விஞ்ஞானியின் காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 27, 2019
பார்வையிட்டோர்: 31,824 
 
 

நிசப்தமாய் இருந்த அந்த பெரிய ஹாலில் சுற்றிலும் பிரதம மந்திரி முதல், இராணுவ மந்திரி முதற்கொண்டு, அனைத்து இராணுவ அதிகாரிகளும் உட்கார்ந்திருந்தனர். நடுவில் ஒரு இராட்சச கண்ணாடி தொட்டி அமைக்கப்பட்டு முழுவதும் தண்ணீர் நிரப்ப்பட்டு இருந்தது. அதன் அருகில் ஒரு பெரிய மேசை போடப்பட்டு அதில் கம்யூட்டர் போன்ற உபகரணங்களும் இணைக்கப்பட்டு இருந்தன.அந்த மேசையின் அருகில் இரண்டு நாற்காலிகள் போடப்பட்டு அதில் விஞ்ஞானி மாதேஸ்வரன் உட்கார்ந்திருந்தார். அவர் அருகே அமெரிக்க, அப்பிரிக்க கலப்பின சாயல் கொண்ட இளம் பெண் அவரது காரியதரிசியாக இருக்க வேண்டும், உட்கார்ந்திருந்தாள்.

மாதேஸ்வரன் மெல்ல எழுந்து இப்பொழுது தன்னால் கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் இந்த கருவியினால் நம்முடைய இராணுவம், கப்பற்படையில் மிகுந்த பலம் பெற்று விடும்.

அது மட்டுமல்ல, உயிர் இழப்பும் கணிசமாக குறைக்கப்படும். நாம் இருந்த இடத்திலிருந்தே சண்டைகளை நடத்தும் வசதியும் ஏற்பட்டு விடும்.நான் இப்பொழுது அதன் செயற்பாடுகளை
நமது பிரதமர் முன்னிலையில உங்கள் அனைவருக்கும் காண்பிக்க போகிறேன்.சொல்லிவிட்டு நாற்காலியில் அமர்ந்தார்.

அவரது கண்ணசைவிற்கு காத்திருந்த அவரது உதவியாளர்கள் அவரது கை அசைப்பை கண்டவுடன் மேலேயிருந்த எடை தூக்கி (கிரேன்) மூலம் சிறு கப்பலை அந்த தண்ணீர் தொட்டிக்குள் மிதக்க விட்டனர். அதே போல் அந்த கப்பலை சுற்றி நான்கைந்து சிறு சிறு கப்பல்களையும் மிதக்க விட்டனர்.

மாதேஸ்வரன் மீண்டும் எழுந்து செயல் விளக்க முறைகளை காண்பிக்க ஆரம்பித்தார். தன்னுடைய கம்யூட்டர் மூலம் முதலில் விடப்பட்ட கப்பலின் மேல் தளத்தை முட செய்தவர், அதை மெல்ல தானாகவே தண்ணீருக்குள் அமிழ வைத்தார். இப்பொழுது அனைவரும் அந்த கப்பலையே கூர்ந்து கவனித்து கொண்டிருந்தனர்.தண்ணீருக்குள் அமிழ்ந்திருந்த கப்பலிலிருந்து
சுற்றுப்புறத்திலிருந்து திடீரென்று நான்கைந்து குழல் போல வெளீப்பட்டு அதனிலிருந்து சிறு சத்தத்துடன் சீறிக்கொண்டு குண்டுகள் மேலே எழும்பி சுற்றி நின்று கொண்டிருந்த மற்ற கப்பல்களை தூள் தூளாக்கின. இதை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் கை தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இப்பொழுது விஞ்ஞானி மாதேஸ்வரன் தனது கண்டு பிடிப்பின் நன்மைகளை சொல்ல ஆரம்பித்தார்.அரை மணி மணி நேர அவரது விளக்கத்தை கேட்டவுடன், பிரதம மந்திரி அவரிடம் வந்து கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அதை தொடர்ந்து அனைவரும் வந்து கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

மறு நாள் பத்திரிக்கைகள் அவரை போட்டி போட்டு பேட்டி கண்டன. ஒரு சில பத்திரிக்கையாளர்கள் அவரது அருகில் இருந்த காரியதரிசியை அணுகி, ஒரு சில சந்தேகங்கள் கேட்க முயற்சித்தார்கள். அவர் சாரி..இனிமேல் இவள் என் காரியதரிசி அல்ல,அனைவரும் திகைப்புடன் பார்க்க அடுத்த மாதம் என் மனைவி ஆகப்போகிறவள் என்று சொல்லி புன்னகை பூத்தார். அவ்வளவுதான் அனைவரும் கை குலுக்கி வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

மாதேவரனுக்கு கிட்டத்தட்ட வயது அறுபதை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அவரது மனைவியாக போகிற காரியதரிசிக்கு வயது இருபத்தி ஐந்துக்குள்தான் இருக்கும். இவர்கள் எப்படி சந்தித்து, அவருக்கு காரியதரிசியாகி, பின் காதல் கொண்டார்கள் என்பதை அந்த பெண்ணே பத்திரிக்கையாளர்களிடம் சொல்ல ஆரம்பித்தாள்.

ஒரு வருடம் முன்பு ஆஸ்திரேலியாவுக்கு விஞ்ஞான கருத்தரங்குக்கு சென்ற மாதேஸ்வரன்,அங்குதான் அந்த பெண்னை சந்தித்தார். அவள் இந்திய நாட்டு பெண் அல்ல, அமெரிக்க ஆப்பிரிக்க கலப்பினத்தவள் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டை சேர்ந்தவள் என்றாலும், வேறொரு நாட்டில் ஒரு விஞ்ஞானியிடம் பணி புரிந்து கொண்டிருந்தாள். அவர்களும் அந்த கருத்தரங்குக்கு வந்திருந்தனர்.ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த அனைவரும் இரவு ஒரு வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்லும்போது, அறிமுகமானார்கள்.

மறு நாள் இவரது சொற்பொழிவு நடக்கவேண்டும், ஆனால் அதற்குள் அவருக்கு காய்ச்சல் வந்து விட அசந்தர்ப்பமாய் அவரது அறைக்கு வந்த மற்ற நாட்டு விஞ்ஞானியும், அவரது காரியதரிசியும், இவரது நிலை கண்டு தனது காரியதரிசியிடம், நீ இன்று இரவு இவரை கவனித்துக்கொள் என்று சொல்லி விட்டு தனது அறைக்கு சென்று விட்டார்.

இரவு அந்த பெண்ணின் கவனிப்பு, அவரை காலையில் ஓரளவு எழ வைத்து விட்டதுமில்லாமல், தனது சொற்பொழிவை பிரமாதமாய் அமையவும் செய்து விட்டது

மாலையில் தன் அருகே உட்கார்ந்திருந்த அந்த பெண்ணிடம் எனக்கு காரியதரிசியாக வருகிறாயா என்று கேட்டார்.அந்த பெண் சாரி நீங்கள் அதை என்னுடைய பாஸிடம் தான் பிரஸ்தாபிக்க வேண்டும் என்று நாசுக்காக மறுத்து விட்டாள். இவர் விடவில்லை, அந்த விஞ்ஞானியிடமே சென்று தனக்காக அந்த பெண்ணை விட்டு தரும்படி கேட்டார். சிறிது
நேரம் யோசித்து நினறவர், பின் ஒ.கே, என்று சொல்லி விட்டார். அதற்கு பின் மாதேஸ்வரனுக்கு வந்த சந்தோசத்துக்கு அளவே இல்லை. இந்திய நாட்டுடன் தொடர்பு கொண்டு அந்த பெண்ணை தன்னிடம் கொண்டு வர எல்லா முயற்சிகளும் செய்து, இப்பொழுது அவளையே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரைக்கும் வந்து விட்டது.

இவர்கள் இருவரின் கல்யாணத்தன்று, இது வரை ஆராய்ச்சி, ஆராய்ச்சி, என்று காலத்தை ஓட்டி விட்ட மாதேஸ்வரனையே கவிழ்த்து விட்ட அந்த பெண்ணைப்பற்றித்தான் பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாய் எழுதி தள்ளின.

உங்களின் ஹனிமூன் எங்கே? என்று ஒரு பத்திரிக்கை நிருபரின் கேள்விக்கு அந்த பெண் சிறிது வெட்கத்துடன் அவரை பார்க்க அவர் நாளை காலையில் கிளம்புகிறோம்.முதலில் ஆஸ்திரேலியா, அடுத்து பிரிட்டன், அமெரிக்கா, என்று உலகை ஒரு சுற்று சுற்று வரப்போகிறோம்.அந்த பெண் வெட்கத்துடன் அவர் தோளில் சாய்ந்து கொண்டாள்.

ஆஸ்திரேலியாவில் பகல் முழுவதும் ஊரை சுற்றியவர்கள் இரவுதான் ஓட்டலுக்கு திரும்பினர்.அலுத்து களைத்து வந்ததால் களைப்பு தீர முதலில் குளிக்கவேண்டும் என்று அந்த பெண் குளியறைக்குள் சென்றாள். இவர் இரவு வெளியே சாப்பிட செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தவர், போனை எடுத்து இரவுக்கு வேண்டிய உணவு வகைகளை ஆர்டர் செய்தார்.

பத்து நிமிடம் ஆகி இருந்தது. கதவு தட்டும் சத்தம் கேட்டவர், இரவு டிபன் வந்து விட்டது என்று கதவை திறந்தார். அவ்வளவுதான், திமு திமுவென முகமூடி அணிந்த ஐந்து பேர் உள்ளே வந்தனர். இவர் வாயை திறக்க முயற்சிக்குமுன் ஒருவன் அவர் தலைமேல் துப்பாக்கியை வைத்தான்.சத்தம் போட்டால் சுட்டு விடுவேன், ஆங்கிலத்தில் கத்தினான்.

அப்பொழுதுதான் குளித்து உடை மாற்றி வெளியே வந்த அந்த பெண் இந்த கலவரத்தை பார்த்து கூச்சல் போட முயற்சிக்கு முன் சடாரென ஒருவன் பாய்ந்து அந்த பெண்ணின் தலை முடியை பற்றி துப்பாக்கியை அவள் நெற்றியில் வைத்தான்.

அவளை சுட்டு விடாதே, சுட்டு விடாதே, அங்கிருந்தே கத்தினார் மாதேஸ்வரன்.

அப்படியானால் சத்தம் இல்லாமல் எங்களோடு நீங்கள் இருவரும் வரவேண்டும்.

சரி சரி தயவு செய்து அவளை சுட்டு விடாதே. மறு பேச்சு பேசாமல் அவர்கள் இருவரையும் அணைத்துக்கொண்டு வெளியே வந்தவர்கள், மற்றவர்கள் சந்தேகப்படாமல் இருப்பதற்காக
தங்களுடைய முகமூடியை கழட்டி விட்டு இவர்கள் இருவரையும் அணைத்து பிடித்துக்கொண்டு மாதேஸ்வரன் முதுகில் துப்பாக்கி முனையை அழுத்தியும் பிடித்து அப்படியே இழுத்துக்கொண்டு நடந்தனர்.

காரில் ஏற்றப்பட்ட இருவரும் பயத்துடன் உட்கார்ந்திருக்க, கார் எங்கோ வேகமாக சென்று கொண்டிருந்தது. அருகில் உட்கார்ந்திருந்த இருவரில் ஒருவன் “ஸ்டாப்” என்று கத்தினான், வண்டி கிரீச் என்ற சத்தத்துடன் நின்றது, கத்தியவன் மாதேஸ்வரனின் பக்கத்தில் இருந்த பெண்ணை கீழே இறங்க சொன்னான். மாதேஸ்வரன் கெஞ்சினார், ப்ளீஸ் அந்த பெண்ணை ஏன் இறங்க சொல்கிறாய்? அந்த பெண்ணும் திமிற ஆரம்பித்தாள், அவரை விட்டு இறங்க முடியாது, கூச்சலிட ஆரம்பித்தாள்.முன்னால் உட்கார்ந்திருந்தவன் சட்டென இறங்கி அவள் தலை முடியை பற்றி கீழே தள்ளி சரமாரியாக அடிக்க ஆரம்பித்தான். மாதேஸ்வரன் உள்ளிருந்து அவளை அடிக்காதே, அடிக்காதே என்று கத்தினார்.

அவள் அடி தாங்க முடியாமல் நடு ரோட்டிலே மயங்கி விழ அடித்தவன் சட்டென காருக்குள் ஏறி உட்கார்ந்தான். கார் அவளை அப்படியே விட்டு விட்டு பறக்க ஆரம்பித்தது, “ஐயோ” அவளை விட்டு விட்டீர்களே என்று மாதேஸ்வரன் கத்திக்கொண்டிருப்பதையும் இலட்சியம் செய்யாமல்.

அந்த கும்மிருட்டில் நடுரோட்டில் அவள் குப்பற கிடந்தாள். அப்படியே ஐந்து நிமிடங்கள் ஒடியிருக்கும், ஒரு கார் சத்தமில்லாமல் அவள் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து இரணுவ உடையணிந்த ஒருவர் கீழே இறங்கி “ஸ்டெல்லா” மென்மையாக கூப்பிட குரல் கேட்டதும் அதுவரை குப்பற கிடந்தவள் விலுக்கென நிமிர்ந்து எழுந்து நின்று எதிரில் நின்ற அவருக்கு ஒரு இராணுவ சல்யூட் வைத்தாள்.

உன்னுடைய காரியத்தை கச்சிதமாக முடித்து தந்து விட்டாய். நம் நாடு அதற்காக பெருமைப்படுகிறது. அந்த விஞ்ஞானியை நம் நாட்டுக்கு இனி நாங்கள் கொண்டு போய்க்கொள்ளுகிறோம். மீண்டும் ஒரு விரைப்பான சல்யூட் வைத்தவள், அந்த காருக்கு பின்னால் வந்த காரில் ஓடி சென்று ஏறிக்கொண்டாள்.

(கதையை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன். வாசகர்கள் விஞ்ஞானி என்னவானார் என்று கவலைப்படக்கூடாதென்று தொடர்கிறேன்)

விஞ்ஞானி மாதேஸ்வரனுடன் வேகமாக சென்று கொண்டிருந்த கார் சட்டென ஒரு இடத்தில், ஆஸ்திரேலிய போலீசாரால் நிறுத்தப்பட்டு பாதை வேலை நடப்பதால் மாற்று வழியை காண்பித்து அதில் செல்லுமாறு கூறினர். சற்று திகைத்த இவர்கள் சத்தம் போடக்கூடாது என்று தெரிவிக்க மாதேஸ்வரனின் முதுகில் துப்பாக்கியை அழுத்தினர்.

அவரோ தனது காதலியும் மனைவியுமான அந்த பெண்ணுக்கு என்னவாயிற்றோ என்ற கவலையில் இருக்க, இதை பற்றி எல்லாம் கவனிக்கும் மன நிலையில் இல்லாமல் இருந்தார்.

மீண்டும் சிறிது தூரம் சென்ற கார் திடீரென தடுக்கப்பட்டு ஆஸ்திரேலிய போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு அனைவரையும் கையை மேலே தூக்கிக்கொண்டு இறங்க சொன்னார்கள்.கவலையே வடிவாக இருந்த மாதேஸ்வரனும் இறக்கப்பட்டார்.

மறு நாள் மாதேஸ்வரன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அதிகாரிகள் அவரை பத்திரமாக இந்தியா கொண்டு வந்தனர். அவர் இப்பொழுதும் அந்த பெண்ணை பற்றியே புலம்பிக்கொண்டிருக்கிறார்.

அந்த பெண்ணை பற்றி ஆரம்பத்திலேயே சந்தேகப்பட்ட இந்திய உளவுத்துறை அதை விஞ்ஞானியிடம் சொன்னால் அவர் காதல் மயக்கத்தில் நம்ப மாட்டார் என்று அவர் போக்கிலேயே போக வைத்தது. அந்த பெண்ணும் ஒரு இராணுவ பெண்தான் என்பதனையும், அவள் தன்னுடைய நாட்டுக்கு இவரை கடத்தி செல்லவே ஆஸ்திரேலியாவில் அந்த கருத்தரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டவள்.என்பதையும் தெரிந்து கொண்ட இராணுவம் இவரை மட்டுமே பத்திரமாக கவனிக்கும்படி ஆஸ்திரேலியாவிடம் கேட்டுக்கொண்டது.காரணம் கடத்தி செல்ல முயன்ற நாடும் இந்தியாவின் நட்பு நாடானதால், முடிந்தவரை சுமுகமாகவே கையாள நினைத்து அதில் வெற்றியும் பெற்று விட்டது. என்றாலும் விஞ்ஞானியின் காதல் மனைவியின் பிரிவு எந்த நாட்டு வல்லுநர்களாலும் சமாதானப்படுத்த முடியாமல் இருந்தது.மனைவியின் பிரிவு அவரை துன்பமும்,துயரமும் அடைய வைத்துக்கொண்டே இருந்தது. உண்மையான அன்பு வைப்பவர்கள் எப்பொழுதும் அடைவது துன்பம்தானே.

Print Friendly, PDF & Email
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *