கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 18, 2019
பார்வையிட்டோர்: 64,456 
 
 

வழக்கம்போல பத்து மணிக்கே பரபரப்பாக தொடங்கி விட்டது.

அந்த அலுவலகத்தின் செயல்பாடுகள். ஜெர்மானிய ரோஸ்ட் பலகைகளை கொண்டு உருவாக்கப்பட்டிருந்த குட்டி குட்டி அறைகளில் இருக்கும் கம்ப்யூட்டர்களில் எல்லாம் மெயில்கள் பிரிக்கப்பட்டு பார்க்கப்படவும் தொடங்கின.

அங்கே ஒரு சராசரி பட்டதாரி கூட இல்லை. எல்லோருமே போஸ்ட்கிராஜூவேட்கள் படிக்கும்போதே லட்சங்களில் சம்பளக் கனவு கண்டவர்கள்.

ஒருவர் கூட புடவையில் இல்லை. அனேகர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தனர். கர்ப்பப்பை சூடேறி பிள்ளை பேற்றின் போது அது சவலைப்பிள்ளையாக உருவாகி பிறக்கும் ஆபத்து அதனால் இருப்பதெல்லாம் அவர்களுக்கு தெரியவில்லை. மிக சரியாக 11 மணி இருக்கும்போது அந்த செய்தி வந்தது. அந்த இன்பர்மேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சீனியர் மேனேஜர்களில் ஒருவனான சதீஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு விட்டதாக.

கேபின் விட்டு கேபின் பெண்கள் கூடி பேசத் தொட்ஙகினர். ஈஸ் இட் ட்ரூ ரம்யா..?

சாவு விஷயத்துல யாராவது பொய் சொல்வாங்களாப்பா?

என்னால நம்பவே முடியலடி.. ஆமா அவன் எதனால தற்கொலை செய்கிட்டானாம்.

தெரியலியே… அவன் தற்கொலை செய்கிட்டான்கறதையே நம்ப முடியலியே

அவன் தற்கொலை செய்திருந்தாலும் சரி.. இல்லை யாராவது கொலை செய்திருந்தாலும் சரி என் மனசுக்கு இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா என்று மார்பை தழைத்து பெருமூச்சுவிட்டாள் நிகிதா.

இன்னிக்கு ஆபீஸுக்கு வரும்போதே அவன் பயம்தான் எனக்கு, வாவ் தப்பிச்சுட்டேன் என்றாள் பாத்திமா. யாரும் சதீஷின் தற்கொலைக்கு வருத்தப்பட்டது போலவே தெரியவில்லை. இருந்தாலும் நோட்டீஸ் போர்டில் அவனது சைனீஷ் மீசையுட்ன கூடிய போட்டோவை போட்டு ஓரமாக சம்பிரதாய அஞ்சலி செய்தியையும் பதிவு செய்திருந்தனர்.

மாலை நான்கு மணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த அனைவரையும் அனுமதிப்பதாகவும் ஒரு வரி செய்தி அதில் காணப்பட்டது.

ஏய் நீ போக போறியாப்பா?

ஆமா அவன் வீடு எங்கே இருக்கு..சுந்தரம் காலனியில தானே?

ஆமாம்… இண்டிபெண்டன்ட் ஹவுஸ்.

ஓ நீ போயிருக்கியோ?

இல்ல.. இல்ல.. அந்த பக்கம் போனப்ப அவன் யாரோடோ உள்ள நுழைஞ்சிக்கிட்டிருந்ததை பார்த்தேன்.

ஏன் இல்ல இல்லன்னு பதறறே. போனாத்தான் என்ன இப்ப..

போதும்டி… வீணா ஒரு தடவை போய்ட்டு வந்துட்டு ஒரு மாசம் வேலைக்கே வரலை..

இப்படி பல மாதிரி பேச்சுக்கள் கேபினுக்கு கேபின் ஒலித்தபடி இருந்தது.

செண்பகக்குழல்வாய் மொழி மட்டும் எதுவும் பேசாமல் வேலையில் மும்முரமாக இருந்தாள். அதை அனுஜாவும் கவனித்தாள். மெல்ல அவளருக்கே சென்றாள்….

அவளும்திரும்பினாள். ஓ நீ வழக்கம் போல இன்னிக்கும் சேரியா அதுவும் நூல் புடவை.

வந்த விஷயத்தை சொல் அனுஜா ..என்ன விஷயம்?

சீனியர் மேனேஜர் அந்த காட்டு ஓணான் சதீஷ் தற்கொலை செய்துகிட்டானாம்.

உனக்கு அதிர்ச்சியா இல்லையா?

என்னத்தா சொல்றது… ஆபீஸே இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஒரு மனுஷனோட சாவு எல்லாருக்கும் சந்தோஷத்த தருதுன்னா அவன் எவ்வளவு மோசமா இருக்கணும்?

அதுக்கு நாமளும் இடம் கொடுக்கக்கூடாது இல்லையா?

செண்பகக்குழல்வாய் மொழி வெடுக்கென்று அப்படி திருப்பி கேட்பாள் என்று அனுஜா எதிர்பார்க்கவில்லை.

நீ என்ன சொல்றே செண்பக்

வேலையை சரியா பாக்காம அவன் கிட்ட வழிஞ்சத சொல்றேன். அவன் காபி சாப்பிட கூப்பிட்டான். சினிமாவுக்கு கூப்பிட்டான்னு போனதை சொல்றேன். இப்ப உனக்கு ஒரு விஷயம் தெரியுமா, யார் யார் அவன் கூட சுத்தினாளுகளோ அவளுகத்தான் ரொம்ப ப்ரீயா பீல் பண்றாங்க..

பாத்து… அடுத்து இன்னொரு சதீஷா, ரமேஷா துண்டு தாடி ஸ்டாம்ப் சைஸ் ஸ்பெக்ஸ்னு வந்து அடுத்த ரவுண்டை தொடங்கிட போறாங்க.

உனக்கு ரொம்ப தைரியம் சென்பக். அந்த ஓணான் கிட்ட நீ தான் கடைசி வரை முரண்டு பிடிச்சுக்கிட்டிருந்தே, அவன் ரூமுக்கு நீ தனியா போனதே இல்லைல்ல.

அதானல தான இந்த வருஷ பிரமோஷன் எனக்கு கட் ஆகியிருக்கு…

அது மட்டுமா நான் ஒரு இல்லிட்ரேட். பட்டிக்காடு கம்ப்யூட்டரை அஞ்சரை பெட்டி மாதிரி நினைக்கறவள்னுல்லாம் என்னை பத்தி கம்ளைண்டும் டாப் மேனேஜ்மெண்ட்டுக்கு போயிருக்கு.

விடு தொல்லை ஒழிஞ்சது. ஆமா இவன் எதனால தற்கொலை செய்துக்கிட்டிருப்பான்?

யாருக்கு தெரியும். ஒரு வேளை டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போயிருக்கற அவன் மனைவியால இருக்கலாம்

அட ஆமால்ல.. எனக்கு அவனுக்கு ஒரு பெண்டாட்டி இருக்கறதே மறந்துபேச்சு என்றபடி விலகி போன அனுஜா அதையே ஒவ்வொரு கேபின் பெண்களிடமும் பகிர்ந்து கொண்டாள். மாலைக்குள் அந்த செய்திக்கு ஒரு பக்கா ஷேப் கிடைத்து விட்டது.

சதீஷ் வைஃப் சாரதா, சதீஷை போன்ல போட்டு பிச்சு எடுத்துட்டா போல இருக்கு. அதோட சாரதா அவ மாமா பையனையே மறுமணம் செய்துக்க போறதாவும் சொல்லியிருக்கா. அதுல தான் ஆள் அப்செட். இப்படி ஒரு வடிவம் ஏற்பட்டுவிட்டிருந்தது.

ஆறு மாதங்கள் சென்று விட்டன. செண்பக குழல்வாய் மொழிக்கு அன்று தான் திருமணம் முதல் இரவு.

கணவன் ஒரு ராணுவ மேஜர். பார்க்க கிண்ணென்று இருந்தான். நிறைய பேசணும் செண்பகம்னு அவனே பேச்சை தொடங்கினான்.

நானும் தான்.

அப்ப நீயே முதல்ல பேசு.–

உங்களை நான் ஏன் தேர்வு செய்தேன்னு முதல்ல சொல்லிடறேன்.

சொல்லு சொல்லு.

நீங்க போர்க்களத்துல எதிரிகள சுட்டு கொன்னுருக்கீங்களா? சுத்தி வளைக்காம நேரா பதில் சொல்லுங்க

கார்கில் போரில் கொன்னுருக்கேன்பா.

அது நாட்டுக்காக செய்த கொலை தானே?

சந்தேகமென்ன.. அதே தான்.

நானும் ஒரு கொலை செய்துருக்கேன்.

சென்பககுழல்வாய்மொழி சொன்னதை கேட்டு அதிர்ந்தார் மேஜர்.

என்ன செண்பகம்…ஜோக் அடிக்கிறியா?

இல்லைங்க. இந்த செல்போன்ல இருக்கற போட்டோக்களை பாருங்களேன். ஒரு செல்போனை எடுத்து அவனை பார்க்க வைத்தாள். வரிசையாக பல பெண்கள் அரை முக்கால் கால் நிர்வாணங்களில் அவ்வளவு பெண்களும் மயக்கத்தில் இருப்பது பளிச்சென்று தெரிந்தது. அதில் செண்பககுழல்வாய்மொழி படமும் இருந்தது.

சென்பகம் இது நீயா?

ஆமாம் பெங்களூர்ல ஆபீஸ்ல என் கூட வேலை பார்க்கற பெண்கள் தான் இவங்கல்லாம். சதீஸ்னு எங்க மேலதிகாரி தான் இதை எடுத்தவர். ஒவ்வொருத்தரையும் எதேதோ காரணம் சொல்லி, வீட்டுக்கு வரவைச்சு சிரிச்சு பேசி, கூல்டிரிங்ஸ மயக்க மருந்தை கலந்து கொடுத்து அவங்கள நிர்வாணமாக்கி இப்படி படம் பிடிச்சிருக்கான். அப்புறம் இதை காட்டியே பல தடவை அனுபவிக்கவும் செய்துருக்கான்.

ஆபீஸ்லேயே என்கிட்ட தவறா நடந்துக்க அவன் முயற்சி செய்தான்.

ஆனா நான் இடம் கொடுக்கல . பெரும்பாலும் அவன் அறைக்கே போக மாட்டேன். அவனுக்கு படியாததால என்னை பத்தி தப்பு தப்பா ரிப்போர்ட் பண்ணான். இதனால என் ப்ரமோஷனும் பாதிக்கபப்ட்டது.என்னால ஒரு அளவுக்கு மேல பொறுக்க முடியல. ஆவேசத்தோடு நான் ஒரு நாள் அவன் வீட்டுக்கே நியாயம் கேட்க போனேன். மயக்க ஸ்ப்ரேவால என்னையும் விழ வெச்சு இப்படி படம் எடுத்துட்டான்.

நானும் தீர்மானமா ஒரு முடிவுக்கு வந்தேன்., வைரத்தை வைரத்தால அறுக்கறதுன்னு அவன் வலைல விழற மாதிரி நடிச்சேன். அவன் குடிச்ச பால்ல விஷத்த கலந்து கொடுத்துட்டு இந்த செல்போனை எடுத்துக்கிட்டு வந்துட்டேன்…

எனக்குள்ள ஒரு வதம் செய்த சந்தோஷம். அவன் மனைவி கூட அவன் பெரிய சண்டை போட்ட நிலையில இருந்ததால அந்த கொலை கொஞ்சம் கூட சந்தேகத்துக்கு இடம் தரலை. ஆறு மாசமும் ஓடிப்பேச்சு.

சட்டபூர்வமா அவனை எதிர்க்கொண்டிருக்கலாம். அப்போது சாட்சியா இந்த நிர்வாண படங்கள் எல்லாராலயும் பார்க்கப்பட்டு இந்த இழிவு பதிவாகும். வதம் தான் சரியான தீர்வு. இதை உங்களைபோல ஒரு மிலிட்டெரி மேனால நல்ல விதமா புரிஞ்சுக்க முடியும். என் உயிரிலேயும் வாழ்க்கையிலும் சரிபாதியா இணையப்போகிற உங்க கிட்ட உண்மையாவும், நேர்மையாவும் இருக்கணும்கற காரணத்தால இதை எல்லாம் சொல்லிட்டேன்.

என்னை ஒரு கொலைக்காரியாவோ இல்லை வேறு விதமாவோ பார்க்கறது இனி உங்க விருப்பம்.

ஒரு படி மேல போய் என்னை சட்டத்தின் முன்னால் கூட நிறுத்தலாம். எனக்கு ஆட்சேபனையில்லை. செண்பகக்குழல்வாய் மொழி பேசி முடிக்கவும்.

மேஜரிடம் ஒருவித ஸ்தம்பிப்பு.

முதல் இரவு கட்டிலில் இருந்து எழுந்து நின்ற மேஜர் தன் பட்டு வேட்டியை சீராக கட்டிக்கொண்டு விரைப்பாக நின்று அவளுக்க ஒரு சல்யூட் அடித்தார்.

– பிப்ரவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *