அந்தக் கிழவனைக் காணவில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 1, 2014
பார்வையிட்டோர்: 18,235 
 
 

நாங்கள் இருக்கும் குடியிருப்பிற்கு சற்றுத் தொலைவில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது. அது தன்னுடைய ரகசியங்களைப் பொத்திக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றது. ஒரு மாலை நேரச் சூரியனும் ஆறும். ஒரு கிறோந்தல் பட்சியும் ஆறும். ஆறும் கிழவனுமாக பல நாட்கள் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். எந்த ஓசையும் எழுப்பாமல் ஓடும் மாயத்தை அவர் அறியாதவராக இருந்து பார்த்துக்கொண்டே இருப்பார். அணைகளில் மோதி எழுப்பும் சிற்றலைகளில் அவரது மனது அலைந்து கொண்டிருக்கும்.

‘நையின்ரி தேடப் படுகின்றார்” என பல குரல்கள் கட்டடத் தொகுதியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விடுகின்றது. நேற்றுக்காலை அவர் தீடிரெனக் காணாமற் போய் விட்டிருந்தார். மழை பெய்து கொண்டிருந்ததனால் அவர் நடந்து சென்ற காலடிச் சத்தம் கூட எங்களில் யாருக்கும் கேட்டிருக்கவில்லை. வீட்டில் நாங்கள் எல்லோருமே வேலைக் களைப்பினாலும், வேறு சில கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு விட்டு வந்திருந்த அசதியினாலும் தூங்கிப் போனோம். அயல் வீடுகளில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டு கொள்வதை நாங்கள் அநாகரீகமாகக் கருதியிருந்ததாலுமே அவ்வாறு பாராமுகமாக நடந்து கொள்ள நேர்ந்திருக்கிறது. எப்போதாவது அவருடைய சந்தோஷமான சிரிப்பொலியைக் கேட்டிருந்தோம் என்பதை ஞாபகங்களில் இருந்து கூட மீட்டுப் பார்த்துச் சொல்லக் கூடிய ஒரு நாள் அவருக்கிருந்தது என்பதை வெறும் ஒப்புக்காகக் கூடச் சொல்லி விட முடியவில்லை. எங்களுக்குள் வேரூன்றியிருந்த பலமான கேள்விகள் எழுந்து மிரட்டத் தொடங்கிய நாளிலிருந்து ஏற்பட்ட குற்றவுணர்வு அவரின் மீது ஓர் அன்பையும் பரிவையும் எமக்குள் ஏற்படுத்தி விட்டிருந்தது.

அன்றொரு நாள் அவர் தன் கதவைப் பலமாகத் தட்டும் ஓசை. ‘நான் போகப் போகின்றேன்! என்னை அனுப்பி விடு” என்ற அவலக் குரல் உச்சஸ்தாயியில் எழுந்த ஒரு இரவு எங்களுடைய தூக்கம் கலைந்து போனது. அனேகமாக அன்று எல்லோருமே கதவுகளைத் திறந்து கொண்டு, மங்கலான வெளிச்சத்தில், இடிந்து கொட்டுண்டு கொண்டிருக்கும், ஒரு பாழடைந்து கொண்டு போகின்ற கட்டிடத்தின் நடை பாதையில் நின்று கொண்டிருந்தோம். அந்த இரவில் எங்களின் குடியிருப்பைச் சேர்ந்த பலரையும் ஒன்றாகச் சந்திக்க நேர்ந்தது. தூக்கக் கலக்கத்தில் சிலர் இருந்தார்கள்.

‘ஓவென்று” திறந்து கிடக்கும் வாசல் கதவூடாக பனிக்குளிர் காற்று இரைந்து கொண்டிருந்தது. கதவு பூட்டில்லாமல் கிடக்கின்ற கட்டடத் தொகுதிகளில் ஒன்றாக அது இருந்தமையால் தான் வீடில்லாத ஒரு பாண்டிச்சேரிக் கிழவன் வந்து இரவில் தூங்கிச் செல்வது வழமையாகி விட்டிருந்தது. அவர் வந்து படுத்துக் கொண்டால் ஒரு வகையான துர்நெடி காற்றில் பரவத் தொடங்கும். அந்த மணத்தைத் தாங்க முடியாமல் மூக்கைப் பொத்திக் கொண்டு கதவண்டை வருவதற்கிடையில் சுவாசம் நின்று விடும் போல இருக்கும்.

அவருடன் மனம் விட்டுப் பேசுவதற்கான ஒரு சூழலை அவர் ஒரு நாளும் ஏற்படுத்தித் தந்தாரில்லை. இருந்தும் ஒரு நாள் பேச முயன்ற போது அவர் திமிர்த்தனமாக கடும் வார்த்தையால் என்னைத் திட்டினார். என்னை அவர் அப்படி திட்டியிருக்கக் கூடாது. நிலச் சுரங்கத்திற்குள் உள்ள அறையை நானே அவருக்கு ஒதுக்கிக் கொடுத்திருந்தேன். அதற்காக ஒரு நாளும் அவர் தனது மனம் நிறைந்த நன்றியுணர்வை வெளிப்படுத்தியது கிடையாது. திட்டியதற்காக ஒரு போதுமே அவர் மன்னிப்புக் கோரியதும் கிடையாது. அவருடைய பண்பு அப்படி. அதற்கான காரணங்களை போகிற போக்கில் ஆராய்ந்து தெரிந்து கொள்ள முயன்றேன். மனிதர்கள் மீதான வெறுப்புணர்வு தீவிரமடைந்து கொண்டு வருவதைக் கண்டேன். அதற்கு பல காரணங்கள் இருந்தன.

நாங்கள் ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கின்றோம். அவர்களோ தங்களுக்கென ஒரு பிரத்தியேகமான வாழ்நெறிமுறைகளை வகுத்துக்கொண்டு போனார்கள். அவருடன் புதிதாக இருவர் சேர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் இருந்து சகிக்க முடியாத துர்நாற்றம் வீசிக்கொண்டே இருந்தது. அது இ;ன்னும் அவர்களுக்கும் எங்களுக்குமான தூரத்தை அகலப்படுத்திக் கொண்டே போனது. இரவு உணவுகளைக் கொடுப்பதையும் நிறுத்திக் கொள்ள அதுவும் ஒரு காரணமாக அமைந்து விட்டிருந்தது. அது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவர்களில் ஒருவனிடமும் அவனுடைய வாழ்க்கை பற்றிய கேள்வியை எழுப்பிய பொழுது சொன்னான். இரண்டாம் உலகமகாயுத்த காலங்களின் போது அவனுடைய குடும்ப அங்கத்தினர் பலரை அவன் இழந்து விட்டிருந்ததாக.

அவனுடைய மனைவி குழந்தைகள் பற்றியெல்லாம் நான் கேட்டிருந்தேன். அவர்கள் ஆரோக்கியமானவர்களாகவும் சந்தோசத்துடனும் இருந்ததாகச் சொன்னான். வாழ்க்கை பற்றி ஏற்பட்ட சலிப்பிற்கும்,விரக்திக்கும் பல காரணங்களை முன்வைத்தான். தன் இளம் மனைவி இன்னொருவருடன் கூடிக்குலவிய நாளின் நினைவுகளை எழுப்பினான். அந்த நாளினுடைய கண்ணீரைத் துளித் துளியாய் ஓட விட்டுக் கொண்டே அவன் பேசினான். காதலின் நுண்ணிய பக்கங்களையும் அதன் வசீகரத்தையும் அதன் இசையையும், அதன் மெல்லிதான சிறகசைப்பையும், அதற்குள் இருக்கும் ஆழமான பாடலையும், ஆழ்ந்து ஆழ்ந்து கொண்டு செல்லும் ஒரு அழகிய பயணமாகவும் அது இடை நின்று போய்விட்டதாகவும் புலம்பினான். பிரிவின் வலி – ஒரு மெல்லிய நரம்புகளால் பின்னப்பட்டதுமான ஒரு இதயத்தை நொருங்கச் செய்து விடுகிறது எனச் சொன்னான்.

எம்மை இரவு தூக்கத்தில் இருந்து எழுப்பி அவர்களைப் பற்றிய பேச்சுக்கு எம்மை அழைத்துச் செல்வதற்கு காரணமாக இருந்த முத்துக் கிழவனும் (நையின்ரி) இவர்களுடன் ஒரு நாள் கூட்டுச்சேர்ந்திருந்ததைக் கண்டு மனுசிக்காரி துடித்த துடிப்பும் அழுகையும் அன்றும் அதன் தீவிரத்தோடு கதவைத் தட்டியது. அவர்களைப் போன்றதொரு மனநிலையை அவரும் எட்டுவதற்கான கோடுகளைக் கடக்க கன நாழிகைகள் காத்திருக்கத் தேவையில்லை என்ற பின்னாலையே கூடி நின்றவர்களுடன் நான் அந்தக் கதையைப் பகிர்ந்து கொண்டேன். ‘நீங்க சொல்லுறது மாதிரி இல்லைத் தம்பி; இந்த மனுசன் நடிக்கிறேர்; அவருக்கு நாடகம் நல்லா வழிப்போகும்; நீங்க நினைக்கிறது மாதிரி ஒன்றுமில்லை. அதுக்கு ஒரு திமிர் இருக்கு. திமிர்க் குணம் தான் காட்டுது. இந்த இரவில் மனுசரின் நித்திரையைக் குழப்பி கூத்துப் போடுது” என்று மனுசிக்காரி சொன்னதைக் கதவண்டையில் நின்று கேட்டுக் கொண்டிருந்தவர் காதில் குளவிகள் பறந்து குத்தியதைப் போன்ற வலி உடல் பூராகவுமே ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் பிறகு யன்னலில் போர்வையைத் திரித்து தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் இறங்கி தோல்வி கண்டதன் பின் ஒரு வித அமைதி அவரில் குடி கொண்டிருந்தது. நாங்களும் தூக்கத்திற்குச் சென்றுவிட்டோம்.

அவரது கனவில் ஊர்ப் பெரியதுகள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களின் புன்னகை தோய்ந்த முகங்கள் ஒளியும் நிழலும் பூசிக் கொண்டு தோன்றி மறைந்தன. மர நிழல்களின் கீழ் இருந்து அவர்கள் உரையாடுகின்ற காட்சிகளும்,அவர்கள் வாழ்க்கையை பிறப்பில் இருந்து இறப்பு வரை கொண்டாட்டமாகவே கொண்டாடிய நிகழ்சிகளும் ஒன்றன்பின் ஒன்றாக அவரது மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்திருக்கவேண்டும். ‘எங்களை வாழ விடுங்கள் எங்களின் சுதந்திரத்தை தடுக்காதீர்கள்” என்ற கோஷங்களைப் படுக்கையில் இருந்து எழும்பியதை வைத்து காலையில் சிறு கிண்டலுடனும் சிரிப்புடனும் அவர் மனைவி அவரைப் பார்த்து இராத்திரி ‘நரி வெருட்டினதாக்கும்”எனக் கேட்டாள்.

“நையின்ரி என்னவாம்” இராத்திரி தூக்கம் கெட்டுப் போன எரிச்சலில் மதி திட்டிக் கொண்டு படிகளால் இறங்கிப் போனான். அவன் தான் அவருக்கு இந்தப் பெயரையும் சூட்டினவன். அது பெரிய கதை. ஒரு நாள் பார்க்கில் இருந்தவரைக் கூப்பிட்டு எப்ப பிறந்தநாள் என்று கேட்டிருக்கிறான். ‘ஏன் தம்பி” இல்லைச் சும்மாதான் சொல்லுங்க. இண்டைக்குத்தான் தம்பி என்ர பிறந்தநாள். அட்டமி நவமியில பிறந்தநாள் வந்திருக்கு பறவாயில்லை. ராகுவும் கேதுவும் ஒண்டா நிற்கேக்க பிறந்தனான் தம்பி. பத்தில வியாழன் வரேக்க பதிய விட்டுக் கிளப்பிப்போட்டுது. இண்டைக்கு பிறந்தநாள் எண்டா உங்களுக்கு எங்கட சந்தோசத்தைக் காட்டவேணாமே. அதுக்கென்னராசா. பியர்ரின்கள் உடைச்சு பாட்டி வைச்சு அவருக்கு ‘நையின்ரி” எண்டு பெயரும் சூட்டி அனுப்பி விட்டாங்கள். ‘நையின்ரி கவனமாப்போ!” ‘ஓமடா தம்பி’ என்று வெளிக்கிட்டவர் வீட்டு வாசலில் போய் விழுந்து எழும்பினார். அண்டையில இருந்து நையின்ரி என்ற பெயர் அவருக்கு பிரபல்யமான பெயராப்போச்சு. அண்டைக்கு வெறியில அவர் சொன்ன வீரப்பிரதாபங்களை வைச்சுத் தான் எனக்குத் தெரியும் – அந்த மனுசனைப் பற்றிக் கொஞ்சமாவது. ‘புகையிலைத் தோட்டம் எண்டாக் காணும், நீர் அவர் நினைக்கிற மாதிரி தோட்டம் இல்லைக் காணும். மூவாயிரம் கண்டுகளுக்கு மேலே நடுகிற தோட்டக்காணி, கத்தரி, வெண்டி, மிளகாய், தக்காளி எண்டு நடுகிற மணல்தறை. செல்வம் கொழிக்கிற பூமியடா.

சந்தியால பஸ்திரும்பேக்க பாத்திருப்ப, என்ர சேட்டையும் பொங்கல் பானையும் போட்டுக் கொண்டு கத்தரித்தோட்டத்து வெருளி நிக்கிற தோட்டக் காணி – யாரைக் கேட்டாலும் காட்டுவாங்கள். அதில நான்பாடுபட்டு உழைச்ச உழைப்பிருக்கு. அந்தத் தோட்டத்தில் பாடுபட்டுத்தான்ரா பெரிய பெரிய கல்வீடு கட்டினனான். நிமிர்ந்து நிண்டு உழைச்சனான். இண்டைக்கு என்ர பிறந்தநாள். நாளைக்கும் என்ர பிறந்தநாள். எண்;டைக்குமே என்ர பிறந்தநாள் தான்ரா. இந்த நையின்ரியின்ர பெருமை உங்கள் ஒருத்தருக்கும் தெரியாதடா”. களைத்துப்போய் தரையில் படுத்துத் தூங்கி விடுகிறார்.

அவருடைய வாழ்க்கையின் மீது வன்முறை எவ்வளவு தூரம் தனது கால்களையும் பதித்துச் சென்றிருக்கின்றது. அப்பொழுதில் இருந்தே அவர் உடைந்து நொருங்கத் தொடங்கியிருக்கிறார்.

இரும்பையொத்த தேகத்தை உடைய ஒருவனுக்கு இரும்பை ஒத்த மனதும் இருந்திருக்கக் கூடாதா? அது தான் இல்லை. கருமேகங்கள் எந்த நேரமும் சூழ்ந்திருக்கும் வானத்தைப் போன்றதான நிலையிலேயே அவரது மனம் இருந்தது. சுடு சொற்கள் அவரது செவிகளில் கேட்டுத் துன்புற நேரும் கணங்களிலேயே அவருக்குள் இடியும் முழக்கமுமாய் கண்ணீர் மழை இறங்கத் தொடங்கிவிடும்.

மணல் வீடுகளைக் கட்டக் கட்ட காற்றும், அலையும் கரைத்துச் சென்று விடுவதைப் போல. சிங்கள பேரினவாத அலைகள் எழும்பி வாழ்க்கையை வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை, கனவுகளை அழித்துச் சென்றிருக்கின்றது.

அவர் ஒரு பூதத்தின் கால்களில் அகப்பட்டுக் கிடப்பாரைப்போல துடித்துக்கொண்டிருந்த வேளையில் அவரது குரல் அடங்கிப் போய் விடுகிறது என்பதை நான் உணரத்தொடங்கினேன். பூதம் அவரைத் தனது கால்களால் அறைக்குள் போட்டு மிதிக்கிறது. அவர் அழுது குழறுகிறார்.

சத்தம் வெளிவரவில்லை. அது அவரின் தொண்டைக் குழியைப் போட்டு அமுக்குகிறது. அமுக்குவதால் ஏற்படும் ஓசை மெல்ல கதவு நீக்குகளால் எனது செவியை எட்டுகிறது. பூதத்திடமிருந்து தப்பியோடுவதற்காக அவர் கதவண்டை வருகிறார். கதவு பூட்டப்பட்டுக் கிடக்கின்றது.

யாரிடமாவது சொல்லி விட வேண்டும் எனத் துடிக்கிறார். தெரிந்தவர் யாரிடமாவது அதன் பயங்கரத்தைப்பற்றிச் சொல்லிவிட முயன்று தோற்றிருக்கின்றார்.

அனேகமாக அவர் சந்தித்தவர்களில் பலர் அதே பூதத்தின் நகக் கீறல்களின் அடையாளங்களுடனேயே அவருக்குத் தென்பட்டார்கள். அவர்கள் வெட்கத்தினாலும்,பயத்தினாலும் பூதத்தின் கால்களின் கீழ் மிதிபட்ட அவலங்களை பகிர்ந்து கொள்ளாது மறைத்துக் கொள்ள விரும்பினார்கள்.

அவருக்கு பூதத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அவருக்கு மிக நெருக்கமான பழக்கப்பட்டதான அனுபவ உணர்வை அவர் கண்டு கொள்கின்றார். அவர் பலத்த ஏமாற்றத்தை அடைகிறார். வாழ்க்கையில் நிறங்கள் ஏதும் இல்லை என்ற முடிவிற்கு அவர் வருகின்றார்.

பூதத்தினுடைய காலடியின் கீழ் கிடந்து நசிபடுகின்ற நிலையில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் பற்றியதான தேடலற்ற நிலையில் அவர் களைத்துப் போய் முடமான நிலைக்குத் தள்ளப்படுகிறார். தன்னால் இனி ஒன்றும் ஆகாது எனும் முடிவிற்கு வந்து விடுகிறார்.

அந்த ஒரு நாள் இரவு வெளிநாட்டிற்கு வந்தது குறித்ததான உரையாடலை நிகழ்த்துவதற்காக அவரது நண்பன் ஒருவனை அழைத்திருந்தமைதான் இன்னும் அவருக்குச் சங்கடத்தைக் கொடுத்திருக்குமோ எனக்குத் தெரியவில்லை. நானும் அவர் அருகில் இருந்தேன். அவர் என்னை நோக்கி ‘தம்பி” எங்கட கடல்காத்து மாதிரி வருமோடா?” அவர் அந்தக் கேள்வியைக் கேட்கும் பொழுதே கடலின் நீல வர்ணங்களால் ஈர்க்கப்பட்டிருப்பதையும் அது வெண்திரை எறிந்து விளையாடும் அழகாலும் கவரப்பட்டு இழுபட்டுக் கொண்டுபோவதை உணர்ந்தேன்.

அதனுடைய பாடலை எங்களில் எந்த கவிஞனாலும் மொழி பெயர்த்துவிட முடியாது என்பதை அவர் சொல்லாமல் சொல்லிக்கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டவரைப் போல இருந்துவிட்டு ‘கடல் என்னை அழைக்கிறது” என்றார். அவர் அப்படி சொல்லியதன் பின்னால் தான்,தீராத வலியோடு அவருடைய உடல் சிதைந்து கொண்டு போய்க் கொண்டிருப்பதை நான் அறிந்துகொண்டேன். அவருடைய வார்த்தைகளை அதன் ஆழங்களைப் புரியாத அவரது நண்பர். ‘பைத்தியக்காரத்தனமான கதையை விட்டிற்று அலுவலைப்பாரும், மற்றவங்களுக்கு பேய் பட்டம் கட்டக்கூடாது” என்றார். ஒரு குழந்தையின் மனநிலையிலான இன்பத் தேடலும் மகிழ்ச்சியும் நிறைந்ததுமான ஒரு கொண்டாட்டம் நிறைந்த உலகத்தை இழந்த தவிப்பை அவர் அவரது பேச்சின் போது பரவவிட்டிருந்தார்.

‘இந்த மண், கிண், கனவு, சொர்க்கம் இதெல்லாம் ஒரு நாடகம்.” என்றார் அவரது நண்பன். அவரின் மனப் பாறைகளுக்குள் பதுங்கிக்கொண்டிருந்த கடல் பேரிரைச்சலோடு எழுந்து குமுறத் தொடங்கியது. ‘நீங்கள் இங்கும் கடல் பார்க்கலாம். அதோ எங்கள் வீடுகளுக்கு அப்பால் ஒரு ஆறு ஓடுகிறது. அதையும் எங்கட கடலாகப் பார்க்கலாம். இங்கும் பறவைகள் பறக்கின்றன. மனிதர்கள் இருக்கிறார்கள், நிலவு பொழிகிறது. இரவில் நட்சத்திரங்கள் சுருதி பெய்கின்றன. கோளங்கள் உரசுகின்றன. காலையில் சூரியன் வராதிருக்கும் நாட்களில் நீங்கள் வெய்யிலில் திரிந்த ஞாபகங்களோடு ஒரு துயரத்தை ஆற்றுப் படுத்தியே ஆகவேண்டியது தான். வேறு வழியில்லை. அதற்காக பனியைச் சபித்துக் கொண்டிருப்பதால் ஒன்றும் ஆகப் போவதும் இல்லை.

இங்கும் மனிதர்கள் இருக்கின்றார்கள். மரங்கள் நிற்கின்றன. காற்று வீசுகின்றது. நிலைமைகளைப் புரிந்து கொண்டு சூழலை உணர்ந்து கொண்டு உங்களைப் பழக்கப் படுத்திக் கொள்ளுதலை விட சிறந்த வழியிருப்பதாக எனக்குப்படவில்லை என்று சொல்லிச் சென்ற சில நாட்களின் பின் ஒரு துயரம் பதுங்கியிருந்து கொண்டதை அவனுடைய நண்பனால் ஒரு போதும் அறிந்தேயிருந்திருக்க முடியவில்லை என்பது தான் எனது மனதை மிகவும் வாட்டியது.

இலையுதிர்; காலம் வெறுமையுணர்வு வீதிகளில் படர்ந்திருந்த நாட்களில் எல்லாக் கண்ணாடிக் கதவுகளிலும் அவருடைய முகத்தைக் காண்கின்றேன். அவர் பழகிய இடங்கள் நடந்து திரிந்த பாதைகள் அவர் நின்ற இடம். அவர் பேசிய இடம். அவர் இறுதியாக எங்கு நின்றிருந்தார்? அவர் இறுதியாக யாருடன் பேசினார்?

அவர் இறுதியாக யாருடன் பேசுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்? அவர் யார் மீது கோபமாக இருந்தார்? அவருடைய மன நிலை எவ்வாறு இருந்தது என்பதைக் கண்டறியும் கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

அவ்வாறு நான் உரையாடிச் சென்ற இரவு அவர் ‘இங்கும் மரங்கள் இருக்கின்றன. இங்கும் கடல் இருக்கின்றது. எனக்குக் காட்டுறான் உவன் கடல். பைத்தியக்காரன் எங்கட கடலை இவங்களுக்குத் தெரியுமா? கடலை உவனுக்குத் தெரியுமாண்டு கேட்கிறேன்” என்று பெரிதாச் சத்தம் போட்டு வீட்டுக் கதவைக் காலால் உதைந்து என்னைத் திட்டிக் கொண்டு நின்றிருக்கிறேர். மனுசி சொல்லியிருக்கிறா ‘நீங்கள் அவர் வரவிட்டு நெற்றிற்கு நேராக கேளுங்க” வீட்டு விறாந்தையில விழுந்து புரண்டு அழுதிருக்கிறார். அவருடைய மனைவி வந்து அவரைகட்டிப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போய் அறைக்குள் விட்டு அறையை பூட்டி விடுகிறாள்.

அவரைத் தேடிக் கொண்டும், அவர் பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொண்டும் வந்து கொண்டிருக்கையில் வழியில் அவருடைய கம்பீரத் தோற்றமிக்கதான படத்தை ஒரு போதும் பார்த்திருக்கவில்லை. அது அடையாள அட்டைக்காக எடுத்தப்படத்தின் உருப் பெருப்பிக்கப்பட்ட தோற்றம்தான் அது. சிங்கள எழுத்தினாலும் நீண்ட தொடரான இலக்கங்களுமே அதை உணர்த்தியது.

அவரின் அடையாள அட்டைப் படத்தின் மூலம் நாம் அவரை அடையாளம் கண்டு சொல்லி விட முடியாது போனமை ஒரு துயரம் தான். இருந்தாலும் அவரின் அண்மைக்கால ஒரு புகைப்படமாவது எடுத்து வைத்திருக்கலாம் தானே” என ஒரு அன்பர் சொல்லிக் கொள்ள அவர் அருகில் வந்து கொண்டு வந்த ஒருவர்.

‘வாய்க்கு வந்தமாதிரி கதைக்கிறதுக்கு ஒரு எல்லையே கிடையாது தானே. மனசுக்கு தோன்றுகிற மாதிரி எதையும் சொல்லிட்டுப் போயிரலாம.; ஆனால் உண்மையை யார் புரியப் போகிறார்கள்” என்று கூறி முடிப்பதற்குள் இடையிட்ட சாமி ‘சரி படமிருந்து ஆகப்போவதென்ன? படமிருந்து தான் என்ன? இல்லாமற்போனால் தான் என்ன? ஆளையே காணேல்லையாம் இனியென்ன? எனக்கு வேலைக்கு நேரமாகுது உங்களோட கதைச்சுக் கொண்டு நிக்கேலாது” எனக் கூறியபடி றெயில்வே ஸ்ரேசனை நோக்கி சாமி ஓடினான்.

‘தெருக்களில் உள்ள தொலைபேசிக்கூடங்களுக்குள் நின்றாலும் அந்தாளின் முகம். கபூர்க் கதவைத் திறந்தாலும் அந்தாளின் முகம். உடுப்புக் கழுவ இறங்கினாலும் அவரின் முகம். சுவரில் அவரின் முகம். தேடப்படுகின்றார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

ஆளின்ர உயரம்,நிறம்,தலைமயிரின் நிறம்,கண்களின் நிறம்,போன்ற நுண்விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. ‘அவருடைய ஆசைகள் அபிலாசைகள்,எதுவாக இருந்தது என்பது பற்றிய விபரங்களையும் சேர்த்திருக்கக்கூடாதா?” என ஆபிரிக்க நண்பன் ஒருவன் மெசினுக்குள் உடுப்புக்களைக் கழுவிப் போட்டுக் கொண்டே கேட்டுக் கொண்டான். ஊத்தை உடுப்புக்களை கழுவுவதற்காக மெசினுக்கு குத்திக் காசுகளை எடுத்துப்போட்டுக் கொண்டே ‘அது சுருக்கமாக இருக்க வேணும் என்பதற்காக தவிர்க்கப்பட்டிருப்பதாக” அவனுக்குச் சொன்னேன். “அவரைத் தனக்கும் தெரியுமெனவும் தன் உறவினர் முறையிலான தாத்தாவை அவர் ஞாபகப்படுத்துகிறவராக இருந்தார்” எனவும் அவன் சொன்னான்.

ஆற்றங்கரைகள் நீட்டிற்குமாக கடலின் அழகை நினைந்துகொண்டு நடந்து கொண்டு போனதாக அவரை இறுதியாகக் கண்டவர்கள் பலர் சொல்லிக் கொண்டு போனார்கள். ஆற்றங்கரைகளில் அவர் போய் இருந்திருக்கிறார். அது அவருக்கு ஒரு பெரிய மன அமைதியைக் கொடுத்திருக்கிறது. உயர்ந்த மாடிக் கட்டடங்களுக்குள்ளால் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டும் இருந்திருக்கிறார்.

அவருக்கு மிக நெருங்கிய வானத்தின் பேரழகுபற்றியதும், அனேகமாக அவருக்கு எல்லா விடயங்களிலும் அவருக்கு ஏற்பட்ட முதல் உறவுகளின் மீதான பதிவுகளுமே அவரை ஆகர்சித்தன. அவரின் வீட்டின் முன்னாலுள்ள சிறு புல் வெளியில் திரியும் வெள்ளைக் கொக்குகளின் மீது அவர் அளவு கடந்த காதல் கொண்டிருந்தார்.

அவைக்கு தனது உழைப்புப் பற்றித் தெரியும். அவை அவற்றுக்கான உயரிய சாட்சியங்கள் என்பார். அப்படி அவரிடம் உள்ள மனப் பதிவுகளை எந்த ஓவியனாலும் வரைந்து விட முடியாது.

கடலின் அலை மடிப்புக்களுக்குள் மறைந்து நீந்திய ஞாபகங்களையும் கால்களின் கீழ் மணலில் நெரிபடவும் எழும்பும் இசையையும் எனக்கு எழுப்பி காட்ட முடிந்திருக்குமா என்ன? அப்படித்தான் ஒரு இசைக் கலைஞன் ஒழிந்திருக்கும் கடல் பற்றிய இசையின் குறிப்புக்களைக் காட்டி அவரை சமாளித்திருக்க முடியுமா?அது அவருக்குள் எப்படி இசைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை என்னால் அறிவிக்க முடியுமா? ஆற்றங்கரையை நோக்கிப் போவதும் அவர் வருவதுமாக இருந்த பொழுது எனக்குள் ஏற்பட்டிருந்த திருப்தி மறைந்து என்னைத் துன்பப்படுத்தத் தொடங்கியது. அவர் ஒரு மன ஆறுதலுக்காகப் போய் வருகிறார் என்றல்லவா கருதியிருந்தேன்.

ஆற்றின் மாய வசீகரத்தையும்,அதன் நிறங்களையும்,ஒளியையும் கொண்டு பின்னலிடுகின்ற நீராடைக்குள் தனது பிம்பங்களை மறைத்துக் கொண்டு விளையாடி மகிழ்வதாகவல்லவா நினைத்திருந்தேன்.

அவை எனக்குள் பெருத்த ஏமாற்றத்தையும்,தோல்வி உணர்வையுமே ஏற்படுத்தின. எங்களுக்கருகில் எமது கண்களுக்கு முன்னால் ஆவி துடித்து அழுத அழுகையை ஆற்ற முடியாதவனாகப் போய் விட்டிருக்கின்றேனே. அதைப் புரிந்து கொள்ளக் கூட முடியாதவனாகப் போய் விட்டேனே என்பதை நினைக்கும் போது தான் அத்தகைய உணர்வுக்குள் சிக்கி விட்டிருந்தேன்.

அடுத்த நாளும் அவர் பற்றிய எந்த விதமான தகவல்களும் எமக்குக் கிடைத்திராத நிலையில் அவர் பற்றிய கதைகள் அனேகமாக எல்லா அறைகளிலும் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. முதலாவது மாடியில் இடது புறத்திலிருந்த அறையொன்றின் நீக்குகள் வழியாக வந்த கதைகளில் இருந்து தான் நிறைய விடயங்கள் வெளியரங்கமாகத் தொடங்கியது. அவருடைய நிலைமைகளில் அண்மைக்காலங்களில் அவருடைய பழக்கவழக்கங்களில் ஒரு மாறுதல் ஏற்பட்டிருந்ததைக் குப்பைகளை ஏற்றிக் கொண்டு போகிற லொறியில் இருந்தவாறே நாதன் கவனித்ததைப்பற்றி தன் மனைவிக்குச் சொல்லிக் கொண்டிருந்தான்.

‘சாரத்தோட ஆற்றங்கரை நோக்கிப் போகும் தெருவால் வெறுங்காலோட நடந்து போய் கொண்டிருந்திருக்கிறார். விசர் பிடித்தவரைப் போல அவரது தோற்றமிருந்தது. நான் பயந்து போய் விட்டேன். பச்சை விழாமல் றோட்டைக் கடக்கிறார். வாகனங்கள் கோண் அடிச்சு பெரியசத்தம் எழுப்பின. பின் லொறியை எமெnஐன்சி லைற்றைப் போட்டு நிப்பாட்டிப் போட்டு இறங்கி தெரு நீட்டுக்குமா ஓடி கையில் பிடித்து இழுத்து நிறுத்தினன்.

‘விடுடா என்னை” அவர் பெரிசா சத்தம் போட்டார். எல்லோரும் என்னைப்பார்த்தார்கள். ஒரு மாதிரி வெருட்டி ஆளை வீட்டை நோக்கித் திருப்பினன். ‘அதுகள் உருப்படாதுகள்” என்று திட்டிக் கொண்டிருந்தான்.

மெல்ல விளக்குகளும் அணைந்து கொண்டன. இரண்டாம் மாடியில் சன்னலைத்திறந்து வைத்துக் கொண்டு ‘இவைய இஞ்ச கூப்பிடப்பட்ட பாடிருக்கேல்ல அது யாருக்குத் தெரியும், இல்லைக் கேட்கிறன், அங்க கிடந்து வெடிகிடிபட்டு நாசம் அறுந்ததுகள் செத்துக் கித்துப் போனாலும் எண்டு தான் இஞ்ச கூப்புட்டது. அதுகளுக்கு உது விளங்கப் போகுதா. எத்தனை லட்சம் செலவழித்துக் கூப்பிட்டது. போகப் போறன் போகப் போறன் எண்டு அடம்பிடிச்சால் போல தான் ஆளுக்கு இரண்டறை பலமாக் குடுத்தன். இப்ப, அதுக்கு என்னவாம். திருந்தத்தான் செய்தது.”

‘நீ யென்னத்துக்கு திருத்திற வேலைக்குப் போனனீ? நீ மனுசனா? நீ மிருகம். உனக்கு மூத்தவருக்கு எப்படி கை நீட்டுவ” பெண் குரல் தான் கோபமாக ஒரு ஆணின் பேச்சுக்குபதில் அளித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். பிறகு சத்தம் பெரிதாக எழும்பவில்லை. அவளின் முனகலும் அழுகையுமான குரல் வேகமாகப் போன கார் ஒன்றின் இரைச்சலில் மோதுப்பட்டு இழுபட்டுக் கொண்டிருந்தது.

அந்த இருளில் ஒரு கொடியில் உலர போட்ட அவரது சாரம் ஆடிக் கொண்டிருந்தது. சன்னலுக்கு வெளியில் உலரப் போட்டிருந்த சாரத்தின் மீது புறாக்கள் அமர்ந்து சென்றிருப்பதற்கான அடையாளங்கள் இருந்தன.

ஒரு வாரத்துக்கு மேலாகிவிட்டது, அவசர அவசரமாக எழும்பி முகத்தை அலசிக் கொண்டு உடுப்புக்களை எடுத்து கொழுவிக் கொண்டு ஓடுகிறார்கள். ஓட்டமும் நடையுமான காலைக் காட்சி மனிதர்கள் மீதான கழிவிரக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்களுடைய குடியிருப்பில் இருந்த ஒரு மனிதர் தேடப்படுகின்றார். அவர் காணாமல் போயிருக்கின்றார். எங்களுடைய கண்களில் படக் கூடாது என்பதில் அவர் உறுதி கொண்டவராக இருந்திருக்கின்றார். எங்களுடன் அவருக்கு வாழப்பிடிக்கவில்லை. எங்களுடன் அவருக்கு சிரித்துப் பழக முடியவில்லை. அது பற்றி யாரும் சிந்தித்ததாய் எனக்குத் தெரியவில்லை.

அவருடைய புகைப்படங்கள் எல்லா இடமும் எம்மை முறைத்துப் பார்க்கின்றன.

யாருடைய இயல்பு ஓட்டத்திலும் அவருடைய வாழ்க்கை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது எனக்கு விந்தையாக இருந்தது.

அவர் பற்றிய கதைகளைக் கூட அவர்கள் பெரிதாக காதில் வாங்கிக்கொள்ளவில்லை என்பதுதான் எனது பிரதான கவலையாக மாறிவிட்டிருந்தது. ஒற்றைச் செருப்பொன்றைக் கண்டு எடுத்துக் கொண்டு படிகளில் ஏறிக் கொண்டிருந்தாள் அவருடைய மனைவி. அவள் சிந்திய கண்ணீர்த் துளிகள் ஒற்றைச் செருப்பில் வீழ்ந்து தெறிக்கிறது. அழகான கல்யாணப் பெண்ணைப்போல அவள் இருந்தாள். தனது கணவனைத்தேடிக் கொண்டு ஆற்றங்கரை பூராகவும் நடந்தாள.; அவருடனான நினைவுகளையும், இளமைக்காலங்களையும் அவள் மீட்டிக் கொண்டே நடந்திருக்க வேண்டும். ‘அவரை எப்படியும் கண்டு விடுவேன்” என அவள் உறுதிபடக் கூறினாள். ‘நிச்சயமாக நீங்கள் அவரைக் கண்டு கொள்வீர்கள்” என்றேன்.

அவள் அதற்காக கடுமையாக உழைத்தாள். படகுகளில் ஏறிப் பயணம் செய்து பார்த்தாள். பாலத்தின் மேல் நின்று ஆற்றில் மிதந்து வரும் பொருட்களை யெல்லாம் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘தம்பி அவர் ஒரு மானஸ்தான்” தன்ர உழைப்பில தான் நிக்கோணும் எண்ட பிடிவாதக்காரன். யாரிட்டையும் கை நீட்டிப் பழக்கமில்லை நான் சொன்னனான் நீங்க போகலாம் என்று. அவர் அவசரப்பட்டிற்றார்.”

அவள் அவருக்காக தனி ஒரு அறையை ஒழுங்குபடுத்திக் கொடுத்திருந்தாள். கூட்டுக் குடித்தனம் சரிவராது என்பதை முற்கூட்டியே தெரிந்து கொண்டு தான் முன் ஏற்பாடுகளைச் செய்திருந்தது குறித்துச் சொன்னாள். அவள் தன்னிடம் எந்தக் குற்றமும் இல்லை என்ற வாதங்களை என் முன் பரப்பினாள். நான் அவளது முகத்தைப் பார்த்தேன். அது என்னுடையதாக இருந்தது. எனது முகங்களையும், எனது அகங்களையும் எனது உணர்வுகளையும் கொண்டவளாக இருந்தாள். என்னைப் போன்ற தசைகளையும், நரம்புகளையும், எலும்புகளையும், குருதியையும் கொண்டவளாக நின்றிருந்தாள். அவளது அழுகை என்னுடையதாக மாறியது அவளது சிரிப்பு என்னுடையதாக மாறியது. நான் அவளை விட்டு விலகிக் கொண்டு படிகளால் கீழிறங்கி தெருவை அடைந்தேன்.

அவருடைய படத்துடன் – காணவில்லை என்ற செய்தியுடன் வெளி வந்த பத்திரிகையை கையில் வைத்துக் கொண்டு வயதான சிலர், ஆபிரிக்கர்களும், அல்ஐPரியர்களும் வேறு சில நாட்டவர்களுமாய் இருந்த அவர்கள் எண்ணுக் கணக்கற்றவிடயங்களில் இதுவும் ஒரு விடயமாக எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கு பரிமாறிக் கொள்ளப்பட்ட வார்த்தைகள் பற்றி எதுவும் நான் சொல்வதற் இல்லை. அழகிய பெண் ஒருத்தியின் கைகளால் காப்பியை வாங்கி உறிஞ்சிக் குடித்துக் கொண்டு அவர்கள் வாழ்க்கையை வாழ்த்திப் பாடும் ஓசை என் காதுகளை நிறைத்தது. அப்பொழுது அவரது உறவினர்கள் தேடுகிறார்கள் என்ற படம் மெல்ல சிரித்துக் கொண்டிருந்தது.

குற்றம் சாட்டப்படும் நபர்களில் பிரதான எதிரியாக சந்திரிகாவே குற்றம் சாட்டப் படுகிறவராக இருக்கிறார். அவர் பலபேரது வாழ்க்கையில் மண்ணள்ளிப் போட்டார். இந்த மனிதனது இறுதி ஆட்டத்தின் கயிறுகள் கூட அவரின் கையில் தான் இருந்தது. எல்லா இடங்களிலும் ஓட்டப்பட்டிருந்தன அவரது படங்கள். ஒரு படத்தில் இருந்து சிரித்துக் கொண்டே இறங்கி நடந்து வந்தார்… ‘என்னையா?”
‘இருக்கிறம்” என்றார்.

தன்னைப்பற்றி பலரும் அவதூறாகப் பேசுவதைத் தன்னால் சகிக்க முடியாதிருப்பதாக அவர் குறைப்பட்டுக் கொண்டார். எப்படியும் வெகு விரைவில் தான் போக நினைத்த இடத்திற்குப் போய் விடுவதாகச் சொல்லிக் கொண்டு வந்தார். எனக்கு அவரது செயல் எரிச்சலையும், கோபத்தையுமே ஏற்படுத்தியது. ‘நீங்கள் செய்தது சரியா” என்றேன் ‘இதைவிட வேறு வழி இருக்கா?” எனக்கேட்டார். ‘மனுசியைப் பற்றியாவது யோசித்திருக்கலாம் அது தனிச்சுப்படப்போற பாட்டை கொஞ்சமாவது சிந்தித்திருந்தால் நல்லா இருந்திருக்கும்” என்று நினைப்பூட்டினேன். ‘இப்ப ஒன்றும் கெட்டுப் போகவில்லை விசர்க் கதை கதைக்காதையும்” என்று ஒரு குரல் கேட்டதுதான் தாமதம் ரெலிபோன் பூத் கதவு ஆடி அசைந்து கொண்டிருந்தது. கண்ணாடிக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அவரது படம் முழிஞ்சு பார்த்துக் கொண்டிருந்தது.

ஒரு இரவு நாள், வந்தாரை வரவேற்கும் வண்ணமாய் எந்தநேரமும் திறந்தே கிடக்கும் குடியிருப்பின் மரப் பலகைப் படிகளால் ஏறி நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒப்பாரி வைக்கும் ஓசை காதுகளைக் குடைந்தது. ‘அம்மா” என்று மனதில் செல்லிக் கொண்டேன்.

‘நீல நிறச்சாரத்தையும் பையில போட்டுக் கொண்டேல்லோ போயிருக்கிறார். நான் விசரியல்லோ – நான் எங்க எதைப் பார்த்தன். ஐயாட செருப்பு அறுந்து ஆற்றங்கரையில் கிடக்கையிலையே மனசுக்குள் வருத்தம் இருந்தது. இனிக் காண்பேனோ நான் அவரை. ஆற்றில் போயிறங்கி எந்த ஊருக்குப் பயணமானாரோ? எந்த மீன் குத்தி எப்படிச் செத்தாரோ. குளிரால் சொருகியல்லோ குற்றுயிராய் கிடந்தல்லோ. ஆவி துடித்தழுது அவர் போனாரோ? உன்னை நான் போ என்று தானே சொன்னேன் ஐயா!” ஆற்றின் கரையோரமாக ஒதுங்கிய சாரத்துண்டொன்றைக் கண்டெடுத்து வந்து அவள் அழுது ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள்.

அவர் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனும் ஊகம் பெரிதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் மகள்காரி அதை மறுத்தாள் ‘அவர் என்னுடைய அப்பா” அவரை எனக்குத் தெரியும். அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளக் கூடியவரல்ல. எனது அப்பா எனக்கு அப்படி ஒரு துரோகத்தை செய்யமாட்டார். அவரை எனக்குத் தெரியும் ஒரு சிறு கண்ணீர் துளியையும் என்ர கண்களில் காணச் சகியாதவர். எனது வாழ்வில் எப்போதும் அக்கறை கொண்டிருக்கின்றவர். அப்பா என்னை மிகவும் செல்லமாக ‘என்னுடைய ராசாத்தி” எனக் கூப்பிடுவார். அவர் எங்காவது போயிருப்பார். ஏதாவது ஒரு றெயினில் ஏறி எங்காவது போயிருப்பார். ஏதாவது ஒரு றெயினில் ஏறி சென்றடையும் தூரம் வரை போகட்டும் என இருந்திருப்பார். எந்தத் தரிப்பிடங்களிலும் இறங்காமல் அது சுழன்று கொண்டிருக்கும் பாதைகளில் தன்னிச்சையாகப் பயணம் செய்து கொண்டிருக்கக் கூடும். அவர் கண்ணாடிப் பக்ககமாக என்னை அணைத்து வைத்துக் கொண்டு மரம் செடிகொடிகள் ஓடுவதை ரசித்துக் கொண்டிருந்ததைப்போன்றதொரு பயண நினைவில் தன்னைமறந்து இருந்திருக்கலாம்.

தான் கனவில் காணுகின்ற ஒரு கிராமத்திற்கு அவர் போய்க் கொண்டிருக்கக் கூடும். அவர் ஆற்றுக்குள் இறங்கி இருக்க மாட்டார். அப்படி ஆற்றுள் இறங்கி எங்க போவது ‘இங்கிருந்து என்ன பயன்” என்று தொலைந்து போவதற்கு சில நாட்களுக்கு முன் என்னைக் கேட்டாரே தாய் முகத்தை சேலை தலைப்பால் துடைத்தவாறு கேட்டாள். அது உன்னோட விளையாட்டுக்குச் சொல்லியிருப்பார். ஊரில் இராணுவ நடவடிக்கையின் போது அப்பாவினுடைய படங்களில் கம்பீரமானதும், அழகானதுமான ஒரு புகைப்படம். நான் அவரோடு நிற்கிறதுமான ஒரு அழகிய புகைப்படம் சுவரில் இருந்தது.

அதனை ஆமிக்காரன் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினான். நான் பயத்தில் கிணற்றுள் குதித்து மறைந்து கொண்டேன். அந்தப் படத்தில் இருந்த அப்பாவா இப்ப எங்கட அப்பா? எப்படி உருக்குலைந்து போனார் தெரியுமா? அவர் அப்படி உருக்குலைந்து போவதற்கு என்ன காரணம் என்று ஒரு நாசமறுப்பும் தெரியுதில்லை நீ அப்பாவை அவதானித்திருக்கிறாயா? உனக்கு எங்க புள்ள நேரம் இருந்தது. நீ தான் இராப்பகலா அடிச்சுக் கொண்டு திரியுற, ஓய்வொடிச்சலில்லாமல் உழைச்சு என்னத்தைக் கண்ட, எல்லாம் இருண்டு போய் கிடக்கு. ‘நீ அழுது வடிக்காத. வீடு வாசல்ல இருந்து அழுதாக்கூடாது” என்றவாறு சன்னலைத் திறந்து வைத்தாள். மாலை நேரச் சூரியன் குளிரில் நடுங்கிக் கொண்டே வந்த திசையும் தெரியாமல் போன திசையும் தெரியாமல் போய் மறைந்தான். கட்டிடத்தின் உச்சியில் இருந்து ஒரு குரல் ‘புள்ளை என்ன அப்பா கிடைச்சிட்டாரா எனக் கேட்டது.” ஓம் கிடைக்கும் என்றவாறே அவள் சன்னலைச் சாத்திக் கொண்டுவிட்டாள்.

ஆற்றங்கரையில் குடித்து விட்டு வெறியில் தள்ளாடி விழுந்து எழும்பியதை அயலவர்கள் சிலர் தாம் கண்டதாக கதைத்துக் கொண்டு ரயிலை விட்டு இறங்கி வந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் ‘ஆள் பெரிய தண்ணி சாமி அடப்பா.” மற்றவனோ ‘இல்லையடாப்பா, அது ஒரு லூஸ் கேஸ். அதுக்கு மண்டையில தட்டிப் போட்டுது.”

நவம் ‘இல்லையடாப்பா அந்த மனுசனுக்கு ஊரை விட்டிற்று வந்தது கவலையாம்.” மற்றவனோ ‘அதுக்கு திரும்பிப் போறதுதானே”

நவம் ‘அது தான் இவ்வளவு காசைச் செலவழிச்சுக் கூப்பிட்டதுகள் ஓமாமே.”

வழியில் அவரது மனைவி எதிர்ப்பட்டதை கண்டவர்கள் கதையை நிறுத்திக் கொண்டார்கள். அவர்களின் கேலி நிறைந்த பேச்சுக்களுக்கும் சிரிப்புக்களுக்கும் இடையால் அவள் அவர்களை கடந்து கொண்டிருந்தாள்.

அறைக்குள் சன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு தனது இளமைக் காலங்கள் பற்றி பெருமையாக அளந்து கொண்டிருந்தார். அந்த தவிப்பை உண்மையில் ஒருவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் தன்னுடைய மீன் பிடிப்பைப் பற்றியும், தான் வெய்யிலுக்கு ஒதுங்கியிருந்த மர நிழல்களின் சுகங்கள் பற்றியும், உடலை ஒரு இசைக்கருவியாக மீட்டிச் செல்கிற கடல் காற்றுப் பற்றியும் பெருமையடிக்கிறார் என்பது மட்டும் தெரிந்திருந்தது. கக்களம் கொட்டி சிரிக்கிறார்.

பிறகு, கதவிற்கு அருகில் நின்று தாறுமாறாகப் பேசினார். அப்பொழுது தான் எங்களுக்கே தெரியும். மிகப் பெரிய போராட்டத்தின் மத்தியில் அந்த மனுசி படுகிற பாடு. வேளா வேளைக்குச் சாப்பாட்டை சமைத்து எடுத்துக் கொண்டு பூட்டிக்கிடக்கும் கதவைத்திறந்து அவருக்கு சாப்பாடு, தேனீர் கொடுத்துச் செல்வதற்காக வந்து கொண்டிருந்த ஒரு நாள். கோப ஆவேசம் கொண்ட அவர் ‘என்னை ஒண்டும் பண்ணேலாது” என்று அடம்பிடித்துக் கொண்டு இறங்கி தெருவில் நடந்து கொண்டு போகத்தொடங்கினார். மனுசி அவர் பின்னால் ஓடிக் களைத்து திரும்பி ஓடி வந்து வீட்டுக் கதவை தட்டியது. நாங்கள் இறங்கி அவர் பின்னால் ஓடினோம்.

‘நீங்கள் நடந்து கொள்வது சரியா?”

‘சரி, பிழை தீர்மானிக்கிற நிலையில நான் இல்லை, கை நீட்டி முகத்தில அடித்தபிறகு எனக்கென்னடா சீவியம் வேண்டிக்கிடக்கு? நீயும் ஒரு ஆள்தானே. அப்ப ஒரு நீதி கேட்காதவன், இப்ப ஏன் வாற? நான் எங்கையாவது போவன், எங்கையாவது வருவன்.” ‘சரி, வாங்க றோட்டில வேணாம், ஆட்கள் பார்க்கினம் எங்கட மானம் மரியாதை….” ‘மானம் மரியாதையெல்லாம் அண்டைக்கே போயிற்று” ‘அழாதேங்க வீட்டில போய் கதைப்பம்” ‘உன்னோட ஒரு கதையும் இல்ல் நான் போகப் போறன்; அதை யார் தடுக்கிறது.” கதவை பலமாக அடித்து சாத்திக் கொண்டார்.

அன்றிலிருந்து நாங்களும் பேச்சு வைத்து கொள்வதில்லை. பல்வேறு பிரச்சனைகள் ஒன்றாகச் சேர்ந்து கொண்டிருந்தன. தனித்த ஒரு காரணங்களுக்காக என்றில்லாமல் அது பலதும் பத்துமாய் கிளைவிட்டுக் கொண்டே போனது. உடுப்பில் ஆரம்பித்த அவரது பிரச்சினை பிறகு மொழியில் என மாறி உணவில் என்று போய் சுற்றிச் சுழன்று வளர்ந்து கொண்டே இருந்தது.

மருத்துவரிடம் கூட்டிச் சென்று காண்பிப்பதற்காக ஒரு நாள் அவர் புறப்பட்டு சென்று கொண்டிருந்த பொழுது இறுதியாக கண்ட ஞாபகம்.

மருத்துவர் மனோவியல் நிபுணராக இருக்க வேண்டும். அவர் இவருடைய நோய்கள் பற்றி முழுமையாக இல்லாவிட்டாலும் அவரால் சில விடயங்களை குறிப்பிட்டு கூறக்கூடியதாக இருந்தது. ‘மதுப்பாவனையை உடனடியாக நிறுத்த வேண்டும்; எக்காரணம் கொண்டும் மது பாவிக்க வேண்டாம்.” எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அவர் ‘ஓம்”எனத் தலையாட்டினார். ‘அவரை கிராமப்புறங்களுக்கு கூட்டிச் சென்று வாருங்கள்” என மருத்துவர் சொன்னார். அதற்கு அவர்களுடைய உறவினர் ஒருவர் ‘அப்படியெல்லாம் கூட்டிக் கொண்டு திரிய இஞ்ச எங்களொருத்தருக்கும் வேலையில்லாம் இல்லை; எல்லாரும் வேலையும் வெட்டியுமா இருக்கிறம்.” என்று முகத்தில் அடித்தது மாதிரி பதில் சொன்னார்.

‘சோசல் உதவியோட போய் வரலாம்”என மருத்துவர் ஆலோசனை சொன்னார். ‘அவருக்கு பாசை தெரியாது; அதனால் அவரை அவர்களுடனும் அனுப்ப முடியாது. இவரை கட்டி அவிழ்க்கிறது கஸ்டம்’ என அவர்கள் மறுத்துவிட்டார்கள். முடிவில் மருத்துவர் சில மருந்துகளை எழுதிக் கொடுத்து விட்டிருந்தார்.

அவராலும் நோயாளியுடன் மனம் விட்டுப் பேசக் கூடியதான ஒரு சூழலை உருவாக்கி விட முடியவில்லை இறுதியில் அவர்களும் கைவிட்டதான ஒரு நிலையிலேயே அவர் அன்று வந்து சேர்ந்திருக்க வேண்டும். அன்று இரவு உரத்த குரலில் எழுந்த சத்தத்திற்கு பிறகு அது போன்றதொரு குரல் எழும்பியிருக்கவில்லை; எதையோ தேடுகின்ற அவலத்தோடு கூடிய குரலை நாங்கள் கேட்கவே இல்லை. அவருடைய எந்தத் துயரத்தையும் அவருடைய மொழியில் ஆற அமர இருந்து நாங்கள் கேட்டிருக்கவில்லை அவர் எதை பலமாகத் தேடிக்கொண்டு திரிந்தார். அதனுடைய மகிமை என்ன? அதனுடைய இசையென்ன? அது எப்படி ஈர்க்கிறது. அது எப்படி மனிதனுடனான தொடர்பை வைத்திருக்கிறது. அது தோற்றுப் போகும் போது மனிதனுடைய உடல் எவ்வாறு உடைந்து நொறுங்குகிறது. அப்போது அவனுடைய கண்கள் எவ்வாறு சக்தியை இழந்திருக்கும்? என்பது பற்றி அறிகின்ற ஒரு சந்தர்ப்பத்தை அதை ஒரு நாடகமாகவும் வேசமிடலாகவும் கூத்தாகவும் பம்மாத்தாகவும் கருதியதனால் அவற்றை உணரும் வாய்ப்பை இழந்து விட்டவனாக நின்று கொண்டிருந்தேன்.

பொலிஸ் நிலையத்திற்கருகிலுள்ள ஆற்றங்கரையில் தனது செருப்பை கழற்றி வைத்து விட்டு அவர் ஆற்றில் குதித்திருக்கிறார். கரையில் கடல் காகங்கள் கலைந்து பறந்திருக்கின்றன. சூரியன் மிகவும் சோகத்தோடு ஒட்டகங்களைப் போல் படுத்திருக்கும் மலைகளுடாக கடந்துகொண்டு போனான்;. ஆற்றில் குதித்த அன்றைய நாள் மிகவும் குளிராக இருந்தது. உடல் சில்லிடும் குளிர் அவர் விறைத்துப் போய் உயிரை மாய்த்திருக்கிறார். பொலிசார் தேடிக்கொண்டு திரிகிறார்கள்.

பொது நிறமும், கறுப்பு நிறத் தலை முடியும் பின்னால் சற்று வழுக்கையும் கண்டிருந்தார். அவர் அன்று ரௌசரும் சேட்டும் போட்டுக் கொண்டு கோட்டும் அணிந்து கொண்டு மிக எடுப்பாக நடந்து கொண்டு போனதைப் பலர் கண்டிருக்கிறார்கள். ‘ஆளுக்கு ஸ்ரையில் பிடிபட்டிற்று” யாரோ சொல்லிச் சிரித்துக்கொண்டு போயிருக்கிறார்கள். அவர் எதையும் காதில் வாங்காது போனதாகவும் பேசிக்கொண்டார்கள்.

குப்பை லொறி ஏற்றிக் கொண்டு போகையில் அவர் அவர்களை கண்கொண்டு பார்க்க விரும்பாதவராக கடந்து போனதற்குள் இவ்வளவு மர்மமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும் என தங்களுக்கு தெரிந்திருக்கவே இல்லை. என அவர்கள் கவலைப்பட்டுக்கொண்டார்கள். அவருக்கு தாங்கள் ஒரு வேலை மேரியில் கதைத்து ஒழுங்கு செய்திருந்ததாகவும் அதற்குள் அவர் ஆற்றில் விழுந்து தொலைந்து போனதாகவும் வருத்தப்பட்டார்கள். ஆற்றில் விழுந்து தொலைந்து போன நாளிலேயே அவருக்கு வேலை வழங்குவதற்கான ஒப்புதல் கிடைத்திருந்ததென்றும், அது அவருக்கு ஒரு சிறு நம்பிக்கையை கொடுத்திருக்கக் கூடும் எனவும் நம்பியிருந்ததாகச் சொன்னார்கள்.

ழூ அன்று காலை எல்லோரும் விசாரனைக்காக அழைக்கப்பட்டிருந்தார்கள். தனித்தனியாக விசாரனைகள் மேற்கொள்ளப் பட்டுக்கொண்டிருந்தது. அமைதியும் சாந்தமும் நிறைந்திருந்த அறையொன்றில் விசாரனை நடந்து கொண்டிருந்தது. ஆற்றங்கரையை அண்டியிருந்த அந்த அறையில் எல்லோரும் வெறித்தபடி இருந்தார்கள். ஆற்றங்கரையின் மரங்கள் காற்றுக்கு ஆடி அசைந்து கொண்டிருந்தன. கப்பல்கள் பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு கடந்து கொண்டு போவதை சன்னலூடாக பார்த்துக் கொண்டிருந்தாள் அவருடைய மனைவி.

மகள்மாரும், பேரப்பிள்ளைகளும் உறவினர்களும். அந்த மண்டபத்தில் விசேட பகுதியொன்றில் இருந்தார்கள். ஒரு முதிய தாய் தனது பேரப்பிள்ளைகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருப்பதான பெரிய ஒளிப்படம் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தது. பேரப்பிள்ளை
‘தாத்தா இருந்திருந்தா”
பேரப்பிள்ளை 1
‘தாத்தா, கக்கா”
பேரப்பிள்ளை 2
“தாத்தா இருந்திருந்தா கதை சொல்லுவார்’
பேரப்பிள்ளை
‘நாட்டுக்கு என்னை அனுப்பு! எண்டு கத்துவார்”
பேரப்பிள்ளை 2
‘பாவம் தாத்தா”
பேரப்பிள்ளை
‘தாத்தா இருந்திருந்தால்”
பேரப்பிள்ளை 1
‘யானையில போயிருப்பம்”

தாத்தாவின் நினைவும், தகப்பனின் நினைவும் அவர்களைச் சூழ்கிறது.

மீண்டும் வாழ்வின் சின்னச் சின்ன அற்புதமான கனவுகள் ஓடங்களாக மிதந்தன. விசாரணை அதிகாரியின் முன்னிருந்த மனைவியின் முன்னால் எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்தும் ஒரு மொழிபெயர்ப்பாளன் மூலமாக மொழிபெயர்க்கப் படுகிறது. விசாரனை அதிகாரி: எத்தனை மணிக்கு வீட்டிலிருந்து இறங்கினார்?

மனைவி: சரியாகச் சொல்ல முடியவில்லை, அவருக்கு மிகவும் பிடித்ததும் ஒரு கிழமைக்கு முதல் அதன் சுவை பற்றியும் வாசனை பற்றியுமாக அவர் நினைவு படுத்தியதுமான கூழ் அன்று அவருக்காக செய்து கொண்டு நான் எடுத்துச்செல்வதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். அவர் அதை விரும்பிச் சுவைப்பார் என நான் திடமாக நம்பியிருந்தேன். ஏற்கனவே சாப்பாடுகளின் மீதான ஆர்வமும் ஈடுபாடும் அவருக்கு குறைந்து விட்டிருந்தது. அவர் ஒரு உண்ணாவிரதியைப் போலவும் நடந்து கொண்டிருந்தார் அதனால் கூழ் அவருக்கு மீளவும் உணவின் மீதான விருப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என விரும்பி வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவருக்கு விரும்பிய முருக்கமிலை, வீட்டிற்கு முன்னுக்கு நிற்கிற பனையிலிருந்து போட்ட ஒடியல், தேங்காச் சொட்டு, குஞ்சு மீன்கள், நண்டு, றால், கணவாய், கலவாய், பயத்தங்காய், மீன் எல்லாம் போட்டு புளியும் விட்டும் ஒடியல்மா அளவாக கரைத்து கடல்உப்பு வாங்கி வந்து போட்டு ஆக்கின கூழையும் எடுத்துக் கொண்டு போக கதவு ஓவென்று திறந்து கிடந்தது. அறைக்குள் சென்று பார்த்தேன், அவரைக் காணவில்லை அப்படியே கூழை வைத்து விட்டு எல்லா இடமும் தேடத் தொடங்கினேன்.

விசாரணை அதிகாரி: வீட்டில் அவருக்கும் உங்களுக்கு மிடையில் ஏதாவது தகராறு ஏதும் ஏற்பட்டதுண்டா? இது நல்ல கேள்வி, அவருக்கும் எனக்கும் என்னைய்யா தகராறு. இல்லை, நீங்கள் என்னைச் சந்தேகப்படுவது போன்றதொரு கேள்வியை எழுப்புவதுதான் எனக்கு மனதில் சங்கடத்தையும் கஸ்டத்தையும் தருகிறது.

இந்த நிலமைக்கு நாம் ஏன் வந்திருக்கிறோம் என்பதை ஐயா! நீங்கள் அறியமாட்டீர்களா? எனது கணவருக்கும் எனக்கும் என்னைய்யா தகராறு? ஆசை அருமையாக நான்கு பெண் குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்தோம். எங்கட நிலத்தில் பயிர் செய்து எங்கட வாழ்க்கையை ஓட்டினோம். அந்த நிலத்தில வாழ முடியாமல் விரட்டப்பட்ட நாளிலிருந்து அவர் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. அவர் ஒரு குழந்தையைப் போல அழுதார். அவர் கடல் குமுறினாப் போல உள்ளத்துக்குள் குமுறினார். காசை காசெண்டு பார்க்காமல் கூப்பிட்ட பிள்ளையள் எங்கள கொல்லுறதுக்கெண்டா? அப்படி ஒரு தகராறும் எங்களுக்கு கிடையாது. விசாரணை அதிகாரி: அவரின் உடம்பில் அடிபட்ட காயங்கள் இருக்கிறதே?

அது அவர் எங்கையாவது அடிபட விழுந்திருப்பார். எனி ஊரில ஆமிக்காரன் அடித்த காயத்தழும்புகளும் இருக்கும். அவர் ஏற்கனவே பல உள் காயங்களோட திரிஞ்ச மனிதர் தானே ஐயா

விசாரணை அதிகாரி: வேறு யாருடனாவது அவருக்கு பிணக்குகள் இருந்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கிறதா? சந்திரிகா அம்மையார் தான் அவாட படையள வீடு வாசலுக்கு அனுப்பி எங்களை இந்த நிலமைக்கு கொண்டு வந்தவா அவர் தான் அதுக்கு பிறகு நான்கு சுவருக்குள்ள அடங்கிப் போனவரா இருந்தார். அந்தச் சுவர்களுக்கும் அவருக்கும் இடையில் தான் ஏதாவது பிணக்கு இருந்திருக்கக் கூடும். சில வேளை யன்னல்களை திறந்து வைத்துக் கொண்டு யாரையோ பேசுவார். அல்லது திட்டுவார். அவர்களோடு சிரித்ததாக எனக்குச் சொல்லத்தெரியவில்லை அவர்கள் யார் என்றும் எனக்குச் சொல்லத் தெரியவில்லை

விசாரணை அதிகாரி: அவர் இறுதி நாட்களின் போது தீவிரமாகக் கேட்டுக்கொண்டிருந்த பேசிய விடயங்கள் என்ன? அது தான், என்னுடைய வீட்டிற்கு என்னை அனுப்பி வையுங்கள் என்பது தான்

விசாரணை அதிகாரி: ஏன் அதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளவில்லை?

மனைவி: இது ஞாயம் தான் 1994ம் ஆண்டு இடம் பெயர்ந்த நாங்கள் திரும்பி போக முடியவில்லை. அப்படித் திரும்பிச் சென்று வாழ்வதற்கான எந்த வழியும் எமக்கில்லை. ஆமி எங்கட வீடுகளப் பிடித்து முகாமாக்கி வைத்திருக்கிறான். குடி நீர் கிணறுகளுக்குள் எலும்புக்கூடுகள் அகற்றப்படாமல் கிடக்கின்றன. தோட்டக்காணிகளுக்குள்ளும் புல் வெளிகளிலும் மிதி வெடிகள் விதைக்கப்பட்டிருக்கிறது. ஆமிக்காரங்கள் எந்த நேரத்தில் எப்ப எங்க என்ன செய்வாங்கள் என்று தெரியாமலிருக்கு. உயிருக்கு பயந்து ஓடி வந்த நாங்கள் என்னெண்டு திரும்பிப் போகிறது. இப்படி இருதலைக் கொள்ளி எறும்பாய் துடிப்பமெண்டு யாருக்குத் தெரியும் ஐய்யா! விசாரணை அதிகாரி: சரி நீங்கள் அவரது சடலத்தைப் போய் பார்க்கலாம்.

வானம் தூறிக்கொண்டிருந்தது, ஆற்றங்கரையில் அவள் நின்றிருந்தாள்.

‘நீ ஆற்றில போகவேண்டும் என்று சொன்ன உன்னை ஐயா ஆற்றிலேயே கரைத்து விடுகிறேன்.” கைகளிலிருந்த மலர்களை தூவி ஆற்றில் விட்டாள்.

ஆறு தன் மர்மங்களையும் மறைத்துக்கொண்டு நளினமாக ஓடிக்கொண்டிருந்தது. ‘ஆறே, நீ காலமா, காலத்தின் தோழியா?” என வினாவினாள். ‘நீ எவ்வளவு காலமாக ஓடிக்கொண்டிருக்கிறாய், நீ உலகமெல்லாம் இருந்து தவிக்கும் மனிதர்களுடன் பேச்சு வைத்திருப்பாய். அவர்கள் எல்லோரும் சிந்தும் கண்ணீரால் தான், நீ உயர்ந்து செல்கிறாயா? எனது வயதான அந்தக் கிழவன் உன் மீது விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளுமுன் சொன்ன வரிகளையாவது, இங்கு உனக்கு முன்னுக்கு அவருடைய பேரன் நிக்கிறான், அவனுக்காவது சொல்லமாட்டாயா?”

ஆறு எழில் மிக்க தன் கோலங்களுடன் மெல்ல ஓடிக் கொண்டே இருந்தது.

நன்றி: எரிமலை, ஜூன் 2006

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *