கொலைதூரப் பயணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 17,775 
 
 

அந்த இரண்டு கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக; ஒன்றை ஒன்று முந்திக்கொண்டும், பிந்திக்கொண்டும் நெடுஞ்சாலையில் சீறிப்பாய்ந்து கொண்டு போய்க்கொண்டிருந்தன. உல்லாசப் பயணமாக நானூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த கரைனாடு என்ற ஊரை நோக்கி அருணும் அவன் நண்பர்கள் மூன்று பேரும் உற்சாகம் மேலிட பயணித்துக்கொடிருந்தனர். அருணின் காரில் சர்வேஸ்வரன் அமர்ந்திருந்தான். இன்னொரு காரில் செந்திலும்,,சதாவும்,பயணித்தனர். அருணும், செந்திலும், காரோட்டுவதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ளும் போட்டி நடந்து கொண்டிருந்த வேளையில் அருணின் கார் ஒரு மூதாட்டியின் கொய்யாப்பழக் கூடையை இடித்துத் தள்ளியதால், அம்மூதாட்டியும் கீழே தரையில் விழுந்து விட்டார்கள். பழங்களும் சாலை முழுதும் இறைந்து சிதறிவிட்டன.

உடனேயே காரை நிறுத்திய அருண், மூதாட்டியைத் தூக்கி நிறுத்திவிட்டு, பின்பு பழங்களைக் குனிந்து பொறுக்கத் துவங்கினான். “பொறுத்துக் கொள்ளுங்கள். பாட்டி” என்றவனைப் பாட்டி கெட்டவார்த்தைகள் கூறித் திட்டத் துவங்கினார்கள். “அவ்வளவு அவசரம்ம்ம்மா போறியே.! சாவரத்துக்கு அப்படி என்னடா அவசரம்? எங்கயாவது போய் முட்டிக்கொண்டுதான் சாகப்போகிறாய்.” இவ்வாறு அவர்கள் சபிக்கத் தொடங்கியதைக் கேட்ட நண்பர்கள் அனைவருக்கும் கொஞ்சம் வருத்தமாகப் போய் விட்டது. அவர்கள், “பாட்டி! அவனுக்கு நாளைக்குப் பிறந்த நாள். அப்படி எல்லாம் திட்டாமல், வாழ்த்துங்கள்” என்று சொல்லவே, பாட்டியும் “நீண்ட நாள் வாழனும் நீ”.என்று சொல்லிக் கொண்டே அருண் நீட்டிய ஐனூறு ரூபாய்களை வாங்கிக்கொண்டார்கள்.

அதன் பிறகு கார்கள், மெதுவாகவே சென்றன. அரட்டை, சிரிப்புசத்தம் எல்லாம் அடங்கிப் போய்விட்டன. கரைனாடு, அருணனனின் சொந்த ஊர். அங்கு, அருணனின் அப்பா, அருமைநாயகத்திற்கு பெரிய வீடும், தோட்டங்களும் இருக்கின்றன. அவற்றை கவனிக்க என்று மலையப்பனை நியமித்திருந்தார்.. அருமைநாயகத்தின் குடும்பம் அங்கு வந்து தங்கும் பொழுதெல்லாம், மலையப்பனின் மனைவி மங்கை, வீட்டை சுத்தம் செய்து, சமைத்து வைப்பாள். அருணனின் நண்பர்கள், அவன் பிறந்த நாளுக்கு கிராமத்தில் வந்து தங்கி கொண்டாட விருப்பம் தெரிவிக்கவே, அருமைநாயகம் மலையப்பனிடம் ஏற்பாடுகள் செய்து கொடுக்கும்படி தெரிவித்திருந்தார்.

அருமைநாயகத்தின் சென்னை வீடும் அலுவலகமும், பலமாடிக்கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதியில் அருகருகே அமைந்திருந்தது. அருணும் படிப்பை முடித்ததும் அவருக்குத் துணையாக அலுவலக வேலைகளைக் கவனித்து வர ஆரம்பித்தான். அவனுக்கு; கிராமம், விவசாயம் என்பனவற்றில் ஒரு ஈர்ப்பு இருந்ததால், நண்பர்களுடன் அவ்வப்போது தங்கள் பண்ணை வீட்டில் வந்து தங்கி மகிழ்வான். தன் பிறந்த நாளுக்கும் அவ்வாறே அப்பாவின் சம்மதத்தோடு நண்பர்களுடன் கிளம்பிவிட்டான்.

அன்று மாலை, எப்பொழுதும் போல அருமைநாயகத்தின் அலுவலகத்திற்கு மாலுக்குட்டி தன் தாத்தாவுடன் வந்திருந்தாள். மாலுக்குட்டி; அருமைநாயகத்தின் ஆத்ம நண்பரான இன்ஸ்பெக்டர் பரசுவின் செல்ல மகள். தினமும் பள்ளியிலிருந்து திரும்பியதும், தனது வீட்டில் ஏதோ கொஞ்சம் கொரித்துவிட்டு, தன் தாத்தாவை கூட்டிக்கொண்டு, முதல் வேலையாக அருமைநாயகத்தின் அலுவலகம் வந்து, ஒரு அரை மணி நேரமாவது லூட்டியடித்த பின்பே திரும்பிப் போவாள். சி.சி.டி.வி. காட்சிகளைப் பார்த்து ரசிப்பது அவளது அன்றாட பொழுது போக்கு. அன்றும் மூக்கு நுனியில் கண்ணாடியை மாட்டியபடி வலம் வந்த உதவியாளர் மாரியை டி. வி யில் பார்த்து; “அவரோட மூக்குக்கண்ணாடியை காப்பியில் ரின்ஸ் பண்ணிவிட்டுதான் எல்லோருக்கும் காப்பியைக் கொடுக்கப்போகிறார்.” என்று கமண்ட் அடித்தவாறு சிரித்துக் கொண்டிருந்தாள்.

கேட் அருகே முக்காலியில் அமர்ந்துகொண்டிருந்த, சுந்தரத்தைப் பார்த்துக் கொண்டே, “அங்கிள்! அங்கிள்! உங்கள் போனிலிருந்து சுந்தரம் தாத்தாவுக்கு ஒரு கால் கொடுங்கள்.” என்றாள். அருமைநாயகமும் புன்னகை செய்தபடி சுந்தரத்திற்கு கால் செய்தார். போனை எடுத்த சுந்தரம், போனை எடுத்து காதில் வைத்து, அருமைநாயகம் பேசுகிறார் என்று தெரிந்தவுடனேயே எழுந்து நின்று போனுக்கு ஒரு சல்யூட் அடித்தார். அதைப் பார்த்த மாலுக்குட்டி, சிரிப்பை அடக்க முடியாமல் வாயைப் பொத்திக்கொண்டாள். அப்புறம் டைப்பிஸ்ட் லாரா, தன் கைப்பயிலிருந்து, கண்ணாடியை எடுத்து உதட்டில் லிப்ஸ்டிக் தடவிக்கொண்டிருந்தாள்.” இதுக்குதான் சம்பளம் கொடுக்கிறீங்களா அங்கிள்? எனக் கேட்டுவிட்டு அதுக்கு மேச் சென்ஸ் கூட இல்லை பாருங்கள். அதன் ட்ரஸ் கலருக்கு, ரோஸ்தான் எடுப்பாக இருக்கும்”.

“மாலுக்குட்டி! நீ வயதுக்கு மேச்சா நடந்து கொள்ளனும் தெரியுமா?” என்று சொன்ன தாத்தாவை அலட்சியம் செய்து, “அருண் அண்ணா இல்லாமல் ரொம்பவே வைக்கோல் அடிக்குது. நாங்கள் வரோம் அங்கிள்” என்று சொல்லி விடை பெற்றாள். அவள் போன பின் புயல் அடித்து ஓய்ந்தது போலவே அந்த சுற்றுப்புறம் இருந்தது எனலாம். வைக்கோல் என்றால் அவள் மொழியில் போர் என்பதாகும்.

மறுநாள், விடியற்காலையில் எழுந்து கொண்டதுமே அருமைநாயகமும் அவரது மனைவி, தர்மாவும் அருணுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல போன் போட்டார்கள். மறுமுனையில், சர்வேஸ்வரன் பேசினான். “ஐயோ அங்கிள், உடனே புறப்பட்டு வாருங்கள். அருண் இங்கே கத்தியால் குத்தப்பட்டு கிடக்கிறான்.” இப்பதான். சீக்கிரம் வாங்க அங்கிள்.”

அருமைநாயகம், மனைவியை அழைத்துக்கொண்டு உடனே புறப்பட்டார். போகும் வழியில் பரசுவிற்கு போன் போட்டு செய்தியைச் சொன்னார். பரசுவும், “அப்படியா. நானும், கரைனாட்டுக்கு பக்கத்து ஊருக்கு ஒரு திருவிழாவுக்குதான் டூட்டி நிமித்தம் வந்திருக்கிறேன். உடனேயே போய்ப் பார்க்கிறேன்.” என்றார்.

கொஞ்ச நேரத்திலேயே மறுபடியும் பரசு போனில் பேசினார். “அருண் கோமா ஸ்டேஜுக்குப் போய்விட்டதல், இங்கு அருணைப் பார்த்த உள்ளூர் மருத்துவர், ‘சென்னைக்கு உடனடியாக எடுத்துச் செல்லும்படி’ சொன்னதால், நான் அருணை சென்னைக்கே ஆம்புலன்சில் அழைத்து வருகிறேன். நம் நண்பரின் ‘மயிலன் மருத்துவ மனையில்’ ஏற்பாடுகளுக்கு சொல்லிவிட்டேன்.” என்பதாகச் சொன்னதால், திரும்ப வீட்டிற்கே வந்துவிட்டனர். மருத்துவமனைக்கு அருண் வந்ததும், அவன் நிலையைப் பார்த்த, பெற்றோர்களின் நிலை சொல்லில் அடங்கா பரிதாபத்துக்குரியதான துக்கமாக இருந்தது. வயது இருபத்தேழு. நல்லகுணம். அறிவாளி, பணக்கார வீட்டுப் பிள்ளை. நல்ல அழகும்கூட. ஆயுளுக்கு மட்டும் குறை வைத்து விடாதே இறைவா. என்று தெரிந்தவர்கள் அனைவரும் வேண்டிக்கொள்ளவே செய்தனர்.

மலையப்பன், மங்கை, அருணின் நண்பர்களான சர்வேஸ்வரன், சதா, செந்தில் இவர்கள் யாவரும் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனில் இருக்க வைக்கப்பட்டிருந்தனர். கரைனாடு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பரசு, சென்னைக்கும், கரைனாட்டுக்குமாக இந்த கேஸ் விஷயமாக அலைந்து கொண்டிருந்தார். நிறைய விஷயங்களை விசாரணையின் மூலம் சேகரித்தார்.

மலையப்பனையும், மங்கையையும்; நண்பர்கள் வந்த அன்றைக்கு என்னவெல்லாம் நடந்தது என துருவித்துருவிக் கேட்டுக் கொண்டிருந்தார். ஊரிலிருந்து வந்த அன்றைக்கு மதியம், நண்பர்கள் அனைவரும் ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். அதன் பிறகு சதாவும், அருணும் செஸ் விளையடினார்கள். மற்ற இருவரும் டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். பிறகு சீக்கிரமாகவே சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குச் சென்றுவிட்டனர்.

அவர்களிடையே என்ன மாதிரியான சம்பாஷணை இருந்தது?

“செஸ் விளையாட்டின் போது, “உன்னை சாகடிக்கப் போகிறேன் பார்!, உன்னை வெட்டப் போகிறேன்” என்று சதா அபசகுணமாக சொல்லிக்கொண்டிருந்தது எனக்குப் பிடிக்கவில்லை”.என்று மங்கை தன் அதிருப்தியை தெரிவித்தாள்.

மலையப்பன்; உள்ளூர்காரர் யாரிடமோ, “பக்கத்தில் இரண்டே இரண்டு சென்ட் நிலம் குறைந்த விலைக்கு வருவதாகவும், அதை வாங்குவதற்கு அருணின் அப்பாவிடம் பணஉதவி கேட்டதற்கு, அவர், “உனக்கென்ன பிள்ளையாகுட்டியா? எதற்கு நிலமெல்லாம்? பேசாமல் இங்கேயே இரு”.என்பதாக அருமைநாயகம் சொல்லிவிட்டதாக குறைபட்டுக் கொண்டிருந்ததைக் கேட்க நேரிட்டதாக சதா சொன்னான்.

அருணனிடம் பெருந்தொகையைக் கடனாக தான் வாங்கியிருப்பதை செந்தில் தெரிவித்தான்.

சர்வேஸ்வரனை தோண்டித்துருவி விசாரித்ததில், சர்வேஸ்வரன் மணப்பதாக நிச்சயிக்கப்பட்ட பெண்ணை; அப்பெண்ணின் அப்பா அருணுக்கு கொடுக்க முதலில் முயற்சித்ததாகவும், அருண் மறுத்தபிறகே சர்வேஸ்வரனுக்கு நிச்சயிக்கப்பட்டதாகவும் தெரிந்தது.

இந்த சப்பைக் காரணங்களில் ஒன்றுகூட கொலை செய்வதற்கான முகாந்திரமாக இருப்பதற்கு சாத்யமே இல்லை.. பரசு முடியைப் பிய்த்துக் கொண்டார். சம்பவம் நடந்த இடத்தை மறுபடியும் சென்று பார்வையிட்டார். அருண் கீழே விழுந்து கிடந்த இடத்தைச் சுற்றி சாக்பீஸால் கோடு போடப்பட்டிருந்தது. அவன் தாக்கப்பட்ட சமயத்தில் அவன் நின்றிருக்கக் கூடும் என்ற அனுமானத்தின் மீது அடையாளமிட்ட இடத்திற்கு நேர் எதிரே நிலைக்கண்ணாடி ஒன்று இருந்ததைக் கவனித்த அவருக்கு, அருண் தன்னைத் தாக்க வந்த ஆளைக் கண்ணாடியில் தெளிவாகப் பார்த்திருக்கக்கூடும். அந்த அறைக்குள் நுழைந்த கொலைகாரன் பேச்சுக் கொடுத்துக் கொண்டேதான் அருணை நெருங்கி இருக்கவேண்டும். தெரிந்த ஆளாக இருக்கவே அருணும் திரும்பிப் பார்க்காமல் பேசிக்கொண்டு இருந்திருக்கலாம். முதுகில் குத்தப்படும்போது நிச்சயம் கண்ணாடியில் அருண், கொலைகாரனைப் பார்த்திருப்பான். அவர் யூகம் சரியாகஇருக்கும் பக்ஷத்தில்; அருண் உயிருக்கு மேலும் ஆபத்து என்பதால் மயிலன் மருத்துவமனையின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது. அருண் கண் விழித்தால் உண்மையான குற்றவாளி அகப்படுவான்.

அடுத்த நாளே, பரசுவுக்கு,; அருண் கண்விழித்து விட்டான் எனவும் ஆனால் அவனால் பேசத்தான் முடியவில்லை எனவும் டாக்டர் மயிலன் செய்தி அனுப்பியிருந்தார். முதல் வேலையாக பரசு தன் வீட்டிற்குச் சென்று மாலுக்குட்டிக்கு இந்த செய்தியைச் சொன்னார். மாலுக்குட்டி, அருண் விஷயமாக பெரிதும் சுணங்கிப் போயிருந்தாள். ஜுரம் கூட வந்துவிட்டது. அருண் கண் விழித்துவிட்டான் என்ற செய்தியைக் கேள்விப்பாட்டதும், அவள், இயல்பு நிலைக்குத் திரும்பினாள். “அங்கிளுக்கு நான் போய் ஆறுதல் சொன்னால், நல்லாயிருக்கும். என்று வாதிட்டு, அருமைநாயகத்தின் அலுவலகத்திற்கு தன் தாத்தாவுடன் கிளம்பிவிட்டாள். அந்த பத்து வயது சிறுமிக்குதான் அருணனின் மேல் எவ்வளவு பாசம். அதற்கு காரணமும் இருந்தது.

அப்பொழுது அவளுக்கு ஐந்து வயது இருக்கும். அவளுடைய அம்மா மாடிப்படியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டார்கள். படிகளில் பலத்த அடிபட்டதன் விளைவாக, பேச்சுமூச்சற்று மயக்கமடைந்துவிட, வீட்டிலிருந்த ஏனையோர் அவர்களைச் சுற்றி நின்றார்கள். ஏதேதோ பேசினார்கள் மாலுவை யாருமே கண்டுகொள்ளவில்லை. மாலுவுக்கு, அம்மா செத்துப் போய்விடுவார்களோ என்று பயமாக இருந்தது. அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். மாலுவை வீட்டிலேயே மறந்துபோய் விட்டுவிட்டு அனைவருமாக சென்று விட்டார்கள். இருட்டும், அம்மாவுக்கு என்ன ஆயிற்று என்ற பயமும் சேர்ந்து அவள் ஜன்னல் வழியே மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தபோது,, பக்கத்து வீட்டிலிருந்த அருண் அவளைப் பார்த்தான்.

என்ன மாலு? என்றவனிடம், அவள், நடந்த அனைத்தையும் கூறித் தேம்பித் தேம்பி அழவே ஆரம்பித்துவிட்டாள். அவன் ஜன்னலருகே வந்து அவளைத்தேற்றி “அம்மாவுக்கு பயப்படும்படி ஒன்றும் ஆகாது பாரேன். நாம் இருவரும் அம்மாவுக்காக வேண்டுவோமாம்.”

எப்படி அண்ணா வேண்டனும்?

“எல்லாம் வல்ல இறைவனே!. இந்த சிறு பெண்னின் மேல் இரக்கம் காட்டு. எனக்கு அம்மா வேண்டும். நல்லபடியாக அவர்கள் திரும்பி வரனும்.”. இதையே திரும்பத் திரும்ப நினைத்து சொல்லிக்கொண்டிரு. சரியா? நானும் உன்னோடு சேர்ந்து வேண்டிக் கொள்கிறேன். ரெண்டு பேர் சேர்ந்து கேட்டால், சாமி சரின்னு கொடுத்துடுவார்”.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அம்மா வீட்டிற்கே அழைத்து வரப்பட்டார். அம்மாவுக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என்று டாக்டர் சொல்லிவிட்டார். அன்று முதல் அருண் அவளுக்கு மிகவும் வேண்டியவனாகப் போய்விட்டான். அந்த சின்னஞ்சிறு இதயம் துடித்து பரிதவித்த வேளையில் ஆறுதல் சொன்ன அருண் அவளைப் பொறுத்தவரை அவளுக்கு ரோம்ப வேண்டப்பட்ட ஜீவன்.

மாலு அங்கு வந்தது அருமைநாயகத்துக்கு கூட கொஞ்சம் தெம்பாக இருந்தது என்று சொல்லலாம். “பாருங்கள் அங்கிள், இன்னும் இரண்டே நாள்தான். அண்ணா வந்துடுவான்.”

“நீ சொன்னால் சரியாதான் இருக்கும்.” உண்மையில் மாலுக்குட்டி அப்படி சொன்னது அருமைநாயகத்திற்கு ஒருவித ஆறுதலைத் தந்தது. சின்னக்குழந்தை; தெய்வத்திற்கு சமானம்.

“மாலுக்குட்டி; இன்னைக்கு வாலைச் சுருட்டிக்கொண்டு இருக்கே ஏன்?” அவளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அருமைநாயகம் முயற்சி செய்தார். இதோ பார் சுந்தரம் தாத்தாவுக்கு போன் போடறேன்.”

சிறிது நேரம், மாலுவும் சி.சி.டி.வி.யில் கவனம் செலுத்தினாள். அவள் விடைபெற்றுப் போகும் போது. அண்ணாவுக்கு இப்படி கஷ்டம் கொடுத்தவன் யாராக இருந்தாலும், அவனைத் தண்டிக்கும்படி கடவுளிடம் வேண்டிக் கொண்டேன் அங்கிள்” என்றாள் சினத்தோடு.

அங்கு மருத்துவமனையில், அருணைப் பார்க்கவென்று அவனுடைய நண்பர்களைப் போலீசார் அழைத்து வந்தனர். கண்ணாடிக் கதவுக்கு அப்பால் இருந்துகொண்டு, பரசு அவர்களது நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர்கள் மூவருமே அருணைப் பார்த்து கண் கலங்கியதோடு, எங்களைப் போய் பரசுசார் சந்தேகப்படுவது மனசுக்கு ரோம்ப கஷ்டமாக இருக்கு அருண் என்பதைச் சொல்லி, நீ சீக்கிரம் குணமாகி வரனும் அருண். என்று உளமார விரும்பி வாழ்த்தினர்.

அடுத்து மலையப்பன் வந்து அருணைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. மலையப்பன், துண்டை வாயில் வைத்துக்கொண்டு அழுது, “தம்பி! நீ குணமாகி வந்தால் போதும். போலிஸ் கெடுபிடியிலிருந்து விடுபட்டுவிடுவோம்.” என்றான். அடுத்து வந்த மங்கை அருணைப் பார்த்தவுடனேயே மயக்கமடைந்துவிட, அவளுக்கு உடனேயே முதலுதவி அளிக்கப்பட்டது. அன்று மாலையில் மாலு தன் அப்பாவிடம் நடந்த விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டாள்.

“அப்பா! எனக்கென்னவோ அந்த வாச்மேன் சுந்தரம் மேல் சந்தேகமா இருக்கு அப்பா.”

சே. சே. அந்த கிழவனால் என்ன செய்யமுடியும்? கரைநாடு போய்க் கொலை முயற்சி செய்ய என்ன தேவை? இந்த இடத்திலேயே அதனைச் செய்திருக்கலாம் இல்லையாம்மா. நான் பார்த்துக்கொள்கிறேன். நீ சமத்தா இரு.

“அப்பா! தயவு செய்து அவனை விசாரியுங்கள். எனக்காக”.

“சரிம்மா”

அவர் சுந்தரத்தை ஏனோதானோ என்றுதான் விசாரிக்க ஆரம்பித்தார். தோண்டத் தோண்ட ஆழமான விஷயங்கள். பரசு, மலைத்துதான் போனார். அதைவிட ஆச்சரியம் மாலுக்குட்டி துப்பறிந்து சொன்னது.

மாலு, அருணைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்தாள். அருணனால் அப்போது பேசமுடியாமல் இருந்தது. சிறிது நேரத்திலேயே “சரி அண்ணா நான் கிளம்பரேன் என்றவள், அங்கிருந்த ஸ்டூலில் தடுக்கி விழப் பார்த்தாள். அப்போது “ஐயோ! பார்த்து” என்று சொன்ன அருணை அவள் முறைத்துப் பார்த்தாள்.

இது போதுமே.. பரசுவுக்கு அவள் போய் தகவல் தர; அருண் கேள்விகளால் துளைக்கப்பட்டான். “யாரைக்காப்பாற்ற அருண் இப்படி பேசவே முடியாதது போல நடிக்கிறாய்? எனக்கு எல்லாவற்றையும் சுந்தரம் சொல்லிவிட்டார்.” .என்றதும்,அவசரமாக அருண் எழுந்து உட்கார்ந்தான்.

“அவர், உணர்ச்சி வசப்பட்டுதான் அப்படி செய்தார். அவர் மேல் தப்பு என்று சொல்ல முடியாது.”

“சுந்தரத்தின் மகன் வயிற்றுப் பேத்தி சுகன்யாவை நீ காதலிப்பது மட்டும்தான் காரணம் என்று நீ நினைத்தால் அது தவறு. அந்த விஷயம், அவருக்குத் தெரியவே தெரியாது. பலே கில்லாடிடா அருண் நீ. விஷயம் இப்ப வெளி வந்துவிட்டது பார்.” என்று பரசு சொன்னதைக் கேட்ட அருண் மலைத்துப் போனான்.

“அப்புறம் என்ன காரணம்? அங்கிள்?”

“சுந்தரத்தின் மகள் வயிற்றுப் பேத்தி கவிதாவும் அவர் வீட்டில் வளர்ந்து வருவது உனக்குத் தெரியுமா?”

தெரியும் அங்கிள்.

அவள் உனக்கு அக்கா என்பது தெரியுமா?

அருணுக்கு தலை சுற்றியது.

கவிதாவைப் பெற்ற சுந்தரத்தின் மகள், தற்கொலை செய்து கொண்டாள் .அவள் இறந்த போது அவளுக்கு உன் வயது.. நீ அந்த வயது வரும் வரைக்கும் காத்திருந்து, நீ இறந்தால் வலி எப்படி இருக்கும் என்று உன் அப்பாவுக்கு உணர்த்த சுந்தரம் செய்த காரியம்.

சுந்தரத்தின் தங்கை மங்கை, அவருக்கு இந்த பாபச் செயலுக்கு ஒத்துழைத்தாள். நீ பிழைத்து வந்துவிட்டால் எல்லாமுமே அம்பலம் ஆகிவிடுமே என்ற பயம் காரணமாகத்தான் அவளுக்கு அன்று மயக்கம் ஏற்பட்டது.

உன் அப்பா அவ்வளவு மோசமானவரில்லை அருண்.. உன் தாத்தா, சுந்தரத்தின் மகளை அவர்; கல்யாணம் செய்து கொள்ள ஒப்புதல் தரவில்லை. ஆனாலும் ரெஜிஸ்டர் கல்யாணம் செய்துகொண்டு வாழ்ந்திருகிறார். கவிதாவும் பிறந்துவிட்டாள். உன் தாத்தா வேறோரு பெண்ணைப் பார்க்க ஆரம்பித்த செய்தி கேட்டு பயந்து போன அவள், தற்கொலை செய்து கொண்டாள். அவளை மறக்க முடியாமல் தவித்ததை உன் அம்மாவிடமும் சொல்லி வருத்தப் பட்டிருகிறார்.

அங்கிள்! அருணின் கண்களில் கண்ணீர்.

இப்ப உன் அப்பா; சுந்தரத்தைப் பார்த்து, சுகன்யாவைப் பெண் கேட்கப் போயிருகிறார் அருண்.

மாலுக்குட்டிதான் சுந்தரத்தை கை காண்பித்தது. இல்லாவிட்டால் துப்பு கிடைதிருக்காது. சின்ன சின்ன விஷயங்களை ஊன்றி கவனித்தால் பெரிய விஷாங்கள் புலப்பட்டுவிடும். அன்று அவள், உங்கள் அலுவலகத்துக்குப் போய் வழக்கம் போல சி.சி.டி.வி. காட்சிகளைப் பார்த்தாளாம். உன் அப்பா போனில் சுந்தரத்தை அழைத்த போது அவர் அலட்சியமாக உட்கார்ந்தபடியே ஒரு கோபப் பார்வையுடன் அட்டெண்ட் செய்யவும் மாலுக்குட்டிக்கு சந்தேகம் வந்துவிட்டது. ‘அத்தனை நாட்களும் இவர், ஏன் அப்படி சலாம் போட்டார்? அன்னைக்கு ஏன் அப்படி இருந்தார்’ என்று என்னைக் கேட்டுக் கேட்டு தொல்லை பண்ணிவிட்டாள்.

கொலைதூரப்பயணம், ஒரு நல்ல முடிவுக்கு வந்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சியே.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *