மாங்குடி கிட்டாவைய்யரைத் தெரியாதவர்கள் அந்த வட்டாரத்தில் இருக்க முடியாது. மனுஷர் ரஸிகஸிரோன்மணி. ஆளும் பார்க்க ரொம்பப் பிரமாதமாக இருப்பார். ஸ்நான ஸந்தியாவந்தனங்களில் ஒரு ஆசாரமும் குறையாது. அப்பா வைத்து விட்டுப் போன 5 வேலி நிலம் இருக்கிறது. குத்தகை தவறாது வந்து விடும். மனுஷ்யன் காலங்கார்த்தால 4 மணிக்கெல்லாம் ஏந்துண்டுடுவார். எல்லாம் முடிந்து ஐந்தரை மணிக்கு ஆற்றிலே ஒரு குளியல். சாதாரணக் குளியலல்ல, ஆற்றிலே இறங்கினால் இக்கரைலேந்து அக்கரைக்கு ஒரு தடவை போயிட்டுத் திரும்புவார். அதானோ என்னவோ உடம்பு கிண்ணுனு இருக்கும். சாவதானமா ஆரறை மணிக்குத் திரும்பி வரும்போது, ஈர உடம்பும், நனைஞ்ச வேட்டியுமா அவரைத் திருட்டுத்தனமா பாக்கறதுக்கு ஏகப்பட்ட பொம்மனாட்டிகள் ரெண்டாந்தடவை தண்ணியெடுக்க வர்றதா ஊரெல்லாம் பேச்சு.
விசாலம். கிட்டாவைய்யருக்கு அடங்கிய பத்னி. பர்த்தா என்ன சொன்னாலும் சரி, என்ன செய்தாலும் சரி. அவளுக்கு பர்த்தாதான் உலகம். கல்யாணமாகி பத்து வருஷம் ஆச்சு… ஒண்ணு பாதியிலேயே கரைஞ்சுடுத்து… இன்னொண்ணு பிறந்து ஒரு வருஷத்தில்,,, ஏதோ முந்தின தலைமுறை சாபம்னு சொல்றா…இப்போல்லாம் விசாலம் ஆத்துக் கார்யங்கள் முடிஞ்சதும் நேரா ஆபத்சகாயேஸ்வரர்-மங்களாம்பிகையே சரணம்னு கோவில்லேதான். மத்தியாம் ஒரு நாழி கூட கண்ணசர மாட்டா. பின்னாடி கொல்லப்புறத்திலே ஏகத்துக்கும் செடி, கொடி, மரங்கள்…ஒரு பக்கம் கீரைகள். இதெல்லாம் பாக்கவே அவளுக்கு போது சரியாயிருக்கும். நடுநடுவில், கிட்டாவைய்யருக்கும் அவரோட ஜமாவுக்கும் காபி, சாயங்காலம் ஏதாவது பலகாரம்.
பதினோரு மணிக்கு கிட்டாவைய்யர் ஆத்து திண்ணைலே ஒரு செட்டு சேந்துடும். சீட்டுக்கட்டை கலைச்சு போட்டாச்சுன்னா அது பாட்டுக்கு மணிக்கணக்கிலே ஓடிண்டிருக்கும். நடுநடுவிலே காபி, மூணு மணியாச்சுன்னா விசாலம் ஒரு பெரிய தட்டிலே முறுக்கு, தேன்குழல்னு ஏதாவது கொண்டு வருவா. சில நாள் அடையும் வெல்லக்கட்டியும் கூட வரும்.
அன்னிக்கும் பதினோரு மணிக்கே ஜமா சேந்தது… ஆனா ரெண்டு பேர் வர்ரல்லே…. ஏழு பேர்தான்.. அதிலே ஆட்டத்திலே இறங்கறவா நாலு பேர்தான்… கிட்டாவையருக்கு அஞ்சு பேராவது இல்லாட்டா ஆட்டமே தரிக்காது.. ஆனா அன்னிக்கு என்னவோ ஒரு மாதிரியாத்தான் இருந்தார்.
ஓய் பஞ்சாமி, திருவாரூரிலே திருவிஷால்லாம் எப்படிங்காணும் போயிண்டிருக்கு?
ப்ரமாதம் ஓய், நீர்தான் இன்னும் கிளம்பவே இல்லை, நாங்கள்லாம் தினமும் போய்ட்டு வந்திண்டிருக்கோம்…ஸ்பெஷல் ட்ரெயின் கூட விட்டுருக்கா ஓய்..
அது சரி, இன்னிக்கு சாயரட்சை கிளம்புவோமா?
எத்தனை மணிக்கு கிட்டா?
சந்தி பண்ணிட்டு ஒரு ஏழு மணிக்கா கிளம்புவோமா?
எப்படி கிட்டா? ஏழு மணிக்கு கிளம்பினா எப்போ சாமி தரிசனம் பண்றது, எப்போ திரும்பி வர்றது?
அட என்னங்காணும் நீர் ஒரு சுத்த மாங்கா மடையன்… சாமி எப்போ வேணாலும் சேவிச்சிக்கலாம் ஓய்,,, கமலாம்பா வந்திருக்காளாமே? தினமும் அவளோட ஆட்டம்தானாமே? இன்னிக்கு போவோமா?
ஏழு மணிக்குக் கிளம்பினா நம்ப போய்ச் சேரும்போ அவளோட ஆட்டமே முடிஞ்சிருக்கும்…
கிட்டாவைய்யர் கண்ணைச் சிமிட்டினார். அவ ஆட்டம் முடியட்டும் ஓய். அதுக்கப்புறம் நம்ம ஆட்டம்..
சிவ சிவா … என்னங்காணும் உம்ம புத்தி இப்படி பேயா அலையறது? ஆத்திலே மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கும்போது இப்படி பண்றது நியாயமா?
பஞ்சாமி… இதெல்லாம் பகவான் செயல்… ஒண்ணும் தப்பில்லே…
எது ஓய் பகவான் செயல்? நீர் இப்படி பரஸ்த்ரீகள் பின்னாடி அலையறதா? எல்லாம் பரதேசத்திலேந்து வந்து நம்மளையெல்லாம் ஆண்டுண்டிருக்காளே அவாளைச் சொல்லணும்.
பஞ்சாமி… இதெல்லாம் தப்புன்னா பகவான் ஏன் நமக்கு கண்ணைக் கொடுக்கணும்… கண்ணுக்கு அழகா கமலாம்பாளைப் படைக்கணும்…அவளை ஏன் நம்ம ஊருக்கு வந்து ஆடச் சொல்லணும்?
கிட்டாவைய்யர்…சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்கோ…அழகு எல்லாத்துலேயும்தான் இருக்கு…அதுக்காக எல்லாத்தையும் நாம அடையணும்னு நினைக்கலாமா?
சரிதான் ஓய், நீர் சொல்றது வாஸ்தவமான பேச்சு, நான் ஒப்புத்துக்கறேன்… தோ பாரும் ஓய், இப்போ நீ சொன்ன அதே பர தேசத்துலேந்து வந்திருக்காளே ஸ்த்ரீகள், அவா கூடத்தான் பேரழகா இருக்கா.. அவளையெல்லாமா நான் ஆசைப்படறேன்?
ஈஸ்வரா.. ஆசைப்பட்டுத்தான் பாரேன் ஓய்.. வெள்ளக்காரன் அடுத்த நிமிஷமே தூக்குல போட்டுடுவான்..
அதுக்குத்தான் சொல்றேன் பஞ்சாமி…என்னால முடியற காரியத்திலேதான் நான் இறங்கறேன்…அளவுக்கு மீறி ஆசைப்படலை.. நீயே சொல்லு பஞ்சாமி… இதெல்லாம் தப்புன்னா பகவான் ஏன் நமக்கு ஐம்புலன்களைக் கொடுத்து ஆசையையும் கொடுக்கணும்?
கிட்டாவைய்யர்வாள், ஐம்புலனைக் கொடுத்து ஆசையையும் கொடுத்த பகவான்தான் எது நல்லது எது கெட்டதுன்னு வேதத்திலேயும் கீதையிலேயும் சொல்லியிருக்கான் ஓய்..
ஆமாம், சொல்லியிருக்கான்தான், ஆனா மனசு அதைக் கேட்க மாட்டேங்கறதே ஓய்.. அதுவும் அவன் குடுத்த மனசு… நினைச்சா அவனே மாத்தட்டுமே..
உம்மத் திருத்தவே முடியாது ஓய்..
இதற்குள் காபி வந்து விட்டது..
தாழ்வாரத்தின் ஓரமாக நின்று கொண்டு விசாலம் கிட்டாவைய்யரைப் பார்த்தாள்.. கிட்டாவைய்யர் எப்போதும் திண்ணையில் தாழ்வாரத்தின் அந்த மூலையைப் பார்த்தபடிதான் உட்காருவார். விசாலம் காபி கொண்டு வந்தால் பரபுருஷாள் மத்தியில் கூப்பிட மாட்டாள்.. இவரேதான் பார்த்துட்டு வாங்கிண்டு வரணும். அது மட்டுமல்ல… அப்படியே அந்த சாக்கிலே எல்லோர் கையிலே இருக்கற சீட்டையும் ஒருதடவை பாத்துடலாம்..
விசாலத்தைப் பார்த்ததும் கிட்டாவைய்யர் எழுந்தார். வேட்டியை சரி செய்து கொண்டு, மேலே போர்த்தியிருந்த அங்கவஸ்திரத்தை மறுபடி ஒரு முறை நீவி விட்டுக்கொண்டு காபியை வாங்கப் போனார். ஒரு பெரிய தாம்பாளத்தில் ஒரு கூஜாவில் காபியும், நாலைந்து பெரிய பித்தளை டம்ளருமாக…
வாங்கும்போது விசாலம் சொன்னாள் “ஏன்னா, காமுவாத்திலே அடுத்த மாசம் அவா மன்னியோட தங்கைக்கு கல்யாணமாம்…அப்பளாம் இடணும்னாள்,,, என்னைக் கொஞ்சம் வரியான்னு கேட்டாள்… பாவம் அவ மட்டும் தனியா கஷ்டப்படுவா… நானும் கொஞ்சம் போயிட்டு வந்துடவா?”
கிட்டாவைய்யர் யோசித்தாள்…காமுவின் ஆத்துக்காரர் கைலாசம் போய் மூணு வருஷம் ஆகிறது… எல்லாமே அண்ணாவின் தயவில்தான்…”விசாலம்… நீ ஒண்ணு பண்ணு…நீ ராத்ரி அங்கேயே தங்கிக்கோ.. நாங்கள்லாம் இன்னிக்கு திருவாருர் போறோம்.. அப்படியே டாக்கியும் பாத்துட்டு வர்றதுக்கு வெடிகாலம்பற ஆயிடும்.. நான் வரும்போது அப்படியே உன்னையும் அழைச்சிக்கிறேன்”
விசாலம் யோசித்தாள் ‘அப்போ நான் உங்களுக்கு அடையும் கொத்தமல்லித் தொகையலும் தட்டிலே எடுத்து வச்சிட்டுப் போறேன்…ராத்திருக்கு என்ன பண்ணுவேள்?”
“அதெல்லாம் சாமாவாத்திலே பாத்துக்கறேன்… நீ ஒண்ணும் கவலப்படாதே”
“நீங்க கார்த்தாலே வரும்போது ஒரு குரல் குடுங்கோ நான் சட்டுன்னு வந்துடறேன்”
கொஞ்ச நேரத்தில் விசாலம் கிளம்பிப் போனாள்.
திண்ணையிலேயே ஒரு பானை இருந்தது. அதிலிருந்து தண்ணீரெடுத்து வாயைக் கொப்பளித்து வெத்திலையைத் துப்பினார். ஒரு சொம்பு தண்ணீரைக் குடித்த பின்னர் கூஜாவிலிருந்து காபியை பித்தளை டம்ளர்களில் ஊற்றினார். கொதிக்கக் கொதிக்க காபி. அங்கவஸ்திரத்தினால் டம்ளரைச் சுற்றிப் பிடித்துக் கொண்டார்.
அது என்னவோ சொல்லுங்கோ ஓய்… வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான்… வாழ்க்கையை எப்படி அனுபவிக்கணும்னு அவங்கிட்டேதான் கத்துக்கணும்…
கிட்டாவைய்யர்வாள்…அனுபவிக்கறதை அவங்கிட்டே கத்துண்டா, அதுக்கப்புறம் அனுபவிக்கப்போறதை யார் கிட்டே கத்துக்கறது?
அட போமய்யா…அப்படி என்ன பெருசா ஆயிடப்போறது…எல்லாம் நம்மோட கட்டுப்பாட்டிலேதான் இருக்கும்…
அப்படி இல்லே கிட்டா…கட்டுப்பாட்டில் இல்லாததனாலதான் இப்படியெல்லாம் கண்டவளைத் தேடிண்டு போகச் சொல்றது….
நிறுத்தும் ஓய்…இதோ ராணி வந்தாச்சு…செட்டு சேந்தாச்சு…நீர் எத்தனை ஓய்?
பேசிக்கொண்டே இருந்ததில் மணி ஆனதே தெரியவில்லை… விசாலம் இருந்தால் மூணு மணிக்கு ஏதாவது பலகாரத்தோடு வந்திருப்பாள்…
மணி நாலரை ஆனது… மாடுகளைப் பத்திப் போன முனியன் எல்லா மாடுகளையும் திருப்பி ஓட்டிக் கொண்டு அந்தந்த வீட்டிலே விட்டான்…
கிட்டாவைய்யரின் வீட்டின் முன்னே வந்ததும் அவரது அஞ்சு பசு மாடுகளையும் வீட்டுக்கள் விட்டவன் “சாமி மாடு வந்துடுச்சு,,,கட்டிக்கோங்க”
கிட்டாவைய்யருக்கு ரம்மி சேரவில்லை…”விசாலம்… மாடு வந்துருக்கு பார்” என்றார். ஆட்ட மும்முரத்தில் விசாலம் வீட்டில் இல்லை என்பது ஞாபகமில்லை…
ஒரு வழியாக ஆட்டம் முடிந்ததும் கிட்டாவைய்யர் கிளம்பினார். இதற்கு மட்டும் தனியாகத்தான். சந்தி முடித்து ஜவ்வாதிட்டு மயில்கண் வேஷ்டியும் அதற்கு ஜோடியாக அங்கவஸ்திரமும்…வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினார்…
திருவாரூரில் எங்கு பார்த்தாலும் கூட்டம்….திருவாரூர் தேர் என்றால் சும்மாவா? எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் கீழே இருக்கும் கோழியையே குறை வைக்கும் பருந்தைப் போல கிட்டாவைய்யர் கமலாம்பாளின் கோஷ்டியினரில் ஒருவனைச் சுற்றி வந்தது…எல்லா ஆட்டமும் முடிந்து கார்த்தால மூணு மணிக்கெல்லாம் வில்வண்டியைக் கிளப்பினார். வண்டியில் ஏறிப் படுத்ததும் மாடுகள் தானாகவே வீடு நோக்கி பறந்தது…
படுத்தாலும் தூக்கம் வரவில்லை கிட்டாவைய்யருக்கு…. மேலே ஒரே நஷத்திரக் கூட்டம்… எல்லாம் ஒரு கனவைப் போல இருந்தது…. தான் இன்னும் வானத்திலேயே இருப்பது போலவும் கமலாம்பாள் அவர் மேல் சாய்ந்திருப்பது போலவும் இருந்தது..
வண்டி ஊருக்குள் நுழைந்தவுடன் எழுந்து உட்கார்ந்தார்… காமுவின் வீட்டு வாசலில் வண்டி வரும்போதே விசாலம் சத்தம் கேட்டு வெளியே வந்து நின்றாள். பாவம் ராத்திரியெல்லாம் தூங்கவேயில்லை போலேருக்கு…
வண்டியில் பின்புறத்தில் ஏறினாள் விசாலம்… எப்பவும் அவர் பக்கத்தில் உட்காரச் சொல்வார் கிட்டாவைய்யர். இன்று அவளும் உட்காரவில்லை,, அவரும் கூப்பிடவில்லை…
வீட்டுக்கு வந்ததும் கொஞ்ச நேரம் திண்ணையில் கண்ணசரலாம் என்று தோன்றியது கிட்டாவைய்யருக்கு….
விசாலம் நேரே சமையலறையில் நுழைந்தாள். அடுப்பைப் பற்ற வைத்து வெந்நீர் வைத்தாள்… நேத்து மிச்சமிருந்த பாத்திரத்தையெல்லாம் எடுத்து புழக்கடையில் கொண்டு போய் தேய்த்தாள். வெந்நீர் காய்ந்தவுடன் டிக்காஷன் போட்டு விட்டு பால் கறக்கப் போனாள். அஞ்சு நிமிஷம் ஆயிருக்காது… பின்னாடியிருந்து விசாலத்தின் குரல் “ஈஸ்வரா, எல்லாம் போச்சே”
திடுக்கிட்டு எழுந்த கிட்டாவைய்யர் சத்தம் வந்த திக்கை நோக்கி ஓடினார்…
தொழுவத்தின் அருகில் விசாலம் நின்று கொண்டிருந்தாள். கையில் சொம்பு…ஆனால் அஞ்சு மாடுகளும் காணவில்லை…விசாலம் அவரைப் பார்த்தாள்.
“விசாலா, நேத்தைக்கு மாடெல்லாம் வந்தது…ஆனா இப்போ…”
விசாலம் புழக்கடையைத் தாண்டி கையை நீட்டினாள்…நீட்டிய பக்கம் பார்த்தார் கிட்டாவைய்யர். ஓரிரு விநாடிகளுக்குப் பிறகு கண்களுக்குப் புலப்பட்டது…
அஞ்சு மாடுகளும் தோட்டத்திலிருந்த செடிகள், கீரைகள் எல்லாத்தையும் மொட்டை அடித்து விட்டிருந்தது…
“விசாலம், நேத்தைக்கு நான்தான் கட்ட மறந்துட்டேன்…”
“இப்போ எல்லாம் போச்சே…ஆசை ஆசையா பார்த்துப் பார்த்து வளர்த்த காய்கறிச் செடி, கீரையெல்லாம் இப்படி ஒரு ராத்ரிலே வீணாப் போச்சே… எவ்வளவு நாளா கண்ணுங்கருத்துமா வளத்தேன்…எல்லாம் வீணாப் போச்சே…அத்தோட இல்லே… பாலெல்லாம் கன்னுக்குட்டியே எல்லாப் பாலையும் குடிச்சிடுத்தே”
“எல்லாம் அந்த கோவிந்தனாலே வந்தது…இன்னிக்கு வரட்டும் அவன்…”
கோபாவேசத்துடன் கிட்டாவைய்யர் திண்ணையில் வந்து உட்கார்ந்தார்..
.கொஞ்ச நேரத்தில் கோவிந்தன் வந்தான்..”சாமி, கோவிந்தன் வந்திருகேன்…”
சட்டென்று எழுந்தார் கிட்டாவைய்யர் “ஏண்டா கோவிந்தா, நீ பாட்டுக்கு மாட்டை ஓட்டிட்டு போயிட்டே நேத்து… நானும் கொஞ்சம் அசிரத்தையா இருந்துட்டேன்… இப்போ பார் பின்னாலே விசாலம் கஷ்டப்பட்டு வளத்த காய்கறிச் செடி, கீரை எல்லாத்தையும் அஞ்சும் முழுங்கிடுத்து… போதாக்குறைக்கு கன்னுக்குட்டி எல்லாப் பாலையும் குடிச்சிடுத்து… என்னடா வேலை பாக்கறே?”
கோவிந்தன் சொன்னான் “சாமி மாடு வந்துடுச்சுன்னு சொல்ல வேண்டியது மட்டும்தான் என் வேலை…மாடு உங்களுது…கட்ட வேண்டியது உங்களோட பொறுப்பு….கட்டாத மாட்டுக்கு நானா பொறுப்பு?”