அகிலாவும் அரசுப் பள்ளியும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 13,923 
 
 

அகிலாவை என் தம்பிக்காக பெண் பார்க்கப் போய் பூடகமாய் நிராகரித்துவிட்டு வந்து 30 வருடங்களுக்குப் பின் அவளது வீட்டுக்கு இன்று போகிறோம். இம்முறை எனது இரண்டாவது மகளுக்கு அவளது மூத்த மகனைச் சம்பந்தம் பேச.

அந்தக் காலத்தில் அகிலாவைச் செய்ய வேண்டாமென்று சொன்னதில் அக்காவாகிய எனது அழுத்தம்தான் அதிகமிருந்தது என எல்லோருக்கும் தெரியும்.

எனக்குத் திருமணம் முடிந்து அப்போது ஒரு வருடமாகியிருந்தது. இருவருக்கும் வங்கிப் பணி. ஒரே ஊர். தம்பி அரசு பணிப் பொறியாளர்.

அகிலாவும் அரசுப் பள்ளியும்அகிலா தூரத்து உறவினர். தெரிந்துதான் பெண் பார்க்கச் சென்றிருந்தோம். இரண்டு தரப்புக்கும் பொது உறவினர் ஒரு மாமாதான் அழைத்துச் சென்றார்.

வீடு இருந்த தெருவில் நுழைந்தவுடன் எனக்கு வாந்தி வந்துவிட்டது. தெருவில் பாதி சாக்கடை. எனக்கு மசக்கை வேறு. அவர்கள் வீடும் ரொம்ப சுமார்தான். அவளது அப்பா ஆசிரியர். மூன்றோ நாலோ பிள்ளைகள். பெரிய குடும்பம். அம்மா கழுத்தில் வெறும் மஞ்சள் கயிறு மட்டும்தான் என ஞாபகம்.

அகிலாவுக்கும் ஏதோ தனியார் பள்ளியில் வேலை. அவங்க என்ன பி.எப்., பென்ஷனோடவா வேலை கொடுத்திருப்பான்? டெம்பரரியாகத்தான் இருந்திருக்கும்.

அப்படி இருந்தவர்கள் இப்போது எப்படி இப்படி சென்னையின் முக்கிய இடம் நுங்கம்பாக்கத்தில் அபார்ட்மெண்ட்? பையனுக்கு வெளிநாட்டுப் படிப்பு?

பெரிய மல்டிநேஷனல் கம்பெனியில் வேலை. முன்பு மாதிரி பொதுவான உறவினர்கள் யாரும் இப்பொதெல்லாம் கல்யாண விஷயத்தில் ரிஸ்க் எடுப்பதில்லை. மேற்றிமோனியல் தான் சரணம். ஜாதகம்,உயரம், எஞ்சினீயர் ஜாதி, நிறம் என்று பல இன்டர்நெட் பொருத்தங்கள் பொருந்திய பின் பார்த்தால், ஐயோ- இவன் அகிலாவின் பிள்ளை. அதற்குள் மனதில் ஆசை வந்து விட்டது.

எங்க பொண்ணு ப்ரியா மூன்று வருட வெளிநாட்டு வாசத்திற்குப் பிறகு இப்பதான் திரும்பி கல்யாணத்திற்கு பச்சைக் கொடி காட்டினாள்.

இந்த இரண்டு மாதத்தில் 30 பையன்களை வெவ்வேறு கட்டங்களில் கழித்தாகி விட்டது. இந்தப் பெண் பிள்ளைகளுக்கு இப்ப சாய்ஸ் ரொம்பத்தான் அதிகமாகிப் போச்சு. இந்த பையன்தான் மாப்பிள்ளை பார்க்கும் படலம் வரைக்கும் தேறியுள்ளான்.

நேற்றுவரை அம்மாவின் பெயரை பார்க்கவே இல்லை.

அதற்கப்புறம்தான் தம்பிக்குப் போன் செய்தேன்.

“”அக்கா, இந்த ரிஸ்க் எடுக்கணுமான்னு நல்லா யோசிச்சுக்கோ”.

“”எல்லாப் பொருத்தமும் இருக்கு. பையனும் லட்சணமா இருக்கான்”

“”அகிலாவை ஏன் வேண்டாம்னு சொன்னோம்னு உனக்கு?”

“”எல்லாம் நினைவிருக்கு. சுமாரான வசதி. கூடப் பிறந்ததுங்க நிறைய. இதுதான் மூத்தது. நிரந்தமில்லாத ஸ்கூல் உத்யோகம். நாம வேண்டாம்னு நினைச்சதிலே என்ன தப்பு?”

“”நாமன்னு என்னைச் சேர்க்காதேக்கா. எனக்கு அவளை ரொம்பத்தான் பிடிச்சிருந்தது. நேர் பார்வை,மாநிறம்ன்னாலும் களையான முகம், சின்னக் கண்ணு, ஆனா பெரிய முழி. இப்ப நினைச்சாக்கூட…”

“”அடப்பாவி.. சரி, அப்பன்னா நீயும் வாயேன் மாப்பிள்ளை பார்க்க”

“”ஐயோ, ஹேமா கொன்னுடுவா. ஆனா நீ நல்லா யோசிச்சுக்கோ. நாம ஏன் ஒதுக்கினோம்ன்னு அவங்களுக்குத் தெரிஞ்சுதான் இருக்கும்”

“”எனக்கு போறதைத் தவிர வேற வழியில்லை”

ஞாயிறு காலை சொன்னபடி 10 மணிக்குச் சரியாகப் போனோம். வரவேற்க அபார்ட்மெண்ட் வாசலுக்கே வந்து நின்றிருந்தனர். எங்கள் ஹோண்டா சிடியை அவர்களது பார்க்கிங் ஸ்லாட்டில் பென்ஸ் காருக்குப் பின்னால் நிறுத்தச் சொன்னார்கள். இரண்டாவது மாடி. கிரகப் பிரவேச சுவடுகள் மிச்சமிருந்தன. வாசலில் நின்று பையன் வணக்கம் சொன்னான்.

உயரம். வேஷ்டி, விபூதி சகிதம் பார்த்தவுடன் பிடித்துப் போகும் அம்சங்களுடன் இருந்தான். கை கூப்பி, “”நான் கார்த்திக்” என்றான்.

வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தவுடன் என் கையைப் பிடித்துக் கொண்டு அகிலா சொன்னாள்: “”மதினி, உங்களைப் பார்த்து எத்தனை வருஷமாச்சு. அப்படியே இருக்கீங்க. ரொம்ப சந்தோஷம்”

“”எங்களுக்கும்தான். நீங்களும் அப்படியே இருக்கீங்க”

“”என்ன மதினி, நான் எத்தனை வயசு சின்னவ. நீன்னே சொல்லுங்க”

அதிரசம், தட்டை, காபி சாப்பிட்ட பின் “”தையில் முகூர்த்தம் பார்க்கலாம்” என்றாள் அகிலா.

“”பொண்ணைப் பார்க்க வேண்டாமா?” என்றேன்.

“”இப்பத்தான் பேஸ்புக்ல 9 மணிக்குப் பார்த்தாச்சே” என்றான் கார்த்திக்.

என் மொபைலில் குறுஞ்செய்தி வந்தது.

“”எனக்கு ஓகே” – ப்ரியாவிடமிருந்து.

தேதி பார்க்க அகிலாவின் அறைக்குப் போனோம். அலங்கார ஷெல்பில் கார்த்திக் வாங்கிய கப்புகள் வரிசையாக நின்றன. ஷீல்டுகள், புகைப்படங்கள் சில. அரசாங்க ஆரம்பப் பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் என்று பொறித்திருந்தன.

“”எல்லாம் கார்த்திக் படிச்ச ஸ்கூல்களா?”

“”ஆமாம். அவன் முழுக்க கவர்மெண்ட் ஸ்கூலில்தான் படிச்சான்.”

“”அப்படியா? ஆச்சர்யமா இருக்கே”.

“”பிரைவேட் ஸ்கூலில் படிக்க வைக்கிற வசதி, வாய்ப்பெல்லாம் இருந்தாலும் ஒரு நீண்ட காலத் திட்டத்தோடதான் அரசாங்க பள்ளிகளைத் தேர்ந்தெடுத்தோம். அங்கே எல்கேஜி அட்மிஷனுக்குக் கொடுக்கிற டொனேஷனை பாங்க் வைப்பு நிதியில் போட்டோம் அப்புறம் மாதாமாதம் ஆகிற செலவையெல்லாம், அவங்க பிடுங்கிற பணத்தையெல்லாம் உத்தேசமா கணக்குப் பண்ணி சில முதலீடுகளில் போட்டோம். அப்ப போட்ட ஒவ்வொரு பத்தாயிரமும் பத்து வருஷத்தில பத்து லட்சமா வளர்ந்து நின்னது. பரஸ்பர மியூட்சுவல் ப்ண்ட், இரண்டு, மூணு ப்ளூ சிப் ஷேர்கள், 5 செண்ட் நிலம்னு பல வகை முதலீடுகள். பிளஸ் டூவில் நல்ல மார்க் வாங்கினதுனால எஞ்சினீயரிங்கும் கவர்மெண்ட் காலேஜாப் போச்சு. பழைய முதலீடுகளில் பாதியை வித்துத்தான் ஜெர்மனிக்குப் போய் மேல் படிப்புப் படித்தான். எந்தக் கடனும் அதுக்காக வாங்கவில்லை. அங்கேயே ஜெர்மனியிலேயே வேலைக்குச் சேர்ந்து இந்த வருடந்தான் இங்கே வந்தான்”

“”சாதிச்சீட்டீங்க அகிலா”

“”சில முடிவுகள் நமது வருங்கால வாழ்வை மட்டுமில்லை, நமது சந்ததியினரின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு விடும். கல்வி ஒரு தேவையான முதலீடுதான்.

ஆனால் அதிலே போய் நம்ம வாழ்கையையே அடமானம் வெச்சுடற அளவுக்கு முதலீடு கூடாது. ஏதோ எங்களுக்குத் தெரிஞ்ச அளவுக்குத் திட்டமிட்டோம். ஆரம்பிக்கும் போது பயமாத்தான் இருந்தது. எதிர்நீச்சல் சரியா வருமான்னு. திடமும், திட்டமும் இருந்தா படிப்பை மட்டுமில்லே, வாழ்க்கையையும் எங்கேயும், எப்பவும் நல்ல விதமா வாழலாம் மதினி”

அரை மணி நேரம் கழித்து எல்லோருக்கும் வசதியான தேதியை முடிவு செய்தோம்.

சொல்லிக் கொண்டு கிளம்பும் போது அகிலாவின் கையைப் பிடித்துக் கொண்டு விடை பெறும்போது எனக்கு கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்து விட்டது.

“”அகிலா-பழச எல்லாம் மனசில் வெச்சுக்காம முடிவு எடுத்திருக்கே. பெரிய மனசும்மா உனக்கு”

“”என்ன மதினி, இப்படியெல்லாம் பேசிக்கிட்டு? நம்ம ஊல சொல்றதில்லியா -தாய் உண்ணாத சோறு, பிள்ளைக்கின்னு. அது மாதிரிதான்”

காரில் கார்த்திக்கின் போன் சிணுங்கியது.

“”ஆமாம் ப்ரியா, இப்பத்தான் புறப்படறாங்க” என்றான்.

– ஏப்ரல் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *