கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 8,684 
 

அவள் எழுந்து போன பிறகும் கூட, அவள் பேசி விட்டுச் சென்ற வார்த்தைகள் என்னை தகித்தன. என்ன பெண் இவள்… படித்து, பட்டம் பெற்று, கவுரவமான குடும்பத்தில் பிறந்து, நல்ல வேலையில், கை நிறையச் சம்பளமும் வாங்கிக் கொண்டு, இன்று காரும், நல்ல வேலையில் உள்ள பிள்ளைகளும் உள்ள ஒரு பெண்ணால், ஏன், என்றோ நடந்த நிஜத்தை சொன்னால், சகித்துக் கொள்ள முடியவில்லை?

“உங்க மாதிரி பொழுது போக்கத்த எழுத்தாளர்களுக்கு, என்னை மாதிரிப் பெண்களின் வாழ்க்கை தான் கிடைத்ததா… கதையாம் கதை… எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க எங்க கவுரவத்தைக் குலைக்க?’ என்று முகத்தில் அனல் பறக்கக் கேட்டாள் அவள்… அவள் பெயர்… வேண்டாம். அவள் என்றே குறிப்பிடுகிறேன்.

“உன்னைப் பற்றி நல்லதாகத் தானே எழுதியிருக்கிறேன்? நாம் எல்லாருமே வாழ்க்கையில் பல கஷ்டமான சம்பவங்களைத் தாண்டி வந்தவர்கள் தானே?’ என்றேன் நான் சமாதானமாக.

“என்ன கஷ்டம்? அப்படியே இருந்தாலும் அது என்னோடு… அதிலும், என் ஹஸ்பெண்டைப் பற்றி அப்படி மோசமாக எழுத, நீங்க யார்?’ என்றாள் அவள். இந்தக் கேள்வி நிஜமாகவே எனக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது. நானும் கோபத்துடன் வெடித்தேன்.

அக்னி

“பின்ன… உன் கணவர் மிகவும் உத்தமராக இருந்தாராக்கும்?’ என்றேன் ஏளனமாக அவள் என்னை முறைத்தாள்.

“அவர் உத்தமரோ, அதமரோ… அதைச் சொல்ல நீங்க யாரு? என்னைப் பொறுத்தவரை, அவர் நல்லவர் தான். இன்னும் கொஞ்ச நாளில், அவரைத் திருத்தி, நல்ல வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், எந்த பாழாய்ப் போனவன், என்ன சொன்னானோ… அது பொறுக்காமல் தான் அவர் தன்னைத் தானே அழித்துக் கொண்டார். என் குடும்ப மானத்தை நீங்க அநாவசியமாக வாங்கிட்டீங்க… உங்களை மன்னிக்கவே முடியாது. என் பிள்ளைங்க கிட்ட, அவரை ரொம்ப நல்லவர்ன்னுதான் சொல்லி வச்சிருக்கேன், தெரியுமா? இந்தக் கதையை அவங்க படிச்சாங்கன்னா என்ன நினைப்பாங்க?’ என்றாள் ஆத்திரத்துடன்.

“என்ன நினைப்பாங்க? உன் மேலுள்ள மதிப்பு அதிகமாகும்… தங்கள் அம்மா, தங்களை எவ்வளவு கஷ்டத்துக்கு நடுவே வளர்த்து ஆளாக்கினாங்கன்னு உன்னைப் பத்தி உயர்வாகத்தான் நினைப்பாங்க…’

“போதும், போதும் உங்க பசப்புப் பேச்சு… உங்க ஜாதிக்காரங்களுக்கே உள்ள அகம்பாவம், திமிர்…’ என்று, அழ ஆரம்பித்தாள். நான் திடுக்கிட்டேன்.
இதில் ஜாதி எங்கு வந்தது?

விஷயம் இதுதான்:

குடிகாரக் கணவனைக் காதல் கல்யாணம் செய்து கொண்ட ஒரு பெண்ணின் இன்னல்கள், அவன் ஒருநாள் குடிபோதையில் தன்னைத் தீக்கிரையாக்கிக் கொண்ட பிறகு, அவன் குடும்பம் எப்படி முன்னேறுகிறது, அவள் எப்படித் தன்னையும், தன் குழந்தைகளையும் முன்னேற்றுகிறாள் என்பது தான், நான் சமீபத்தில் எழுதி, பத்திரிகையில் வெளியான சிறுகதை. அது சந்தேகமில்லாமல், அவள் வாழ்க்கையை அடித்தளமாகக் கொண்டு, என் கற்பனையையும் கலந்து எழுதிய கதை தான். சாதாரணமாக பத்திரிகைகளோ, கதைகளோ படிக்காத அவளிடம், யாரோ எதேச்சையாக இந்தக் கதையைப் படித்து விட்டு, “உன் கதை மாதிரியே யாரோ ஒருத்தர் கதை எழுதியிருக்காங்க பார்…’ என்று காட்டியிருக்கின்றனர்.

என்னுடன் வேலை பார்க்கும் அவளுக்கு, நான் அந்தப் புனைபெயரில் கதை எழுதுகிறேன் என்று தெரியும். ஆகவே தான், அவள் புயல்போல் வந்து, என்னிடம் நடத்திய மேற்படி உரையாடல். அவள் தேவையில்லாமல் ஜாதியை இழுத்துப் பேசியதும், எனக்கு சினம் தலைக்கேறியது.

“உன்னைப் போல், கணவன் மேல் மூட பக்தி கொண்டுள்ள பெண்ணை, நான் இன்று தான் பார்க்கிறேன். இனி மேல் உன்னுடன் பேசினால், அது எனக்குத் தான் அவமானம்… தயவு செய்து வெளியே போ…’ என்றேன். அவள், “சே… உங்க மாதிரிப் பெண்கள் மூஞ்சியிலே இனிமே முழிச்சாக் கூடப் பாவம்…’ என்று கடுமையாகச் சபித்து விட்டு, அழுது கொண்டே வெளியேறினாள். திடீரென்று எனக்கு மிகவும் ஆயாசமாக இருந்தது.

“நம் நாட்டுப் பெண்கள், உண்மையில் என்று தான் முன்னேறுவர்? நிஜத்தை நிஜமாகப் பார்க்கும் பக்குவம் அவர்களுக்கு என்று வரும்? நான் ஒரு பெண்ணாக, அலுவலகத்தில் வேலை செய்பவளாக, குடும்பத் தலைவியாக, பெண்கள் மனசு புரிந்து கொண்ட பெண் எழுத்தாளராகவும் இருந்தும், இவளை இத்தனை நாட்களில் நான் எப்படி புரிந்து கொள்ளத் தவறினேன்?’ என்று வருத்தம் ஏற்பட்டது.

நினைத்துப் பார்த்தால், இவள் அந்த நாட்களில், அந்த உதவாத கணவன் மேல், கண் மூடிய பாசம் வைத்திருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த உயர்ந்த புருஷன், அவளை ஆளாக்கிய துன்பங்களுக்கு அளவே இல்லை. கடன் வாங்கி கணவனுக்கு, “குடி’க்கக் கொடுத்த கண்ணகி அவள். கணவனை கூடையில் தூக்கிக் கொண்டு போனாள் நளாயினி என்பது புராணம். ஆனால், இவள் புருஷனின் நடத்தையால், ரகளை தாங்காமல், ஒவ்வொரு வீட்டுக்காரனும் மிரட்டியபோது, ஒரு சாக்கு மூட்டையில் வீட்டு சாமான்களையும், மற்றொரு கையில் இரண்டு வயசுக் குழந்தையையும் தூக்கிக் கொண்டு, வீட்டுக்காக தெருவில் அலைந்தவள் இவள். இவள் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் பிடுங்கிக் கொண்டு போய்விடும் அந்த உத்தமனால், கண்டவர்களிடம் கடன் வாங்கிய பதிவிரதை இவள்.

ஆனால், இவை எல்லாவற்றையும் மீறிய ஒரு தன்னம்பிக்கை செருக்கும் அவளிடம் இருந்தது; அதை, பாராட்டத்தான் வேண்டும். அந்தச் செருக்கின் அடையாளம் தானோ இப்போது வந்து கத்தியதும்!

ஆனால், ஏதோவொரு கட்டத்தில், கடவுளுக்கு அவள் மேல் கருணை பிறந்திருக்க வேண்டும். அதனால் தான், அந்தக் கணவன் பூட்டிய வீட்டுக்குள் தீ வைத்துக் கொளுத்திக் கொண்டு மாண்டான்.

அந்த அதிர்ச்சியிலிருந்து மீள, அவளுக்குப் பல நல்ல இதயங்கள் உதவின. அதையும் அவள் நல்ல முறையில் பயன்படுத்தி, முன்னேறினாள். இருபது வருஷங்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகளை, நான் கதையாக எழுதி, அவள் பெருமையை உயர்த்தியதாக நினைத்தேன். ஆனால், நடந்தது வேறு என்பதை மேலே நடந்த உரையாடல் உங்களுக்கு விளக்கி இருக்கும்.

இந்த நிகழ்ச்சி நடந்த சில நாட்களில், என்னுடைய நெருங்கிய உறவுக்காரப் பெண் ஒருத்தி,தீ விபத்துக்குள்ளாகி, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாகச் செய்தி வந்தது.

நான் அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில், அந்தப் பெண் மஞ்சு, கிட்டத்தட்ட, “அவள்’ மாதிரிதான். காதல் கல்யாணம் இல்லையென்றாலும், கணவனே கண்கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன், மணாளனே மங்கையின் பாக்கியம் டைப். இவளுக்கு என்ன ஆயிற்று? எந்த வேலையிலும் நிலையாக இல்லாமல், இறுமாப்புடன் பக்கம், பக்கமாகக் கடன் வாங்கி, மனைவியை அடிமையாக நடத்தும், “அழகான’ புருஷன்…

ஒரு நிஜமாகவே நல்ல அழகன்தான்… பார்க்க. அவனுடைய ஆண்மையின் அழகு தான், மஞ்சுவை அவனுக்கு அடிமையாக்கி இருக்க வேண்டும். அவனுடைய அவலட்சண குணம், நடத்தை எல்லாவற்றையும் மீறி, அவனை நேசிக்க வைத்திருக்க வேண்டும்.

மஞ்சு, ஏழை குடும்பத்திலிருந்து படிப்பறிவு இல்லாமல் வந்தவள். அப்படிக்கூட கணவன் ஒழுங்காகப் பணம் தராததால், வீட்டுக்கு அருகில் இருந்த நர்சரிப் பள்ளியில் கிட்டத்தட்ட ஆயா வேலை பார்த்து, தன் இரு குழந்தைகளையும் காப்பாற்றி வந்தாள்.

அவள் எப்படி இந்த விபத்துக்குள்ளானாள்?

உண்மையில் அது விபத்து தானா?

நான் மஞ்சுவை ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்தபோது, உடலில், முகத்தில் பல தீக்காயங்களுடன் பார்க்கவே பயங்கரமாகப் படுத்திருந்தாள். அவளால் பேச முடியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

“என்னடி மஞ்சு… எப்படி ஆச்சு இந்த ஆக்சிடென்ட்?’ என்று கேட்டேன். மஞ்சு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். என் கேள்விக்குப் பதில், கண்ணீர் தான். அவள் பேசும் நிலையிலும் இல்லாததால், அவள் அப்பா மற்றும் அண்ணன் ராமனிடம் பேசிவிட்டு வந்தேன். மஞ்சுவின் அண்ணன் ராமன் மட்டும் என்னிடம் சொன்னான்…

“நான் எத்தனையோ தடவை மஞ்சுகிட்ட சொல்லிட்டேன் அக்கா… நீ அந்தக் குடிகாரப் புருஷனை விட்டுட்டு வந்துடு. உன்னையும், உன் பிள்ளைகளையும் நான், காப்பாற்றுகிறேன் என்று… அவ அப்பப்ப பணம் வாங்கிப்பாளே ஒழிய, கேக்க மாட்டேன்னுட்டா…’ என்றான் மிகுந்த வருத்தத்துடன்.

“என்ன தான் நடந்ததாம்?’ என்றேன் நான்.

“தெரியல… அவ சொல்ல மாட்டேங்கறா… காஸ்லீக் ஆனது தெரியாம தீக்குச்சியக் கொளுத்தினேங்கறா…’ என்றான்.

நான் மவுனமாக வெளியே வந்தேன்.

மஞ்சுவின் உடல் நிலை தேற கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆயிற்று. பலர் உதவியுடன் அவள் அண்ணன், அப்பா, அம்மா தான் அவளைப் பார்த்துக் கொண்டனர். அந்த, “அழகான கணவன்…’ ஆறு மாதத்தில், இரண்டு முறை தான் அவளைப் பார்க்க வந்தானாம். காசு எதுவும் தந்ததாகத் தெரியவில்லை. அவன் வீட்டு மனிதர்களும், மஞ்சுவிடம் சற்று இரக்கமின்றித் தான் நடந்து கொண்டனர் என்றனர். “புருஷனுடன் சாமர்த்தியமாகக் குடும்பம் நடத்தத் தெரியாத துப்புக் கெட்ட பெண்…’ என்றாளாம் மஞ்சுவின் மாமியார். பெண்களுக்குப் பெண்கள் தான் எதிரி என்பதில் சந்தேமில்லை; குறிப்பாக இந்தியாவில். மஞ்சு என்னைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதாக ராமன் எனக்கு ஒரு நாள் போன் செய்தான். நானும் சற்று குற்ற உணர்வுடனேயே அவளைப் பார்க்கச் சென்றேன். அலுவலகம், குடும்பம், என் வேலைகள் என்று எனக்கிருந்த நடவடிக்கைகளில், மஞ்சுவை மறந்து தான் போயிருந்தேன் என்று சொல்ல வேண்டும். மஞ்சுவின் முகத் தழும்புகள் என் கண்களில் நீரை வர வழைத்தன. உடலில் பல பாகங்களில் காயங்கள் ஆறிக் கொண்டிருந்தன.

“”வாங்கோ அக்கா… நான் தான் உங்களைப் பார்க்க வேண்டுமென்று அண்ணனிடம் சொன்னேன்,” என்றாள் சோகையாகச் சிரித்துக் கொண்டு. நான் அவளருகில் உட்கார்ந்து, காயம் பட்ட அவள் கைகளை எடுத்து, என் கைகளில் வைத்துக் கொண்டேன்

“”சொல்லும்மா… என்ன விஷயம்?”

“”எனக்கு நடந்தது விபத்து இல்லை அக்கா.”

நான் எதிர்பார்த்தது தான். நான் கோபத்துடன், “”பின்ன… அந்தப் பாவி தான் வச்சானா நெருப்பை?” என்றேன்.

“”இல்லை… நானே வச்சிண்டேன்,” என்றாள் மஞ்சு.

“”என்னது?”

“”ஆமாக்கா… நானே தான் எனக்குத் தீய வச்சிண்டேன்.”

“”ஏண்டி பாவி அப்படிப் பண்ணின?”

“”அவருக்காகத்தான்!”

நான் அயர்ந்து போனேன். “”புரியல,” என்றேன்.

“”அவர் தான் அன்னிக்குக் காசு இல்லங்கற சண்டைல, “ஏ நாயே… உன் பேர்ல ஒரு இன்சூரன்ஸ் பாலிசி இருக்கே… நீ செத்தாலாவது எனக்கு அந்த பத்து லட்ச ரூபா கெடைக்குமே…’ என்றார்.”

“”அதுக்காக…?”

“”நானே காசைப் பத்த வச்சு, அதில என் புடவைத் தலைப்ப வீசினேன். நான் சாகறதப் பாத்தாவது அவர் திருந்துவார்… இல்ல என் மேல உண்மையா அன்பு இருந்தா, என்னைக் காப்பாத்த வருவார்ன்னு நெனச்சேன்.”

“”அடிப்பாவி.”

“”ஆனா, அந்த மனுஷன் வரல அக்கா… நான் தான் ஒரு கட்டத்தில் தீயின் தகிப்பு தாங்காமே என் மேல தண்ணிய ஊத்திண்டேன்!”

நான் பேச்சிழந்து அமர்ந்திருந்தேன்.

பெண்கள் அவர்களைக் குரூரமாக நடத்தும் ஆண்கள்!

“”ஆனா, அந்த அக்னிப் பிரவேசத்திற்குப் பின் என் புத்தி தெளிஞ்சுடுத்து அக்கா,” என்றாள் மஞ்சு.

“”என்ன சொல்ற நீ… எனக்கு விளங்கல.”

மஞ்சு என்ன நேராகப் பார்த்தாள்…

“”அவர் மேல வச்சிருந்த கண்மூடித்தனமான காதலையும், நம்பிக்கையையும் அந்த அக்னி சுட்டெரிச்சுடுச்சு… இனிமேல் எனக்கும், என் குழந்தைகளுக்கும் அந்த ஆள் வேண்டாம். நானே என்னையும், என் குழந்தைகளையும் பார்த்துப்பேன். அவருக்கு… சீ… இனிமே என்ன மரியாதை வேண்டியிருக்கு… அவனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப் போறேன்,” என்றாள் தீர்மானமான குரலில்.

நான் திகைத்துப் போனேன்.

“”சபாஷ் மஞ்சு… இப்பவாவது உனக்குப் புத்தி வந்ததே,” என்றேன் பாராட்டும் குரலில்.

“”உங்களை எதுக்குப் பார்த்துப் பேசணும்ன்னு சொன்னேன் தெரியுமா?” என்றாள் மஞ்சு புன்னகையுடன்.

“”எதுக்கு?”

“”நீங்க தான் எழுத்தாளராச்சே… என் கதைய எழுதி, பத்திரிகையில பிரசுரம் பண்ணுங்கோ. என் மாதிரி கண்மூடித்தனமா உதவாக்கரை புருஷன் மேல பக்தி வச்சிண்டிருக்கறவா அந்தக் கதையப் படிச்சாலும் புத்தி தெளிஞ்சுக்கட்டும்ன்னு தோணித்து.”

எனக்கு பேச வரவில்லை. அக்னி… இரண்டு பெண்களின் வாழ்க்கைகளை, இரண்டு அயோக்கிய கணவன்களிடமிருந்து காப்பாற்றி இருக்கிறது. ஒருத்தி படித்து, வசதி படைத்திருந்தும் அதை உணர மறுக்கிறாள்; மற்றொருத்தி, அதை உணர்ந்து தனக்கு படிப்போ, அறிவோ, பணமோ, வேலையோ இல்லையென்ற போதும், நாலு பேர் அதை உணர வேண்டும் என்பதற்காக எழுதச் சொல்கிறாள். அவளோ, நான் எழுதியதற்காக வெகுண்டு எழுந்தாள்.
எத்தனை விதமான மனிதர்கள், குணங்கள்!

அன்று கோபக் கனலுடன் பேசிய, “அவளி’ன் முகமும், இன்று தீக்காயங்களின் வடுக்களுடன் புன்னகை செய்யும், “இவளி’ன் முகமும் என் கண்களில் மாறி, மாறித் தெரிந்தன.

ஆனால், ஒன்று மட்டும் புரிந்தது…

நிச்சயமாகத் தெரிந்தோ, தெரியாமலோ, அக்னி, ஆக்கவும் செய்கிறது; அழிக்கவும் செய்கிறது.

– மே 2010,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *