நல்ல வாக்கு சொல்லுடி ஜக்கம்மா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 9,662 
 

“நல்ல காலம் பொறக்குது … நல்ல காலம் பொறக்குது … இந்த வீட்டு எசமானுக்கு நல்ல வாக்கு சொல்லுடி ஜக்கம்மா!”’ ‘

கட்டைக் குரலில் கத்திய குடுகுடுப்பைக்காரனால் தூக்கம் கலைந்து எழுந்த கண்ணனுக்கு கோவம் வந்தது. சண்டே கூட தூங்க விடவில்லை என்றால் எப்படி சுவாமி?

கதவைத் திறந்து கொண்டு வந்த கண்ணனைக் கண்டதும் குடுகுடுப்பைக்காரன் இன்னும் அதிக உற்சாகத்துடன் “நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது”’ என்றான்.

“யோவ்! நிறுத்துய்யா உன் அமக்களத்த! காலைல வந்து உசுர வாங்கறியே!”

“நானா வந்தேன் எசமான்? ஜக்கம்மா சொல்லி வந்தேன். உங்களுக்கு சேதி வந்திருக்கு எசமான்”

“வேணாம்… விட்ரு… நானே ரொம்ப கடுப்புல இருக்கேன். நீ ஜக்கம்மா ராக்கம்மான்னு ஆரம்பிச்சியான நடக்கற கதையே வேற. இவ்ளோ ப்ளாட் இருக்கு. கீழ இருக்குங்கறதுக்காக ஏன்யா என் உசுர வாங்கற? காசு வேணுமா கேளு. பத்து ரூவாய விட்டு எறியறேன். எடுத்துட்டுப் போயி சேரு.”

கண்ணனை ஒருமுறை தீர்க்கமாகப் பார்த்த குடுகுடுப்பைக்காரன் “எசமான் ஒன் காசுக்காக வரல. மெய்யாலுமே ஜக்கம்மா சொல்லித் தான் வந்தேன். நீ நம்புனா நம்பு. நம்பாட்டி போ. என்கடம ஜக்கம்மா சொன்னதச் சொல்லிர்றேன். இன்னும் பத்து நாளைக்கு நீ காலைல எளுந்த ஒடனே ஒன் மனசுல என்ன வருதோ, அது அந்த நாள்ல ஒன்ன நல்ல விதமாவோ கெட்ட விதமாவோ பாதிக்கும். முடிஞ்சா படுக்கை எதிர்ல சாமி படம் மாட்டி வையி. நா வர்றேன்”

கண்ணன் திகைத்து நின்றான். பின்னர் ‘இதெல்லாம் சுத்த ஹம்பக்’ என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டு மீண்டும் தூங்கச் சென்றான்.

பத்து மணிக்கு எழுந்த கண்ணனும் அவன் மனைவியும் வெளியே சூப்பர் மார்கெட்டுக்குக் சென்றார்கள். மாதாந்திர சாமான்கள் வாங்கி வந்தார்கள். சாயந்திரம் சினிமா போனார்கள். இரவு ஹோட்டலில் சாப்பிட்டார்கள். இப்படியாக அன்றைய ஞாயிறு நிம்மதியாகக் கழிந்தது.

மறுநாள் திங்கட்கிழமை ஐந்தரை மணிக்கு அலாரம் வைத்து எழுந்த கண்ணனுக்கு முதலில் மனதில் வந்தது தண்ணீர். அவன் தொண்டை வறண்டிருந்தது. இரவு ஹோட்டலில் சாப்பிட்டதாயிருக்கும். எழுந்து சென்று பிரிட்ஜிலிருந்து பாட்டில் எடுத்துக் குடித்தான். அப்போது தான் அவனுக்குக் குடுகுடுப்பைக்காரன் நினைவு வந்தது. ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்தது.

அன்று ஆபீசில் ரொம்ப சாதரணமான் நாள். ஒரு சர்ப்ரைசும் இல்லாமல் கழிந்தது. மாலை ஐந்து மணிக்கு வெளியே வந்தவன் அருகில் இருந்த ஒரு டீக்கடைக்குச் சென்று ஒரு டீ ஆர்டர் செய்தான். டீ குடித்து முடித்து கிளாசை மேலே கவுண்டரில் வைத்தபோது அவன் கை அருகில் கொதித்துக் கொண்டிருந்த கெட்டிலில் மோதியது. அந்த வேகத்தில் கெட்டில் கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அதன் மூடி திறந்து அதில் இருந்த சூடான தண்ணீர் கண்ணன் கைகளில் கொட்டியது. துடித்துப் போனான் கண்ணன்.

உடனே அருகில் இருந்த டாக்டரிடம் போய் சிகிச்சை எடுத்துக்கொண்டான். வெளியே வரும்போது குடுகுடுப்பைக்காரன் நினைவு வந்தது. ஆகா! அவன் சொன்னது போலவே நடந்து விட்டதே.

கண்ணன் மனதில் ஒரு நெருடல். ஆனால் தற்செயலாக நடந்த ஒன்றை வைத்து ஒரு முடிவுக்கு வரக்கூடாது என்று அதை மறந்தான். மனைவியிடமும் ஒன்றும் சொல்லவில்லை.

மறுநாள் காலை. தூக்கம் கலைந்த கண்ணனுக்கு பாம்பு மனதில் வந்தது. முதல் நாள் சம்பவத்தால் சற்று பயம் வந்தது. இருந்தும் மனதை திடப்படுத்திக்கொண்டு ஆபீஸ் சென்றான். லஞ்ச் டைம் வரையிலும் ஒருவித படபடப்பு இருந்தது. எதுவும் நடக்கவில்லை. சற்று டென்ஷன் குறைந்தது.

லஞ்ச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அவன் மொபைல் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். அவன் குடியிருக்கும் ப்ளாட்டின் செக்ரட்டரி.

“என்ன சார், சொல்லுங்க என்ன விஷயம்?” என்றான்.

“சார் ஒடனே கெளம்பி வீட்டுக்கு வாங்க. ஒரு பாம்பாட்டி வந்திருந்தான் ப்ளாட் வெளில. அவன் வச்சிருந்த மூங்கில் கூடைலேர்ந்து ஒரு பாம்பு தப்பிச்சு நம்ம ப்ளாட்டுக்குள்ள பூந்திருச்சு. அதப் பிடிக்கப் போனபோது டிமிக்கி கொடுத்துட்டு திறந்திருந்த உங்க வீட்டு ஜன்னல் பக்கத்துல இருந்த செடில ஏறி உங்க வீட்டுக்குள்ள போயிரிச்சு. உங்க வீட்டம்மாவுக்குப் போன் போட்டா அவங்க எடுக்க மாட்டேங்கறாங்க. அதுனால உங்களைக் கூப்பிட்டேன். சீக்கிரம் வாங்க” என்று சொல்லி வைத்தார்.

கண்ணன் அதிர்ந்தான். என்னதிது ஜக்கம்மா வாக்கு ரெண்டாவது நாளா பலிச்சிடுத்தே! ஆபீசில் சொல்லிவிட்டு வீட்டுக்கு விரைந்தான். எல்லாருமாக சேர்ந்து உள்ளே இருந்த பாம்பை வெளியே விரட்டுவதற்குள் இரவு ஆகிவிட்டது. அதற்குள் அவன் மனைவியும் வந்து விட்டாள். ரொம்பவும் களைத்துப் போயிருந்த கண்ணன் அவளைக் கூட்டிக்கொண்டு ஹோட்டல் சென்றான்.

ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்த வேளையில் அவளிடம் ஜக்கம்மா வாக்கு பற்றி சொன்னான். அவன் மனைவி உமாவின் முகம் மாறியது. ஆனால் இவன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

மூன்றாம் நாள் காலை. Train. சரி இன்று எங்கும் வெளியில் போகும் வேலை போல இருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். ஆனால் அந்த மாதிரி எதுவும் அவன் ஆபீசில் அன்று சொல்லவில்லை. அவனுக்கு ஆச்சரியம். சரி இரண்டு நாள் எதேச்சையாக நடந்தது என்று நினைத்துக்கொண்டான். மாலை ஆபீசில் இருந்து கிளம்புபோது உமாவிடமிருந்து போன் வந்தது.

“ஏங்க, ரமேஷ் தெரியுமில்ல என் கோயமுத்தூர் மாமா பையன். அவன் USலேர்ந்து போன வாரம் வந்தானாம். இன்னைக்கு சென்னை வர்றான். அவன் வர்ற கோவை எக்ஸ்பிரஸ் இன்னைக்கு நாலு மணி நேரம் லேட்! நீங்க ப்ளீஸ் ஸ்டேஷன் போய் அவனக் கூப்பிட்டுக்கொண்டு வீட்டுக்குப் போங்களேன். எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. வீட்டுல வந்து பேசிக்கலாம்” என்றாள்.

ஜக்கம்மா!

சரியென்று கண்ணன் உமா சொன்னது போலவே ரமேஷைக் கூப்பிட்டுக்கொண்டு வீடு சென்றான். ரமேஷ் இவனுக்கு ஒரு பாரின் விஸ்கி பாட்டில் வாங்கி வந்திருந்தான். அதை அங்கிருந்த ஷோகேஸில் வைத்தான் கண்ணன். இரவு எட்டு மணிக்கு உமா வந்தாள். இரவு உணவு வீட்டிலேயே சமைத்தாள். சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். ரமேஷ் தான் புக் செய்திருந்த ஹோட்டலுக்குச் சென்றான். கண்ணன் தனக்குத் தூக்கம் வருகிறதென்று சொல்லிவிட்டுத் தூங்கப் போனான்.

நான்காம் நாள் காலை. ஜக்கம்மா நல்ல மூடில் இருந்திருப்பாள் போல. இவனுக்கு முத்தத்துக்கு ரெடியாக உதடுகளைக் குவித்துக்கொண்டு சரிந்த புடவைத் தலைப்பைப் பற்றிக் கவலைப் படாத உமா மனதில் வந்தாள். ஆகா!

அன்று முழுவது கண்ணன் ஒருவிட ஜுரத்துடன் இருந்தான். இப்படி அவன் உடல் ஏங்கியதே இல்லை. வேலையிலும் மனம் செல்லவில்லை. சாயந்தரம் ஒருமணி நேரம் பர்மிஷன் சொல்லிவிட்டு வீடு சென்றான். போகும் வழியில் உமாவுக்குப் பிடித்த காட்பரி சில்க் ஒன்று வாங்கிக் கொண்டான்.

வீட்டை நெருங்கியவன் கண்களில் வெளியில் விடப்பட்ட இரண்டு ஷூக்கள் தென்பட்டன. என்னது இது ரமேஷ் போட்டிருந்தது போல இருக்கே! கதவில் கை வைத்ததும் மெதுவாகத் திறந்து கொண்டது. சமையல் உள்ளிலிருந்து ஏதோ முனகல் சத்தம் கேட்டது. மெல்லடி வைத்து கண்ணன் நடந்து கிச்சனில் எட்டிப் பார்த்து உறைந்தான்.

ரமேஷும் உமாவும் அப்போதுதான் முத்தம் கொடுத்துப் பிரிந்தது போலத் தெரிந்தார்கள். ஆனால் உமா இன்னொரு முத்தத்துக்கு ரெடியாக உதடுகளைக் குவித்துக்கொண்டு சரிந்த புடவைத் தலைப்பைப் பற்றிக் கவலைப் படாமல் கண்கள் செருகி நின்றிருந்தாள்.

ரமேஷ் தான் இவனை முதலில் பார்த்தான். “உமா” என்றான் சன்னக் குரலில். கண்திறந்த உமாவும் கண்ணனைப் பார்த்தாள்.

கண்ணன் கோபத்தின் உச்சத்தில் இருந்தான். அவன் முகபாவத்தைப் பார்த்த ரமேஷ் அங்கிருந்து எதுவும் பேசாமல் வெளியே போனான்.

இதுபற்றி எதுவும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் உமா நின்றிருந்தாள். அவளை நெருங்கிய கண்ணன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். உமா நிலைகுலைந்து போனாள். கோபம் தணியாத கண்ணன் மீண்டும் அறைய கை ஓங்கினான். அதற்குள் சற்று சுதாரித்த உமா அவன் கையைப் பலமாகப் பிடித்தாள். அவள் கண்களில் தெரிந்த ஆக்ரோஷத்தைக் கண்ட கண்ணன் ஒன்றும் பேசாமல் பெட்ரூமுக்குள் சென்றான். உமா வெகு நேரம் தூங்காமல் டிவி பார்த்துக்கொண்டிருந்தது இவனுக்குத் தெரியும். ஒரு மணி நேரம் கழித்து உமா பெட்ரூமுக்குள் வந்தபோது கண்ணன் தூங்கியிருந்தான். அவன் முகத்தில் கண்ணீர் கோடுகள்.

ஐந்தாம் நாள் காலை. சனிக்கிழமை. கண்ணனுக்கு தன் மாடி வீட்டுச் சிறுவன் அரவிந்தின் முகம் மனதில் வந்தது. ஏனென்று புரியவில்லை. அப்புறம் எழுந்து வெளியே வந்தவன் கண்ணில் உமா தென்படவில்லை. மணி எட்டரை ஆகியிருந்தது.

ஆபீஸ் போயிருப்பாள் போல. நேற்று பார்த்த காட்சி நெஞ்சை அடைத்தது. கனத்த இதயத்துடன் ஆபீஸ் கிளம்பினான்.

அன்று ஆபீசில் சுத்தமாக வேலை ஓடவில்லை. ‘சே! என்ன முட்டாள்தனம் பண்ணி விட்டோம்! தடுத்த கையை முறித்திருக்க வேண்டாமா? அப்புறம் அந்த ராஸ்கல் ரமேஷைப் போக விட்டதும் தவறு தான். செருப்பால் அடித்திருக்க வேண்டாமா நாயை?” என்று யோசித்துக்கொண்டிருந்தவன் மனதில் திடீரென்று ஒரு பயம் எழுந்தது. அந்த ரமேஷ் இன்றும் வந்தால்?

உடனே லீவு சொல்லி விட்டு வீட்டுக்கு விரைந்தான். வீடு பூட்டியிருந்தது. அவன் வீட்டு வாசலில் அரவிந்த் விளையாடிக் கொண்டிருந்தான். இவன் சாவியை எடுப்பதைப் பார்த்ததும் “அங்கிள்! இந்தாங்க உங்க வீட்டு சாவி! ஆன்டி கொடுக்கச் சொன்னாங்க. அப்புறம் இந்த லெட்டரையும் கொடுக்கச் சொன்னாங்க.” என்று சாவியையும் ஒரு லெட்டரையும் தந்து விட்டு மீண்டும் விளையாடப் போனான்.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே போன கண்ணனுக்கு பெட்ரூம் கொஞ்சம் காலியாயிருந்ததைப் போல இருந்தது. அலமாரியைத் திறந்து பார்த்தான். நினைத்தது போல உமாவின் பொருட்கள் ஒன்று கூட இல்லை.

கையில் இருந்த லெட்டரைப் பார்த்தான். பிரிக்காமலேயே என்ன எழுதியிருக்கும் என்று யூகித்துவிட்டான். இருந்தாலும் ஒரு confirmationக்காக பிரித்துப் படித்தான். அவன் யூகித்தது போலவே உமா இவனைப் பிரிந்து போவதாக எழுதியிருந்தாள். பல வருஷங்களாகவே ரமேஷும் இவளும் காதலித்தார்களாம். இவள் அப்பா விரும்பாததால் இவனுடன் கல்யாணம் நடந்ததாம். ஆனால் அவளால் ரமேஷை மறக்க முடியவில்லையாம். அதனால் அவள் தான் அவனை இந்தியா வரவழைத்தாளாம். இவளுக்கு ஒரு வேலையும் சொல்லி வைத்திருக்கிறானாம். இவள் விசா விஷயமாகத் தான் சென்னை வந்தானாம். அவனுடன் போகிறாளாம். ரொம்ப சாரியாம். மேலே படிக்க முடியாமல் கண்களை கண்ணீர் மறைத்தது.

ஷோகேஸில் ரமேஷ் கொடுத்த விஸ்கி பாட்டில் கண்களில் பட்டது.

பாதி பாட்டிலுக்கு மேல் மடமடவென்று குடித்தான். வயிறு எரிந்தது. குமட்டிக் கொண்டு வந்தது.

இருந்தாலும் விடாப்பிடியாக கொஞ்ச கொஞ்சமாகக் குடித்தான். போதை தலைக்கேறி எப்போது பெட்ரூமுக்குச் சென்று கட்டிலில் விழுந்தான் என்று அவனுக்கேத் தெரியாது.

திடீரென்று தூக்கம் கலைந்து விழித்தவன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி காலை ஐந்து.

அவன் மனதில் அந்த ஆறாம் நாள் காலையில் வந்தது ஒரு தூக்குக் கயிறு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *