எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: December 9, 2023
பார்வையிட்டோர்: 4,584 
 
 

(1998ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 15-16 | அத்தியாயம் 17-18

அத்தியாயம்-17

கன்னியாகுமரியின் கடற்கரையில் நடந்துவிட்டு தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு திரும்பி வந்து கொண்டிருந்த கிருஷ்ணகுமார் கடையில் அன்றைய ஹிண்டு பேப்பர் ஒன்றை வாங்கிக்கொண்டு அறைக்குப் போனான். ஸ்போர்ட்ஸ் பகுதியில் டென்னிஸ் விளையாட்டு சம்பந்தமான செய்திகளை ஆர்வத்துடன் பல நிமிஷங்கள் வாசித்துக் கொண்டிருந்தான். அவன் வாசித்துப் போட்டிருந்த ‘மெட்டாஃபிக்ஷன்’ புத்தகங்கள் சுற்றிலும் கிடந்தன. சுவாரஸ்யம் இல்லாமல் செய்தித்தாளின் மற்ற பக்கங்களையும் கிருஷ்ணகுமார் நோட்டம் விட்டான். அவனின் பார்வையில் சிவசிதம்பரம் கொடுத்திருந்த விளம்பரம் பட்டது. ஆவலுடன் படித்துப் பார்த்தான். படித்ததும் விசித்திரமாக இருந்தது. என்ன இது; முட்டாள்தனமான விளம்பரமாக இருக்கிறதென்று நினைத்தான். தன்னுடைய அப்பாதான் கொடுத்திருக்கிறாரா என்பதை நிச்சயம் செய்து கொள்ள மீண்டும் மீண்டும் முகவரியை வாசித்தான். சிவ சிதம்பரம் கொடுத்திருக்கும் விளம்பரம்தான். சந்தேகமே இல்லை. கிருஷ்ணகுமாருக்கு ஆச்சர்யமாக இருந்தது. என்ன இது- அபத்தமாக இருக்கிறதே… கல்மாதிரி நான் இங்கு உட்கார்ந்திருக்கிறேன்; வீடு திரும்பி வந்துவிட்டதாக அப்பா விளம்பரம் தந்திருக்கிறாரே… என்ன இது; ஒன்றுமே புரியவில்லையே… இப்படியொரு விளம்பரம் எப்படிக் கொடுக்கமுடியும்? அப்பாவிற்கு மூளை பிசகிவிட்டதா; இல்லை கனவு கண்டாரா? யோசிக்க யோசிக்க கிருஷ்ணகுமாருக்கு எதுவுமே புலப்படவில்லை. சென்னைக்குப் போன் போட்டுப் பார்க்கலாமாவென்று யோசித்தான். அந்த யோசனை சரியாகப்படவில்லை. ஒரு சந்தேகம் கிருஷ்ண குமாரின் அறிவில் சரேலென பாய்ந்தது. பத்து நாட்களுக்கு முன்பு என்னைக்காணோம் என்று அப்பா கொடுத்திருந்த விளம்பரத்தைப் பார்த்து விட்டு எவனாவது என்னைப் போலவே இருக்கிற ஒருத்தன் அந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு ‘நான் தான் கிருஷ்ணகுமார்’ என்று வேஷம் போட்டுக்கொண்டு அப்பாவையும் அம்மாவையும் ஏமாற்றிய படி வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறானோ வென்று சந்தேகப்பட்டுப் பார்த்தான் கிருஷ்ணகுமார்… ஆனால் அதெல்லாம் சாத்தியமே இல்லை. வெரி ரிமோட்… எனத் தோன்றியது. அதெல்லாம் சினிமாவில்தான்! நிஜவாழ்க்கையில் அது மாதிரியெல்லாம் நடக்கமுடியாது. அப்படியானால் இந்த விளம்பரத்தின் பொருள்? சும்மா விளையாட்டுக்காக இப்படியொரு விளம்பரம் கொடுத்துவிடமுடியாது. அப்பாவிற்கு அப்படிப்பட்ட விசித்திர சிந்தனையெல்லாம் தோன்றவே தோன்றாது… 

-கிருஷ்ணகுமாரால் அந்த விளம்பரத்தை அலட்சியப் படுத்திவிட்டு இயல்பாகவும் இருக்க முடியவில்லை. இந்த மனோ நிலையில் தொடர்ந்து வீட்டைவிட்டு நீங்கியிருக்க முடியாது என்றும் தோன்றியது. இத்தனை நாள் கண்காணாமல் இருந்த அதிர்ச்சி வைத்தியமே போதும் என்றிருந்தது. 

பகல் ஒருமணி அளவில் கிருஷ்ணகுமார் வீடு திரும்பி விடலாம் என்ற முடிவிற்கு வந்தான். அதற்கு மேலும் யோசித்துக் கொண்டிருக்காமல் அறையை காலி செய்துவிட்டு நாகர்கோவில் விரைந்தான். மாலை நான்கு மணிக்கு சென்னை கிளம்பிய ஆடம்பரமான வீடியோ பஸ்ஸில் நகம் கடித்தவாறு கிருஷ்ணகுமார் வீடு போய்ச்சேர்கிற அவசரமான உணர்வுகளுடன் அமர்ந்திருந்தான்… சென்னை நோக்கி பஸ் பறந்து கொண்டிருந்தது. 

அத்தியாயம்-18

புதன்கிழமை இரவு பன்னிரண்டு மணிவரை வெறுமே விளக்கை அணைத்துவிட்டு விழித்தபடி படுத்திருந்த கரிகாலன் ப்ரீஃப் கேஸை எடுத்துக்கொண்டு இருளில் படிகளில் இறங்கிவந்தான். பூஜை அறையின் கதவை திறந்து உள்ளே நுழைந்து கதவைச் சாத்தினான். பீரோவைத் திறந்து லாக்கரையும் திறந்து பதட்டப்படாமல் நகைகளையும் வைரங்களையும் எடுத்து ப்ரீஃப் கேஸில் அடுக்கிக் கொண்டான். பின் பழையபடி அத்தனையும் உபகரணங்களால் பூட்டிவிட்டு ஓசைப்படாமல் படி ஏறி மாடி அறைக்குப் போனான். லேசாக வியர்த்திருந்தது. சில நிமிடங்கள் உட்கார்ந்து ஓய்வெடுத்தான். ஜன்னல் வழியாகக் கீழே பார்த்தான். எதிர்வீட்டு வாசலிலும் செக்யூரிட்டி இருந்தது. பின் கரிகாலன் மீண்டும் கீழே இறங்கி ஹாலில் நின்றான். செல்வம் குறிப்பிட்ட அறையை நோக்கி நடந்தான். சில நிமிடங்களில் பூட்டு திறந்து கொண்டது. உள்ளே நுழைந்து விருட்டெனக் கதவைச் சாத்தினான். இருளில் சிறிய பீரே புலப்பட்டது. சிகரெட் லைட்டரை கரிகாலன் எரிய விட்டான். அவன் எதிர் பாராமல் பீரோ சாவி பீரோவிலேயே இருந்தது. அது பீரோவின் முக்கியத் துவத்தைக் குறைத்தது அவனுக்கு. பீரோவின் கதவைத் திறந்தான். மொத்தம் பணம் ஆறாயிரம் ரூபாய்தான் இருந்தது. கரிகாலன் தடவித் தடவிப்பார்த்தான். வேறுபணம் இல்லை.மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அறையைச் சுற்றிலும் பார்த்தான். பரணில் சில தலையணைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கட்டில் ஒன்றில் மெத்தை விரிந்து கிடந்தது. யாராலும் உயயோகிக்கப்படாமல் மெத்தை விரிப்புகள் சுருக்கம் இன்றிவிரித்திருந்தன. கட்டிலில் ஏறி பரணைப் பார்த்தான். தலையணைகளைத் தொட்டு அழுத்திப் பார்த்தான். வித்தியாசமாக எதுவும் தென்படவில்லை. இறங்கி மெத்தையைத் தொட்டு தடவிப் பார்த்தான். சிறிது தள்ளி நின்று கட்டிலைக் கவனித்தான். வித்தியாசம் தெரிந்தது. சுற்றிச் செல்லும் ஸ்டீல் சட்டம் அதிகபட்சம் மூன்று அங்குலங்களுக்குமேல் இருந்து கரிகாலன் பார்த்ததில்லை. இந்தக் கட்டிலில் அந்த நீண்ட பட்டை ஐந்து அங்குல அகலமாவது இருக்கும் போலிருந்தது. கரிகாலன் குனிந்து கட்டிலின் கீழ்ப்புறத்தைத் தடவிப் பார்த்தான். சட்டத்தின் கீழ்முனைவரை கட்டிலின் தளமும் தாழ்ந்து அமைக்கப்பட்டிருந்தது. கரிகாலன் நம்பிக்கையுடன் நிமிர்ந்து மெத்தையை மடித்துப் புரட்டினான். கட்டிலைச் சுற்றிலும் ஸடிக்கர் அழகு வேலைப்பாடு போல நீளநீளமாய் ஒட்டப்பட்டிருந்தது. கரிகாலன் கூர்மையாகக் கவனித்தான். பக்கவாட்டு முனையில் குறுக்காக ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் ரிப்பனை கரிகாலன் உரித்து நீக்கினான். கட்டிலின் வலது முனைத் தளத்தில் இரண்டு சாவித்துவாரங்கள் தெரிந்தன. புதயலைக் கண்டுபிடித்துவிட்ட வன்மத்துடன் உபகரணங்களால் சில நிமிடங்களில் திறந்து; கட்டில் சட்டத்தை இடப்புறமாய் ஜாக்கிரதையாய்த் தள்ளினான். தளம் துளித்துளியாய் விலகியது. கரன்சி நோட்டுக்கள் கட்டுக்கட்டாக நிரம்ப அடுக்கப்பட்டிருந்தன. கரிகாலன் சந்தோஷத்தால் பூரித்தான்… இத்தனை பணம் போதும் இத்தனை பணம் போதும் என்று அவனின் உணர்வுகள் குதூகலித்து கும்மாளமிட்டன. மாடிக்குப் போய்த் தயாராக வைத்திருந்த, கிருஷ்ணகுமாரின் சிறிய சூட்கேஸை எடுத்து வந்து நிரப்பினான். குறைந்தது நான்கு லட்சரூபாய் இருக்கலாம் என்று தோன்றியது. பேண்ட் பாக்கெட்டிலும் சில கரன்சி கட்டுக்களை எடுத்துத் திணித்துக் கொண்டான். கடமை முடிந்தது.கட்டில் தளத்தை பழையபடி மெதுவாக நகர்த்தி ஸ்டிக்கரை ஒட்டினான். பூட்டிக் கொண்டிருக்கிற பொறுமை இல்லை. மீண்டும் மெத்தையை விரித்து விரிப்புகளைச் சரி பண்ணினான். வேலை பூர்த்தியாகியது. பீரோவில் இருந்த ஆறாயிரம் ரூபாயில் கரிகாலன் கை வைக்கவில்லை. சூட்கேஸ்; ப்ரீஃப்கோஸ் இரண்டையும் ஓசை இல்லாமல் மாடி அறையில் கொண்டு போய் வைத்தான். இறங்கி வந்து அந்த அறைக்கதவின் பூட்டை கச்சிதமாய்ப் பூட்டினான். கொள்ளை நிறைவுற்றது. கரிகாலன் மாடி அறையில் துள்ளித் துள்ளிக்குதித்தான். மனம் கும்மாளமிட்டது. சிவசிதம்பரம்! நெஜமாவே கல்கட்டா போய் எலக்ட்ரானிக்ஸ் பிசினெஸ்தான் ஆரம்பிக்கப்போறேன் என்று இன்பமுணகல் முணகினான்! கரிகாலன் வாட்ச்சைப் பார்த்தான். மணி மூன்று. இன்னும் சில மணி நேரங்கள். இன்னும் மிகச் சிலமணி நேரங்கள்… அவ்வளவுதான் கிருஷ்ணகுமாராக இயல்பாக வந்தது மாதிரி கிருஷ்ணகுமாராக இயல்பாகவே வெளியேறி விடலாம். அவசரமோ அதிரடி நடவடிக்கைகளோ தேவையில்லை. சிவசிதம்பரம் ஆபீஸ் கிளம்பிப் போனதும்; மீண்டும் வீட்டைவிட்டு ஓடிப்போவதாக டைப் பண்ணி வைத்திருக்கும் காகித குறிப்பை டி.வியின் மேல் வைத்துவிட்டு; சிவசிதம்பரத்தின் மனைவி குளித்துக் கொண்டிருக்கும் போது; வெளியில் போய்விட்டு வருவதாக அழகாகச் சொல்லி விட்டே ஹோண்டாவில் ஏறிச் சீர் வரிசைகளோடு ஜோராகப் பறந்துவிடலாம்… 

கரிகாலன் துடிக்கும் உணர்வுகளுடன் காத்திருந்தான். பொழுதுவிடிவதை ஆனந்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். சிவசிதம்பரத்தின் ஒவ்வொரு அசைவையும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தன. சூட்கே ஸையும் ப்ரிஃப்கேஸையும் தயார் நிலையில் வைத்திருந் தான். சிவசிதம்பரம் ஒன்பது மணிக்கு ஆபீஸ் கிளம்பிப் போனார். அவர் போன பத்துநிமிடங்களில் அவரின் மனைவி குளிப்பதற்காக பாத்ரூமிற்குள் போனாள். கரிகாலன் டைப் செய்த காகிதத்தை டி.வி.யின் மேல் வைத்தான். தன்னுடைய பொக்கிஷங்களை இரண்டு கைகளில் எடுத்துக்கொண்டான். பாத்ரூமின் அருகில் போனான். “அம்மா; நான் வெளியில் போறேன்… போயிட்டு மத்யான சாப்பாட்டுக்கு வந்திடறேன்,” என்றான். 

“ஒரு மணிக்குள்ளே வந்திடு.” அந்த அம்மாள் உள்ளிருந்தே குரல் கொடுத்தாள். 

“சரிம்மா.” 

கரிகாலன் பெட்டிகளுடன் வெளியேறுவதை பணியாட்கள் நூதனமாகப் பார்த்தார்கள். அவர்களைப் பொருட்படுத்தாமல் கரிகாலன் ஷெட் நோக்கிப் போனான். ஹோண்டாவில் பெட்டிகளை விழாமல் கவனமாய்ப் பொருத்தி வைத்தான். கடவுளை மனத்துள் நன்றியுடன் பிரார்த்தனை செய்தபடி ஹோண்டாவில் அமர்ந்தான். அப்போது வெளியில் ஆட்டோ வந்து நின்றது. 

கரிகாலன் ஹோண்டாவை ஸ்டார்ட் செய்தான். ஆட்டோவில் இருந்து கிருஷ்ணகுமார் இறங்கினான். கரிகாலன் மெதுவாக ஹோண்டாவை கேட் நோக்கி செலுத்தினான். 

கிருஷ்ணகுமார் கேட்டைத் தாண்டி உள்ளே நடந்தான். 

வெளியில் நோக்கி ஹோண்டாவில் நகரும் கரிகாலன்… 

உள்ளே விரைந்துவரும் கிருஷ்ணகுமார்.. 

கரிகாலனும் கிருஷ்ணகுமாரும் எதிர்எதிரே… மறுவிநாடியே கரிகாலனுக்குப் புரிந்துவிட்டது. எதிரில் ஒரிஜினல் கிருஷ்ணகுமார் – ஸ்தம்பித்து. 

கரிகாலன் ஒரு விநாடிகூட தயங்கவில்லை. அசுரவேகத்தில் ஹோண்டாவை செலுத்திக்கொண்டு வெளியேறி பறந்துவிட்டான் அடுத்தடுத்த சாலை களையெல்லாம் கடந்து… 

அதனாலென்ன? எல்லாக் குற்றவாளிகளின் சாலைகள் எல்லாமே இறுதியில் சிறைச்சாலையை நோக்கித்தான் என்பதால்; அடுத்து ஆரம்பித்து நிகழப்போகும் பரபரப்பான சம்பவங்களை விவரித்துத் தெரிவித்துக் கொண்டிருப்பது தேவை அற்றது. ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிட்டு விடலாம். கரிகாலனை கிருஷ்ணகுமாராகக் கண்டு பிடித்த மார்னிங் ஸ்டார் துப்பறியும் நிறுவனத்தைச் சார்ந்த ஆனந்த் என்ற இளைஞன் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளப் போகிறான்…

-முற்றும்-

– எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி (நாவல்), முதற் பதிப்பு: 1998, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *