கடற்கரைக் கோயிலில் ஒரு கொலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 22, 2015
பார்வையிட்டோர்: 17,823 
 
 

“அப்பாடி! ஒங்களோட இப்படி தனியா வந்து எத்தனை காலமாச்சு!” கண்களில் கிறக்கத்துடன் கணவரைப் பார்த்தாள் லலிதா. ஏழு ரிங்கிட் கொடுத்து வாங்கிய இளநீரை நாசுக்காக உறிஞ்சினாள்.

நீர்த்துப்போயிருந்த ஆரஞ்சுப்பழச் சாற்றை ஸ்ட்ராவால் கலக்கியபடி, “கொலைக் குத்தவாளிங்களையே நடுங்க வைக்கற நான் என்ன, அவ்வளவு சுலபமா லீவு எடுத்துக்க முடியுமா?” என்று கண்ணைச் சிமிட்டியவர் — அம்மாதிரியான வழக்குகளில் புலன் துலக்கும் நிபுணரான சிவம்.

“ஒங்க பெருமை எங்கிட்ட வேணாம்!” விளையாட்டாய் கோபித்தாள் மனைவி. “இந்த இடம் ரொம்ப அழகு. இல்லீங்க? காத்து என்னமா வீசுது! இந்தக் கடலும்தான் எவ்வளவு பெரிய பெரிய அலைகளைக் கொண்டு வருது, பாருங்களேன்!” என்று கைகொட்டி ஆர்ப்பரித்தவளின் தொனி சட்டென மாறியது. “ஐயையோ!” இடது கை வாயை மூடியது, அதிர்ச்சி தாங்காது.

அவள் வலது கையும், கண்களும் போன இடத்தைப் பார்த்தார் சிவம்.

‘அட பாவமே! யாரோ கடல்லே குளிக்கறப்போ, அலை அடிச்சுக்கிட்டுப் போயிடுச்சு!’ தமக்குள் முனகியவாறு எழுந்து, அத்திசையை நோக்கி ஓடினார், பக்கத்தில் உட்கார்ந்து, சற்றுமுன்வரை நிறைவுடன் மணலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த மனைவியை அறவே மறந்தவராக.

அவளுடைய சந்தோஷம் ஒரே கணத்தில் மறைய, லலிதாவும் எழுந்தாள். விடுமுறைக்காக நான்கு நாட்கள் கடற்கரைக்கு வந்திருக்கிறாள், அதிசயமாக. அதுகூட அந்த ஆண்டவனுக்குப் பொறுக்கவில்லையே! அவர்கள் வரும் சமயத்தில்தானா இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்க வேண்டும்!

‘இனி அவர் சிரித்துப் பேசுவது ஏது!’ என்று எண்ணிக் குமைந்தாள். குளிக்கும்போது யாராவது அடித்துப்போயிருந்தால்கூட, ‘ஒருவேளை, இது கொலையாக இருக்குமோ?’ என்றுதான் நினைக்கத் தோன்றும் சிவத்திற்கு. அவருடைய உத்தியோகப் பாதிப்பு அப்படி.

உடனே தன் சுயநலத்தை எண்ணி வெட்கப்படாமலும் இருக்க முடியவில்லை அவளால். இப்படி ஒரு விபத்து நடந்திருக்கிறது! தான் போய் ஏதாவது செய்ய முடியுமா என்று பார்ப்பதுதானே மனிதத்தன்மை! அதை விட்டு..

சிவம் நாடியைப் பிடித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். நாலைந்து பேர் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள்.

“நல்லவேளை! உயிர் இருக்கு!” என்று பொதுவாகச் சொன்னவர், “இந்தப் பொண்ணை ஒங்க யாருக்காவது தெரியுமா?” என்று ஒரு கேள்வியைப் போட்டார்.

அவர்கள் முகத்தில் களையே இல்லை. அவரைப் போலவே விடுமுறைக்காக வந்திருந்தவர்கள் போலும்!

அப்போது மணி அடிக்கும் சப்தம் அருகில் வந்தது. ஸ்கூட்டரிலிருந்து இறங்கிய ஐஸ்க்ரீம் விற்பவர், “இது நம்ம பண்டாரத்தோட மகளுங்க!” என்று அடையாளம் சொன்னார்.

எல்லாரும் தன்னையே உன்னிப்பாகக் கவனித்தது அவரது உற்சாகத்தைத் தூண்ட, “அதோ, கடற்கரை ஓரமா, மலைமேல இருக்கு பாருங்க, முருகன் கோயில்! அங்க வேலுன்னு பண்டாரம் ஒருத்தர் இருக்காரு. இது அவர் பொண்ணுதான். அம்மா இல்ல. அத்தைதான் வளக்கிறாங்க,” என்று விவரித்தார்.

“நீங்க போய் பண்டாரத்தைக் கூட்டிட்டு வாங்க!” என்று சிவம் அதிகாரமாகக் கூறியது அவருக்கு ஒருமாதிரி இருந்தாலும், தான் ஒருவன்தான் இந்தக் கும்பலில் உள்ளூர்க்காரன் என்ற எண்ணம் உறைக்க, அவர் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தார்.

‘இன்னிக்கு வியாபாரம் நடந்த மாதிரித்தான்!’ என்று மனத்துள் அலுப்பு ஏற்பட்டது.

* * *

படுக்கப் பிடிக்காமல், கண்ணாடிக் கதவுவழி தெரிந்த இருளையே பார்த்துக்கொண்டிருந்தாள் லலிதா. அவள் பயந்தமாதிரியேதான் ஆயிற்று.

“நீ ஹோட்டலுக்குப் போ, லல்லி. நான் டாக்டர் என்ன சொல்றாருன்னு கேட்டுட்டு, பெத்தவங்களுக்கு ஆதரவா இருந்துட்டு வரேன்!” என்று கழன்றுகொண்டிருந்தார் சிவம்.

அந்த இடத்திலேயே வாழும் பெண்! இந்தப் பேரலையில் யாராவது குளிக்கப் போவார்களா? கடலின் கொந்தளிப்பு எப்படி அவளுக்குப் புரியாமல் போயிற்று?

அந்தப் பெயர் தெரியாத பெண்ணின்மேல் கோபத்தை வளர்த்துக்கொண்டு, தூங்கமுடியாது லலிதா புரண்டு, புரண்டு படுத்துக்கொண்டிருந்தபோதே சிவம் வந்தார், “நீ இன்னுமா தூங்கலே?” என்றபடி.

“ஒரு விஷயம் தெரியுமா!” என்று சுவாரசியத்துடன் ஆரம்பித்தவர், சொல்ல வந்ததை மறந்து, “பசிக்குது,” என்று முனக, லலிதா சிரித்தபடி எழுந்தாள். “பால் பாக்கெட் இருக்கு. காலையில ஹோட்டல்ல குடுத்த பழங்களும் இருக்கு! எது வேணும்?”

ஆப்பிளைக் கடித்தபடி தெரிவித்தார் சிவம்: “அந்தப் பொண்ணு பேரு அனுராதா. எஸ்.பி.எம் எழுதி இருக்கு. பக்கத்து டவுனிலதான் பள்ளிக்கூடமாம்”.

முன்பின் தெரியாத பெண்ணாக இருந்தாலும், அஃறிணையில் அவர் குறிப்பிட்டது மனைவிக்குப் பிடிக்கவில்லை. “எப்ப குளிக்கப் போனாளாம்?” என்று நைசாக விசாரித்தாள்.

“அதுதான் வேடிக்கை. இங்கேயே பிறந்து வளர்ந்த பொண்ணானாலும், கடல்லே குளிக்கப் பயமாம் அந்தப் பொண்ணுக்கு. அத்தையம்மா சொன்னாங்க!”

“தற்கொலையா இருக்கும். அதுக்கு வசதியா, வீட்டுக்கிட்டேயே கடல் இருக்கு. இந்தக் காலத்துப் பொண்ணுங்க காதல், கீதல்னு எதிலேயாவது மாட்டிக்கிட்டு…,” லலிதாவின் கற்பனை விரிந்தது. முப்பதே வயதாகி இருந்த தானும் இந்தக் காலத்துப் பெண்தான் என்பதை மறந்தவளாய்ப் பேசினாள்.

கணவரின் பொறுமையைச் சோதிக்க அது போதுமானதாக இருந்தது. “குறுக்கப் பேசாம கேளு!” என்று எரிந்து விழுந்தார். என்ன இருந்தாலும், அதிகாரி அல்லவா! மனைவியாக இருந்தாலும், அவருடைய கண்டிப்பு அவரை விட்டுப் போகவில்லை. “இது தற்செயலா முழுகினதோ, திட்டமிட்ட தற்கொலை முயற்சியோ இல்லன்னு டாக்டர் அடிச்சுச் சொல்றார். அந்த அனுராதாவோட தலையில யாரோ ஓங்க அடிச்சிருக்கணும். நல்லா வீங்கி இருக்கு”.

“என்ன அநியாயங்க இது!” லலிதா பரிதாபப்பட்டாள். அந்தப் பெண்ணின் முகத்தை நினைவு படுத்திக்கொள்ள முயன்றாள்.

“இது கொலை முயற்சியாத்தான் இருக்கணும். போலீசுக்குச் சொல்லிட்டோம். நம்ப இளங்கோதான் இங்க..”

லலிதா அழமாட்டாத குறை. கணவர் இனி தன்னை எங்கே கவனிக்கப்போகிறார்! அவருடைய முழுக் கவனமும் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில்தான் இருக்கும்.

அவளுடைய முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளைக் கவனியாது, தன்பாட்டில் பேசிக்கொண்டு போனார் சிவம்: “தலையில பட்ட அடியால அவ நினைவிழந்திருக்கணும். வேலை சுலபமாயிடுச்சுன்னு, அடிச்சவன் அவளை கடல்லே இழுத்துக்கொண்டு வந்து போட்டிருக்கணும். முதுகிலே சிராய்ப்பு. தலையெல்லாம் மண். நல்லவேளை, ஒன் கண்ணில அவ பட்டா! திரும்பவும் அலை இழுத்துக்கிட்டுப் போயிருந்தா..!”

லலிதாவின் உடல் நடுங்கியது. தெரிந்தோ, தெரியாமலோ, தான் ஒரு உயிரைக் காப்பாற்றிவிட்டோம்! தான் இங்கு வந்ததே அதற்காகத்தான் என்று தோன்றிப்போயிற்று அவளுக்கு.

மறுநாள் லலிதா கண்விழித்தபோது, ஸ்ப்ரிங் வைத்த கட்டிலில் அவள் பக்கத்திலிருந்த இடம் காலியாக இருந்தது.

இன்று அவளுக்குக் கோபம் வரவில்லை. தன்னால் உயிர் பிழைத்த பெண்ணுக்காக தானும் ஏதாவது செய்ய வேண்டுமென்று முடிவு செய்துகொண்டாள்.

கோயிலுக்குப் போனால் என்ன?

தலைக்குக் குளித்துவிட்டு, டைனிங் ஹாலுக்குச் சென்றாள். இயந்தரத்தனமாக அங்கு வேலை செய்பவர்கள் “குட் மார்னிங்!” போட, சுரத்தே இல்லாமல் பதில் வணக்கம் தெரிவித்தாள். வழக்கம்போல ஆம்லெட் சாப்பிடாது, வாட்டிய ரொட்டியில் ஜாம் மட்டும் தடவிச் சாப்பிட்டுவிட்டு, டீ குடித்துவிட்டுப் புறப்பட்டாள்.

நல்ல வேளை, ஒரு புடவையும் எடுத்து வந்திருந்தாள், புறப்படும்போது, ‘பீச்சுக்குத்தானே போறோம்! பாண்ட் மட்டும் போதும்,’ என்று கணவர் சொன்னதை அலட்சியப்படுத்தி.

கோயில் அழகாக, சுத்தமாக இருந்தது. அங்கு பண்டாரத்தைத் தவிர வேறு யாருமில்லை.

முழுமையாக நரைத்த முடி. அவருக்கு அறுபது வயது இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டாள் லலிதா.

இந்த ஒதுப்புறமான இடத்துக்கு வருபவர்களே அபூர்வம். அதில் எத்தனை பேர் கோயிலுக்கு வரப்போகிறார்கள்! எப்படித்தான் இந்த மனிதருடைய பிழைப்பு நடக்கிறதோ என்ற பரிதாபம் எழுந்தது அவளுக்குள்.

கடவுள் பெயரிலேயே அர்ச்சனை செய்தாள். தீப ஆராதனைக்குப்பின் தனக்கெதிரே நீட்டப்பட்ட தட்டில் எரிந்துகொண்டிருந்த சூடத்தைக் கண்ணில் ஒத்திக்கொண்டாள். கைப்பையைத் திறந்து சிவப்பு நிற பத்து ரிங்கிட் தாளை எடுத்துத் தட்டில் போட்டாள்.

“தீர்க்க சுமங்கலி பவ!” என்று ஆசீர்வாதம் செய்தபடி, அவள் கையில் தேங்காய் மூடி, வெற்றிலை, பாக்கு, இரு வாழைப்பழங்கள் என்று பிரசாதத்தைக் கொடுத்தார் பண்டாரம்.

“கடல்லே குளிக்க வந்திருக்கீங்களா?” என்று புன்னகையுடன் விசாரித்தார்.

லலிதாவுக்கு வினோதமாக இருந்தது. பெண் செத்துப் பிழைத்திருக்கிறாள், கொஞ்சமாவது படபடப்போ, வருத்தமோ இருக்காதோ? குசலம் விசாரிக்கிறாரே?

“அதுக்குத்தான் வந்தோம். ஆனா, எங்கே! அலை பெரிசு, பெரிசா இருக்கே!” என்றாள்.

“இப்போ அப்படித்தான். இன்னும் மூணு மாசம் கழிச்சு சீஸன். அப்ப வந்து பாருங்க! தங்க ஒரு இடம்கூடக் கிடைக்காது!”

“குளிக்காட்டி என்ன! கடல் காத்து பட்டாலே நல்லாத்தான் இருக்கு. நீலமா விரிஞ்சு கிடக்கிற கடலைப் பாத்தா, மனசுக்கு இதமா இருக்கு!”

மீண்டும் புன்னகைத்தார். “டவுனிலிருந்து வந்திருக்கீங்களாக்கும்!”

அவள் ஏதோ சொல்வதற்குள், வேறு சிலர் வந்ததால், பண்டாரம் அவர்களைக் கவனிக்கப் போனார்.

“பிரசாதம் கொடுத்தா, வலது கையால் வாங்கணும்!” யாரோ சிறுவனை அவர் மென்மையாகக் கண்டிக்கும் குரல் கேட்டது.

அந்தப் புறம் திரும்பி, முகம் சுருங்கிப்போன தாயைப் பார்த்து, அவளுக்குத் தைரியம் அளிக்கும் வகையில் அவளுடைய கண்களைச் சந்தித்து, லேசாக முறுவலித்தாள் லலிதா.

* * *

அன்றிரவு.

“அக்கம்பக்கத்தில விசாரிச்சேன், லல்லி. நேத்து கோயிலுக்குக் கீழே பண்டாரத்துக்கும், அவரோட மகளுக்கும் பெரிய வாக்குவாதமாம். ஏதோ ஆத்திரத்தில அவரே தலையில அடிச்சிருக்கலாம்னு, சந்தேகப்பட்டு, போலீஸ் விசாரணைக்கு கூட்டிப் போயிருக்காங்க!”

தன்னுடன் புன்னகையுடன் பேசிய அந்த சாத்வீகமான மனிதரா! லலிதாவால் நம்ப முடியவில்லை.

“எதால அடிச்சிருக்காங்களாம்?” என்று விசாரித்தாள்.

“பலமான ஆயுதம். ஆனா, கூரானது இல்ல”.

“அனுராதா இப்ப எங்கே?”

“பக்கத்து டவுன் ஆஸ்பத்திரியில. இன்னும் நினைவு திரும்பல”.

“பிழைச்சுடுவா, இல்ல?”

“நிச்சயமா சொல்ல முடியாது. கோமாவில, கட்டை மாதிரி படுத்திருக்கா, பாவம்!”

“பண்டாரம் என்ன சொல்றார்?”

“எல்லா குத்தவாளிங்களும் சொல்றதுதான் — தான் நிரபராதின்னு சாதிக்கிறார். போலீசைத் திசை திருப்ப, போன வாரம் அவரோட வீட்டுக்குள்ளே யாரோ புகுந்து, எல்லாச் சாமான்களையும் தாறுமாறா கலைச்சுப் போட்டுட்டாங்கன்னு அளக்கிறார்”

“பொண்ணோட என்ன சண்டை? கேட்டீங்களா?”

“கேட்டோமே! அதெல்லாம் எதுக்கு ஒங்களுக்குன்னு திமிரா பதில் வருது!”

ஆப்பிளைத் தின்று முடித்துவிட்டு, சிவம் சிறிய பால் பாக்கெட் ஒன்றைக் கையில் எடுத்திருந்தார். ஏதோ நினைத்தவராக, “சொல்ல மறந்துட்டேனே! அந்தப் பொண்ணைத் தாக்கினவன் இடது கையால அடிச்சிருக்கான். இளைஞன், பலசாலியா இருக்கணும்னு..”

கைகளை ஒரு முறை தட்டினாள் லலிதா. “அப்போ அந்த அப்பாக்காரர் மகளைக் கொலை செய்யப் பாக்கல”.

சிவத்தின் புருவங்கள் சுருங்கின, கேள்விக்குறியில்.

பதிலுக்கு, பண்டாரத்தின் வயது, இடது கையால் பிரசாதம் வாங்கிய பையனை அவர் கண்டித்தது எல்லாவற்றையும் விவரித்தாள்.

“நீ எதுக்கு இதிலே எல்லாம் மூக்கை நுழைக்கிறே?”

லலிதா அதைக் கவனிக்கும் நிலையில் இருக்கவில்லை. தான் கோயிலில் இருக்கும்போது, அங்குள்ள குழாயில் வெண்கலக் குடத்தில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த மூதாட்டியைச் சந்தித்துப் பேசினால், ஏதாவது தடயம் கிடைக்காது?

செய்வதற்கு ஏதோ இருக்கும்போது, மனம்தான் எவ்வளவு உற்சாகமாகிவிடுகிறது!

கணவரை மறந்தாள் லலிதா.

தான் எப்படிப் பேசவேண்டும் என்று தனக்குள் ஒத்திகை பார்க்க ஆரம்பித்தாள்.

மறுநாள் காலை. வீட்டில் பீரோ நிறையப் புடவைகள் அடுக்கடுக்காக இருக்க, அதே புடவையை மீண்டும் உடுத்துப் போக வேண்டி இருக்கிறதே என்ற சிறு நமைச்சலுடன், லலிதா கோயிலுக்குப் போனாள்.

மலை ஏறப் போனாள். “அங்க யாருமில்லம்மா. இன்னிக்குப் பூசை அவ்வளவுதான்!” நிராசையாகப் பேசினவள் அத்தைதான்.

“நேத்து அந்தப் பொண்ணு, ம்…, அனுராதாவை அலை அடிச்சுக்கிட்டு வந்தப்போ நான்தான் மொதல்லே பாத்தேன்!” என்று அறிமுகம் செய்துகொண்டாள்.

“யாரு பெத்ததையோ எடுத்து, சொந்த மகமாதிரி வளர்த்தான் தம்பி. அதுக்கு அந்த தெய்வம் நல்ல தண்டனையைக் குடுத்துட்டார்!” மனம் கசந்து பேசினாள் மூதாட்டி. “என் தம்பி வேலு இருக்கானே! கல்யாணமே பண்ணிக்கல. அப்போ எப்படி வந்திச்சு பிள்ளைன்னு கேக்கறீங்களா? அதுதான் விதி,” என்றபடி வீட்டுக்குள் போய் கதவைச் சாத்திக்கொண்டாள்.

விவரத்தைக் கேட்ட சிவம் மனைவியின் கரத்தைப் பற்றிக் குலுக்கினார், பெருமகிழ்ச்சியுடன்.

“பண்டாரத்தைப் பாக்கப் போறேன். நீயும் வா!”

தம்பதியர் இருவருமாக போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார்கள்.

“அனுராதா ஒங்க சொந்த மகள் இல்லங்கறது எங்களுக்குத் தெரியும். உண்மையை மறைக்காம சொன்னா, ஒங்களுக்குத்தான் நல்லது,” என்றார் சிவம் மிரட்டலாக.

சந்தர்ப்பம் பார்த்து, “கோயில்ல பூசை நடக்காமப் போகுது!” என்றாள் லலிதா, முகத்தில் வரவழைத்துக்கொண்ட வருத்தத்துடன்.

“நான் யாருக்கும் கெடுதல் நினைக்கல. அனுவோட அம்மா ஒரு விதவை. அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஒரு பணக்காரன் சொன்னதை நம்பி…”

“ஏமாந்துட்டாங்களா?”

“அப்படியும் சொல்ல முடியாது. முருகனுக்கு முன்னால மாலை மாத்திக்கிட்டாங்க. ஒரு வாரம் அவரோட சேர்ந்து இருந்தா அந்தப் பாவிப் பொண்ணு. ‘அப்பாகிட்ட சொல்லிட்டு, சேர்த்துக்கிறேன்’னு போனவர்தான். அவரோட விலாசமும் தெரியாது. அனுவோ வயத்தில வளர ஆரம்பிச்சுட்டா. அதைப் பெத்து, என் கையில குடுத்து, ‘இதை எங்கேயாவது அனாதை ஆசிரமத்தில விட்டுடுங்க சாமி’ன்னு அழுதா. அப்போ எனக்குத் தெரியல, அவ அன்னிக்கு ராத்திரியே கடல்லே விழப்போறான்னு!”

“பாவம்!” வார்த்தையிலிருந்த இரக்கம் சிவத்தின் குரலில் இல்லை. நடந்ததை முழுமையாக அறியும் ஆர்வத்தில் இருந்தார் அவர்.

“அடுத்த வாரமே அனுவோட அப்பா வந்தார்!”

“யாரு? அந்தப் பணக்காரரா?”

“ஆமா. புதுப் பொண்டாட்டியோட வந்தார். ‘அனுவை நான் என்னோட மகள்னு சொல்லிக்க முடியாது. ஆனா, அவளை வளக்கிற செலவை நான் ஏத்துக்கறேன்’னு என்னைத் தனியா கூப்பிட்டுச் சொல்லிட்டுப் போனார். இந்தப் பதினேழு வருசமா சொன்ன வார்த்தை மாறாம, பணம் அனுப்பி இருக்கார். அப்பப்போ, கோயிலைப் புதுப்பிக்கறதுக்கும் ஆயிரக்கணக்கில பணம் வரும். நல்ல மனுசன்!” என்று சிலாகித்தவர், தொடர்ந்து, “இப்ப ரெண்டு மாசமாத்தான் காசு அனுப்பறதை நிறுத்திட்டார். ஆனா, அனுவோட காசை நான் தொடறதேயில்ல. அப்படியே பாங்கில போட்டு வெச்சிருக்கேன். அது இந்த ஜன்மத்துக்கு போதும்,” என்று முடித்தார்.

“எங்கேயிருந்து அனுப்பினார்?”

“தெரியல. ஊர், பேர் எதுவும் இருக்காது. எனக்கு மட்டும்தான் தெரியும், அவ்வளவு பணமும் யார் அனுப்பறாங்கன்னு!”

“இண்டெரெஸ்டிங்!” ஆள்காட்டி விரலால் மோவாயைத் தட்டிக்கொண்டார் சிவம்.

“தான் என்னோட வளர்ப்புப் பொண்ணுன்னு அனுவுக்குத் தெரியாது. அவங்கம்மா கடல்லே குளிக்கப்போனப்போ, முழுகிச் செத்துட்டாங்கன்னு சொல்லி வெச்சிருக்கேன். அதனாலேயே அவ அந்தப் பக்கமே போக மாட்டா. யாரோ அந்த அப்பாவிப் பொண்ணைக் கொலை செய்யப் பாத்திருக்காங்க!”

இந்த ஏழைப் பண்டாரத்திற்கு ஒரு பொன் முட்டை இடும் வாத்து அனு. அவளைக் கொன்றால், இவருக்குத்தானே நஷ்டம் என்று யோசித்தார் சிவம்.

“அவ சாகிறதால யாருக்கு லாபம்?”

“அந்தப் பெரிய மனுசனுக்குத்தான்! இனிமே பணம் அனுப்ப வேணாமில்ல?”

“அதுக்கு இத்தனை காலம் காத்திட்டு இருப்பானேன்?” சிவத்திற்கு ஏதோ ஞாபகம் வந்தது. “அனு சம்பந்தப்பட்ட முக்கியமான எதையாவது ஒங்க வீட்டில வெச்சிருக்கீங்களா? அதை எடுக்கத்தான் அன்னிக்கு ஒங்க வீட்டைக் கலைச்சுப் போட்டிருக்காங்க!”

சொல்லிவிட்டு, தன் நண்பர் இளங்கோவைப் பார்த்தார். அவரும் புரிந்துகொண்ட விதத்தில் தலையாட்டியபடி, “நீங்க போகலாம்,” என்று கூறினார் வேலுப் பண்டாரத்திடம்.

வேலு வலது கையை நீட்டித் தனது உடைமைகளை வாங்கிக்கொண்டதை அவர்கள் கவனிக்கத் தவறவில்லை.

“வேலு! வந்துட்டியா!” என்று பெரிய குரலில் ஆர்ப்பரித்த அக்காளைக் கண்டுகொள்ளாமல், அறுபது படிகளைக் கொண்ட மலையில் பாய்ச்சலாக ஏறி, மேலேயுள்ள கோயிலை அடைந்தார் பண்டாரம். வயதுக்கு மீறிய செயலானதால் மூச்சு இரைத்தது. ஆனால், அதைப் பொருட்படுத்தும் நிலையில் அவர் இருக்கவில்லை.

பூட்டிய கதவைத் திறந்துகொண்டு, கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்தார். வெளிச்சம் குறைவாக இருந்தது. பழக்கத்தால், தடுமாற்றம் இல்லாது, மூலவரான முருகன் விக்கிரகத்தின் பின்பக்கம் போனார். அதன் பீடத்தின் கீழ் எதையோ சுற்ற, வெளிப்பட்டது பெட்டி போன்றதொரு சிறிய, ரகசிய அறை. கையை விட்டுத் துழாவினார். தேடியது கையில் தட்டுப்பட, திருப்தியுடன் வெளியே எடுத்தார்.

அவரது நிறைவு நிலைக்கவில்லை.

“அதை நான் எடுத்துக்கறேன்!”

அதிகாரமாக வந்த குரலுக்குரியவர் யாரென்று பார்த்தார்.

இடது கையில் பிடித்திருந்த துப்பாக்கியை நீட்டியபடி ஒரு மீசைக்கார இளைஞன். சில நாட்களாக அனுவையே சுற்றிச் சுற்றி வந்தவன்! ‘கண்டவர்களுடன் என்ன பேச்சும், சிரிப்பும்!’ என்று தான் அவளை மிரட்டியதும், அடுத்த நாளே அவள் கடலில் விழுந்து கிடந்ததும் யதேச்சையாகவா நடந்திருக்கும்!

“ம்! கொண்டா அதை!” மரியாதை இல்லாமல் கத்தினான்.

உயிர்ப் பயத்துடன் ஓரடி எடுத்து வைத்தார் பண்டாரம்.

அடுத்த கணம்.

துப்பாக்கி வெடித்தது.

* * *

“ஒங்களுக்கு ஓய்ச்சலா இருக்கிற ராசியே இல்ல போல இருக்கு! அதிசயமா விடுமுறைக்குப் போன இடத்திலேயும் கொலை முயற்சி!” லலிதா பொருமினாள்.

“போற இடத்திலே பொழுது போக வேண்டாமா?” சிவம் சிரித்தார்.

“அனுவுக்கு பிரக்ஞை திரும்பிடுச்சே! அதைச் சொல்லுங்க!”

“இப்ப அவ பண்டாரத்தோட மக இல்ல. ஒரு பெரிய பணக்காரரோட லட்சக்கணக்கான சொத்துக்கெல்லாம் அதிபதி. அவருக்குப் பிள்ளை, குட்டி இல்ல. அனுவோட அம்மாவுக்குத் தான் செய்த கொடுமைக்குப் பிராயச்சித்தமா, தன்னோட சொத்தை மக பேருக்கு உயில் எழுதி வெச்சுட்டார். ரெண்டு மாசத்துக்கு முந்தி, ஒரு விமான விபத்தில அவரும், மனைவியும் போய்ச் சேர்ந்துட்டாங்க”.

“ஓ! அதுதான் அவர்கிட்டேயிருந்து பணம் வரலேன்னு பண்டாரம் சொல்லிக்கிட்டு இருந்தாரா!”

“அனுவோட அப்பாவுக்கு நெருங்கின சொந்தம் யாரும் கிடையாது. அவரோட சித்தப்பா மகன்..”

“அந்த மீசைக்காரன்! அதானே?”

“அதேதான்! அவருக்கு வாரிசு இல்லேன்னு நினைச்சவன் உயிலைப்பத்தித் தெரிஞ்சுகிட்டதும், பயந்திருக்கான். ‘என் பொண்ணு பேரு இது, அவ இங்கே இருக்கா’ அப்படின்னு விளக்கமா குடுத்திட்டுப் போயிருக்கார் அந்த பணக்காரர். இவளைக் கொன்னுட்டு, அவரோட சொத்துக்கு சொந்தம் கொண்டாடலாம்னு கணக்குப் பண்ணி இருக்கான் அவன்!”

“அவன் கிடக்கான்! அவங்க வீட்டில எதைத் தேடினான்? பண்டாரம் எதை ஒளிச்சு வெச்சிருந்தார்?”

“ரெண்டும் ஒண்ணுதான். அனுவோட பிறப்புரிமைச் சீட்டு — அவங்கப்பா, அம்மா பேரோட. அதுதானே சாட்சி, அவ யாருங்கிறதுக்கு!”

“அதைக் கிழிச்சுப் போட்டா, உண்மையை மறைச்சிட முடியுமா? முட்டாளுங்க, அவன்! அது சரி. அனு எப்போ அவளோட சொந்த வீட்டுக்கு, டவுனுக்கு போகப் போறா?”

“நான் கேட்டேனே! ‘என்னோட வீடு இதுதான், அப்பா இவர்தான்!’னு அழுத்தமா சொல்றா! அப்போ பண்டாரத்தோட முகத்தைப் பாத்திருக்கணுமே!”

அபிஷேகத்துக்காக அத்தையம்மாள் தன் இடுப்பில் சுமந்து வந்த வெண்கலக் குடத்தில் நிரம்பியிருந்த நீரை வில்லன் தலையில் கவிழ்க்க, அதை எதிர்பார்த்திராத அவன் துப்பாக்கியின் விசையை அமுக்க, அதிலிருந்து வெளிப்பட்ட தோட்டா அவன் மார்பிலேயே பாய்ந்தது தான் தினமும் உபாசிக்கும் முருகன் அருளால்தான் என்று வருகிறவர், போகிறவர்களிடம் எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் பண்டாரம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *