(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7 | அத்தியாயம் 8 | அத்தியாயம் 9
மறு நாள் காலை முதல் வண்டி வருவதற்கு முன்பே எழும் பூர் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்து விட்டார் துளசிங்கம். ஏற் கனவே தான் விசாரித்தறிந்த அங்க அடையாளங்களை நன்றாக நினைவுபடுத்திக்கொண்டு வண்டியிலிருந்து இறங்கும் ஒவ்வொரு ஆசாமியையும் கவனித்துக் கொண்டிருந்தார். நீல நிற சர்ட்டு அணிந்த வண்ணம் அந்த வண்டியிலிருந்து இறங்கும் ஒரு வாலி பனைப் பார்த்தவுடன் அவன் தான் தனஞ்சயனாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. தன் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள வேறு யாரையோ கூப்பிடுவதுபோல் பார்த்தவண்ணம் “மிஸ்டர் தனஞ்சயன்” என்று அழைத்துவிட்டு அவனைக் கடைக் கண்ணால் கவனித்தார். அந்த வாலிபன் சுற்று முற்றும் தலையைத் திருப்பிப் பார்த்தான், துப்பறிபவரின் சந்தேகம் நீங்கிவிட்டது.
“வணக்கம் மிஸ்டர் தனஞ்சயன்! கொஞ்சம் இப்படி வருகிறீர்களா? உங்களுடன் நான் சில வார்த்தைகள் பேச வேண்டும்” என்றார் துளசிங்கம். அறிமுகம் இல்லாத ஆசாமி ஒருவர் தன்னைப் புரிந்துகொண்டு வலியத் தன்னுடன் பேச வந்திருப்பதை அறிந்து ஆச்சரியமடைந்துபோனான் அவன்.
“நீங்கள் வக்கீல் பஞ்சநாதனிடமிருந்து வந்திருக்கிறீர்களா?” என்று சற்று வியப்புடன் கேட்டான் அவன்.
“இல்லை, நான் ஒரு துப்பறிபவன். ஒரு முக்கிய விஷயமாக உங்களைப் பார்க்கவேண்டும் என்று இங்கு வந்திருக்கிறேன்” என்று கூறினார் அவர். அவன் திடுக்கிட்டுப்போனான்! ஆனால் அதை வெளிக்காட்டவில்லை. துப்பறிபவர் அவனை பிளாட்பாரத் தில் இருந்த பெஞ்சியின் மீது அமரச்செய்து தானும் பக்கத்தில் அமர்ந்துகொண்டு விசாரணையை ஆரம்பித்தார்.
“சென்றவாரம் செவ்வாய்க்கிழமையன்று உங்கள் மாமா தில்லைநாயகம் துர்மரணமடைந்த செய்தி உங்களுக்குத் தெரியும் என்று எண்ணுகிறேன். அது விஷயமாக நான் உங்களை விசாரிக்க விரும்புகிறேன்.”
“என் மாமாவைப்பற்றியா? ஆமாம்; அன்றுதான் நான் அவரை முதல் முறையாகவும் கடைசி முறையாகவும் சந்தித் தது நினைவிருக்கிறது.”
“அன்று நீங்கள் அவரை ஏன் சந்தித்தீர்கள்? அவருடன் என்ன பேசினீர்கள்?”
“நான் சிறுவனாக இருந்தபோதே என் மாமா தன் பெற் றோர்களையும், உற்றார் உறவினர்களையும், உதறித்தள்ளிவிட்டுச் சென்றுவிட்டபடியால் எனக்கும் அவருக்கும் தொடர்பு இல்லா மலே போய் விட்டது. புத்தி தெரிந்து உலகம் இன்னதென்று புரிந்து கொள்வதற்கான சக்தி ஏற்பட்ட பிறகு தான் என் மாமாவைப் பற்றியும் எங்கள் குடும்பத்தைப் பற்றியும் உணர்ந்து கொண்டேன். நான் என்னுடைய பெற்றோர்களுடன் செங்கல்பட்டில் வசித்து வந்தேன். அங்கு தான் படித்தேன். என் தந்தை அங்கு ஒரு வக்கீலிடம் வேலை பார்த்து வந்தார். வக்கீல் குமாஸ்தா வேலையின் மூலம் வந்த வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்துவது கஷ்டமாக இருந்தது. எனக்கு உத்தியோகம் கிடைத்தால் பிறகு கவலையில்லாமல் வாழ்க்கையை நடத்தலாம் என்று என் பெற்றோர்கள் எண்ணி யிருந்தார்கள். ஆனால் எவ்வளவு முயன்றும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. அத்துடன் என் தந்தை திடீரென்று மாரடைப் பினால் இறந்து போய் விட்டார். ஏற்கனவே ரத்தக் கொதிப்பு வியாதியினால் தவித்துக் கொண்டிருந்த என் தாயார் அதனால் அதிர்ச்சி அடைந்து போனாள். இனிமேல் குடும்பத்தை எப்படி நடத்துவது என்ற கவலை அவளுடைய நோயை அதிகப்படுத்தி படுக்க வைத்து விட்டது, என் மாமா நல்ல நிலைமையில் இருந்த படியால் அவருடைய உதவியை நாடும்படி என் தாயார் என்னை வற்புறுத்தினாள். அத்துடன் அவருக்கு ஒன்றிரண்டு கடிதங் களும் எழுதினாள். அவரிடமிருந்து பதில் ஒன்றும் வரவில்லை. என் மாமா அலட்சிய மனோபாவமும் பணத்திமிரும் கொண்டவ ராய் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றிய படியாலும் நானும் அவருடைய உதவியை நாட மறுத்தேன். எங்காவது உத்தியோகம் செய்து சம்பாதித்து என் தாயாரின் மனத்தை மகிழ்விக்க வேண்டும் என்று பெருமுயற்சி செய்து அலைந்து கொண்டிருந்தேன்.
அந்தச் சமயத்தில்தான் ஒரு நாள் என் மாமாவின் மனைவி விஜயவல்லி எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். என் மாமா வின் துர்க்குணங்களை எடுத்துரைத்தாள். அவர் செய்த கொடு மைகளை விளக்கினாள். அவைகளைக் கேட்ட பிறகு என் மாமா வின் மீது எனக்கு அளவு மீறிய கோபம் வந்தது, ஆனால் விஜயவல்லி வேறு ஒருவனைப் பதிவுத் திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்திருப்பதாய்க் கூறியபோது நான் பதறிப் போனேன். ஒரு பெண்ணிற்கு இவ்வளவு துணிவு இருக்கும் என்று நான் கனவில்கூடக் கருதவில்லை.”
“விஜயவல்லி யாரை மணந்து கொள்ள எண்ணியிருந்தாள் என்று கூற முடியுமா?”
“அது எனக்குத் தெரியாது! அவள் எவ்வளவுதான் படித்த வளாயும் முற்போக்குக் கொள்கைகள் மிகுந்தவளாயும் இருந்த போதிலும் கணவனை உதறித் தள்ளிவிட்டு மறுமணம் செய்து கொள்வது மிகவும் தவறானது என்று தான் எனக்குத் தோன்றி யது. எங்கள் குடும்பத்தின் நல்ல பெயர் கெட்டுவிடப்போகிறதே என்று என் தாயாரும் இதைத்தான் வற்புறுத்தினாள். எங்க ளிடம் சிபார்சு பெறுவதற்காக வந்த அவள், நாங்கள் புத்தி சொல்வதைக் கண்டு எங்களிடம் கோபித்துக்கொண்டு சென்று விட்டாள். என் தாயார் மீண்டும் தன்னை வந்து ஒரு முறை பார்க்கும்படியும் தனக்கு ஏதாவது உதவி செய்யும்படியும் வேண்டி ஒரு கடிதம் எழுதினாள். அதற்கும் பதில் ஒன்றும் வர வில்லை. என் குடும்பத்தில் ஏற்பட்ட கலவரமும் என் மாமாவின் உதாசீனமும் என் தாயாரின் நோயை அதிகப்படுத்தி விட்டன. கடைசியில், என் தாயாரின் அவல நிலையை உத்தேசித்து என் மாமாவைச் சந்திக்கத் தீர்மானித்தேன். எப்படியாவது மாமா வைச் சந்தித்து நிலைமையை விளக்கி அவரைக் கையோடு ஊருக்கு அழைத்துக்கொண்டு போய் விடவேண்டும் என்ற எண்ணத் துடன் தான் சென்னைக்கு வந்தேன்.”
“தில்லைநாயகத்தின் வீட்டு விலாசம் உங்களுக்குத் தெரியும். நீங்கள் அங்கு சென்று அவரைச் சந்தித்திருக்கலாமே?”
“அவ்வித எண்ணத்துடன் தான் நான் புறப்பட்டேன். ஆனால் விஜயவல்லியின் மூலம் என் மாமாவின் குணாதிசயங்களை அறிந்திருந்தபடியால், அவர் என்னைப் பார்க்க அனுமதிக்காவிட் டால் என்ன செய்வது என்ற கவலை ஏற்பட்டபடியால்தான், நான் மாம்பலம் ஆராய்ச்சிசாலையின் முன்னால் நின்று அவர் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் மாமாவை நான் அதற்கு முன்பு பார்த்திரா விட்டாலும் என் தாயார் அவருடைய போட்டோவைக் காண்பித்திருக்கிறாள். அத்துடன் அவர் எப்படி இருப்பார் என்பதை விஜயவல்லியின் மூலம் அறிந் திருந்தேன். அதனால் தான் அன்று மாலை ஆறரை மணி சுமாருக்கு ஆராய்ச்சிசாலையைவிட்டு வெளியே வந்தவுடன் அவரை நான் புரிந்துகொண்டு விட்டேன். அவருடன் மற்றொருவரும் வந்து கொண்டிருந்தார். என் மாமா ஆதிகேசவன் என்பவருடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்து வருவதாய் நான் கேள்விப்பட்டிருந்த படியால் அது அவராகத்தான் இருக்கவேண்டும் என்று நான் புரிந்துகொண்டேன். என் மாமாவைப் பார்த்துவிட்ட போதிலும் அவரைத் தனிமையில் சந்திக்க முடியவில்லையே என்ற கவலை என்னை வாட்டியது. அன்று அவரை எப்படியாவது சந்தித்துப் பேசவேண்டும் என்ற தீர்மானத்துடன் அவருக்குத் தெரியாத படி அவரை நான் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது என் மாமாவின் தொண்டை கட்டிக்கொண்டிருந் தது. இரண்டு மூன்று முறை இருமினார். குளிரினால் அவர் உடல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது எனக்கு விளங்கி விட்டது. நான் அவர்களுக்குச் சமீபத்தில் இருந்தபடியால் அவர்கள் பேசிக்கொண்டது ஓரளவு என் காதில் விழுந்துகொண்டு தான் இருந்தது. இருமல் மாத்திரைகளைச் சாப்பிடும்படி யோசனை கூறினார் அருகில் இருந்தவர். ஆதிகேசவன் தற்காப் பிற்காகத் தன்னிடம் வைத்திருந்த இருமல் மாத்திரைகள் நிரம்பிய புட்டியை அவரிடம் நீட்டினார். அதில் மூன்று மாத் திரைகள் தான் இருந்தன. அதிலிருந்து இரண்டு மாத்திரைகளை என் மாமா வாயில் போட்டுக்கொண்டார். மீதியிருந்த ஒரு மாத்திரையை ஆதிகேசவன் விழுங்கிவிட்டார்.
“நான் அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். இருவரும் அநேகமாக ஆராய்ச்சி சம்பந்த மான விஷயங்களையே பேசிக்கொண்டிருந்தார்கள். என் மாமா வைத் தனிமையில் சந்திப்பது கடினம் என்று தோன்றியபடியால் தான், ஐஸ்கிரீம் பாரினுள் துணிந்து சென்று அவருடன் பேசி னேன். அவரை வாசல் பக்கம் அழைத்து வந்து நான் யார் என்பதையும் எதற்காக வந்தேன் என்பதையும் வெளியிட்டேன். என் தாயாரின் அவல நிலையை வெளிப்படுத்தி என்னுடன் புறப் பட்டு வந்து ஒருமுறை பார்த்துவிட்டுப் போகும்படி வேண்டி னேன். அதற்கு அவர், ‘முடியாது, கண்டிப்பாக முடியாது’ என்று கூறிவிட்டார். இதனால் நான் மனமுடைந்து போனேன். எனவே அவர் மீது எனக்கு அளவு மீறிய ஆத்திரம் ஏற் பட்டது.”
“நீங்கள் பிறகு என்ன செய்தீர்கள்?”
“இந்தச் செய்தியைக் கேட்டால் என் தாயார் மேலும் மனமுடைந்து போய்விடுவாள் என்று எனக்குத் தோன்றியபடி யால், மீண்டும் அவரைச் சந்தித்து வற்புறுத்தி உடன் அழைத்துச் செல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் நான் அவரைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். அவர்கள் இருவரும் ஒரு மருந்து கடையினுள் பிரவேசித்ததையும் பார்த்தேன். பிறகு அவர்கள் இருவரும் ஓட்டலுக்குள் சென்றார்கள். நான் வெளியிலே காத்திருந்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு இருவரும் வெளியே வந்தனர். மாமா ஒரு டாக்ஸியை ஏற்பாடு செய்து கொண்டு புறப்பட்டார். அவர் அடையாறில் இருக்கும் தன் வீட்டிற்குத் தான் செல்கிறார் என்று உணர்ந்துகொண்டு, நானும் ஒரு டாக்ஸியை ஏற்பாடு செய்துகொண்டு அவரைப் பின்தொடர்ந்து சென்றேன்.
“அவருடைய வண்டி அடையாறின் பக்கம் செல்வதற்குப் பதிலாக ராயப்பேட்டையை நோக்கிச் சென்றது! நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். அவருடைய வண்டி ராயப்பேட்டை ஆஸ்பத்திரியினுள் பிரவேசித்ததும் தள்ளாடிய வண்ணம் வண்டியை விட்டு வெளியே வந்த அவரை ஒரு நர்ஸ் ஆஸ்பத்திரியினுள் அழைத்துச் சென்றதைக் குறித்து நான் திகைப்படைந்து போனேன். நான் வண்டியை விட்டிறங்கி ஆஸ்பத்திரியினுள் பிரவேசித்து அவருடைய வருகையை எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன். வெகு நேரம் காத்திருந்தும் அவர் வெளியே வராததால் அவரை ஆஸ்பத்திரியினுள் அழைத்துச் சென்ற நர்ஸிடம் அவரைப்பற்றி விசாரித்தேன். சில நிமிடங் களுக்குமுன்பு இறந்துவிட்டதாகக் கூறிய பதில் என்னைப் பதைக்க வைத்துவிட்டது! அவரைப் பார்க்கத் துடித்தேன். ஆனால் நர்ஸ் என்னை அதற்கு அனுமதிக்கவில்லை. மாமா அவ்வாறு திடீரென மரணமடைவார் என்று நான் நினைக்கவில்லை.”
“தில்லைநாயகத்தின் மரணச் செய்தியைக் கேட்ட பிறகு நீங்கள் என்ன செய்தீர்கள்?”
“என் மூளை குழம்பிவிட்டது. என்ன செய்வது என்றே எனக்குப் புரியவில்லை! ஒன்றும் தோன்றாமல் சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தேன். என் மாமாவின் மரணத்தைப்பற்றிய எண்ணம் ஏற்பட்டவுடன் எனக்கு என் தாயாரின் நினைவு வந்துவிட்டது. அவளுடைய உடல் நிலை எப்படி யிருக்கிறதோ? நான் அவளிடம் என்ன சொல்வது? தில்லைநாயகத்தின் மரணச் செய்தியை வெளிப்படுத்துவதா வேண்டாமா? – இதுபோன்ற கேள்விகள் என்னுடைய குழப்பத்தை அதிகப்படுத்தின. தன் சகோதரனை அழைத்து வரவில்லையே என்ற கவலை ஏற்படுவ துடன் அவருடைய மரணச் செய்தியைக் கேட்டு என் தாயார் அதிர்ச்சி அடைந்து போவாள் என்று தோன்றியபடியால் கூடியவரையில் அந்தச் செய்தியை மறைத்து வைப்பது நல்லது என்றே தீர்மானித்தேன். ஆனால் எவ்வளவு நாட்களுக்குத்தான் அவ்வாறு மறைத்து வைக்க முடியும்? எப்படியாவது விஷயம் அவளுடைய காதில் விழுந்து, அவளுடைய உயிருக்கு அபாயம் நேர்ந்து விட்டால் என்ன செய்வது என்ற கவலை என்னை வாட்டாமல் இல்லை. இவ்வாறு எந்தவிதமான முடிவிற்கும் வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த சமயத்தில் எனக்கு விஜய வல்லியின் நினைவு வந்தது. அவளிடம் யோசனை கேட்பது என்ற எண்ணத்துடன் அன்று இரவு வண்டியிலேயே காஞ்சீபுரத்திற்குப் புறப்பட்டு விட்டேன். மறுநாள் காலை நான் அவளை பரிமள பவனத்தில் சந்தித்தேன். என்னைக் கண்டு அவள் ஆச்சரிய மடைந்து போனாள், நான், அவளிடம் தில்லைநாயகத்தின் மரணச் செய்தியை வெளியிட்டேன். முதலில் அவள் அதை நம்பவில்லை. நடந்த விஷயங்களை விவரமாய்க் கூறிய பிறகுதான் அவளுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. என்ன தான் அவள் தில்லைநாயகத்தை வெறுத்த போதிலும் அவருடைய மரணச் செய்தி அவளுக்கு துயரத்தை உண்டாக்கிவிட்டது. பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டாள். ஆயினும் அவளையும் மீறிக்கொண்டு கண்ணீர்ப் பொட்டுகள் கன்னத்தில் உருண்டன.”
“அவள் தான் யாரைப் பதிவுத் திருமணம் செய்துகொள்ளப் போகிறாள் என்பதைத் தெரிவித்தாளா?”
“இல்லை! அதைப்பற்றிக் கேட்பதற்கு எனக்குத் துணிவு ஏற்படவில்லை. அதற்கு அவள் பதில் சொல்வாளா என்பது எனக்குச் சந்தேகமாக இருந்தது.”
“அவள் எப்பொழுதாவது மாரிசாமி. என்பவனைப்பற்றிப் பேசியிருக்கிறாளா?”
“இல்லை! அந்தப் பெயரை நான் இதுவரை கேட்டதில்லை.”
“விஜயவல்லி இப்பொழுது எங்கிருக்கிறாள் என்று உங்களால் கூறமுடியுமா?”
“புரசவாக்கத்தில் இருக்கும் ஆனந்தா லாட்ஜில் மூன்றாம் நெம்பர் அறையில் தங்கி இருக்கிறாள்.”
“அப்படியா? இது எப்படி உங்களுக்குத் தெரியும்?”
“நான் விஜயவல்லியைப் பார்த்து என் நிலையை வெளியிட்டு யோசனை கேட்டேன். அவள் தகுந்த வழி ஏதாவது சொல்லு வாள் என்று எதிர்பார்த்தேன். உடம்பு நன்றாகத் தேறும் வரையில் மாமாவின் மரணத்தைப்பற்றி என் தாயாரிடம் தெரி விக்க வேண்டாம் என்று எச்சரித்திருந்தாள் அவள். ஆனால் நான் செங்கல்பட்டிற்குச் சென்றவுடன் மாமாவுடன் வரவில்லை என்ற விஷயம் தெரிந்தவுடன் அந்த ஏக்கத்தினால் அவள் இறந்துவிட்டாள்.”
“இப்பொழுது நீங்கள் ஏன் சென்னைக்கு வந்தீர்கள்? விஜய வல்லியைச் சந்திக்கப் போகிறீர்களா?”
“இல்லை! வக்கீல் பஞ்சநாதன் தான் என்னை உடனே புறப் பட்டு வரும்படி எழுதியிருந்தார். என் மாமாவின் சொத்து சம்பந்தமாகச் சில விஷயங்களை என்னுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்!”
“அவர் மூலம்தான் எனக்கு நீங்கள் வரப்போவது தெரிய வந்தது. தில்லைநாயகத்தை யாரோ தந்திரமாகக் கொலை செய் திருக்க வேண்டும் என்று போலீசார் நினைக்கிறார்கள். அதனால் தான் நான் உங்களை இவ்வாறு விசாரணை செய்யவேண்டி யிருந்தது. நீங்கள் வக்கீல் வீட்டில்தானே இருக்கப் போகிறீர்கள். சென்னையைவிட்டுச் செல்வதற்கு முன்பு தயவுசெய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள் ” என்று தன்னுடைய விலாசத்தைக் கொடுத்துத் தனஞ்சயனை அனுப்பினார் துளசிங்கம்.
– தொடரும்…
– ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?, முதற் பதிப்பு: பெப்ரவரி 1957, தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, சென்னை.