வேட்கை

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 20,804 
 
 

இரவு எட்டு மணி. மைசூர் – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூர் கன்டோன்மெண்ட் ஸ்டேஷன் வந்து நின்றது. ஏ.ஸி ரிசர்வேஷன் பெட்டியைத் தேடி ஏறி இடம் பார்த்து அமர்ந்து கொண்டேன்.

நாளை காலை ஆறு மணிக்கு கும்பகோணத்தில் இறங்க வேண்டும். என்னுடைய இந்தப் பயணம் எனக்கே விசித்திரமாக இருக்கிறது. நாளை பதினோரு மணிக்கு கும்பகோணம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ‘தற்போதைய தமிழ்ச் சிறுகதை இலக்கியம்’ பற்றி மாணவிகளிடையே நான் பேச வேண்டும். அதைத் தொடர்ந்து அவர்களது கேள்விகளுக்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும். கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் தேன்மொழியின் ஏற்பாடு இது.

தேன்மொழி….

தேன்மொழி எனக்கு ஒரு சுவாரசியமான அனுபவம்…கடந்த இரண்டு வருடமாகத்தான் எனக்கு அவள் மொபைல் போனில் அறிமுகம். நேரில் சந்தித்ததில்லை. அவளுக்கு வயது 33 என்று சொன்னாள். பெற்றோருக்கு ஒரே பெண். இன்னமும் திருமணமாகவில்லை.

தன் திருமணத்திற்கான தேடல் 27 வயதிலேயே ஆரம்பித்து விட்டது எனவும் ஆனால் தேடலுக்கான சரியான விடைதான் கிடைக்கவில்லை என்றும் கவித்துவத்துடன் சொன்னாள். ஒளிவு மறைவின்றி, வெடுக் வெடுக்குன்னு அவ பேசறது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

எனக்கு வயது 58. பெங்களூரில் ஒரு பிரபல ஐ.டி கம்பெனியிலிருந்து வைஸ்-பிரசிடெண்டாக இரண்டு வருடங்களுக்கு முன்பு ரிடையர்ட் ஆனேன். அவ்வப்போது பத்திரிக்கைகளில் சிறுகதைகள் எழுதுவதுண்டு. ஆனால் ரிடையர்ட் ஆன பிறகு அதிகமாக எழுத ஆரம்பித்துள்ளேன். இதுவரை எழுபது சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளி வந்துள்ளன. இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய ஒரு சிறுகதை கலைமகளில் முதல் பா¢சு பெற்றது. அப்போது அந்தக் கதையைப் படித்துவிட்டு தேன்மொழி என்னை மொபைலில் தொடர்பு கொண்டு பாராட்டினாள். அவளின் அந்தப் பாராட்டுதல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் பிறகு, பிரசுரமாகும் எனது கதைகளை தொடர்ந்து படித்து விமா¢சனம் செய்ய ஆரம்பித்தாள். அதுவே ஒரு நல்ல நட்பாக மாறி, அடிக்கடி மொபைல் •போனில் அரட்டை அடித்தோம். தற்போது அவள் பணியாற்றும் கல்லூரியில், மாணவிகளிடையே பேசுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு. அதுவும் எனக்குப் பிடித்த சிறுகதை இலக்கியம் பற்றி. அனைத்துக்கும் மேலாக, தேன்மொழியை நோ¢ல் சந்திக்கப் போகும் குறு குறுப்பும், ஆவலும் எனக்குள் அதிகமானது.

மறு நாள் காலை ஆறரை மணிக்கு ரயில் கும்பகோணம் வந்து நின்றது. தேன்மொழி தன் தந்தையுடன் ஸ்டேஷன் வந்திருந்தாள். லட்சணமாக இருந்தாள். சிரிப்பு தவழும் வட்ட முகம், வா¢சையான பற்கள். கே.பாலசந்தா¢ன் ‘அவர்கள்’ சுஜாதாவை நினைவு படுத்தினாள். தந்தையை அறிமுகம் செய்து வைத்தாள். அவர் பெயர் அழகிய கூத்தன். நட்புடன் சிரித்து கை குலுக்கினார். கறுப்பு நிறத்தில், அஜானு பாகுவாக, வெள்ளை நிற வேட்டி சட்டையில் ஒரு அரசியல் வாதியைப் போல இருந்தார். அந்தக் காலை வேளையில் முகத்துக்கு நிறைய பவுடர் போட்டிருந்தார்.

காத்திருந்த டாக்சியில் அவள் வீட்டிற்குச் சென்றோம். நான்கு படுக்கையறைகளுடன் கூடிய பெரிய தனி வீடு. டைனிங் ஹாலில் அமர்ந்தோம். தேன்மொழியின் அம்மா எல்லோருக்கும் காபி கொண்டு வந்தாள். என்னைப் பார்த்து புன் சிரிப்புடன், “வாங்க” என்றாள்.

வளப்பமாக கோதுமை நிறத்தில் தேஜஸூடன் காணப்பட்டாள்.

தேன்மொழி என்னைப் பார்த்து, “கண்ணன் சார், இவங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜ். என்னோட அம்மா அய்யங்காரு, அப்பா யாதவ இனம். அம்மா ஒரு நாள் காலேஜ் போயிட்டு வீட்டுக்கு திரும்பிப் போகல…இங்க இருக்கற சுவாமி மலைக்கு போயி ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டாங்க…அப்ப அம்மாவுக்கு பத்தொன்பது வயது. அப்பாவுக்கு இருபத்தியெட்டு. அம்மாவ யோசிக்கவே விடல…ஒருவேள யோசிச்சிருந்தா அப்பாவோட அட்ட காச நிறத்துக்கு ரிஜெக்ட் பண்ணியிருப்பாங்க. அடுத்த வருஷம் நான் பொறந்தேன்.. அந்தக் காலத்துல இவங்களோட கலப்பு கல்யாணம் ஒரு பெரிய புரட்சி” என்று சொல்லி பெரிதாகச் சிரித்தாள்.

முதல் தளத்ததில் பால்கனியுடன் அமைந்திருந்த விஸ்தாரமான பெட்ரூமிற்கு என்னை அழைத்துச் சென்றார்கள்.

தேன்மொழி, “கண்ணன் சார், இது என்னுடைய பெட்ரூம்….நீங்க ரெடியாகி எட்டரை மணிக்கு டைனிங் ஹால் வந்துடுங்க. பிரேக் பாஸ்ட் சாப்பிட்டுவிட்டு, மெதுவா பத்து மணிக்கு காலேஜ் போனா போதும்” கீழே சென்று விட்டாள்.

பால்கனிக்குச் சென்று வெளியே பார்த்தேன். பொ¢ய குளமும் அதைச் சுற்றி நிறைய தென்னை மரங்களும், மரத்தினூடே தொ¢ந்த கோவில் கோபுரங்களும், சில்லென்று வீசிய காற்றில் இதமான ஈரப் பதமும்… ரம்மியமாக இருந்தது. இந்த ரம்மியம் பெங்களூரில் காணக் கிடைக்காதது. மெய்மறந்து சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.

பத்து மணிக்கு நானும் தேன்மொழியும் காரில் கல்லூரிக்கு கிளம்பிச் சென்றோம். போகிற வழியில் தேன்மொழி என்னிடம் கிசுகிசுப்பான குரலில், “அம்மாவும், அப்பாவும் இன்னிக்கு சாயங்காலம் நாலு மணிக்கு ஒரு கல்யாணத்துக்காக திருச்சி போறாங்க..நாளை ராத்திரிதான் வருவாங்க, அவங்களப் பொருத்தவரையில் நீங்க இன்னிக்கு சாயங்கால ட்ரெயின்ல ஊருக்கு திரும்பி போறீங்க… ஆனா நீங்க இன்னிக்கு பெங்களூர் போகவேண்டாம். கேன்சல் பண்ணிடலாம்… நாளை ட்ரெயின்ல உங்களோட டிக்கெட்டுக்கு நான் கியாரண்டி.
நாம ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் முதல்ல சந்திச்சிருக்கோம்…நிறைய பேசலாம், ஒருத்தர ஒருத்தர் நன்றாக புரிஞ்சுக்கலாம், சரியா?” என்றாள்.

அவளின் இந்தத் தாக்குதலை நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை. சந்தோஷத்துடன் “அட … இது நல்லா இருக்கே” என்றேன்.

நாங்கள் மாலை நேரம் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, தேன்மொழியின் பெற்றோர் திருச்சிக்கு கிளம்பிச் சென்றிருந்தனர். பால்கனிக்குச் சென்று கோவில் கோபுரங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். வீட்டின் கதவுகளை எல்லாம் மூடி விட்டு தேன்மொழி என் அருகில் வந்து நின்று கொண்டாள்.

“கும்பகோணம் என்று இந்த ஊருக்கு ஏன் பெயர் வந்தது தொ¢யுமா?”

“தெரியாது…நீயே சொல்லு”

“இந்த ஊர்ல எங்கேயும் போய் எந்த கோணத்தில் நின்று நிமிர்ந்து பார்த்தாலும், கோயில் கோபுரங்களின் கும்பங்கள் தொ¢யும்…அதனால்தான் கும்பகோணம்னு பேர்.”

“…….” சற்று நேரம் அமைதியாக இருந்தாள். அந்த அமைதி அவள் ஏதோ பேசுவதற்கு தன்னை தயார் செய்து கொள்வது போலிருந்தது.

“கண்ணன் சார் நீங்க என்னப் பத்தி என்ன நினைக்கிறீங்க?”

“நீ மொதல்ல என்ன சார்ன்னு கூப்பிடறத நிப்பாட்டு தேனு. நீ ரொம்ப ரசனையுள்ள, ஓப்பனா பேசற ஒரு நல்ல பெண். என் கதைகளை நீ விமர்சனம் செய்யற நேர்மை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.”

“இப்ப என்ன நேர்லயும் நீங்க பார்த்தாச்சு.. என்ன உங்களுக்கு இப்பவும் பிடிச்சிருக்கா?”

“உன்ன நேர்ல பார்க்கறதுக்கு முன்னாலயும் உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்.. இப்ப நேர்ல பார்த்தப்புறம் இன்னும் ரொம்ப பிடிச்சிருக்கு, அதுக்கு இப்ப என்ன தேனு?”

“இன்னிக்கு உங்ககிட்ட மனம் விட்டுப் பேசணும்ங்கற முடிவோடதான் நான் இருக்கேன். என்னோட ஆறு வருட தேடலுக்கான விடை நீங்கதான்னு என் மனசு சொல்லுது கண்ணன்.”

“தேனு நீ என்ன பேசறன்னு புரிஞ்சுகிட்டுதான் பேசறயா? எனக்கு ஏற்கனவே திருமணம் ஆச்சு. கல்யாணம் ஆக வேண்டிய வயசுல ஒரு பையன் இருக்கான்.”

“அதனால என்ன, உங்க பையனுக்கு சீக்கிரமே கல்யாணம் செஞ்சு வச்சிரலாம்.. அப்புறமா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்… கல்யாணம் வேண்டாம்னா சேர்ந்து வாழலாம். அப்புறம் என்ன சொன்னீங்க…ஆங், உங்களுக்கு திருமணம் ஆச்சுன்னா. அதெல்லாம் ஒரு மேட்டரா?

சாவித்திரி, கே.ஆர்.விஜயா, ஹேமமாலினி, ஸ்ரீதேவி இவங்கல்லாம் ஏற்கனவே திருமணமானவங்கள கல்யாணம் பண்ணிக்கலயா? ஏன் நம்ம எழுத்து ஜாதீலயே மறைந்த ஜெயகாந்தன், பாலகுமாரன் ரெண்டாந்தாரம் கல்யாணம் பண்ணிக்கலயா?

மனசு இருந்தா நாம எதுவன்னாலும் நடத்திக் காட்டலாம் கண்ணன்.”

“தேனு உன் மேல எனக்கு ஈர்ப்பும், வாஞ்சையும் அதிகம்… ஆனா அது நேர்மையான காதலான்னு எனக்கு தெரியல. உன்னிடம் பொய் சொல்லி, ஏமாற்றி நம் உறவை கொச்சைப் படுத்தி கடைசியில் உன்னை இழக்க நான் விரும்பல.”

“நீங்க எங்கிட்ட இனிமே என்ன பொய் சொல்லி என்னை ஏமாற்றி விட முடியும் கண்ணன்? உங்களுக்கு ஐம்பத்தியெட்டு வயது…ரிட்டையர்ட் ஆயிட்டீங்க. திருமணமாகி, திருமண வயதில் ஒரு பையன் இருக்கான். இதெல்லாம் என் கிட்ட போன்லயே ரெண்டு வருஷத்துக்கு முன்னாலயே சொல்லிட்டீங்க. உங்கள இப்ப நேரில் பார்த்தப்புறம் நீங்க ஹாண்ட்ஸம்னு, அதவிட நீங்க ரொம்ப ஸோபிஸ்டிகேட்டட்னு புரிஞ்சுது கண்ணன். எல்லாத்துக்கும் மேல நீங்க என்னோட காலேஜ்ல இன்னிக்கு குறிப்புகள் எதுவும் இல்லாம பேசின பேச்சைக் கேட்டு சொக்கிப் போயிட்டேன். என்னோட பிரின்ஸிகிட்ட உங்களால எனக்கு நல்ல பேரு.”

“…….”

“சரி…நீங்க எத நெனச்சும் இப்ப குழப்பிக்காதீங்க… முதல்ல உங்க பையனோட… சாரி நம்ம பையனோட கல்யாணத்த சீக்கிரமா முடிக்கிறோம். அது நம்மோட பொறுப்பு, கடமை. நம்ம கடமை நல்ல விதமா முடிஞ்சப்புறம் நம்ம கல்யாணத்தை சீக்கிரம் வச்சுக்கலாம். சா¢யா? வாங்க சாப்பிடலாம்.” கீழே அழைத்துச் சென்றாள்.

அவள் அம்மா சமைத்து வைத்திருந்ததை சுட வைத்து இருவரும் சாப்பிட்டோம். மறுபடியும் பால்கனிக்கு வந்து நின்று கொண்டோம்.

நன்கு இருட்டிய நிலா வெளிச்சத்தில் தேன்மொழி ரொம்ப அழகாக இருந்தாள்.

“நம்ம வாழ்க்கைல சரியான மனிதர்களை தப்பான நேரத்தில் சந்திக்கிறோம் கண்ணன். நீங்க இருபது வருடங்களுக்குப் பிறகு பிறந்து, உங்க கல்யாணத்துக்கு முன்ன நான் உங்கள சந்திச்சிருந்தா, உங்கள விரட்டி, விரட்டி காதலிச்சு கல்யாணம் பண்ணியிருப்பேன்…இப்ப பாருங்க உங்க மனைவிக்கு நீங்க பதில் சொல்லியாகனும்…”

“ என் மனைவி ரொம்ப நல்லவ, ஒரு குடும்பத் தலைவியா தன் கடமைகளை ஒழுங்கா செய்வா…பொறுப்பானவ. ஆனா கொஞ்சம் கூட ரசனையே கிடையாது. ரசனையில்லாத ஒரு பெண்ணுடன் குடித்தனம் நடத்தறது ரொம்ப பெரிய தண்டனை தேனு… நீ சொன்னா நம்ப மாட்டே, என் கதைகளில் ஒன்றுகூட அவ படித்ததில்லை. கதை எழுதி முடிச்சப்புறம் அவள முதல்ல படிக்கச் சொல்லி கெஞ்சுவேன்… அவ அப்புறமா படிக்கிறேன், எனக்கு இப்ப டைம் இல்லேன்னு சொல்லுவா. ஆனா அந்தக் கதை பிரசுரம் ஆனப்புறமும் படிக்க மாட்டா தேனு. தவிர, கொஞ்சம் கூட ரொமாண்டிக் பீலிங்கே அவளுக்கு கிடையாது… ஸோ, என் மகன் கல்யாணத்துக்கு அப்புறம் அவள பிரிஞ்சு வர்றதுல எனக்கு ஒரு வருத்தமும் இல்ல தேனு…உன்னோட அருகாமை எனக்கு யானை பலம். நீ என் கூட இருந்தா இந்த உலகத்தையே ஜெயிச்சு காட்டுவேன்..”

“நான் இப்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன் கண்ணன். உங்க மனைவி ரொமண்டிக்கா இல்லைன்னு நீங்க சொன்னது எனக்கு புரியுது. இப்ப நாம தனிமையா இருக்கோம், இந்த இரவு இன்னமும் இளமையாகத்தான் இருக்கு, இந்த முழு இரவும் நம்மோடுதான் கண்ணன். இந்த ரம்மியமான தருணத்தில் என்னையே நான் தங்களுக்கு தருவதற்கு தயார்.”

“வேண்டாம் தேனு…இன்னும் கொஞ்ச நேரம் நான் உன் அருகில் இருந்தால் அது தவறில் முடிந்து விடும்… நீ இங்கேயே உன் பெட்ரூமில் படுத்துக்கொள், நான் கீழே போகிறேன்..”

“தப்பு, ரைட்டு என்பதெல்லாம் நம் மனச பொருத்தது கண்ணன். நம்பிக்கைதான் பிரதானம். உங்களுக்குத் தெரியுமா, எ மேன் வாண்ட்ஸ் செக்ஸ் இன் த நேம் ஆப் லவ், பட் எ வுமன் கிவ்ஸ் செக்ஸ் பார் ட்ரூ லவ். நானும் ஒரு பெண் கண்ணன்.”

“ஐயாம் ஹானர்டு தேனு.” அவளைத் தாண்டிக் கொண்டு கீழே இறங்கிச் சென்று படுத்துக் கொண்டேன்.

மறு நாள் என்னை சுவாமி மலைக்கு கூட்டிச் சென்றாள். “இங்கதான் என் அம்மா, அப்பாக்கு கல்யாணம் ஆச்சு… நாமும் இங்கதான் மாலை மாத்திக்கணும்” என்று கண்களில் வெட்கம் மின்ன சொன்னாள்.

மாலையில் ரயில்வே ஸ்டேஷன் வந்து என்னை வழியனுப்பினாள்.

அதன் பிறகு மொபைல் போனில் தினமும் நிறைய பேசினோம்.

இரண்டு மாதங்கள் சென்றன. என் பையனுக்கு பெங்களூரிலேயே ஒரு நல்ல வரன் அமைந்தது. அடுத்த மாதம் 24ம் தேதி அவனுக்கு கல்யாணம்.

இதை தேன்மொழியிடம் சொன்னபோது அவள் மிகுந்த சந்தோஷத்துடன், “நான் கல்யாணத்துக்கு அம்மா, அப்பாவோட வரேன் கண்ணன். நாளைக்கே ட்ரெயின் டிக்கெட் புக் பண்ணிடறேன்” என்றாள்.

கல்யாண வேலைகள் சுறுசுறுப்பாக நடந்தன. தினமும் தேன்மொழி என்னிடம் உற்சாகத்துடன் பேசினாள். 22ம் தேதி மாலை கிளம்பி 23ம் தேதி காலையில் அவள் தன் பெற்றோர்களுடன் வருவதாகவும், கல்யாணம் முடிந்தவுடன் 24ம் தேதி இரவு ட்ரெயினில் கும்பகோணம் திரும்பிச் செல்வதாகவும் ஏற்பாடு.

22ம் தேதி காலை. ஆறு மணிக்கு என் மொபல் சிணுங்கியது. தேன்மொழி. எடுத்தேன்.

“கண்ணன் நான் சொல்றத பதட்டப் படாம கேளுங்க. அப்பா நேத்து ராத்திரி ஹார்ட் அட்டாகுல இறந்துட்டாரு. இன்னிக்கு மத்தியானம் தகனம். நீங்க கல்யாணத்த நல்ல படியா முடிங்க, ஆல் த பெஸ்ட்.” தொடர்பை துண்டித்தாள்.

என் மகனின் திருமணம் சிறப்பாக நடந்தது.

இரண்டு மாதங்கள் சென்றன. தினமும் தேன்மொழியுடன் தொடர்பில் இருந்தாலும், நோ¢ல் அவளைப் பார்த்து துக்கம் விசாரிப்பதுதான் முறையாகப் பட்டதால், அந்த ஞாயிற்றுக் கிழமை காலையில் கும்பகோணம் சென்றேன்.

தேன்மொழியின் அம்மா இயல்பாக இருந்தாள். கணவனை இழந்த சோகமோ, துக்கமோ அவளை அதிகம் பாதிக்கவில்லை என்று தோன்றியது.

அன்று பகல் சாப்பாடு முடிந்ததும் நானும், தேன்மொழியும் அவளுடைய பெட்ரூமில் அமர்ந்து எங்களது திருமணம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவள் அம்மா, “மொழீ, கீழ வா” என்று கத்தினாள். அந்தக் கத்தலில் ஒரு அதட்டலும், வெறுப்பும் தொனித்தது. தேன்மொழி உடனே கீழே சென்றாள்.

ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரமும் ஆச்சு. போனவள் இன்னமும் திரும்பி வரவில்லை. மணி நான்கு ஆயிற்று. எனக்கு அன்று மாலை 5.45க்கு ட்ரெயின். நான் பொறுமையிழந்தேன். மெதுவாக கீழே சென்றேன். அங்கு ஒரு பெட்ரூமினுள் கதவைச் சாத்திக் கொண்டு, தேன்மொழியும் அவள் அம்மாவும் காச் மூச்சென்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இடையிடையே தேன்மொழி அழும் குரலும் எனக்கு கேட்டது. அவள் அப்பா இல்லாததால் தனிமையில் தேன்மொழியுடன் நான் பேசிக் கொண்டிருந்தது, அவள் அம்மாவுக்கு பிடிக்கவில்லை போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

மறுபடியும் மாடிக்குச் சென்று காத்திருந்தேன். மணி ஐந்து. ட்ரெயின மிஸ் பண்ணாலும் பரவாயில்லை. தேன்மொழியைப் பார்த்து பேசிவிட்டுதான் பெங்களூர் திரும்புவது என முடிவு செய்தேன்.

ஐந்தரை மணிக்கு தேன்மொழி திரும்பி வந்தாள். பதட்டத்துடன் காணப்பட்டாள். அழுததினால் கண்கள் சிவந்திருந்தன.

“சாரி கண்ணன்… நீங்க இனிமே ட்ரெயின் பிடிக்க முடியாது. திருச்சி போய் அங்கிருந்து பெங்களூருக்கு பஸ்ல போயிடுங்க.. எங்க அம்மாவுக்கு நாம சேர்றது பிடிக்கல… ஆனா கடவுளே குறுக்க வந்தாலும் நான் உங்களோட வாழறது மட்டும் உறுதி. நீங்க இப்ப உடனே கிளம்புங்க…மத்தத போன்ல சொல்றேன்”

“இல்ல தேனு, நான் இப்பவே உன் அம்மாகிட்ட நேர்ல பேசி அவங்கள சமாதானப் படுத்தி, சம்மதிக்க வைக்கிறேன். ஒருவேளை நான் உங்க சொத்துல ஏதேனும் பங்குக்கு வந்துடுவேன்னு பயப்படறாங்க போல..மனம் விட்டு பேசினா எதுக்கும் ஒரு தீர்வு கிடைத்து விடும்” நான் கிளம்பினேன்.

தேன்மொழி என்னைத் தடுத்தாள். “வேண்டாம் கண்ணன் ப்ளீஸ். என் அம்மாவுக்கு தடங்கலே நான் தான், நீங்க இப்ப கிளம்புங்க” என்னை வீட்டிலிருந்து விரட்டுவதிலேயே குறியாக இருந்தாள்.

“என்னது… எனக்கு நீ சொல்றது புரியல.”

“அம்மா மறுமணம் செய்துகொள்ள ஆசைப்படறாங்க.”

சற்று நிம்மதியடைந்தேன். “ரொம்ப நல்ல விஷயம்தானே தேனு…இதுக்கா நீ அவங்களோட இவ்வளவு நேரம் சண்ட போட்ட…இது அவங்களோட பர்சனல் விஷயம்”

“அவங்க மறுமணம் செய்து கொள்ள விரும்புவது உங்கள” என் மார்பில் சாய்ந்து கொண்டு வெடித்து அழுதாள் தேன்மொழி.

சமையல் அறை கரப்பான் பூச்சிகள்…..
ஒரு வீட்டில் சமையல் அறை, ப்ரிட்ஜ், கழிப்பறைகள்
– விளிம்பு நிலை மனிதர்கள்

Print Friendly, PDF & Email
என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

2 thoughts on “வேட்கை

  1. உங்களின் வேட்கைதான் தெரிகிறதுதுதுதுதுதூதூதூதூதூ

  2. கண்ணன் அவர்களின் உண்மை கதை போல் தெரிகிறது. முடிவு என்ன ஆயிற்று என்று அறிய ஆவலாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *