(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தெருவில் வந்து கொண்டிருந்த சந்திரன் காதுகளில் அவ்வார்த்தைகள் தெளிவாகக் கேட்டன. அவன் அந்த வீட்டை நெருங்குவதற்குச் சில அடி தூரமே இருந்தது. அவன் காதுகளை எட்டாது எனும் தைரியத்தில் தான் அந்தப் பெண் பேசியிருக்க வேண்டும். அவள் உரத்த குரலில் சொன்னது கணிரென்று அவனுக்குக் கேட்டது.
“அதோ வருகிறாரே அவர் தினசரி இந்த வழியாகப் போகிறார். போகும்போதெல்லாம் இந்தப் பக்கம் பார்த்துக் கொண்டே போகிறார்.”
கதவின் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு, வாசலுக்கு வெளியேயுமில்லாமல் வராந்தாவிலுமில்லாமல், உள்ளும் புறமுமாக நின்று கொண்டு, நீண்ட தலைப் பின்னல் துவள, சிவப்புக் கரையிட்ட கறுப்புப் பாவாடை அலைகளிட, வான்நீல நிறத் தாவணி அழகு செய்ய அப்படியும் இப்படியும் அசைந் தாடிக் கொண்டிருந்த குமரி ஒருத்தி தான் இவ்வாறு ஒலி பரப்பினாள்.
உண்மைதான், அவளைச் சந்திரன் அடிக்கடி – அந்த விதி வழியே போகும்போதும் வரும்போதும், அவ்வீட்டின் முன்னே ஏதாவதொரு போஸில் கண்டு களித்திருக்கிறான். அவள் திடீரென்று இப்படிக் குரல் கொடுக்கத் துணிவாள் என்று அவன் எதிர்பார்த்ததில்லை.
அவள் பேசியது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது என் றால், அதனினும் வியப்பாக எழுந்தது மற்றொரு ஒலிபரப்பு.
“அவர் உன்னை “லவ்” பண்ணுகிறாரோ என்னவோ!”
தனது குரல் எட்ட முடியாத தூரத்தில் தான் அவன் வருவான் என்ற தெம்பிலே ஒருத்தி பேசியதாகத் தோன்றியது.
“ஐயோ, ஐயோ!” என்று கூவி, சின்னவள் – வாசல் நடையில் நின்றவள் – சிரிப்பு வெட்கம், அச்சம் எல்லாம் முகத்திலே படர, ஒரு கையால் தன் வாயைப் பொத்திய பாவம் ரசமான காட்சியாகப்பட்டது சந்திரனுக்கு. அதை ரசிக்காமலிருப்பானா அவன்?
அவள் கண்கள் அவன் பக்கம் மோதி, வீட்டின் உள்ளே, வராந்தாவிலிருந்த மாடிப் படிக்கட்டின் பக்கம் புரண்டன. அவள் பார்வை நயம் நிறைந்ததாக இருந்தது.
இதற்குள் அவன் அவ்வீட்டருகே வந்து விட்டான். மாடிப்படியில் ஜம்மென வீற்றுத் தங்கையின் பேச்சுக்குக் கேலியாகப் பதில் சொன்ன பெரியவள் அவன் பார்வையில் நன்றாக விழுந்தாள். அதே சமயம், “இவளை லவ் பண்ணுகிற வனின் மூஞ்சியை நாமும் பார்த்து வைக்கலாமே” எனும் ஆசையால் தூண்டப்பட்டவள்போல, கதவருகே வந்து, தங்கையின் பக்கம் நின்று எட்டிப் பார்த்தாள் இன்னொருத்தி – சின்னவளின் இரண்டாவது அக்கா.
அந்நேரத்தில் அம்மூன்று பேரின் முகங்கள் காட்டிய சித்திரமும் கண்களின் போக்கும் விந்தைக் காட்சிகளாகத்தான் அமைந்தன.
மாடிப்படியில் கொலுவிருந்த பெரிய அக்காள், தங்கையால் குறிப்பிடப்பட்டவன் இவனா என்று அறிந்ததும் குழப்ப முற்றாள். கேலி செய்யும் குஷியில் மலர்ந்திருந்த அவளது உருண்டை முகமும், மல்கோவாக் கன்னங்களும் இப்போது ரத்தமேறிச் சிவந்திருந்தன. அவன் கண்களைத் தொட்ட அவளது மையுண்ட விழிகள் சுடரிட்டு மின்னிப் பின் தாழ்ந்தன. பெரிய முட்டைகோஸ் போன்ற அவள் முகம் சற்றே தணிந்தது.
வாசலின் பக்கமாக எட்டிப் பார்த்த சின்ன அக்கா, அவனைக் கண்டதும், இருட்டில் திரிகின்ற சிறு பூச்சி பிரகாசமான வெளிச்சத்தால் தாக்குண்டதும் திணறித் திண்டாடுவது போல் திகைத்தாள். தங்க விளிம்புக் கண்ணாடிகளுக்குள் கயலெனப் புரண்ட கண்கள், அவனைக் கூர்ந்து நோக்கின. அவளது வெள்ளை முகத்தின் ஒட்டிய கன்னங்கள் மேலும் வெளிறுவது போல் தோன்றின. சட்டெனப் பின் வாங்கி அவள் உள் வாசலின் நடைப்படி மீது அமர்ந்தாள்.
இவ்வளவையும் சந்திரன் கண்கள் விசாலப் பார்வையால், ஒரே கணத்தில் – அவை நிகழும் நேரத்திலேயே – கிரகித்துக் கொண்டன.
இப்போதும் அவன் சிரித்த முகத்தோடு அம்மூன்று பேரை யும் பார்த்தவாறு நடந்தான். அவர்களில் இருவர் பேச்சையும் அவன் ரசித்ததால் உண்டான மகிழ்ச்சி அவன் உதடுகளில் முறுவல் தீட்டியிருந்தது. கண்களில் பேசியிருக்கலாம்.
“ஐயோடி! ஏன் நீ அப்படிச் சொன்னே? அவர் காதில் விழுந்திருக்கும். அவர் சிரித்துக்கொண்டே போகிறார்” என்றாள் தங்கை.
அந்த வீட்டைக் கடந்துவிட்ட சந்திரன் காதில் இதுவும் தெளிவாக விழுந்தது. மறுபடியும் பெரிய அக்காள் கிண்டலாக ஏதாவது சொல்லுவாள் என்று எதிர்பார்த்த அவன் ஏமாந்தான்.
சந்திரனின் மனம் அம்மூன்று பேரையுமே சுற்றிக் கொண்டிருந்தது. இந்தப் பெண்ணுக்குக் கண்கள் தான் வெகு அழகு. கனவு காண்பது போன்ற ஒவியக் கண்கள். ஏதோ போதையில் கிறங்கி நிற்பனபோல் தோன்றும் சொக்கழகு விழிகள்” என்று முன்பு பல முறை கொடுத்த சர்ட்டிபிகேட்டை மீண்டும் படித்தது. “பாவாடை தாவணி இவளுக்கு எடுப்பாக, எழிலாக இருக்கிறது. இந்தப் பெண் நெட்டையாக வளரக்கூடும். அவள் உடல்வாகு அப்படித்தான் தோன்றுகிறது” என்றும் மனம் பேசியது.
அந்தப் பெண்ணை மட்டும் தான் அவன் அடிக்கடி பார்த்தான் என்பதில்லை. “உன்னை லவ் பண்ணுகிறாரோ என்னவோ” என்று சொன்னாளே பெரிய அக்காள், அவள் கூடத்தான் அவன் பார்வையில் அடிக்கடி பட்டிருக்கிறாள்.
அவளும் அவனை விளையாட்டாகவும், ஈடுபாட்டுடனும் பார்த்திருக்கிறாள். ஜன்னலின் உட்புறத்தில், அல்லது வராந்தா வில் உள்ள மாடிப்படிமீது உட்கார்ந்திருப்பாள். அநேகமாக, ரோஸ் கலர் பட்டு அல்லது பச்சை நிறப்புடைவை – அழுத்த மான வர்ணமுடைய பட்டாடைதான் – கட்டியிருப்பாள். “இவள் முகம் பம்ப்ளிமாஸ் பழம் மாதிரி இல்லாமல் இருக்குமானால், மூக்கு கொஞ்சம் நீளமாக இருந்திருக்குமானால், இவள் அழகு இன்னும் சோபிக்கும்” என்று அவன் எண்ணுவது உண்டு.
இன்னொரு அக்காள் இருக்கிறாளே, அவள் சுவாரஸ்யமான “கேரக்டர்”. சரியான கன்னங்களும் எடுப்பான மூக்கும், சின்னஞ் சிறு வாயும், அழகு தரும் தங்க விளிம்புக் கண்ணாடியும், ஒல்லியான தோற்றமும் கொண்ட அவள், அவன் பார்க்க நேரிட்ட வேளையில் எல்லாம் கறுப்பு நிறப் பட்டாடையில் தான் காட்சி தந்தாள். கரையும், தலைப்பும் மாறி இருக்கலாம். கலர் என்னவோ எப்பொழுதும் கறுப்புத்தான். அது அவளுக்கு அமைவாகவும் இருந்தது.
அவள் சோகமுலாம் பூசிய சித்திரமாகத் திகழ்ந்தாள். அவள் கண்களின் ஆழத்திலே இனம் கண்டு கொள்ள முடியாத ஏதோ ஒரு சோகம், கோயில் கர்ப்பக் கிருகத்தின் ஒளி விளக்குப் போல, மினுமினுத்துக் கொண்டிருந்தது. அவள் முகம் காலை ஒளியில் குதூகலிக்கும் புது மலர் போல் மிளிர்வதை அவன் ஒருபோதும் கண்டதில்லை. மாலை நேரத்தில் சற்றே வாட்டமுற்றுக் காணப் படும் அழகுப் பூ அந்திப் பொன் வெயிலில் மினுமினுப்பது போல், சோகமயமான வசீகரத்தோடு தான் அவள் வதனம் சதா காணப்படும். அவள் ஓயாது படித்துக்கொண்டிருப்பாள். புத்தகமும் கையுமாகக் காணப்படாத வேளைகளில் பிரமாத சிந்தனையில் ஆழ்ந்திருப்பவள் போல் தென்படுவாள்.
அவளையும் அவன் அடிக்கடி பார்த்திருக்கிறான். அவள் பஸ்ஸிலிருந்து இறங்கி வரும்போது – பஸ்ஸ”oக்காகக் காத்து நிற்கையில் – ஓடும் பஸ்ஸின் ஓர் ஒரத்தில் – நடைபாதையில் எதிரே – எந்தெந்த நேரத்தில் எல்லாமோ அவளை அவன் பார்க்க முடிந்திருக்கிறது. வீட்டிலும், அவள் தனிமையில், தானும் தனது எண்ணங்களுமாய் உட்கார்ந்திருப்பதைக் கவனித்திருக்கிறான். அப்பொழுதெல்லாம் அவளது நீளிமைகள் மேலேறி, விழிகள் விசாலமாகி, பார்வை அவன் முகத்தைத் தொட்டு, மீண்டும் மைச் சிமிழ் மூடிக்கொண்டது போல் இமை தணிந்து கொள்வதையும் கவனித்திருக்கிறான்.
அம்மூன்று பெண்களையும் பார்த்து ரசிப்பதனால் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “அழகுக் காட்சிகளைக் காண்பதில் என்ன தவறு?”
பார்ப்பது குற்றமற்ற பொழுது போக்கு என்ற தன்மையில் தான் அவன் அவர்களைப் பார்த்து வந்தான். அவர்களும் ரசித்துப் பார்த்து மகிழ்ந்ததனால் அதன் சுவையும் அதிகப் பட்டது. அவ்வளவுதானே தவிர, “லவ்” என்கிற எண்ணமே அவனுக்கு எழுந்ததில்லை. அதாவது, பெரியக்காள் குரல் கொடுக்கிற வரை!
– இம்மூவரில் யார் மீது எனக்கு ஆசை? மூவர்மீதும் ஆசை உண்டு என்றால், யார் பேரில் அதிகமான ஆசை? இதுவரை யார் மீதும் லவ் ஏற்படவில்லை என்றால், இனி இம் மூவரில் யாரை லவ் பண்ணலாம்?. இந்த விதமான எண்ண அலைகள் மோதலாயின.
அப்பெண்களும் அவனைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும். பேச விரும்பாத எண்ணங்களை ஒவ்வொருவரும் தனிமையில் வைத்து மனம் பாண்டி ஆடிக் களித்திருக்க வேண்டும். இது அவர்கள் செயலிலிருந்து நன்கு புலனாயிற்று.
பெரிய அக்காள் விளையாட்டாகப் பேச்சு ஒலிபரப்பிய தினத்துக்குப் பிறகு, ஒவ்வொரு நாளும் அம்மூவரும் சந்திரனின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கிக் கார்த்திருப்பதும், அவன் தூரத்தில் வரும்பொழுதே எவளேனும் ஒருத்தி “அவர் வாறார்” என்று குரல் கொடுப்பதும், உடனேயே அவர்கள் தத்தமக்கு வசீகரமான இருக்கை நிலை என்று படுகிற போஸில் உட்கார்ந்து கொலு பொம்மைகள் போல் காட்சி கொடுப்பதும் சகஜமாயின. அவன் போகிறபோதே அவர்களைப் பார்ப்பான். ஒவ்வொருவர் முகத்தையும் அவன் கண்நோக்கு தொடும். அவர்கள் கண்கள் தனித்தனியே அவன் பார்வையோடு உறவாடும். மற்றப்படி எவ்விதமான சலனமுமிருக்காது. அவன் போவான், அவர் களைத் தன் எண்ண ஊசலில் வைத்து இஷ்டம்போல் ஆடவிட்டபடி, அவர்கள் இருப்பார்கள் – அவனைப் பற்றிப் பேசியும், பேச விரும்பாத நினைவுகளை எண்ணத்திலிட்டுத் தாலாட்டி மகிழ்ந்தும் பொழுது போக்கியபடி.
சிலசமயம் மூவரில் ஒருத்தி மட்டுமே காணப்படுவாள். அப்பொழுது அவள் அதிக ஈடுபாட்டுடன் பார்ப்பதாக அவனுக்குத் தோன்றும்.
பெரியவள் கண்களில் விஷமம் ஒளிரிடும். அவள் இதழ்க் கடையில் சிறுசிரிப்பு சுழியிடுவதுபோல் தோன்றும். அவள் சிரிக்கிறாளா இல்லையா என்று தீர்மானிகிக இயலாது அவனால். “நாமும் பதிலுக்குச் சிரித்து வைக்கலாமே என்ற ஆசை குமிழ்விடும். சங்கோஜம் அதன் மண்டையிலடித்து ஒடுக்கும்.
சின்ன அக்காள் “ஸிரியஸ் திங்கர்” போல்தான் பார்த்திருப் பாள். கண்களில் சிறு பொறியும், கன்னங்களில் ஒரு வர்ணமும், முழு முகத்தின் தனி மலர்ச்சியும் பார்ப்பதிலும் பார்க்கப் படுவதிலும் அவளுக்கு மகிழ்ச்சியே என்பதை விளம்பரப் படுத்தும்.
கனவு காண்பது போன்ற கண்களை உடைய சிறு பெண் நேராகவே பார்த்து, அழகாகப் புன்னகை புரிவதை வழக்க மாக்கிக் கொண்டாள். அவன் தன்னைத் தான் பார்க்கிறான் . தன்னை மட்டுமே பார்த்து மகிழ்கிறான் – என்ற நம்பிக்கை அவளுக்கு. அதனால், அவள் அவன் வரும் பாதையில் எதிர்ப்பட நேர்ந்தால், அவனுக்கு நேர் எதிராக நடந்து வந்து, அருகுற்றதும் அவனைக் கண்ணினால் தீண்டி சிறிது விலகி அவனுக்குச் சமீபமாக நடந்து போவாள். அவள் திரும்பிப் பார்ப்பாள் என அவன் உள்ளம் சொல்லும். அவள் திரும்பி நோக்குகிறாளா என்று கவனிக்கும்படி அவன் உணர்வு தூண்டும். அவள் உள்ளமும் உணர்வும் அவ்வாறே பேசித் தூண்டிவிடும் போலும்! அவன் திரும்புகிற அதே நேரத்தில் அவள் முகமும் திரும்ப, கண் பார்வைகள் மோத, உதட்டிலே ஆனந்தச் சிரிப்புத் துள்ளும். அவளைப் பொறுத்தமட்டில், அவளுக்குச் சந்தேகமே கிடையாது – அவன் அவளைத்தான் காதலிக்கிறான் என்பதில்.
சந்திரன் உள்ளம் அப்படிச் சொல்லவில்லையே! நாட்கள் ஒடிக்கொண்டிருந்தன. “குற்றமற்ற பொழுது போக்கு இனிமை யாக வளர்ந்து கொண்டுதானிருந்தது. வெறும் பார்வையோடு அது நின்றதே தவிர, உரையாடல் எனும் அடுத்த கட்டத்தைத் தொட முயலவில்லை அவர்கள் உறவு.
சில சமயங்களில், பெண்கள் – அவர்கள் மூன்றுபேர் இருந்தது மிகச் செளகரியமாக இருந்தது – அவன் வருவதைக் கண்ட உடனேயே ஒருவரை ஒருவர் பார்த்து கிண்கிணி ஒலி ஆர்க்கும் சிரிப்பைக் கொட்ட முடிந்தது. சிலவேளை, பெரியவள் சிரிப்பை உதிர்ப்பாள். இரண்டாமவள் புன்னகை புரிவாள். தங்கச்சி வெட்கத்தோடும், களிப்போடும் “உகுங். குகுகூங்” என்று மணிப்புறாச் சிரிப்பை நழுவவிடுவாள்.
அவனைப் பார்த்துவிட்டு, அவர்கள் தங்களுக்குள் பார்வை பரிமாறி இப்படிச் சிரிப்பதனால், இச் சிரிப்பின் அர்த்தம்தான் என்ன?” என்ற ஐயம் அவனுக்கு எழ வகை ஏற்பட்டது. “கேலி செய்கிறார்கள் போலும்!” என்று அவன் மனம் கருதியது.
அவர்கள் கேலியாகச் சிரித்தால்தான் அவன் என்ன செய்ய முடியும்? அவனும் யாராவது நண்பனோடு போனால், நண்பனை பார்த்துச் சிரிப்பதுபோல் சிரிக்கலாம். அவனோடு பேசுவதுபோல், கிண்டலாக ஏதேனும் சொல்லலாம். ஆனால், எப்போதும் அவன் தனியாகத்தானே போய் வந்துகொண்டிருந் தான் “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று அவர்களைப் பார்த்துக் கேட்க முடியுமா? “அயோக்கியன்! வீட்டுத் திண்ணையிலிருக்கும் பெண்களோடு வம்பாட முயலும் வீணன்” என்று அவர்களும் மற்றவர்களும் சண்டைக்கு வந்து விடுவார்களே? தனியாகத் தானே பதிலுக்கு அவர்களைப் பார்த்துப் பல்லிளித்துப் பழிப்புக் காட்டலாம். “பைத்தியம்! குரங்கு!” என்று அவர்கள் பரிகசிக்கக் கூடுமே! ஆகவே, அவன் மெளனமாக நடக்கும் இயல்பையே அனுஷ்டித்து வந்தான்.
ஒரு நாள் பகலில், மூவரில் இளையவள் வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்தாள். அவசரமாகப் படிகளில் தாவி, தெருவில் குதித்த சமயத்தில் சந்திரன் அவளுக்கு நேரரே வர நேர்ந்தது. அவன் வேகமாக விலகிக் கொண்டான். இல்லையெனில், அவள் அவன்மீது மோதியிருப்பாள். அவளுக்கு வெட்கமும் குழப்ப மும் ஏற்பட்டன. அவன் சிரித்துக்கொண்டே போய்விட்டான்.
அன்று சந்திரன் மறுபடியும் அவ்வீதி வழியே போகும் போது, அம்மூன்று பெண்களும் கொலுவிருப்பார்கள் என்று எதிர்பார்த்தான். ஏமாறவில்லை. அவன் எதிர் பாராததும் நிகழ்ந்தது.
தங்கச்சி அன்றைய நிகழ்ச்சியை அக்காள்களிடம் சொல்லியிருக்க வேண்டும். சந்திரன் அருகே வரவும் அவள் தலையைத் தாழ்த்தி, கடைக்கண்ணால் பார்ப்பதில் ஆர்வம் காட்டினாள். சின்ன அக்காள் அவன் முகத்தில் விடுபடாத எந்தப் புதிருக்கோ விடை தேடுவதுபோல், கூரிய பார்வையை பதித்தாள். பெரிய அக்காள் சிரித்துக் கொண்டே, பேசேண்டி, கலா. வாய் திறந்துதான் பேசேன்” என்று தங்கச்சியைச் சீண்டினாள். சின்னவள் முகம் சிவக்க, கைவிரல்களால் கண்களை மூடிக் கொண்டாள். அவ்வளவு நாணம்!
“கலாவா இவள் பெயர்? ஆகவே, ஒருத்தி பெயர் தெரிந்துவிட்டது” என்று மகிழ்வுற்றான் சந்திரன். மற்றவர்கள் பெயரை அறிவது எப்படி? அவன் பெயரை அவர்களுக்கு அறிவிப்பதுதான் எவ்வாறு? பரஸ்பரம் அறிமுகம் செய்து வைப்பதற்குத் தோழியோ, தோழனோ இல்லையே!
“நான் இவர்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசித்தால், இவ்வளவு கஷ்டமோ கவலையோ ஏற்படாது, அவர்களாகவே அறிமுகம் செய்துகொள்வார்கள். படிப்பதற்குப் பத்திரிகை வேண்டும்; கதைப் புத்தகம் இருந்தால் கொடுங்களேன் என்று தொடங்கி, நாளடைவில் தொல்லையாகக் கூட மாறிவிடு வார்கள். இப்போது தெருவில் போய் வந்துகொண்டிருக்கிற ஒருவனோடு அவர்களாகவே எப்படி வலியப்பேச முடியும்? அல்லது, தெருவோடு போகிறவன்தான் தெரியாத பெண்க ளோடு திடுமென்று எப்படிப் பேச்சை ஆரம்பிக்க முடியும்?” என்று சந்திரன் கருதினான்.
ஆகவே, புதுமை எதுவும் காணாமலே காலம் ஒடிக் கொண்டேயிருந்தது. காலம் இறக்கை கட்டிப் பறப்பதுபோல் ஒடியது.
மூன்று பெண்களில் யாரை அவன் காதலித்தான்?
தன்னைத்தான் என்று மூவரில் ஒவ்வொருத்திக்கும் தனித்தனியே எண்ணம் வளர்ந்தாலும் கூட மூன்று பேரும் சேர்ந்திருக்கும்போது – அவன் அவர்களைப் பார்த்தவாறே போவதைக் கவனிக்கையில் – இந்தச் சந்தேகம் இயல்பாகவே தலைதூக்கியது அவர்கள் மத்தியில். இதற்கு விடை அவன் அன்றோ தரவேண்டும்? உண்மையில் சந்திரனுக்காவது உரிய விடை தெரியுமா?
தெரியும் என்று நிச்சயமாகச் சொல்லி விட முடியாது அவனால், அவனுக்கே அது சரியாகப் பிடிபடவில்லை இன்னும், ஒவ்வொரு வகையில் ஒவ்வொருத்தி சிறப்பான வளாகத் தோன்றினாள். சில சில காரணங்களால் ஒவ்வொருத்தி மீது விசேஷமான கவர்ச்சி தனக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அவனுக்குத் தோன்றியது. தனித்தனியாக நினைவு கூர்ந்தாலும், மூவரில் ஒவ்வொருத்தியும் அவனது மன அரங்கிலே பளிச்சென முன் வந்து நின்று, அவன் எண்ணமும் ஆசையும் தன்மீதே அதிகம் படிந்திருக்கின்றன என்று உறுதிப்படுத்த முயன்றாள். மூவரோடும் பேசிப் பழக வாய்ப்புகள் கிட்டியிருந்தால், அவனது ஆசைக்கொடி தனி ஒருத்தியைச் சுற்றிப் படர்ந்திருக்கக் கூடும். இப்போது அது மூன்று சிறு சிறு சுருள்களாகி ஒவ்வொருத்தியை யும் தொட்டுப் பிடித்து ஒட்டிக் கொள்ள ஊசலாடிக் கொண்டிருந்தது.
மாதங்கள் வருஷங்களாக ஓடினாலும் அவர்கள் நட்பு இந்நிலையிலேயே தான் நின்றிருக்கும். சந்திரனின் சுபாவம் அப்படி. அவனுக்குச் சங்கோஜம் அதிகமிருந்ததோடு, காதல் பாதையில் தானாகவே முன்னேறுவதற்கு வேண்டிய துணிச் சலும், செயலூக்கமும் கிடையாது. அவனோடு கண்ணாமூச்சி ஆடிக் களித்த மூன்று பெண்களுக்கும் சங்கோஜம் இல்லை என்றாலும், நாமாக எப்படித் துணிவது என்ற தயக்கம் இருந்தது. அதனால் தேக்கமே நிலைபெற்றிருந்தது.
காலத்துக்கே இது பொறுக்கவில்லை போலும். இதில் ஒரு சுவையான திருப்பம் காண அது ஒரு சந்தர்ப்பத்தைச் சிருஷ்டித்து விட்டது.
ஒருநாள், வழக்கம்போல் அந்த வீதி வழியே சந்திரன் வருகின்ற வேளையில் அவ்வீட்டு வராந்தாவில் மூன்று பெண்களும் இருந்தார்கள். அதிகப்படியாக வேறு ஒரு பெண்ணும் இருந்தாள். இவள் சின்ன அக்காளின் சிநேகிதியாக இருக்கலாம். ஆனால் அவளைவிட உற்சாகம் மிகுந்தவளாக – துள்ளலும் துடிப்பும் நிறைந்தவளாக – அடிக்கடி மணிச் சிரிப்பைச் சிந்துபவளாகக் காணப்பட்டாள்.
“வனஜா, இப்போ ஒரு வேடிக்கை பாரேன்!” என்றாள் பெரியவள்.
“என்ன வேடிக்கை?” என்று அவள் ஆவலாக விசாரித்தாள்.
“அதோ வருகிறாரே…”
அக்காள் தன்னைப் பரிகாசம் செய்யப் போகிறாள் என்று பயந்த கலா, “அக்கா! உஸ்ஸ்” என்று ஒற்றை விரலால் வாயை மூடிச் சைகை செய்தாள்.
அதற்குள் சந்திரன் அருகே வந்துவிடவும், அவர்கள் பேச்சு தடைப்பட்டுவிட்டது. அவன் ஒவ்வொருவர் முகத்திலும் விழி பதித்தவாறே மெதுவாக நடந்தான். அவர்களும் அவனைப் பார்த்தார்கள். பெரியவள் உரக்கச் சிரித்தாள். உடனே அவள் சகோதரிகளும் சிரிப்பை இணைய விட்டார்கள். புதிய தோழி சிரிக்காமல், ஒன்றும் புரியாதவளாய், அவனை வியப்போடு கவனித்தபடி இருந்தாள்.
அவன் சிறிது நகர்ந்ததும் அவள் கேட்டாள், “ஏன் ஜானகி சிரித்தாய்?” என்று. பதில் எதுவும் கிடைக்காததால், ”சாவித்திரி, உங்க அக்கா ஏண்டி இப்படிச் சிரிக்கிறா? ஏன் என்ன விஷயம்?” என்று விசாரித்தாள்.
அவள் பேச்சு சந்திரன் காதுகளில் நன்றாக விழுந்தது. “ஒகோ, பெரியவள் பேர் ஜானகியா? கண்ணாடிக்காரி தான் சாவித்திரி போலிருக்கு” என்று அவன் நினைத்தான். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு அவர்கள் பெயரை அறிந்துகொள்ள முடிந்ததில் அவனுக்கு ஆனந்தமே ஏற்பட்டது.
ஆயினும் ஒரு வேதனையும் எழுந்தது. அவர்கள் ஏன் அப்படிச் சிரிக்கிறார்கள்? என்னைக் கேலி செய்யும் விதத்திலா? அல்லது சும்மா விளையாட்டாகத்தானா?” என்று அவன் மனம் வருத்தப்பட்டது. பெரியவள் தன்னைப் பற்றித் தங்கள் சிநேகிதியிடம் கிண்டலாகப் பேசிக் களைப்படைவதை அவனால் கற்பனை பண்ண முடிந்தது. அதனால் அவன் உள்ளம் கனன்று, “மூதேவிகள்! தெருவில் உட்கார்ந்து சிரிப்பு வாழுதோ?” என்று முணுமுணுத்தது.
அவர்களோடு பேசி, அவர்களில் ஒருத்தியைக் காதலிப்பதாகக் காட்டிக் கொண்டிருந்தால் அவர்கள் இவ்வாறு நடந்திருக்கமாட்டார்கள் என்றும் சந்திரன் எண்ணினான். இப்போது கூட அவனால் தீர்மானிக்க முடியவில்லை, யார்மீது அவனுக்கு ஆசை என்று. காதலிப்பது என்றால் அம் மூவரில் யாரைக் காதலித்து அவன் கல்யாணம் செய்துகொள்ள விரும்புவான்? தெரியாது. தெரியாதுதான். திடீரென்று மூன்றுபேரும் பேசித் திட்டமிட்டுக் கொண்டு, சேர்ந்து அவன் முன் நின்று “எங்களை இவ்வளவு காலமாக ஆர்வத்தோடு பார்த்து வருகிறீர்களே; எங்களில் யார்மீது உங்களுக்கு ஆசை? என்று கேட்கத் துணிந்திருந்தால், அவனுடைய பதில் “முழித்தல் ஆகத்தான் இருக்கும்!
மூன்று பேரும் அழகாகத்தான் காட்சி அளித்தார்கள். மூவரைப் பார்க்கும் போதும், மூன்றுபேரைப் பற்றி மொத்தமா கவும் தனித்தனியாகவும் எண்ணும் போதும், இன்பம் அவன் உள்ளத்தில் கொப்பளித்துப் பாயத்தான் செய்தது. அதற்காக மூன்று பேர் மீதும் அவனுக்குக் காதல் என்று சொல்லிவிட முடியுமா? ஒருவன் மூன்று பெண்களை ஒரே சமயத்தில் காதலிக்க முடியுமா?
இத்தகைய விசித்திரமான கேள்விகள் அவன் சிந்தனையில் அலைபாய்ந்த போதிலும், அவற்றுக்கான சரியான விடையைக் கண்டாக வேண்டிய அவசியம் எதுவும் அவனுக்கு ஏற்படவே யில்லை. அதற்கு மாறாக, அவனுடைய மனக்குழப்பத்தைத் தீர்ப்பதற்கு ஒரு சுலபவழி தானாகவே ஏற்பட்டு விட்டது.
மறுநாள், பஸ் நிற்குமிடத்தில் சந்திரன் வனஜாவைப் பார்க்க நேர்ந்தது. அவள் “ரொம்பவும் தெரிந்தவள் போல” அவனை நோக்கிப் புன்னகை பூத்தாள். அதற்கு அடுத்த நாள் அவன் ரஸ்தாவில் நடந்து வரும்பொழுது, தற்செயலாக வனஜாவும் வரநேரிட்டது. அவள் மறுபக்கம் போகவில்லை. முன்னே பின்னே செல்ல விரும்பவுமில்லை. தள்ளி நடக்கவுமில்லை. அவன் கூடவே வருகிறவள் போல, அவனுக்கு அருகிலேயே நடந்து வரலானாள். அவளுக்குச் சிரிப்பு அள்ளிக்கொண்டு வந்தது. ஆனால் அவள் வாய்விட்டுச் சிரிக்கவில்லை. அவன் திரும்பி அவளை நோக்கும்போது, அவள் தரையைப் பார்த்தாள்; அல்லது நேரே நோக்கினாள். “இவள் ஒரு இன்ட்டரஸ்டிங் கேரக்டர் போலிருக்கு!” என்று தான் அவனால் எண்ண முடிந்தது.
சந்திரனுக்கு அம்மூன்று பெண்களுடன் – அல்லது, அவர்களில் ஒருத்தியுடனாவது – பேசிப் பழக வேண்டும் என்ற ஆசை இருந்தும், அதற்கு வேண்டிய மனத்தெம்பு இல்லை. அப் பெண்களும் அதே நிலையில் தான் இருந்தார்கள். அவர்களாகப் பேச்சுக் கொடுக்கட்டுமே என்று அவன் நாளோட்டினான். “அவர் ஏன் பேசுவதில்லை? அவராகப் பேச ஆரம்பிக்கிறாரா இல்லையா, பார்ப்போமே!” என்று அவர்கள் காத்திருந்தார்கள்.
இரண்டு கட்சியிலும் காணப்படாத துணிச்சலும், செயலூக்க மும் தோழி வனஜாவிடம் மிகுதியாக இருந்தன. அவன் பேசட்டுமே என்று அவள் காத்திருக்கவில்லை. பேசுவதற்குரிய வாய்ப்புக்களை அவளாக சிருஷ்டித்துக்கொள்ளத் தயங்கவு மில்லை.
பஸ் நிற்குமிடத்தில் அவள் நிற்கையில் அவன் எதிர்ப் பட்டால், எந்த நம்பரையாவது குறிப்பிட்டு, அது எப்படிப் போகும்?” என்று கேட்டாள். அல்லது “இது இந்த இடத்துக்கு இன்ன வழியாகத்தானே போகிறது?” என்ற மாதிரி எதையாவது விசாரித்தாள். தெருவில் வந்தால், தபால் வர நேரமாகுமோ? தபால்காரர் வருகிறாரா?” என்று எதையாவது கேட்பாள். இப்படி அவளாகவே ஆரம்பித்து, உற்சாகமூட்டி, அவனையும் பேசுகிறவனாக மாற்றிவிட்டாள்: அப்புறம் அவர்கள் சேர்ந்து காணப்படலாயினர். ஒட்டல், சினிமா தியேட்டர், கடலோரம், பஸ் நிற்குமிடம் என்று பல இடங்களிலும் தான்!
அப்புறம் என்ன? சந்திரனுக்கு யாரைக் காதலிப்பது என்ற பிரச்னை எழ இடமே இல்லாமல் போய்விட்டது. வெறுமனே பார்ப்பதிலும், முகம் மலரப் புன்னகை புரிவதனாலும் காதல் வளர்ந்துவிடாது; காதல் கொடி வளர்ந்து மனோரம்மியமான புஷ்பங்களைப் பூத்துக் குலுக்குவதற்கு நாமும் முயற்சி எடுத்து, சிரத்தை காட்ட வேண்டும் என்பதை நன்கு அறிந்தவள் வனஜா. காதலை வளர்க்கும் கலை கைவரப் பெற்ற அவளே அதைக் கவனித்துக் கொண்டதால், அவனுக்குப் பொழுதெல்லாம் பொன்னாக மாறிவந்தது.
ஊரறியும் விஷயமாக வளர்ந்துவிட்ட ஒன்றும் அம்மூன்று பெண்களுக்கு மட்டும் தெரியாமல் போருமா என்ன? “அவன் வஞ்சித்துவிட்டான். சரியான ஏமாற்றுக்காரன். வனஜா சுத்த மோசம்..!” என்று ஒவ்வொருத்தியும் எண்ணினாள். ஆனாலும், பெரியவளான ஜானகி தங்கை கலாவை கிண்டல் செய்வதில் தனது ஏமாற்றத்தை மறைக்க முயன்றாள். “என்னடி கலா, உன்னை லவ் பண்ணினவர் இப்பவும் உன்னைப் பார்த்துக் கொண்டே தான் போகிறாரா?” என்பாள்.
கலா முகத்தைச் சுளித்துக் கோணல் படுத்தி, “தெருவோடு போற சனி எல்லாம் பார்க்கவில்லை என்று யார் வருத்தப் படுறாங்க? பீடை தரித்திரக் குரங்கு – அதும் அதன் மூஞ்சியும்!” என்று சிடு சிடுப்பாள். அக்காளின் சிரிப்பு நீரோடை எனக் களகளக்கும். சின்ன அக்காள் சாவித்திரி இப்பொழுதும் வாய்திறந்து எதுவும் சொல்வதில்லைதான்.
– அமுதசுரபி 1962
– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.