கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 7, 2023
பார்வையிட்டோர்: 8,993 
 
 

அத்தியாயம்-7-8 | அத்தியாயம்-9-10 | அத்தியாயம்-11-12

அத்தியாயம்-9

கணேஷ் அந்த ஓட்டல் ரகளையிலிருந்து மோனிக்காவை இழுத்துக்கொண்டு சமையல் அறை வழியாகத் தப்பித்து வெளியே வந்து ஒரு சந்து, ஒரு டெய்லர் கடை ஆகியவற்றைக் கடந்து தன் கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு இடத்துக்கு ஓடினான்.

ஒரு காலில் செருப்பு இல்லாததாலும், மினி ஸ்கர்ட் இன்னும் மினியாகக் கிழிந்திருந்த தாலும் சுற்றுச் சிரமத்துடன்தான் ஓட முடிந்தது மோனிக்காவினால்.

கணேஷின் ரூமுக்கு வந்ததும் அவள் சிரித்தாள்

‘ஏன் சிரிக்கிறாய்?’

‘உன் மூக்கில்! உன் மூக்கில்!’

எதிரே கண்ணாடியில் பார்த்துக்கொண்டான் கணேஷ். மஞ்சளாக இருந்தது.

அதை வழித்து நாக்கில் தொட்டுப் பார்த்து, ‘மார்மலேட்’ என்றான்.

அவள் இன்னும் சிரித்தாள். கணேஷ். ‘மோனிக்கா, எதற்காகப் பொய் சொன்னாய்?’ என்றான்.

‘என்ன பொய்?’

‘உன்னை யாரோ அந்த ஓட்டலுக்கு டெலிபோனில் அழைத்தார்கள் என்று… பொய் தானே?’

‘ஆம்.’

‘எதற்குப் பொய் சொன்னாய்?’

‘நான் உன்னைக் காதலிப்பதால்’ என்றாள் மோனிக்கா.

‘அதைப் பிறகு விவாதிப்போம். இதை மாட்டிக்கொள்.’

கணேஷின் ஆர்மர் ஷர்ட் அவளுக்கு அழகாக இருந்தது. ஊசி நூல் போட்டுத் தன் ஸ்கர்ட்டைத் தைத்துக்கொண்டாள். பையன் கொண்டு வந்த டீயை மடக்கென்று குடித்தாள்.

கணேஷ் சட்டை மாற்றிக்கொண்டு வந்தான். அவளைப் பார்த்தான். ‘யூலுக் ப்ரெட்டி. ஒரு பட்டன் இன்னும் போட்டுக் கொள்ளாமல் விட்டிருக்கிறாய். மேரா நாம் ஜோக்கரா?’

அவளுக்கு புரியவில்லை. ஆனால் அவள் சற்று வெட்கப்பட்டுக் கொண்டு பட்டனைப் போட்டுக்கொண்டாள்.

‘கணேஷ், நான் உன்னை அப்பட்டமா ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். ஒரு வார்த்தையில் பதில் வேண்டும். ஆம், இல்லை.’

‘நீ கேட்கப் போகும் கேள்வி எனக்குத் தெரியும். பதில்: இல்லை.’

‘என்ன கேள்வி?”

‘அதுதான் உனக்குத் தெரியுமே?’

‘உனக்குத் தெரியாதே… நீ (தயங்கினாள்) அன்று இரவு…’

‘கேட்காதே, கேட்காதே!’

‘அனிதாவுடன்… அந்த அறையில்…’

‘என்ன பேசிக்கொண்டிருந்தேனா? பொதுவாக உன் அப்பாவைப் பற்றி…’

‘என்ன செய்தாய்?’

‘கம் எகய்ன்?*

‘என்ன செய்தாய்?’

‘மை டியர் கர்ல், நீ என்னைத் தவறாக எடுத்துக் கொண்டிருக்கிறாய். நான் உன்னைத் தவிர – மோனிக்கா ஷர்மாவைத் தவிர – வேறு ஒருவரையும் கனவிலும் நினைக்கவில்லை, நினைத்ததில்லை.’

அந்தப் பதில் அவளைத் திருப்திப்படுத்தவில்லை. ‘கணேஷ், நீ கிருஷ்ணனாக இருந்திருக்கிறாயோ?’

‘ஏன்?’

‘ஏன் பெண்கள் உன்மேல் அப்படி வந்து விழுகிறார்கள்?’

‘அப்படியா? மோன்ஸ், நான் உறைபனி போலத்தூய்மையானவன். ஐ ஸ்பெஷலைஸ் இன் வர்ஜின்ஸ்! காலம் உனக்கு உண்மையை விளக்கும். ஒரு சர்தார்ஜி ஜோக் சொல்லட்டுமா, குருமுக் சிங் கிராமத்திலிருந்து முதல் தடவையாக ஜலந்தர் போனான்…’

‘உன் ஜோக்கைக் கொளுத்து! இப்போது என்ன செய்யப் போகிறாய்?’

‘உன்னை வீட்டில் கொண்டுவிடுகிறேன்.’

‘வேண்டாம். நான் தனியாகப் போகிறேன்.’

‘உன் அப்பாவைக் கொலை செய்தது யார் என்கிற பிரச்னையில் நான் முழுவதும் இறங்கிவிட்டேன்.’

‘அந்த கோவிந்த்தான், அதில் என்ன சந்தேகம்?’

‘நிறைய இருக்கிறது?’

‘ஒரு நிமிஷம். நீ ஏன் லைன் மாறிவிட்டாய்? நீ வேலையை ஆரம்பித்தது. ஓர் உயிலின் வியாக்கியானத்தில்…’

‘காரணம் இரண்டு. முதல் காரணம்: எனக்கு வேறு வேலை தற்போது கிடையாது. உங்கள் வீட்டு மர்மத்தில் முழுக் கவனம் ஏற்பட்டுவிட்டது. இரண்டு: பெண்கள். இரண்டு அழகான பெண் கள் -அனிதா, மோனிக்கா. ஒருவரை ஒருவர் அளவு கடந்து வெறுக்கும் அழகான பெண்கள்… இரு, இன்னும் நான் சொல்லி முடிக்கவில்லை. இரண்டாவது காரணம், உன் அப்பா இறந்து போனதன் ‘ஏன்?’ உன் அப்பாவைக் கொன்றவன் கோவிந்த் என்று வைத்துக்கொண்டால் எவ்வளவு கேள்விகள் எழுகின்றன தெரியுமா?’

‘உன் அப்பாவின் உடலில் சம்பந்தமில்லாத காயங்கள் பல இருந்திருக்கின்றன. அது ஏன்? என்னையோ அல்லது அனிதா வையோ முந்தாநாள் இரவு யாரோ தாக்க முற்பட்டிருக்கிறார் கள். அது ஏன்? அந்த கோவிந்த் விசுவாசமுள்ள வேலைக்காரன் என்பது பெரும்பாலும் தெரிகிறது. அவன் எங்கே போனான்? அவன்தான் கொலை செய்தான் என்றால் மற்ற விஷயங்கள் பொருந்தவில்லை. அப்புறம் பாஸ்கரின் வினோதமான நடத்தை. அவன் சொல்லியிருக்கும் பொய்கள். அவனுக்கு நான் இந்த கேஸில் இருப்பது பிடிக்கவே இல்லை. உன் சித்தி அனிதா உன் அப்பாவின் சொத்து வேண்டாம் என்று ஆணித்தரமாக – சற்று அதிகமாகவே – மறுப்பது. அப்புறம், பொதுவாகவே உன் வீட்டில் நிலவும் செயற்கையான சூழ்நிலை. இறந்தவருக்காகத் துக்கம் போதாது. இறந்தபின் நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் வேகம் போதாது. உடனே அவருடைய எஸ்டேட் விவகாரங்களை ஒழுங்குபடுத்தி வரி கட்டவோ, பாகம் பிரித்துக்கொள்ளவோ யாருமே ஆர்வம் காட்டவில்லை – உன்னைத் தவிர. இந்தக் கேள்விகள் எல்லாற்றையும் தெளிவாக்கக்கூடிய ஒரே பதில் இருக்கிறது. அந்தப் பதிலைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.’

‘அந்தப் பதில் கிடைத்த பின்தான் எனக்குக் காசு வரும்?’

‘ஆம்!’

‘சரிதான்! எவ்வளவு நாட்களாகும்?’

‘சொல்லத் தெரியவில்லை. நான் என்ன செய்யப்போகிறேன் என்றால் உன் அப்பா இறந்ததிலிருந்து ஆரம்பித்து இன்றுவரை எனக்குக் கிடைத்திருக்கும் விவரங்களைச் சரி பார்க்கப் போகிறேன். நிஜங்கள், நேரில் பார்த்த சம்பவங்களை எல்லாம் சரி பார்த்தபின்தான் அவற்றை ஒட்டவைக்க முயற்சி செய்ய வேண்டும்.’

‘கணேஷ், நீ அனிதாவைச் சந்தேகப்படுகிறாயா?’

‘அனிதாவையா?’

‘பின் பாஸ்கரையா? என்னையா?’

‘நான் எல்லோரையும் சந்தேகப்படுகிறேன். எவரையும் சந்தேகிக்கவில்லை. போகலாம். எனக்கு ஏர் ஹெட்குவார்ட்டர்ஸ் வரை போகவேண்டும்.’

‘எதற்கு?’

‘இந்த கேஸ் சம்பந்தமாக’

‘ஏர்ஃபோர்ஸுக்கும் என் அப்பா இறந்ததற்கும் என்ன சம்பந்தம்?’

‘உங்கள் வீட்டில் எல்லோரும் பொய் சொல்கிறீர்கள். அன்னபட்சி மாதிரி நான் பிரிக்கவேண்டியிருக்கிறது’.

‘நான் என்ன பொய் சொன்னேன்?’

‘சற்று முன் அந்த ஓட்டலுக்கு என்னை இழுத்துப் போகப் பொய் சொன்னாயே’.

‘அதற்குக் காரணம் சொன்னேனே… கணேஷ். ‘

‘காதல் என்று சொன்னாய் இல்லையா? ஞாபகம் வருகிறது..நாம் அடுத்த வெள்ளிக்கிழமை காதலிக்கலாம்.’

‘சில சமயங்களில் உன்னைக் கழுத்தை நெறித்துக் கொல்ல ஆசையாக இருக்கிறது’.

அவள் தன்னை யூனிவர்ஸிட்டி ஏரியாவில் ஒரு சினேகிதியைப் பார்க்கக் கொண்டுவிடுமாறு சொன்னாள். கணேஷ் அவளை அங்கே விட்டுவிட்டு விமானப்படைத் தலைமைச் செயலகத் துக்கு வந்தான். யூனிஃபார்ம் அணிந்தவர்கள் மத்தியில் சற்று வினோதமாக உணர்ந்தான். ஸ்க்வாட்ரன் லீடர் ராமலிங்கத்துக் காகக் காத்திருந்தான். அவர் குடும்ப விவகாரம் ஒன்றை அற்புதமாக வாதாடி ஜெயித்திருக்கிறான். அதனால் பரிச்சயம். அவ்வப்போது ஏர்ஃபோர்ஸ் மெஸ்ஸில் குறைந்த விலைக்கு ரம் வாங்க அவர் உதவி தேவை இருக்கும். இப்போது வேறு விதத்தில் தேவை இருந்தது.

‘ஹலோ கணேஷ்!’ என்று அவன் முதுகைத் தட்டினார்.

‘ஹலோ சார்! எப்படி இருக்கிறீர்கள்?’

‘பார்த்தால் தெரியவில்லை? பாகிஸ்தானுடன் எந்த நிமிஷமும் சண்டை செய்யத் தயாராக இருக்கிறேனே. தெரியவில்லை.’

‘அவர்கள் தாக்கப்போகிறார்களா?

‘வி ஆர் ரெடி, உட்காரலாம்.’

ரிசப்ஷனில் ஓரத்தில் அமர்ந்தார்கள். ‘ஆமாம், யார் அந்த ஃப்ளைட் லெஃப்டினெண்ட் ராஜா?’

‘அதை உங்களிடம் கேட்கத்தானே வந்தேன்’

‘புரியவில்லை.’

‘என் கேள்வி இதுதான். ஃப்ளைட் லெஃப்டினெண்ட் ராஜா என்று ஒருவர் ஆக்ராவில் ட்ரான்ஸ்போர்ட் விமான விபத்தில் இறந்து போனாராமே, அது உண்மையா?’

‘ஆம்! 1965 ஆக்ராவில் ஒரு பாக்கெட் விமானம் இறங்கும்போது விபத்துக்குள்ளாகியது. அதில் இறந்து போனவர்களில் ராஜாவும் ஒருத்தர்’.

கணேஷுக்கு சட்டென்று ராஜாவின்மீது சற்றுப் பொறாமை ஏற்பட்டது.

‘எதற்கு இந்த விவரம்?’

‘ஒரு கேஸ்! ஒரு ஆள் ஒரு விவரம் சொன்னார். அதை நான் பார்க்கிறேன்.’

‘சொன்னாரா, சொன்னாளா?’

‘சொன்னாள்.’

‘நினைத்தேன். அந்தப் பெண் என்ன ஆனாள்? பெயர் நீரஜா. கொஞ்ச நாள் சுற்றிக்கொண்டிருந்தாயே!’

‘ஓ.எஸ். நீரஜா! இப்போது ஒருவருக்கொருவர் புது வருஷ வாழ்த்துகள் அனுப்பிக்கொண்டிருக்கிறோம்….’

‘இப்போது யார்?’

‘அப்படி எல்லாம் இல்லை. ஒரு மர்டர் கேஸ். மிகச் சுவாரஸ்யமாக இருக்கிறது.’

‘இன்னொரு சமயம் சொல். இப்போது எனக்கு வேலை இருக்கிறது’.

‘சொல்கிறேன். தாங்க்ஸ்.’

‘பை! சமர்த்தாக இரு’.

ஒரு திடீர் மன மாற்றத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் இன்ஸ்பெக்டர் ராஜேஷைச் சந்திப்பதற்குப் பதிலாக வஸந்த் விஹாருக்குச் சென்றான் கணேஷ். அனிதா தனியாக இருக்கலாம்…

அனிதா பொய் சொல்லவில்லை. இல்லை, இல்லை, அதிகம் பொய் சொல்லவில்லை.

ஹாலில் மீனாட்சியைப் பார்த்தான்.

‘அனிதா இருக்கிறார்களா?’

‘இருக்கிறார்கள்.’

வந்துவிட்டாளா? எங்கே போயிருந்தாள்? கேட்கலாமா? மோனிக்கா வந்திருக்க மாட்டாள். அனிதா இருக்கிறாள்… மாடிப் படிகளில் மேலே செல்லும் போது, இன்று தெரிந்துவிடும் இன்று தெரிந்துவிடும் என்று அவன் எண்ணிக்கொண்டான்.

அனிதா நிச்சயம் அழுதிருக்க வேண்டும். அவசர அவசரமாக முகத்தில் பவுடர் ஒற்றி இருந்தாள். கண்கள் சற்று சிவந்து இருந்தன. அவனைப் பார்த்ததும் உடனே பேசவில்லை. அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்…

அவன் காத்திருந்தான்.

‘கணேஷ்! உங்களை நான் எவ்வளவு தூரம் நம்பலாம்?’

‘ஏன் அனிதா?’

‘நம்பி, சில விஷயங்களைச் சொல்வதற்கு எனக்கு ஆட்களே இல்லையே… நான் இன்று அனுபவித்த நரகம், வேதனை, அவமானம் எவருக்கும் வேண்டாம்…’

‘என்ன ஆயிற்று அனிதா?’

‘முதலில் நான் கேட்கவேண்டிய கேள்வி ஒன்று இருக்கிறது. நீங்கள் என்னைச் சந்தேகப்படுகிறீர்களா, இல்லையா?’

‘நான் எல்லோரையும் சந்தேகப்படுகிறேன் அனிதா.’

‘என்னை எதற்காக?’

‘அனிதா, இந்த வீட்டில் எல்லோரும் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.’

‘நான் கூடவா?’

‘ஆம்!’

‘என்ன பொய்?’

‘அன்று இரவு என்னை அழைத்தீர்கள். உங்களை யாரோ கொல்ல முயற்சி செய்ததாக… வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தீர்களே? உள்ளே சாமான்கள் உருண்டிருந்தனவே? உங்கள் வளையல் உடைந்திருந்தனவே? உடை கிழிந்திருந்ததே… யாவும் பொய் நாடகம்!’

அனிதா தலை குனிந்துகொண்டிருந்தாள்

‘ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?’

‘நான் சில சமயங்களில் முட்டாள்போல் தோற்றமளிக்கிறேன். ஆனால் முட்டாள் அல்ல. நீங்கள் சொன்ன விவரங்களும் நான் அறையில் பார்த்த விவரங்களும் ஒத்துப்போகவில்லை. ‘படித்துக் கொண்டிருக்கிறேன்… ஜன்னல் திறக்கிறது. காற்று என்று தாமதமாகவே திரும்பினேன். அவன் நிற்கிறான்…’ என்று மிக அழகாகச் சொன்னீர்கள். உங்கள் கழுத்தில் மெலிதாக விரல் வாடை அடையாளங்கள் கூடத் தத்ரூபமாக இருந்தன. ஆனால் அந்த அடையாளங்கள் லிப்ஸ்டிக்கினால் வரையப்பட்டவை…அப்புறம் அந்த நகக் கீறல்கள்…’

அனிதா பேசவில்லை.

‘நீங்கள் என்னை அழைத்த காரணம் எனக்குப் புரிகிறது. பாஸ்கர் சொல்லிக் கொடுத்தது. பாஸ்கரின் திட்டம் அது. என்னை அழைத்து, என் அனுதாபத்தைப் பெற்று, என்னை இரவு தங்க எ வைத்து, என்னை ஹாலில் அடித்துப்போடுவது திட்டம்! உங்களைத் தாக்க வந்தவன்தான் என்னையும் தாக்கி இருக்கிறான் என்று நான் நினைத்துக்கொள்ள! என்னை விலக வைக்க! அன்று இரவு என்னைத் தாக்கியது பாஸ்கர்தான் என்பது எனக்குத் தெரியாதா என்ன! அனிதா, உங்கள் இருவருக்கும் நான் இந்தக் கொலையைப்பற்றி ஆராய்வதோ உயில் விஷயமாக மோனிக்கா வுக்கு உதவி செய்வதோ பிடிக்கவில்லை. பாஸ்கர் ஆளை அனுப்பி வைத்து, பணம் கொடுக்கிறேன், விலகு என்கிறான். உங்கள் இருவருக்கும் பொதுவாக ஒரு ரகசியம் இருக்கிறது…’

‘என்ன ரகசியம்?”

இவளிடம் அதிகம் பேசுகிறோமா? இருந்தாலும் முயன்று பார்க்கலாம். சொல்வாளா?

‘உங்கள் கணவரை நீங்கள் பழி வாங்கியிருக்கிறீர்கள். பாஸ்கரின் உதவிகொண்டு… ‘

அனிதா சிரித்தாள்.

‘என்னைப் பாருங்கள் கணேஷ். என் உடம்பைப் பாருங்கள். என் செயலற்ற கைகளைப் பாருங்கள். என் வலிமையைப் பாருங்கள்.’

‘நான் உடல் வலிமையைச் சொல்லவில்லை. மனவலிமை! அனிதா, நான் நேற்றுப் பிறந்தவன் அல்ல. கோவிந்த் கொலை செய்தான் என்பதை நான் நம்பத் தயாராயில்லை. அவன் தலைமறைவாக இருக்கிறான்… பாஸ்கர் அன்று ஆக்ராவில் இருந்ததாகச் சொன்னது பொய். அவன் டில்லியைவிட்டு எங்கும் செல்லவில்லை. ஒரு கொலை செய்யும் அளவுக்கு கோவிந் துக்குக் காரணம் போதாது. மர்டர் இஸ் எக்ரைம் ஆஃப் பேஷன். அதீத வெறுப்பு, ஏமாற்றம், உலக உளவுக்குக் கோபம், தாற்காலிகமான குரூரம். இது போன்ற ஆதார உணர்ச்சிகள்தான் கொலைகளைச் செலுத்தும். அனிதா, சொல்லிவிடுங்களேன்!’

‘என்ன சொல்ல? நான் அவரைப் பழி தீர்த்துக்கொண்டேன் என்றா? கோவிந்தைத் தலைமறைவாக இருக்கவைத்தேன் என்றா? நானா? நானா? உங்களுக்கு மனத்தத்துவத்தில் ஆரம்பப் பாடம் தேவை கணேஷ்!”

‘ஷர்மா சவுக்கால் அடிபட்டிருக்கிறார். தெரியுமா அனிதா?’

‘அப்படியா?’

‘நீங்கள் அப்படியா என்று கேட்பதில் எவ்வளவு குரூரம் புதைந்திருக்கிறது தெரியுமா? நான் உங்கள் அறையில், மேஜையில், ஒரு இழுப்பறையில் சவுக்கைப் பார்த்தேன்!’

‘அப்படியா!’

கணேஷ் அவளை நேராகப் பார்த்தான். ‘அனிதா! நீ யார்? நீ யார்? நீ யார்?’ என்றன அவன் கண்கள். நான் ஒன்றும் அறியாதவள், ஆதரவு தேடுபவள் என்றன அவள் கண்கள்.

அவள் அசந்தர்ப்பமாகச் சிரித்தாள், சற்று உறக்கவே. ‘கணேஷ், நானும் பாஸ்கரும் திட்டமிட்டுச் செய்திருக்கிறோம் என்றீர்களே, கேளுங்கள். பாஸ்கர் முற்பகல் இங்கு வந்திருந்தான். அவன் என் னிடம் என்ன சொன்னான் தெரியுமா? ‘ஷர்மாதான் இல்லையே! நீ எனக்கு மனைவியாகி விடேன்’ என்றான்! கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு என்னைப் படுக்கையில் சாய்த்தான். ‘எல்லாச் சொத்தும் உனக்கே கிடைக்குமாறு செய்கிறேன். வா என் ராணியே!’ என்று அழைத்தான். எனக்காக இந்த வீட்டில் எட்டு வருஷங்கள் எ என்னை இப்படி அடைவதற்காகவே காத்திருந்தானாம். இன்று சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்ததாம்! நான் எத்தனை ஆண் புயல்களைச் சமாளிப்பது கணேஷ்! என்னைப் படைத்தவன் இப்படி ஒரு உடலையும் முகத்தையும் கொடுத்து, எல்லோர் பார்வையிலும் காமத்தைக் கொடுக்கிறான். நான் உன்னிடம் விரும்பியது ஆதரவு. வெறும் ஆதரவு. எனக்கு இருப் பது என் பெண்மை. எப்படியாவது உன் அனுதாபத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்பதற்காக நான் கொஞ்சம் பொய் சொன் னது தப்பா? இப்படி வேலைக்காரனிலிருந்து செக்ரட்டரி வரைக்கும் என்னை அடைய முயன்று கொண்டிருக்கையில் ஒரு சாசுவதமான நட்பை தேடிக்கொள்ள விரும்புவது தப்பா?’

‘பாஸ்கர் உங்களை அப்படியா கேட்டான்?’

‘நம்புங்கள். ஆம்! மீனாட்சியைக் கூப்பிடுங்கள். அவள் அறையில் நுழைந்தபோது என்ன பார்த்தாள் என்று கேளுங்கள்! நானும் பாஸ்கரும் கூட்டு சேர்ந்துகொண்டோம் என்கிறீர்களே! மீனாட்சி!”

‘வேண்டாம், நான் வருகிறேன்!’

‘எங்கே போகிறீர்கள்?’

‘பாஸ்கரைப் பார்க்க! அனிதா, சற்றுப் பொறுத்திருங்கள். நான் உங்களை உபாசிக்கிறேன். அது உங்களுக்குத் தெரியும். நீங்கள் பொய் சொல்லவில்லை என்று அறிய எவ்வளவு தூரம் விரும்புகிறேன் தெரியுமா? இருங்கள். பாஸ்கரை எனக்கு உடனே பார்க்கவேண்டும். ஒன்றில்லை ஒன்று, தீர்த்து விடுகிறேன்.’

‘பாஸகர் அபாயகரமானவன்!’

‘தெரியும் அனிதா’.

கணேஷினுள் அசாத்திய வேகமும் கோபமும் கொந்தளித்தது. காரில் விழுந்தான். சீறிச் சுழன்று மூலைகளில் கிறீச்சிட்டான். பாஸ்கர்! பாஸ்கர்! வருகிறேன். வருகிறேன். உன்னை எனக்குத் தெளிவாக இப்போது தெரிகிறது. அனிதாவைத் தொட்டாயா? வருகிறேன். அவளைக் கேட்டாயா? வருகிறேன்.

இருட்டிவிட்டது. பாஸ்கரின் வீட்டின்முன் காரை நிறுத்தி, கதவை அறைந்து சாத்திவிட்டு மாடிப்படிகளை இரண்டு இரண்டாகக் கடந்து இடது பக்கம் திரும்பி, பாஸ்கரின் அறையை அடைந்து அதன் கதவைக் காலால் உதைத்துத் –

கணேஷின் ரத்தம் உறைந்தது.

அறையில் மேலே ஃபேன் சுற்றிக்கொண்டிருந்தது. ஒற்றை பல்ப் எரிந்துகொண்டிருந்தது. படுக்கைக்கும் அந்த மேஜைக்கும் டையில் பாஸ்கர் மூக்குக்கண்ணாடி விழுந்து நொறுங்கி இருந்தது.

சற்றுத் தள்ளி, குறுக்குவாட்டில் பாஸ்கர் கிடந்தான். சத்தியமாகச் செத்த உடல்!

அத்தியாயம்-10

இறந்த உடலை அவ்வளவு கிட்டத்தில் பார்ப்பது கணேஷுக்கு முதல் தடவை.

இறந்து போனவர்களுக்காக எவ்வளவோ வாதாடி இருக்கிறான். ஆனால் இத்தனை அந்தரங்கமாகச் சந்தித்ததில்லை. பாஸ்கர் இருள் அடையாளம் மாறி இருந்தான். ரத்த ஓட்டம் இருந்தபோது அவன் முகத்தில் இருந்த புத்திசாலித்தனமான பார்வை இப்போது ரத்தத் தயக்கத்தினால் பயமா அல்லது ஆச் சரியமா என்று சொல்ல முடியாத மையமான மெழுகுத் தன்மையில் நின்றிருந்தது. அவன் பற்கள் தெரிந்தன. மேம்போக்கான அடி எதுவும் உடலில் தென்படவில்லை. வேஷ்டி அணிந்திருந்தான். செத்துப் போயிருந்தான்.

தொட்டுப் பார்க்கலாமா? ம்ஹூம். கூடாது! ஓடி விடலாமா? சே!

கணேஷ் அப்போதுதான் பார்த்தான். பாஸ்கர் ரத்தத்தின் மேல் படுத்திருந்ததை. மிகச் சிறிய செங்குழம்புத் தேக்கம். கணேஷ் சுற்றிலும் பார்த்தான். சுவரில் ஆணியில் ஒரு கோட்டு தொங்கிக் கொண்டிருந்தது. டெலிபோனைப் பார்த்தான். தீர்மானித்தான்.

பாஸ்கரைத் தாண்டிச் செல்லும்போது நிச் சயம் பயந்தான். ‘குபுக்’ என்று பாஸ்கர் எழுந்துவிடுவதைக்கூட எதிர்பார்த்தான். பாஸ்கர் எழுந்திருக்கமாட்டான். இன்னும் ரத்தத்தின் மேல்தான் கிடந்தான். செங் குழம்புத் தேக்கம். ‘டெட்’ என்று கணேஷ் சொல்லிக்கொண்டான்.

கிர்ர்ர்ர்ரக் கிர்ர்ர்ர்ரக் 

‘என் பெயர் கணேஷ். நான் 33 ஹெய்லி ரோடிலிருந்து பேசுகிறேன். இங்கே ஓர் ஆள் இறந்து போயிருக்கிறார். கீழே கிடக்கிறார். தரையில் ஃப்ளாட்டில். உள்ளே… அறையில், பூமியில். 33 ஹெய்லி ரோட், முதல் மாடி, ஆம், கொலை என்றுதான் நினைக்கிறேன். நான் நகரவில்லை. உங்களுக்காகக் காத்திருக்கிறேன். 33.. தேந்தீஸ்… தர்ட்டி த்ரீ.’ 

பாஸ்கரும் கணேஷும் காத்திருந்தார்கள். கணேஷ் என்ன செய்யலாம் என்று யோசித்தான். மறுபடி ஒரு தடவை பாஸ்கரைப் பார்த்துக்கொண்டான். பச்சோந்தியோ? கணேஷ் மறுபடி டெலிபோன் செய்தான். 

‘இன்ஸ்பெக்டர் ராஜேஷ். கணேஷ் ஹியர். நான் பாஸ்கர் வீட்டிலிருந்து பேசுகிறேன். பாஸ்கர் இறந்துவிட்டான்.’

‘வாட்? எப்போது? எப்படி?’

‘நான் அவனைப் பார்த்துப் பேச இங்கு ஹெய்லி ரோடு வந்தேன். அவன் உடலைப் பார்த்தேன். ஸிம்பிள்’. 

‘உடனே ரிப்போர்ட் கொடுத்தீர்களா?’ 

‘உடனே, ஃப்ளையிங் ஸ்க்வாட் எந்த நிமிஷமும் வரும்.’ 

‘நான் உடனே வருகிறேன். ரியலி பஸ்லிங்’. 

காலடி சப்தம் கேட்டது. அறைக்கு அருகில் வருவது கேட்டது. எவ்வளவு வியர்த்திருக்கிறேன்! கதவுப் பக்கம் பார்த்துக் கொண்டே கணேஷ் தன் கைக்குட்டையைத் துடைத்துக்கொள்ள எடுத்தபோது அந்தப் பையன் ‘மேரா ஸா…ம்னேவாலி கிடுக்கிமே’ என்று பாடிக்கொண்டே வந்தான். அவன் கையில் டிபன் காரியரும் ஒரு புதிய சிகரெட் பெட்டியும் இருந்தன. 

பையன மேஜை மேல் காரியரை வைத்தான். கீழே கிடந்தவனையும் உடனே கணேஷையும் பார்த்தான். பாட்டு நின்றது. சிகரெட் பெட்டி நழுவியது. 

‘ஊய்!” என்றான் பையன். அவன் கண்கள்! 

‘பயப்படாதே, இது வெறும்…’ 

அவன் கீழே பார்த்துக்கொண்டிருந்தான். ‘கூன்! சோர்!’ என்று உரக்கக் கத்திக்கொண்டே பாய்ந்துகொண்டு வெளியே ஓடி னான். அவன் கத்திப் படியிறங்கிச் செல்வது கணேஷுக்குக் கேட்டது. கீழே கொஞ்சம் கொஞ்சமாகக் குரல்கள் குழுமுவது கேட்டது. குழப்பமான ஹிந்தியில் அவனுக்குச் சில வாங்கி யங்கள்தான் புரிந்தன. ‘முற்பகல் இவன்தான் வந்து விசாரித்தான் சோப்ராஜி. உள்ளே நிற்கிறான். கையில் ஏதோ வெளுப்பாக வைத்துக்கொண்டிருக்கிறான். பாஸ்கர் ஸாப் கீழே கிடக்கிறார். ரத்தம் கொட்டியிருக்கிறது. அவன் நின்று கொண்டே இருக்கிறான்… ‘

‘இன்னும் அங்குதான் இருக்கிறானா?’

‘ஆம். நிற்கிறான்’. 

‘கையில் கத்தி வைத்துக்கொண்டிருக்கிறானா?’ 

‘ஏதோ இருக்கிறது அவன் கையில்.’ 

‘என்ன வயதிருக்கும் அவனுக்கு?’ 

‘உயரமாக,சிவப்பாக இருக்கிறான்.’

‘சோப்ராஜி. வாருங்கள், பார்த்துவிடலாம்’. 

குரல்கள் தைரியம் பெற்று அருகே அருகே கேட்க ஆரம்பித்தன. அவர்கள் மேலே வருகிறார்கள். 

‘விய்ய்ங்’ என்று சைரன் ஒலித்தது. பூட்ஸ் கால்கள் ஒலித்தன.

‘போலீஸ்!’ 

கணேஷ் பெருமூச்சு விட்டான். அறைக்கு வெளியே வந்து அறைவாசலில் கையைக் கட்டிக்கொண்டு நின்றான். எத்தனை பேர் மேலே வருகிறார்கள்? குரல்கள், கால் அடிகளின் ஓசைகள், அதட்டல்கள்… 

அதிகாரி தெரிந்தார். கணேஷைப் பார்த்தார். R.ஆர்.பி.ஸி. கலந்திருந்தது. 

‘நீங்கள்தான் போன் செய்ததா?’ 

‘ஆம். என் பெயர் கணேஷ்.’ 

‘பாடி எங்கே?’ 

கணேஷ் உள்ளே காட்டினான். 

‘எங்கே?’ 

‘இதோ கீழே கிடக்கிறது’.

‘ஓ.எஸ்.’ அவர் சற்றுத் தயங்கினார். 

ஒரு கான்ஸ்டபிள் பத்துப் பதினைந்து ஜனங்களைத் தள்ளி மாடிப்படிகளில் சரித்துக்கொண்டிருந்தார். 

அந்த இன்ஸ்பெக்டர் தன் பையிலிருந்து பேனாவை எடுத்துத் திறந்து ஒரு உதறு உதறிவிட்டு குறிப்புப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு எச்சில் பண்ணிய விரலால் புரட்டி வெள்ளைத் தாளுக்கு வருவதை கணேஷ் உன்னிப்பாகப் பார்த்தான். அதிகாரிகள் எத்தனை வகை! 

‘நீ எங்கேயும் போகாதே.’ 

‘நீ!’ என்னைச் சந்தேகப்படுகிறார்! ‘எங்கும் போகவில்லை’ என்றான். 

கான்ஸ்டபிளின் உதவியுடன் அந்த மேஜையைச் சற்று நகர்த்தினார். பாஸ்கரை ஒரு தடவை சுற்றி வந்தார். நோட் புத்தகத்தில் தேதி, சமயம் எழுதினார்.

‘இது யார் வீடு என்று விசாரிப்பா.’ 

‘இந்த வீட்டில் இருந்தவர் பெயர் பாஸ்கர். அவர்தான் இறந்தவர்’ என்றான் கணேஷ். 

‘நீ எதற்கு இங்கு வந்தாய்?’ 

‘அவரைப் பார்க்க’. 

‘தோஸ்த்தா?’ 

‘தெரிந்தவன்’. 

மாடிப் படியில் அடைந்து நின்று கொண்டிருந்தவர்களிலிருந்து பையன் பேசினான். ‘ஸாப், இந்த ஆள் காலை எஜமானன் இல்லாதபோது இங்கு வந்திருந்தார்?’ 

‘யார் நீ?’

‘பாஸ்கர் அய்யாவின் வேலைக்காரன்’. 

கணேஷ் ‘சிக்கல்’ என்று எண்ணிக்கொண்டான். ஆனால் பயப்படவில்லை. மடியில் கனமிருந்தால்தானே டாக்டரைப் பார்க்கவேண்டும்.

‘நீ இரு. வருகிறேன். அப்புறம் உங்களை எல்லாம் விசாரிக்கிறேன். 18, உள்ளே வாய்யா.’ 

அதே சமயம் மேலும் இரு போலீஸ் அதிகாரிகள் சேர்ந்து கொண் டார்கள். அவர்கள் தோள்பட்டைகளில் வெள்ளி நட்சத்திரங் களும் கறுப்புச் சிவப்புப் பட்டைகளும் மின்ன ஒருவர் விறைப் பாக, ஒருவர் அலட்சியமாக சல்யூட் பரிமாறிக் கொண்டார்கள். எல்லோரும் பஞ்சாபிகள். எல்லோரும் திடகாத்திரர்கள். சிவந்தவர்கள்.

கணேஷ், ராஜேஷ் எப்போது வருவார் என்று காத்துக் கொண் டிருந்தான். தன்மேல் அத்தனை கண்களும் இருப்பது அவ னுக்குத் தெரிந்தது. அலட்சியமாகவே நின்று கொண்டிருந்தான்.

கணேஷுக்குச் சட்டென்று அனிதாவின் ஞாபகம் வந்தது. திடீரென்று அவனுள், அவள் இருக்கும் அபாயம் உறைத்தது.

பாஸ்கரைக் கொன்றது யார்? ஷர்மாவைக் கொன்ற அதே ஆசாமி தானே? அப்படியானால் பட்டியலில் அடுத்தபடி அனிதாவா? பாஸ்கர் ஏன் கொலை செய்யப்பட்டான்? பாஸ்கரை நான் சந்தேகித்துக்கொண்டிருக்கும்போது அவனே விழுந்துவிட் டானே. யார் பாக்கி? அனிதா, மோனிக்கா, கோவிந்த். ஆம் கோவிந்த்தான்! எப்படிச் சொல்ல முடியும்? என்ன பகை இது. சம்பந்தமில்லாத கொலை. சம்பந்தம் இல்லையா? அனிதா.

‘உங்கள் பெயர் என்ன?” 

‘கணேஷ்’. 

‘நீங்கள் பார்த்ததை முழுவதும் விவரமாகச் சொல்லுங்கள்.’ கணேஷ் விவரமாக மெஷின்போல ஒப்பித்தான். சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவன் ஞாபகம் அனிதாவின்மேல் இருந்தது. அவளுக்குப் போன் செய்ய வேண்டும். எச்சரிக்க வேண்டும்.

‘சார், நான் ஒரு போன் செய்யவேண்டும்’. 

‘இந்த போனை உபயோகப்படுத்தக்கூடாது’ என்றார் இன்ஸ்பெக்டர். 

‘இதை இல்லை. எதிரே கடைக்குப் போய்ச் செய்கிறேன். விஷயம் ஒன்றுமில்லை. இறந்து போன இவன் வேலை செய்து கொண்டிருந்த வீட்டின் எஜமானிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தனியான பெண். ஒரு நிமிஷத்தில் வந்துவிடுகிறேன்.’ 

இன்ஸ்பெக்டர் ஏ.எஸ்.பி.யைப் பார்த்தார். அவர் யோசித்தார். ‘ஆல் ரைட். கான்ஸ்டபிள், இவருடன் போ’ என்றார். 

கணேஷ் அறையை விட்டு வெளியே வந்தபோது அந்தக் கூட்டம் பார்வையால் அவனைத் துளைத்தது. 

‘இவன்தான்.’ 

‘விலங்கு போட அழைத்துப்போகிறார்கள்.’ 

‘சின்னப் பையன் போலத்தான் இருக்கிறான்’. 

‘உன் சிஸ்டரை என்னுடன் அனுப்பு’ என்று அவனைப் பார்த்துச் சொல்லிவிட்டுக் கோபமாகப் படிகளில் இறங்கினான் கணேஷ். கான்ஸ்டபிள் அவனுடன் ஒட்டிக்கொண்டு வந்தான். 

எதிர்க் கடையில் விவிதபாரதி அலறிக்கொண்டிருந்தது. கணேஷ் தன் பையிலிருந்து பைசாவை எடுத்துக் காட்டி ‘கொஞ்சம் போன்’ என்றான் கடை முதலாளியிடம். 

அவன் ‘என்ன நம்பர் வேண்டும்? நான் நான் டயல் செய்து கொடுக்கிறேன்’ என்றான். எஸ்.டி.டி. பயம்.

‘ஸிக்ஸ் ஒன் டபிள் ஸிக்ஸ் ஃபோர் த்ரீ’. 

கடைக்காரன் டயல் செய்த போனைக் கொடுத்தான் கணேஷிடம். 

‘அனிதா?’

‘ஆம்’ என்றாள். அவள் குரல்தான். 

‘அனிதா, கணேஷ் ஹியர், ஸம்திங் டெர்ரிபிள் ஹாஸ் ஹாப்பன்ட் ‘ 

‘என்ன கணேஷ்?’

‘உஸ்தாத், அந்த ரேடியோவைச் சின்னதாக வைக்கிறீர்களா?… அனிதா, பதட்டப்படாமல், பயப்படாமல் கேளுங்கள். பாஸ்கர் கொலை செய்யப்பட்டிருக்கிறான்.” 

‘பாஸ்…கரா!’ 

‘ஆம்?’ 

‘கணேஷ்!’ அவள் குரல் ஹீனமாகியது. ‘என்ன சொல்கிறீர்கள் நீங்கள்! எப்படி நேர்ந்தது?’ 

‘எப்படி என்று இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும். நான் தான் முதலில் பார்த்தேன். அவன் ஃப்ளாட்டில் கிடக்கிறான். அவனுடன் சண்டை போடச் சென்றேன்… முடியவில்லை.’

‘கணேஷ், எனக்குப் பயமாக இருக்கிறது. எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. உடனே இங்கே வந்து என்னை அழைத்துச் சென்றுவிடுங்களேன்’. 

‘கூட ஒருவரும் இல்லையா? மோனிக்கா எங்கே?’

‘மோனிக்கா வெளியில் போயிருக்கிறாள். கணேஷ், உடனே வாருங்கள். உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறேன். எனக்குப் பயமாக இருக்கிறது. கணேஷ், வந்துவிடுங்கள்’.

‘அனிதா, நான் உடனே வர முடியாத நிலையில் இருக்கிறேன். இன்னும் பூரா விசாரிக்கவில்லை. முப்பது நிமிடத்தில் வர முடியலாம். வேலைக்காரர்களை அனுப்பிவிடாதீர்கள். கார் எங்கே?’ 

‘மோனிக்கா எடுத்துச் சென்றிருக்கிறாள். கணேஷ், நான் உங்களிடம் பேச வேண்டும். சொல்லவேண்டும்… உடனே…’

‘உடனே வர முயலுகிறேன். தனியாக இருக்காதீர்கள். சீக்கிரம் வந்து விடுகிறேன்.’ 

‘கூப்பிடுகிறார்’ என்று மற்றொரு கான்ஸ்டபிள் வந்து சொல்ல கணேஷ் டெலிபோனை வைத்தான். பைசா கொடுத்தான். திரும்பிச் சென்றான். ‘உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறேன்.’ அப்படியென்றால் சொல்லாமல் விட்டது இருந்திருக்கிறது. என்ன அது? அனிதாவுக்குத் தெரியுமா? 

கணேஷ் திரும்ப மாடிக்குச் சென்றபோது இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வந்திருந்தார். அவன் வணங்கினான். 

‘வி மீட் எகய்ன் ‘

கணேஷ் சிரித்தான். ராஜேஷ் சிரிக்கவில்லை.

‘ஏ.எஸ்.பி. பக்கத்து வீட்டு ஆசாமியிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். ‘நீ பார்த்ததை எல்லாம் சொன்னாயா?” 

‘இருட்டினதும் ஒரு கார் வந்து நின்றது சார். கறுப்பு அம்பாஸிடர். அதிலிருந்து ஒரு ஆள் இறங்கி மாடிக்குப் போனான்.’ 

‘அவன் எப்படி இருந்தான்?’ 

‘முகத்தைப் பார்க்க முடியவில்லை. சரக்கென்று உள்ளே போய்விட்டான். நானும் சரியாகக் கவனிக்கவில்லை.’

‘எவ்வளவு உயரம் இருந்தான்? இந்த ஆள் உயரம்?’ என்று கணேஷைக் காட்டினார். 

‘உங்கள் உயரம் இருக்கலாம்.’ 

‘வயது சுமாராக?” 

‘எனக்குச் சொல்லத் தெரியவில்லையே. சொன்னேனே, உன்னிப்பாகப் பார்க்கவில்லை என்று’. 

‘தானாக காரை ஓட்டிக்கொண்டு வந்தானா?’

‘அப்படித்தான் என்று நினைக்கிறேன்.’ 

‘கார் நம்பர் என்ன? 

‘நம்பர் பார்க்கவில்லை. இறங்கின ஆசாமி வேகமாக நடந்த உள்ளே சென்றான். இடது பக்கம் மாடிப்படி ஏறிப் போவதைப் பார்த்தேன்.’ 

‘உங்களில் வேறு யாராவது பார்த்தார்களா?’ 

‘நான் பார்த்தேன் சார், கார் வந்து நின்றதை’

‘எத்தனை மணிக்கு?’

கணேஷின் கண்கள் அறையைத் துழாவின. அலமாரியின் கீழ்த் தட்டில் செய்தித்தாள்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. புத்தகங்களின் முதுகுகள் வண்ண வண்ணமாக இருந்தன. மைக்கூடு, பை, இன்ஸ்பெக்டர் ராஜேஷின் பார்வையைச் சந்தித்தான். அவர் அவனைத் தனியாக அழைத்தார். ‘நீ ஏன் இங்கு வந்தாய் கணேஷ்? 

இவரும் நீங்களிலிருந்து ‘நீ’க்கு இறங்கி விட்டார். ஏன்? 

‘பாஸ்கரைப் பார்க்க, சிம்பிள்.

‘நீ பார்த்தபோது?’ 

‘நிச்சயம் பாஸ்கர் இறந்திருந்தான். அப்பாவின் மேல் ஆணை’. 

‘அதெல்லாம் வேண்டாம். யூ ஸீ… ‘

‘மிஸ்டர் கணேஷ், கொஞ்சம் இந்தப் பக்கம் வருகிறீர்களா?’ என்றார் ஏ.எஸ்.பி.

‘இந்த ஆளாப்பா?’ 

‘இவர்தான்.’ 

‘என்ன சார்?’ என்றான் கணேஷ். ஏ.எஸ்.பி. அவனைப் பார்க்க வில்லை. 

‘என்ன கேட்டார் உன்னை?’ 

பையன் தொடர்ந்தான். ‘பாஸ்கர் சென்றவாரம் ஆக்ரா போயிருந்தாரா என்று. இவர் அவருக்கு தோஸ்த் என்று சொன்னார். தான் ஆக்ராவில் வசிப்பதாகச் சொன்னார். பாஸ்கர் அய்யாவை எதிர்பார்த்ததாகச் சொன்னார்.’ 

‘ஏ.எஸ்.பி. கணேஷைக் கேள்விக்குறியுடன் பார்த்தார்.

கணேஷ் கனைத்துக்கொண்டான். 

‘என்னால் இதை விளக்க முடியும். இன்ஸ்பெக்டர் ராஜேஷுக்குத் தெரியும். நான் காலஞ்சென்ற ஆர்.கே.ஷர்மாவின் உயில் விஷயமாக அவருடைய மகளுக்கு உதவி செய்கிறேன். பாஸ்கர், ஷர்மா இறந்துபோன சமயம் ஆக்ராவில் இருந்ததாகச் சொன்னான். அது சரிதானா என்று விசாரிப்பதற்காக…’

‘வாட் இஸ் திஸ் ஆக்ரா பிஸினஸ் ராஜேஷ்?’ 

‘சார், இதனுடன் தொடர்பான மற்றொரு கேஸ் இருக்கிறது. ஆர்.கே.ஷர்மா என்பவர் இந்த பாஸ்கரின் பாஸ். அவர் சென்ற பதிதினெட்டாம் தேதி… ரிட்ஜ் ரோடு அருகில்…” 

‘தெரியும். ஐ கெட் தி கனெக்ஷன். இன் அதர் வோர்ட்ஸ் கணேஷ், ஷர்மாவின் கொலையைப் பற்றி புலன் விசாரித்துக் கொண்டிருந்தீர்கள் இல்லையா?’

‘ஆம். ஏறக்குறைய’. 

‘நீங்கள் யார் விசாரிக்க? ராஜேஷ், என்ன இது?’ 

‘நான் ஒரு லாயர்’. 

ராஜேஷ் இருமினார். 

கணேஷ், ‘எனக்கு ஒரு டெத் சர்ட்டிபிகேட் தேவையாக இருந்தது. ஷர்மா இறந்தது பற்றி எனக்குச் சந்தேகமாக இருந்தது’ என்றான். 

‘பாஸ்கர் ஆக்ராவில் இல்லை என்பது எங்களுக்கும் தெரியும் கணேஷ்’ என்றார் ராஜேஷ்.  

‘உன் பெயர் என்ன சொன்னாய்?” என்றார் மற்றொரு அதிகாரி.

‘கணேஷ். ஜி ஏ என் இ எஸ் எச்’. 

‘ராஜேஷ்! இவன் சொல்வது..’ 

‘உண்மை. இவர் அந்த ஃபேமிலியின் லாயர். இவர் பாஸ்கரைச் சந்திக்க வந்திருக்கலாம்’. 

‘நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? இந்தக் கொலையை நான் செய்திருக்க முடியும் என்றா? ஜோக் ஆஃப் தி டே.’ 

‘அப்படிச் சொல்லவில்லை. சரிபார்க்கிறோம். அவ்வளவுதான்’.

ராஜேஷ் உள்ளே சென்றார். கணேஷைப் பெயர் கேட்ட அதிகாரி அவனிடம் வந்து அவன் பைகளைத் தொட்டுப் பார்த்தார். 

‘கழட்டவா?’ என்றான். 

‘வேண்டாம்’ என்றார் பெரியவர். ‘பானர்ஜி! என்ன?’ 

அறையை விட்டு வெளியே வந்த பானர்ஜி, ‘சார், சுடப்பட்டிருக்கிறான். மிக நெருக்கத்தில் சுடப்பட்டிருக்கிறான். குண்டு உள்ளேயே இருக்கலாம். உடம்பின்மேல் வைத்துக்கூடச் சுட்டிருக்கலாம். அதிக ரத்தம் இல்லை. உறைந்திருக்கிறது’. 

‘தட்ஸ் பெட்டர். உங்களில் யாராவது சுட்ட சப்தம், வெடி சப்தம் கேட்டீங்களா?’ 

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ‘ஏ பாய் ஜரா தேக்கே சலோ’ என்று எதிர்க்கடை ரேடியோ பதில் சொன்னது. சைலன்ஸர் இல்லாமல் சாலையில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தான் ஒருவன். 

‘இந்த இடத்தில் பொதுவாக சப்தம் அதிகம். சுட்டிருந்தாலும் கேட்காமல் மிஸ் பண்ணி இருக்கலாம்.’ 

‘சற்றும் எதிர்பாராத ரீதியில் சுட்டிருக்கவேண்டும்… கறுப்பு அம்பாஸடர் கார். ஏம்ப்பா ஆண் பிள்ளைதானே வந்தது?’

கணேஷுக்கு அனிதாவின் ஞாபகம் வந்தது. ‘உடனே வாருங்கள் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறேன்.’ என்ன சொல்லப் போகிறாள்?

‘சார், நான் போகலாமா?’

‘வீட்டு விலாசம் சொல்லிவிட்டுப் போங்கள்.’ 

‘ஸ்டேட்மெண்டில் கொடுத்திருக்கிறேன். டெலிபோன் நம்பர் கூடக் கொடுத்திருக்கிறேன்.’ 

கணேஷ் தன் காருக்கு விரைந்து ஓடினான். மறுபடி வேகம் பிடித்து ரப்பரில் சீறினான். சற்று நேரத்துக்கு முன்பு அதே வேகத்தில் அனிதாவின் வீட்டிலிருந்து வெளிப்பட்டது ஞாபகம் வந்தது. வேகம் தேவை. நேரத்தைச் சாப்பிடும் வேகம். 

அவன் மறுபடி வஸந்த் விஹாரை அடைந்தபோது அந்த வீடு மிக மௌனமாக இருந்தது.

சற்று அதிக மௌனமோ? எச்சரிக்கை கலந்த வெறுமையோ? கார் கதவை மெல்ல மூடினான். வாயிற் கதவு திறந்திருந்தது.

‘மீனாட்சி!’ 

‘ராம்!’

‘ஹலோ!’ 

‘என்று மூன்றுவிதமாகக் கூப்பிட்டுப் பார்த்தான். பதில் கிடைக்கவில்லை. உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. 

‘மோனிக்கா!’

‘ம்ஹும்!’

மாடிப் படிகளில் நிதானமாக ஏறினான். மற்றொரு மாடி மற்றொரு அறை. சேச்சே, அப்படி நினைக்காதே, ‘அனிதா, அனிதா!’

அனிதாவின் அறைக் கதவு மூடியிருந்தது. விரல்களால் சன்னமாகத் தட்டினான். 

மறுபடி தட்டினான். கதவு திறந்துகொண்டது, தட்டலின் வேகத்தால். திரைகளை விலக்கி உள்ளே சென்றான். 

தப்பு, தப்பு நடந்திருக்கிறது இங்கே. அறையில் ஏதும் சேதமோ சிதறவோ இல்லை. எப்போதும்போல் அமைந்திருக்கும் பொருள்கள் எப்போதும்போல் இருந்தன. சோபா,படுக்கை, டிரெஸ்ஸிங் டேபிள். அதில் இருந்த மாக்ஸ் ஃபாக்டர் லிப்ஸ்டிக், அழகு சாதனங்கள். எல்லாம். ஆனால் அருகில் இருந்த டெலிபோன் மட்டும் ஊசலாடிக்கொண்டிருந்தது.

அனிதா இல்லை.

– தொடரும்…

– அனிதா – இளம் மனைவி (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 1974, குமுதம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *