வானம் வெளுக்கும்…..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 10, 2013
பார்வையிட்டோர்: 14,394 
 
 

ஒரு பெருமழையின் இடையே பலத்த இடிச்சத்தமும், மின்னலும் வெட்டுவது போல திமு திமுவென்று கீழ்பட்டிக்கு நுழைந்தது ஒரு கூட்டம்.

“ ஏலேய் மருதா.. வெளியே வாடா.. பொட்டச்சிறுக்கிய ஒழுங்கா வளர்க்க மாட்டியா… பவிசு காட்டி பெரிய வீட்டு புள்ளைய மயக்கத்தான் படிக்க அனுப்புறியா..? ஒழுங்கா மரியாதையா கண்டிச்சு வையி.. இனி அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்தோம் அவ்வளவுதான்… இந்த ஏரியாவே இருக்காது…”

கூழை குடித்தாலும் யார் வம்புக்கும் போகாத மருதனுக்கு மேல்பட்டி கும்பலின் எச்சரிக்கை வயிற்றை பிசைந்தது.

“ ராணி என்னாத்தா… அவங்க சொல்றதெல்லாம் நிசமா? இந்த குடும்பத்துக்கு விளக்கேத்துவன்னுதானே உன்ன படிக்க அனுப்புறேன் தாயி..”

“ ப்பா.. செல்வம் ரொம்ப நல்லவர் பா.. “ மென்று முழுங்கினாள்.

“ அடிப்பாவி… அவுங்க சொல்றது நிசமா இருக்கப்படாதுன்னு நான் குலசாமியை கும்பிட்டுக்கிட்டு உன்னைய கேட்டா இப்படி வயித்துல நெருப்ப அள்ளி கொட்டிறியே..”

இது வரை அவளை அடித்திராத அவன் கைகள் கன்னத்தில் பளாரென்று ஓங்கி அறைந்தது. படிக்க அனுப்பினா மாப்பிள்ளைய தேடிக்கிறியா…? கோபத்தில் தலைமுடியை இழுத்து மேலும் இரண்டு அறை அறையவும் கேவிக்கொண்டே சுருண்டாள். சத்தம் கேட்டு எட்டி பார்த்த பக்கத்து வீட்டு பொன்னி, “ என்னன்ணே பொட்ட புள்ளைய இந்த அடி அடிக்குற… ? ஏ மூர்த்தி… சேகரு இந்த கூத்தை வந்து கேளுங்கடா.. ஊரை கூட்டி விட்டாள்.

ஊரை ரெண்டு படுத்தி கலவரத்தை வேடிக்கை பார்ப்பதென்றால் பாண்டிக்கு நாட்டு சரக்கு அடிப்பது போல் விறு விறுப்பு ஏறும். தொடைக்கு மேல் கைலியை ஏத்தி கட்டி தோளில் துண்டை போட்டவன்,

“ சித்தப்பு நீ ஒன்னுத்துக்கும் பயப்படாதே நம்ம புள்ள பின்னால அந்த வீணா போனவன் சுத்திபுட்டு இங்க வந்து சவுண்டு வுடறானா…? நம்ம பங்காளிகளை கூட்டிக்கிட்டு போய் நம்ம பவரை காமிச்சிட்டு வர்றோம் நைனா…”

இருபது முப்பது பேரை திரட்டி கொண்டு மேல் பட்டிக்கு வீச்சறிவாளோடு சேர்ந்தான்.. “ எவண்டா அவன் எங்க கிட்டயே வந்து மோதிட்டு போறது தைரியமா இருந்தா வெளிய வாங்கடா…”

“ மாமா.. இந்த பயல்களுக்கு பதிலடி கொடுக்காம இருந்தா துளிர் விட்டுரும்.. அப்பறம் அவங்க வீட்டு பொண்டுக எல்லாம் நம்ம அடுப்படியில உட்கார்ந்து அதிகாரம் பண்ண ஆரம்பிச்சுடுவாளுங்க..” செல்வத்தின் அப்பாவிடம் உருமிய தினகர் தன் பங்குக்கு இருபது பேரை திரட்டி கலவரம் நடத்தி கொண்டிருந்தான்.

இந்த செய்தி மேல்பட்டி போலிஸ் ஸ்டேஷன் வரை சென்றது . அங்கு புதிதாக வந்திருந்த இன்ஸ்பெக்டர் துரை ரொம்ப கறாரான ஆள்தான். இரண்டு கும்பலையும் அள்ளி கொண்டு வந்தது ஜீப்.

கும்பலை அள்ளி கொண்ட ஜீப் நேராக அந்த மருத்துவமனைக்கு சென்றது. “ என்னங்கடா எப்படியும் ரெண்டு பேரும் ஒருத்தனை ஒருத்தன் வெட்டிக்க போறிங்க வீணா உங்க ரத்தம் மண்ணுல போவ போவுது… அதை விட சாக கிடக்கிற மனுஷனுக்கு கொடுத்து தொலைங்கடா… ஒழுங்கு மரியாதையா எல்லாரும் ரத்தம் கொடுத்துட்டு நாளைக்கு ஸ்டேஷன் வந்து கையெழுத்து போட்டா அனுப்பிடறேன்.. இல்லைன்னா யார் வந்தாலும் உங்களை ஒண்ணும் பண்ண முடியாது உள்ள வச்சி காப்பு காய்க்கிற அளவுக்கு உத பின்னி எடுத்துருவேன்…” இன்ஸ்பெக்டர் துரை மிரட்டவும் துள்ளிய ஒன்றிரண்டு பேரை தட்டினார்.

“ டாக்டர்… இவனுங்க கிட்டருந்து வேணும்கிற அளவுக்கு உறிஞ்சிகிட்டு அனுப்புங்க..”

மறு நாள் இரண்டு கும்பலும் ஸ்டேஷனில் முறைத்து கொண்டு உட்கார்ந்திருந்தது. “ என்னங்கடா இன்னும் முறைப்பா உட்கார்ந்துகிட்டு இருக்கிங்க… ? இந்த பக்கம் முப்பது பேரு அந்த பக்கம் இருபது பேரு.. மொத்தம் அம்பது பாட்டில் ரத்தம் அம்பது உசிரை காப்பாத்தியிருக்கு… ரெண்டு மனசு ஒண்ணா சேர்ந்ததுக்கு எதுக்குடா இத்தன ஆர்ப்பாட்டம்..? எவனும் சாதி பேரை சொல்லி இங்க கலவரத்தை உண்டு பண்ணக்கூடாது. சம்மந்தபட்டவங்க கிட்ட நான் பேசிக்கிறேன்.. அவனவன் வேலைய பார்த்துகிட்டு போங்க…”

“ ஏம்ப்பா இந்த பொண்ணை நீ உண்மையிலேயே நேசிக்கிறியா?”

“ ஆமா சார் ராணி இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது…

“ ஏம்மா நீ என்ன நினைக்கிற?”

“சார் அவரை என் உயிரா நினைக்கிறேன்… ஆனா இந்தளவுக்கு பிரச்சினை வரும்னு நினைச்சு பார்க்கலை…” மருண்டாள்.

“ செல்வம் நீ இப்ப என்ன பண்றே..?”

“ காலேஜ் கடைசி வருஷம் படிச்சிட்டிருக்கேன் சார்.. “

“ நீ கடைசி வருஷம்… அந்த பொண்ணு இரண்டாவது வருஷம் படிச்சிட்டிருக்கு… திடுதிப்புன்னு இந்த நிலமையில நீங்க கல்யாணம் பண்ணிகிட்டா கஷ்டப்படாம வாழ முடியுமா..? காதல் வேகத்துல காதல் மட்டும்தான் தெரியும்…அதுக்குப்பறம் இருக்கிற வாழ்க்கையை யோசிக்க தோணாது. போங்க போய் முதல்ல படிப்பை முடிச்சிகிட்டு உங்க வாழ்க்கையை வாழற அளவுக்கு ஒரு வேலைய தேடிக்கிட்டு வாங்க.. இந்த மூணு வருஷ இடைவெளி உங்களுக்கு உலகம் நிறைய புரியும்… அதுக்கப்புறமும் நீங்க உங்க முடிவுல உறுதியா இருந்தா.. உங்க பேரண்ட்ஸ் சம்மதிக்கலைன்னாலும் நானே இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்…”

கண்ணீரை துடைத்து கொண்டு எதிரெதிர் திசையில் சென்றார்கள்.

“ ஆறுமுகம் நம்ம புது இன்ஸ்பெக்டர் பார்க்க மொறைப்பா இருந்தாலும் மனுஷனா இருக்காருய்யா.. அடிதடியில்லாம மேட்டரை முடிச்சிட்டாரு…” ஏட்டு ஏகாம்பரம் கிசு கிசுக்க,

“ எப்படியோ சாதியை ஒழிக்க முடியுதோ இல்லையோ.. சாதி சண்டையாவது தீர்ந்துச்சே..!..”

மேகம் கறுத்து கொண்டு வந்தது.. சாதியும் அந்த இருட்டுக்குள் என்றேனும் ஒரு நாள் மறைந்து மனிதம் உதிக்கும் என்றே தோன்றியது.

Print Friendly, PDF & Email
உஷா அன்பரசு, வேலூர். கல்வி- M.A தமிழ். இத்தளத்தில் வெளியாகியுள்ள என் சிறுகதைகள் பெரும்பாலானவை பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. என் கதை, கவிதை, கட்டுரை என என் படைப்புகள் வெளிவந்த பத்திரிக்கைகள் தினமலர்-பெண்கள் மலர், வாரமலர், பாக்யா, தேவதை, காலைக்கதிர், ராணி, கல்கி, தங்கமங்கை. மேலும் http://tamilmayil.blogspot.com என்ற என் வலைப்பக்கத்தில் என் படைப்புகள் அனைத்தையும் வாசிக்கலாம். மின்னஞ்சல்: uavaikarai@gmail.com - உஷா அன்பரசு, வேலூர்.மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *