மர்டர் க்ரைம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 8, 2020
பார்வையிட்டோர்: 25,736 
 
 

***

ஆசிரியர் திரு.எஸ்.கண்ணன் அவர்களது 400வது சிறுகதை. சிறுகதைகள் தளத்தின் சார்பாக வாழ்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

***

வெள்ளிக்கிழமை.

பெங்களூர் கோரமங்களா போலீஸ் ஸ்டேஷன். இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிந்தபோது, போன் வந்தது.

“ஸார் என்னோட பெயர் ராஜேஷ். இங்க ஒன்பதாவது க்ராஸில் பன்னிரண்டாம் நம்பர் வீட்டின் மாடியில் ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கிறாள். உடனே வாங்க ஸார்… ப்ளீஸ்”

“நீங்க எங்க இருந்து பேசறீங்க?”

“நான் பக்கத்துவீடு. நம்பர் பதிமூன்று…”

“நீங்க ஸ்பாட்லேயே இருங்க. உடனே கிளம்பி வரேன்.”

மஞ்சுநாத் எழுந்து நின்றார். தட்டிலேயே கை கழுவினார். பெல்ட்டை சரி செய்துகொண்டார். தொப்பியை அணிந்துகொண்டு வேகமாக ஜீப்பில் தாவி ஏறினார்.

அந்த வீட்டையடைந்த போது அங்கு ஏற்கனவே பத்துப்பேர் கூடி நின்றனர். இன்ஸ் அந்தப் பங்களாவின் பக்கவாட்டுப் படிகளின் வழியாக மேலே ஏறி உள்ளே சென்றார்.

சமையலறையில் அந்தப் பெண் மல்லாந்து விழுந்து இறந்து கிடந்தாள். அவளின் தலையின் முன் பகுதியில் ரத்தம் ஏராளமாக வெளியேறி உறைந்திருந்தது. தலையில் ஓங்கி அடித்திருக்க வேண்டும்.

இன்ஸ் மஞ்சுநாத் துரிதமாகச் செயல்பட்டார்.

தனக்கு போன் செய்த பக்கத்து வீட்டின் ராஜேஷைக் கேள்விகளால் குடைந்தார்; அவர் கைநீட்டிய வேலைக்காரியை துருவித் துருவி விசாரித்தார். அவள்தான் வேலைக்கு வரும்போது சம்பவத்தை முதலில் பார்த்தவளாம். இறந்தவளின் பெயர் அலமேலு. கல்யாணம் ஆகி ஆறு மாதங்கள்தான் ஆகியிருக்கிறது.

உடனே அலமேலுவின் கணவனுக்கு போன் செய்து அவனை வரச்சொன்னார். பிறகு ப்பாரன்ஸிக் போன் செய்தார்; மோப்ப நாய் ராணியை வரச் செய்தார். பக்கத்துவீடு, எதிர் வீடுகளில் விசாரித்தார். ஐடி கம்பெனியில் ஒர்க் பண்ணும் அவளின் கணவன் ஸ்ரீவத்சன் அடித்துப்பிடித்து ஓடி வந்தான். மஞ்சள்கலர் டீ ஷர்ட்டில் ஸ்டைலாக இருந்தான். கதறி அழுதான்.

அவனைத் தனியாக இன்ஸ் விசாரித்தார்.

“உங்க துக்கம் எனக்குப் புரியுது மிஸ்டர் ஸ்ரீவத்சன். ஆனா டீடெய்லா விசாரிக்க வேண்டியது எங்க கடமை…”

விசாரணையில் இன்ஸ் கிரகித்துக் கொண்டது:

“அலமேலுவுடன் அவனுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள்தான் ஆகிறது; அந்த வீட்டின் முதல்மாடியை வாடகைக்கு எடுத்து ஒருவருடம் ஆகிறது. வீட்டின் ஓனர் கிரவுண்ட் ப்ளோரில் மனைவியுடன் குடியிருக்கிறார். தற்போது வீட்டைப் பூட்டிவிட்டு மனைவியுடன் மைசூர் சென்றிருக்கிறார். மாதம் இருபதாயிரம் வாடகை. அவனுக்கு எம்ஜி ரோடில் பிரபல ஜெர்மன் ஐடி கம்பெனியில் சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர் வேலை. அன்றுகாலை ஒன்பது மணிக்கு பிரேக்பாஸ்ட் முடித்து கடைசியாக அலமேலுவைக் கொஞ்சிவிட்டு ஆபீஸ் கிளம்பிச் சென்றவன், இன்ஸ் போன் செய்ததும் பதறி ஓடிவந்தான்…”

பிற்பகலில் அலமேலுவின் பெற்றோர்கள் ஸ்ரீரங்கத்திலிருந்து காரில் வந்து சேர்ந்தனர். ஸ்ரீவத்சன் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சென்னையில் இருந்து விமானத்தில் வந்தனர். கூடிக்கூடி அழுதனர்.

அன்று மாலையே இன்ஸ் மஞ்சுநாத் ஸ்ரீவத்சன் வேலை செய்யும் ஐடி கம்பெனிக்கு விசாரணைக்காக புறப்பட்டுச் சென்றார்.

மறுநாள் சனிக்கிழமை…

இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் காலை ஒன்பது மணிக்கே ஸ்ரீவத்சன் வீட்டிற்குப் போனார். அவனிடம் மேலும் சில கேள்விகள் கேட்டார். பதினோரு மணிக்கு எலக்ட்ரிக் க்ரிமட்டோரியத்தில் இறுதிச்சடங்கு என்பதைப் புரிந்துகொண்டார். பத்து மணிக்கு ஐயர்கள் வந்தனர். அங்கிருந்தே மைசூரில் இருக்கும் வீட்டின் ஓனரைத் தொடர்பு கொண்டார். அவர் ஞாயிறு திரும்பி வருவதாகச் சொன்னார்,

ஆண் உறவினர்கள் சூழ, சரியாக பதினோரு மணிக்கு பாடி மயானத்தை அடைந்தது. இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத்தும் அங்கு சென்று இரண்டு கான்ஸ்டபிள்களுடன் போலீஸ் ஜீப்பில் காத்திருந்தார்.

அலமேலுவின் சாம்பல் சூடாக இரண்டு சொம்புகளில் ஸ்ரீவத்சனிடம் தரப்பட்டது. பிறகு அங்கேயே அதை வைத்துக்கொண்டு சில கிரியைகள் செய்யப்பட்டன. மயானத்தில் எல்லாக் கிரியைகளும் முடிந்துவிட்டதை உறுதிப் படுத்திக்கொண்டு, இன்ஸ் ஜீப்பை விட்டு இறங்கி ஸ்ரீவத்சனிடம் சென்றார்.

“நீங்க முதல்ல ஜீப்பில் ஏறுங்க… இன்னமும் என்கொயரி பாக்கி இருக்கு.”

“நான் எதுக்கு ஜீப்பில் ஏறணும்? பதிமூணு நாளைக்கு அப்புறம் உங்க என்கொயரியை வச்சிக்குங்க…”

சற்றும் எதிர்பாராமல் இன்ஸ் மஞ்சுநாத் அவன் வலது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.

“ஏறுடா, கொலைகார நாயே… வாழ வேண்டிய ஒரு இளம் தளிரைக் கொன்றுவிட்டு உனக்கு வாய் வேறயா?”

ஸ்ரீவத்சன் பொறி கலங்கிப்போய் ஜீப்பில் ஏறினான். அவனுடைய அப்பா ஓடிவந்து “இன்ஸ்பெக்டர் இது மனித உரிமை மீறல்… இதோட பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்” என்று கத்தினார்.

ஸ்டேஷனை நோக்கி ஜீப் கிளம்பிச் சென்றது.

ஸ்ரீவத்சனை ஒரு தனியறையில் வைத்து இன்ஸ் மஞ்சுநாத், “ஏண்டா அவளைக் கொலை செய்தே? உனக்கு ஏகப்பட்ட அரிப்பு இருந்தா உங்க வீட்டு ஓனர் பொம்பளைய நல்லா அனுபவியேன். அதுக்கு ஏன் உன்னையே நம்பி வந்த அப்பாவிப் பெண்ணை கொலை பண்ணனும்?”

“………………… “

“ஆபீஸ விட்டு எங்கேயும் வெளிய போனியான்னு இன்னிக்கி காலைல நான் உன்னைக் கேட்டேன்….”

“எங்கியுமே நான் போகலைன்னு என்கிட்ட அடிச்சு சொன்ன… ஆனா நேத்து உன்னோட ஆபீஸ்ல ஹெச்ஆரிடம் சொல்லி கேமராவை ரிவைண்ட் பண்ணிப் பாத்தேன். காலையில் ஆபீஸ் போகும்போது ப்ளெய்ன் வெள்ளைச்சட்டை போட்டிருந்தே. பதினோரு மணிக்கு வீட்டுக்கு போய் அந்த அப்பாவிப் பொண்ணை கொலை பண்ணிட்டு ஒரு மணிக்கு திரும்பி ஆபீஸ் வரும்போது மஞ்சள் கலர்ல டீ ஷர்ட்…”

ஸ்ரீவத்சனின் முகம் சுருங்கியது.

“நீ பெரிய கெட்டிக்காரன்னு உனக்கு நினைப்பு. போகும்போது அக்ஸஸ் கார்டை ஸ்வைப் பண்ணாமல், வெளியேபோகும் ஒருத்தனுடன் டெய்ல் எண்டிங் பண்ணிட்டு வீட்டுக்குப் போயிட்ட; கொலையை பண்ணிட்டு வரும்போது காவலுக்கு இருந்த செக்யூரிட்டியை ஸ்வைப் பண்ணச் சொல்லிவிட்டு ஆபீசுக்குள்ள புகுந்துட்ட… இவ்வளவு தூரம் யோசித்த நீ காமிரா இருப்பதைப் பற்றி சிந்திக்கவே இல்லை…

“……………………………..”

“எப்பேர்ப்பட்ட புத்திசாலியும் ஒரு மர்டர் பண்ணும்போது, கண்டிப்பாக ஒரு தடயத்தை விட்டுவிட்டுச் செல்வான் என்பது போலீஸ்காரனாகிய எனக்குத் தெரியாதா? நேத்து சாயங்காலமே நீதான் கொலைகாரன்னு எனக்குத் தெரியும்… ஆனா பாவம் அந்தப் பெண்ணின் ஈமச் சடங்கு நிறைவேறக் காத்திருந்தேன்.

போதாதற்கு நேற்று பக்கத்து வீடு, எதிர் வீடுகளில் உன்னைப் பத்தி விசாரித்த போது, நீ ஓனர் வீட்டுப் பொம்பளை மஞ்சுளாவுடன் அடிக்கின்ற கூத்தை விலாவாரியாகப் புட்டுப் புட்டு வைத்தார்கள். சரி, இப்பவாவது எதையும் ஒளிவுமறைவு இல்லாம சொல்லு… ஏன் உன்னையே நம்பி வந்த அப்பாவிப் பெண்ணைக் கொலை பண்ணின?”

“ஒரு வருஷமா, எனக்கு எங்க வீட்டு ஓனர் மஞ்சுளா மேடம்னா உயிர்… அவங்களோட ரொம்ப க்ளோஸா இருந்தபோதுதான், எனக்கு கல்யாணம் நிச்சயமாச்சு…”

“உனக்கு எதுக்குடா கல்யாணம்? சரி, நீ உன் மனைவியை கொலை செய்யப்போவது மஞ்சுளாவுக்குத் தெரியுமா?”

“தெரியாது சார்… அவங்களோட எப்பவுமே நான் இருக்கலாம் என்கிற ஆசையில் நான் மட்டுமே முடிவுசெய்து அலமுவைக் கொலை செய்தேன்…”

“அட சொறி நாயே…. ஒனக்குதான் அரிப்பு வந்தா ஓனர் இருக்காளே… அப்ப ஏண்டா ஒரு இளம் தளிரைக் கல்யாணம் செய்துகிட்டு அவளை கொலை செய்யணும்? அதுவும் அக்னி சாட்சியா உன்னை நம்பி வந்தவளை? ஏண்டா ஒரு ஓட்டைக்காக இப்படி கொலை வெறி புடிச்சு அலையறீங்க?”

அவனிடம் நடந்த உண்மைகளை எழுத்துப் பூர்வமாக ஸ்டேட்மென்ட் வாங்கிக் கொண்டார். கமிஷனருக்கு அதை அனுப்பி வைத்தார். கோர்ட்டில் அவனை திங்கட்கிழமை ஆஜர் படுத்த முடிவு செய்தார். வீட்டிற்கு போகும்போது அவனை பூட்ஸ் காலால் ஆத்திரத்தில் ஓங்கி ஒரு மிதி மிதித்துவிட்டு வெளியேறினார்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.

மதியம் ஓனர் வீட்டிற்குச் சென்றார். மஞ்சுளா மைசூரில் இருந்து திரும்பியிருந்தாள். அவளைப் பார்த்தாலே ஒரு குடும்பப்பெண் மாதிரி இல்லை. எப்போதுமே படுக்கைக்கு தயாராவது போன்ற மதர்த்த உடலமைப்பு. . அழகாக இருப்பதற்காக முகத்துக்கு ஏகப்பட்ட மராமத்து வேலைகள் செய்திருந்தாள்.

“உங்க வீட்டுக்காரர் வரலையா?”

“இல்ல, உங்களுக்கு என்ன வேணும் இன்ஸ்பெக்டர், அதச் சொல்லுங்க.”

“ஒனக்கும், மாடி வீட்டு ஸ்ரீவத்சனுக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறதா இந்தத் தெருவே சொல்லுகிறது …”

“இன்ஸ்பெக்டர் நான் ஒரு லாயர். ரொம்ப விவரம் தெரிஞ்சவ. மொதல்ல மரியாதையா பேசக் கத்துக்குங்க… எங்கிட்ட வாலாட்னீங்க ஹோம் மினிஸ்டர் கிட்டச் சொல்லி உங்களை தண்ணி இல்லாக் காட்டுக்கு அனுப்பிச்சுடுவேன்…”

“நீங்கதான் அவரோட மனைவியைக் கொலை செய்யத் தூண்டியதாக நான் குற்றம் சாட்டுகிறேன்…”

“இது உங்களுடைய கற்பனை. எனக்கும் அவனுக்கும் பிஸிகலா தொடர்பு இருப்பது உண்மைதான். நாங்கள் ரொம்ப விருப்பத்துடன் ஒருத்தருக்கு ஒருத்தர் விதவிதமான கற்பனைகளுடன் அலுக்க அலுக்க சரீர ஒத்தாசை செய்து கொள்வோம். அவ்வளவுதான். மற்றபடி அவன் கொலை செய்யப்போவது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.”

“உங்களுக்கு இது அசிங்கமாகத் தோன்றவில்லையா?”

“செக்ஸ் விஷயத்தில் எதுவும் அசிங்கம் கிடையாது இன்ஸ்பெக்டர். எல்லாமே இன்பமயம்தான். தவிர, நம் சுப்ரீம்கோர்ட்டே தகாத உறவுகள் தகும் என்று தீர்ப்பே சொல்லிவிட்டதே. அதனால் பொத்திகிட்டு மரியாதையா இங்கிருந்து இடத்தைக் காலி பண்ணுங்க…”

இன்ஸ் மஞ்சுளாவை முறைத்துவிட்டு வெளியேறினார்.

மறுநாள் ஸ்ரீவத்சனை கோர்ட்டில் ஆஜர் செய்து அவனை மேலும் மூன்று நாட்கள் விசாரணைக்காக கஸ்டடியில் எடுத்தார்.

அடுத்த இரண்டு நாட்களில் இன்ஸ்பெக்டர் ரெய்ச்சூர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்.

Print Friendly, PDF & Email
என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *