எனக்கு வெட்கமாக இருக்கிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: September 1, 2012
பார்வையிட்டோர்: 10,370 
 

இந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசுவதற்கு எனக்குத் தயக்கமாக இருக்கிறது. ஆனால் யாரிடமாவது சொல்லிவிட வேண்டும் என்றும் ஒரு உந்துதல் இருக்கிறது.

தற்சமயம் மென்பொருள் ஒன்று கற்றுக் கொண்டிருக்கிறேன். நிறுவனத்தில் பணி முடிந்த பிறகு பயிற்சி, அதன் பின்னர் இரவு உணவு முடித்து வீடு செல்ல இரவு 11 மணி ஆகிவிடுகிறது. ஹைதராபாத் நகரில் முக்கியமான பகுதிகள் யாவும் தில்ஷிக்நகர்-பட்டான்சேரு என்னும் ஒற்றைச் சாலையில் இணைக்கப்பட்டு விடுகின்றன. எஸ்.ஆர் நகரும் மியாப்பூரும் கூட அந்தச் சாலையிலேயே வருகின்றன. பயிற்சி நிறுவனம் எஸ்.ஆர் நகரிலும், வீடு மியாப்பூரிலும் இருக்கின்றன. இரவில் நேரம் ஆகிவிடுவதால் ஷேர் ஆட்டோ பிடித்து வந்து விடுவேன். பெரும்பாலான ஆட்டோக் காரர்கள் இடையில் ஹைதர் நகர் என்னும் இடத்தோடு நின்றுவிடுவார்கள். அதன் பின்னர் வேறு ஆட்டோவில் மூன்று கிலோமீட்டர்கள் பயணம் செய்ய வேண்டும்.

நேற்று முன்தினம் நன்கு மழை பெய்தது. ஹைதர் நகரை அடையும் போது மழை நின்று விட்டிருந்தது. ஆனால் மணி 11.30ஐ தாண்டிவிட்டது. மூன்று கிலோமீட்டர் நடப்பது எனக்குப் பெரிய விஷயமல்ல. ஆனால் இந்தச் சாலை கொஞ்சம் பயத்தைத் தந்தது. இந்த மூன்று கிலோ மீட்டர்களிலும் குடியிருப்பு எதுவுமில்லை. கிட்டத்தட்ட சிறிய வனப் பகுதி. சாலையின் ஓரத்தில் அரவாணிகளும் பெண்களும் நின்று கொண்டிருப்பார்கள். லாரி டிரைவர்களும், இரு சக்கர வாகனத்தில் வரும் ஆண்களும் சிறுநீர் கழிப்பது போல நின்று கொண்டிருப்பார்கள். இவர்களுக்குள்ளாக பேரம் நடக்கும். பின்னர் புதர்களுக்குள் செல்வார்கள். தினமும் ஆட்டோவிலோ அல்லது பஸ்ஸிலோ வரும் போது வலது பக்கமாக, இந்த நிகழ்வுகளை கவனிப்பதற்காகவே இடம் பிடிப்பேன்.

இவை குறித்து எனக்கு முன்னமே தெரியும். ஓரிரு மாதங்களுக்கு முன்பாக இங்கு பணிபுரிந்துவிட்டு, இப்போது அரபு நாடுகளுக்கு சென்று விட்ட நண்பர் ஒருவர் சொல்லி இருக்கிறார். சொல்லியது மட்டுமல்லாமல் என்ன நடக்கிறது என்பதனை பார்த்து வரலாம் என முடிவு செய்து கிளம்பினோம். கூட ஒருவர் இருக்கிறார் என்ற போதும் பயம் அதிகமாகவே இருந்தது. “சார், திருபிடலாம்” என பதட்டமான குரலில் வற்புறுத்திக் கொண்டே வந்தேன். இருவருக்கும் தெலுங்கும் தெரியாது, இந்தியும் தெரியாது.

கொஞ்சம் தூரம் நகர்ந்தவுடன் வாகனங்களின் விளக்கொளியில் புதர் அசைவது தெரிந்தது. இருவரில் யார் அசைவுகளைப் பார்த்தாலும் மற்றவருக்கு சுட்டிக் காட்டுவது என பயம் குறைய ஆரம்பித்தது. இன்னும் கொஞ்ச தூரத்திற்குள்ளாக கைதட்டும் ஓசை கேட்டது. அது எங்களுக்குத் தான். மூன்று பேர். எங்களைப் பார்த்து ஏதோ சொன்னார்கள். நண்பருக்கும் பயம் வந்திருக்கக் கூடும். கிளம்பி விடுவது நல்லது என்றார். கூடுதல் வேகத்துடன் நடக்க ஆரம்பித்தோம். தூரத்தில் கைதட்டும் ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது.

இந்தச் சாலையில் தனியாகச் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்ளாக எப்படியோ வந்து விட்டது. ஆனால் இன்று அது உகந்தது அல்ல என்பது தெரியும். மாத செலவுகளுக்காக இன்றுதான் பணம் எடுத்து வந்திருந்தேன். பஸ் அல்லது ஆட்டோ எதுவும் வருவதாக இல்லை. சில இரு சக்கர வாகனக்காரர்களும் நிற்காமல் சென்றது என்னை ஒரு வழியாக்கிவிட்டது.

நடப்பது தவிர வேறு வழியில்லை. ஒன்றரைக் கிலோமீட்டர்கள் கடந்து விட்டேன். மனம் கொஞ்சம் தெளிவாக இருந்தது. அடுத்த கணம் பயம் தொற்ற ஆரம்பித்தது. இரு ஆண்களும் மூன்று பெண்களுமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவன், ஒருத்தியின் மார்பின் மீது கை வைக்க அவர்களுக்குள் சத்தம் அதிகமாக கேட்க ஆரம்பித்தது. வேகமாக நடக்க ஆரம்பித்தேன். நான் சிறிது தூரம் நடப்பதற்குள்ளாக பேச்சு வார்த்தை முறிவடைந்து விட்டது போல இருந்தது. வண்டியைக் கிளப்பினார்கள். பெண்கள் கத்தினார்கள். அநேகமாக சாபமாக இருக்கக் கூடும். அதுவா முக்கியம், இவ்விடத்தைக் கடந்தாக வேண்டும்.

ஒருவள் என்னைப் பார்த்திருக்கக் கூடும். கைதட்டினாள். கிட்டத்தட்ட ஓட ஆரம்பித்துவிட்டேன். ஒன்றரைக் கிலோமீட்டர்கள் ஓட வேண்டும். ஒருகையை சட்டை பாக்கெட்டின் மீதாக வைத்துக் கொண்டு ஓடுகிறேன். மழை ஈரத்தில் வழுக்கும் சாலை என் பிரச்சினையை அதிகப் படுத்தியது. அவர்களும் பின்னால் துரத்துவது தெளிவாகத் தெரிகிறது. திரும்பிப் பார்க்கவும் பயம். வழுக்கி விழுந்தால் மாட்டிக் கொள்ளக் கூடும். வேகமாகவும் ஓட வேண்டும் அதே சமயம் கவனமாகவும். ஒருத்தி கத்த ஆரம்பிக்க மற்றவர்கள் சிரித்தார்கள்.

திடீரென வேறு இரண்டு பேர் புதர்களுக்குள்ளாக இருந்து, என் முன்னால் வந்து நின்றார்கள். ஒருத்தி தனது முந்தானையை விலக்கினாள். மழையில் நனைந்திருந்து, சோடியம் விளக்கொளியில் தெளிவாகத் தெரிந்தாள். என்ன செய்வது என்று தெரியவில்லை. நின்று விடுவதுதான் உசிதம். ஐந்து பேரும் சூழ்ந்து கொண்டார்கள். தெலுங்கு, உருது, ஹிந்தியில் பேசினார்கள். நான் என்ன பேசினேன் என்று தெரியவில்லை. திடீரென்று ஒருத்தி என் செல் போனையும், பர்ஸையும் பிடுங்கிக் கொண்டாள்.

“சாரு டப்புலு ஈச்சாரு, நுவ்வு சந்தோஷம் இவ்வு” என்று அரைகுறையாக அவர்கள் பேசுவதை அர்த்தம் செய்து கொண்டேன். “ஒத்து, ஒத்து” என்று சொல்லிக் கொண்டே, அழ ஆரம்பித்திருந்தேன். இருவர் என்னை தூக்கி செல்ல ஆரம்பித்தனர். புதர் மிகுந்த பயத்தைத் தர ஆரம்பித்தது. முள் பட்டு சதை கிழிய ஆரம்பித்திருக்கக் கூடும். பயத்தோடு வலியும் சேர, மழை வேறு தூற ஆரம்பித்தது.

மிகக் கொடூரமாக அறைந்து, என் சட்டையைக் கழட்டத் துவங்கினாள். இனியும் தாங்க முடியாது. நடுக்கம் அதிகமானது.

கண் விழித்து விளக்கைப் போட்டேன். நண்பர்கள் பிரேசில்-பிரான்ஸ் கால்பந்தாட்டம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நன்றாக வியர்த்திருந்தது. நண்பர்களிடம் சொன்னென். இந்த வயதில் இப்படியெல்லாம் கனவு வரும் என்றார்கள். தண்ணீரைக் குடித்துவிட்டு சிரித்துக் கொண்டிருந்தேன்.

– ஜூலை 3, 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *