காலை மணி ஏழு பதினைந்து. ‘ஜூரோங் ஈஸ்ட்’ நோக்கி செல்லும் துரித ரயில் ‘புக்கிட் பாத்தோக்’ நிலையத்தை அடைந்து, ஊரும் புழு போல ஊர்ந்து நின்றது.
ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்த கூட்டம் ரயிலை நோக்கித் திரள, பருத்த மேனியரின் வெடித்த சட்டை போல, பட் பட்டென கதவுகள் திறக்க, வெளியில் நின்ற கூட்டம் வகிடு போல வழி விட, சிலர் மட்டுமே துள்ளி இறங்கினர் !
நொடியும் தாமதியாமல் வெளியில் நின்ற கூட்டம் தள்ளாமல் உள்ளேற, அகோரப் பசிகொண்ட கும்பகர்ணப் புழு அனைவரையும் விழுங்கி அடுத்த நிலையம் நோக்கி விரைந்தது.
நெற்றியில் திரண்ட நீர் நேர் கோடாய் சொட்ட, கை தூக்கித் துடைக்கக் கூட இடமில்லை ரயிலினுள்ளே. நேர் கோடு முதுகிலும் இறங்க, காலை வெம்மையும், ஜன நெருக்கத்தின் புழுக்கமும், ‘ஏன் தான் தினம் இப்படி இருக்கோ’ என்ற அயர்ச்சியை ஏற்படுத்தினாலும், சில நிமிடங்களில் ரயிலின் குளிர்ச்சியை உணர்ந்த செல்வகுமார், ‘நல்ல வேளை இன்றும் நேரத்துக்கு ட்ரெயினப் பிடிச்சாச்சு’ என்று மகிழ்ச்சி கொண்டான்.
உயர்ந்த நீள் பாலத்தில் பறந்த ரயிலுனிலுள்ளே வழக்கம் போல, தமிழ் உள்பட நான்கு அரசு மொழிகளிலும் அடுத்த நிறுத்தம் பற்றிய அறிவிப்பு வர, ‘ஜூரோங்க் ஈஸ்ட்டில்’ இறங்கி, அடுத்து ‘ராஃபிள்ஸ் ப்ளேஸ்’ ரயிலைப் பிடிக்க வேண்டுமே என்று மனம் எண்ணுகையில் இவ்விரு நிமிட நிம்மதியும் குறைவதாய் உணர்ந்தான் செல்வா.
ஜூரோங்க் ஈஸ்ட்டில் ஏழு இருபத்தி ஐந்தை விட்டால், அதோ கதி தான் செல்வாவுக்கு. நேரம் ஆக ஆக கூட்டமும் அதிகம் சேரும் நேரம். டாக்ஸி பிடித்தால் கூட எட்டு மணி அலுவலகத்திற்கு செல்ல முடியாது. சில நிமிடங்கள் லேட்டானாலே போதும், ‘மேனஜரி’யின் செல்லத்துக்கு ஆளாக நேரிடும். இதற்காகவே ஒரு ஐந்து பத்து நிமிடங்கள் முன்னால் கிளம்பணும் என்று நினைத்துக் கொள்வான். இன்று வரை அது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
ராஃபிள்ஸ் பக்கம் எங்கேயாவது தான் அடுத்து வாடகைக்கு வீடு எடுக்கணும் என்ற எண்ணத் தொடரில் மூழ்கி, அத்தனை கூட்டத்திலும் ஒருவர் மேல் ஒருவர் உரசாமல் நிற்பது கண்டு அதிசயித்து ஜன்னல் வழி வேடிக்கை பார்த்து வந்தான் செல்வா.
அணிலின் வரிகளாய் மூன்று தடங்களில், நடுவே ரயில் நிற்க, கரை தொட்ட அலை மீண்டும் கடலுக்குள் செல்வது போல், ஒரு கூட்டத்தை இறக்கி, மறு கூட்டத்தை இருபுறமும் ஏற்றிக் கொண்டிருந்தது செல்வா வந்த ரயில் ஜூரோங்க் ஈஸ்ட்டில்.
இருப்பினும் செல்வா செல்லும் அடுத்த ரயிலுக்கு காத்திருப்போர் எண்ணிக்கையும், ராணுவ அணிவகுப்பாய் அடுக்கடுக்காய் நின்றிருந்தது. சரியா ஏழு இருபத்திஐந்து ரயில் வந்து நிற்க, முன்னின்ற பலர் ஏற, சில நொடிகளில் கதவு மூட, வெளி நின்ற பலருள் செல்வாவும் ஒருவன்.
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றுகையில், கூடவே ஒரு மின்னலும் தோன்றியது. “எக்ஸ்க்யூஸ் மீ” என்று சொல்லி, விலகும் செல்வாவைத் தாண்டி ப்ளாஃபாரத்தின் அருகில் சென்று நின்றிருந்தாள்.
வெண் பருத்தி உடையில் முழங்கை வரை மேலாடை. ‘வி’ கழுத்தில் ஓரமே எம்ப்ராய்டரி செய்த கருமஞ்சள் பூக்கள். வான் நீலத்தில் ஜீன்ஸ். போனி டெய்ல், அதில் அழகிய ஜீன்ஸ் கலருக்கு ஏற்ற ஹேர்பேன்ட். அதே ஊதா வண்ணங்களில் இழுத்து விட்ட டைமன்ட் போல காதணிகள். வெண் மஞ்சள் மேனி எல்லாம் இல்லை. வெய்யிலில் கருத்த வெள்ளைக் காரர்கள் நிறம் எனலாம். மெல்லிய ஆரஞ்சு உதட்டுச் சாயம். CK ஹேன்பேக் ஒரு புறம் தொங்க, மறுபுறம் கையிடுக்கில் கோப்பு ஒன்றை வைத்திருந்தாள்.
அழகிய பதுமைப் பெண்கள் அரைகுறை உடையுடன் ஆயிரமாயிரம் நின்றாலும், மின்னலின் வரவு அங்கிருந்த அனைவரையும் ஈர்த்திருக்க வேண்டும். அந்த இடத்தில் அனைவரும் அவளை ஒரு முறையாவது பார்க்கத் தவறவில்லை.
தினம் வருகிறாளா ? இல்லை இன்றைக்கு தான் பார்க்கிறோமா ? யாரிவள் ? சீனச்சியா, தமிழச்சியா, வெள்ளைக்காரியா ?!!! எந்த நாட்டுக்காரிய மனதில் வைத்துப் பார்த்தாலும், அந்த நாட்டுக்காரி மாதிரியே இருக்கிறாளே !!! என ஆயிரம் வாட்ஸ் பல்ப் எறிய, செல்வாவின் எண்ண அலைகளின் ஊடே அடுத்த ரயிலும் வந்து நின்றது.
சிங்கை வந்த நான்கு மாதத்தில், அது வரை இந்தியாவில் வாழ்ந்த இருபத்தி ஐந்து வயது வாழ்க்கை முறை மாறியே போனது செல்வாவிற்கு. முதன் முதலாய் ஐந்தரை மணிக்கு எழ கற்றுக் கொண்டான். கொஞ்ச லேட்டா எழலாம் என நினைத்தால் போதும், பாத்ரூம் ப்ராப்ளம் ப்ரதானமாய் இருக்கும் அந்த பத்தாவது தளத்தின் அடுக்குமாடி வீட்டில்.
மூன்று அறை கொண்ட வீடு அது. அறைக்கு இருவராய் மொத்தம் அறுவர். அதுமில்லாமல் இவன் தான் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும். மற்ற நண்பர்கள் பக்கத்தில், சில என்ஜினியரிங் நிறுவனங்களில் பணிபுரிந்தனர்.
வெளியே எங்கிலும் வானுயர்ந்த அடுக்குமாடி வீடுகளும், சுத்தமான தெருக்களும், எவ்வளவு கூட்டத்திலும் இடிக்காத மக்களும், எம்.ஆர்.டி யா இருக்கட்டும், ஏ.டி.எம் மா இருக்கட்டும், காஃபி கடையா இருக்கட்டும், எங்கிலும் முறையே வரிசையில் நிற்பதும், பத்தாதற்கு ரயிலிலோ, பஸ்ஸிலோ கூச்சமே படாமல் கட்டிப் பிடித்துக் கருத்தொருமித்த காதலர்கள் வரிசையாகட்டும் … எல்லாம் இந்த நான்கு மாதங்களில் பழகிவிட்டாலும், இன்னும் ஆச்சரியம் தீர்ந்தபாடில்லை செல்வாவிற்கு.
குளித்து, காஃபி போட்டுக் கொண்டு, அன்றைய முக்கிய செய்திகள், சிறிது நேரம் டி.வி.யில் பார்த்து விட்டு, நேற்றைய சமையலை இன்று மதியத்திற்கு டப்பாவில் அடைத்துக் கொண்டு, காலை உணவாக சீரியல் சாப்பிடவும் கற்றுக் கொண்டான். இந்தியாவில் இருந்த வரை, அம்மா சமையல் சாப்பிட்டு ஒரு முறை கூட பாராட்டி சொல்லாதவன், தற்போது போன் செய்யும் போதெல்லாம் பாராட்டித் தள்ளினான்.
ஏழு மணிக்கு வீட்டிலிருந்து நடக்க ஆரம்பித்தால், கால் மணி நேரத்தில் ரயில் நிலையத்தில் இருப்பான். ஊரில் முக்கு கடைக்கு போறது கூட சும்மா சள் சள்ளென்று பைக்கில் சுற்றியவன், இங்கு லொங்கு லொங்கென்று நெடுந்தொலைவு நடக்கவும் கற்று கொண்டான். காலை நேரமா ?!, மற்ற நேரங்களிலேயே சிட்டி பஸ் பிடிக்காதவன், தினம் போராடி ரயிலேறவும் கற்றுக் கொண்டான்.
இவை எல்லாமே பழகிவிட்டாலும் ஏதோ ஒன்று மட்டும் குறைவதாய் உணர்ந்தான் இன்று வரை. அதுவும் சில நொடிகள் வரை. இங்குள்ள வாலிபிகளிடம் ஒரு செயற்கை தனம் இருப்பதாய் உணர்ந்ததாலோ என்னவோ, மஞ்சள் மேனி பாவையாகட்டும், கருப்பு தேவதைகளாகட்டும், ம்.ஹிம். திரும்பிக் கூட பார்க்க மாட்டான்.
இதற்கு மாறாக இன்று கண்டவளை எண்ணி அதிசயித்து வந்தவனை, மீண்டும் ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்று சொல்லி அவனைக் கடந்து இறங்கினாள். பார்த்தால் அட ‘ராஃபிள்ஸ் ப்ளேஸ்’ வந்திட்டதா என்று கதவு மூடு முன் அலறி அடித்து இறங்கினான்.
வழக்கமாக கார்ட் அடித்து வலது புறம் செல்பவன், எப்புறம் செல்வது எனக் குழம்பி நின்றவளைக் கண்டு தானும் நின்றான். “ஏதாவது உதவி வேணுமா உங்களுக்கு” என்றவனை உதாசீனித்து, கௌண்டரில் விசாரித்துக் கொண்டிருந்தாள்.
இருக்க வேண்டியது தான், எதற்காக இத்தனை திமிர். தேவையில்லை என்றாவது சொல்லியிருக்கலாமே !! பெண்களே இப்படித் தான். ஆண்கள் என்றாலே ஏ.இ.கொ.வெ. ? ஒரு புறம் டென்ஷன் அதிகரித்தாலும், ‘ஏற்கனவே லேட்டு ராசா நீ’ என்று, அடுத்த ரயிலில் வந்த கூட்டம் நினைவூட்டியது.
அடித்துப் பிடித்து படிகளேறி, வளைந்து நெளிந்து, மேலே வந்து சில நொடிகள் வெளிக் காற்றை சுவாசித்தான். ஓடு ஓடு என்று மனம் தள்ள, ஓடியவன் எதிரில் சிலர் வர, அவர்கள் மேல் மோதாமல் இருக்க வேண்டுமே என எண்ணி சற்று விலகியவன், சாலைக் கம்பத்தில் இடித்து கீழே விழுந்தான்.
இடுப்பில் கை வைத்து எழுந்தவனுக்கு, பறக்கும் காகிதங்களையும் சாப்பாடு டப்பாவையும், வரிந்து எடுத்துக் கிளம்ப சில நிமிடங்கள் பிடித்தது.
இவன் இருக்கும் அலுவலகக் கட்டிடத்தில் நுழைந்து, எஸ்கலேட்டரில் உயரே போய்க் கொண்டிருந்தவளை செல்வா காணத் தவறவில்லை. ‘இந்த வழியே தான் வந்திருக்கிறாள். என்னைக் கடந்து தான் போயிருக்கணும். ஜஸ்ட் லைக் தட் ஒரு ஹெல்ப் பண்ணியிருக்கலாமே !’ என்று நொந்து எஸ்கலேட்டரில் ஏறினான்.
நேரம் கடப்பதை உணர்ந்தவன், ஏறியதோடு நிற்காமல், பட படவென ஓடும் எஸ்கலேட்டரில் ஓடி ஏறினான். வலப்புறம் திரும்பி, இடப்புறம் இரண்டாவது அறையில் நுழைந்தவன் வாய் பிளந்து நின்றிருந்தான்.
‘மேனஜரி’யுடன், வளை குலுங்க கை குலுக்கி, சரியும் ஹேன்பேக்கை இழுத்து மேல் விட்டு, எடுப்பான பல் வரிசை, எதார்த்த சிரிப்பின் ஓசையோடு, எடுத்துரைத்துக் கொண்டிருந்தாள் தன் பெயரை !
‘அப்பாடா ! இன்று செல்லத்தின் பிடியில் இருந்து தப்பிச்சாச்சு’ என்று பையை மேசையில் ஓரத்தில் வைத்து, தனது க்யூபிகலில் சரிந்தமர்ந்த செல்வா, திரும்பி ப்ரஷாந்தையும், க்ளிஃபர்டையும் பார்த்தான்.
இருவர் கண்களும் குறுகுறுவென குறுஞ்செய்திப் பறிமாற்றம் செய்து கொண்டிருந்தன. ‘அடப் பாவிங்களா, நமக்கு வில்லன்கள் ஆகிவிடுவான்கள் போலிருக்கே !’ என்று எண்ணி சற்று திரும்பி பாலினையும், ரெபேக்காவையும் பார்த்தான். தலை கவிழ்ந்து கணினி திரை பார்த்தாலும், அவர்களது பாடி லேங்குவேஜும், அவர்களிடம் ஒரு மாற்றத்தை காட்டியது.
இவர்கள் அனைவருக்கும் பின்னால் செல்லம் ‘க்ரிஸ்டினா’வின் அறை. மங்கிய கண்ணாடி வழி உருவங்கள் அருவங்களாக. அறிமுகக் கேள்வி பதில்கள் மெலிதாய் வெளி அறையிலும் விழுந்து கொண்டிருந்தது. அவள் வந்த சாயல் நேர்முகத்திற்கு தான் என எளிதாய் அனைவருக்கும் உணர்ந்தினாலும், அனைவருக்குமே ஒரு ஆர்வம், என்னதான் உள்ளே பேசுகிறார்கள் என !!!
“இந்தியாவில் எந்தப் பகுதி ?”
“சௌத். சென்னை தெரியுமா உங்களுக்கு ?”
“ஓ, கமான் ! இரு முறை சென்றிருக்கிறேன். நம்ம வங்கி, தகவல் தொழில்நுட்பத்திற்கென தனியே ஒரு அலுவலகம் அங்கு திறக்கப் போகிறார்கள் என்றொரு செய்தியும் சமீப காலமா பேசப்படுகிறது.”
பள்ளி, கல்லூரி, உடன்பிறப்புக்கள், அப்பா, அம்மா என ஒரு மினி ஜெனரல் உரையாடலுக்குப் பின், “டூ யூ ஹேவ் எனி கொஸ்டின்ஸ் ?” என்றார் க்ரிஸ்டினா.
சற்றும் தயங்காமல், “இஃப் ஐம் செலக்டட், என்னோட முக்கிய பணி என்னவா இருக்கும் ? ” சேலஞ்சிங்கா எதா இருந்தாலும் எடுத்து செய்யத் தயார் என்றும் சொல்லப் போனவள், வாழ்வில் ஒரு முறை செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என்று நினைத்து, முதல் கேள்வியோடே நிறுத்திக் கொண்டாள்.
“ஐ லைக் யுஅர் ப்ரோஆக்டிவ்னெஸ், இருந்தாலும் டெக்னிக்கல் இன்டர்வியூ முடிச்சிட்டு சொல்றேன்” என்றவர், கதவைத் திறந்து வெளியில் வந்தார்.
“கேல்ஸ் அன்ட் கைஸ்,” கண்கள் சுருக்கி ஒரு கேள்விக்குறியோடே, அவளைப் பார்த்து “ஷி இஸ் நிமலா ?!” என்றார்.
“நிர்மலா” என்று ‘ர்’க்கு ஒரு அழுத்தம் கொடுத்தாள் நிர்மலா.
திரும்பவும் முயற்சித்த க்ரிஸ்டினா, ‘நிமலா’ என்றே மீண்டும் சொன்னார். அவருக்கு ‘ர்’ ஒரு பெரிய சவாலாகவே இருந்தது. நீந்துகையில், கை நீட்டி நீரை வழிப்பது போல செய்து, “சாரி ஃபார் தட், வென் டேய்ஸ் கோஸ் ஆன், ஐ வில் கரெக்ட் இட்” என்று சொல்லி அவளைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்து வைத்தார் எல்லோருக்கும்.
இந்த ஒரு வாக்கியம், நிர்மலாவுக்கு, அங்கு வேலை உறுதி எனக் காட்டியது. அம்மையாருக்கு நம்மைப் பிடித்து விட்டது என்று மகிழ்ச்சி கொண்டாள். இங்க உட்கார்ந்திருப்பவர்களில் யாரோ ஒருவர் அல்லது இருவர் தான் டெக்னிக்கல் கேள்வி கேட்கப் போகிறவர்கள் என்று சுற்றிலும் அனைவரையும் ஒரு முறை பார்த்தாள்.
அது ஒரு பன்னாட்டு நிறுவன வங்கி. ஆயிரமாயிரம் பேர் உலகெங்கிலும் வேலை பார்க்க, இந்த அளவிற்கு ஒரு குட்டி டிப்பார்ட்மென்ட் இன்று தான் பார்க்கிறாள் நிர்மலா. ‘ரிஸ்க் மேனேஜ்மென்ட்’ன் மென்பொருள் தயாரிப்பு, மற்றும் ஆணி பிடுங்குதல் ப்ராதன வேலை.
ஒரு மினி ஃப்ரிட்ஜ், அதன் மேல் தண்ணீர் சுட வைக்க கெட்டில், அதனருகே காபி தயாரிக்க, அத்தனை இன்ஸ்டன்ட் பொடிகள், தேயிலை பொட்டலங்கள், சர்க்கரை. அறையின் நீளவாகில் இருபுறமும் அலங்கார ட்ராயர்கள். அதன் மேல் புத்தர் சிலைகள். வரிசையாய் கோப்புக்கள். நடுவே மீன் முள் போல க்யூபிகல்கள். ஒரு க்யூபிகலில் உட்கார்ந்து சுற்றினால் அனைவரையும் பார்த்து பேசும் வண்ணம் ஒரு அமைப்பு. அனைத்து மேசைகளிலும் கணினி பார்க்க அலுவலகம் போன்று தோன்றினாலும், மொத்தத்தில் ஒரு ஹோட்டல் சுயீட் போலவே காட்சி தந்தது அந்த இரட்டை அறை.
ஒவ்வொருவரிடமும் கை குலுக்கி அறிமுகம் செய்து கொண்டு, அவர்களைப் பற்றியும் அறிந்து கொண்டாள். எல்லோரிடமும் போலவே செல்வாவிடமும் கை குலுக்கிப் பேசினாள். ‘என்னது !! வெளியில் கண்டுக்காதவள், உள்ளே வெகு இயல்பாய் பேசுகிறாளே !!!’ என்று நினைத்திருந்தான்.
“ப்ரஷாந்த், க்ளிஃபர்ட், கமான் இன். யூ டூ நிமலா” என்று சொல்லி அடுத்த கட்ட டெக்னிக்கல் இன்டர்வியூவிற்கு, இவர்களைத் தன் அறைக்கு அழைத்து சென்றார் க்ரிஸ்டினா.
“அடப் பாவிங்களா, ரெண்டு வில்லன்களுமா ? என்னை அழைத்திருக்கக் கூடாதா, சட்டு புட்டுனு ரெண்டொரு ஈஸியான கேள்வியா கேட்டு, புள்ளைய எடுத்திருக்கலாமே” என வாய் பிளந்த செல்வாவை, என்னடா “உங்க ஊரு சினிமா ஓடுதா மனசுல” எனச் சீண்டினர் சீனச்சியர் இருவரும். மேலும், “ஷி லுக்ஸ் ப்ரெட்டி … இந்தியர்கள் நிறம் கம்மியா இருந்தா கூட, பொதுவா பெண்கள் அழகா இருக்காங்க எப்படி ?” என்றும் செல்வாவை ப்ரம்மனாய் பாவித்து கேட்டுக் கொண்டிருந்தனர்.
‘அழகு மட்டுமல்ல, திமிரானவர்களும் கூட’ என்று சொல்ல நினைத்தான் நிர்மலாவை மனதில் வைத்து. “அவ அழகா இருக்கானு சொல்றீங்க ?! எனக்கென்னவோ அப்படித் தோனலை. ஒரு வேளை அவள் கண்ணப் பார்த்து சொல்றீங்களோ என்னவோ. உங்களுக்கு தான் பெரிய கண்கள், நீண்ட ஐ லேஷஸ் இருந்தாப் போதுமே. இந்தியப் பையன் என்றால் ஹேன்ட்சம், பெண் என்றால் ப்ரெட்டி” என்று குறுநகை பூத்தான்.
என்ன தான், செல்வா அழகில்லை என்று சொன்னாலும், அவன் மனசாட்சி போலவே அவர்கள் மனதும் ‘என்ன இருந்தாலும் அவ அழகி தான்’ என்றது.
அடுக்கு மல்லிப் பல் வரிசையில் அழகாய் சிரித்து வெளி வந்தாள் நிர்மலா. “ஐ வில் லெட் யூ நோ விதின் டூ டேய்ஸ்” என்று வாய் நிறைய புன்னகையோடு வழி அனுப்பி வைத்தார் க்ரிஸ்டினா.
வெளியில் இருந்தவர்களுக்கு கை குலுக்கி, நன்றி தெரிவித்துச் சென்றவளை நிறுத்தி, “கைஸ், கேன் சம் ஒன் ஹெல்ப் ஹெர் டூ த லாபி” என்று க்ரிஸ்டினா சொல்லி முடிக்குமுன், செல்வா வாசலில் நின்றான்.
“நீங்க தமிழா ?” எனக் கேட்டு இருவரும் அதிசயித்தனர்.
“நான் இங்க வந்து ரெண்டு வருடங்கள் ஆகிறது, இப்பொழுது எங்க அண்ணன் வீட்டில் இருக்கிறேன். படிச்சது ஸ்டெல்லா மேரீஸ், அப்புறம் என்.ஐ.ஐ.டில ஒரு ஆரக்கல் கோர்ஸ் எடுத்தேன். சென்னையிலேயே கொஞ்ச நாள் வேலை பார்த்துட்டு, அப்புறம் இங்க வந்திட்டேன். சரி, மேடம் எப்படி ?” என்றாள் நிர்மலா.
“ம். ம். ஓ.கே தான், ஆனால் …”
“என்ன ஆனால் ?”
“கொஞ்சம் ஈகோயிஸ்ட். மத்தபடி ஷி இஸ் சோ ஃப்ரெண்ட்லி, ஹ்யுமானிட்டி உள்ள ஒரு பெண்மணி”
“திஸ் இஸ் க்ரேட். ஈகோயிஸ்ட் எல்லாம் ஒரு மேட்டரே கிடையாது எனக்கு. சரி, நல்லா பேசினாங்களே, அதை வைத்து நான் செலக்டட் என எடுத்துக்கலாமா ?” என்றும் கேட்டாள்.
“நான் பார்த்த வரைக்கும் அம்மணி அளந்து பேசினாங்க என்றால் தான் சந்தேகப்படணும் !!! உன்னை விட அவங்க தானே இன்று நிறையப் பேசினார்கள். அதானால் நைன்ட்டி நைன் பெர்ஸன்ட் யு ஆர் செலக்டட்”
“தாங்க் காட்” என்றவளின் பூரிப்பு முகத்தில் காட்டியது, இருட்டில் பொட்டாய் தோன்றும் மின்மினிப் பூச்சிகளின் ப்ரகாசத்தை.
“செல்வா, நீங்க எவ்வளவு நாள் இங்க இருக்கீங்க ?”
“சிங்கை, இந்த அலுவல் எல்லாம் கடந்த நான்கு மாதங்களாக.”
“அதுக்கு முன் ?”
“சென்னையில் ஒரு ஆட்டோமொபைல் உற்பத்தி கம்பெனியில் கணினி துறையில், மூன்று வருடங்கள் பல மட்டங்களிலும் இருந்து, அப்புறம், வெளிநாடெல்லாம் எப்ப பார்க்கிறது என்று சிங்கை வந்தேன்.”
“சென்னை தான் ஊருமா ?”
“இல்லைங்க, ஊட்டி பக்கத்தில ஒரு கிராமம். பட் மைக்ரேட்டட் டூ சென்னை, அம்பத்தூர்”
“நீங்க நிர்மலா ?”
“அதான் சொன்னேனே !!! வளர்ந்தது, படிச்சது, வேலை பார்த்தது மற்றும் ஊரும் அது தான்.”
“சென்னையில எங்க ?”
“வேளச்சேரி. சென்னையில், நீங்க அந்த என்ட் என்றால் நாங்க இந்த என்ட்” என்றாள்.
“இப்ப இவ்ள பேசறீங்க, காலையில் ஏன் அப்படி நடந்துகிட்டீங்க ?”
“எப்போ ? எப்படி நடந்துகிட்டேன் ? நினைவில்லையே !! நானே இன்டர்வியூ டென்ஷன்ல இருந்தேன். ஏதாவது தவறுதலா இருந்தா மன்னிச்சிக்கோங்க !”
பரவாயில்ல, பரவாயில்ல என்று சொல்லி ‘நாம தான் இவ பாத்திருப்பா, கண்டுக்காம இருக்கா, திமிர் பிடிச்சவ என்றெல்லாம் நினைக்கிறோமா ! என்ன ஒரு முட்டாள் தனம்’ என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.
“செல்வா நீங்க கெளம்புங்க, நேரம் ஆச்சு, தேட மாட்டாங்க ?!!” என்று நிர்மலா சொல்லும்போது தான், அட !! ட்ரெய்ன் வரைக்கும் வந்த்துட்டோமே என ஆச்சரியித்தான். இதே இடத்தில தானே காலையில் உதாசீனப்படுத்திச் சென்றாள். இப்ப பேசுகிறாளே, அதுவும் அழகாக, என பூரிப்புடன் வழி திரும்பினான்.
அண்ணி வீட்டில் இல்லை என்று அமைதியான சூழ்நிலை தெரிவித்தது. நல்ல வேளை அவர்கள் இல்லை என நினைத்துக் கொண்டாள். வெளிக் கதவைத் தாழிட்டு, தனது ரூமிற்கு சென்று பையை வைத்து விட்டு, படுக்கையில் சரிந்து விழுந்தாள் நிர்மலா.
வாழ்வில் எத்தனை எத்தனை மாற்றங்கள். காலம் தான் வேகமெடுத்து ஓடுகிறதென்றால், மாற்றங்களும் போட்டி போட்டுக் கொண்டு அல்லவா வருகிறது.
இரண்டு வாரங்கள் முன்பு வரை வேலை செய்த இடம் எத்தனை ரம்மியமாக இருந்தது. எத்தனை எத்தனை நண்பர்கள். இரண்டு வருடங்களாக சேர்த்து வைத்த நட்பு இப்படி சட்டென ஆளையே சாய்த்து விடும் என நிர்மலா நினைத்தும் பார்த்ததில்லை.
‘நல்ல வேளை கணினித் துறை எடுத்தேன். அடுத்த வேலை கிடைக்காமல் போய்விடாது’. ஆனாலும் இரு வார இடைவெளியில் அண்ணியின் ஆக்கிரமிப்பு, மற்றும் அண்ணன் மேல் அவள் செலுத்தும் ஆளுமை, சமீப காலமாய் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல உள்ளர்த்தம் கொண்ட வார்த்தைகள் என எல்லாவற்றையும் தாங்கி அம்மி போலக் கல்லென இருந்தாள்.
ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் தானே !
நிர்மலாவின் அண்ணன் ரகுபதி. பிட்ஸ் பிலானியில் படித்து விட்டு, ஒரு கெமிக்கல் கம்பெனியில், ப்ராஜக்ட்டிற்காக பல வருடங்கள் முன்னர் சிங்கப்பூர் வந்தவன். அங்கேயே வேலையும் தர, அப்படியே படிப்படியாக முன்னேறி, தற்சமயம் ‘வைஸ் ப்ரெசிடென்ட்’ அந்தஸ்த்தில் இருப்பவன்.
படிக்கும் போதே, சென்னையிலேயே நல்ல குடும்பத்தில் இருந்து, சகலமும் முறைப்படி பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஜானகியைக் கரம் பிடித்தான்.
சென்னையில், நிர்மலாவின் தந்தை கட்டுமானத் தொழிலில் கொடிகட்டிப் பறப்பவர். ஜானகியின் தந்தை பல தொழில்கள் செய்து எதுவும் சரிவராமல், சமீப காலமாக உணவகத் தொழிலில் நாட்டம் செலுத்தி வருபவர். ஜானகி ஒரே பெண் அவருக்கு. அதனால் செல்லத்திற்கு அளவே இல்லை எனச் சொல்லவும் வேண்டுமோ ! கட்டுக்கடங்காத பச்சிளங்கன்றாய் சுற்றித் திரிந்தாள் ஜானகி இளவயதில். அப்பா செல்லம் என்பதால், அம்மா அவ்வப்போது அறிவுரைகள் கூறத் தவறவில்லை. இதனாலேயே அம்மாவைப் பிடிக்காது அவளுக்கு !!
திருமணத்திற்குப் பின், நிர்மலாவிற்கு உற்ற தோழியாய், உடன் பிறப்பினும் மேலாய் இருந்தாள் ஜானகி. ‘நான் கொடுத்து வைத்தவள் அண்ணி’ என்று பலமுறை நிர்மலா சொல்ல …. “நாம் இருவருமே ! அண்ணி எல்லாம் இல்லை, உனக்குத் தோழி சரியா ?” என்பாள் கண்ணக் குழி மூடி புன்சிரிப்புடன்.
ரகுபதியின் வீட்டில் அவனது அப்பா, அம்மா ரொம்ப கண்டு கொள்ளாதது, டீன் ஏஜ் நிர்மலாவின் ஃப்ரெண்ட்ஷிப், அப்புறம் சிங்கப்பூர் சென்றது, அங்கே கல்லூரித் தோழிகள் சிலரைச் சந்தித்தது, என எல்லாம் அவளுக்குப் பிடித்த மாதிரியே இருக்க, அப்படியே செட்டிலும் ஆனாள் ஜானகி.
கால மாற்றத்தில், அன்றிருந்த தோழி இன்று அண்ணியானாள், அன்னியனானாள்.
இத்தனைக்கும் நிர்மலா சிங்கை வந்த புதிதில், மற்றவர்களை விட ஜானகி தான் ரொம்பப் பெருமை கொண்டாள். “வெளியில் எல்லாம் நீ தங்க வேண்டாம், எங்க வீட்டிலேயே தான் இருக்கணும். அதான் எங்களுக்கும் பெருமை” என்று, விடாப்பிடியாய் வெளியில் செல்ல இருந்த நிர்மலாவைத் தன் வீட்டில் தங்கவும் வைத்தாள்.
நினைவுகளினூடே வெளிக் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. அண்ணி தான் வருகிறாள் என அவளது பாதணிகள் கதறியது. வந்ததும் வராததுமாக, “இறைவா, ஏன் இப்படி என்ன சோதிக்கற. அவ கிட்ட போன் பண்ணிட்டு தானே போனேன். கொஞ்சம் லேட்டாயிடுச்சு, அதற்காக எதிர்பாராத விதமா பி.ஸி., நாளைக்கு வாங்கனு அனுப்பிட்டாளே. என்ன திமிர், என்ன தைரியம். எல்லாம் நாலு காசு பார்க்கிறோம் என்கிற அழிச்சாட்டியம், எல்லாம் நம்ம நேரம், இதுங்க சொல்றதெல்லாம் கேட்க வேண்டும் என்று !!!” என பியூட்டி பார்லர் பெண்ணைத் திட்டுவது போல் தன்னையும் சேர்த்து திட்டுகிறாள் என உணர்ந்தாள் நிர்மலா.
“மத்தவங்க மாதிரி அழகா பொறக்கவில்லை என்றாலும், அழகா இருக்கணும் என்று நினைக்கிறது தப்பா ! ஒரு ஐப்ரோ, ச்ஃபேசியல் இது கூட நினைத்தவுடன் செய்துக்க முடியலையே !!! இதுல, உனக்கு கலர் காம்பினேசன் சரியா பண்ணத் தெரியலை, அவ கிட்ட கத்துகனு, இவரு ரெகமென்டேஷன் வேற !!! எல்லாம் என் தலை எழுத்து ….”
கோபமும் ஆத்திரமும் பொங்கினாலும், ‘பொறுத்தார் பூமி ஆள்வாராய்’ அமைதி காத்தாள் நிர்மலா.
“எவ்வளவு பொலம்பிட்டு இருக்கேன். ஏதாவது விழுதா காதில, இல்ல விழாத மாதிரி நடிக்கறியா ?!!” என்று நேரடியான கேள்விக்குத் தாவினாள் ஜானகி.
சடாரென கதவைத் திறந்து தன்னறையிலிருந்து வெளி வந்த நிர்மலா “அண்ணி, எதுக்கும் ஒரு அளவு இருக்கு, வாய் இருக்கன்றதால நினைத்ததை எல்லாம் பேசாதீங்க. உங்க காரியம் நடக்கலைனா அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் !? அவளத் திட்டற மாதிரி என்னையும் திட்டறீங்க”
அப்படிக் கேளுடி என் நாத்தினாமணி. காரியம் நடக்காததே உன்னால தானே !!!!
பசங்க இருவரும், லேட்டாக வரும் செல்வாவைப் பார்த்து, “என்னடா எம்.ஆர்.டி. ஸ்டேஷன்ல ஒரே ஜொல்லுப் பெருக்காமே” என்று நக்கலடிக்க, அவர்களுடன் சீனச்சியரும் சேர்ந்து கொண்டனர். “அவ அழகா இல்லேன்ற, பின்னே ஏன் இவ்ள நேரம், இல்ல லாபி எங்கயாவது ரெண்டு ஸ்டேஷன் தள்ளி மாத்திட்டாங்களா என்ன ?” என இருவரும் கண்கள் சுறுக்கி, பொங்கும் சிரிப்பை அடக்கி, ஆளாளாக்கு மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.
இந்த சளசளப்பில், உள்ளறையிலிருந்து வந்த க்ரிஸ்டினா அனைவருடனும் சேர்ந்து கொண்டார். உன்னையும் நேர்முகம் காண அழைக்கலாம் என இருந்தேன். நல்ல வேளை என இப்ப உணருகிறேன். நீ பாட்டுக்கு ஆளப் பார்த்து செலக்ட் பண்ணிட்டேனா என்று அவர் பக்கம் இருந்து ஒரு நக்கல் கணை வீசினார்.
“ஜோக்ஸ் அபார்ட். வாட் டு யூ ஆல் திங்க் எபௌட் நிமலா” என்று அனைவரிடமும் கேட்டார். சீனப் பெண்கள் இருவரும் “இஃப் ஷி இஸ் டெக்னிக்கலி ஓ.கே, தென் இட்ஸ் அப் டூ யூ” என்றனர்.
ஒரு கை தேர்ந்த அரசியல்வாதி, கூட்டணிக் கட்சிகள் நடத்தும் திறமை போல, இந்த விசயத்தில் க்ரிஸ்டினா அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும். என்ன தான் “ஸ்கில்டா” அல்லது “போல்டா” இருந்தாலும், குட்டி டிபார்மென்ட் என்பதால், அனைவருக்கும் பிடித்திருக்கிறதா என நோட்டம் பார்த்து தான் புதியவர்களை எடுப்பார். “டெக்னிக்கலி அன்ட் சோஷியலி ஷி இஸ் ஓ.கே. எதற்கும் ஒரு இரண்டு நாள் டைம் எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு யாருக்காவது ஏதாவது பிடிக்கலை என்றால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று தன்னறைக்குச் சென்று விட்டார்.
மதிய உணவு இடைவேளையில் சீனர்கள் அனைவரும், ஸ்ஸு, பிஸ்ஸு என்று அவர்கள் மொழியில் அளவளாவி, ப்ரசாந்திடமும், செல்வாவிடமும் “நீங்க கடா புடானு உங்க மொழியில பேசிக்கங்க” என்று கண்சிமிட்டி சென்றனர்.
செல்வாவும், ப்ராஷாந்தும், இந்திய வழக்கப்படி சாப்பாடு டப்பாக்களைப் பிரித்து மேசையிலேயே வைத்து உண்ண ஆரம்பித்தனர். சில நிமிடங்கள் வரை கலகலவென்றிருந்த அந்த அலுவலக அறை, கடைசிக் கூட்டத்தை அள்ளிச் சென்ற ரயில் நிலையமென நிசப்தமாக இருந்தது. தாளித்த கடுகு, சீரகத்தின் வாசனை அறை முழுதும் பரவி உணவகத்தை நினைவூட்டியது.
“என்னடா நினைக்கறே அவளப் பத்தி”, இது செல்வா.
“என்ன நினைக்கறேன்னா !? புரியல !”
“இல்ல, டெக்னிக்கலா எப்படினு ?”
“உனக்கேன்டா கவலை, அதெல்லாம் க்ரிஸ்டினா பார்த்துப்பா. உண்மைய சொல்லு, என்ன ஜொள்ளா ? இந்த கண்டவுடன் காதலை, கண்டம் விட்டு கண்டம் போனாலும் விடமாட்டீங்க !!!! ம்ம்ம்ம்”
“சே, சே அதெல்லாம் இல்லை, நீயே ஏத்தி விடுவ போலிருக்கே !!!”
“சரி சரி, ஒரு குட் நியூஸ். அவ என் ப்ராஜக்டல தான் ஒர்க் பண்ணப் போறா” என்றவன் செல்வாவையும் நோட்டம் விட்டான். லேசான முகச்சுளிவு இருக்கத் தான் செய்தது செல்வாவிடம். “என்ன பண்றது செல்வா, எல்லாம் நாம நினைக்கற மாதிரியே நடந்திருச்சுன்னா அப்புறம் சுவாரஸ்யம் ஏது !!! சரியா ? சரி, சீக்கிரம் சாப்பிடு, வாக் போய்ட்டு வரலாம், இதுங்க எல்லாம் வர்றதுக்குள்ள !” என்றான்.
செல்வாவும், ப்ரஷாந்த்தும் அலுவலகக் கட்டிடத்தை விட்டு வெளியில் வந்தனர். கூசும் கண்களை சிறிது சுருக்கி, கூட்டத்தினூடே பேசிக் கொண்டே நடந்தனர்.
வழக்கம் போல பல விதமான மக்கள். வெள்ளையர், கருப்பர், சீனர், இந்தியர், மலாயர், மற்றும் பல நாட்டவர் என பட்டியல், அங்கு பல புறமும் இருக்கும் திண்ணைகளின் நீளம் எனலாம். ரோமமில்லாதவர்களின் தலை பாளம் பாளமாக வெடிக்கும் அளவிற்கு, உச்சி வெய்யில் உள்ளந்தலையில் பட்டுத் தெரித்தது. சுற்றிலும் வான் உயர்ந்த கட்டிடங்கள். நடுவே பாதாள ரயில் நிலையம். ரயில் நிலையத்தின் மேலே வெட்ட வெளியில், வெய்யிலில் மக்கள் கூட்டம் கூட்டமாகப் போவதும் வருவதுமாக இருந்தனர். பலர் அந்த நீண்ட திண்ணைகளில் அமர்ந்து சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தனர்.
அனைவரையும் கடந்து சென்று கடல் பக்கம் ஓரமாக நடந்து, பாலத்தைக் கடந்து, கொஞ்ச நேரம் கடல் காற்று சுவாசித்து திரும்பி வருவது தினம் ஒரு பழக்கமாக இருந்தது இவ்விருவருக்கும். திரும்பி வந்து எஸ்கலேட்டரில் ஏறி அலுவலகம் செல்ல இருந்தவர்கள், கதவு மூடும் லிஃப்டினுள், கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் நிர்மலாவையும் காணத் தவறவில்லை !!
‘இவ எதுக்கு இங்க வரணும் ? அதும் லஞ்ச் டயத்தில், இவர்கள் கதவை பூட்டி சென்று விடுவதும் அப்போது தான் உறைத்தது இருவருக்குமே. அனைவருமே ஒரு சாவி வைத்திருப்பார்கள். எதையேனும் விட்டுச் சென்று விட்டாளா ? திரும்ப எடுக்க வந்து யாரும் இல்லாமல், காத்திருந்து கிளம்பிவிட்டாளா ?’ என யோசித்து,”ப்ரஷாந்த் நீ போயி கதவை திற, நான் கீழ போய் பார்த்திட்டு வருகிறேன்” என செல்வா எஸ்கலேட்டரில் கீழே தபதபத்து இறங்கினான் !!!!
“என்னால தான் லேட்டுங்கறீங்க ! நான் என்ன பண்ணினேன் அண்ணி ?”
“என்ன பண்ணினியா ?!! எல்லாம் உங்க அண்ணன் வரட்டும் பேசிக்கலாம்”
“பாவம் அவர ஏன் இதில இழுக்கறீங்க !”
“அதானே ஒருத்தர ஒருத்தர் விட்டுக் கொடுக்கவே மாட்டீங்களே ! நல்ல அண்ணன், நல்ல தங்கச்சி, ஹிம்ம்ம்ம்”
‘நிர்மலா, உங்க அண்ணி என்ன பேசினாலும் கொஞ்சம் பொறுமையா போம்மா. இதெல்லாம் உடனே தீர்க்கற விசயமில்லை, உனக்குப் புரியும்னு நினைக்கறேன்’ ரகுபதியில் குரல், ஒலிநாடாவைத் தட்டிவிட்டது போல ஓடியது. தன் அறைக்கு சென்று கதவை சாத்தி, சுவற்றில் தெரித்த நீர், நேர் கோடாய் வழிவது போல் சரிந்து தரையில் அமர்ந்தாள்.
ஹாலில், கால்களை நீட்டி, காஃபி டேபிளில் வைத்துக் கொண்டு, டி.வியை தட்டி விட்டு, அதில் மூழ்கிப் போனாள் ஜானகி.
சிறிது நேரம் கழித்து, கதவைத் திறந்து கொண்டு ரகுபதி உள்ளே வந்தான்.
நுழைந்தும் நுழையாததுமான அவனிடம், டி.வியை அனைத்து விட்டு படபடவென பொறிய ஆரம்பித்தாள் ஜானகி. “இருக்கறதோ ரெண்டே பாத்ரூம். அதிலும் ஒன்னு ரெனோவேஷன் வேலை நடந்துகிட்டு இருக்கு. இந்த வீட்ல இருக்க எல்லாருக்கும் இது தெரியும் தானே ! போக, தாம் பாட்டுக்கு, இருக்கற ஒரு பாத்ரூமுக்குள் காலையில் போய் அடைஞ்சிகிட்டா என்ன அர்த்தம். மத்தவங்க என்ன செய்வாங்கனு கொஞ்சம் யோசிக்கறதில்லை ! ஏன், எங்களுக்கெல்லாம் வெளி வேலை இருக்காதா ?”
“ஜானு, என்ன இது குழந்தை மாதிரி. வர வர எல்லாத்துக்கும் அடிச்சக்கறே நீ, பாவம் இப்ப தான் பழைய கஷ்டங்களில் இருந்து மீண்டு வர்றா நிர்மலா. கொஞ்ச நாள் அமைதியா இரேன் ! ஒரு ப்ரேக்குக்கு அப்புறம் இப்ப தானே வெளிய போறா ! அதுவும் நேர்முகம், இன்னிக்கு பார்த்து தான் நீயும் ப்யூட்டி பார்லருக்கும் போகணுமா ?!”
“உங்களுக்கு எப்பவுமே அவ மட்டும் தான் பாவம் ! நாங்க எல்லாம் எங்க உங்க கண்ணுல படறோம் ! அமைதியா இரு இருனு என்னை மட்டும் நல்லா அடக்கறீங்க. என்னிக்காவது அவள ஒரு வார்த்தை சொல்லியிருப்பீங்க ? இல்ல சொல்லியிருந்தா தான் இந்த நிலைக்கு அவ வந்திருப்பாளா ?!”
“இத சொல்றதுக்கு தான் போன் போட்டு வரச் சொன்னியா ?!, அலுவகத்தில் ஏகப்பட்ட வேலை இருக்கு, நீ என்னடானா சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் …. கூல் டௌன் ஜானு”
“கூல் டௌன் மண்ணுனு சொல்லுங்க. ஜானுவாம் ஜானு … இன்னிக்காவது ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும் … இந்த வீட்டில் ஒண்ணு அவ இருக்கணும், இல்ல நான் இருக்கணும். நானும் பல தடவை சொல்லிட்டேன், நீங்க கேக்கற மாதிரியே தெரியல. யாரு இருக்கணும்னு இப்பவே நீங்க முடிவு பண்ணி சொல்லணும்.”
“உஷ்ஷ் … சத்தம் போடாதே, நிர்மலா காதில விழுந்திடப் போகுது !”
“இதோ ! பாருங்க, பாருங்க !!! என்னைத் தான் அடக்கறீங்க. காதில் விழட்டுமே என்ன இப்ப ?!”
என்னதான் வெளியில் இவர்கள் பேசினாலும், இவை எதுவும் உள்ளே நிர்மலாவின் காதுகளில் எட்டவில்லை. காரணம் இன்டர்வியூக்காக நேற்று தன்னை தயார் செய்து கொண்ட களைப்பில் தூங்கிப் போயிருந்தாள். தலைமாட்டில் இருந்த செல்லில் வந்த சிணுங்கல், நிர்மலாவைத் தட்டி எழுப்பியது.
நாள்காட்டி பிரிப்பது போல, செல்லைப் பிரித்து “யெஸ் க்ரிஸ்டினா ?!!!” என்றாள் கேள்விக்குறியோடே.
…
“ஓ.கே. இதோ, இப்பவே கெளம்பறேன்”
…
படியில் கவனத்தோடு தபதபத்து செல்வா இறங்கினாலும், ஒரு கண் அந்த நீல சுடிதாரின் மேலேயே இருந்தது. இருள்சூழ் மேடையில் ஆடிப்பாடும் கலைஞர்களை, அவர்கள் செல்லும் இடமெல்லாம் வட்ட விளக்கு தொடர்ந்து காட்டுவது போல, அநேக ஆங்கிலேய உடைக் கூட்டங்களில் இந்தியச் சுடிதாரைத் தொடர்வது அத்தனை கடினமாய் இல்லை செல்வாவிற்கு.
அவள் எப்பொழுதும் போலவே தான் நடக்கிறாள். ஆனால் செல்வாவிற்கு அவள் விரைந்து செல்வது போல ஒரு எண்ணம். காரணம் கூட்டத்தில் யாரையும் இடிக்காது, தத்தித் தத்தி நடப்பதில் அவன் மெதுவாக இருந்தான்.
‘இதோ ரயில் நிலையம் நோக்கி கீழே இறங்குகிறாள், ஒரு முறையாவது திரும்பிப் பாரேன்’ எனத் தொடர்கிறான் செல்வா.
மதிய உணவு நேரம் என்பதால் ரயிலடி கூட்டத்தில் மிதந்தது. கார்ட் அடித்து உள்ளே சென்று விட்டாள். செல்வா கொஞ்சமும் யோசிக்கவில்லை, அவளைத் தொடர்கிறான். இன்னும் கீழே ஜூரோங்க் ஈஸ்ட் நோக்கி செல்லும் தடத்தில் நிற்காது, வேறு புறம் செல்கிறாள். ‘எத்திசையா இருந்தால் என்ன, எப்படி இருந்தாலும் ரயில் வர சில நொடிகள் ஆகும், அதற்கு அவளிடம் என்ன ஏது என்று கேட்டு விடலாம் என செல்வா யோசித்துக் கொண்டேயிருக்க, ரயிலும் வந்து கொண்டே இருந்தது.
தூரத்தில் சில பெட்டிகள் கடந்து அவள் ஏறுவதைப் பார்த்தான். ஓடிச் சென்று அங்கு ஏறுவதற்குள் கதவு மூடிவிடலாம். ஒரு செகண்ட் யோசித்து, பக்கமே இருந்த கதவில் தாவி ஏறினான். ‘அப்பாடா நல்ல வேளை, ரயிலில் கூட்டம் அதிகமில்லை’ என்று மெதுவே அவள் இருந்த இடம் நோக்கி, ஓடும் ரயிலில் ஆடி நகர்ந்தான்.
இருக்கை இரண்டிருக்கும் ஓரத்தில் ஒன்றினில் அமர்ந்திருந்தாள் அமைதியாய் நிர்மலா. பக்கமே கம்பி பற்றி நின்றான் செல்வா. “என்னங்க, ஏதாவது முக்கியமான விஷயமா ? ஏதாவது ஆஃபீஸ்ல விட்டு வந்திட்டீங்களா ? சாரி, நாங்க பூட்டிட்டு வெளில போய்ட்டோம். ரொம்ப நேரம் காத்திருந்தீங்களா ?”
முதல் சில கேள்விகளுக்கு செவி சாய்க்காமல், செல்வாவையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்த நிர்மலா … தொடர்ந்த அடுக்கு கேள்விகள் அவளை பிரமிப்படைய வைத்தது. நிமிர்ந்து செல்வாவைப் பார்த்தவள் அதிசயித்தாள். “நீங்க ?!!”
“ஆமா நானே தான். இன்று காலை பார்த்தோமே அலுவலகத்தில். என்னங்க ஏதாவது முக்கியமா ….” என செல்வா அடுத்து அடுக்கத் தொடங்குமுன், “அதெல்லாம் ஒன்றுமில்லை, நிக்கறீங்களே, உட்காருங்க” என பக்கத்து இருக்கையை காட்டினாள் நிர்மலா.
“பரவாயில்லைங்க” என்று சொல்லி எதிரில் காலியாயிருந்த இருக்கையில் அமர்ந்தான் செல்வா.
“சரி, அதுக்குள்ள ஆபீஸ் முடிஞ்சிடுச்சா, வீட்டுக்கு கெளம்பிட்டிங்களா ?” எனக் கேட்டாள்.
“அட, இதானே வேணாங்கறது. நானும் ப்ரஷாந்த்தும் மதியம் அலுவலகத்திலேயே சாப்பிடுவோம். சீனர்கள் எல்லோரும் வழக்கம் போல வெளிய சாப்பிட போயிருவாங்க. சில நிமிடங்களில் உணவு முடித்து விட்டு, லாக் பண்ணிட்டு அப்படியே ஒரு வாக் கெளம்பிப் போயிருவோம். இன்னிக்கும் அப்படித்தான். நடை போய்ட்டு வந்து பார்த்தா, நீங்க லிஃப்டல கீழ இறங்கறீங்க. முகம் வாட்டமா வேற தெரிஞ்சது, அதான் ஏதாவது ” என்று சிங்கிள் டேக்கில் சொல்லி முடித்தான்.
‘ம்ம்ம்ம்ம். இன்ட்ரஸ்டிங்’ என நினைத்து “வாவ், இதுக்காகவா இவ்ள தூரம் வரீங்க, என்ன முக்கியம் என்றாலும் அது உணவு நேரம் அல்லவா, எனக்குத் தெரியாதா வெயிட் பண்ணனும் என்று, அதுமில்லாமல் இப்படி ரயிலேறி கெளம்பி போற அளவிற்கு இருக்கிறேன் என்றால், அப்புறம் என்ன முக்கியமா இருந்துவிடப் போகிறது”
‘அடடா, க்ளீன் போல்ட் டா செல்வா நீ’ என்று தன்னையே திட்டிக் கொண்டு, “என்ன இருந்தாலும் ஒருத்தருக்கு உதவி பண்ணனும்னு நினைக்கறது தப்பில்லை தானே, அதும் அழகான இதயம் கொண்டவர்களுக்கு என்றால் காலம் முழுக்க செய்யலாமே” என்று சமாளித்தான் தனது சறுக்கலை.
“இவ்ளோ தூரம் வந்திட்டீங்க, நானே சொல்லிடறேன். இன்டர்வியூ முடிச்சிட்டு, நேரா வீட்டுக்குப் போய் நல்லாத் தூங்கிட்டேன். அப்ப க்ரிஸ்டினா கிட்ட இருந்து கால். எடுத்தா, உடனே வரமுடியுமானு கேட்டாங்க. சரினு சொல்லி கெளம்பி வந்திட்டேன். அவங்களுக்கு ஒரு பெர்சனல் ப்ராப்ளமாம், அவசரமா மலேஷியா போகணும், சில வாரங்கள் ஆகும், அதனால என்னை உடனே அப்பாய்ன்ட் பண்ணுவதாகவும், சேர்ந்துக்கறியா என்றும் கேட்டார். அதான் பேப்பர்ஸ் எல்லாம் சைன் பண்ணி ஆஃபர் அக்ஸெப்ட் பண்ணிட்டேன், இனி ஹெச்.ஆர். பார்த்துப்பாங்க என்றார்.” என்று சொல்லி முடித்தாள் நிர்மலா.
“வாவ், கங்ராஜுலேஸன்ஸ்” என்றான் செல்வா. “சரி, எங்க இந்தப் பக்கம் ? காலையில் ஜூரோங்க் ஈஸ்ட்டில் அல்லவா ஏறினீர்கள் ?”
‘ம்ம், அடப் பாவி சரியான ஆள் தான், எல்லாம் கரெக்டா சொல்றான்’. “ஆமாங்க, வீடு அங்க தான், இப்ப கொஞ்சம் போரடிக்குது அதான் செரங்கூன் சைட் போயிட்டு, கொஞ்சம் சுத்திட்டு, கோவில் போயிட்டு வீட்டுக்குப் போலாம்னு” என்றாள்.
‘தனியா போறே, நானும் வரவா ? என்றால் என்ன நினைப்பாள், கேட்டுத் தான் பார்ப்போமா ?!’
“செல்வா, நீங்க என்ன பண்ணறீங்க ! அடுத்த நிறுத்தத்தில இறங்கி, ட்ரய்ன் மாறி ஆஃபீஸ் போயிடுங்க, இவ்ள தூரம் எனக்கு உதவ நினைத்து வந்த உங்கள் மனதிற்கு நன்றிகள் பல” என்றாள்.
‘இல்லை, எப்படியாவது இவளுடன் போகணும்’ என முடிவு செய்து “நிர்மலா, உனக்கு ஆட்சேபனை இல்லேன்னா, நான் உனக்கு கம்பெனி கொடுக்கட்டுமா ?”
அவனை அறியாமல் ஒருமையில் தன்னை அழைப்பதை, நிர்மலா கவனிக்காமல் இல்லை !!!!
அதே சமயம், வில்லென கேள்விக்குறியாய், ‘இவனெதற்கு’ என்பது போல் வளையும் அவளின் புருவங்களை செல்வாவும் கவனிக்கத் தவறவில்லை !!!
அம்பு விடுமுன் வளைந்த வில்லை சரியாகக் கவனித்த செல்வா, “சரிங்க நிர்மலா … வந்து … சாரிங்க நிர்மலா, இல்ல ! தனியா போறீங்களே, ஒரு கம்பெனி தரலாம் என்ற எண்ணத்தில் தான் அப்படி கேட்டேன், சரி நான் ஆபீஸ் கெளம்பறேன்”.
‘அப்பாடா, நல்ல வேளை’ என நினைத்துக் கையெடுத்துக் கும்பிடாத குறையாக, தோபிகாட் ரயில் நிலையத்தில், எதிர் திசையில் சென்று நின்ற செல்வாவை உறுதி செய்து கொண்டாள் நிர்மலா.
படியேறி சிறிது தூரம் நடந்து, சிராங்கூன் நோக்கி செல்லும் ரயில் தடத்திற்கான எஸ்கலேட்டரில் இறங்கினாள். அவளுக்காகவே அங்கு காத்திருந்தான் மகேஷ். அவளைப் பிடித்து இழுக்காத குறையாக கீழிழுத்து சென்றான். தூரத்திலிருந்து செல்வா இக்காட்சியை காணாமலில்லை. விளையாட்டு மைதானத்தில் விளையாடுபவர்களைத் தவிர பார்வையாளர்களுக்கு ஒரு பரபரப்பு இருக்குமே, அதே போன்ற நிலையில் இருந்தான் செல்வா. ‘இல்லை, நான் பார்வையாளனா இருந்திடக் கூடாது, என்ன ஆனாலும் பரவாயில்லை’ என்று நிர்மலா சென்ற திசையில் ஓடினான்.
ஏதோ வாக்குவாதம் பண்ணுவது போலவே இருந்தது அவர்கள் இருவரின் மேனிமொழி. இரண்டு பெட்டிகள் தள்ளி நின்று கொண்டான் செல்வா. லிட்டில் இந்தியா நிறுத்தத்தில் அவர்கள் இறங்க, இவனும் இறங்கிக் கொண்டான். அவளைத் தொடர்வதை அவள் கண்டுவிடக் கூடாதே என்று, நன்றாக இடம் விட்டுத் தொடர்ந்ததில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது காதில் விழுவது போலில்லை.
அதற்குள் செல்பேசி அழைப்பில் ப்ரஷாந்த். “டேய் செல்வா, எங்கிருக்க ?! உன்ன க்ரிஸ்டினா தேடிட்டு இருக்காங்க” என்றான்.
‘போச்சுடா, இங்க ஒரு பரபரப்பு என்றால், அங்க என்ன விறுவிறுப்போ ?!’ என்றெண்ணி, “இதோ வந்திட்டே இருக்கேன், பதினைஞ்சு நிமிடத்தில் இருப்பேன்” என்று போனை வைத்தான். எது என்னவானா என்ன, நமக்கு நம்ம வேலை முக்கியம் என்று வந்த வழியே திரும்பினான் செல்வா.
‘இன்னும் மலேஷியா போகலையா ?! எதுக்கு அவசரமா நிர்மலாவுக்கு ஆஃபர் லெட்டர் கொடுக்க வர சொல்லியிருக்காங்க ? நம்மை வேறு தேடறாங்க !!!’ என்று ஏகப்பட்ட கேள்விகளுடன், செல்வாவையும் சுமந்து சென்றது அந்த கம்ஃபர்ட் டாக்ஸி.
“எத்தனை தடவை சொல்லியிருக்கேன். என்னை இப்படி வந்து பார்த்து டார்ச்சர் பண்ணாதேன்னு” என்று தீபாவளிப் பட்டாசாய் வெடித்தாள் நிர்மலா.
“இதுக்கே கோவிச்சுக்கறே. இதே வாய் கொண்டு தான், அன்பே, ஆருயிரே என்றெல்லாம் கூட சொன்னே, இப்ப மட்டும் மட்டமா போய்டனா ?!!!!”
“அதுக்காக அந்த வாயை வெட்டி எறிஞ்சிருவேன்னு நினைச்சியா ?!!! உடலே ரணமானதுக்கப்புறம் ….” சிறிது ஆசுவாசபடுத்திக் கொண்டு, உடல் விம்மினாலும், மனம் இறுகி, உறுதியானாள்.
“இதோ பார், இது கடைசி தடவையா இருக்கட்டும், இனி ஒரு தடவை கூட என்னைப் பார்க்க வராத, நானும் உன் வழியில் வரமாட்டேன்”
“அவ்வளவு ஈ.ஸியா போயிடுச்சு உனக்கு. அது சரி !!! எல்லாம் உன் கைல தான் கண்ணு இருக்கு. எத்தனை நாளைக்கு தான் நீயும் பிடிவாதமா இருக்கிறாய் எனப் பார்ப்போம்.”
ஒற்றை அருவியாய் ஓட எத்தனித்த கண்ணீரை கட்டுப் படுத்திக் கொண்டாள். “இதுக்கு மேலயும் தொந்தரவு செய்தால், அப்புறம் போலீஸுக்கு தான் போவேன்”.
“போ … போடி … இப்படி எல்லார் வீட்டுப் பிரச்சனையும் தீர்க்க தான் போலீஸ் இருக்கு என்ற நினைப்பு !!!!”
‘இங்க எங்க போலீஸ் ஸ்டேஷன் இருக்கு, முன்ன பின்னே போயிருந்தா அல்லவா தெரியும் !! யாருகிட்டயாவது கேட்கலாமா ? கேட்கும் சூழ்நிலையிலா இருக்கிறோம். என்ன செய்யலாம். பின் தொடர்ந்த செல்வாவையும் வேறு திட்டாத குறையாக அனுப்பிவிட்டோம்’ எண்ணங்கள் சுழல ஒரு முடிவுக்கு வந்தாள் நிர்மலா.
“சரி இப்ப என்ன பண்ணலாம்ன்ற ?!” என்றாள்.
“அப்படி வா வழிக்கு. யூ ஆர் ஸ்மார்ட் ஆல்வேஸ் நிர்மலா. வா, நடந்துகிட்டே பேசலாம்”
ரயில் நிறுத்தத்திலிருந்து வெளி வந்து சாலையில் நடக்கத் தொடங்கினார்கள். வெய்யில், மழையையும் பொருட்படுத்தாமல், ஓரளவுக்கு அந்த நேரத்திலும் ஜனத்தொகை அடர்த்தியாகவே இருந்தது. சிராங்கூன் சாலை, தீபாவளி அலங்காரத்தில் மின்னியது. சாலையின் ஒரு முனையில் ஆரம்பித்து, சில அடி இடைவெளியில் வரிசையாக வண்ணத் தோரணங்கள் சாலையின் மறுமுனை வரை. எவ்வளவு தூரம் இந்த அலங்காரங்கள் தொடருகிறது என சாலையின் ஓரத்தில் நின்று கவனித்தால், கடைசியில் ஒரு புள்ளி போல தான் தோன்றும்.
நடைபாதையில் நிர்மலா நடக்க, சில அடி இடைவெளி கொண்ட அலங்கார வளைவுகளை, ரோட்டில் இறங்கி பின் நடைபாதையில் ஏறி, எனத் தொடர்ந்து கொண்டிருந்தான் மகேஷ். “ரொம்ப சிம்பிள் நிர்மலா. முதலில் முகத்தை சிரிச்ச மாதிரி வச்சுக்க, யாராவது நான் உன்னைத் தொந்தரவு செய்யறேன்னு நெனச்சிடப் போறாங்க ! ரெண்டு ஃபார்ம்ல கையெழுத்துப் போட்டுக் கொடுத்திடு. நான் என் வழி, நீ உன் வழினு போய்கிட்டே இருப்போம்!”
“சரி ஃபார்ம கொடு”
“ஹன்ன்ன் … ரோட்டுலயா … வேண்டாம். எங்காவது உட்கார்ந்து பேசலாம்”
“சொன்னதையே திருப்பி திருப்பி சொல்ற, எனக்குப் பிடிக்கலை”
“எனக்குப் பிடிச்சிருக்கே. அந்த வீடு பிடிச்சிருக்கு, மரியத்தை பிடிச்சிருக்கு. நீ கையெழுத்துப் போட்டா தான் எல்லாமே நடக்கும் கண்ணு.”
வரும் ஆத்திரத்தில் அப்படியே ரோட்டில் அவனைப் பிடித்து தள்ளிடலாமா என்று கூட யோசித்தாள் நிர்மலா. சே, அந்த பாவம் நமக்கெதற்கு என்று மனம் பின்வாங்கியது.
வீரமாகாளி அம்மன் கோவில் அருகில் இருந்தனர்.
எங்கேயாவது உட்காரணும், அவ்ளோ தானே. இங்கே உட்காரலாம் என்று அவனை (எதிர்)பாராது, காலணிகளை கழட்டி, பாதங்களை சுத்தம் செய்து கொண்டு கோவிலுக்குள் நுழைந்தாள்.
உச்சிகால பூசை முடிந்து, உச்சி வெய்யிலுக்கு உள்ளே சிலர் குளிர்காய்ந்து கொண்டிருந்தனர். ஆள் அதிகமற்ற ராமர் சன்னிதியின் பின், கொட்டகையில் நிர்மலாவும், மகேஷும் அமர்ந்தனர்.
“கொண்டா பேப்பரை” என்றாள்.
பேக் பேக்கிலிருந்து சில தாள்களை உருவினான் மகேஷ்
‘செத்துத் தொல சனியனே’ என்று திட்டி “இந்தா பிடி, இனி ஒரு முறை கூட என் எதிரில் வந்திடாத” என்று இரு கரம் கூப்பி தலை குனிந்தாள்.
இவ்வளவு எளிதில் காரியம் முடியும் என்று மகேஷ் எண்ணவில்லை.
நீ எப்பவுமே ஸ்மார்ட் நிமி. இந்த மரியம் மட்டும் குறுக்கே வல்லேன்னா இப்படி ஆயிருக்காது…
‘இந்த மாதிரி எத்தனை பேரு கிட்ட சொன்னியோ, சொல்லப் போறியோ. நல்ல வேளை என்னை விட்டியே அதுவே நான் செய்த பாக்கியம்’ என்று கண்கள் மூடி யோசித்தாள்.
இனி எதுவும் பேச மாட்டாள் என, வெற்றி களிப்புடன் அங்கிருந்து நகர்ந்தான் மகேஷ்.
வாய்க்கும், வயிற்றுக்கும் இடையில் என்னவோ செய்தது. இனம் புரியாத ஒரு சோகம் அப்பிக் கொண்டது. சன்னதியில் சாய்ந்து கண்மூடினாள். உலகமே சூறாவளியில் சுழல்வது போல இருந்தது. காற்றின் சடசடப்பில் எல்லாம் பிய்த்துக் கொண்டு பறந்தது. வீட்டுக் கூரைகள், மரங்கள், வாகனங்கள், மனிதர்கள் எனப் பாகுபாடு இல்லாமல் எல்லாம் காற்றின் ஆதிக்கத்தில் சுழன்றது. இடி இடித்து வானம், அழத் தொடங்கியது. சொட் சொட் என்று கொட்டகையில் இருந்து வடிந்த நீர், நிர்மலாவின் மேல் விழ, பட்டென்று கண்விழித்தாள். தனக்காக வானம் அழுகிறதோ என சிறிது மகிழ்ந்தாள்.
துப்பட்டாவை தலைக்கு போர்த்திக் கொண்டு கோவிலை விட்டு வெளியில் வந்து டாக்ஸி பிடித்தாள். ‘புக்கிட் பாத்தோக்’ என்று சொல்ல வந்தவள், ‘ராஃபில்ஸ் ப்ளேஸ்’ என்றாள் டாக்சி ஓட்டுனரிடம் …
முதன் முறையாய் செல்வாவின் அக்கறை, பிடிப்பதாய் (தேவைப்படுவதாய்) உணர்ந்தாள்.
சில நொடிகளில்,
‘ஐயோ, இந்த ஆண்களின் சகவாசம் வேண்டவே வேண்டாம். ஒரு எல்லையில் நிறுத்துவது தான் நல்லது. மகேஷிடம் பட்டதே போதும்’.
“சாரி, ‘ராஃபில்ஸ்’ வேண்டாம் ‘புக்கிட் பாத்தோக்’ போங்க”. என்றாள் ஓட்டுனரிடம்.
திரும்பி முறைப்பது போல் பார்த்தார் ஓட்டுனர். கொஞ்ச நேரம் கழித்து வேற எங்காவது சொல்லுவாளோ என்று அவர் முகத்தில் கிலி அப்பியது.
“புக்கி பாத்தோக் ஆ, லேட்ட டோன் சேஞ் டூ சம் அத ப்ளேஸ் ஓ.கே ஹான்…” என்று கட்டளை இட்டார் ஓட்டுனர்.
‘போயா போயா’ என்று மனதுள் சொல்லி “யா ஸ்யூர்” என்றாள் திடமாய்.
கண்ணாடி வழி வெளியே சிறிது நேரம் வேடிக்கை பார்த்து வந்தாள். சில பல சிந்தனைகள், பின் செல்லும் பொருட்களோடு போட்டி போட்டு பிம்பங்களாய்ச் சென்றன. என்னது இவ்ளோ நேரம் ஆகியும் ஒரு ஃபோன் கூடவா வரலை என்று யோசித்து, பையிலிருந்து செல்லை எடுத்துப் பிரித்தாள். சைலன்ட் மோடில் இருந்தது செல்.
“1 மிஸ்ட் கால்” காட்டியது திரை. என்னது புது நம்பரா இருக்கு. திரும்ப கால் பண்ணலாமா, வேண்டாமா என்று யோசித்தாள். வேண்டாம் என்று சிவப்பு பொத்தானை அழுத்த, “1 வாய்ஸ் மெய்ல்” என்றது செல்திரை. அழுத்திக் கேட்டாள். செல்வாவின் குரல் … “நிர்மலா, உங்க பெர்சனல் விசயத்தில குறுக்கே வர்றேனு நினைக்காதீங்க. ஒரு ஆளுடன் நீங்க வாக்குவதும் பண்ற மாதிரியும் தெரிந்தது. அதே சமயம் அவர் உங்களுக்கு நன்கு பரிச்சயமானவர் என்றும் புரிந்தது. சரினு விட்டுட முடியல. காரணம், உங்க முகத்தில் ஒரு வாட்டமும், கோபமும் இருந்தது. அதான், உங்களுக்கு ஏதாவது உதவினா, தயங்காம என்கிட்ட கேளுங்க, இதான் என் நம்பர், டேக் கேர்”
‘அடப் பாவிங்களா … ஏன்டா ஒரு பொண்ணோட மனச இப்படி நோகடிக்கறீங்க’ என்று நொந்து கொண்டாள்.
‘உண்மையாவே இவன் அக்கறை காட்டுகிறானா என்று ஏன் யோசிக்க மாட்டேன்கற’ என்றது மனம்.
‘இல்லை வேண்டவே வேண்டாம். எல்லாம் போதும்’
‘என்ன போதும். எல்லோருமே மகேஷ் மாதிரி இருப்பாங்கன்றது என்ன நிச்சயம்’
சில நொடிகள் யோசித்தாள். செல்லில் …
“செல்வா நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கணும். உங்க கிட்ட சொல்லலாமா, வேண்டாமா என்று தெரியவில்லை. ஆனா மனசு கெடந்து அடிச்சிக்குது”
‘நானே உன் கிட்ட ஒன்னு சொல்லணும் என்று யோசிச்சிகிட்டு இருக்கேன். நீ என்னடானா.’ “சரி, எப்போ எங்கே பேசலாம் ?”
மணி பார்த்தாள், திருப்பி போட்ட ஏழாய், மணி ரெண்டரை காட்டியது.
“நீங்க செரங்கூன்ல தான இருக்கீங்க. அங்கேயே இருங்க, ஆபீஸ் முடிச்சு அஞ்சு அஞ்சரைக்கா நான் வர்றேன். அங்க எங்காவது மீட் பண்ணலாம். அதுவரைக்கும் முஸ்தாபா, ஹனிஃபானு ஷாப்பிங்க்ல இருங்க”. என்றான்
“இல்ல வேண்டாம். எங்காவது லைப்ரரில மீட் பண்ணலாம்”.
“சரி எந்த லைப்ரரி சொல்லுங்க ?”
‘எல்லாத்துக்கும் சரி என்கிறானே. உண்மையா ? நடிக்கிறானா ??’
“இன்னிக்கு வேணாம். நாள நாளன்னைக்கு பார்க்கலாம்”.
எதிரில் மௌனம்
“சில நொடிகளில், சரிங்க உங்க இஷ்டம்” என்றான்
‘சரி ரொம்பத் தொல்லை பண்ண வேண்டாம் இவனை’ என்று, “எதுக்குங்க உங்களுக்கு வீண் சிரமம், நானே அங்க வர்றேன். ‘டோம்ஸ் காஃபியில்’ மீட் பண்ணலாம்”
முதன் முறையாய் ஜிவ்வென்று (நீல) வானில் பறப்பதாய் உணர்ந்தான் செல்வா.
“ம்…வந்து…ஐ ஹேவ் டு கோ டூ ராபிள்ஸ் திஸ் டைம். திஸ் இஸ் ஃபைனல் ஃபார் ஸ்யூர்” என்று குழைவாய் விண்ணப்பித்தாள்.
க்ரீச்ச்ச்ச் என்ற ப்ரேக்கில், சில அடிகள் இழுத்து நின்றது டாக்ஸி. திரும்பி எல்லாம் பார்க்கவில்லை ஓட்டுனர். “நாட் எனி மோ. பே மீ செவன் டால, தேட்டி சென்” கடுகடுத்த குரலில் ஓட்டுனர்.
‘இது என்ன இடம். இத்தனை வருடங்களில் இங்கல்லாம் வந்ததே இல்லியே. சிங்கப்பூர் குட்டியூண்டு தான், இருந்தாலும், முழுதும் பார்க்க இயலவில்லையே’. ஆனா ஒன்னு, அதே ஆரஞ்சுக் கலர் பஸ் ஸ்டாப்கள், ஹாக்கர் சென்டர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள். ஒன்றும் புரியவில்லை நிர்மலாவுக்கு. எதிர் திசையில் சென்று மற்றொரு டாக்ஸி பிடித்தாள்.
டோம்ஸில் அவ்வளவாகக் கூட்டமில்லை. இருவர் அமரும் மேசையை தேர்வு செய்து அமர்ந்து கொண்டாள். ஆர்டர் கேட்ட இளம்பெண்ணிற்கு, “ஐம் வெய்டிங் ஃபார் எ ஃப்ரெண்ட், ஐ வில் கால் யூ, தாங்க்ஸ்” என்று அனுப்பி வைத்தாள்.
தொலைபேசியில் “செல்வா நான் டோம்ஸ் வந்திட்டேன், நீங்க வேலை முடிச்சு வாங்க, ஒன்னும் அவசரமில்லை, பை”
கைகள் பரபரக்க, கால்கள் குறுகுறுக்க அடுத்த பத்தாவது நிமிடம், நிர்மலாவின் எதிரில் செல்வா.
“ஹேய் என்னது. ஆபீஸா இல்ல வீடா ?!! நெனச்ச நேரம் போறீங்க, வர்றீங்க.”
“ரொம்ப முக்கியமா இப்ப அதெல்லாம். சரி என்ன சொல்லணும் ?”
“நான் இன்னும் ஒன்னும் சொல்லலை, உங்களுக்கு தான் வெய்டிங்”
“அதான் வந்திட்டேன்ல சொல்லுங்க”
கையசைத்து வெய்ட்ரஸ்ஸை அழைத்தாள் நிர்மலா.
“இப்ப சொல்றேன்” என்றாள்.
கிர்ர்ர்ர் என்று முறைத்தான் செல்வா
எஸ்ப்ரஸோ, காப்புசீனோ, லாட்டே …
“ம்…எது…சீக்கிரம் சொல்லுங்க, பாவம் பொண்ணு நிக்குது பாருங்க” என்று உசுப்பேத்தினாள்.
“இரண்டு லாட்டே, எக்ஸ்ட்ரா ஹாட் சொன்னார்கள்.”
“நல்ல வேளை மகேஷ் தொல்லை ஒழிஞ்சது இன்னிக்கோட. என்கிட்ட ஒன்னும் இல்ல இல்லியா, இனி வரமாட்டான். ஆனா அண்ணி பழைய மாதிரி பேசுவாங்களா தெரியலையே ?!!” என்று நிறுத்தினாள்.
‘அப்பாடா, லைன் க்ளியர்’ என்று மனம் குட்டிக் கரணம் அடித்தது.
“என்னவோ தெரியல செல்வா, மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. யாருகிட்டயாவது பேசினா ரிலாக்ஸ்டா ஃபீல் பண்றேன். அண்ணன் கூட நான் சொல்வதை காதில் போட்டுக்க மாட்டார். இப்ப யாருமே இல்லை, அதான் உங்க கிட்ட … தப்பா எடுத்துக்காதீங்க.”
“ஓ.மை.காட். இன் ஃபாக்ட் சொல்லப் போனா, உங்கள முதன்முதலில் பார்த்தப் இருந்தே எனக்கு பிடித்துவிட்டது. அக அழகு மட்டுமல்லாது, உங்களது செய்லகளும் சேர்த்து. ” “அதனால …”
“அதனால …”
“ஐ லவ் யூ நிர்மலா” என்று அவள் கண்களை நோக்கினான்.
சோகத்தை எல்லாம் மறந்து, வான் நோக்கி, கண்கள் பணித்து, குற்றால அருவியாய் சட சடவென சிரிக்கலானாள் ….
“எனக்கு …ஏற்கனவே ….கல்யாணம் …ஆகிடுச்சுங்க ….செல்வா” என்று சிரிப்பினூடே விட்டு விட்டு சொன்னாள்.
சற்று அமைதியாகி, “ஒரு குழந்தை வேறு இருக்கு”…. என்றாள்
“குழந்தை இப்ப ஒரு காப்பகத்தில் வளருது. யூ வோன் பிலிவ் ஐம் எ மாம் நௌ”, என்று நிறுத்தினாள். உங்களை சந்தித்தது “டூ லேட் செல்வா” என்று அதிசயித்தாள் !!
“மேக மூட்டமா, கொஞ்சம் புரிஞ்சும், கொஞ்சம் புரியாமலும் மாதிரி இருக்கு. அப்போ, அன்னிக்கு ரயிலில் உங்ககூட வாக்குவாதம் பண்ணினவர் உங்க கணவர் ! சரியா ?”
“அவர் இவர்னு, ஏன் மரியாதை எல்லாம் கொடுக்கறீங்க. ஆமா, அவனே தான் !!!”
சாட்டையடி போன்ற தொனியில் நிர்மலாவின் குரல், அவளின் வேதனையை பிரதிபலித்தது.
“நிர்மலா, உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே. அப்படி ஏதாவது பிரச்சனை இருந்தா என்கிட்ட சொல்லுங்க. என்னால் முடிந்த உதவி செய்றேன்”
‘இவன் என்ன உதவி செய்றேன், உதவி செய்றேன் என்று சொல்லிகிட்டே இருக்கான். நம்பலாமா ?’
“என்னை நம்பலாம்ங்கறதுக்கு நான் என்ன உத்திரவாதம் தரணும், சொல்லுங்க” என்றான்.
‘மனதைப் படிக்கிறானே ? எல்லா ஆம்பிளைங்களும் இப்படித்தானே நம் மனதைக் கரைத்துவிடுகின்றனர்’
“ஒன்னும் பிரச்சனை இல்லை செல்வா. எல்லாம் முடிஞ்சு போச்சு.” என்றாள்.
செல்வா விடுவதாய் இல்லை. “இல்லைங்க, உங்க முகம் சொல்லுது பல கதைகள்” என்றான். “சரி, உங்களுக்கு இஷ்டம் இல்லை எனில் நான் தொல்லை பண்ண விரும்பவில்லை” என்று நிறுத்திக் கொண்டான்.
‘பேசணும் என்றும் இருக்கு. ஆனா இவனை எப்படி நம்பறதுனும் இருக்கு. என்ன இது புதுக் குழப்பம்’ என்ற யோசனையில், யார் தோளிலாவது சாய்ந்து அழ வேண்டும் போல் இருந்தது.
முழுக்க அலைந்து, மனமும் தளர்ந்து, உடல் சோர்வுற்று, முறையாக உண்ணாமல், நேரம் தவறி அருந்திய காஃபி, வயிற்றை கலக்கியது நிர்மலாவிற்கு. நெற்றியில் நீர் திரள, கண்கள் இருட்டி மயங்கி விழாத குறை. சில நொடிகள் என்ன நடக்கிதென்றே புரியவில்லை அவளுக்கு.
“செல்வா, எனக்கு என்னவோ போல இருக்கு, ப்ளீஸ், ஒரு டாக்ஸி பிடிங்க, என்ன வீட்டில ட்ராப் பண்ணிடுங்க, ஐ வான் டு டேக் சம் ரெஸ்ட்” என்று சரிந்து விழுந்தாள்.
பட்டென்று எழுந்த செல்வா, கைத் தாங்கலாய் நிர்மலாவைப் பிடித்துக் கொண்டான். பேரர் பெண்மணியிடம், தண்ணீர் கொண்டு வரச் சொன்னான். சரிந்தவளை சற்று நிமிர்த்தி விசிறி விட்டான். எல்லோரும் வேடிக்கை பார்த்தனரே அன்றி, யாரும் எதுவும் உதவி வேண்டுமா எனக் கேட்கவில்லை.
“நிர்மலா, கொஞ்சம் எழுந்திரிங்க … மெதுவா நடந்து வாங்க … இன்னும் கொஞ்ச தூரம் தான், இதோ டாக்ஸி ஸ்டான்ட் வந்திடும்” கைத்தாங்கலாய் அணைத்துச் சென்று, டாக்ஸியிலும் ஏ(ற்)றினான்.
“கொஞ்சம் பின் கண்ணாடி கதவை திறந்துக்கட்டுமா, ஷீ நீட் சம் ஃப்ரெஷ் ஏர்” என்றான் ஓட்டுனரிடம்.
“லில் பிட் ஹான் …” என்று எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் ஓட்டுனர் சொன்னார்.
சடசடவென காற்றடிக்க, மெல்லக் கண்கள் திறந்தாள் நிர்மலா.
வெளியே வானம் பளிச்சென்று இருந்தது.
“செல்வா, தேங்க்ஸ் எ லாட் அன்ட் ஸாரி ஃபார் த ட்ரபில்”
“என்னங்க பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு. இனி ஒரு வாட்டி ஸாரி சொன்னீங்கன்னா, அப்புறம், இப்படியே இறங்கிப் போயிடுவேன்” என்று பயம் காட்டுவதாய் பாவலா காட்டினான்.
“உள்ளூர ரசித்தாள். உடனே அழுதாள்”
கட்டிடங்களும், மரங்களும், மனிதர்களும் பின்னோக்கிச் செல்ல, நிர்மலாவின் நினைவுகளும் பின்னோக்கி பயணித்தது.
“ரொம்ப நாளா மனசுக்குள்ளே வச்சு ஆரப்போட்டுகிட்டு இருந்தேன். முடியல. யாருகிட்டயாவது சொல்லி அழலாம் என்றால் அண்ணன் தான். இப்ப அவனும் அண்ணி பின்னால.”
“நீங்க தைரியமா என் கிட்ட பகிர்ந்துக்கலாம் நிர்மலா. மேல சொல்லலாம் என்றால் சொல்லுங்க என்றான்”
ஃபுல்லர்டன் ஹோட்டலில் கீழ்தளத்தில், “ஹேய்ய்ய்ய்ய்….” என்று ஆட்டம் பாட்டத்துடன் களை கட்டியது அந்த ஆண்டு, அலுவலக ஆண்டு விழாக் கொண்டாட்டம்.
மகேஷ், அப்ப தான் அங்கு சேர்ந்த புதிது. என்னோட பி.எம்.க்கு சொந்தம்னு நினைக்கிறேன். அவங்க ரெண்டு பேருமே வெளியில் அதைக் காட்டிக்கிட்டது இல்லை.
பேரு தான் பி.எம். முழுக்க முழுக்க எங்க கண்ட்ரோல் தான் ப்ராஜக்ட் எல்லாம். அவரும் ரொம்ப ஃப்ரென்ட்லி. நேரத்துக்கு வேலை முடிச்சிட்டோம்னா, மீதி நேரம் ஜாலி தான், அரட்டை தான்.
எங்க டீமே அப்படி இருக்கத பார்த்து மத்தவங்களுக்கு எல்லாம் பொறாமையா இருக்கும். வெளிப்படையாவே சிலர், உங்களுக்கு என்னப்பா கொறைச்சல் என்று ஆதங்கப்படவும் செய்வார்கள்.
மகேஷ் நல்லா ஸ்பான்டேனியசா பேசுவான். அவன் வந்தாலே களை கட்டும். நம்ம கிட்ட பேசிக்கிட்டு இருக்கவங்க கூட, அவன் கூட பேச ஆரம்பிச்சிருவாங்க. நாள் போக, போக எனக்கு ஒரு பொஸசிவ்நெஸ் வந்திருச்சு.
ஆண்டுவிழா அரங்கில், கேம் ஷோவில் பல பெண்களும் அவனுடன் சேர்ந்து நடனமாட பிரியப்பட, எனக்கு ஒரு வேகம் வந்து, அவனைப் பிடிச்சு தர தரனு இழுத்து வெளியே வந்து, சத்தமின்றி (நீண்ட) முத்தமிட்டேன்.
அன்று நிலை குலைந்தவன், எதுவென்றாலும் என்னிடம் கேட்டு தான் செய்வான்.
மகேஷ் பற்றி அண்ணனிடம் சொல்ல. அவருக்கும், அண்ணிக்கும் ரொம்பவே சந்தோசம். தொலைபேசியில் ஜாடையாக சொல்லிய போது, அப்பா, அம்மாவிற்கு துளியும் விருப்பமில்லை. அதனால் கொஞ்ச நாட்கள் போகட்டும் என்றார் அண்ணன்.
நாள் செல்லச் செல்ல இரண்டு வீட்டாரும், அவர்கள் இஷ்டத்துக்கு அலையன்ஸ் பார்த்து ஃபோர்ஸ் பண்ண, இங்கேயே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக் கொண்டோம். இதில் அண்ணனுக்கும், அண்ணிக்கும் துளியும் விருப்பமில்லை.
அடிக்கடி என்னைப் பார்க்க வருகிறேன் என்று, நான் இல்லாத நேரங்களில் கூட வந்து, அண்ணியை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கியிருக்கிறான். ஏதாவது சண்டையில் அண்ணி இதை சொல்லும் போதெல்லாம் அவங்க ஏதோ காரணத்துக்காக இப்படி சொல்றாங்களே என்று, மகேஷ் மேல் துளியும் சந்தேகம் இல்லை.
உறவில் கொஞ்சம் விரிசல் விழ, நேரம் பார்த்து, “நமக்கென்று ஒரு வீடு இருந்தால் நல்லா இருக்குமே” என்றான் மகேஷ். ‘பாசிர் ரிஸ்’ஸில் ஒரு வீடும் வாங்கினோம்.
அங்கு குடிபோன சில மாதங்களில், என் வயிற்றில் ரோஷினியும், மகேஷ் மனதில் மரியமும் வளர்வதை உணர்ந்தேன்.
இவனுக்கு எங்க அலுவலகத்திலேயே இருக்கும், மரியம் கூட முன்னரே தொடர்பு இருந்திருக்குனும் தெரிஞ்சது. ஒரு நாள், செமினாருக்கு போறவன், தற்செயலா என்னோட தொலைபேசிய மாத்தி எடுத்திட்டுப் போக, இவனோடத நான் எடுத்துப் போக வேண்டியதாப் போச்சு.
என் வாய் சொல்லக் கூசுது. அப்படி அசிங்க அசிங்கமா டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பறா மரியம். நான் கூட முதலில் தவறுதலா அனுப்பி இருப்பானு பார்த்தால், மகேஷ், மகேஷ்னு ஒரே உருகல்.
கொஞ்ச நேரத்தில் மகேஷ் கிட்ட இருந்த என் போனில் இருந்து ஃபோன், “நிமி எங்க இருக்க, போன மாத்தி எடுத்து வந்திட்டேன்…. செகன்ட் ஃப்ளோர்ல இருக்கியா, அங்கேயே இரு, நான் வரேன்”.
“பரவாயில்லை, எனக்கு ஒன்னும் ப்ரச்சனை இல்லை, நான் மேனேஜ் பண்ணிக்கறேன்” என்றேன். “ஹிம்ம்ம் … இல்ல இல்ல, இப்பவே வரேன்” என்று பரபரத்தான்.
எல்லாம் தெளிவாகி, என் மன வானில் மேகங்கள் சூழ்ந்து கொண்டது.
முதலில் மறுத்தவன், “இவளுக்கு தெரிஞ்சு போச்சு, இனி மறுத்து இவள் என்ன செய்து விடப் போகிறாள்” என்று தைரியமாய் என்னை எதிர்கொண்டான்.
நடக்கும் யாவையும் அண்ணனுக்கோ, அண்ணிக்கோ சொல்லாமலே இருந்தேன். இது மேலும் விரிசலை தான் ஏற்படுத்தியதே தவிர வேறெதற்கும் உதவவில்லை.
சண்டையும், சச்சரவுமாய் நாட்கள் கழிய, ரோஷிணியும் பிறந்தாள். சரி இனியாவது மகேஷ் சரியாகிவிடுவான் எனப் பார்த்தால், வீட்டிற்கே மரியத்தை கூட்டி வர ஆரம்பித்தான்.
எல்லை மீறி எல்லாம் செல்கையில், “இனி அவளா, நானா ? என்று முடிவு பண்ணிக்க. அப்படி அவ தான்னா, இந்த வீட்ட விட்டு வெளிய போயிடு” என்றேன்.
அங்க ஆரம்பித்தது அடுத்த எரிமலை. “இந்த வீட வாங்கும்போது நானும் காசு போட்டிருக்கேன். நீ வெளியே போ” என்றான்
அவன் பங்கு சொற்ப ஆயிரங்கள். அதைத் தந்துவிடுகிறேன், வெளியே போ என்றதற்கு அவன் ஒத்துழைக்கவில்லை.
உன்னால முடியாது என்றால், என்னாலயும் முடியாது என்று சொல்லி, ஒரு முடிவுக்கு வரும் வரை யாரு இங்க தங்க கூடாது என்று ஆளுக்கு ஒரு பூட்டை போட்டு, நான் என் அண்ணன் வீட்டிலும், என் மகள் காப்பகத்திலும் இருக்கலானோம்.
சந்தர்பம் கிடைக்கும்போதெல்லாம் மகேஷ் தொல்லை தரவே, வேலையை ராஜினாமா செய்தேன். அப்படியும் வெளியில் எங்காவது பார்த்து இம்சித்துவிடுவான்.
இன்னிக்கு தான் அவன் கேட்ட விவாகரத்துப் பத்திரத்திலும், வீட்டுப் பத்திரத்திலும் கையெழுத்துப் போட்டு விட்டு நிம்மதியாய் இருக்கிறேன். இதை முன்னாடியே செய்திருந்தால் கொஞ்சம் எனர்ஜியாவது இருந்திருக்கும்.”
எல்லாம் சொல்லிக் களைத்து, தண்ணி தண்ணி என்று மீண்டும் சரிந்து செல்வாவின் தோளில் சாய்ந்தாள்.
சாயத் தோள் தந்த செல்வா, நீர் தந்து, நிர்மலாவிற்கு நல்ல வாழ்வும் தந்தான்.