கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: June 10, 2024
பார்வையிட்டோர்: 1,877 
 
 

(1963ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-20 | அத்தியாயம் 21-30 | அத்தியாயம் 31-40

அத்தியாயம்-21

“திப்பிலியாபுரத்து ரைஸ்மில், கிராமத்துக்குட் போகிற கப்பி ரோட்டு ஆரம்பத்திலேயே இருந்தது. திப்பிலியாபுரத்துக்குப் போகிறவர்கள் அந்த ரைஸ் மில்லைத் தாண்டித்தான் போக வேண்டும். மின் சாரத்தால் இயங்கும் மில்லாகத்தான் தன் பிள்ளைக்கு வாங்கித் தந்திருந்தார் ராமுவையர். ஒரு மாடிக் கட்டிடத்தைக் கட்டி அதைச் சுற்றிலும் பூந்தோட்டம் ஒன்று வைத்து, நெல் உலர்த்தும் களம் ஒன்றும் பெரிதாகப் போட்டு, பாய்லரும் பெரிதாக வைத்து இயங்கத் தொடங்கிய மில், திப்பிலியாரின் புதுச்சேரி வியாபாரம் தலைதூக்கிப் பெரிதாக நடக்கத் தொடங்கியதுமே பெரிதாகக் காம்பவுண்டுச் சுவருடன், மில் முதலாளிக்கு ஒரு தனி பங்களாவுடன் நிர்மாண மாயிற்று. பாழடைந்த சிவன் கோயிலின் முதல் இரண்டு பிரகாரங்களும் நாளடைவில் மில் காம் பவுண்டுக்குள் எப்படியோ சேர்ந்துவிட்டன. அந்தப் பிரகாரங்களில் கட்டிடம் கட்ட அஸ்திவாரம் போடத் தோண்டிய போதுதான் திப்பிலியாருக்குப் புதையல் கிடைத்தது. ஒரு பெரிய அண்டா நிறையப் பொன் காசுகள் கிடைத்தன என்று சொல்லிக் கொண்டார்கள்.” 

“மில்லைச் சுற்றிய நந்தவனத்தை மிகவும் அற்புதமாகக் கவனத்துடன்தான் நிர்மாணித்திருந்தார் திப்பிலியார். எங்கெங்கிருந் தெல்லாமோ அவர் பலவிதமான புஷ்பச் செடிகள் கொணர்ந்து வைத்திருந்தார். ரோஜாக்கள்தான் அவற்றில் ஏராளம். வேறு வேலையில்லாத சமயங்களிலெல்லாம் அவர் ரோஜாப் புதர் களண்டை நின்று எந்தச் செடி எப்படித் துளிர்விட்டிருக்கிறது, எப்படி மொட்டுக் கட்டுகிறது, இவை எப்படிப் பூக்கும் என்று கவனித்துக்கொண்டே பொழுதைப் போக்கிக்கொண்டிருப்பார். திருவாலூர்க் கமலத்திடம் அவருக்கிருந்த ஈடுபாட்டில், ஆசையில் பாதியாவது அவருக்குத் தோட்டம் போடுவதிலும் இருந்தது. விதம் விதமாகப் பூத்து மணக்கும் பூச்செடிகளாக நூற்றுக் கணக்கில் கொணர்ந்து தன் தோட்டத்தில் வைத்து ஆனந்தித்தார் அவர். எங்கள் ஸி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ராஜகோபாலன் ஒரு சமயம் தோட்டம் போடுவதில் இத்தனை ஈடுபாடுள்ள மனிதன் நிச்சயமாகக் கொலைகாரனாக இருக்க முடியாது என்று ஒரு தரம் சொன்னார். அந்தத் தோட்டத்தைப் பல தடவைகள் பார்த்து நான் பரவசப்பட்டிருக்கிறேன்.” 

“இப்போது சொல்லும் போதே பரவசமாகத்தானே சொல்லு கிறீர்கள்!” என்றேன் நான். 

“எனக்கும் தெரியும் திப்பிலியாருக்குத் தோட்டம் போடுவதில் இருந்த ஈடுபாடு. அந்தத் தோட்டத்திலே அவர் இருக்கும் போது அவரிடம் சின்ன விஷயமாக எதுவும் பேசக் கூடாது சின்னத்தனமாக எதுவும் பேசக் கூடாது என்பார் அவர்” என்றான் சம்பந்தம். 

இன்ஸ்பெக்டர் ஃபிரான்ஸிஸ் தனது கதையைத் தொடர்ந்து சொன்னார்: “யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்திலே திப்பிலியார் தனது மில்லைத் தரை மட்டமாக்கி அதைப் புதுப்பித்துப் பலமாகக் கட்டினார். முன்பிருந்த கட்டிடமே நன்றாக இருக்கிறதே விலை வாசிகள் ஏறிவிற்கும்போது, சிமிட்டியே கிடைக்காத போது எதற்காக இப்படி நல்ல கட்டிடத்தை இடித்து விட்டு வேறு கட்டுகிறார் என்றுகூடப் போலீஸாருக்குத் தெரிய வந்ததும் சந்தேகம் எல்லாம் பிறந்தது. மில் பாகங்கள் கூடப் புதுசாக வாங்கினார் நெல்மிஷினுடன், மாவுமில், மற்றும் பல, புது மில்களும் அடங்க வைத்துக் கட்டினார். அதற்குக் காரணம் அவருக்கு மிலிடரி சப்ளைக்கு ஒரு பெரிய ஆர்டர் வந்திருந்ததுதான் என்று அவர் கடைசியில் காரணம் காட்டினார்.” 

“அந்த ஆர்டர் அவர் கட்டிடம் கட்டி மாவுமில் முதலிய புது மில்கள் எல்லாம் வைத்த பிறகு சிரமப்பட்டு ஏராளமாகப் பணங் கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து வாங்கிய ஆர்டர்தான். அவருடைய அருமை நந்தவனத்தில் ஒரு பகுதி புதுக்கட்டிடம் கட்டுகிற வெறியில் வீணாயிற்று அதைக்கூடப் பார்க்காமல் அவர் கட்டிடங்களைக் கட்டி முடித்தார். விசேஷம் இதில் என்ன வென்றால் சில இடங்களில் அவரே முன் நின்று கொத்து வேலை செய்தார். வேலை செய்த சாதாரணக் கொத்தர்களைத் தவிர மற்றவர்கள் உள் வேலை செய்தவர்கள் எல்லோரும் வெளியூர்க்காரர்கள்” என்றான் சம்பந்தம். 

“அந்தக் கொத்தனார்களைப் போலீஸார் தேடினார்கள் என்று மட்டும் எனக்கும் தெரியும். அந்தச் சமயத்தில் அந்தக் கேஸைக் கவனித்துக்கொண்ட போலீஸ்காரர்களில் பிராணதார்த்தி அய்யன் முதலாவது. இரண்டாவது இன்ஸ்பெக்டர் வேறு ஒருவர் நானில்லை. கொத்தனார்கள் கிடைக்கவில்லை என்கிற விவரம் மட்டுமே எனக்குத் தெரியும்” என்றார் ஃபிரான்ஸிஸ். 

அத்தியாயம்-22

“கொத்தனார்கள் அப்படி மறைய வேண்டிய அவசியம் எப்படி ஏற்பட்டது என்பதைக் கண்டு பிடிக்கத்தான் பட்டணத்திலிருந்து காரை எடுத்துக் கொண்டு வந்த அன்றைக்கு, இரவு இருட்டி இரண்டொரு நாழிகைக்கெல்லாம் என்னை அழைத்துக் கொண்டு மில்லுக்குள் போனார் திப்பிலியார். மில் சக்கரம் கழன்றுகொண்டிருக்க வேண்டிய இடத்தில் அப்போது மில்லில் வேலையில்லை; இருட்டின பிறகு சாதாரணமாக வேலை இருப்பதில்லை நின்று கொண்டு ஒரு கதையைச் சொன்னார் எனக்கு.” 

“ஏழுமலை, ஏழுமலை என்று ஒருவன் எங்களிடம் அரிசி பிடிப்பதற்கு வந்தான். ஆயிரக்கணக்கான மூட்டைகளைப் பணம் கொடுத்து கேட்ட பணம் கொடுத்து வாங்கிக்கொண்டு போனான். ஐம்பதினாயிரம் அறுபதினாயிரம் ரொக்கமாகக் கொண்டுவந்து தருவான். ஒரு வருஷம், இரண்டு வருஷம் இப்படி நடந்தது. இப்படி மூன்று வருஷம் நடந்த பிறகு, நாலாவது வருஷம் இருவரும் ஒருவருக்கொருவர் நம்பகமாக வந்தபிறகு, பெரிய அளவில் வியாபாரம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது என்றும், பத்து லக்ஷம் வரையில் பெறுமானமுள்ள அரிசி மூட்டைகள் ஒரே சமயத்தில் கிடைத்தாலும் எடுத்துப்போக இயலும் என்றும் கள்ளமாட்கெட் அரிசிக்கு இலங்கையில் நல்ல கிராக்கி இருந்தது என்றும் தெரிவித்தான்.” “எப்பவுமே அவன் ரொக்கமாகப் பணம் கொண்டு வருபவன் தான். அந்தத் தடவை ஒன்பது லக்ஷம் நூறு 

நூறு ரூபாய்க் கட்டுக்களாக ஒரு டிரங்குப் பெட்டியில் போட்டுப் பூட்டி எடுத்துக்கொண்டு வந்தான். எங்களிடம் ஆட்களும் அரிசி மூட்டைகளும் நில வறையில் தயாராகவே இருந்தன. அந்த இலங்கை அரிசி ஆசாமி வந்த புதிசில்தான் நான் நிலவறைகள் எல்லாம் வைத்து மில்லைப் பெரிதாக்கிக் கட்டினேன். அந்த ரகசியக் களஞ்சியங் களை, பூமிக்கடியில் கட்டிய ஆட்களைக்கூட அப்புறப்படுத்த எனக்கு உதவியவன் அந்த ஏழுமலைதான். இலங்கைக்கு அரிசி யுடன் அவர்களையும் அவன் கடத்திச் சென்றுவிட்டான். ஓரொரு பகுதியாக ஓரொரு கோஷ்டி கொத்தர்கள் கட்டினார்கள் ஆகவே ஒரு கோஷ்டிக்கும் எங்கு என்ன இருக்கிறது என்று முழுவதுமாக பூரணமாகத் தெரியாது.” 

“அந்தச் சமயத்தில்தான் ராஜவேலு அரிசியையும் தராமல் இலங்கையான் ஏழுமலை கொணர்ந்திருந்த ஒன்பது லக்ஷத் தையும் நாமே அடித்துக்கொண்டு விடலாமே என்றான். கள்ளக் கடத்தலில் ஈடுபட்ட ஆசாமி மிகவும் குறைந்த பேர்வழிகளிடம் தான் தான் போகிற இடம், காரியம் எல்லாவற்றையும் சொல்லி யிருப்பான். அவன் கூட்டாளிகளுக்கும் பூரா விவரமும் தெரிந் திருக்க நியாயம் இல்லை. ஆளைத் தீர்த்துக் கட்டிவிட்டால் பணம் ஏற்கெனவே என்னிடம்தான் கொடுத்து வைத்திருந்தான் ஏழுமலை எல்லாம நம்முடையதாகி விடும் என்று யுக்தி சொன்னவன் ராஜவேலுதான். நானும் சம்மதித்தேன்.” 

“ஏழுமலையை அப்புறப்படுத்துகிற காரியத்தில் நான் நேரடியாக ஈடுபடவில்லை. சுலபமாகவே அவனைத் தீர்த்து விட்டான் ராஜவேலு. என்ன செய்தானோ நான் நுணுக்கமாகக் கேட்டுக் கொள்ளவும் இல்லை. அந்த ஏழுமலையின் உடலை அப்புறப்படுத்துவதில் தான் சிரமம் ஏற்பட்டது. ராஜவேலு வினால் அந்தக் காரியத்தைச் சமாளிக்க முடியவில்லை. நான் அவனுக்கு உதவ வேண்டியிருந்தது” என்று சொல்லிவிட்டு ஒரு நிமிஷம் ஒன்றுமே பேசாதிருந்தார் தியாகராஜத் திப்பிலியார். 

“நானும் எதுவும் பேசவில்லை. நானாக எதையும் கேட்டுக் கொள்ள விரும்பவில்லை. அவராகச் சொல்ல விரும்புகிற வரையில் சொல்லட்டும் என்று பேசாதிருந்தேன். ‘இதெல்லாம் எனக்கு எதற்காகத் தெரியவேண்டும்?’ என்று நான் இடைமறித்து இரண்டொரு தரம் கேட்கவும் கேட்டேன். அதைக் காதில் வாங்காமலேயே பேசிக்கொண்டிருந்தார் யசமான். இவ்வளவு தூரம் சொன்ன பிறகு நான் குறுக்கே பேசவில்லை.” 

“முழு நிமிஷம் ஒன்று கழிந்த பிறகுதான் சொன்னார். தனது ஆள் காட்டி விரலைச் சுட்டிக் காட்டி ‘அதோ அந்த இடத்தில் அவனைப் புதைத்து அவன் மேல் செமண்டு தளம் இட்டு அதிலே மில் யந்திரத்தை வைத்துவிட்டோம்’ என்றார்.” 

“சற்று நேரம் கழித்து ‘முதல் தளத்தைப் போட்டு செமண்டு கெட்டிப்படும் வரையில் எங்களிருவருக்கும் உதவி செய்ய நாங்கள் யாரையும்கூப்பிடவில்லை. கூப்பிடவும் முடியாது மிகவும் ரகசியமான வேலை அது. மேலே மில்லை வைத்துக் கட்ட மற்றக் கொத்தனார்கள், ஆட்கள் எல்லாம் இரண்டு நாளில் வந்தார்கள். அவர்களுக்கு ஏழுமலை விஷயமோ அவன் எதற்காக வந்தான் என்பதோ, என்ன கொண்டு வந்தான் என்பதோ எதுவுமே தெரியாது. அவன் அதற்கு முன் வரும்போதும் ரகசியமாகத்தான் வருவான். இரண்டொருநாள் நடமாடுவான் யாருக்கும் அறிவிக்காமல் இரவோடு இரவாகப் போய்விடுவான். இந்தத் தடவையும் அவன் முந்திய இரவு போய்விட்டான் என்றுதான் விளம்பரப்படுத்தினோம். இந்த விஷயத்தினால் ராஜவேலுவுக்கோ எனக்கோ எவ்விதச் சிரமமும் விளைய வில்லை.”

“மீண்டும் சிறிது நரேம் மௌனமானார் திப்பிலியார். பிறகு கையிலிருந்த ஐந்து செல் டார்ச்சினுடைய பித்தானை அழுத்தி மில்லின் அடித்தளம் பூராவும் எனக்குத் தெரியும்படியாகக் காட்டினார். பிறகு ‘இப்போது என் ரகசியம் உனக்குத் தெரியும். அதை நீ தப்பாக உபயோகிக்க மாட்டாய் என்று நம்புகிறேன். என்னை விட உன்னிடம் கமலாவுக்குத்தான் அதிக நம்பிக்கை இருக்கிறது. இதை எதற்காகச் சொன்னேன் என்றால்….” மீண்டும் சிறிது நேரம் தயங்கிவிட்டுத் திப்பிலியார் மேலும் தொடர்ந்து சொன்னார். “நீ நம்ப ஆள். நாங்கள் உன்னைப் பூராவும் நம்புகிற மாதிரி நீயும் எங்களைப் பூராவும் நம்ப வேண்டும் என்று வற்புறுத்துவற்காகத்தான்” என்றார். “அந்த ராஜவேலுவுக்கு உன்னை அடிநாட்களிலிருந்தே தெரியும். ஆகவே உன்னையும் தன் பக்கம் இழத்துக்கொள்ள, என்னிடம் இருந்து கொண்டே எனக்குத் துரோகம் செய்து தனக்கு உதவ, அவன் உனக்கு ஏராளமான பணம் தரேன் என்பான். அதை நீ நம்பிவிடக் கூடாது. என் ஆளாகவே முழு விசுவாசத்துடனும் இருந்துவிட வேண்டும். என் உயிர், என் கமலாவின் உயிர் உன் கையில் இருக்கிறது” என்றார் திப்பிலியார். இன்னும் ஒரு தரம் தன் கை டார்ச்சலைட்டைப் போட்டு ஏழுமலையைப் புதைந் திருந்த இடத்தைக் காட்டிவிட்டுத்தான் அங்கிருந்து என்னையும் அழைத்துக்கொண்டு நகர்ந்தார்.” 

அத்தியாயம்-23 

“அப்படியா விஷயம்?” உறுமலான குரலில் சொன்னார் இன்ஸ்பெக்டர் ஃபிரான்ஸிஸ். “நாளைக்கே போலீஸ் இலாகாவுக்குத் தகவல் தெரிவித்து அந்த மில் அஸ்திவாரத்தை யெல்லாம் தோண்டிப் பார்த்து விடச் சொல்கிறேன்.” 

“தோண்டிப் பார்க்கிறீங்க; ஏழுமலையானுடைய எலும்புகளைப் பொறுக்கிச் சேர்க்கறீங்க. அப்புறம்?” என்று நகைத்தான் சம்பந்தம். 

“உன் மேலே கேஸு போடலாமே” என்றார் இன்ஸ்பெக்டர். 

“லாபம் இல்லாமல் செய்வீங்களா? இப்ப ராஜ வேலுவும் இல்லை, திப்பிலியாரும் இல்லை உங்களுக்குப் பணம் தர. என் கிட்டேயோ பணம் கிடையாது. எனக்காக வேணுமானால் என் தம்பி தினம் ஒரு கப் காபி உங்களுக்குத் தருவான். அதுக்கு மேலே உங்களுக்கு லாபம் ஏதுங்க?” 

“லாபம் இல்லாமல் தர்மம் நியாயம் என்கிறதுக்காக ஒரு காரியத்தை ஒருத்தர் செய்யக் கூடாதா?” என்றார் போலீஸ் இன்ஸ்பெக்டர். 

“பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இந்தியப் போலீஸிலா தருமம் நியாயம் என்பதற்காக ஒரு காரியம் நடந்து விடும்?” என்றேன் நான். இந்த விஷயம் முற்றுமுன் இருவருக்கும் சமரஸம் செய்து வைக்காவிடில் பாக்கிக் கதையை நான் கேட்க முடியாது போய்விடுமோ என்று பயம் எனக்கு. “முடிந்து போன ஒரு கேஸைத் திருப்பித் திறந்துவைத்து அவஸ்தைப்பட இன்ஸ் பெக்டர் ஸாஹிபுக்குப் பைத்தியமா பிடித்திருக்கு. சும்மா சொல்கிறார் அவர் – விடு சம்பந்தம். மேலே பாக்கிக் கதையைச் சொல்லு என்றேன்.” 

என் பாயிண்டை இன்ஸ்பெக்டரும் புரிந்து கொண்டார்: “உண்மையில் மீண்டும் அந்த ராஜவேலு திப்பிலியார் கேஸையும் தொல்லையையும் மேற்கொள்ள எனக்குப் பைத்தியமா என்ன? புதிதாக ஏழுமலை என்று ஒரு பிரேதத்தை வேறு சேர்த்துக் கொள்கிறாய் நீ! சொல்லு, மேலே என்ன ஆச்சு?” என்று ஆவலுடனே கேட்டார். 

“எனக்கு மடியிலே கனம் கிடையாது மனத்திலே பயம் கிடையாது” என்றான் சம்பந்தம். “ஆகவே நடந்தது நடந்தபடி சொல்லிவிடறேன். அதுவும் கதை எழுதற அய்யா கேட்கிறாரே என்றுதான் சொல்றேன். போலீஸ் அய்யாவோடெ சிநேகம் கொண்டுவிடுவதுங்கூட சஞ்சலமாகத்தான் இருக்குதுங்க.” 

“எங்கள் விலையை யெல்லாம் கூடத்தான் நிர்ணயம் செய்து வைத்திருக்கீங்களே நீங்கள் ராஜவேலுவும் திப்பிலியாரும்” என்றார் ஃபிரான்ஸிஸ் கசப்புடன் . 

“அவர்கள் போட்ட மதிப்புக்குக் குறைவாகவே தான் பிரும்மஹத்தி அய்யர் போன்றவங்க அவர்கள் வலையிலே தானாகவே வந்து விழுந்தாங்களே!” என்றான் சம்பந்தம். “எனக்கும் ஒரு விலையுண்டு என்று எண்ணித்தான் ராஜவேலு, திப்பிலியாருடன் சண்டையிட்டுப் பிரிந்து போய் ஒரு மாதத்துக் கெல்லாம் ஒரு மத்தியஸ்தமான ஆளிடம் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தனுப்புகிறேன் தனக்கு உதவ வேண்டும் என்று கேட்டு ஆளனுப்பினான். நான் மறுத்துவிட்டேன். நம்பியிருக்கிற கமலத்தையும் திப்பிலியாரையும் எப்படி மோசம் செய்ய முடியும்?” 

“நிஜமாகவே நீ உன்னைத் தேடிவந்த பத்தாயிரத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக எங்களை நம்பச் சொல்கிறாயா?” என்று கேட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஃபிரான்ஸிஸ். 

சம்பந்தம் அவரைப் பார்த்த பார்வை என் அமைதியைக் கெடுத்தது. அவரிடம் கோபித்துக்கொண்டு கதையைச் சொல்லாமல் போய்விடப் போகிறானே சம்பந்தம் என்று எனக்குப் பயம் வந்துவிட்டது. “ஐயா, இன்ஸ்பெக்டர்வாள். எனக்குக் கிடைக்கிற கதை தப்பிவிடப் போகிறதே என்று எனக்குப் பயமாக இருக்கிறது. நீங்கள் போய்விட்டு நாளைக்கு இங்கே இந்நேரத்துக்கு வாருங்கள். நான் சம்பந்தம் சொன்ன கதையை உங்களிடம் புரியும்படி தெரிவிக்கிறேன். அல்லது எந்த விதத்திலும் சம்பந்தத்தின் கதையில் குறுக்கிடுவதில்லை. அவன் சொல்கிறபடி சொல்லட்டும். அவன் சொல்வதை வைத்து எவ்வித போலீஸ் ஆக்ஷனும் எடுப்பதற்கில்லை கேட்டுவிட்டு மனத்தில் போட்டு வைப்பதைத் தவிர எதுவும் செய்வதில்லை என்று சத்தியம் செய்து கொடுங்கள்” என்றேன் நான். 

சம்பந்தம் நன்றியுடன் என்னைப் பார்த்தான். இன்ஸ்பெக்டர் என்னைச் சபித்துவிடுபவர்போலப் பார்த்தார். “போலீஸ் காரனுடைய சபதத்தை உங்கரௌடி நண்பன் நம்புவானா கேளுங்கள்” என்றார். 

“போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யாவுக்கு துரை துரை என்று ஒரு மகன் இருக்கிறான். பன்னிரண்டு வயதாகிறது அவனுக்கு” என்றான் சம்பந்தம். 

“அவனுக்கென்ன இப்பொழுது?” என்று குரலில் ஒரு பதட்டத்துடன் கேட்டார் ஃபிரான்ஸிஸ். 

“அந்தப் பையன் பேரில் ஆணை வைத்துச் சொன்னாரானால் போலீஸ்காரரே யானாலும் அவர் சொல்றதை நம்பறேன்” என்றான் சம்பந்தம். “இல்லாவிட்டால் மேலே பேசிக்கொண்டு போவது எனக்கு ஆபத்துங்க. பின்னர் சந்தர்ப்பம் நேருகிற போது நீங்களும் நானும் தனியாகச் சந்திக்கிறபோது பேசிக்கொள்ளலா முங்க” என்றான் சம்பந்தம் என்னைப் பார்த்துக் கொண்டே. 

அத்தியாயம்-24

இன்ஸ்பெக்டர் ஃபிரான்ஸிஸ் சபதம் செய்து தருவதாக இல்லை. சம்பந்தமும் கதையை மேலே தொடருவதாக இல்லை. 

நானும் வழக்கத்துக்கு அதிகமாகவே காபி சாப்பிட்டாகி விட்டது. காபி என்கிற அமிர்தமேயானாலும் அளவுக்கு மீறினால் விஷம்தானே? போதும் என்று தோன்றியது எனக்கு. 

கதை மேலே நடக்காது என்று தோன்றிவிடவே சம்பந்தத்தைப் பார்த்து “உனக்கு என்னய்யா வயதாகிறது?” என்றேன். 

“எவ்வளவு என்று மதிப்பீங்க?” என்றான் சம்பந்தம். 

“ஐம்பது என்று சொல்லலாம்.” 

இன்ஸ்பெக்டர் ஃபிரான்சிஸ் சிரித்தார். “அறுபது தாண்டிவிட்டான் சம்பந்தம். குடி, லாகிரி என்று எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவன் அவன். அதனால்தான் இவ்வளவு திடகாத்திரமாக இருக்கிறான்” என்றான். 

“அனுபவத்திலும் ஆகிவிட்டதுங்க” என்றான் சம்பந்தம் பெருமையாக. அது பெருமைப்பட வேண்டிய விஷயம்தான்; அவன் உடல் பற்றி அவன் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அதுமட்டுமல்ல. கொலைகாரனோ, கொள்ளைக்காரனோ, ரௌடியோ, கேடியோ அவன் மனிதன்; ஃபிரான்ஸிஸைவிட உயர்ந்தவன் தான் என்றே எனக்குத் தோன்றியது. அவன் ரகஸ்யமாக, நம்பகமாகச் சொன்ன விஷயங்களை வைத்தே அவனை மடக்கிவிடவும் முயலுவார் ஃபிரான்ஸிஸ் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அவன் திப்பிலியார் உப்பைத் தின்று அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாமல் இருக்க முயன்றிருக்கிறான். அவன்தானே உண்மையில் உயர்ந்தவன் என்று சொல்லவேண்டும்? 

அன்று கதை மேலே நகராது. இது தொடர் கதையாகி மறு நாளும் தொடரும் அதாவது மறு நாளும் சம்பந்தம் என் கண்ணில் பட்டால் என்று தீர்மானித்து நான் எழுந்து போக முயலும் சமயம் பார்த்து ஒரு போலீஸ் ஜவான் வந்து ஸலூட் அடித்துவிட்டு, “கடலூரிலிருந்து துரை வந்திருக்காங்க. ஸ்டே ஷனுக்கு வரச் சொன்னாங்க ரைட்டர்” என்றான். ஃபிரான்ஸிஸ் பரிதாபமாக என்னையும் சம்பந்தத்தையும் பார்த்துவிட்டு “நாளைக்கு சம்பந்தம் சொன்னதையெல்லாம் என்னிடம் சொல்லிவிடும் ஐயா” என்று சொன்னார். 

“ஊர், பெயர்கள் எல்லாவற்றையும் மாற்றிவிட்டுப் புஸ்தக மாகப் பிரசுரித்துவிடுகிறேன். படித்துத் தெரிந்து கொள்ளும் அய்யா” என்றேன் பாதி விளையாட்டாகவும், பாதி வினை யாகவும். 

“பத்து வருஷமாகிவிடும் உம் புஸ்தகம் வெளியாக” என்றார் ஃபிரான்ஸிஸ். 

அவர் வெளியே போகும்வரையில் பேசாதிருந்தான் சம்பந்தம். பிறகு “இன்ஸ்பெக்டர் ஐயா எனக்குத் துரோகம் செய்யமாட்டார். நான் தப்பித்துக் கொள்வதற்கே காரணம் இவருதான். அதுக்காக என் விஜயபுரம் வீடு, திப்பிலியாரிடம் நான் சம்பாதித்த பணம் எல்லாம் அவரிடம் கைமாறிவிட்டது” என்றான். 

“அது வெறும் ஜபர்தஸ்து. மூணாவது ஆசாமிக் கெதிரே விட்டுக் கொடுக்கக்கூடாது என்று அவர் போடுற வேஷம்” என்றான் சம்பந்தம். 

“ஃபிரான்ஸிஸ் கூடத்தான் போய்விட்டார். கதையை மேலே சொல்லு. துப்பறியும் கதை படிப்பதைவிட நீ சொல்ற கதையைக் கேட்பது சுவாரசியமாக இருக்கிறது” என்றேன். 

“அதுக்குக் காரணம் திப்பிலியாருடைய குணாதிசயங்கள் தான்” என்றான் சம்பந்தம் தீர்மானமாக. 

அத்தியாயம்-25

“திப்பிலியாருடைய குணாதிசயங்கள் எப்படிப் பட்டவை என்று இன்னும் விரிவாகவே சொல்லேன். ஃபிரான்ஸிஸ் இல்லாததால் நீ நன்றாக மனம் விட்டே பேசலாம்” என்று சம்பந்தத்தைத் தூண்டி விட்டேன். 

“என்னை ஒருதரம் குற்றம் சாட்டிக் கூண்டிலேற்றி விசாரித்து ருஜு இல்லையென்று விட்டுவிட்டார்கள். இனி எனக்கு என்ன பயம்?” என்றான் சம்பந்தம். 

“வேறு புதுக் குற்றமாக ஏதாவது காட்டி…. போலீஸ்காரர்களைப் பற்றிய வரையில் எனக்கும் உன்னைப் போலவேதான் அபிப்பிராயம். அவர்கள் எது வேண்டுமானாலும் செய்யப்பட்டவர்கள்தான். நீ சொல்லு கதையை” என்றேன் ஆவலுடன். 

“தியாகராஜத் திப்பிலியாருடைய குணாதிசயங் களிலே மிகவும் முக்கியமானது அவருடைய தெய்வ பக்திதான்.” 

“தெய்வ பக்தியா?” 

“ஆமாம். அதுவும் அந்தத் திப்பிலியாபுரத்தின் பாழடைந்த கோயிலின் மூலவரான திப்பிலி ஈசனிடம் 

அவருக்கு அபாரமான பக்தி. தினமும் அதிகாலையிலும் இரவு ஒன்பது மணிக்கும் கோயிலுக்குப் போகத் தவறமாட்டார். அவர் முயற்சிகளால்தான் கோயில் உள்புறம் எல்லாம் பழுது பார்க்கப் பட்டு இன்னமும் கோயிலாக இடிந்து விழுந்துவிடாமல் இருக்கிறது சிவன் கோயில். வேளா வேளைக்கு நைவேத்தியம் பூஜைக் கெல்லாம் வேண்டிய பூஸ்திதியை அவர் எழுதி வைத்திருக்கிறார். அவர் தயவால் இப்பொழுதும் கோயிலில் வருஷத்தில் நாலைந்து உற்சவங்களாவது பிரமாதமாகவே நடைபெறுகின்றன. நேற்று நான் வந்தவுடன் போய் கோயிலில் ஈசுவர தரிசனம் செய்து விட்டு வந்தேன். நான் போன சமயம் ஈசனுக்கு ஆணித் திருமஞ்சணம் நடந்து கொண்டிருந்தது. ஸந்நிதானத்திலே பக்கத்து ஊர்களிலிருந்து நூற்றுக் கணக்கான ஜனங்கள் வந்து அந்தக் கலியாணக் காட்சியை அனுபவித்துக் கொண்டிருந்தனர். கும்பலிலே நான் கமலத்தையும் பார்த்தேன் நம் ஊரிலிருந்து மாற்றலாகிப் போனாரே பஞ்சநதம் – அவரையும் பார்த்தேன்.” 

“எந்தப் பஞ்சநதம்? தனக்குக் கிடைத்த பணத்தைத் தட்டிப் பறித்துக் கொண்டார் என்று ஃபிரான்ஸிஸ் சொன்னாரே, அந்தப் பஞ்சநதமா?” என்றேன். 

“ஆமாம் அவரேதான். தரிசனம் எல்லாம் முடிந்த பிறகு பிரகாரத்தில் ஒரு மூலையில் யார் கண்ணிலும் பட வேண்டாம் என்று நின்று கொண்டிருந்த என்னைத் தேடிக்கொண்டு அவரே வந்தார். வலிய வந்து தனக்கும் போலீஸ் வாழ்வு அலுத்து விட்டது என்றும், ரிடையர் ஆவதற்கு ஆகிய வயசு வரு முன்னரே விருப்பத்துடன் ரிடையராகிவிட்டதாகவும், க்ஷேத்திராடனம் செய்து கொண்டிருப்பதாகவும் சொன்னார். ஆனால் அவர் உண்மையில் எதற்காக அங்கு வந்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியும் ஆனால் தெரிந்ததாக நான் காட்டிக் கொள்ள வில்லை.” 

அத்தியாயம்-26

“எதற்காக அவர் திப்பிலியாபுரம் வந்திருக்கக் கூடும்? அதுவும் ரிடையரான பிறகு?” என்று புரியாமல் கேட்டேன். 

“குற்ற இலாகாவிலிருந்து ரகஸ்யத்தில் திப்பிலி யாரை வேவு பார்க்க வந்து, கொள்ளிடக் கரையில் ஆசிரமம் அமைத்துக்கொண்டு ஆத்மாநுபவ ஸ்வாமி களாகக் கொஞ்ச நாள் விளங்கிய அந்த ராஜகோபாலன் மாயமாகத் திடுதிப்பென்று மறைந்து போனதை விசாரிக்கத்தான் அவர் வந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. துப்புத் துலங்க போலீஸ் இலாகாவில் சம்பந்தப்படாதவன் போல இருந்தால் நல்லது என்று அப்படி ரிடையராகிவிட்டதாகப் புளுகிக் கொண்டிருந்தார். அதை அவரிடமே தெரி வித்தும் விட்டேன் நான். எதற்காக அவரிடம் நான் பயப்பட வேண்டும்?” 

“என்ன சொன்னாய் நீ? அவன் அந்தப் பஞ்சநதம் என்ன சொன்னான். விவரமாகச் சொல்லு” என்றேன். “ஏதேது அந்த ஃபிரான்ஸிஸ் இல்லாமல் உனக்குக் கதையே விவரமாகச் சொல்ல வரமாட்டேன் என்கிறதே!” 

“அதில்லை. முதல்லே கமலத்தைச் சந்தித்ததைச் சொல்லலாமா அல்லது பஞ்சநதத்தைப் பார்த்து பேசியதைச் சொல்வதா என்று புரியவில்லை. முதலில் நான் கமலத்தைத்தான் தான் சந்தித்தேன். யசமானுடைய மனைவி. 

அவனைக் காப்பாற்றுவதாக யசமானுக்கு நான் வாக்குவேறு அளித்திருந்தேன். யசமான் மேல் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகத்தான், என் மேல் சந்தேகம் வரும்படியாக நடித்து நான் கொலைக் குற்ற வாளியாகக் கூண்டிலேறி நின்றதே! கொலையைச் செய்தவர் அவர் தான். என் மேல் குற்றஞ் சாட்டினார்கள். எப்படியும் ருஜுவாகாது என்று எனக்குத் தெரியும். ஆகவே கோயிலில் ஈசுவர தரிசனத்தை முடிச்சிக்கிட்டுத் திப்பிலியார் வீட்டுக்குப் போனேன்.” 

“அந்த வீடு ‘ஜே ஜே’ என்று திப்பிலியார் உயிரோடிருந்த காலத்தில் எப்படிக் கலகலவென்று இருக்கும்! வாசலில் நாலு ஆள், முற்றத்தில் நாலு ஆள் என்று ஜே ஜே என்றிருக்குமே. இப்போது நான் போய்ச் சேர்ந்த போது வாசற் கதவு தாளிட்டிருந்தது. கதவைத் தட்டி ‘அம்மா அம்மா’ என்று நாலு தரம் கூப்பிட்ட பிறகுதான் “யாரது?” என்று உள்ளேயிருந்து குரல் வந்தது. சம்பந்தம் என்று ரெண்டுதரம் சொன்ன பிறகுதான் கதவைத் திறந்தாங்க கமலத்தம்மா. ‘நம்ப சம்பந்தந்தான்னு கோயில்லே நினைச்சேன். கண்ணும் மங்கிப் போச்சா, நிச்சய மாகத் தெரியவில்லை. சம்பந்தமா இருந்தா வராதா என்று ஒரு நினைப்பு. எங்கே வரப் போவுது என்றும் ஒரு நினைப்பு’ என்றாள் கமலம்.” 

“நான் லட்டு என்று சொன்ன அந்தக் கமலம் எங்கே? இந்தக் கமலம் எங்கே? ஒரே மகனையும் இழந்துவிட்டு, விரும்பித் தேடிவந்த கணவனையும் இழந்துவிட்டு, தகப்பனையும் மிகவும் பரிதாபகரமாக இழந்துவிட்டு நின்ற இந்தக் கமலத்தை அறுபது வயது மதிக்கலாம் போல இருந்தது. எப்பவுமே கொஞ்சம் மிரண்ட சுபாவம்தான் அதுக்கு; இத்தனை பயங்கரமான கொலை, கொள்ளைச் சாவுக்கெல்லாம் பிறகு பயம் அவளுக்கு அதிகரித் திருந்ததே தவிரக் குறையவில்லை.” 

“பிசாசுகள் நடமாடுகிற இந்த இடத்தை விட்டு வேறு ஊரிலே குடியேறிவிட்டால் தேவலை சம்பந்தம். மாயவரம், சீர்காழி, கும்பகோணம் என்று ஏதாவது டவுனாகப் பார்த்து எனக்கொரு வீடு வாங்கிக் கொடு. நான் இங்கிருந்து போயிடறேன். திருவாலூர் மட்டும் வேண்டாம்” என்றாள் கமலம். 

“திப்பிலியார் கெட்ட வழிகளில் சம்பாதித்த பணத்தில் ஒரு லக்ஷ ரூபாய்க்கும் அதிகமாகவே அவளிடம் பணமாகவும் நகைகளாகவும் இருந்தது. அது தவிர திப்பிலியாபுரத்தில் வீடு வாசல் தோப்புத் துரவு வயல் வெளிகள் ரைஸ்மில் எல்லாம் இருந்தன. அதெல்லாம் ஒரு லக்ஷம் பெறும். ஒண்டிக் கட்டை. கவலையில்லாமல் உயிருள்ள வரைக்கும் இருந்துவிட்டு சொத்தை யெல்லாம் ஏதாவது ஒரு கோயிலுக்கு எழுதிவைத்து விட்டுப் போகலாம்.”

“பிசாசு நடமாடறதா? ஏது இங்கே பிசாசு?” என்றேன் நான். 

கமலம் சொன்னாள்: “ஒரு நாலைந்து நாளாகவே கொல்லைத் தலைமாட்டிலிருக்கும் மரத்தில் ஒரு பிசாசு நடமாடுகிறது. தினமும் நள்ளிரவில் கையில் ஒரு சிகப்பு விளக்குடன் காட்சி யளிக்கிறது அது. ‘நான் தான் ஆத்மாநுபவ சாமியாரின் ஆவி. எங்கே அந்த இராசகோபாலன் கொண்டுவா அந்த இராச கோபாலனை’ என்று ஐந்து தரம் கூவிவிட்டுப் போய் விடுகிறது” என்றாள். 

அதைக் கேட்டதும்தான் கோயிலில் கண்ட பஞ்சநதத்தையும் இந்த ஆத்மாநுபவச் சாமியின் பிசாசையும் முடிச்சுப்போட்டு முடிவு கண்டேன் நான். ஆகவேதான் கோயில் பிரகாரத்தில் அவர் தானாகவே வந்து போலீஸிலிருந்து ரிடையராகி விட்ட தாகவும், க்ஷேத்திராடனம் செய்வதாகவும் அளந்த போது ‘போதும் ஐயா! ஆத்மானுபவ சாமியின் ஆவியே, சிவப்பு லைட் எங்கே?’ என்று கேட்டே விட்டேன். 

“பேஷ் ஆத்மாநுபவசாமியின் ஆவி என்ன பதில் சொல்லிற்று?” என்றேன். 

“ஒரு நிமிஷத்தில் சமாளித்துக் கொண்டுவிட்டான் அவன், ‘சம்பந்தம்! நீ எப்பவுமே கெட்டிக்காரனப்பா. நீ மட்டும் போலீஸ் இலாகாவில் சேர்ந்திருந்தால்…?’ என்றான்.

“அந்த இராசகோபாலனுக்கு நேர்ந்த கதி எனக்கும் நேர்ந் திருக்கும்!” என்று இலக்கணமாகச் சொன்னேன். 

“ராஜகோபாலனுக்கு அப்படி என்னதான் நேர்ந்தது?” என்றார் பஞ்சநதம். 

“அதைக் கண்டு பிடிக்கத்தானே உமக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள் காருண்ய கவர்மெண்டார், கண்டுபிடியுமே!” என்றேன்.” 

“முக்கால் வாசியும் கண்டு பிடித்துவிட்டேன்” என்றார் பஞ்சநதம் . 

“எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவர் சொன்னது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் ‘இன்னும் கால்வாசிக் கிணற்றையும் எப்போது தாண்டப் போகிறீர்?’ என்றேன்.”

“ஹா ஹா என்று சிரித்தார் பஞ்சநதம். ‘அது என் ரகசியம்’ என்றார்.” 

“எந்த மாதிரியான ரகசியத்துக்கும் இப்போது பணந் தருகிற கர்ண மகாராஜாக்கள் யாரும் இல்லை” என்றேன். 

“நீ என்ன சம்பந்தம் சொல்கிறாய்? புரியும்படியாகச் சொல்” என்றார் போலீஸ் புலி. 

“என்னைக் கெட்டிக்காரன் என்று சொல்லி ஒரு தடவை என்னிடம் ஒரு ஆயிரம் ரூபாய் திப்பிலியாருடைய பணத்தைப் பெற்றுக்கொண்டு, வர இருந்த போலீஸ் சோதனையை இருபத்தி நாலு மணி நேரம் தள்ளிப்போட்டு எங்களுக்குத் தப்ப அவகாசம் தந்தீர் இல்லையா?” என்றேன். 

“தந்தேன், பணம் பெற்றுக்கொண்டேன் என்று சொல்கிறாய். நான் எதுவுமே சொல்லவில்லை.”

“அது சரி. நான் கெட்டிக்காரன் என்பதைச் சொல்லத்தான் அதைச் சொன்னேன். அந்தக் காரியத்தைச் சாதிக்க என்னிடம் திப்பிலியார் இரண்டாயிரம் ரூபாய் தந்திருந்தார். அந்த பேரத்தில் நான் என் எசமானருக்கு ஒரு ஆயிரம் ரூபாய் மிச்சம் செய்து தந்தேன்” என்றேன். 

“அவருக்கு மிச்சம் செய்து தந்தாயா? நீ எடுத்துக் கொண்டாயா?” என்றார் பஞ்சநதம். 

“நான் போலீஸ்காரனல்ல” என்று கம்பீரமாக நிமிர்ந்து பதிலளித்தேன். 

“பாக்கி ஆயிரத்தையும் இன்று தந்துவிடப் போகிறாயா?” என்று கேட்டார் பஞ்சநதம். 

“அப்போ ஒரு ஆயிரம் வாங்கினதாக ஒத்துக் கொள்கிறீரா?” 

“அது எதற்கு? இப்ப ஆயிரம் கிடைத்தால்…” 

“அப்போ லாபமடைந்த ஆண்பிள்ளைகளைப் பயமுறுத்திப் பணம் பறித்தீர். இப்போது பாவம் தனியாக விடப்பட்ட பெண்பிள்ளைகளைப் பிசாசு என்று பயமுறுத்திப் பணம் பண்ணப் பார்க்கிறீரா? அதற்கு நான் உடந்தையாக இருக்க மாட்டேன். பாவம்! அந்த அம்மாவுக்கு ஆத்மானுபவ ஸ்வாமியையும் தெரியாது. உங்க இலாகா இராஜகோபாலனையும் தெரியாது” என்றேன். 

“நிஜமாகவேயா?” 

“நான் சொன்னால் நீர் நம்பிவிடுவீரா?” 

“ஐந்து இரவுகள் தூக்கம் விழித்தபின் அப்படித் தான் எனக்கும் தோன்றியது. வேறு யுக்திகளைக் கையாண்டு பார்த்தாக வேண்டியதுதான்” என்றார் பஞ்சநதம். 

“என்ன யுக்தியைக் கையாளப் போகிறீர்?” 

“உன்னை அரெஸ்டு செய்து ஆத்மானுபவ ஸ்வாமிகளைப் பற்றி விசாரிக்கலாம் என்று பார்க்கிறேன்” என்றார். 

“அரெஸ்டே செய்ய வேண்டாம். எனக்குத் தெரிந்ததை எல்லாம் நானாகவே கால்மணியில் சொல்லி விடுகிறேன் போதுமா?” என்று அவரிடம் ஆத்மானுபவ ஸ்வாமிகள் என்று கொள்ளிடக் கரையில் திடுதிப்பென்று ஆசிரமத்துடன் உருவாகிய இராஜகோபாலன் பற்றி எனக்குத் தெரிந்ததையெல்லாம் சொன்னேன். அதை உங்களுக்கும் இப்போது சொல்லிவிடுகிறேன் என்றான் சம்பந்தம். 

அத்தியாயம்-27

“நம்ப ஊரில் வேறு எப்படி நியாயமான வழிகளி லெல்லாம் பிழைக்க முடிகிறதோ இல்லையோ சாமியாராகப் பிழைப்பது என்பது எல்லோருக்குமே எளிதில் கைவரக் கூடிய காரியம். ஊருக்கிரண்டு ஸ்வாமிகள் சித்தர்கள் என்கிற கணக்கில் நம்மிடையே பலர் இருந்து வருகிறார்கள் அவர்கள் சிலருடைய குணக்கேடுகள் நேரடியாகத் தெரிந்திருந்தாலும் கூடப் பலர் அவர்களைப் பற்றி நமக்கென்ன என்று ஒதுங்கிவிடுவார்கள் அல்லது நம்பிக் கெடுவார்கள் அல்லது நம்புவது போலப் பாசாங்கு செய்து சுய லாபம் அடைய முயலுவார்கள். ஒரு சித்தர் ஒரே சமயத்தில் பத்து இடங்களில் தன் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். ஒரு சித்தர் ஆகாயத்தில் கை நீட்டி, நீட்டிய கையால் ஏதோ பணங்காசு மரத்தில் பறித்து, பத்து ரூபாய் நோட்டும், நூறு ரூபாய் நோட்டுமாக எடுத்துப் போடுவார். ஒருவர் ஒரு மண் பானைக் குள்ளே கையைவிட்டு எடுப்பார் கையிலே தங்கமும் வெள்ளியுமாக நகைகளும், காசுகளும் இருக்கும் அதை அப்படியே பிடிபிடியாக பக்தர்களுக்கு அதுவும் வெள்ளிக்கிழமையன்று – தந்துவிடுவார். 

ஒருவர் பாம்பாகவே தன்னைத் தேடி வருகிறவர்களுடைய சென்ற காலம், நிகழ்காலம், வருங்காலம் எல்லாவற்றையும் சொல்வார் தமிழ்ப்பாட்டு இரண்டாயிரம் வருஷமாகப் பத மிட்டு எதைச் சொன்னாலும் அது பாட்டாக உருவெடுக்கக் கூடிய நிலைமையை எட்டிவிட்டது. மற்றதெல்லாம் எப்படிப் போனாலும் இந்தப் பாட்டுத்தான் முக்கியம். அது கொள்ளிடக் கரையில் திடுதிப்பென்று ஆசிரமம் அமைத்துக் கொண்டு குடியேறிய ஆத்மானுபவானந்த சாமியாருக்கு நன்றாகக் கை வந்திருந்தது.” 

“ஆத்மானந்த ஸ்வாமிகளின் சிஷ்யர்கள் என்று சொல்லிக் கொண்டு இரண்டுபேர் முன்னதாக வந்து மண்ணால் அப்பிச் சுவர்கள் எழுப்பி, தென்னங் கீத்துகளை மூங்கில் படல்கள் மேல் வேய்ந்து கூரையை யேற்றுகிற போதே, அவர்களை வேஷம் போட முயலுகிற போலீஸ் ஜவான்கள் என்று நான் கண்டு கொண்டுவிட்டேன். அவர்களில் ஒருவன் திருவாலூரிலே இருந்தவன். அவனுக்கு என்னைத் தெரியுமோ தெரியாதோ எனக்கு அவனை நன்றாகத் தெரியும். அவன் தன் குருநாதனைப் பற்றிப் பேசியதையெல்லாம் கவனித்து வைத்துக் கொண்டேன்.” 

“அவன் சொன்ன விவரம் இதுதான். ‘ஆத்மானுபவானந்த ஸ்வாமிகள் நம் ஊர்க்காரர்கள். ஆனால் ஹிமாலய மலையின் சரிவுகளிலே காற்றையும் நீரையும் அருந்திக்கொண்டு பதினெட்டு ஆண்டுகளுக்கும் அதிகமாகத் தவம் இருந்தார். ஒரு வங்காள மகாராஜ ஸ்வாமி ஒருவர். அவர் பெயரையும் சொன்னான் நித்தியானுபவானந்த ஸ்வாமிகள், இவரை ஆட்கொண்டு தனக்குத் தெரிந்ததை எல்லாம் இவருக்கு உபதேசித்தார். அவர் தான் இவரைக் கொள்ளிடக் கரையில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு லோக க்ஷேமார்த்தம் குடியேறச் சொன்னது. பதினெட்டுச் சித்துகளும் விளையாடுபவர் ஆத்மானுபவானந்த ஸ்வாமிகள். தங்கம் பண்ணுவார். பரகாயப் பிரவேசம் செய்வார். ககன மார்க்கமாகப் பறந்து செல்வார். ஒரே சமயத்தில் பல இடங்களில் இருப்பார். நினைத்ததை நினைத்த படியே செய்வார். கைவிரலை நீட்டினாரானால், விரல் நுனியிலே மத்தாப்பு மாதிரி தீ ஜ்வலிக்கும். எந்த ஆளையும் தன்னிஷ்டப்படி எதையும் செய்ய வசீகரித்து விடுவார். எந்த வியாதியும் தீர மூலிகை தருவார். செத்தவரை எழுப்பிவிடுவார். இருப்பவரை உடனடியாகச் சாக அடிப்பார். நீரில் நடப்பார். அந்தரத்தில் படுத்து உறங்குவார். கல் மண் கண்ணாடி எல்லாவற்றையும் தின்று ஜெரித்துவிடுவார். இத்தனைக்கும் மேலே அவர் ஒரு புலிக்குட்டி வளர்த்தார்’ என்று சிஷ்யன் சொன்னதன் பிறகுதான் அங்கு வரப்போகிற சித்தர் யார் என்பது எனக்குத் தெரிய வந்தது. 

“போலீஸ் இலாகாவிலே புலிக்குட்டி என்கிற பெயர் அச்சமயம் சற்றுப் பிரசித்தமாக விளங்கியது. கேஸ் சற்றுச் சிக்கலாகப் போனதும் புலிக் குட்டியை அனுப்பிப் போலீஸ் இலாகா துப்பறியத் தொடங்கி விடும் என்று எங்கள் பணத்தை ஏராளமாகப் பெற்றுக் கொண்டிருந்த அந்த பரமார்த்த அய்யன் திப்பிலியாரிடம் தெரிவித்திருந்தான். அதற்குப் பிறகு தன்னால் எதுவும் செய்ய இயலாது மேலதிகாரிகள் நேரே கவனிக்கத் தொடங்கி விடுவார்கள் என்று தெரிவித்திருந்தான். இதை மனத்தில் வைத்துக்கொண்டு அன்றே நான் விஷயத்தைத் திப்பிலி யாரிடம் தெரிவித்தேன். அன்றே பரமார்த்த அய்யனிடமிருந்தும் தகவல் வந்தது. புலிக்குட்டி கேஸைக் கவனிக்கத் தொடங்கி விட்டது என்றும், எப்படி எங்கிருந்து என்று தனக்குத் தெரியாது என்றும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், பணம் கொடுக்க வேண்டியதாக இருந்தாலும் தன்னை நேரில் சந்திக்க வேண்டாம் என்றும் அய்யன் உஷார்ப் படுத்தியிருந்தான்.” 

“எனக்கு ஜோசியம், சித்து விளையாடுவது என்பதி லெல்லாம் கொஞ்சம் பைத்தியம் உண்டு. அதிலே ஏதோ கொஞ்சம் படித்து வைத்திருக்கிறேன். என் பாட்டனார் அவர் காலத்தில் நாற்பது ஐம்பதினாயிரம் ரூபாய் சொத்தைத் தங்கம் பண்ணுகிறேன் என்று வந்த கருணைக் கிழங்கு யோகியார் என்பவரிடம் பறி கொடுத்தார். எங்கள் வீட்டிலே நொச்சி இலையும் ரஸ வித்தைகளுமாகத் தடபுடல் படுகிற போதெல்லம் நான் பத்துப் பன்னிரெண்டு வயதுச் சின்னப் பையன். கருணைக் கிழங்கு யோகியார் பக்கத்திலேயே இருந்து அவர் செய்வதை யெல்லாம் கவனித்துக் கேட்டு, மனப்பாடம் செய்திருக்கிறேன். அவரைப் பார்த்துப் பார்த்து, கேட்டுக் கேட்டு எனக்கும் கவன சக்தி வந்து விட்டது தங்கம் செய்கிற சக்தி வந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். அது அவருக்கும் வர வில்லை. பாட்டுப் பாடுகிற சக்தி மட்டுமே எனக்கும் அவருக்கும் வந்தது தமிழ்க் கவிதை என்கிற தங்கம் கைவந்த பிறகு வேறு என்ன வேண்டும் என்று சித்தர்களின் தெய்வம் அதற்குப் பல பெயர்கள் உண்டு எங்களைக் கைவிட்டு விட்டது. 

“ஆகவே ஆத்மானுபவானந்த ஸ்வாமிகளின் வரவை நான் மிகவும் ஆசையுடன் எதிர்பார்த்திருந்தேன். முதலிலேயே ஒன்று சொல்லிவிட வேண்டும். அவருக்கு வேஷம் மிகவும் பொருந்தி யிருந்தது. நானே ஒரு நாள் பூராவும் இது வேஷமா, அயன் சித்தர் தானா என்று தயக்கமடைந்து குழம்பிவிட்டேன். அவரைக் கண்டவுடனேயே எனக்குப் பயம் பக்தியெல்லாம் தானாகவே உண்டாகிவிட்டது. வந்து ஒரு பக்ஷம் மோனத் தவம் இருந்தார் அவர். அதற்குப் பிறகுதான் மோனத்தைக் கலைத்தார் சுபயோக சுப கரண லக்கினத்தில், அதை உத்தேசித்து முதல் சிஷ்யன் ஒரு பத்துப் பன்னிரெண்டு பக்தர்களை எப்படியோ தயார் செய்து அங்கு கொணர்ந்து சேர்த்திருந்தான். அந்தப் பக்தர்களைக் கண்டால்தான் எனக்குப் பரிதாபமாக இருந்தது. 

அத்தியாயம்-28

“திப்பிலியாபுரத்துக்கும், கொள்ளிடக்கரையில் ஆத்மானுபவானந்த ஸ்வாமிகளின் ஆசிரமம் அமைந் திருந்த இடத்துக்கும் இடையே இரண்டே மைல் தூரம்தான் இருந்தது. சுற்று வட்டாரத்துக் கிராமங்கள், சிறு நகர்கள் எல்லாவற்றிலும் ஸ்வாமிகளுடைய புகழ் இந்த மாதிரி ஸ்வாமிகளுடைய புகழ் எப்படியோ பரவுகிறமாதிரி வெகு துரிதமாகவே பரவிவிட்டது. அவர் வந்து ஆசிரமத்தில் குடியேறி ஒரு மாதங்கூட ஆகியிராது. அதற்குள்ளாகவே அவர் சக்தியின் மணம் எல்லோர் நாசியையும் துளைத்து விட்டது. அவர் சக்திகளின் புகழ் எல்லோருடைய காதுகளிலும் விழுந்துவிட்டது.’ 

“இந்த நிலையில் தெய்வ பக்தியுள்ள திப்பிலியார் மட்டும் அவரைப் போய் பார்க்காமல் இருக்கலாமா? எனக்கும் திப்பிலியாருக்கும் யார் என்ன என்று அந்த ஸ்வாமிகளைப் பற்றித் தெரியும். கமலத்துக்குத் தெரியாதே. அவளும் எங்களுடன் வருவேன் என்றாள். அந்தச் சமயம் கொலைகள் சரமாரியாக விழாத சமயம். ராஜவேலுதான் எங்கள் ஆட்களில் ஒருவனைக் கொலை செய்திருந்தான்; பதிலுக்கு நாங்கள் அவனுடைய ஆட்களில் ஒருவனைக் கொலை செய்து முடிக்க இன்னும் ஒரு வாரம் இருந்தது திட்டப்படி. அப்போது கமலம் கவலைக் குள்ளாகி அவஸ்தைப்படத் தொடங்கியிருக்கவில்லை. அவளுடைய ஒரே மகன் நகரில் கான்வெண்டில் படித்துக் கொண்டிருந்தான். நல்ல படிப்புக்காரன். துடியான பிள்ளை. 

“ஏராளமான இனாம்களை எடுத்துக்கொண்டுதான் திப்பிலி யார் தம்பதிகள் கிளம்பினார்கள். விபூதி மடித்து வைத்திருந்த கடிதத்தில் நான் ஆத்மானுபவானந்த ஸ்வாமிகளுக்கு ஒரு திருமுகமே வைத்திருந்தேன். புலிக்குட்டி சஹிதம் அவர் தன் இலாகாத் தலைமைக் காரியாலயத்துக்குத் திரும்பிவிடுவது நல்லது என்றும், அவர் இங்கிருப்பதால் அவருக்கோ மற்றவர் களுக்கோ நன்மை எதுவும் விளையாது என்றும், தெளிவாகவே எழுதி அந்தக் கடிதத்திலேயே விபூதியை மடித்துத் தட்டில் வைத்திருந்தேன். இது திப்பிலியாருக்குத் தெரியாது. 

“ஆனால் ஸ்வாமிகள் எங்களை வரவேற்று இரண்டொரு நிமிஷம் பேசிக்கொண்டிருந்தார். எங்களுக்கு அவர் ஜோசியமும் சொல்லவில்லை சித்து விளையாடியும் காட்டவில்லை. சாதாரணமாக உலக நடவடிக்கைகள், யுத்த முடிவுகாலச் செய்திகள், விலைவாசிகள் உயர்வு, மில் வருமானம் என்று பேச ஆரம் பித்தவர் சட்டென்று திப்பிலியாரைப் பார்த்து, ‘ஏனையா இப்படி விபூதிப் பொட்டலத்துக் கடிதாசியிலே விபரீதமாக எழுதி அனுப்பியிருக்கிறீர்?’ என்று கேட்டார். ஒன்றுமே யறியாத திப்பிலியாரின் முகத்திலிருந்து அவர் செய்யவில்லை அதை என்பது ஸ்வாமிகளுக்குத் தெளிவாகியிருக்க வேண்டும்.” 

“எனக்கு உண்மையிலேயே ஸ்வாமிகள் சித்தர் தான் என்று தோன்றிவிட்டது. விபூதிப் பொட்டலம் இன்னும் பிரிக்கா மலேயே கமலம் கொண்டு வந்த தட்டிலே, ஸ்வாமிகள் முன் தான் வைக்கப்பட்டிருந்தது. எப்படியோ அந்தக் கடிதத்தில் ஏதோ எழுதியிருக்கிறது என்று கண்டுவிட்டாரே புலிக்குட்டி. அதே சமயம் அவருடைய வளர்ப்புப் புலிக்குட்டியும் எங்கள் மூவரையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு சாவதானமாக நடந்துவந்து தன் எஜமானன் காலடியில் போய்ப் படுத்துக் கொண்டது. என்னாலோ கமலத்தாலோ, திப்பிலியாராலோ அந்தப் புலிக்குட்டியை விட்டுக் கண்களை எடுக்கவே முடிய வில்லை.” 

“அபசாரம்! அபசாரம்!” என்றார் திப்பிலியார் பணிவுடன். தங்களுக்கென்று யாதொரு கடிதமும் நான் வைக்கவில்லையே என்றார். 

“ஸ்வாமிகள் அவருக்கு நேரடியாக ஒரு பதிலும் தரவில்லை. தன் இரு சிஷ்யர்களில் ஒருவனைக் கூப்பிட்டு, விபூதிப் பொட்டலத்தைப் பிரித்து விபூதியைத் தட்டில் கொட்டிவிட்டு அதில் எழுதியிருந்ததை வாசிக்கச் சொன்னார். சிஷ்யப் பிள்ளைக்குத் தமிழ் அவ்வளவாக வராதுபோலும். அவன் தட்டுத் தடுமாறிக் கொண்டு வாசித்தான். ‘புலிக்குட்டி சஹிதம் நீ உன் இலாகாத் தலைமைக் காரியாலயத்துக்குத் திரும்பிவிடுவதுதான் நல்லது. நீ இங்கிருப்பதால் உனக்கோ மற்றவர்களுக்கோ நன்மை எதுவும் விளையாது’ என்று படித்தான்.” 

“ஏதோ நாவலில் வருகிற வார்த்தை மாதிரி இருக்கிறது” என்று வியாக்கியானம் தந்தேன். 

“தெரிகிறது!” என்ற ஸ்வாமிகள் அதற்குப் பிறகு அது பற்றித் திப்பிலியாருடன் எதுவும் பேசவில்லை. திப்பிலியார் தனக் கொன்றும் அது பற்றித் தெரியாது என்று சொன்னதை அவர் ஏற்றுக்கொண்டுவிட்டது போலத்தான் இருந்தது. என்பக்கம் அவர் திரும்பவேயில்லை. கமலத்தின் பக்தியும் சிரத்தையும் உண்மையானதாகத்தான் யாருக்கும் பட்டிருக்கும். அதில் சந்தேகத்துக்கிடமேயில்லை. 

அத்தியாயம்-29

“தன் மனைவியை வீட்டில் விட்டுவிட்டு என்னைத் தனியாகத் தன் அறைக்குள் அழைத்துப் போய், ‘நீ இப்படி அவசரப்பட்டு எதுவும் சொல்லியிருக்கக் கூடாது’ என்றார்.” 

“விஷயத்தை முற்ற விட்டுவிட்டுப் பிறகு அவர் உயிருக்கே ஆபத்து வந்துவிடப் போகிறதே என்கிற நல்லெண்ணத்தில் தான் சொன்னேன்” என்றேன். 

“அவனைப் பற்றி உனக்குக் கவலை இருந்தது. நமக்கு அவன் விஷயம் தெரிந்துவிட்டது என்று அவனுக்குத் தெரிந்துவிடுமே அதனால் நமக்கு எதுவும் தீங்கு நேரிடக் கூடுமே என்று நீ சிந்திக்க வில்லை” என்றார் திப்பிலியார்.’ 

“நமக்கு அவனால் ஒரு தீங்கும் நேர்ந்துவிட முடியாது. அவன் எதையும் கண்டுகொண்டுவிட முடியாது. கண்டுகொள்ள இங்கு ஒன்றும் இல்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.’ 

“உண்மைதான். ஆனாலும் எங்கேயாவது ஒரு பலஹீனம் இருக்கும். ஏமாந்து விடமாட்டோம் என்று நாம் எண்ணி இறுமாப்பு அடைந்திருக்கும் தருணமே நாம் ஏமாந்தும் விடுவோம்” என்றார். 

“உண்மைதானுங்க! யோசிக்காமல்தான் நான் செய்து விட்டேன். எப்படி அதற்குப் பிராயச் சித்தம் செய்யச் சொல் கிறீர்களோ செய்து விடுகிறேன்” என்றேன். திப்பிலியாருடைய சாமர்த்தியத்தில் பத்தில் ஒரு பங்குகூட எனக்கில்லை என்பது எனக்கு அப்போதுதான் விளங்கிற்று. திப்பிலியார் ஒரு சாம் ராஜ்யத்துக்கே தலைவராக இருக்க வேண்டியவர்; கமலம் அவருடைய ராணியாக இருக்கத்தக்கவள் என்று தோன்றிற்று எனக்கு. அவர்களிடம் எனக்குப் பக்தி அதிகரிப்பது போல இருந்தது. பரவசமாக நின்றேன். 

என் பரவசத்தில் குறுக்கிட்டார் திப்பிலியார். “உடனடியாகப் புலிக்குட்டியைக் கவனித்தாக வேண்டும் நான். ஆனால் அதை நான் முழுவதும் கவனித்துக்கொண்டு விடுகிறேன். நீ ஆசிரமத்தின் பக்கம் கூடப் போகாதே. ஆமாம், ஜாக்கிரதை” என்றார். 

“அதற்குப் பிறகு நான் ஆத்மானுபவானந்தரின் ஆசிரமத்தின் பக்கம்கூடப் போகவில்லை. அவருடைய அத்தியந்த சிஷ்யன் இரண்டொரு நாள் கழித்து என்னை, குருநாதர் பார்க்க விரும்புகிறார் என்று அழைத்தான். “விரும்பட்டும் நான் இப்போது சென்னை போய்க் கொண்டிருக்கிறேன். போய்விட்டு ஒருவாரத்தில் வந்துவிடுவேன். வந்து அவசியம் கண்டு ஸேவித்துக் கொள்கிறேன்” என்று சொன்னேன். 

“உண்மையில் கமலம், நாகராஜு இருவரையும் அழைத்துக் கொண்டு நான் அன்று மாலையே காரில் பட்டணத்துக்குக் கிளம்பிவிட்டேன். பட்டணத்திலே புரசைவாக்கத்திலே யசமான் புதுசாக ஒரு பங்களா வாங்கியிருந்தார். கமலத்துக்கும், நாக ராஜுவுக்கும் பட்டணம் பார்க்க வேண்டும் என்று ஆசை. அந்தச் சமயம் பார்த்து நானும் அவர்களுடன் இருப்பது நல்லது என்று தீர்மானித்து என்னையும் அவர்களுடன் அனுப்பிவிட்டார் திப்பிலியார்.”

“அதாவது அவர்கள் ஏற்கெனவே போவதாக ஏற்பாடாகி யிருந்தது. இந்த சாமியார் விஷயம் வந்ததால் நீயும் அவர்களுடன் பட்டணம் போய்விடுவது நல்லது என்று ஏற்பாடு செய்தார் என்கிறாயா?” என்று கேட்டேன் நான். 

“ஆமாம். முதலில் அவர்கள் பட்டணத்துக்கு ரெயிலில் போவதாக இருந்தார்கள். ராமுவையரின் இன்னொரு மகன் மணி அய்யன் என்று பெயர் அவனுக்கு சர்க்காரில் ஏதோ பெரிய உத்தியோகத்தில் இருந்தார். அவர் மேற்பார்வையில் தனி பங்களாவில் இருப்பது என்று ஏற்பாடாகியிருந்தது. பின்னர் காரை ஓட்டிக்கொண்டு நானும் அவர்களுக்குத் துணையாகப் போய் பட்டணத்தில் இருப்பது என்று ஏற்பாடாயிற்று. புலிக் குட்டிக்கு நல்லது செய்யத்தான் நான் உண்மையில் எண்ணினேன். அது அவருடைய உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை.”

“அந்தத் தடவை திப்பிலியாரோ அவருடைய ஆட்களோ ஆத்மானுபவானாந்த ஸ்வாமிகள் என்கிற இராஜகோபால் என்கிற ரகசியப் போலீஸ் உத்தியோகஸ்தனைத் தீர்த்து விட்டார்கள் என்கிறாயா?” என்று கேட்டேன். 

“அதெல்லாம் எனக்கு எப்படிங்க தெரியும்? நான் திரும்பி வந்தபோது கொள்ளிடக் கரையில் நிர்மானுஷ்யமான ஆசிரமம் மட்டும்தான் இருந்தது. குருநாதரையும் காணவில்லை, சிஷ்யர் களையும் காணவில்லை. அவ்வளவுதான் எனக்குத் தெரியும். குருநாதர் ககன மார்க்கமாக ஹிமாலயத்துக்குப் போயிருக்கலாம். சித்த புருஷராகிய அவரைப்பற்றி யார் என்ன சொல்ல முடியும்? தவிரவும் அவர் கடைசித் தடவையாகக் காட்சி அளித்து நகரத்துக் கிட்டுவுடன் பேசிக்கொண்டிருந்த தினத்தன்று முதல் மூன்று நாட்கள் திப்பிலியார் என்னுடனும் கமலத்துடனும் அவர் மகனுடனும் பட்டணத்திலிருந்தார். சினிமா, கூத்து, செத்த காலேஜ், உயிர்க் காலேஜ், புழலேரி என்று காரைப் போட்டுக் கொண்டு எங்கெல்லாமோ உல்லாஸமாகப் போய் வந்து கொண்டிருந்தோம். திருப்பதி, காளஹஸ்தி, திருத்தணி, திருவாலங்காடு, எல்லாம்கூடப் போய்வந்தோம், வண்டி யிலேயே.” 

“எப்படித்தான் மறைந்தார் ஸ்வாமிகள்?” என்று கேட்டேன். 

“அதே கேள்வியைத்தான் பஞ்சநதமும் கதையை முடித்த பின் என்னைக் கேட்டார். ‘சித்த புருஷர்களின் நடவடிக் கைகளைப் பற்றி நாம் கேவலம் மனிதர்கள் எப்படிங்க கணக்கு வைத்துக் கொள்ள இயலும்?’ என்று பதில் கேள்வி கேட்டேன். ‘உன்னை அரெஸ்டு செய்து விசாரிக்கிறேன்’ என்றார் பஞ்சநதம். ‘நான் தான் பட்டணத்திலிருந்தேனே!’ என்று பதில் அளித்தேன். கோபமாகப் போய்விட்டார் அவர் என்று தன் கதையில் அந்தப் பகுதியை முடித்தான் சம்பந்தம். 

அத்தியாயம்-30

“தொடர் கதை எழுத்தாளனாக இருக்க வேண்டும் அப்பா சம்பந்தம் நீ” என்றேன். 

“அப்படின்னா என்னாங்க? புரியலீங்களே” என்றான் சம்பந்தம். 

“பெரிய பெரிய பத்திரிகைகளிலெல்லாம் துண்டு துண்டாகப் பல நீளக் கதைகளை வெளியிடுகிறார்கள். கதை எப்படியிருக்கும் என்றால் விறு விறுப்பாக பலதரப்பட்ட சுவாரசியமான சம்பவங்களைக் கொண்டதாக இருக்கும். பாதி சம்பவத்திலே நிறுத்திக் கொண்டு ‘அடுத்த வாரம் பார்க்கவும்’ என்று போட்டு விடுவார்கள். அடுத்த வாரப் பத்திரிகை விற்பனையா வதற்கு இது ஒரு யுக்தி. அந்த மாதிரி ‘டக் டக்’ கென்று சுவாரசியமான பகுதிகளிலெல்லாம் கொணர்ந்து நிறுத்தி விடுகிறாயே நீ!” என்றேன் நான். 

“எனக்கென்னங்க தெரியும் இதெல்லாம் பத்தி, பத்திரிகைகளிலே கதை எழுதினா எத்தனேங்க கொடுப்பாங்க?” என்றான் சம்பந்தம். 

“சிறு கதையா எழுதினா பத்து இருபது ஐம்பது எழுபத்தைந்து, அதிகம் போனால் நூற்றியொன்று தருவாங்க” என்றேன். 

“தொடர் கதைன்னீங்களே அது எழுதினதா?” 

“ஆயிரம் இரண்டாயிரம் மூவாயிரம் கிடைக்கும்.” 

“பெரிய புள்ளீங்க ஒரு ஆள் கொலைக்குக் கொடுக்கிற காசுங்க அது” என்றான் சம்பந்தம். 

“எனக்கு அந்த உலகத்தைப் பற்றி அனுபவம் போதாது” என்றேன். 

“எந்த உலகத்தைப் பத்தி?” 

“கொலை செய்கிற உலகம் பற்றிய அனுபவமும் போதாது; தொடர் கதை எழுதற உலகம் பற்றியும் அனுபவம் போதாது. மேலே நீ கதையைச் சொல்லு. கடைசிக் கப் காபி ஒன்று, இரண்டு பேருக்குமா வர வழைக்கிறேன். ஆளுக்குப் பாதியாகச் சாப்பிடுவோம்” என்றேன். 

ஒரு கப் காபியும் ஒரு காலி டம்ளரும் கொண்டு வரச் சொல்லி மணியிடம் ஆர்டர் தந்தேன். 

காபி வருவதற்கு முன்னதாகவே சம்பந்தம் சொன்னான்: “எத்தனையோ விஷயங்கள் சின்னதும் பெரிதும் மறந்து விட்டுதுங்க. நினைவிலிருப்ப தெல்லாம் முக்கியமே யல்லாத விஷயங்கள்தான்.’ 

“ஏதாவது நினைவிலிருந்தால் போலீஸ்காரர்கள் வரவழைத்து விடுவார்களே என்று பயமா?”

“என் மனசிலே அந்தப் பயமே கிடையாதுங்க. நான் எது செய்திருந்தாலும் அதன் பாவமோ புண்ணியமோ அந்தத் திப்பிலியாரைச் சாரும் என்னைச் சாராது. யசமான விசுவாசம் பிசக நான் எதுவும் செய்ததில்லைங்க. அவர் உத்தரவில்லாமல் எதுவும் செய்ததில்லைங்க. ஒன்றுதான் செய்துவிட்டு புலிக் குட்டிக்கு ஆபத்து விளைவித்து விட்டேன். அதற்குப் பிறகு நான் திப்பிலியார் விசையை முடுக்கினால்தான் நடப்பேன் நிற்பேன் உட்காருவேன் பேசுவேன்.” 

அவன் உண்மையையேதான் சொன்னான் என்று அவன் குரல் எனக்கு அறிவுறுத்தியது. அதற்குள் காபியும் வரவே ருசிபார்த்துக் கொண்டே மேலும் சம்பந்தம் என்ன சொல்லுகிறான் என்று கவனிக்கத் தயார் ஆனேன்.

– தொடரும்…

– அவரவர் பாடு (மர்ம நாவல்), முதற் பதிப்பு: ஜனவரி 1963, குயிலன், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *