கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்த முதல் நாள் என்பதை விட எடுத்து வைத்த முதல் படியிலேயே சந்தித்தபோது வெகு நாட்கள் பழகியது போல் புன்னகைத்தபடி ‘நீங்க’ போட்டு மரியாதையாகப்பேசியதாலேயே பவியின் மனதுக்கு மிகவும் பிடித்துப்போனான் முகின்.
பார்த்தவுடன் பல வருடங்கங்கள் பழகியவர்கள் போல், கட்டிய மனைவியுடன் பேசுவது போல் ‘வா, போ’ என பேசுவது, தொட்டு பேசுவது, நம்மைக்கேட்காமலேயே திண் பண்டங்கள் வாங்கி சாப்பிடச்சொல்லி கட்டாயப்படுத்துவது, அருகில் நெருக்கமாக அமர்ந்து கொள்வது, சினிமாவுக்கு அழைப்பது, அதையும் பிறர் அறியச்செய்வது போன்ற எந்தவித பிடிக்காத செயல்களும் இல்லாமல் நட்புக்கு இலக்கணமாக, தொடர்ந்து பேச வேண்டும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துபவனாகவே முகின் தொடர்ந்து பழகியது பவிக்கு மகிழ்ச்சியைத்தந்தது.
அவனது முகம் பார்க்காத நாள் யுகமாக நகரும். வீடியோ காலிலாவது பேசினால் தான் முகம் மலரும். படிப்பின் மீது நாட்டம் செல்லும். இதை நட்பு என்பதா? காதல் என்பதா? அல்லது இரண்டையும் தாண்டி வேறு ஒன்றா? எதுவாக இருந்தாலும் படிக்குமிடம், விழாக்கள் எங்கு சென்றாலும் மனதுக்குப்பிடித்தவர்களைத்தேடிச்செல்வது மனித இயல்பு. அவ்வகையான போக்கு என்று தான் இதையும் புரிந்து கொள்ள முடிந்தது.
தனித்திருப்பது, தனி பயணம் எல்லாமே வாழ்வில் அர்த்தமற்றது. அதேசமயம் எதிர்மறை சிந்தனை உள்ளவர்களுடன் வாழ்வது, பயணிப்பது நரகத்துக்கு இணையான வாழ்வு’ என முகின் அடிக்கடி கூறுவான்.
“ஒவ்வொரு பொண்ணும் எதிர்பார்ப்போடுதான் பசங்க கூட பழகறாங்க. நாங்கூட ரஞ்சனோட காதல்ல இருக்கறேன்னா செலவைப்பத்தி எனக்குன்னா கவலைப்படாம, யோசிக்காம பண்ணுவான். பண்ணிட்டு புலம்ப மாட்டான். முதல் வருசம் ரவி கூட பழகினேன். டிரஸ் எடுத்தாக்கூட விலையைப்பார்ப்பான். பில் போட்ட பின்னாடி அவ்வளவு பணம் இல்லைன்னு கேன்சல் பண்ணுவான். அடிக்கடி பண்ணின செலவை மத்தவங்க முன்னாடி சொல்லிக்காட்டுவான். ரஞ்சன் அப்படியில்லை. பத்தாயிரம் வேணும்னு மெஸேஜ் கொடுத்தன்னா ஒரு நொடி கூட தாமதிக்காம இருபதாயிரம் அக்கவுண்ட்ல போடுவான். ஆனா முகின் அவனோட படிப்புக்கு பீஸ் கட்டறதுக்கே கஷ்டப்படறவன், அவன் கூட இஷ்டப்பட்ட மாதிரி எங்கேயும் போக முடியாது.செலவு பண்ண முடியாது. ஒரு பைக் கூட அவன் கிட்ட கிடையாது. அப்புறம் எப்படிடீ….?” தோழி நிவியின் கேள்வியைக்கேட்டு புன்னகைத்தாள் பவி.
“ஒருத்தனோட பணத்தால திருப்தி பட்டீன்னா பணம் இல்லாத போது அதிருப்தியாயிடும். ஒருத்தனோட குணத்தால திருப்தி பட்டீன்னா அது நீடிச்சு எப்பவுமே நிலைக்கும். அது காதலுக்கு மட்டுமில்லை. நட்புக்கும் பொருந்தும். எப்பப்பாரு பணம், பணம்னு பணத்துலயே குறியா இருந்தீன்னா உன்னோட ஒடம்பு மேல தான் அவன் வெறியா இருப்பான். உன்னோட மனசப்பார்க்கமாட்டான். அழகு போயிடுச்சுன்னா உன்ன விட்டு போயிடுவான். இல்லைன்னா உன்ன விட அழகான பொண்ணப்பார்த்தா உன்ன விட்டிட்டு போயிடுவான். முகின முதல் பார்வையிலேயே எனக்கு பிடிச்சிருந்தது, பழகறேன். இது பாலின ஈர்ப்பா? காதலா? நட்பா? பாசமா?அனுதாபமா? சம அறிவா? அழகா? வயசா? எதையுமே பிரிச்சுப்பார்க்கலே. பிரிச்சுப்பார்க்கவும் இது வரைக்கும் தோணலை. அவன் கிட்ட பேங்க் பேலன்ஸ் இருக்கா? பணக்காரனா? வருங்காலத்துல சம்பாதிப்பானா? ன்னு பார்த்தோம்னா நல்ல நட்ப இழக்கனம். நீ ரஞ்சனோட கார்ல போகும் போது ஒரு வித பயத்தோட தான் போகனம். முழுக்க முழுக்க உன்னோட விருப்பங்கள இழந்து அவனோட விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கனம். அவன் செய்யற தப்ப தட்டிக்கேட்கிற திறன் உன் கிட்ட இருக்காது. முழுக்க சரணாகதி ஆயிடுவே. நான் முகினோட பஸ்ல போகும் போது பயமில்லாம போவேன். சுதந்திரமா இருப்பேன்” என பேசிய பவியின் பேச்சு நிவியை சிந்திக்க வைத்தது.
‘பணத்துக்காக ரஞ்சனுடன் காதலென்று நடித்து, அவனை ஏமாற்றித்திரிகிறோம், அல்லது நாம் அவனிடம் ஏமாந்து போகிறோம். இது பாது காப்பு வேலியற்ற போலித்தனம்’ என்பதை முற்றிலுமாக உணர்ந்த போது தோழி பவியின் முகத்தை நேராகப்பார்க்க இயலாதவளாக தலை குனிந்தாள் நிவி.