கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: January 1, 2018
பார்வையிட்டோர்: 13,145 
 
 

“ச்சந்த்ரூஊஊஊஊஊஊஊஊ”

இத்தனை ஜனசந்தடியில் எனக்கு அந்த குரல் தெளிவாக கேட்டது. அவள் ஒருத்திதானே என்னை இப்படி அழைத்தவள்.

இப்போது எங்கிருக்கிறாளோ? எப்படியிருக்கிறாளோ?

அவளுக்கும் என்னைப்போல் ஓரிரு நரை விழுந்திருக்குமல்லவா?

அவளுக்கும் என்னைப் போல் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்குமல்லவா?

சென்னையில் அலுவலக வேலையாக வந்தவன் வேலையை முடித்து விட்டு நடைபோட்டவனை அந்தக்குரல் என்னவோ செய்தது.

“ச்சந்த்ருஊஊஊஊ”

இப்போது குரல் மிக அருகில் தெளிவாக கேட்டது.

திரும்பிப் பார்த்தேன். வெண்ணிலா? அவளேதான் எத்தனை வயதானால் என்ன? அந்தக் கன்னத்தில் உள்ள பிறை போன்ற வெட்டுக்காயத்தின் தழும்பு மறக்க முடியுமா?

***

“இங்கப் பாருங்க உங்க பையன் என்ன பண்ணி வச்சிருக்கான்னு,புள்ளையா வளக்குறிங்க?”

எதிர்வீட்டு வெண்ணிலாவின் அம்மா அப்பாவிடம் சண்டை பிடித்துக் கொண்டிருந்தாள்.

கன்னத்தில் ரத்தம் வடிய வெண்ணிலா அழுது கொண்டிருந்தாள். அப்பா வெளு வெளுவென்று வெளுத்து விட்டார்.

“இனிமே கிட்டிப்புல் விளையாடுவியா விளையாடுவியா?”

நான் வாங்கிய அடி கூட வலிக்கவில்லை எனக்கு. வெண்ணிலா அழுததுதான் எனக்கு வலித்தது.

அப்பாவே தன் சைக்கிளில் அவளை உட்கார வைத்து டாக்டரிடம் அழைத்துச்சென்றார், நான்கு தையல் போட்டார்களாம்.

மறுநாள் பள்ளிக்கு வரவில்லை அவள். இரண்டு நாள் கழித்து மெதுவாக என் வீட்டுக்கு வந்தாள்.

அம்மாதான் விசாரித்தாள்.

“இப்ப தேவலாமாடி”

“தேவலாம் அத்த”

என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.

“சாரிடி நிலா”

“பரவால்லடா. வேனுமுன்னா செஞ்ச? நீதான் பாவம் என்னால உங்கப்பாகிட்ட அடி வாங்குன”

“பச்”

“டேய் ச்சந்த்ருஊஊ உன் கணக்கு நோட்ட குடுறா, விட்டுப்போன கணக்குலாம் எழுதிக்கிட்டுத் தரேன்”

“ஏன்டி நிலா அவன்தான் உன் கன்னத்த பேத்தான்ல? அப்பறம் ஏன்டி அவன் கூட பேசுற? அப்பறம் உங்கம்மா திட்டுவா”

“போங்க அத்த. அம்மாவுக்கு வேற வேல இல்லை. வேனுமுன்னு யாராவது செய்வாங்களா?”

வெண்ணிலாவின் குடும்பம் எங்கள் எதிர் வீட்டில் குடிவரும் போது நான் நான்காவது படித்தேன்.
அவளும் நான்காம் வகுப்பு. அதிலிருந்து எங்கள் நட்பு வளர்ந்தது. இப்படியே எங்கள் நட்பு வளர்ந்தது பத்தாம் வகுப்பு வரை.

ஒருநாள் அவளின் அப்பாவுக்கு வேலை மாற்றலாகி வேறு ஊர் போக கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

வெண்ணிலா அழுது கொண்டே விடை பெற்றாள்.

“என்ன மறந்துடாதடா ச்சந்த்ருஊஊ”

***

அதன் பிறகு இதோ என் எதிரில் மூச்சு வாங்க நின்று கொண்டிருக்கிறாள்.

அவளைப் பார்த்தால் யாரும் நாற்பது வயது பெண்மணி என்று சொல்ல மாட்டார்கள்.

மிக அழகாகவே இருந்தாள்.

நான் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் நெற்றி வகிட்டுக் குங்குமம் அவள் திருமணமானவள் என பறைச்சாற்றியது.

“ச்ந்த்ருஊஊஊஊ”

என் நினைவுகளை கலைத்தது அவளின் குரல்.

“என்னடா அப்படி பாக்குற.யப்பா எத்தனை வருசம் ஆச்சு உன்னைப் பாத்து”

“சரி இத்தன வருசம் கழிச்சி எப்படி என்ன நாந்தான்னு கண்டு புடிச்ச?”

“அது சஸ்பென்ஸ். அந்த ரகசியத்தை சொல்லமாட்டேன். ஆனா உன்னோட நடை இன்னும் மாறவே இல்லை. கொஞ்சம் சாஞ்சி சாஞ்சி நடக்குறது. தூரத்துலருந்து நீதானான்னு சந்தேகமா இருந்துச்சி. நீ திரும்புனப்ப கண்பார்ம் பண்ணிக்கிட்டேன்”

“—————”

“ச்சந்த்ருஊஊஊஊ”

“சொல்லுடி”

“நான் பழையமாதிரியே கூப்புடுலமாமுல்ல?”

“தாராளமா. எல்லாரும் ரொம்ப மரியாத குடுத்து குடுத்து ரொம்ப கெட்டு போய்ட்டேன். நீயாவது அப்படி கூப்புடு”

“நீ மாறவே இல்லடா. ஒன்னு சொல்லட்டா?”

“சொல்லு”

” நாப்பது வயசிலும் ஹேண்ட்சம்மாத்தான் இருக்க.அப்படியே மணவறையில உக்கார வச்சா மாப்ளதான்”

“ச்சீ….போடி”

“நிசமாப்பா”

“சரி, நீ எப்டி இருக்க? எத்தன பிள்ளைங்க? உன் லைப் எப்டி இருக்கு?

“ம் நல்லாருக்கேன். இரண்டு பெண்கள். பெரியவள கட்டிக்குடுத்தாச்சி,உனக்கு?”

“இரண்டு பசங்க.படிக்கிறாங்க”

“ஒன்னு சொல்லட்டா ச்சந்த்ருஊஊ?”

“என்ன சொல்லப்போற”

“இதுக்கு மேல என் பர்சனல் லைப் பத்தி கேக்காத. நானும் கேக்கல”

“சரி கேக்கல”

“நம் இந்தியப் பெற்றோர்கள் என்ன நினைக்கிறாங்க தெரியுமா? மகள் கண்ணுக்கு லட்சணமா இரண்டு புள்ளைய பெத்துட்டு, நல்லது கெட்டதுக்கு பட்டுப் புடவை கட்டிக்கிட்டு நகைகளை அள்ளிப் போட்டுக் கிட்டா அவ சந்தோசமா இருக்கான்னு முடிவு கட்டிடுறாங்க”

நான் அவளையே பார்த்தேன்.

“கமான் ச்ந்த்ருஊஊஊ , இன்னைக்கு என்னோட செலவுலாம் உன்னோடதுதான். பணம் நிறைய வச்சுருக்கியா?”

“ஏய் உனக்கு இல்லாததா? என்ன வேணும்?”

“நீ வா உனக்கு நிறைய செலவு வைக்குறேன்.முதல்ல வயித்துக்கு”

உயர்தர ஹோட்டலில் ஒரு மசால் தோசையும் காப்பியும் சாப்பிட்டு விட்டு காச கொடுறா என்று அதிகாரம் செய்தாள்.

“அடுத்து என்னவோ?”

“வா, சொல்றேன்”

பேன்சி ஸ்டோர் ஒன்றில் நுழைந்து கைநிறைய வளையல்கள், பொட்டு கண்மை நகபாலிஷ் என்று வாங்கித்தள்ளினாள்.

“அடுத்து?”

“வா சொல்றேன்”

பிரமாண்டமான துணிக்கடையில் நுழைந்து சிம்பிளாக காட்டன் புடவை ஒன்றை எடுத்தாள்.

அடுத்து நகைக் கடையில் நுழைந்து ஒரு வெள்ளி மோதிரம் வாங்கிக் கொண்டாள்.

“அடுத்து என்னவோ?”

“ஐஸ்க்ரிம்”

ஐஸ்கிரிமை அவள் சாப்பிடும் போது யாரும் பார்த்தால் இவளுக்கு ஒரு மருமகன் இருக்கிறான் என்று சொல்லமாட்டார்கள். ஒரு குழந்தையைப் போல ருசித்தாள்.

“பீச்சுக்கு போலாமா?”

உடனே ஒரு டாக்சி பிடித்தேன்.

கடற்கரையில் ஒருக் குழந்தையைப் போல அலைகளோடு விளையாடினாள். என் மீது தண்ணீரை வாரி இறைத்தாள். கடலை வாங்கி கொறித்தாள். பழங்கதைகளை பேசினாள். எழுந்தாள்

“சரி நேரமாச்சி போலாம்”

“எங்க?”

“நேரா கோயம்பேட்ல என்ன பஸ் ஏத்தி விடுற”

“எந்த ஊருக்கு?”

“அது சொல்லமாட்டேன்,திருச்சி பஸ்ல ஏத்தி விடு.போதும்”.

கோயம்பேடு வந்து திருச்சி பேருந்தில் உட்கார வைத்து தண்ணீர் பாட்டிலும் சில பிஸ்கட் பாக்கட்டும் சில வார இதழ்களும் வாங்கிக் கொடுத்தேன்.

பேருந்து புறப்படும் போது கையசைத்தாள்.நானும் கையை அசைத்தேன். பேருந்து திரும்பும் போது ஒரு பேப்பர் மடிப்பு அவள் கையில் இருந்து கீழே விழுந்தது.

‘அன்புள்ள சந்த்ரு இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருந்தேன். என் பால்ய காலத்தை மீட்டு கொடுத்ததிற்கு மிக்க நன்றி. இதுவே நம் கடைசி சந்திப்பாக இருக்கட்டும்.உன்னை வாழ்க்கையில் திரும்ப சந்திப்போமா என்று நினைத்தேன்.உன்னை சந்தித்து விட்டேன்.அது போதும் எனக்கு.

உன் குழந்தைகளுக்கு என் ஆசிகள்.என் நினைவை இத்தோடு அழித்து விடு.உன் மனைவியை எப்போதும் போல் சந்தோசமாக வைத்துக் கொள்.நாம் இனிமேல் எப்போதும் சந்திக்க வேண்டாம்.அது இருவருக்குமே நல்லதல்ல. நான் எங்கு இருக்கிறேன் என் மொபைல் நம்பர் என்ன, நான் பேஸ்புக்கில் இருக்கிறேனா என்று தேட முயற்சிக்க வேண்டாம் பை.

இப்படிக்கு, உன் தோழி நிலா’.

பேருந்து என் கண்களில் இருந்து மறைந்து போனது.

***

பேருந்தில் பயணித்த வெண்ணிலா தன் மொபைல் எடுத்து பேஸ்புக்கை திறந்து அதில் சந்திரசேகரன் சுப்ரமணியன் என்ற பேஸ் புக் பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளையும் அறியாமல் சந்திரசேகரனின் புரபைல் பிக்சரை அவளது விரல்கள் ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது. அவள் உதடுகள் ‘சந்த்ரூஊஊஊஊஊ’ என்று முணுமுணுத்தன.

*எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு சந்த்ரூவும் எல்லா ஆண்களுக்குள்ளும் ஒரு வெண்ணிலாவும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

– நவம்பர் 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *