேனோ, அந்த வீட்டை இந்தக் கட்டணப் பணத்திற்காக இன்று விற்று விட்டேன் குழந்தே! இனிமேல் இந்த உடம்பு புரளக்கூட இடமில் லாமல் போயிடுச்சு ” என்று தழுதழுத்த குரலில் சொல்லி விட்டு, பொக்கை வாயைத் திறந்து கொண்டு சிறு குழந்தை போல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார் அவர்.

பாத்திமாவின் உள்ளம் வெதும்பியது. நெஞ்சம் குழைந்தது. தந்தையின் பாதங்களைத் தன் தளிர்க் கரங்க ளால் தொடுவதற்குக் குனிந்தாள். தந்தையின் சீரடிகளை மகளின் ரத்தக் கண்ணீர் கழுவிவிட்டது.

“பாத்திமா. நீ சுகமாக வாழ வழிசெய்துவிட்டேன். இனி நான் சொல்லப் போவதை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள். உன் இல்லற வாழ்வில் நீயும் பல குழந்தைகளைப் பெற்றுத் தாயாகப் போகப் போறே. உனக்கும் எனக்கும் நேர்ந்த இக்கதி அக் குழந்தைகளுக்கு நேராமல் பார்த்துக்கொள்” என்று உணர்ச்சி பொங்கச் சொல்லிவிட்டு, அவ்விடத்தைவிட்டு அகன்றார் இப்றாஹிம்.

தந்தையின் கடைசி வார்த்தைகள் பாத்திமாவின் இருதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டன என்பதை அவள் நின்றிருந்த கோலம் பறை சாற்றியது. அவ்வார்த்தைகளைக் காப்பாற்ற அவள் கைக்கொண்ட வைராக்கியத்தை அவள் வதனம் பளிச்சென்று எடுத்துக் காட்டியது. ஜன் னலைத் திறந்து இரும்புக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு வெளியுலகத்தைப் பார்த்தாள். கைம்மாறு கருதாது மழை பொழிந்து உலகத்தை வாழ்விக்கும் கார்மேகங்கள் கலைந்த வண்ணம் இருந்தன. இன்முகத்தோடு எதிர்கொண்டு அவளை அழைப்பது போல் இளந் தென்றல் அவள் முகத்தில் களிநடனம் புரிந்து தவழ்ந்தோடியது. மழைக்கு அஞ்சி, மரங்களிலும் செடிகளிலும் அடைக்கலம் புகுந்த பறவைகள் கிரீச் கிரீச்சென்று கானத்தை எழுப்பிக் கொண்டு தங்கள் கூடுகளை நோக்கி ஆனந்தமாகப் பறந்து சென்று கொண்டிருந்தன.

– பெருநாள் பரிசு, முதற் பதிப்பு: டிசம்பர் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.

– இஸ்லாமிய மாத சஞ்சிகையான ‘மணி விளக்கு’ இதழில் சுடர் விட்டது. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *