கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 19,187 
 

மோஹனுக்கு தனியார் கம்பெனி ஒன்றில் காசாளர் வேலை. பத்து வருட சர்வீஸ். ஆனால் கடந்த எட்டு வருடங்களாக அதே குறைந்த சம்பளம்.இவனைவிட நிறையப் படித்துவிட்டு வேலையின்றி தெருவில் அலைந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை தினந்தோறும் சந்திப்பதாலும் தனக்கு கல்யாணமாகி மனைவி, குழந்தை இருப்பதால் இருக்கின்ற வேலையை தொலைத்துவிட்டு நடுத் தெருவில் நின்று விடக்கூடாது என்ற பயத்தினாலும் அவன் சம்பள உயர்வே கேட்டதில்லை. சம்பள உயர்வுகேட்டாலே கொடுக்கத் தயங்கும் முதலாளிகளிடம் கேட்காமல் இருந்தால் எப்படிக் கிடைக்கும்?

மோஹனுக்கு ரொம்ப கஷ்ட ஜிவிதம். கல்யாணமாகி எட்டு வருடங்கள் உருண்டோடி விட்டன.கல்யாணமான அடுத்த வருஷமே ஒரு சிங்கக்குட்டி, பிள்ளையாகப் பிறந்தான். அவன் மனைவி குழந்தைக்கு புது மாதிரியாக நல்ல பெயர் வைக்க வேண்டும் என்றாள்.

“குபேரன்” என்று வைப்போமா!- மோஹன்.

“என்ன கிண்டலா?”- மோஹனின் மனைவி

“நான் தான் குசேலரைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். என் பிள்ளையாவது ஒருவேளை பெயர் தரும் அதிர்ஷ்டத்தில் நல்ல வசதியான வாழ்க்கை கிடைக்கப் பெற மாட்டானா என்ற நப்பாசைதான்”.

“ஒருவேளை நம் அதிர்ஷ்டம் அவனையும் தொற்றிக் கொண்டால் பெயரையே கிண்டல் செய்யும் இந்த உலகம்.”

“அப்படின்னா! என் அப்பாவின் பெயரான ” சுப்பிரமணியன்”! வைப்போமா.”

“தமிழ் நாட்டிலேயே ரொம்பவும் மலிவான பெயர். தெருவிற்கு பத்துப் பேராவது இந்த அழகான தமிழ்ப் பெயரைத் தாங்கிக் கொண்டிருப்பார்கள். தயவு செய்து வேண்டவே வேண்டாம்” என்று கையெடுத்துக் கும்பிட்டாள் மோஹனின் மனைவி. தொடர்ந்து

” சந்தோஷ்” என்ற பெயர் எப்படியிருக்கின்றது?

“பிள்ளையைக் கூப்பிடும் பொழுதாவது” சந்தோஷம்” வாயில் ஒட்டிக் கொள்ளாதா” என்று கூறிக் கொண்டே சரியென்றான் மோஹன்..
சந்தோஷூக்கு மூன்று வயதானதும் “ஸ்கூலில் சேர்க்க வேண்டாமா?” என்று மனைவி கேட்டவுடன்”அதுக்கு என்ன! தெருக் கோடியில் ஒரு வீட்டில் நடந்து கொண்டிருக்கின்றதே “இங்கிலிஷ் ஸ்கூல்” என்ற பெயரில், அதில் சேர்த்து விடுவோமே” என்றான் மோஹன்.

“இல்லீங்க! அந்த செயிண்ட் சேவியர்ஸ் ஸ்கூலில் சேர்த்தால் என்ன!”

“ஐயோ! அது ரொம்ப தூரமாச்சே! யாரு போய் குழந்தையை கொண்டு விட்டு கூட்டி வருவார்கள்.அங்கு பீஸ¤ம் ரொம்ப ஜாஸ்தி”

“LKGயிலேயே சேர்த்தால்தான்அந்த ஸ்கூலில் சீட் கிடைக்குமாம் .பர்ஸ்ட் ஸ்டேண்டர்டுக்கெல்லாம் போனால் சீட் கிடைக்காதாம். வீட்டு ஓனர் மாமி சொன்னார்கள் நாம் தான் கஷ்டப்படுகிறோம் பிள்ளையை யாவது நல்ல ஸ்கூலில் சேர்த்து நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய ஒரே ஆசை. என் நகைகளை முழுவதுமாக விற்றாவது குழந்தையைப் படிக்க வைத்து விடுங்கள்.”

செலவுகளை நினைத்து மனம் கலங்கினாலும் மோஹனுக்கும் உள்ளுர ஆசையிருந்ததால் சரியென்று ஆக வேண்டியதைப் பார்த்தான்.

நாலு வருடம் ஓடிவிட்டது. பிள்ளை செகண்ட் ஸ்டேண்டர்டு படிக்கின்றான். பீஸ், ஆட்டோ இத்யாதிகள் என்று பயங்கரச் செலவு. மனைவியிடம் தாலியைத் தவிர வேறு ஒரு நகை கிடையாது.எல்லாம் பல பேங்குகளில் அடமானத்தில் இருக்கின்றன. ஏல நோட்டீஸ் வரும் பொழுது மட்டும் பணத்தைக் கஷ்டப்பட்டுப் புரட்டி வட்டியைக் கட்டி திருப்பி மட்டும் வைத்துக்கொண்டிருக்கின்றான்.

இந்த நிலையில் தற்பொழுது டெர்ம் பீஸ் கட்டுவதற்கான காலக்கெடு முடிந்து ஒரு வாரமாகிவிட்டது. பணத்தைப் புரட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அவன் மனைவி ஒரு நாள் பீஸ் அடைத்துவிட்டீர்களா என்று கேட்ட பொழுது கட்டியாச்சு என்று பொய்யுரைத்து சமாளித்தான். மிந்தின நாள் சாயந்திரம் ஆபிஸில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது ஸ்கூலிலிருந்து ஒரு மிரட்டல் போன் வந்தது மோஹனுக்கு. இன்னும் ஒரு வாரத்தில் பீஸை அடைக்காவிட்டால் பையனை இடை நீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பிவிடுவோம் என்று. கலங்கிப் போய் விட்ட மோஹன் அடுத்த நாள் பையன் ஸ்கூலுக்குப் போக ஆட்டோவில் ஏறும் வரை காத்திருந்துவிட்டுஅரக்கப் பறக்க குளித்து ரெடியானான்.என்ன அவசரமாகக் கிளம்புகின்றிர்கள்? என்று மனைவி கேட்டவுடன் ஆபிஸில் ஆடிட்டிங் வரப்போகின்றது. வேலைகள் நிறைய இருப்பதால் சீக்கிரம் போக வேண்டும் என்றான். சாப்பாடு பரிமாறிக் கொண்டே ஆட்டோ வாடகை பாக்கியிருக்கின்றதே! அவன் நச்சரிக்கின்றான்! என்றாள். மோஹனுக்கு ஏற்கனவே சுற்றிக் கொண்டிருந்த தலை உடம்பிலிருந்து கழன்று விழுந்து விடுமோ என்ற பயம் உண்டாகி விட்டது. பதிலொன்றும் சொல்லாமல் டிவிஎஸ் 50 ஐ எடுத்துக் கொண்டு ஸ்கூலைப் பார்த்துப் புறப்பட்டான்.
வண்டியில் போகும் பொழுதே எப்பாடுபட்டாவது பீஸ் கட்ட சம்பளத் தேதி வரை வாய்தா வாங்கி விட வேண்டும் என்ற தீர்மானத்துடன் ஸ்கூலை அடைந்தான். காலில் விழாத குறையாக கெஞ்சி மன்றாடி அவன் நினைத்த மாதிரி வாய்தா வாங்கி விட்டு அற்ப நிம்மதியுடன் ஆபிஸ் போய்ச் சேர்ந்தான்.
ஆபிஸில் கவுண்டரில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தபொழுதுபியூன் மாடசாமி வந்து மோஹனிடம் முதலாளி அவசரமாக அழைப்பதாக சொன்னான்.பணத்தையெல்லாம் டிராயரில் வைத்துப் பூட்டி விட்டு முதலாளியைப் பார்க்க ச் சென்றான்.மோஹனைப் பார்த்ததும் முதலாளி அவனிடம் RTO ஆபிஸ் போயிருக்கின்றாயா? என்று கேட்டார். போனதில்லை என்றான். உடனே முதலாளி எனக்கு அவசரமாக திரு நெல் வேலி வரை போக வேண்டியிருக்கின்றது. இந்த வேலையை யாரையும் நம்பி ஒப்படைக்க முடியாது. “நீ உடனே RTO ஆபிஸ் போய் அங்கு ஜான் என்பவனிடம் இந்த கவரைக் கொடுத்துவிட்டு வர வேண்டும்.ஜான் கருப்பாக ஒல்லியாக இருப்பான். வழுக்கைத் தலை. வீரப்பன் மீசை வைத்திருப்பான். கவுண்டரில் முன்னாடி உட்கார்ந்திருப்பான் என்றார். அவனைத் தனியாக அழைத்துக் கொடுக்க வேண்டும் தெரிகிறதா” என்றார். கவரை வாங்கிய மோஹனுக்கு அதில் பணம் இருப்பது போல் தோன்றியது. முதலாளியிடம் கவரை ஒட்டட்டுமா என்று கேட்டான். முதலாளி சிரித்துக் கொண்டே சரியென்றார். அவர் முன்னே கவரை ஒட்டி எடுத்துக் கொண் டான். முதலாளிக்குத்தான் தன் மீது எவ்வளவு நம்பிக்கை என்று பெருமைப் பட்டுக் கொண்டு RTOஆபிஸ் போன மோகன் ஜானை சுலபமாகக் கண்டுபிடித்து விட்டான். அவனருகில் போய் முதலாளியின் பெயரைச் சொன்னவுடன் புன்முறுவல் பூத்து எதிரே அமர்ந்து ஒரு பத்து நிமிடம் காத்திருக்கும்படி சொன்னான். கொஞ்ச நேரம் கழித்து கவுண்டரை விட்டு வெளியே வந்த ஜான் சிரித்துக் கொண்டே “காப்பி சாப்பிடப் போவோமா” என்றான்.நல்ல அனுபவ சாலி என்று எண்ணிய மோஹனுக்கு கூடவே இன்னொன்றும் தோன்றியது. மீன் குஞ்சுக்கு நீஞ்சக் கற்றுக் கொடுக்க வேண்டுமா. அவன் வேலை பார்ப்பது RTO ஆபிஸ் அல்லவா. காப்பிக் கடையை நெருங்கியதும் பையிலிருந்து கவரை மெதுவாக எடுத்து மறைத்து ஜானிடம் கொடுத்தான். சடக் என்று வாங்கி ஜான் தன் பாண்ட் பாக்கெட்டில் லாவகமாக யாரும் பார்ப்பதற்கு முன்பு திணித்துக் கொண்டான். ஜான் காப்பிக்கு ஆர்டர் கொடுக்க ப் புறப்படும் பொழுது மோஹன் வேண்டாம்! காப்பி சாப்பிடும் பழக்கமில்லை என்று நைசாக விடை பெற்றுக் கொண்டு நழுவி விட்டான்.

திரும்பி ஆபிஸிற்கு வந்த பொழுது மணி 12 ஆகியிருந்தது. மோஹன் எப்பொழுதும் காலை 10.30 மணிக்கு முன் வங்கிக்கு சென்று பணத்தை அடைத்துவிட்டு அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் வாங்குவதுடன் அன்று அவன் கம்பெனிக் கணக்கில் பைசல் செய்ய வந்துள்ள செக்குகளின் விபரங்களையும் குறித்துக் கொண்டு விடுவான். 11 மணிக்கு மேல் தான் கூட்டம் வரும் என்பதினால் அவன் வேலைகளை எளிதாக முடித்துக் கொண்டு ஆபிஸ் திரும்பி விடுவான். ஆனால் அன்று ஏற்க னவே மணி 12 தாண்டி விட்ட நிலையில் பணத்தை எண்ணி பண விபரங்களை செலானில் குறித்து வங்கியில் கூட்டத்தில் காத்திருந்து அடைக்க வேண்டும். அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்த மோகனை அக்கவுண்ட்டெண்ட் கூப்பிட்டு கொஞ்சம் பேப்பர்களை கொடுத்து அவைகளை கிளை மேலாளரைப் பார்த்துக் கொடுக்க வேண்டும். வேறு யாரிடமும் கொடுத்துவிட்டு வரக் கூடாது என்று பிரத்யேகமாக சொல்லி அனுப்பினார்.

வங்கியில் பணம் செலுத்துமிடத்தில் பெரிய நீண்ட வரிசை. மோஹன் வங்கி மேலாளரின் அறையைப் பார்த்தான். காலியாக இருந்தது. அவர் வருவதற்குள் பணத்தை அடைத்து விடுவோம் என்று வரிசையில் நின்றான்.வரிசையில் அவன் முன்னால் நின்றிருந்தவன் பதற்றமாக நின்று கொண்டிருந்தான். அவன் கைபேசி அடிக்கடி ஒலி எழுப்பி அவனை அழைத்துக் கொண்டிருந்தது. அவனும் வெளியில் சென்று பேசி விட்டு வந்தான். அவன் பேக்கை திறந்து பணத்தைக் கேஷியரிடம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது கை பேசி மறுபடியும் ஒலி எழுப்பவே பணத்தை கொடுத்துவிட்டு பேக்கை சரியாக மூடாமலேயே பதற்றத்துடன் வெளியில் பாய முயற்சித்தான்.அவசரத்தில் அவன் பேக்கிலிருந்த பொருட்கள் எல்லாம் சிதறின. அதை எடுக்கும் பதற்றத்தில் அவன் மோஹனின் கையை த் தட்டி விட மோஹனின் பையிலிருந்த லோன் பேப்பர்களும் கீழே விழ மோஹன் அதையெல்லாம் அள்ளி தன் பையில் திணித்துக் கொண்டு பணத்தையும் செலானையும் கேஷியரிடம் கொடுக்க முற்பட்டான். கையைத் தட்டிவிட்ட அந்த பதற்றமான ஆளோ முகத்தை ப் பார்த்து ஒரு ‘சாரி’ கூட ச் சொல்லாமல் போன் பேசுவதற்காக வேகமாக வெளியே சென்று விட்டான்.

வங்கி மேலாளரின் அறை காலியாகவே இருந்தது. துணை மேலாளரை விசாரித்ததில் மாலை தான் வருவார் என்று கூறி விட்டார். மோஹன் ஆபிசிற்கு திரும்பி வரும் பொழுது மணி 2 தாண்டியிருந்தது. காலையிலே ஒழுங்காக சாப்பிடாததால் பசி வயிற்றைக் கிள்ளியது. அக்கவுண்டெண்டைப் பார்த்து வங்கி மேலாளர் இல்லை. சாய்ந்திரம் தான் வருவாராம். தான் வேலை முடிந்து சாயந்திரம் போகும் பொழுது பேப்பர்களை கொடுத்துவிட்டு செல்கிறேன் என்று கூறி விட்டு சாப்பிடச் சென்றான்.சாப்பிட்டு வந்ததும் செலான் புக்கை டிராயரில் எடுத்து வைப்பதற்காக கையைவிட்டு பையைதுழாவினான். லோன் பேப்பர் தவிர கையில் வேறெதோ தட்டுப்படவே என்ன என்று பார்க்க வெளியே எடுத்தான்.பார்த்தால் ஏடிஎம் கார்டு. அதெப்படி வந்தது என்று யோசித்தவுடனே பொறி தட்டியது. பதற்றமான ஆள் உண்டாக்கிய களேபரம். கார்டில் பெயரைப் பார்த்தான். “அந்தோனி” என்று போட்டிருந்தது. சரி அவனுடையதாகத்தான் இருக்கும் சாயந்திரம் வங்கிக்குப் போகும் பொழுது வங்கியில் கொடுத்து விடுவோம் என்று முடிவெடுத்து அவன் அமர்ந்திருந்த கேஷ் கேபின் மேஜையின் ஒரத்தில் வைக்கப் போனான். கார்டு தவறி கீழே விழ, குனிந்து கார்டை எடுக்கும் பொழுது பார்த்தால் கார்டின் பின் பக்கத்தில் ஸ்கெட்ச் பென்னால் ரகசிய நம்பர் குறிக்கப் பட்டிருந்தது. மோஹனுக்கு அந்த வங்கியில் அவன் கணக்கிற்கு ஏடிஎம் கார்டு கொடுக்கப்பட்டு ஆரம்பத்தில் பயன் படுத்தியுள்ளான். அதன்பின்அவன் சம்பளத்தை விட அதிகமான செலவுகள் வரிசையில் காத்துக் கொண்டிருப்பதால் வங்கிக் கணக்கில் பணம் கட்டுவதுமில்லை. ஏடிஎம் கார்டின் பயன்பாடும் கிடையாது. ஆனாலும் கார்டில் பின்னால் குறிக்கப்பட்டுள்ள எண்கள் அதனுடைய் பின் (PIN) என்று தெரிந்து விட்டது. அவனுக்குள்ள பண நெருக்கடி அவனைக் குருரமாக நினைக்க வைத்தது. இதிலிருந்து பணம் எடுத்து பீஸைக் கட்டிவிட்டு பின்னால் திருப்பிக் கொடுத்து விடுவோமா என்று யோசிக்க ஆரம்பித்தான். கார்டை எடுத்து தன் ஹேண்ட் பேக்கில் போட்டுக் கொண்டான்.

அக்கவுண்டெண்டிடம் போய் வங்கி மேலாளர் வங்கிக்கு வந்து விட்டாரா என்று போனில் விசாரிக்கச் சொன்னான்.விசாரித்ததில் அவர் அடுத்த நாள் தான் வருவர் என்றா¢ந்ததும் மள மளவென்று வேலைகளை முடித்து விட்டு வேகமாக வீட்டிற்கு புறப்பட்டான். மோஹன். ஏடிஎம் அறையில் கெமரா உண்டென்றும் அது அங்கு வரும் அனைவரையும் மற்றும் நிகழ்வுகளையும் சதா படம் பிடித்துக் கொண்டேயிருக்கு மென்றும் அதனால் தொப்பி அணிந்து கொண்டு தலையை கவிழ்த்துக் கொண்டு கெமராவின் கண்களுக்கு முகத்தைக் காட்டாமல் திருட முயற்சிக்கின்றார்கள் என்றும் சொல்லக் கேட்டிருக்கின்றான்.

வீட்டிற்குள் போனதும் பரணிலுள்ள பெட்டிகளையெல்லாம் இறக்கி விடாமல் தேடி அவன் பழைய தொப்பியையும் ரொம்ப ப் பழைய அவன் சட்டை ஒன்றையும் எடுத்து சத்தம் போடாமல் யாருக்கும் தெரியாமல் அவன் வண்டியிலுள்ள ஸைடு பாக்ஸில் போட்டுவிட்டு வந்து விட்டான்.

நன்கு இருட்டிய பிறகு நண்பனின் வீட்டிற்குப் போய்விட்டு வருவதாக ச் சொல்லிவிட்டு ஏடிஎம் கார்டுடன் வண்டியில் புறப்பட்டான். போகும் பொழுதே ஒதுக்கு புறமான ஏடிஎமை தேர்வு செய்து வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு சட்டையை மாற்றி பழைய சட்டையை அணிந்து கொண்டுதலையில் தொப்பியையும் அணிந்து கொண்டு கார்டில் பின்னையும்(PIN) சரி பார்த்து நன்றாக மனனம் செய்துவிட்டு தொப்பியை நன்றாக முகம் மறையும்படி இழுத்து விட்டுக் கொண்டு தலையை நன்றாகக் கவிழ்த்துக் கொண்டு ஏடிஎம் அறைக்குள் சென்று கார்டை இய்ந்திரத்தில் சொருகினான்.இயந்திரம் கார்டை முழுங்கி விட்டு பின்னை(PIN) க் கேட்டது. மோஹன் பின்னை(PIN) இயந்திரத்தில் பதிவு செய்தவுடன் மேற் கொண்டு என்ன வேண்டும் என்று கேட்க அவன் ஏற்கனவே தீர்மானம் பண்ணி வைத்திருந்தபடி பேலன்ஸ் எவ்வளவு? என்று கேட்டான். இயந்திரம் தனது திரையில் Rs.19830 இருப்பதாகத் தெரிவித்தது.உறுதி செய்யும் விதமாக தொகையை ஒரு சிறிய காகிதத்தில் பதிவு செய்து அவனிடம் உமிழ்ந்தது.•பிஸ் தொகையை மட்டும் எடுப்போமா அல்லது கொஞ்சம் அதிகமாக எடுக்கலாமா என்று குழ்ம்பிக் கொண்டிருந்த வேளையில் அறையின் வாசலில் நிழலாடுவது போல் தோன்ற மோஹன் திரும்பிப் பார்க்கவும் வாசலில் நிற்பவன் வெளியில் வா என்று கையசைப்பது தெரிந்தது மோஹன் பதற்றத்துடன் பட்டனை அமுக்கி கார்டையும் இயந்திரம் உமிழ்ந்த காகிதத்தையும் எடுத்துக் கொண்டு அவசரமாக வெளியே வந்தான்.

நின்றிருந்த ஆளுக்கு என்ன அவசரமோ சடார் என்று உள்ளே பாய்ந்தான். மோஹன் வெளியே நின்று யோசனை செய்ய ஆரம்பித்தான் மொத்தத் தொகையையும் எடுத்து பீஸ் கட்டிவிட்டு மீதி பணத்தில் மனைவியுடைய ஒரு நகையையாவது மீட்டுக் கொடுப்போமா. மூளியாக நிற்கின்றாளே என்று நினைத்தான். உடனே மனைவி பணம் எங்கிருந்து எப்படிக் கிடைத்தது? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என்ற பயம் கவ்வியது. புத்தி குறுக்கே புகுந்து மீதிப் பணத்தை எல்லா நகைக் கடன் கணக்குகளிலும் கொஞ்சம் கொஞ்சம் கட்டி விட்டால் பின்னால் திருப்ப ஏதுவாக இருக்கும் என்றது.
மோஹன் தீர்மானத்திற்கு வந்த அதே சமயம் ஏடிஎம் அறைக்கு உள்ளே அவசரமாக சென்றிருந்த நபர் திட்டிக் கொண்டே வெளியே வந்தான். பணமில்லை. வங்கியில் வேலை பார்க்கின்றார்களா? அல்லது தூங்குகின்றார்களா?. என்று தெரியவில்லை. எல்லாம் தண்ட சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவசரத்துக்கு பணம் எடுக்க முடியவில்லை. கேட்கவும் நாதி யில்லை என்று சலித்துக் கொண்டே வேகமாக நடை போட்டான். மோஹன் என்ன செய்யலாம்? என்று ஒரு நிமிடம் யோசித்தான் இன்னொரு ஏடிஎம் ஞாபகத்திற்கு வந்தது. அதுவும் ஒதுக்குபுறமாக உள்ளது. வண்டியை எடுத்துக்கொண்டு அங்கு போனால் நல்லவேளையாக அங்கு யாருமில்லை. தொப்பியை நன்றாக இழுத்துவிட்டுக் கொண்டு தலையயும் கவிழ்த்துக் கொண்டுஇயந்திரத்தில் கார்டை சொருகினான். இயந்திரம் கார்டை முழுங்கியவுடன் சிவப்பு நிறத்தில் ஆங்கிலத்தில் பளிச் பளிச் என்று “கார்டு தொலைந்து விட்டதாக புகார்.வங்கி மேலாளரை அணுகவும்” என்று வந்தது. மோஹனுக்கு பயம் அடிவயிற்றைப் பிசைந்தது.வேகமாக வெளியே வந்தான். உடம்பு குப் என்று வியர்த்து விட்டது. கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது.வண்டியை எடுத்துக் கொண்டு படு வேகமாக வீடு வந்து சேர்ந்தான்.

சந்தோஷ் மோஹனைப் பார்த்ததும் ஹை! தொப்பி! என்றான்.அப்பொழுது தான் தலையில் தொப்பியிருப்பது ஞாபகத்திற்கு வந்தது.அவன் மனைவியும் தொப்பியைப் பார்த்துவிட்டு என்னங்க! பழைய தொப்பியை அணிந்து கொண்டிருக்கின்றீர்கள், சட்டையும் பழையதாக இருக்கிறது.”இதையா போட்டுக் கொண்டு போனீர்கள்” என்றாள். “ரொம்ப நாளாச்சே! போட்டுப் பார்ப்போமே” என்று போட்டுக் கொண்டேன். “எப்படியிருக்கின்றது?” என்று கேட்டு நிலைமையை சமாளித்தான். முகம் ஒரு மாதிரியாக இருந்ததால் “உடம்பு சரியில்லையா? டாக்டரிடம் போவோமா?” என்றாள் அவன் மனைவி.பதில் எதுவும் சொல்லாமல் படுக்கையில் போய் விழுந்து கண்ணை மூடிக் கொண்டான்.

ஏடிஎம் அறையிலுள்ள வட்டமான கெமரா கண் முன்னே வந்தது.அதன் வட்டமான கண்ணை உருட்டிக் கொண்டு டேய்! திருட்டுப் பயலே! என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய். உன்னை என்ன செய்கிறேன் பார் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது. அவன் மனதோ ஏதெதோ வேண்டாத கற்பனைகளை எல்லாம் செய்ய ஆரம்பித்தது. பழைய சட்டையும் தொப்பியும் காப்பாற்றி விடுமா என்ன? அவன் வங்கியில் கேஷ் கவுண்டரின் முன்னால் நீண்ட வரிசையில் அந்த ஆளுக்கு பின்னால் நிற்பதைத் தான் வங்கியிலுள்ள கெமரா வெகு அழகாக படம் பிடித்திருக்குமே என்று நினைத்ததும் உடம்பு மறுபடியும் குப் என்று வியர்க்க ஆரம்பித்தது. அடுத்த நாள் குட்டு வெளியானதும் போலீஸ் வந்து கைது செயயப் போகின்றது.முதலாளி ஐயோ! இவனைப் போய் நல்லவன் என்று நம்பினேனே ! என்று சொல்லிவிட்டு சீட்டைக் கிழிக்கப் போகின்றார். வேலையும் இல்லாமல் மனைவி குழந்தையுடன் நடுத் தெருவில் நிற்கப் போகின்றோம். திருடனுக்கு இனிமேல் எவன் வேலை தருவான். புத்தி சொல்லியது பணம் ஒன்றும் திருடல்லையே என்று. மனது சொல்லியது. திருட முயற்சித்தவனும் திருடன் தானே என்று.அடுத்த நாள் விடியாமலே போய்விடக் கூடாதா என்று கடவுளிடம் வேண்ட வேண்டும் போல் தோன்றியது.தூங்க முடியவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். “தூக்கம் வராமல் கஷ்டப்படுகின்றிர்களே . உடம்பில் ஏதாவது உபாதை இருக்கின்றதா “என்றாள் மோஹனின் மனைவி. “ஒன்றுமில்லை” என்று சொன்னவன் கண்ணை மூடிக் கொண்டு அசையாமல் படுப்பது என்று முடிவெடுத்தான்.

காலையில் மோஹனின் கண்கள் செக்கக் குண்டாக செர்ரிப் பழம் போல் இருந்தது.உங்களைப் “பார்த்தால் நன்றாக இல்லையே! லீவு போடுங்கள். டாக்டரிடம் போவோம்” என்றாள் மனைவி. மோஹனின் கஷ்டம் அவனுக்குத் தானே தெரியும். எந்தப் பேச்சும் பேசாமல் பயந்து கொண்டே ஆபிஸிற்கு போய்ச் சேர்ந்தான்.அக்கவுண்டெண்ட் மோஹனைப் பார்த்ததும் உடம்பு சரியில்லையா என்றார். “ஆமாம். சார். இன்று பணம் அடைக்க வங்கிக்கு வேறு யாரையாவது அனுப்புங்கள்” என்று விண்ணப்பித்தான்.முதலாளியிடம் சொல்லிவிடடு ஏற்பாடு செய்கிறேன் என்றார். மனம்முழுவதும் எதெதோ பயங்கள் சுழன்று வந்தன
அன்று வங்கிக்கு அனுப்பப்பட்ட மகேஷ் திரும்ப வந்ததும் ஏதாவது பேசுகின்றானா என்று கூர்ந்து கவனித்தான். அவனிடம் போய் எதுவும் கேட்கவும் பயமாக இருந்தது. அப்பன் குதிர்க்குள்ளில்லை என்றாகிவிடக்கூடாதே என்ற நடுக்கம் வேறு. அன்று எப்படியோ வேலைகளை முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான் . முகம் பேயறைந்தது போல் இருந்தது. மனைவி கேட்ட எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் கண்ணை மூடிப் படுத்து விட்டான். அடுத்த நாளும் நடைப் பிணமாக ஆபிஸ் போய் வந்தான். இரண்டு நாட்கள் ஓடிவிட்டது.அவன் பயந்ததைப் போல் எந்த அசம்பாவிதங்களும் நடக்காததால் மனப் பாரம் கொஞ்சம் குறைவது போல் தோன்றியது. மறு நாள் கொஞ்சம் தெளிவுடன் ஆபிஸ் சென்றான். ஆனால் வங்கிக்கு செல்வதைத் தவிர்த்தான். மதியம் சாப்பாட்டிற்கு பின் முதலாளி ஒரு போலிஸ் இன்ஸ் பெக்டருடன் சிரித்துப் பேசிக் கொண்டே வந்து அவர் அறைக்குள் சென்று விட்டார். மோஹனுக்கு உயிர் அவனிடத்திலில்லை.மனது பட பட வென்று அடித்துக் கொண்டிருந்தது. தினம் தினம் படுகின்ற அவஸ்தைகளைப் பார்க்கும் பொழுது செத்து விடலாமா என்று தோன்றியது. நேரம் ஓடிக் கொண்டே இருந்தது.இருப்புக் கொள்ளவிலலை. இன்ஸ் பெக்டர் வந்து அவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிப் போவாரா அங்கு வைத்து அடிக்க முற்படுவார்களா.அல்லது வங்கிக்கு கூட்டிச் சென்று எல்லோர் முன்னிலையும் விசாரிப்பார்களா.எவ்வளவுஅவமானம்.நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருக்கின்றதே. இன்ஸ் பெக்டர் வந்ததும் ஒன்று விடாமல் எல்லா உண்மைகளையும் சொல்லி விட வேண்டும். அதற்கு பின் அவர்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கட்டும். வேலை போய் நடுத் தெருவில் நிற்கப் போவது நிச்சயம். மனைவியையும் குழந்தையையும் நினைத்து மனது கதறியது. கொஞ்ச நேரத்தில் இன்ஸ் பெக்டர் முதலாளி அறையை விட்டு வெளியே வந்தார்.கூடவே முதலாளி வாசல் வரை சென்று அவரை வழியனுப்பி வைத்தார். மோஹனுக்கு என்ன நடக்கின்றது என்று ஒன்றும் புரியவில்லை. மனதிலிருந்த படபடப்பு சிறிது அடங்கியதும் அக்கவுண்டெண்டிடம் பேச்சுக் கொடுத்து இன்ஸ் பெக்டர் பற்றி நாசுக்காக விசாரித்தான். இன்ஸ் பெக்டரும் முதலாளியும் ஓரே பள்ளியில் பத்து வருடங்களுக்கு மேல் சேர்ந்து படித்தவர்கள்.ரொம்ப நெருங்கிய நண்பர்காளானபடியால் இப்பொழுதுதான் அந்த இன்ஸ் பெக்டர் இந்த ஊருக்கு மாற்றலாகி வந்துள்ளபடியால் முதலாளியைப் பார்த்துப் போக வந்ததாக கூறினார். மோஹனுக்கு போன உயிர் திரும்ப வந்தது.

அடுத்த நாள் காலை மோஹன் ஆபிஸ¤க்குள் நுழையும் பொழுதே மகேஷ் அக்கவுண்ட்டெண்டிடம் சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. அவன் தினமும் வங்கிக்கு பணம் அடைக்கச் செல்ல வேண்டியிருப்பதால் அவன் செய்ய வேண்டிய வேலைகளை முடிக்க முடியாமல் தவிப்பதாகவும் முடிந்தால் அன்று மோஹனையே வங்கிக்கு அனுப்ப வேண்டும் என்று மனுப் போட்டான்.மோஹன் இருக்கையில் கொண்டு போய் அவன் பேக்கை வைத்து விட்டு வருவதற்குள் மகேஷ் மெல்ல நழுவி விட்டான். அக்கவுண்டெண்ட் மோஹனிடம் உடம்பு பரவாயில்லையா என்று கேட்டுக் கொண்டே அவனிடம் வங்கிக்கு போக வேண்டும் என்று நாசுக்காக் உத்தரவிட்டு விட்டு வேறு வேலை பார்க்கப் போய் விட்டார்.சீக்கிரம் போனால் வங்கியில் கூட்டம் இருக்காது என்பதினால் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான் மோஹன் . பணத்தை அடைத்துவிட்டு அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் மற்றும் அன்று வந்துள்ள செக்குகளின் விபரங்களை வாங்க துணை மேலாளரின் அருகில் மெல்லச் சென்று பவ்யமாக வணக்கம் வைத்தான். அதே சமயம் அவன் பின்னாலிருந்து “குட் மார்னிங் சார்” என்று வேறு ஒரு குரல் ஒலிக்கவே சடாரென்று திரும்பிப் பார்த்த மோஹனுக்கு இரத்தம் உறைந்தது போலாகிவிட்டது. அவன் பின்னால் அன்று களேபரம் பண்ணிய அதே ‘அந்தோனி’ நின்று கொண்டிருந்தான். முகமெல்லாம் வியர்க்க மோஹன் அந்தோனியைப் பார்த்தான். ஆனால் மோஹனைப் பார்த்த அந்தோனியின் பார்வையில் எந்த மாற்றமுமில்லை.

துணை மேலாளர் அவனிடம் “உங்களுக்கு புதிய கார்டு வந்து விட்டது. நல்ல வேளை அன்று சரியான சமயத்தில் வந்து கார்டு தொலைந்த விபரத்தை சொன்னதால் நாங்களும் உடனே அந்த கார்டை செயலிழ்க்க செய்தோம்.உங்கள் பணமும் தப்பியது” பணம் திருடு போயிருந்தால் கட்டாயம் போலிஸில் புகார் அளிக்க வேண்டும். அவர்கள் இதுவரைக்கும் எந்தத்திருட்டையும் கண்டுபிடித்ததில்லை.ஆனால் அவர்கள் படுத்தும் பாடு ஏண்டா! புகார் அளித்தோமென்று நொந்து கொள்ளும் அளவிற்கு நமக்கு வேதனைகளை உண்டாக்கும்.

போலீஸ் ஸ்டேஷன் பக்கமே போகக் கூடாது என்று தோன்ற வைக்கும்.”

அந்தோனி- “நல்ல வேளை! அன்று சாயந்திரம் எனக்குப் பணம் தேவைப் பட்டதால் அந்தக் கார்டைத் தேடினேன். கிடைககவில்லை என்றதும் தான் பதற்றத்துடன் உங்களிடம் ஓடி வந்தேன். நீங்கள் ஆபிஸைப் பூட்டியிருப்பீர்களோ என்ற பயமும் இருந்தது. எல்லாம் என் நல்ல நேரம். பணத்திற்கு எந்த மோசமும் வரவில்லை” என்றான் துணை மேலாளர் அவனிடம் கார்டில் தயவு செய்து ‘பின்’ நம்பரை எழுதி வைக்காதீர்கள். நாங்களும் பலமுறை எல்லோரிடமும் சொல்லிவிட்டோம். கார்டில் ‘பின்’ நம்பரைக் குறிப்பது திருடனை வீட்டிற்குள் அழைத்து அவனிடம் பீரோ சாவியைக் கொடுப்பது போல். பணம் போயிருந்தால் லபோ லபோ என்று அடித்துக் கொள்வீர்கள்.இந்த் ரிஜிஸ்தரில் கையெழுத்துப் போட்டுவிட்டு கார்டைப் பெற்றுக் கொள்ளுங்கள்.உங்களது பழைய கார்டு செயலிழக்கப் பட்டதுடன் அந்தக் கார்டை அழித்தும் ஆகி விட்டது. இனிமேலாவது ஜாக்ரதையாக இருங்கள். என்று முடித்தார். அந்தோனி ரிஜிஸ்தரில் கையெழுத்து போட்டுவிட்டு புதுக் கார்டையும் பெற்றுக் கொண்டு மோஹனையும் அங்குள்ள மற்றவர்களயும் பார்த்து சிரித்துக் கொண்டே வெளியேறினான்.மோஹன் நிம்மதி என்ற விலைமதிப்பற்ற பொக்கிஷம் திரும்பக் கிடைககப் பெற்ற சந்தோஷத்துடன் வங்கியிலிருந்து ஆபிஸிக்கு கிளம்பிப் போனான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *