துரத்துகிறார்கள்; நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு மூச்சு வாங்குகிறது. எங்காவது மறைவிடம் இருக்கிறதா என்று என் கண்கள் உருளுகின்றன. கழுத்து வட்டம் போடுகிறது. ஒடிக்கொண்டே பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். முன்பு ஒருவன் தான் துரத்தி வந்தான். இப்போது நான்கைந்து பேராகக் கூட்டமாகத் தெரிகிறது. அவர்களின் வேகம் அதிகரிக்கிறது. கால்களை எட்டிப்போடுகிறார்கள். என்னால் முடியவில்லை. கீழே விழுந்துவிடுவேன் போல இருக்கிறது. மாட்டிக்கொண்டால் என்னாவேன் என்று நினத்துக் கொண்டே ஓடுகிறேன். எப்படியும் தப்பித்துவிட வேண்டும் என்கிற வெறி எனக்குக் குறையவேயில்லை. அது கால்களுக்குப் பரவியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னால் இவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டிருக்க முடியாது. கிடைக்கிற இடைவெளியில் மீண்டும் திரும்பிப் பார்க்கத் தோன்றுகிறது. பார்க்கிறேன் ஓடிக்கொண்டே; முன்னைவிட இப்போது இன்னும் அதிகம் பேர் இருப்பார்களோ? அப்படித்தான் தெரிகிறது. தெருவில் சும்மா போகிறவன் எல்லாம் இவர்களோடு சேர்ந்து கொண்டு விட்டார்களோ என்று தோன்றுகிறது. அவர்களின் கைகளில் இருக்கிற ஆயுதங்களை இப்போதுதான் பார்க்கிறேன். ஒருவன் கையில் அரிவாளோடு ஓடிவருகிறான். இன்னும் சிலரிடம் வேல்கம்பு இருக்கிறது. இன்னும் சிலரிடம் வெட்டரிவாள், இன்னும் என்னென்னமோ வைத்திருக்கிறார்கள். என்னால் சரியாய்ப் பார்க்கமுடியவில்லை. இன்னும் கொஞ்சதூரம் ஓடினால் கடல் வந்துவிடுமோ? அப்படியாகிவிட்டால் என்னசெய்வது என்று யோசிக்கிறேன். ‘பாவம், பிழைத்துப்போகட்டும்’ என்று விட்டுவிட மாட்டார்களா என்றும் தோன்றுகிறது. அவர்களைப் பார்த்தால் அப்படித்தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களாய் இருந்தால் எப்போதோ அவர்கள் என்னை விட்டுவிட்டுப் போயிருப்பார்கள்.
எவ்வளவு நேரம்தான் ஓடுவது. கால்களில் வலி எடுக்கிறது. காடுகள் இருந்தால் ஓடி மறைந்து விட்டிருக்கலாம். எங்கு பார்த்தாலும் கட்டடங்களாக இருக்கிறது. புளோக்குகளுக்கடியில் புகுந்து ஓடிவிடலாமா என்று ஒரு யோசனை எழுகிறது. மாற்றுப்பாதை ஏதாவது இல்லாமலா இருக்கும். ஒருவேளை முட்டுச்சந்தாக இருந்து விட்டால் வசமாக மாட்டிக்கொண்டுவிடுவோம் என்று என்முடிவை மாற்றிக்கொண்டு ஓடுகிறேன். தொண்டை வறண்டு போய்விட்டது. கொஞ்சதூரத்தில் இன்னொரு கிளைச்சாலை தெரிகிறது. அது நிச்சயமாக முட்டுச் சந்தில்லை என்று படுகிறது. உடனே கால்கள் குறுக்குவாட்டில் ஓடி அந்தச்சாலையை அடைந்துவிடுகிறேன். அவர்கள் பார்வையில் இருந்து தப்பியிருப்பேன் என்ற நம்பிக்கைப் பந்து நெஞ்சுக்குள் உருளுகிறது. திரும்பிப்பார்க்கிறேன். ஐயோ இந்தச்சாலையிலும் ஒரு கூட்டம் என்னைத் துரத்துகிறா? அல்லது ஏதாவது பிரமையா? மீண்டும் திரும்பிப்பார்க்கிறேன். உண்மைதான், பிரமையில்லை. இவர்களும்தான் துரத்துகிறார்கள். இவர்கள் வேறு மாதிரியான மனிதர்கள். சிவப்புச்சட்டை போட்டிருக்கிறார்கள். சற்று சிறிய மனிதர்களாய் இருக்கிறார்கள். கையில் ஏதேதோ வாத்தியங்கள் வைத்திருக்கிறார்கள். ஒலி எழுப்பிக்கொண்டே ஓடிவருகிறார்கள். அந்த ஒலி எனக்குக் கிலியூட்டுகிறது. அவர்களில் ஒருவன் ‘பிடி அவனை’ என்று கத்திக்கொண்டே ஓடிவருகிறான்.
சரி, பழைய கூட்டம் என்னவாயிற்று? பக்கத்துச் சாலையைப் பார்க்கிறேன்..அதோ அவர்களும்தான்..ஐயோ இதென்ன கொடுமை…என்னை இப்போது இரண்டு வெவ்வேறு கூட்டத்தார் துரத்திக்கொண்டிருக்கிறார்களே? ஒருவேளை அவர்களின் கூலிப்படைதான் இந்தச் சிவப்புச் சட்டைக்காரர்களா? இரண்டு படைகளும் என்னை நெருங்கிக்கொண்டே வருகிறார்கள். எல்லாம் என் தலைவிதி. ஒன்றும் புரியாமல் இருக்கிற சக்தியெல்லாம் ஒன்று திரட்டிக்கொண்டு ஓடுகிறேன். ஆயுதங்களோடு துரத்துகிறவர்கள் ‘நாங்கள் இவனைத் துரத்துகிறோம்’ என்று அறிவித்துக் கொண்டே துரத்துகிறார்கள். அது என் குற்ற உணர்வைப் பன்மடங்காக்குகிறது. அந்த உணர்வு மேலோங்குகிறது. எந்திரனில் வருகிற ஒரு ரஜினி பல ரஜினி ஆவதைப்போல துரத்துகிறவர்களின் எண்ணிக்கை பன்மடங்காகிறது. ஆயுதங்களை கைகளில் வைத்திருப்பவர்கள் முன்னால் தலைமை தாங்கி ஓடி வருவதைப் போல ஓடி வருகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகிறவர்கள் கைகளில் ஆயுதங்கள் இல்லை. இவர்கள் வழியில் சேர்ந்து கொண்டிருக்க வேண்டும். எப்படியும் இவர்களிடமிருந்து தப்பி விட வேண்டும் என்ற உறுதி கொஞ்சமும் குறையவில்லை எனக்கு. அந்த உறுதிதான் என்னை விடாமல் இயக்குகிறது. வேறு எந்த நினைப்பும் அற்றுப்போய் ‘ஓடு, ஓடு, ஓடு’ என்கிற நினைப்பே பிரதானமாய் ஒலிக்கிறது.
ஒலிம்பிக்கில் ஓடினாலாவது மெடல் கிடைக்கும். எனக்கு என்ன கிடைக்கும்? தொடர்ந்து எத்தனை நாட்களாக, மாதங்களாக, ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று நினைவில் இல்லை. ஓடிய தூரத்தைக் கணக்கிட்டுப்பார்த்தால் நிச்சயம் அது பூமியின் சுற்றளவைப்போல பலமடங்கு தாண்டியிருக்கும். ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள்தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போது எதிரிகளைப் போல துரத்த ஆரம்பித்துவிட்டார்கள். எப்போது அந்த மாற்றம் நிகழ்ந்தது என்று கோடு கிழிக்கமுடியவில்லை. ஓடுகிற எனக்கு ஏற்படுகிற எதுவும் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை. எனக்கு மூச்சு வாங்கும்; நெஞ்சை அடைக்கும்; கால்கள் துவண்டு போகும்; நாக்கு வறளும்; கண்கள் இருண்டு போகும்; ஆனால் அப்படியொன்றும் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை. மாறாக அவர்களின் பலம் துரத்தத் துரத்த அதிகரிப்பதாகவே பட்டது. அவர்களின் குரலில் பதட்டமில்லை. அவர்களுக்கு மூச்சிரைக்கவில்லை. அது எப்படிச் சாத்தியம் என்ற கேள்விக்கு ஒரு நாள் விடை கிடைத்தது. ஓடிக்கொண்டிருக்கையில் மிக அருகில் அவர்களைப் பார்த்தேன். அவர்கள் கால்களில் மின்சக்கரங்களை மாட்டிக்கொண்டிருந்தார்கள். வெற்றுக்காலோடு ஓடுகிற எனக்கு இத்தனையும் நிகழ்வதில் ஒன்றும் வியப்பில்லை. நிராயுதபாணியாகத் தொடர்கிறது என் ஓட்டம்.
சிவப்புச்சட்டைக் காரர்களின் துரத்தும் பாணி கொஞ்சம் வித்தியாசமானது. அவர்களின் ஒலிச்சத்தம் பயமுறுத்தும். எரிச்சல் மூட்டும். இவர்கள் சற்று சிறிய மனிதர்கள். சந்து பொந்துகளில் இருந்து திடீர்த் திடீரெனத் தோன்றுவார்கள். பெரும்பாலும் ஆயுதங்கள் வைத்திருக்க மாட்டார்கள். சிலநேரங்களில் கூலிப்படைகளாகச் செயல்படுவார்கள். அப்போது என் நிலை மிகவும் மோசமாகிவிடும். அப்படித்தான் இப்போது ஆகிவிட்டது. ‘பிடி, விடாதே பிடி’, ‘இதோ.. இங்கே..’, ‘இதோ நெருங்கி விட்டோம்…’ என்று எல்லாச்சத்தங்களும் என் காதருகில் கேட்கின்றன. ‘இவர்களிடம் மாட்டிக்கொண்டு விடக்கூடாது’ என்கிற மந்திரத்தை முணுமுணுக்கிறேன். அது என் கால்களை இயக்குகிறது. என்கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீளமாகின்றன.
மூச்சிரைப்பு அதிகமாகிறது. வாயை ஆவ்…ஆவ் என்று திறந்து காற்றை உள்வாங்குகிறேன். தொடர்ந்து ஓடச் சக்தி அதிகம் தேவைப்படுகிறது. வேகமாக, இன்னும் வேகமாக ஓடுகிறேன்.
சற்று நேரத்தில் புயல் அடிப்பது போலக் காற்று சுழற்றியடிக்கிறது. பேரிரைச்சல் கேட்கிறது. ஒரு ராட்சத ஹெலிகாப்டர் என்முன்னே மிகத்தாழ்வாகப் பறக்கிறது. அதிலிருந்து பாராசூட் குடைகளைப் பிடித்தபடிபலர் குதிக்கிறார்கள். யாரிவர்கள்? எதற்காகக் குதிக்கிறார்கள்? எனக்குக் குழப்பமாக இருக்கிறது. ஒன்றும் யோசிக்காமல் ஓடுகிறேன். பாராசூட்டில் வந்தவர்கள் குள்ளமனிதர்கள். ஒரு பாரசூட் நெராக என்னை நோக்கி இறங்குகிறது. அதிலிருந்த குள்ளர்கள் என் தோள்களில் தொற்றிக்கொள்கிறார்கள். கைகளை உதறுகிறேன். என் ஓட்டம் தடைப்படுகிறது. ஐயோ என்னைப் பிடித்து விடப்போகிறார்களே என்று திரும்பிப் பார்க்கிறேன். இரண்டு கூட்டமும் மிகக் குறைவான இடைவெளியில் வந்து கொண்டிருக்கிறார்கள். குள்ளர்களை சமாளிப்பது பெரும் பாடாய் இருக்கிறது.
ஒரு ஏழெட்டுப்பேராவது என்மீது இருக்க வேண்டும் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. என் கையின் மேல் தொத்திக் கொண்டிருக்கிற ஒருவனைத்தான் என்னால் பார்க்க முடிகிறது. பேனா அளவே இருக்கிறான் அவன். என் தோள்களில் அவன் ஏறுகிறான். ‘டேய் விடுங்கடா என்னை’ என்று கூச்சல் போட்டுக் கொண்டே ஓடுகிறேன். ஒருவன் என் காதைப் பிடித்திழுக்கிறான். இன்னொருவன் என் கால்களைக் கவ்வி கடிக்கிறான். ‘ஐயோ’ என அலறுகிறேன். ஒருவன் என்கழுத்தில் கால்போட்டுக்கொண்டு முடியைப் பிடித்திழுக்கிறான். இடுப்பில் ஒருவன் நகருகிறான். எனக்குக் கூசுகிறது. கைகளால் பிடித்து இழுத்துத் தூற எறிகிறேன். ‘தொலைந்து போடா நாயே’ என்கிறேன். ஓடிக்கொண்டே இத்தனையும் செய்ய எனக்கு எங்கிருந்து சக்தி வந்தது? வியப்பாக இருக்கிறது. ஒவ்வொருவனாகப் பிடித்து உதறி எறிந்து விட்டு அப்பாடா என்று நினைக்கையில் பேரிரைச்சலோடு மீண்டும் ஹெலிகாப்டர் தாழ்வாகப் பறக்கிறது. இன்னொரு பாராசூட் என்மீது இறங்குகிறது. மீண்டும் குள்ளர்கள். இப்போது என்னால் அவர்களை வேகமாகச் சமாளிக்க முடிகிறது. எல்லாக் குள்ளர்களையும் சீக்கிரமே பிடித்தெறிந்து விட்டேன். தொடர்ந்து ஓடுகிறேன். தலையிலிருந்து வியர்வை வடிகிறது. நெற்றியில் வடிந்து மூக்கில் வடிந்து உதட்டின் வழியாக வாய்க்குள் வழிந்து உப்புக்கரிக்கிறது. தாகம் எடுக்கிறது. வறட்சியைப் போக்கிக்கொள்ள நாக்கால் துளாவுகிறேன். என் சட்டை வியர்வையில் முற்றிலும் நனைந்து விட்டது. சற்று ஓய்வெடுத்தால் தேவலை என்று தோன்றுகிறது. பின்னால் துரத்துகிறவர்கள் நின்றுவிட்டார்களா என்று பார்க்கிறேன். அவர்கள் முன்னைவிட அதிகமானவர்களோடு முன்னைவிட ஆக்ரோசத்துடன், முன்னைவிட அருகில் வந்து கொண்டிருக்கிறார்கள். எனக்குக் கண்களை இருட்டிக்கொண்டு வருகிறது. ‘ஐயோ இதென்ன மிகப்பெரிய பள்ளம்..ஆ..அம்மா..ஆ’.
‘அழகான பூங்கா, வானவில், வண்ணப்பூக்கள், தென்றல் எல்லாம் இருந்தால் எப்படி இருக்கும்? பட்டாம் பூச்சியாக மாறி பூக்களில் தேனுரிஞ்சிக்கொண்டு பறந்து திரிந்தால் எப்படியிருக்கும்? ஆசை அலைகள் நெஞ்சில் மோதுகின்றன. ஒரு ராட்சத எலி என்னை நோக்கி வருகிறது. அந்த எலிக்கு இறக்கைகள் இருக்கின்றன. ஆச்சரியமாய்ப் பார்க்கிறேன். ‘என்ன பார்க்கிறாய்? என்னைப் பிடித்துக்கொள், நீ விரும்பும் அத்தனையும் உனக்குக் காட்டுகிறேன்’ என்கிறது அந்த எலி. அதன் வாலைப் பிடித்துக் கொள்கிறேன். அது பறக்க ஆரம்பிக்கிறது. ஆகா அற்புதம்; ஆனந்தமாய் இருக்கிறது வண்ணப் பூங்காக்களுக்குப் பறந்து போகிறது. அழகழகான வண்ணப்பூக்கள். தொட்டுப்பார்க்கிறேன்; மென்மையாகவும் இருக்கின்றன. எல்லாம் காகிதப் பூக்கள்; நிஜப்பூக்களைப் போலவே அழகாய் இருக்கின்றன. எங்கிருந்தோ சுகந்த மணம் பரவுகிறது. உயரப்பறக்கிறது எலி. அதன் சாகசங்களுக்கு அளவே இல்லை. சரி போதும் என்கிறேன். போதாது போதாது என்கிறது எலி. பிடியைத் தளர்த்துகிறேன். விட்டுவிட்டால் அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்து நொறுங்கிபோவேன் என்பதால் விட முடியவில்லை. எலியோடு நானும் பறந்து கொண்டே இருக்கிறேன்.
‘நன்றாக மாட்டிக்கொண்டான்’ என்று என் காதருகில் யாரோ பேசுவது கேட்கிறது. விழித்துப் பார்க்கிறேன். என்னைச் சுற்றிலும் என்னைத் துரத்திவந்தவர்கள் வட்டமடித்து நிற்கிறார்கள். ஒரே சத்தமாக இருக்கிறது. நடுவில் நான். ஐயோ மாட்டிக்கொண்டு விட்டோமே என்று கவலையாக இருக்கிறது. நான் எலியோடு சுற்றியதெல்லாம் கனவென்று புரிகிறது. ஒருவேளை இவர்கள் உயிரோடு விட்டால் யாரிடமாவது கனா பிரிப்பவர்களிடம் சொல்லி அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். என்னை என்ன செய்யப்போகிறார்களோ என்ற கவலை சூழ்கிறது. ஒருவன் ‘இவனை வெட்டிக் கண்டதுண்டமாக்கிப் போடு’ என்று கத்துகிறான். இன்னொருவன் ‘வேண்டாம் வெட்டாதே! அப்புறம் ஓடுவதற்கு ஒருவரும் இருக்க மாட்டார்கள், யாரைத் துரத்துவது?’ என்று கேள்வி எழுப்புகிறான். அவன் கேள்வியைச் சரி என்பது போல எல்லோரும் பார்க்கிறார்கள். அப்படியென்றால் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. ‘விட்டுவிடலாம்; அவனை ஓடவிட்டு மீண்டும் துரத்தலாம்..’ என்று சொல்லிவிட்டு எல்லோரும் சிரிக்கிறார்கள். எனக்கு வழி விடுவது போலக் கூட்டம் விலகுகிறது. நான் தட்டுத் தடுமாறி எழுந்து நிற்கிறேன். சுற்றிலும் பார்க்கிறேன். ஓடி விடலாமா? என்று எண்ணிக்கொண்டே மெதுவாக நடக்கிறேன். கொஞ்சதூரம் நடந்து பின் மெல்ல ஓட்டமெடுத்து ஓட ஆரம்பிக்கிறேன். இப்போது அவர்கள் துரத்த ஆரம்பிக்கிறார்கள்.
நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன். துரத்தல் என்னை விட்டபாடில்லை. இப்போது ஓடிக்கொண்டே இருப்பது என் பணியாகிவிட்டது. ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டே இருப்பதால், இன்னும் கனாவுக்கான விடையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை.
– 02 ஜூலை, 2012