ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 6, 2022
பார்வையிட்டோர்: 11,312 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1 | அத்தியாயம் 2 | அத்தியாயம் 3

மாம்பலத்தில் ஆராய்ச்சிசாலை வைத்திருக்கும் ஆதிகேசவன் திடீரென்று உடல் நலம் குன்றி இருக்கிறார். அடையாறிலிருக்கும் தில்லைநாயகம் இறந்துவிட்டார். இது என்ன விந்தை? துளசிங்கத்திற்கு வியப்பை விளைவித்தது. ஒன்றிற்கு ஒன்று தொடர்பு இருக்க வேண்டும் என்றே தோன்றியது. இந்த விஷயத்தை ஆதிகேசவனிடம் தெரிவிக்க வேண்டியது அத்தியாவசியம் என்று தீர்மானித்து டெலிபோனைக் கையில் எடுத்தார், மைலாப்பூரில் ஆதி கேசவன் வசித்து வந்த வீட்டிற்கு எதிரில் டாக்டர் வீடு இருக் தது. அந்த டாக்டரை துளசிங்கத்திற்கு நன்கு தெரியுமாகையி னால், அவர் மூலம் எதிர் வீட்டிலிருக்கும் ஆதிகேசவனை அழைத்து வரும்படி கூறினர். அந்த டாக்டர் கூறிய பதில் துளசிங்கத்தின் வியப்பை இன்னும் அதிகப்படுத்தியது! ஆதிகேசவனின் வீட்டு வேலைக்காரன் சற்று நேரத்திற்கு முன்பு தன்னை அவசரமாய் அழைத்ததாயும், தான் சென்று பார்த்த போது ஆதிகேசவன் மூர்ச்சை யடைந்து படுக்கையில் படுத்துக் கிடந்ததாகவும் கூறினார். அவர் விஷக்கலப்பு கொண்ட சிற்றுண்டியைப் புசித்து இருக்க வேண்டுமென்று உணர்ந்து அதற்கு வேண்டிய சிகிச்சைகளைச் சற்று நேரத்திற்கு முன்புதான் செய்து விட்டு வந்ததாயும், சிலமணி நேரங்களுக்குப் பிறகு தான் அவருக்கு மூர்ச்சை தெளியும் என்றும் பதிலுரைத்தார் அந்த டாக்டர். அவருடைய உயிருக்கும் ஏதாவது அபாயம் ஏற்பட்டு விடப் போகிறதே என்று பயந்து விட்டார் அவர். மறுநாள் அவரைப் பார்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானம் செய்து கொண்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டார் துளசிங்கம்.

அங்கு சென்ற பிறகுதான் அவருக்கு ஒருவாறு விஷயம் விளங்கியது. நளினா கேபிலிருந்து காரில் புறப்பட்ட தில்லைநாயகத் தின் உடல் நிலை முன்னை விட மோசமாகியது. உடனே காரை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு ஓட்டச் சொன்னார். அவ ருடைய விகாரமான முகத்தோற்றத்தையும் மோசமான உடல்நிலைமையையும் கண்டு திடுக்கிட்டுப் போய் விட்டான் அந்த டிரைவர். காரை வேகமாக ஓட்டி வந்து அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டான். ஆஸ்பத்திரியில் அவருடைய உடல் பரிசோதிக்கப்பட்டது. உணவில் விஷக்கலப்பு ஏற்பட்டு அதனால் தான் அவர் அவ்வித விபரீதத்திற்குள்ளாகி இருக்கிறார் என்று உணர்ந்து அந்த விஷயத்தை அவருடைய உறவினர்களுக்குத் தெரியப்படுத்த முயன்றார்கள். அந்த முயற்சியின் பயனாக தில்லைநாயகத்தின் கோட்டுப் பையிலிருந்து ஒரு விஸிட்டிங் கார்டு கிடைத்தது. அதிலிருந்துதான் அவர்களுக்கு தில்லைநாயகத்தின் வீட்டு விலாச மும் டெலிபோன் நெம்பரும் கிடைத்தன. உடனே அவளுக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது. காந்திமதி அடையாறிலிருந்து உடனே வந்து சேர்ந்தாள். எஜமானரின் அவல நிலைமையைக் கண்டு துடிதுடித்துப்போனாள். அவருக்கு உற்றார் உறவினர் கள் இருக்கிறார்களா என்று ஆஸ்பத்திரியில் அவளை விசாரித்தார் கள். அவருக்கு உறவினர்கள் எவரும் இல்லை என்றும், அவர் கலியாணமானவர் என்றும், ஆனால், மனைவி அவருடன் மனஸ் தாபப் பட்டுக்கொண்டு தனியாக வசிப்பதாயும், அவளுடைய இருப்பிடம் தனக்குத் தெரியாது என்றும் கூறிவிட்டாள். அவளை விசாரித்ததின் பேரில்தான் ஆதிகேசவனைப்பற்றி அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

இந்தச் செய்தி துப்பறியும் துளசிங்கத்திற்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துவிட்டது. ஆஸ்பத்திரியில் இருந்த நர்ஸ், அவருடைய உடலைப் பரிசோதனை செய்த டாக்டர், தில்லைநாயகத்தைக் கொண்டு வந்துவிட்ட டாக்ஸி டிரைவர் முதலியோரை விசாரித்தார். புதிய உண்மைகள் எதுவும் கிடைக்கவில்லை. தான் நினைத்தது போல் அந்த வழக்கு அத்தனை சுலபமானதல்ல, அதில் பல மர்மங்கள் அடங்கியிருக்கின்றன என்பதை உணர்ந்து மீண்டும் ஒருவித ஏமாற்றத்துடன் போவீஸ் ஸ்டேஷனுக்குத் திரும்பி வந்து சேர்ந்தார் துளசிங்கம்.

இப்பொழுது இன்ஸ்பெக்டர் சங்கரன் போலீஸ் ஸ்டேஷனுக்குத் திரும்பி வந்திருந்தார். துப்பறியும் துளசிங்கம் ஆதிகேசவனைப் பார்க்கச் சென்றது முதல் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டு வந்ததுவரை நடந்த விஷயங்களை இன்ஸ்பெக்டரிடம் வெளியிட்டார். ஆதிகேசவனின் ஆராய்ச்சிச் சாலையில் எவனோ புகுந்து கொள்ளை யடித்திருக்கிறான் என்று தான் எண்ணியிருந்தார் சங்கரன். ஆனால் தில்லைநாயகத்தின் மரணத்தைப் பற்றி அறிந்தபோது, இன்ஸ்பெக்டர் திடுக்கிட்டுப் போனார்.

ஆதிகேசவனின் ஆராய்ச்சி அறை பாழாக்கப்பட்டதற்கும், தில்லைநாயகத்தின் திடீர் மரணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கவேண்டும் என்று தோன்றியபடியால் அதைப்பற்றி துள சிங்கத்தினிடம் அக்கறையோடு விசாரித்தார் இன்ஸ்பெக்டர்.

“ஆதிகேசவனின் அறையில் இருந்த முக்கியமான கருவிகள் சில பழுதாக்கப்பட்டிருக்கின்றன. தில்லைநாயகத்தின் அறையிலிருக்கும் மேசை டிராயரிலிருந்து ஆராய்ச்சி சம்பந்தமான குறிப்புகள் காணாமல் போயிருக்கலாம் என்று சந்தேகிக்க இடம் இருக்கிறது. ஆகவே, அவ்விருவரின் ஆராய்ச்சியைப்பற்றி உணர்ந்த யாரோதான் அவர்களின் வெற்றியைத் தடுக்க இவ்வாறு செய்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். இதற்குப் பொறாமைதான் காரணம் என்று நிச்சயமாய்க் கூறலாம்.

“அத்துடன் வேறு ஏதோ சில மர்மங்களும் இதில் மறைந்திருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். ஆராய்ச்சியாளர்களின் முயற்சி தடை செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் உடல் நலம் குன்றிக் கிடக்கிறார். மற்றொருவர் மரணமடைந்திருக்கிறார். இந்த மூன்று விஷயங்களையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும்பொழுது எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது!” என்றார் இன்ஸ்பெக்டர் சங்கரன்.

“எனக்கும் அவ்விதச் சந்தேகம் ஏற்படாமல் இல்லை. ஆனால் ஆராய்ச்சியாளர்களின் வீடு கொள்ளையடிக்கப்பட்டதற்கும் அவ்விருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கும் சம்பந்தம் இருக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இன்று மாலை ஆறரை மணிவரை அவர்கள் இருவரும் ஆரோக்கியத்துடன் இருந்திருக்கிறார்கள். அவ்விருவரும் சிற்றுண்டி புசிக்கக் கிளம்பிய பிறகுதான் ஆதிகேசவனின் ஆராய்ச்சி அறை பழுதாக்கப்பட் டிருக்கிறது. அவ்விருவரும் எட்டு மணி சுமாருக்குத்தான் ஓட்டலீலிருந்து திரும்பி இருக்கிறார்கள். ஒருவர் அடையாறுக்குச் சென்றுவிட்டார். மற்றொருவர் ஆராய்ச்சிச்சாலைக்குத் திரும்பி வந்திருக்கிறார். பிறகுதான் அவர்களின் உடல் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே ஆராய்ச்சிக் கருவிகளைப் பாழாக்கிய குற்றவாளி எவ்வாறு ஆராய்ச்சியாளர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்குக் காரணமாய் இருந்திருக்க முடியும்?”

“இரண்டு ஆசாமிகள் இந்தச் சதித் திட்டத்தில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ஒருவன், அவர்கள் எப்பொழுது வெளியேறுகிறார்கள் என்று கவனித்துக் கொண்டிருக்கிறான். மற்றொருவன் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று எப்படியோ அவர்களின் சிற்றுண்டியில் விஷங்கலந்து இருக்கிறான், அதனால்தான் குற்றவாளிகளின் திட்டம் வெற்றிகரமாக முடிக்திருக்கிறது! இன்று மாலை அவ்விருவரும் ஆராய்ச்சிச்சாலையை விட்டுக் கிளம்பியது முதல், ஓட்டலில் பிரிந்ததுவரை யார் யாரை சந்தித்தார்கள், என்னென்ன பேசினார்கள் என்பதைக் கண்டு பிடித்தால் இந்தச் சந்தேகம் நீங்கிவிடுமல்லவா?” என்று யோசனை கூறினார் இன்ஸ்பெக்டர்.

தில்லைநாயகத்தின் ஆராய்ச்சிக் கருவிகள் பழுதுபடாமல் இருந்த போதிலும் குற்றவாளி அந்த அறையினுள் புகுந்து இருக் கிறான் என்று என்னால் நிச்சயமாய்க் கூறமுடியும். ஆனால் அவன் அங்கு எதற்காக வந்தான், என்ன செய்தான் என்றுதான் கண்டு பிடிக்க முடியவில்லை” என்று கூறிவிட்டு தில்லைநாயகத்தின் அறை யிலிருந்து கண்டெடுத்த கத்தியை இன்ஸ்பெக்டரிடம் காண்பித் தார் துளசிங்கம். இன்ஸ்பெக்டர் அதைக் கையில் வாங்கி நன்கு கவனித்தார். அதன் மீது எந்த விதமான அடையாளமும் காணப் படவில்லை.

“தில்லைநாயகத்தின் அறையிலிருக்கும் மேசையினடியிலிருந்து இதைக் கண்டெடுத்தேன். குற்றவாளி இதன்மூலம் தான் அந்த வீட்டின் பின்புறமிருக்கும் கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறான். இதன் மூலமாவது குற்றவாளியைக் கண்டு பிடிக்கலாமென்று நினைத்துத் தான் இதைக்கொண்டு வந்தேன். இப்பொழுது அதுவும் முடியாது போலிருக்கிறது” என்றார் துளசிங்கம்.

“இது குற்றவாளியினுடையது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதை அவன் ஏன் அந்த அறையில் போட்டு விட்டுப் போயிருக்கிறான்? அதன் மூலம் தன்னைக் கண்டுபிடித்து விடப்போகிறார்களோ என்ற பயம் இல்லாமல் இருந்திருக்குமா?”

“இத்துடன் வெளியே சென்றால் தன்மீது சந்தேகம் ஏற்படப் போகிறதே என்ற பயம் உண்டாகியிருக்கிறது. அதனால்தான் மேசையின் கீழேபோட்டுவிட்டுப் போய்விட்டான்!” என்று கூறி விட்டு, பொழுது விடிந்த பிறகு மேற்கொண்டு விஷயத்தை விசா ரிக்கலாம் என்ற எண்ணத்துடன் வீட்டிற்குப் புறப்பட்டார் துளசிங்கம்.

மறுநாள் காலை தில்லைநாயகத்தின் மரணத்தைப்பற்றி விசா ரிக்க வீட்டைவிட்டுக் கிளம்பிக்கொண்டிருந்த சமயத்தில் துப்பறி யும் துளசிங்கத்தைத் தேடிக்கொண்டு ஓர் ஆசாமி அவருக்கு முன்னால் வந்து நின்றார்.

வட்டவடிவமான முகம்; நரைத்த தலைமயிர்; நெற்றியில் சந்தனப்பொட்டு; நீண்ட முறுக்கிவிட்ட மீசை; மேல் நாட்டா ரைப்போல் நாகரிக உடை; கரத்தில் ஒரு குறுந்தடி- இவைகள் சகிதம் கம்பீரமாகத் தன் வீட்டினுள் நுழைந்த அந்தப் புதிய மனிதரைக் கண்டு அதிசயித்துப் போனார் துளசிங்கம்.

“வணக்கம் மிஸ்டர் துளசிங்கம். என் பெயர் பஞ்சநாதன். தில்லைநாயகத்தின் வக்கீல். சற்று நேரத்திற்கு முன்பு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்து இன்ஸ்பெக்டர் சங்கரனை விசாரித்ததில் நீங்கள் அந்த வழக்கு விஷயமாய் வேலை செய்வதாகத் தெரிவித்திருந்தார். அதனால்தான் உங்களைப் பார்க்க வந்தேன்!” என்றார் வந்தவர். துளசிங்கம் அவரை உட்கார வைத்துப் பேச ஆரம்பித்தார்.

“நேற்று நான் தான் அந்த வழக்கு விஷயமாய் விசாரித்தேன். உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் துளசிங்கம்.

“தில்லைநாயகத்தின் வக்கீல் என்ற முறையில் நான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். தில்லைநாயகத்தின் ஆராய்ச்சிச்சாலையின் சாவியைக் கொடுக்க முடியுமா?” என்று கேட்டார் அவர்.

“அது என்னிடம் இருக்கிறது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார் துளசிங்கம்.

“தில்லைநாயகத்தின் வீட்டில் வசித்துவரும் காந்திமதியின் மூலம் எனக்கு அவருடைய மரணச் செய்தி இன்று காலை அறிவிக்கப்பட்டது. நான் உடனே அவருடைய வீட்டிற்குச் சென்றேன். காந்திமதி தனக்குத் தெரிந்த விஷயங்களைச் சொன்னாள். ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குச் சென்று அவர் மரணமடைந்ததின் காரணத்தையும் அறிந்து கொண்டேன். உடனே அவருடைய ஆராய்ச்சிச் சாலைக்குச் சென்றேன். அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. அங்கு காவல் இருக்கும் கான்ஸ்டேபிள் முதல் நாள் அந்த இடம் கொள்ளையடிக்கப்பட்டது என்றும், இப்பொழுது அந்த இடம் போலீசாரின் பந்தோபஸ்தில் இருப்பதாயும் தெரிவித்தான். தில்லைநாயகத்தினால் நியமிக்கப்பட்ட வக்கீல் என்ற முறையில் அந்த வீட்டின் சாவியை வாங்கிக்கொண்டு போகத்தான் நான் இங்கு வந்தேன்” என்றார் பஞ்சநாதன்.

“அது சரி! உங்களைத் தில்லைநாயகம் தன் வக்கீலாக நியமித்திருக்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?” என்று கேட்டார் துளசிங்கம். பஞ்சநாதன் ஒருவித வெறுப்புடன் துளசிங்கத்தைப் பார்த்துவிட்டுத் தன் கோட்டுப் பையில் திணித்து வைத்திருந்த நீளமான உறை ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தார். துளசிங்கம் அதைப் படித்துப் பார்த்தார். பிறகுதான் அவருக்குச் சமாதானம் ஏற்பட்டது. அந்த உறையை வக்கீலிடம் திருப்பிக் கொடுத்துவிட்டுத் தொடர்ந்தார் துளசிங்கம்.

“நீங்கள் சாவியைக் கேட்பதில் நியாயமிருக்கிறது. ஆனால் ஆதிகேசவனும் பாதிக்கப்பட்டிருப்பதனால்தான் சற்று யோசிக்க வேண்டியிருக்கிறது!”

” திகேசவனும் தில்லைநாயகமும் நெருங்கிய நண்பர்கள்.. பாகஸ்தர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. இந்தக் கடிதப்படி தில்லைநாயகத்தின் சொத்து சம்பந்தமான விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருப்பதால் தான் நான் இவ்வளவு அவசரப்படுகிறேன், சாவியைக் கொடுக்காவிட்டால் உங்கள் மீது நான் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்!”-வக்கீல் குரலில் கடுமை மூண்டது.

“உங்களிடம் நான் சாவியைக் கொடுக்க முடியாது! என்னுடன் வந்தால் வீட்டைத் திறந்துவிடுகிறேன். உங்கள் கடமைப்படி செய்து கொள்ளலாம். ஆனால் நான் உங்களுடனேயே இருப்பேன்” என்றார் துளசிங்கம். வக்கீல் பஞ்சநாதன் அதற்குச் சம்மதித்தார்.

பஞ்சநாதன் வந்திருந்த டாக்ஸி துளசிங்கத்தின் வீட்டு வாசலில் காத்துக்கொண்டிருந்தது. இருவரும் அதில் ஏறி அமர்ந்துகொண்டனர். துளசிங்கத்தின் உத்தரவுப்படி அந்த வண்டி மாம்பலத்தை நோக்கி விரைந்தது. வக்கீலின் வேண்டு கோளின் பேரில் முதல் நாள் மாலை தான் கண்டுபிடித்த விஷயங்களை அவரிடம் வெளியிட்டார் துளசிங்கம்.

தில்லைநாயகத்தின் மரணத்தைவிட ஆதிகேசவன் பாதிக்கப் பட்டது தான் அவருடைய வியப்பை அதிகப்படுத்தியது! “உலகம் வரவர மோசமாகி விட்டது. எந்த சமயத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. எந்த இடத்திலும் அபாயம் காத்து நிற்கிறது. அநியாயமும் அக்கிரமமும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில் போனால் விரைவில் பிரளயம் வந்துவிடும்” என்று அச்சம் நிறைந்த குரலில் கூறினார் வக்கீல். துப்பறியும் துளசிங்கத்தின் மூளை தான் பிரவேசித்திருக்கும் வழக்கைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தபடியால் வக்கீலின் வார்த்தைகளில் அடங்கியிருந்த தத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தார் அவர்.

சில நிமிடங்களுக்குள் அந்த வண்டி உஸ்மான் ரோடில் இருந்த ஆராய்ச்சிச் சாலையின் முன்னால் வந்து நின்றது. அங்கு காவலுக்கு நியமிக்கப்பட்டிருந்த கந்தசாமி துளசிங்கத்திற்கு ஸல்யூட்டு அடித்துவிட்டு ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றான். வக்கீலின் வேண்டுகோளின் பேரில் குற்றவாளியினால் உடைக்கப்பட்ட கண்ணாடி ஜன்னலையும், ஆதிகேசவனின் அறையில் நொறுக்கப்பட்ட ஆராய்ச்சிக்கருவிகளையும் காண்பித்தார் துளசிங்கம், கடைசியாக இருவரும் தில்லை நாயகத்தின் அறைக்குள் வந்தனர், வக்கீல் அவ்வறையிலிருந்த ஒவ்வொரு பொருளையும் உன்னிப்பாகக் கவனித்தார். ஒவ்வொன்றைப் பற்றிய குறிப்புகளையும், அவைகளின் ஜாபிதாவையும் தயாரித்துக் கொண்டார். பிறகு அந்த அறையி லிருந்த மேசை டிராயரைக் குடைந்தார். அங்கிருந்த கடிதங்களை ஏற்கனவே ஒரு முறை துளசிங்கம் பார்வையிட்டிருந்தபடியால், எந்தவிதமான பரபரப்புமின்றி அலட்சியமாய் வக்கீலுக்கு பக்கத்தில் நின்றிருந்தார். வக்கீல் ஒவ்வொரு கடிதமாய் எடுத்து நிதானமாய்ப் பார்த்துக்கொண்டே வந்தார். அவருக்கு ஒன்றும் பிரயோசனப்படக் கூடியதாக இல்லை. ஒருவித ஏமாற்றத்துடன் மேசை டிராயரை அலுப்போடு மூட முயன்றபோது பழுப்பு நிறக் கவர் ஒன்று பின்புறம் தட்டுப்பட்டு ‘தொப்’பென்று கீழே விழுந்தது. வக்கீல் மிகுந்த ஆவலுடன் அதைக் கையில் எடுத்தார். அந்தக் கவர் துளசிங்கத்தின் கண்ணில் படாததினால் அதனுள் என்ன அடங்கியிருக்கிறது என்று அறிய ஆவல் கொண்டார்.

வக்கீல் அந்தக் கவரிலிருந்த கடிதத்தை வெளியே எடுத்துப் படித்தார். அவருடைய நெற்றி விரிந்து சுருங்கியது. வலதுபுற புருவம் உயர்ந்து தாழ்ந்தது. ஏதோ ஓர் உண்மையைக் கண்டு பிடித்துவிட்டவர் போல் லேசாகத் தலையை அசைத்தார்.

“தில்லைநாயகம் இந்த இடத்தில் தன்னுடைய குடும்ப சம்பந்தமான கடிதங்களை வைத்திருப்பதாய் ஒரு முறை கூறியிருக்கிறார். அதனால்தான் இத்துணை அவசரமாய் இங்கு வந்தேன். இப்பொழுது நான் நினைத்தது சரியாகப் போய்விட்டது!” என்று கூறிவிட்டு மீண்டும் அக்கடிதத்தை ஒரு முறை படித்தார் வக்கீல்.

“அது யார் எழுதிய கடிதம்? கடிதத்தைப் படித்தவுடன் திடீரென்று உங்கள் முகத்தோற்றம் மாறிவிட்டதே! அப்படி அதில் என்ன அடங்கியிருக்கிறது?”

“ஒருவருக்கு ஒரு நாள் எச்சரிக்கைக் கடிதம் வருகிறது. அதே தினத்தில் அவர் துர்மரணம் அடைந்திருக்கிறார் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?”

“அது அந்தக் கடிதத்தில் அடங்கியிருக்கும் விஷயத்தையும் சூழ்நிலையையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்திருக்கிறது” என்று கூறிவிட்டு வக்கீலிடமிருந்த கடிதத்தை வாங்கி படித்தார் துளசிங்கம். அதில் –

“அன்பானவருக்கு,

நான் தங்களுக்குப் பல கடிதங்கள் எழுதிவிட்டேன். இதுவரை உங்களிடமிருந்து திருப்திகரமான பதில் ஒன்றும் வரவில்லை. நான் இனி தங்களுடன் வாழ முடியாது. இப்படி ஒரு பெண் எழுதுவது உங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கலாம். ஆனால் துர்க்குணமும் முன்கோபமும் தீச்செயலும் உருவான ஒருவருடன் என்னைப் போன்ற நாகரிகமான முற்போக்குக் கொள்கை மிகுந்த பெண் ஒருத்தி, எவ்வாறு பொறுத்துக் கொண்டு குடும்ப வாழ்வை நடத்த முடியும்? எனவே நான் ஒரு சுதந்திரப் பெண்மணியாய் வாழ விரும்புகிறேன். கலியாண பந்தத்திலிருந்து என்னை விடுவித்து விட்டதாக ஒரு கடிதம் எழுதி அனுப்புங்கள் என்று நான் பலமுறை தங்களுக்கு எழுதி விட்டேன். அது விஷயமாய் நான் தங்களுக்கு எழுதும் கடைசிக் கடிதம் இதுதான். உடனே உங்கள் பிடிவாதத்தை விட்டொழித்து நாளை பகல் பன்னிரெண்டு மணிக்குள் எனக்குத் தந்திமூலம் தெரியப்படுத்தி விடுங்கள். இல்லாவிட்டால் என்ன விபரீதம் நேருமோ எனக்குத் தெரியாது. இது வெறும் எச்சரிக்கையல்ல. கண்டிப்பான கடிதம். வழக்கம்போல் மௌனமாய் இருந்துவிட்டு உங்கள் வாழ்வைப் பலிகொடுத்து விடாதீர்கள்.

இப்படிக்கு
விஜயவல்லி.”

என்றிருந்தது. படித்துவிட்டுத் துப்பறியும் துளசிங்கமும் பிரமித்துப்போனார். முதல் நாள் இரவு எப்படி அந்தக் கவர் தன் கண்ணில் படாமல் போய்விட்டது என்று அவருக்குப் புரியவில்லை! “இதற்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்பதுபோல் புருவத்தை உயர்த்தி ஏளனம் கலந்த பார்வையில் துப்பறிபவரைப் பார்த்தார் வக்கீல் பஞ்சநாதன்.

“இந்தச் சூழ்நிலையில் விஜயவல்லியைச் சந்தித்து விசாரிக்கப் போகிறேன்” என்றார் துளசிங்கம்.

“இந்தக் கடிதத்திலிருந்து விஜயவல்லி, தில்லைநாயகத்தின் மனைவி என்று உங்களுக்குத் தெரிகிறதல்லவா? இது அவளுடைய கையெழுத்துத்தான்! இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதுபோல் அவள் எனக்குக் கடிதம் எழுதியிருந்தாள். நான் அதை அவரிடம் கொடுத்துவிட்டேன். குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படுவது சகஜந்தான். ஆனால் அவர்களின் பகைமை இவ்வளவு தூரம் வளர்ந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை! விஜயவல்லி இத்தனை கொடியவளாய் இருப்பாள் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. என்ன தான் மனவிரோதம் இருந்தபோதிலும் தன் கணவனைத் தந்திரமாய்க் கொலை செய்யுமளவிற்கு அவள் துணிந்துவிடுவாள் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறிவிட்டு ஒரு நெடுமூச்சு விட்டார் பஞ்சநாதன்!

“ஒரு பெண்ணிற்குத் தன் கணவனைக் கொலை செய்யுமள விற்குத் துணிவு ஏற்படுமா என்பது சந்தேகமாக இருந்த போதி லும் அவ்வாறு நடக்காமல் இல்லை! ஆகவே இந்தக் கடிதத்தைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை! ஆனால் இந்த எச்சரிக்கைக் கடிதத்திற்கும் தில்லைநாயகத்தின் மரணத்திற்கும் சம்பந்தம் இருக்குமா என்பது தான் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. ஆகவே, விஜயவல்லியைப் பற்றியும், இதில் கண்டிருக்கும் விஷயத்தைப் பற்றியும் சற்று விவரமாய்க் கூறமுடியுமா?” என்று கேட்டார் துளசிங்கம்.

“இந்த விவகாரத்தைப்பற்றி எனக்குத் தெரிந்தவைகளைக் கூறுகிறேன். விஜயவல்லிக்கும் தில்லைநாயகத்திற்கும் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு மணமாகியது. அப்பொழுது தில்லைநாயகத்திற்கு நாற்பது வயதிற்குள் தான் இருக்கும். விஜய வல்லிக்கு முப்பது வயது இருக்கும். தில்லைநாயகம் ஏன் அவ் வளவு வயதிற்குப் பிறகு மணம் செய்துகொண்டார், விஜயவல்லி ஏன் அத்துணைக் காலம் திருமணம் செய்து கொள்ளாமல் இருக் தாள் என்பவைகளுக்கு எனக்குக் காரணம் தெரியாது. கலி யாண மானதிலிருந்தே அவர்களிடம் ஒற்றுமையில்லை. சதா சண்டை சச்சரவு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. யார் மீது குற்றம் என்று எனக்குத் தெரியாது. அவைகளை அறியவும் நான் முயற்சிக்கவில்லை. நாகரிக மோகமும் முற்போக்குக் கொள் கைகளும் மிகுந்திருந்த விஜயவல்லிக்கு தில்லைநாயகத்துடன் வாழ்வது கடினமாய் இருந்தது. வீட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு வரு டத்திற்கு முன்பு சந்ததியில்லாமல் இறந்துபோன அவளுடைய அத்தையின் மூலம் அவளுக்குக் கொஞ்சம் சொத்து வந்து சேர்க் தது. அதன் மூலம் நிம்மதியாய் வாழலாம் என்று தீர்மானித்துக் கொண்டு கலியாண பந்தத்திலிருந்து தன்னை விடுவித்து விடும்படி தன் கணவனை வற்புறுத்த ஆரம்பித்தாள். தில்லைநாயகம் பழங்காலத்துக் கொள்கைகளை மேற்கொண்டிருந்தபடியால் அவளுடைய வேண்டுகோளை நிராகரித்தார். அத்துடன் அவள் மீது கடுங்கோபம் கொண்டு அவளைக் கொடுமைப்படுத்தவும் துணிந்து விட்டார். இதன் விளைவாக அவர்களுடைய விரோதம் விரிந்தது, விஜயவல்லி கணவனைப் பகைத்துக்கொண்டு காஞ்சீபுரத் திற்குச் சென்றுவிட்டாள். காஞ்சீபுரத்தில் தான் அவளுடைய அத்தை வசித்து வந்தாள். அங்குதான் அவளுக்குக் கொடுக்கப்பட்ட நிலபுலன்களும் இருந்தன. விஜயவல்லி காஞ்சீபுரம் சென்ற பிறகு கலியாண பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துவிடும்படி பல கடிதங்கள் எழுதினாள். ஆனால் தில்லைநாயகம் அவைகளைப் பிரித்துப் பார்க்காமல்கூடத் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். தில்லைநாயகத்தின் பிடிவாதத்தைப் போக்கித் தனக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கும்படி அவள் எனக்குக்கூடக் கடிதம் எழுதியிருந்தாள். கலியாணமான ஒரு பெண் இப்படி நடந்து கொள்வாள் என்று நினைக்கும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கும்! ஆணுக்குப் பெண் எந்தவிதத்திலும் குறைந்தவள் அல்ல என்ற மனோபாவமும், இருவரும் சமம் என்ற கொள்கையும் வளர்ந்து வந்திருக்கும் இந்தக் காலத்தில் விஜயவல்லி அப்படி நடந்து கொண்டதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?” என்றார் வக்கீல்.

“விஜயவல்லி கலியாண பந்தத்திலிருந்து விடுபட பல முயற்சிகளைச் செய்து பார்த்துத் தோல்வி அடைந்து விட்டபடியால், அவளேதான் தந்திரமான முறைகளைக் கையாண்டு தில்லைநாயகத்தைக் கொன்று இருக்கவேண்டும் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள் ? விஜயவல்லியோ காஞ்சீபுரத்தில் இருக்கிறாள். தில்லை நாயகமோ திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்து போயிருக்கிறார். விஜயவல்லியின் கடைசிக் கடிதத்தைப் படிக்கும்போது அவள் குற்றவாளியாய் இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறதே தவிர, தில்லைநாயகத்தின் மரணத்திற்கும் இந்தக் கடிதத்திற்கும் சம்பந்தம் இருக்குமென்று எனக்குத் தோன்ற வில்லை” என்று கூறி வக்கீலின் சந்தேகத்தை அகற்ற முயன்றார் துளசிங்கம்.

“நீங்கள் என்ன நினைத்தபோதிலும் எனக்கு என்னவோ சந்தேகமாகத்தான் இருக்கிறது!”

“தில்லைநாயகம் முன் கோபமும் பிடிவாத குணமும் கொண் டவர் என்று சொன்னீர்களே, அவர் அவ்வளவு சுலபத்தில் இந்த எச்சரிக்கைக் கடிதத்தைக் கண்டு பயந்து போயிருப்பாரா?”

“அவர் பிடிவாதக்காரரான போதிலும் பயந்த சுபாவம் கொண்டவர் என்றுதான் நான் சொல்வேன்! சர்வ சாதாரண விஷயத்திற்கெல்லாம் கூட சில சமயங்களில் பயந்துபோயிருக்கி சார். தன்னுடைய பிடிவாதத்தினால் தன் உயிருக்கு அபாயம் ஏற்படலாம் என்று தோன்றும்போது அச்சம் ஏற்படுவது இயற்கைதானே? விஜயவல்லியின் கடிதங்களைத் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்த அவர் இந்தக் கடிதத்தை மட்டும் வாங்கி யிருக்கிறார். இதை அடையாறில் இருக்கும் தன் வீட்டில் வைக்காமல் தன் கையோடு இங்கு கொண்டு வந்திருக்கிறார். விஜயவல்லி குறிப்பிட்டபடி தந்தி அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இக்கடிதத்தை இங்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அவர் இந்தக் கடிதத்திற்கு பதில் அனுப்பினாரா, இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. தில்லைநாயகத்தின் மரணத்தைப்பற்றி அலசிப் பார்க்க வேண்டியது உங்கள் கடமை. நான் செய்ய வேண்டிய வேலைகள் எத்தனையோ இருக்கின்றன. நான் வருகிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் வக்கீல் பஞ்ச நாதன்.

ஆதிகேசவனின் ஆராய்ச்சிக் கருவிகள் நொறுக்கப்பட்டன; தில்லைநாயகத்தின் திடீர் மரணம்; விஜயவல்லியின் எச்சரிக்கைக் கடிதம் ஆகிய மூன்றும் துளசிங்கத்தின் மனக்கண் முன்னால் தோன்றின.

தான் நினைத்ததைவிட அதிகமான மர்மங்கள் அதில் அடங்கியிருப்பதாகவே அவர் நினைத்தார்! விஜயவல்லியை விசாரித்தால் உண்மை கிடைக்கலாம் என்ற நம்பிக்கை துளிர்த்தது. ஆனால் அதற்கு முன்பு முதல் நாள் காலை ஆறரை மணியிலிருந்து எட்டுமணிவரை தில்லைநாயகம் என்ன செய்தார் என்பவைகளைக் கண்டுபிடிப்பதற்காக நேராக நளினா கேப் இருக்கும் பாண்டி பஜாருக்குச் சென்றார் துளசிங்கம்.

– தொடரும்…

– ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?, முதற் பதிப்பு: பெப்ரவரி 1957, தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *