ஒரு பிஸ்டல் தூசு துடைக்கப்படுகிறது!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 23,778 
 
 

‘மதிப்பிற்குரிய அணு ஆராய்ச்சிநிலைய சேர்மன் அவர்களுக்கு…

உங்களுக்காக ஒரு சைலன்ஸர் பிஸ்டல் தூசு துடைக்கப்பட்டுக் கொண்டுடிருக்கிறது.காரணம் உங்களுக்கே தெரியும்! ஆகையால் – அடுத்த நிமிஷத்திலுருந்தே இறப்பதற்குத் தயாராகவும்.

இப்படிக்கு,
‘ரேடியேஷன்’ எதிர்ப்பு குழு.

சேர்மன் ராகவராவ் முகத்துக்கு, வியர்வை முத்து, முத்தாக மேக்கப் போட்டு விட்டிருந்தது. முற்றிலும் வழுக்கைக்கு வாழ்க்கைப்பட்டிருந்த தலையில் அங்கங்கே பய நரம்புகள் துடுத்துக் கொண்டிருந்தன. இருதயச் சுவர்களில் வால்கிளாக்கை மாட்டிய மாதிரி டிக்.. டிக்… டிக்…டிக்…

கடித்ததைக் கண்களால் விழுங்கிய அந்தத் துடிப்பான இன்ஸ்பெக்டரின் உதட்டு வாசல் வழியே ரிலீஸானது கேள்வி வாக்கியம்.

“இந்த லெட்டர் உங்க கைக்கு எப்படி வந்தது?”

“பங்களா கேட்ல லெட்டர் பாக்ஸ் மாட்டியிருக்கு. இன்னிக்கு வந்த மத்த தபால் களோட ஒண்ணா இந்த கவரும் கிடந்தது…”

“இதென்ன ரேடியேஷன் எதிர்ப்புக்கு குழு?”

“புதுசா தொடங்கியிருக்கிற ‘காஸ்மா சிடி அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து வெளியேறும் கதிரியக்கக் கழிவுப்பொருட்கள் நகர மக்களோட ஆரோக்கியத்தைப் பாதிக்கும்னு நிறைய பேர் பயப்படறாங்க… அப்படிப் பயப்படறவங்க எல்லாருமா சேர்ந்து, ஆங்காங்கே நிறைய சங்கங்கள் அமைச்சிருக்காங்க. அப்படிப்பட்ட சங்கங்கள்ல ஒண்ணா இதுவும் இருக்கலாம் இன்ஸ்பெக்டர்!”

“உங்களைக் கொலை செய்யப்போறதுக்கான காரணம் உங்களுக்கே தெரியும்னு எழுதிருக்காங்களே?”

“இன்ஸ்பெக்டர், ஒவ்வொரு செமினாரிலும் ‘இங்கே தொடங்கப்பட்டிருக்கிற அணு ஆராய்ச்சி மையத்தால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் கிடையாது. போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுசா எடுக்கப்பட்டிருக்கு’ங்கிற கருத்தை அரசாங்கத்துக்கு நான் வலியுறுத்திட்டு வர்றேன்.அணு ஆராய்ச்சியோட நன்மைகளை எடுத்துச் சொல்றேன். அது இந்த ரேடியேஷன் எதிர்ப்புக்கு குழுவுக்குப் பிடிக்காம போயிருக்கலாம்…”

ராகவராவ் சொன்ன வினாடி ஊமை டெலிபோனுக்கு வாய் வந்து ‘ட்ரிங்..ட்ரிங்..’ என்று மழலை பேசியது. ரிஸீவரை உள்ளங்கையால் போர்த்தி, “ஹலோ..!” என்றார் ராகவராவ்.

“ஹலோ சேர்மன்! உங்களைக் காப்பாத்தறதுக்காக வந்திருக்கறாரே ஒரு இன்ஸ்பெக்டர்… அவரைக் கொஞ்சம் பேசச் சொல்றிங்களா?”

“ஏய்.. நீ…?”

வினாடிக்குள் பதட்ட வார்டில் அட்மிட் ஆகிப்போன ராகவராவ், அவசர அவசரமாய் ரிஸீவரை இன்ஸ்பெக்டரிடம் அடைக்கலம் செய்தார்.

“இன்ஸ்பெக்டர், லெட்டர் எழுதியவன் பேசறான்.. நீங்க வேணுமாம் அவனுக்கு…”

“ஹலோ, நான் இன்ஸ்பெக்டர் பேசறேன்…”

OruPistol

“ஹலோ இன்ஸ்பெக்டர்! ஆன்ட்டி ரேடியேஷன் சங்கத் பிரதிநிதி பேசறேன். இந்த கேஸ் சம்பந்தமா நீங்க அவரை விசாரிச்சிட்டுருக்கற நேரம், ஊர்ல ஏதாவது ஊர்வலம் நடந்தா அதை ஒழுங்குப்படுத்தப் போகலாம்…வேலை செஞ்ச திருப்தியாவது உங்களுக்கு இருக்கும். ஏன்னா எப்படியிருந்தாலும் சாயந்தரம் நாலு மணிக்கு ராகவராவ் எங்க தோட்டாவுக்கு பலி!”

“ராஸ்கல், யாருடா நீ? எங்கிருந்து பேசறே?”

“இன்ஸ்பெக்டர், ‘அது என்ன நாலு மணி?”ன்னு நீங்க யோசிச்சீங்களா? ஏதாவது ராகுகாலமா…எமகண்டமா?. ஊஹூம்…சேர்மனையே கேட்டுப் பாருங்க, பதில் கிடைக்கும்…”

தொடர்பு மூச்சிழந்தது.

“மிஸ்டர் சேர்மன், இன்னும் சாயந்திரம் நாலு மணிக்கு உங்க ஷெட்யூல் என்ன?”

“மத்திய அமைச்சர் ஹரீஷ்சந்தர் கூட ஒரு அரை மணி நேர டிஸ்கஷன் இருக்கு! ட்ராவலர்ஸ் பங்காளவுக்குப் போய் அவரை நான் மீட் பண்ணனும்…”

“நீங்க நாலு மணிக்கு ட்ராவலர்ஸ் பங்களா போகலை!”

“என்ன சொல்றிங்க இன்ஸ்பெக்டர்! அமைச்சர் அவ்வளவு பிஸிக்கு இடையிலும், இந்த டிஸ்கஸனோட முக்கியத்துவத்தை உணர்ந்து எனக்கு அரை மணி நேரம் ஒதுக்கிருக்கார். நான் போகாம இருக்க முடியாது… அணு ஆராய்ச்சி சம்பந்தமான முக்கிய டிஸ்கஷன் தான்!”

மத்திய மந்திரியைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்பதில் ராகவராவ் ஆணியடித்து போன்று உறுதியோடிருந்தார். கூடவே, அந்தக் கொலை மிரட்டல் பயமும் இணைபிரியாமல் வியர்க்க வைத்துக் கொண்டிருந்தது. கவலையோடு கேட்டார்.

“எது எப்படியோ… நாலு மணி வரைக்கும் இந்த பங்களாவை விட்டு நான் எங்கேயும் போகமாட்டேன். அதுக்குள்ளே இந்த மிரட்டல் கோஷ்டியைப் பிடிக்க முடியாதா இன்ஸ்பெக்டர்?”

பங்களவைச் சுற்றிலும் மஃப்டியில் கான்ஸ்டபிள்களை நிற்க வைத்துவிட்டுப் போயிருந்தார் இன்ஸ்பெக்டர். அரை மணிக்கொரு தடவை ராகவராவை போனில் தொடர்புகொண்டு தைரிய வைட்டமின்கள் அளித்துக் கொண்டிருந்தார்.

நிமிஷத்துக்கொரு தடவை சாத்தி வைத்திருக்கும் நாலு திசை ஜன்னல் கதவுகளையும் திறந்து திறந்து பார்த்து, மஃப்டி கான்ஸ்டபிள்கள் விழிப்போடு இருக்கிறார்களா என்று சோதித்துக் கொண்டார் ராகவராவ்.

அதையும் மீறிச் சில பய விரல்கள் அவரின் இருதயப் பரப்பை நிரடிப் பார்த்துக் கொண்டிருந்தன.

“இத்தனை பாதுகாப்பையும் ஏமாற்றம் குடிக்கச் செய்துவிட்டு அந்த மிரட்டல் கோஷ்டிக்காரன் பங்களாவுக்குள் மூக்கை நீட்டிவிட்டால்…?”

டெலிபோன்…

ரிசீவரைப் படக்கென்று எடுத்துக் காதில் வைத்தார்.

“இன்ஸ்பெக்டர்… நாலு மணிக்கு இன்னும் முழுசா என்பது நிமிஷம்கூட இல்லை. அந்த ‘ஆன்ட்டி ரேடியேஷன் கிளப்’ பத்தி எதாவது தெரிஞ்சுதா?. நேரம் ஆக ஆக எனக்கு இங்கே ரொம்ப கலக்கமா இருக்கு…”

“கவலைப்படாதீங்க… கிளப்பைக் கண்டு பிடிச்சிட்டோம்…”

அவருக்கு குபுக்கென்று உயரப் பரந்த சந்தோஷப பட்டம், அடுத்த வினாடியே நூலறுந்து போனது – தொடர்ந்து வந்த மறுமுனையில் குரலால்!.

“… அப்படின்னு சொன்னா உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும், இல்லையா சேர்மன் சார்?. ஸாரி… பேசறது இன்ஸ்பெக்டரல்ல! ஆன்ட்டி ரேடியேஷன் மெம்பெர்!”

“நீ… நீயா?”

“ஆமா, நான்தான்… உங்களுக்கு ரொம்பப் பக்கத்துலதான் இருக்கேன். உங்க இன்ஸ்பெக்டர், சோதா கான்ஸ்டபிள்ஸ் சில பேரை நிறுத்தி வெச்சிட்டு என்னைத் தேடி ஊர் பூராவும் அலைஞ்சுட்டிருக்கார்…”

“எ… எங்கிருந்து பேசறே?”

“அதை நான் சொல்றத்துக்கு முன்னாடி, உங்ககிட்ட சில கேள்விகள்…”

“என்ன வேணும் உனக்கு? என்ன கேக்கப் போறே?”

“நிஜத்தைச் சொல்லுங்க… சாகப் போறோம்னு முடிவா தெரிஞ்சதும், காலையிலிருந்து உங்களுக்கு இருதயம் ‘பக்.. பக்..”னு அடிச்சுக்கலையா? ஆமாவா, இல்லையா?”

“அ.. ஆமா..”

“என்னதான் இன்ஸ்பெக்டர் உங்களுக்கு ஆயிரம் சமாதானம் சொன்னாலும்… என்னதான் அவர் பாதுகாப்பு நடவடிக்கையா நாலஞ்சு மஃப்டி கான்ஸ்டபிள்களை வீட்டைச் சுத்தியும் நிக்க வெச்சிட்டுப் போயிருந்தாலும் அதையும் மீறி நான் உள்ளேய வந்துடுவேனோன்னு உங்களுக்கு மனசுக்குள்ளே கலக்கம் இருந்ததா, இல்லையா?”

“இ.. இருந்தது…”

“நீங்க முழுமூச்சோட ஆதரிச்சிட்டிருந்தீங்களே, ‘அணு ஆராய்ச்சி மையம்’… அது, இதே மாதிரிதான் சேர்மன் சார், ஒவ்வொரு நிமிஷமும் ‘உங்களைச் சாகடிச்சிடுவேன், சாகடிச்சிடுவேன்..’னு எங்களை மிரட்டிக்கிட்டிருக்கு! என்னதான் ஆயிரம் சமாதானங்கள் நீங்க சொன்னாலும், விஷயம் தெரிஞ்ச ஒவ்வொருத்தனோட மனசும் படபடத்துட்டுதான் இருக்கு! எவ்வளவு தான் ‘பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கு’னு நீங்க தைரியம் சொன்னாலும் அதையெல்லாம் மீறிக் கதிரியக்கம் கசிஞ்சிடுமோனு நாங்க எல்லோரும் கலக்கமா இருக்கோம், கசிய ஆரம்பிச்சாச்சுனா, அதோட பின் விளைவுகளை நினைச்சுப் பாருங்க! காலையிலேருந்து சாயந்திரம் வரை ஜஸ்ட் ஆறு மணி நேரம் மரண பயத்துல நீங்க எவ்வளவு டென்ஷனா இருந்தீங்க? இதே மரண பயத்தோட ஒவ்வொருத்தனும் ஆயுள் பூராவையும் கழிக்கணும்னா, நிலைமையைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க!

உங்களைக் கொல்லனுங்கற நோக்கம் உங்களுக்குத் துளிக்கூட இல்லை. எங்க பயத்தை உங்களுக்குத் புரிய வைக்கணுங்கறத்துக்காகத்தான் இந்த மிரட்டல் நாடகம் துவக்கினோம். இப்போ உங்களுக்கு எங்க பயம் என்னங்கிறது புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

நாலு மணிக்குத் தாராளமா, தைரியமா நீங்க மத்திய மந்திரியைச் சந்திச்சு அணு ஆராய்ச்சியைப் பத்திப் பேசலாம்! ஆனா, அது சம்பந்தமான உங்க பழைய பிடிவாதத்தை மட்டும் தளர்த்திடுவீங்கன்னு நம்பறோம். உங்க பேச்சுல விரும்பத்தக்க மாற்றம் இருக்கும்னு நம்பறோம்!”.

மறுமுனை ‘டொக்’கென்று சாத்தப்பட்டது.

எந்த ‘டொக்’கில் ஏராளமான நம்பிக்கை இருந்ததை உணர்ந்தார் ராகவராவ்.

– ஆனந்த விகடன் 1989(நன்றி: http://www.sathyarajkumar.com/)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *