நடந்தது என்ன?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 7,746 
 
 

சந்தடி மிகுந்த நகரம் அது. இரவு பத்து மணிக்கு மேல் இருக்கலாம். அங்கங்கு ஒரு சில வீடுகளில் தொலைக்காட்சி ஒடிக்கொண்டிருப்பது மெதுவாக..மிக மெதுவாக கேட்கிறது.

ஆறு மணிக்கு மேல் கதவை அடைத்தால் உலகமே கதறினாலும் கதவை திறக்காத நான் இப்பொழுது கொஞ்சம் பயத்தில் இருக்கிறேன். காரணம் ரமேஷ் சென்னை சென்றவன் நாளை வருவதாக சற்று முன் போன் செய்தான். ரமேஷ் யாருமல்ல என் அன்பு கணவன் தான். இருந்தாலும் அவன் செய்த்து மிகவும் தப்பு. காலையில் ‘விமானம்’ பிடித்து சென்னை சென்று ஒரு பிசினசை முடித்து விட்டு மாலை விமானத்தில் வந்து விடுவதாக சொன்னவன் இதுவரை வரவில்லை. எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு இந்நேரத்துக்கு போன் செய்கிறான். அவன் போன வேலை முடியவில்லையாம். நாளை மதியம் வந்து விடுவதாக சொன்னான்.

கல்யாணமாகி இந்த இரண்டு வருடத்தில் இதுவரை தனிமையில் இருந்ததில்லை. பகலில் அவனின் பிரிவு அதிகமாக தெரியவில்லை. இப்பொழுதுதான் அதிகமாக தெரிகிறது. கண்ணை மூடி தூங்கலாம் என்றால் படுக்கையில் புரண்டு புறண்டு படுத்தும் உறக்கம் வரவில்லை. ஏதோ ஏதோ எண்ணங்கள். இந்த இரண்டு வருட வாழ்க்கை  சந்தோசமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.

காதல் திருமணம்தான். இருவருமே நகரின் பெரிய கம்பெனி ஒன்றில் அதிகாரிகளாக பணியாற்றி கொண்டிருந்தோம். நிறைய பேருக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி உண்டு. தன் அழகால் இந்த நிவாகத்தில்  சின்ன வயதிலேயே அதிகாரியாகி விட்டாள் என்று. ரமேஷ் மட்டுமே என் திறமையை புரிந்து கொண்டு என்னிடம் பழகினான். ஒருவருக்கு அழகும் திறமையும் இருக்க கூடாதா? அதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். ரமேஷ் அதனை புரிந்து கொண்டு நட்புடன் பழகினான். இரண்டு வருட நட்பு காதலாகி கல்யாணம் செய்து இரண்டு வருடங்களும் ஓடி விட்டது. திருமணம் முடிந்தவுடன் அவன் தனியாக பிசினஸ் செய்வதாக சொல்லி கம்பெனியில் இருந்து விலகி விட்டான். இது வரை அவன் பிசினஸ் நன்றாக செல்வதாகத்தான் சொல்கிறான். இந்த பிளாட் வீடு கூட இருவரும் சேர்ந்து வாங்கியதுதான்.

முன்னறைக்கு வந்து சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து தொலைக்காட்சியை ரிமோட் மூலம் ஓட விட்டு என் பார்வையை அதன் மீது ஓட விட்டு அதில் ஆழ்ந்து போனேன்..

சட்டென ஒரு சத்தம் கேட்டது. ஏதோ “கிளிக்” என்ற சத்தம். கதவு திறக்கும்போது கதவு ஒரு சத்தம் கொடுக்குமே’’கிரீச்….ச்..ச்.. எழுந்து போய் பார்க்க மனம் துடித்தாலும் எழ முடியவில்லை. முன் கதவு பூட்டியிருந்தோமா? வேலை முடிந்து வந்த உடன் கதவை திறந்து உள்ளே வந்தவுடன் பூட்டி விடுவதுதான் வழக்கம். அப்படி பூட்டியது ஞாபக இருக்கிறது. இருந்தாலும் இப்பொழுது எழுந்து போய் பார்க்க அச்சமாக இருந்தது. கதவை திறந்தவுடன் முன்னறைக்கு வந்து விடமுடியாது, இந்த அறைக்குள்ளும் கதவை பூட்டி இருக்கிறது. எதற்கும் செல்லை பக்கத்தில் வைத்துக்கொள்ள கையை சோபவின் அருகில் கொண்டு சென்று துழாவினேன். ஓ..ஷிட்..செல்லை படுக்கை அறையிலேயே வைத்து விட்டேன் போலிருக்கிறது.

இப்பொழுது டக்..டக்..ஓசை முன்னறைக்கு முன் கேட்பது நன்றாக கேட்டது. யாரோ இருக்கிறார்கள். எப்படி பூட்டியிருந்த வீட்டுக்குள் கதவை திறந்து நுழைய முடியும். மனசு பர பரத்தது. உட்கார்ந்த நிலையிலேயே யார்? யாரது? குரல் வெளியிலேயே வர மறுத்தது. தொண்டை தண்ணீர் வற்றுவது நன்கு உணர முடிந்தது. மை காட் இப்பொழுது கூட நேரம் இருக்கிறது உடனே படுக்கை அறைக்கு ஓடிப்போய் “செல்லை” எடுக்கவேண்டும். அவசர போலீஸ் எண் என்ன? மனதுக்குள் எண்ணங்கள் ஓடினாலும் பயத்தில் அப்படியே உட்கார்ந்திருக்கிறேன். ஏதாவது செய், ஏதாவது செய் மனம் அரற்றீனாலும் என்னால் எந்த செய்லையும் செய்யமுடியாமல் அப்படியே மலை போல் உட்கார்ந்திருக்கிறேன்.

இப்பொழுது முன்னறை கதவு கைப்பிடி அங்கும் இங்கும் ஆடுவது இங்கிருந்தே தெரிந்தது. யார்? கூவுகிறேன், உள்ளே வராதே, வாய் விட்டு கூச்சலிடுகிறேன். ஆனால் வார்த்தைகள்தான் வரவில்லை.இன்றோடு தொலைந்தோம். தைரியமெல்லாம் எங்கே போயிற்று என்றே தெரியவில்லை. ஐந்து நிமிடம் கதவு கைப்பிடி அங்கும் இங்கும் ஆடி கடைசியில் “கிளிக்” இந்த சத்தம் கேட்டவுடன் உயிர் போய்விட்டது போல் உணர்ந்தேன்.

கதவு திறக்க ஆஜாபாகுவான உருவம் ஒன்று முகத்தை மறைத்துக்கொண்டு என்னை நோக்கி நடந்து….. நடந்து இப்பொழுது கூட நேரமிருக்கிறது எழுந்து உள்ளறைக்கு ஓடு மனம் அலறுகிறது.

ஹூஹூம்.. உடலை அங்கும் இங்கும் அசைக்கவே முடிவில்லை.

அந்த உருவம் முகத்தை மறைத்திருந்தாலும் அதன் கண்ணின் காணப்பட்ட அந்த கொலை வெறி அப்படியே அசையாமல் பார்க்க வைத்தது. தன் முகுக்கு பின் புறமிருந்து சட்டென உருவிய கத்தியின் பளபளப்பு அந்த வெளிச்சத்தில் மின்னியது. மெதுவாய் மெதுவாய் கத்தியை ஓங்கிக்கொண்டு அருகே வந்து விட்டது.

ஒன்றுமே செய்ய முடியாமல் கடவுளே யாரிவன்? எதற்காக இவனிடம் கத்தி குத்துப்பட்டு சாகவேண்டும், மனம் மன்றாட கை கால்களோ எதுவும் செய்ய முடியாமல் அப்படியே அவனையே பார்த்துக்கொண்டு. அவ்வளவுதானா? ரமேஷ்..ரமேஷ் இனி உன்னை பார்க்கமுடியாது, உன்னோடு வாழமுடியாது, யாரோ ஒரு கொலைகாரன் கையால் குத்து பட்டு இறக்கவேண்டும் என்ற விதியா? கடவுளே.

கொடூரமாய் பார்த்தபடி வந்தவன் அப்படியே என்னை முறைத்தபடி தன் கையில் இருந்த கத்தியை என் வயிற்றை நோக்கி வீசினான்…

“ஐயோ” அப்படியே துள்ளி விழுந்தவள் “ணங்” என்று எதிலோ தலை போய் இடித்துக்கொள்ள.

சட்டென விழித்து பார்த்தேன். சோபாவில் சாய்ந்திருந்த நான் எப்படி தரையில்? பக்கத்திலிருந்த டீப்பாயின் மேல் தலை இடித்திருக்கும்போல் இருக்கிறது, வலி உயிர் போயிற்று. ஜில்..லென்ற குளிர்ச்சியை கை உணர குனிந்து பார்த்தேன். உடம்பு முழுவதும் தெப்ப;ல் தெப்பலாய் நனைந்திருந்தது..

தலை அனிச்சையாய் கதவை பார்க்க பூட்டியிருந்தது தெரிந்தது. எதிரே தட்டென்ற சத்தம் நிமிர்ந்து பார்க்க ஒரு உருவம் கையில் கத்தியுடன் சென்று கொண்டிருப்பது திரையில் தெரிந்தது. அப்படியானால் இவ்வளவு நேரம் தொலைக்காட்சியில் தான் இந்த நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்த்தா? உடல் களைப்பையும் மீறி மெல்ல எழுந்து சென்று தொலைக்காட்சியின் மெயின் சுவிட்சை ஆப் செய்தேன்.

கடவுளே தான் கண்டது கனவா? எவ்வளவு பயங்கரமான கனவு? அப்படியானால் திரையில் ஒருவன் கத்தியுடன் திரும்பி சென்று கொண்டிருந்தானே? புதிதாய் குழப்பம் வந்தது. தான் கண்டது கனவிலா? இல்லை தொலைக்காட்சியிலா? 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *