ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 5, 2022
பார்வையிட்டோர்: 25,077 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 8 | அத்தியாயம் 9 | அத்தியாயம் 10

தனஞ்சயனை விசாரித்ததின் மூலம் அந்த வழக்கில் அதிக அபிவிருத்தி ஏற்படாவிட்டாலும் விஜயவல்லி விலாசம் தெரிய வந்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைந்தார் துளசிங்கம். தன் டைரியில் அவளுடைய விலாசத்தைக் குறித்துக்கொண்டு எழும்பூர் ஸ்டேஷனைவிட்டுப் புறப்பட்டார் அவர். அவருடைய கால்கள் நடந்துகொண்டிருந்தபோதிலும், விழிகள் நடமாடு வோரைக் கவனித்துக் கொண்டிருந்தபோதிலும் தில்லைநாய கத்தின் திடீர் மரணத்தைப்பற்றியே அவருடைய சிந்தனை சுழன்று கொண்டிருந்தது.

தனஞ்சயன் கூறிய விஷயங்களை ஒருமுறை நினைவு படுத்திக் கொண்டார். அவன் தில்லைநாயகத்தை ஊருக்கு அழைத்துப் போகவேண்டும் என்ற எண்ணத்துடன் வந்திருந்தால் அவனைச் சந்தேகிப்பதில் பலன் இல்லை என்றே தோன்றியது. தில்லைநாயகம் தன்னுடைய வேண்டுகோளை இவ்வாறு நிராகரித்து விடுவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை, அப்படி எதிர்பார்த்திருந் தாலும் அவன் அவரைக் கொலைசெய்யத் தீர்மானித்திருந்தான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? அவ்வாறு இருந்தாலும் அவன் தன்னுடன் விஷம் கொண்டு வந்திருப்பானா? அவனுடைய தாயார் தன் சகோதரனைப் பார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறாள் என்று அவன் கூறியது உண்மைதானா? அல்லது தில்லைநாயகத்தின் உயிலைப்பற்றி உணர்ந்துகொண்டு அதை அவர் மாற்றிவைப்பதற்கு முன்பு அவரை எப்படியாவது ஒழித்து விடவேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னைக்கு வந்திருப்பானா? ஒருவேளை இது, தில்லைநாயகத்தின் செல்வத்தை அடைவதற்காகத்தனஞ்சயனும் வக்கீலும் சேர்ந்து செய்த சூழ்ச்சியாக இருக்குமோ? ஒழுக்கம் மிகுந்தவர்போல் காணப்படும் வக்கீல் பஞ்சநாதன் அத்தகையவராய் இருப்பாரா? இந்தக் காலத்தில் யாரை நம்புவது? விஜயவல்லியை விசாரித்தால் தனஞ்சயனின் வாக்குமூலம் எவ்வளவு தூரம் உண்மை என்பது விளங்கிவிடும் என்ற எண்ணம் ஏற்பட்டபடியால் நேராகப் புரச வாக்கத்திற்குப் புறப்பட்டார் துளசிங்கம்.

ஆனந்த லாட்ஜிலிருந்த மூன்றாம் நெம்பர் அறையின் முன் னால்போய் நின்று லேசாகக் கதவைத்தட்டினார். மறுகணம் கதவு திறக்கப்பட்டது. அவ்வறையிலிருந்து ஓர் அழகு மங்கை வெளிப் பட்டாள். நடுத்தர வயதுடைய அந்த நாகரிக நங் கையைப் பார்த்தவுடன் அவள் தான் விஜயவல்லியாக இருக்கவேண்டும் என்பது துளசிங்கத்திற்குப் புரிந்து விட்டது.

“நீங்கள் தானே விஜயவல்லி ” என்று கேட்டார் அவர்.

“ஆமாம்! நீங்கள் யார்?” என்று சற்று வியப்புடன் வினாவினாள் அவள்.

“நான் ஒரு துப்பறிபவன். ஒரு முக்கிய விஷயமாக உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன்.”

“அப்படியா?” என்று கேட்டுவிட்டு அவரை அழைத்துக் கொண்டு ஹாலிற்குச் சென்றாள். அங்கு போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலி ஒன்றில் அவரை அமரச் செய்துவிட்டு தானும் சற்றுத் தூரத்தில் அமர்ந்துகொண்டாள்.

“என்னை எதற்காகப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்பதுபோல் அவரைப் பார்த்தாள் அவள்.

“உங்கள் கணவர் தில்லைநாயகத்தைப்பற்றிச் சில விஷயங் களை விசாரிப்பதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன். அவர், ரத்தத்தில் விஷக்கலப்பு ஏற்பட்டு துர்மரணமடைந்திருக்கும் செய்தி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது விஷயமாக எனக்கு ஏற்பட்டிருக்கும் சில சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளத்தான் இங்கு வந்திருக்கிறேன். அவருடைய ஆராய்ச்சிசாலையினுள் எவனோ புகுந்திருக்கிறான்! அவர் செய்துகொண்டிருந்த ஆராய்ச்சி யைத் தாமதப்படுத்த அவன் முனைந்திருக்கிறான் என்றும் தோன்றுகிறது. இதைப்பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என்று ஆரம்பித்தார் துளசிங்கம்.

“நான் அவரை ஒரு மனிதராகவே மதிக்கவில்லை. அவர் என்ன செய்கிறார், எங்கு போகிறார் என்பவைகளைப்பற்றி நான் கவலைப்பட்டதில்லை. ஆகவே, அவர் செய்த ஆராய்ச்சியைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.”

“மாரிசாமி என்பவரை உங்களுக்குத் தெரியுமா?”

“நன்றாகத் தெரியும். அவருக்கு என்ன?”

“இப்பொழுது அவர் எங்கு இருக்கிறார்?”

“அவர் இந்த ஊரிலேயே இல்லை. அவர் இரண்டு வார காலங்களுக்கு இந்தப் பக்கம் வரமாட்டார் என்று எண்ணு கிறேன். அவரைப்பற்றி நீங்கள் ஏன் விசாரிக்கிறீர்கள்? அவ ருக்கும் தில்லைநாயகத்தின் மரணத்திற்கும் என்ன சம்பந்தம்? தில்லைநாயகத்தை அவர் பார்த்ததுகூட இல்லையே!”

“அப்படியிருந்தால் சென்ற செவ்வாய்க்கிழமையன்று – அதாவது தில்லைநாயகம் மரணமடைந்த தினத்தன்று – அவர் ஏன் மாலை சுமார் மூன்று மணிக்கு தில்லை நாயகத்திற்கு டெலிபோன் செய்தார்?”

“மாரிசாமி அவருக்கு டெலிபோன் செய்தாரா? இதை என்னால் நம்பமுடியாது!”

“அந்த டெலிபோனைக் கவனித்த ஆதிகேசவன் தான் அந்த விஷயத்தை என்னிடம் சொன்னார். அதனால் தான் அவ்வளவு நிச்சயமாய்க் கேட்கிறேன். அது இருக்கட்டும்; சென்ற திங்கள் கிழமையன்று நீங்கள் தில்லைநாயகத்தை எச்சரித்து ஒரு கடிதம் எழுதினீர்கள் அல்லவா?”

“ஆமாம்; அதில் தவறு என்ன இருக்கிறது?”

“தில்லைநாயகம் எவ்வளவுதான் கொடியவராய் இருந்த போதிலும் அவருடைய உணவில் விஷத்தைக் கலக்கச் செய்து அவரைக் கொலை செய்வது பெரிய குற்றம் அல்லவா?”

“என்னைக் குற்றவாளி என்ற நினைக்கிறீர்கள்? இல்லை; நான் நிரபராதி. அவரைப் பயமுறுத்தி, அவருடைய பிடிவாதத்தைப் போக்கி, அவரை என் வழிக்குக் கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே அப்படி எழுதியிருந்தேனே தவிர, என் கடிதம் கிடைத்த தினத்தன்று அவர் அவ்வாறு மரணமடைவார் என்று நான் கனவில்கூடக் கருதவில்லை!”

“அது சரி! தில்லைநாயகத்தின் மரணச்செய்தி உங்களுக்கு எவ்வாறு தெரியவந்தது?”

“தனஞ்சயன் என்பவன் சொன்னான். ஒருகணம் என் மனம் துடித்துப் போய்விட்டது. தன் தாயாரின் உடல்நிலைமையைப் பற்றியும் அவரை அழைத்துப்போக வந்த அவன், அவருடைய மரணச்செய்தியைக் கேட்டு மனத்துடிப்பு அடைந்தது பற்றியும் கூறினான். நான் அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பினேன்.”

“நீங்கள் திடீரென்று பரிமள பவனத்திலிருந்து புறப்பட்டு விட்டதாகத் தெரியவருகிறது. மாரிசாமியைக் காணத்தானே சென்றீர்கள்?”

“சுதந்திர நாட்டில் ஒருவன் இஷ்டப்படி இஷ்டமான இடத் திற்குச் செல்வதற்கு உரிமையில்லையா? அனாவசியமாய்க் கேள்வி களைக் கேட்டு என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள் !”

“உங்களை நான் தொந்தரவு செய்யவில்லை. தில்லைநாயகத்தின் திடீர் மரணத்திற்கு நீங்கள் தான் காரணம் என்பதை நிரூபிக்கவே முயற்சிக்கிறேன். மாரிசாமியை நீங்கள் பதிவுத் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்திருக்கிறீர்கள்! அவனும் நீங்களும் சேர்ந்து தான் தில்லைநாயகத்தைக் கொலை செய்திருக்கிறீர்கள். இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?”

“நீங்கள் நினைப்பதில் பாதி உண்மை. ஆனால் அவரைக் கொலை செய்யவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குக் கிடை யாது. சென்ற செவ்வாய்க்கிழமையன்று அவரிடமிருந்து தந்தியை எதிர்பார்த்தேன். மாலைவரை வரவில்லை. உடனே மாரிசாமியை அனுப்பி அவருடைய ஆபீஸ் அறையின் பல்பை மாற்றிவைக்கும் படி ஏற்பாடு செய்தேன். அது வெடித்துப் பயங்கர சப்தம் உண்டாக்கி அவரைக் கிடுகிடுக்கச் செய்துவிடும். உடனே என் கடிதத்தின் நினைவு வரும். மேலும் பிடிவாதமாய் இருந்தால் உயிருக்கு அபாயம் ஏற்பட்டுவிடலாம் என்று எனக்கு விடுதலை கொடுத்துவிடுவார். இவ்வாறு நான் எண்ணியிருந்தேன். ஆனால் அது வேறு விதமாக முடிந்து விட்டது!”

“நீங்கள் விரும்பியிருந்தால் ஒரு விதமான தடையுமின்றி நீங்கள் மாரிசாமியை மணந்து கொண்டிருக்கலாமே? ஏன் தில்லை நாயகத்தைக் கடிதம் எழுதும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தீர்கள்?”

“என் கணவர் ஏதாவது நடவடிக்கை எடுத்துக் கொண் டால் தனக்கு அபகீர்த்தி ஏற்பட்டுவிடப்போகிறதே என்று தான் மாரிசாமி அவரிடமிருந்து கடிதம் ஒன்று எழுதி வாங்கும் படி கூறினார். அதனால் தான் நான் அவரை வற்புறுத்தி வந்தேன்.’

“நீங்கள் தில்லைநாயகத்தைப் பயமுறுத்தவேண்டும் என்ப தற்காகப் பல்பை மாற்றச்சொன்னீர்கள். ஆனால் உங்கள் சூழ்ச்சியில் சிக்கிப் படுகாயமடைந்தது வக்கீல்! தில்லைநாயகம் மின் சார விளக்கினடியில் நின்றிருந்தால் கண்டிப்பாக அவருடைய உயிர் போயிருக்கும். ஆனால் வேறு விதத்தில் அவர் மரண மடைந்து விட்டார். அது சரி, மாரிசாமி எங்கு இருக்கிறார் ?”

“நான் அவரைச் சென்ற புதன்கிழமையன்றுதான் கடைசி முறையாகச் சந்தித்தேன்! பிறகு என்னைச் சந்திப்பதாகக் கூறி விட்டு அவர் கிளம்பி விட்டார். ஆனால் அவர் எங்கு போனார், எப்பொழுது திரும்பி வருவார் என்பது எனக்குத் தெரியாது” என்று கூறிவிட்டாள் விஜயவல்லி. அந்த விசாரணை அத்துடன் முடிந்தது. அங்கிருந்து புறப்பட்டார் துளசிங்கம். தான் செய்த விசாரணைகளும், நடந்த விஷயங்களும் ஒரு முறை அவருடைய சிந்தனையில் சுழன்றன, ஆரம்பத்தில் அவர் வாசகன் என்று பெயர் வைத்த வாலிபனான தனஞ்சயனைச் சந்தித்தார். அவன் நிரபராதி என்பது விளங்கி விட்டது. அடுத்தபடியாக விஜய வல்லியின் மீது சந்தேகம் எழுந்தது. அவளை விசாரித்த பிறகு அவளும் நிரபராதி அன்று நினைக்க இடமிருந்தது, கடைசியாக மாரிசாமியின் மீதுதான் அவர் நம்பிக்கை வைத்திருந்தார். அவனைத் தான் விஜயவல்லி மறுமணம் செய்துகொள்ள நிச் சயித்து இருக்கிறாள். அவன் தான் தில்லைநாயகத்தின் ஆபீஸ் அறையின் பல்பை மாற்றி வைத்திருக்கிறான் என்பது தெரிந்து விட்டது. அவனே உஸ்மான் ரோடில் இருந்த ஆராய்ச்சி அறையி னுள் பிரவேசித்து இருக்கலாம் என்று எண்ணுவதற்கும் இடம் இருந்தது! ஆனால் தில்லைநாயகத்தின் உடல் நிலை எவ்வாறு பாதிக் கப்பட்டது? அவருடைய ரத்தத்தில் விஷக்கலப்பு எப்படி ஏற் பட்டது என்பதுதான் அவருக்குப் புரியாத புதிராக இருந்தது! தில்லைநாயகம் ஆராய்ச்சிசாலையை விட்டுக் கிளம்பியபோது உடல் நிலை பாதிக்கப்படவில்லை. ஐஸ்கிரீம் பாரினுள் சென்ற போது நல்லபடியாகத்தான் இருந்திருக்கிறார். அங்கு விஷக் கலப்பு ஏற்பட்டிருக்க முடியாது, ஓட்டலினுள் சென்றபோது அவருடைய நிலைமை சற்று மாறியிருந்தது. அன்று அவர் புசித்த சிற்றுண்டியில் எந்த விதமான பழுதும் கிடையாது. ஓட்டலை விட்டு வெளியே வந்தவுடன் நிலை தடுமாறிப் போயிருக்கிறார் அவர். தில்லைநாயகம் ஐஸ்கிரீம் பாருக்கு வருவதற்கு முன்பே அவருடைய ரத்தத்தில் ஏன் விஷம் கலந்திருக்கக் கூடாது?

தனஞ்சயனும் நிரபராதி; மாரிசாமியும் அவரைக் கொலை செய்யத் தீர்மானிக்கவில்லை. அப்படியானால் யார் அவருடைய உணவில் விஷத்தைக் கலந்திருக்க முடியும்? இதுவரை நம் கவனத்தில் படாமல் தப்பி வரும் ஆசாமி எவனாவது குற்றவாளியாக இருப்பானோ? எப்படி நினைத்த போதிலும் குற்றவாளி யார் என்று அவரால் முடிவிற்கு வரமுடியவில்லை!

ஆதிகேசவனையும் தில்லைநாயகத்தையும் ஒழித்துக் கட்டத்தான் குற்றவாளி தந்திரம் செய்திருக்கிறான். ஆனால் ஒருவர் பிழைத்து விட்டார்; மற்றொருவர் அதற்குப் பலியானார்! இருவரும் ஆராய்ச்சியாளர்கள் : சுலபமான முறையில் பஞ்சு தயாரிக் கும் வழியைக் கண்டுபிடிக்கப் பெருமுயற்சி செய்துவருகிறவர்கள். அந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் அவர்களுக்குப் பெயரும் புகழும் கிடைக்கும். அத்துடன் அவர்களும் குறுகிய காலத்தில் செல்வந்தர்களாகி விடுவார்கள். அவர்களின் ஆராய்ச்சியைத் தடை செய்வதற்காக யாரோதான் அவர்களைத் தந்திரமாகக் கொலை செய்யத் தீர்மானித்திருக்கிறான் என்பது விளங்கி விட்டது.

பலவாறு சிந்தித்த பிறகு குற்றவாளியின் குணாதிசயங்களைப் பற்றிய உண்மைகள் சில தெரியவந்தன, ஒன்று குற்றவாளி தில்லைநாயகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவனாக இருக்கவேண்டும். இரண்டு, அவருடைய பழக்கவழக்கங்களைப் பற்றி உணர்ந்தவனாக இருக்கவேண்டும், மூன்று, சுயநலம், பொறாமை முதலிய துர்க்குணங்கள் மிகுந்தவனாக இருக்க வேண்டும் ; இந்த மூன்று குணங்களும் கொண்ட ஆசாமி யாரென்று எவ்வளவு அலசிப்பார்த்தும் துளசிங்கத்தினால் ஒருவிதமுடிவிற்கும் வரமுடியவில்லை! எவ்வளவு சிந்தித்தும் பிரயோசனப்படவில்லை. கடைசியில் தில்லைநாயகத்தின் பொருளாதார நிலை என்ன? அவருடைய கணக்கு எவ்வாறு இருக்கிறது என்று அறிந்தால் ஏதாவது புதிய உண்மைகள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை எழுந்தது. ஆகவே காந்திமதிக்குப் போன் செய்து தில்லை நாயகம் எங்கு கணக்கு வைத்திருந்தார் என்று அறிந்து கொண்டு அந்த பாங்கிற்குச் சென்றார் துளசிங்கம்.

அந்த பாங்கின் மானேஜரை அவருக்கு நன்றாகத் தெரியும். தில்லைநாயகத்தின் வழக்கு விஷயமாக அவர் வேலை செய்கிறார் என்று உணர்ந்திருந்தபடியால் லெட்ஜரைக் கொண்டு வரச் செய்து தில்லைநாயகத்தின் கணக்கைப் புரட்டிக் காண்பித்தார் மானேஜர். கணக்கு ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தது. தன் வாழ்க்கையை நடத்துவதற்குப் போதுமான தொகையைத் தான் வாங்கி வந்தார். கணக்கை நன்கு கவனித்தபோது நிறைய சர்க் கார் பாண்டுகளையும் பல பிரபல கம்பெனிகளின் ஷேர்களையும் வாங்கி இருக்கிறார் என்றும் தெரியவந்தன. அத்துடன் தனக்குப் பிறகு பாங்கில் இருக்கும் பணத்தை வாங்க ஆதிகேசவனுக்கு உரிமை அளித்திருந்தார் என்பதும் வெளியாகியது. எல்லாவற்றை யும்விட தில்லைநாயகம் மரணமடைந்த மூன்றாவது நாள் ஆதிகேச வன் தில்லைநாயகத்தின் கணக்கிலிருந்து முப்பதினாயிரம் ரூபாய் வாங்கியிருந்தது துளசிங்கத்தின் ஆச்சரியத்தை அதிகப்படுத்தி விட்டது. அவ்வளவு பெரிய தொகையை அவர் எதற்காக வாங்கினார்? அவருக்குத் திடீரென்று என்ன செலவு ஏற்பட்டது?

தன்னிடம் தெரிவிக்கவில்லை? இத்தனை கேள்விகளும் ஒரே சமயத்தில் எழுந்து அவரைக் குழம்படித்து விட்டன. பாங்கு மானே ஜரிடம் ஆதிகேசவனைப்பற்றி விசாரித்தார் துளசிக்கம். அவர் தில்லைநாயகத்துடன் அடிக்கடி பாங்கிற்கு வந்திருக்கிறார் என்றும், தில்லைநாயகம் மரணமடைந்த மூன்றாவது நாள் அவரே நேரிடையாக பாங்கிற்கு வந்து முப்பதினாயிரம் ரூபாய் வாங்கினார் என்றும், முக்கியமான தஸ்தாவேஜுகள் சிலவற்றைப் பாங்கு இரும்புப்பெட்டி அறையில் வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்றும் தெரியப்படுத்தினார்.

துளசிங்கம் அவைகளையும் கொண்டுவரச் செய்து பரிசோதனை செய்தார். ஆராய்ச்சி சம்பந்தமான குறிப்புகள் அதில் வைக்கப்பட்டிருந்தன. அவைகள் தில்லைநாயகத்தினால் தயாரிக்கப்பட்டவைகள் தான் என்றும் அவருக்கு விளங்கிவிட்டது. ஆதிகேசவன் வக்கீலிடமிருந்து குறிப்புகளைக் கொண்டு வந்து பத்திரப்படுத்தி யிருக்கிறார். எதிரிகளிடம் சிக்கி விடப்போகிறதே என்ற பயத்தினால் அவர் அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால் அவர் ஏன் திடீரென்று அவ்வளவு பெரிய தொகையை வாங்கினார் என்பதுதான் புரியவில்லை! ஆதிகேசவன் தில்லைநாயகத்துடன் நெருங்கிப் பழகி வந்திருக்கிறார். அவருடைய பழக்க வழக்கங்களையும் நன்கு உணர்ந்திருக்கிறார் ! அத்துடன் அந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்றால் அதன் மூலம் கிடைக்கக் கூடிய பொருள் பாதி அவருக்குச் சொந்தமாகி விடப்போகிறதே என்ற பொறாமை ஏற்படுவதற்கும் காரணம் இருக்கிறது. ஒரு வேளை ஆதிகேசவன் ஏன் குற்றவாளியாக இருக்கக்கூடாது? அவ் வாறு இருந்தால் அவருடைய உடலும் ஏன் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்? ஒரு வேளை தன் மீது சந்தேகம் விழாமல் இருப்பதற் காக அவர் நடத்திய போலி நாடகமாக இருக்குமோ? ஆதிகேசவனைச் சந்தித்து அவரை விசாரித்து இந்தக் கேள்விக்கு பதில் அறிய வேண்டும் என்று தீர்மானித்து பாங்கியிலிருந்தவாறே ஆதி கேசவனுக்கு டெலிபோன் செய்தார். அப்பொழுது ஆதிகேசவன் வீட்டில் இருந்தார். துளசிங்கம், டெலிபோன் மூலம் குறிப்பாகச் சில கேள்விகளைக் கேட்டார். ஆதிகேசவன் அவைகளுக்குச் சரி யாகப் பதில் சொல்லவில்லை. தான் அவசர வேலையாக ஆராய்ச்சி சாலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருப்பதாயும், ஆறுமணிக்கு அங்கு வந்தால் எல்லா விஷயங்களையும் விவரமாய்க் கூறுவதாக வும் சொன்னார் ஆதிகேசவன். அப்பொழுது அவருடைய பேச்சில் தடுமாற்றமும் தயக்கமும் காணப்பட்டன. துளசிங்கத்திற்கு அவர்மீது ஏற்பட்டிருந்த சந்தேகம் இப்பொழுது அதிகமாகியது. ஆகவே போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று இன்ஸ்பெக்டர் சங்கரனுடன் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை வெளியிட்டார், அப்பொழுது அவருக்கும் ஆதிகேசவனின்மீது சந்தேகம் விழுந்தது! அவரை எப்படியாவது சாமர்த்தியமாக மடக்கி விசாரித்து உண்மையைக் கறந்து விடும்படியும், தான் அரை மணி நேரம் கழித்து அங்கு வருவதாகவும் சொன்னார் இன்ஸ்பெக்டர் தில்லைநாயகத்தின் வழக்கு சம்பந்தமாகவும் அவரைக் கொலை செய்த விஷயத்தைப்பற்றியும் பேசிக்கொண்டிருந்துவிட்டு ஐந்தே முக்கால் மணிக்கு மாம்பலத்திற்குப் புறப்பட்டார் துளசிங்கம். இப்பொழுது, மேகமண்டலத்தை விலக்கிக் கொண்டு சூரிய ஒளி தலைகாட்டுவதுபோல் அவருடைய மனத்தைச் சூழ்ந்து கொண் டிருந்த சந்தேக இருள் நீங்கி நம்பிக்கையின் ஒளிக்கிரணங்கள் தோன்ற ஆரம்பித்தன.

துளசிங்கம் சரியாக ஆறு மணிக்கு உஸ்மான் ரோடில் இருந்த ஆராய்ச்சிசாலைக்கு வந்து சேர்ந்தார். அந்த பங்களா வின் வாசலில் நின்று கொண்டிருந்த காவல்காரன், ஆராய்ச்சி சம்பந்தமான கருவிகள் சிலவற்றை வாங்குவதற்காக ஐந்தரை மணிக்கு ஆதிசேகவன் வெளியே சென்றார் என்றும், யாராவது தன்னைத் தேடிக்கொண்டு வந்தால் மாடி ஹாலில் அமர்ந்திருக்கச் செய்யும்படி சொல்லிவிட்டுச் சென்றதாகவும் கூறினார்.

ஆதிகேசவன் அப்பொழுது அங்கு இல்லாததே நல்லது என்று துளசிங்கத்திற்குத் தோன்றியது. ஆதிகேசவன் திரும்புவதற்குள் அவருடைய அறையைப் பரிசோதனை செய்துமுடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் மாடிக்குச் சென்றார். ஆதிகேசவனின் அறையில் அவருக்குத் தேவையான ஆதாரங்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. ஒருவித ஏமாற்றமடைந்த வண்ணம் ஹாலி லிருந்த சோபாவில் வந்து அமர்ந்தார் அவர். அவருக்கு முன்னா லிருந்த டீபாயில் நாலைந்து கடிதங்களும் வெவ்வேறு விலாச மிட்ட உறைகளும் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கடிதங்களை எடுத்துப் பார்த்தார் அவர். மறுநாள் எழும்பூர் பிருந்தாவனம் ஓட்டலில் வரவிருக்கும் டாக்டர்களுக்கு அவைகள் எழுதப்பட்டிருந்தன. ரசாயனங்களைப்பற்றியும் ஆராய்ச்சி சம்பந்தமான விஷயங்களும் தான் அதில் அடங்கி இருந்தன. அவைகளை மீண்டும் மேசையின்மீது வைக்க முயன்றபோது ஆதிகேசவன் துளசிங்கத்திற்கு எழுதிவைத்திருந்த குறிப்புக் கடிதம் ஒன்று அவருடைய கண்ணில் பட்டது.

“நண்பரே!

நான் உங்கள் வருகையை எதிர்பார்த்துக் கொண்டி ருந்தேன். நீங்கள் வருவதற்கு முன்பு இக்கடிதங்களை அனுப்பி விடலாமென்று நினைத்தேன். ஆனால் திடீ ரென்று, உடனே புறப்பட்டு வரும்படி மௌண்டு ரோட்டில் இருக்கும் ஆராய்ச்சிக் கருவிகளை விற்கும் கம்பெனியிலிருந்து டெலிபோன் வந்தது. அதனால் புறப்பட்டுவிட்டேன். நான் விரைவில் வந்து விடுவேன். கொஞ்சம் தாமதமானால் தயவுசெய்து எனக்காகக் காத்திருக்கவும். இந்தக் கடிதங்கள் இன்றே அவசர மாகப் போகவேண்டும். நான் வருவதற்குத் தாமத மானால் தயவு செய்து தபாலில் சேர்த்துவிடச் செய்யவும். சிரமத்திற்குத் தயவுசெய்து மன்னிக்கவும் –

ஆதிகேசவன்”.

அப்பொழுது ஆறு மணிக்கு மேலாகி இருந்தபடியால், அந்தக் கடிதங்களை உறையில் திணித்து உறைகளின் முனையில் இருந்த பசையை நாக்கினால் ஈரமாக்கி ஒட்டிக் காவல்காரனிடம் கொடுத்துத் தபாலாபீஸுக்கு அனுப்பிவிட்டுச் சோபாவில் சாய்ந்தார் துளசிங்கம்.

ஐந்து நிமிட நேரத்திற்குப் பிறகு திடீரென்று அவருடைய தொண்டை அடைபடுவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது, வயிற்றைப் புரட்டியது; இருதயத்தின் படபடப்பு அதிகரித்தது. மயக்கத்தினால் கண்கள் செருகின! மறுகணம் அவருக்குப் பயம் வந்துவிட்டது. தன் உயிருக்கு அபாயம் நேர்ந்து விட்டது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. மயக்கத்தையும் மனத்துடிப்பையும் தடுமாற்றத்தையும் பொருட்படுத்தாமல் மளமளவென்று கீழே வாசல் பக்கம் வந்தார். நல்ல வேளையாக அந்தப் பக்கம் ஒரு டாக்ஸி வந்தது. கையைத் தட்டி அதை நிற்க வைத்து அதில் ஏறி அமர்ந்துகொண்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு ஓட்டிச் செல்லும்படி உத்தரவிட்டார். அவ்வளவுதான், மறுகணம் என்ன நடந்தது என்று தெரியாது! விழிகள் உருள, பார்வை பஞ்சடைய மயக்கமாகிச் சாய்ந்து விட்டார் துப்பறியும் துளசிங்கம்!

– தொடரும்…

– ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?, முதற் பதிப்பு: பெப்ரவரி 1957, தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *