(1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“மாலினி! நான் சொல்வதைக் கேளம்மா! நீ வாழ்க்கையில் சந்தோஷம் அநுபவிப்பதை நான் விரும்புவேனா, சஞ்சலம் அநுபவிப்பதை விரும்புவேனா?”
“சந்தோஷம் அநுபவிப்பதைத்தான் விரும்புவீர், அப்பா!”
“பின் ஏன் நான் சொல்லும் வரனைக் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன் என்கிறாய்?”
“எனக்கென்னமோ அவரைக் கல்யாணம் செய்து கொள்ள இஷ்டமில்லை,அப்பா!”
“ஏன்?”
“அதைச் சொன்னால் அதிகப்பிரசங்கி என்பீர்கள்!”
“அந்தப் பெயர் எடுக்க உனக்கு இஷ்டமில்லை யல்லவா? அதனால் தான் நான் சொல்வதைக் கேள் என்கிறேன். வேறு எங்கேயாவது வரன் தேடினால், அவன் கல்யாணமானவுடனே உன்னைத் தன்னுடன் கூட்டிக் கொண்டு போய்விடுவான். இந்தத் தள்ளாத வயதில் நான் உன்னை எப்படி அம்மா பிரிந்திருக்க முடியும்?”
“அதற்காக…?”
“அவன் அனாதை; வேறு எங்கேயும் போவதற்கு வழியில்லாதவன். அவனை நீ கல்யாணம் செய்துகொண்டால் அவன் நம் வீட்டிலேயே உன்னுடன் இருந்துவிடுவான். நானும் என்னுடைய கடைசி காலத்தை உங்களுடன் சந்தோஷமாகக் கழித்து விடுவேன்.”
“என்னமோ போ, அப்பா! எனக்கு ஒன்றும் பிடிக்கவில்லை; அப்புறம் உங்கள் இஷ்டம்.”
இந்தக் கடைசி வார்த்தையைக் கேட்டதுந்தான் பாரிஸ்டர் பராங்குசத்தின் மனம் சற்று நிம்மதி அடைந்தது.
***
பாரிஸ்டர் பராங்குசம் பிரசித்தி பெற்றவர். அவருடைய ஒரே மகள் தான் மாலினி. சிவப்புக் கரை போட்ட வெள்ளைப் புடவையைத்தான் அவள் எப்பொழுதும் அணிந்துகொண்டிருப்பாள். அவளுடைய படர்ந்த முகம் அவளுக்குத் தெரியாமல் எப்பொழுதும் மௌனமாகப் புன்னகை புரிந்துகொண்டிருக்கும். ஒரு நகையும் அணியாமலிருந்ததுகூட, அவளுக்கு ஒரு தனி அழகாய்த் தானிருந்தது. ஆனால் அந்தச் சின்னஞ்சிறு குங்குமப் பொட்டு மட்டும் அவளால் அழகு பெற்று, அவளுடைய நெற்றியில் சதா இருந்துகொண்டிருக்கும். என்ன தான் வாரிவிட்டாலும் காற்றில் அலைந்துகொண்டிருக்கும் அந்தச் சுருண்ட கேசத்தின் அழகையே நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கலாம் போல் தோன்றும்.
வாழ்க்கையில் பெண்கள் தங்களுடைய ஜீவனத்திற்கு எப்பொழுதுமே புருஷர்களைத்தான் நம்பிக்கொண்டிருக்க வேண்டுமென்ற விபரீதமான சமுதாயச் சட்டம் பாரிஸ்டர் பராங்குசத்துக்குப் பிடிப்பதில்லை. அதன் பயனாகத்தான் மாலினி வெறும் மாலினியாயில்லாமல், மாலினி எம்.பி.,பி.எஸ்.ஸாக இருந்தாள்.
அவரிடம் வக்கீல் தொழிலில் அனுபவம் பெற வந்தவன்தான் வாஞ்சிநாதன். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட அவனைத் தாயார் எப்படியோ வக்கீல் பரீட்சையில் தேற வைத்தாள். அவன் வருவாயில் ஒரு நாள்கூட வயிறு வளர்க்கக் கொடுத்து வைக்காமல் அவள் இந்த உலக வாழ்வை நீத்தாள். அவனைத் தான் தம் பாரிஸ்டர் மகளுக்கு வரனாகத் தேர்ந்தெடுத்திருந்தார் பராங்குசம்.
வாஞ்சிநாதன் மிகவும் சங்கோசப் பிராணியாயிருந் தான். அவன் ஏனோ இந்தக் காலத்துப் பிள்ளையாயில்லை. மாலினியை கண்ணெடுத்துக்கூடப் பார்க்க அவன் மாட்டான். எப்பொழுதாவது அவள் அவனைப் பார்த் தாலும், அவன் வேறு எங்கேயோ பார்க்க ஆரம்பித்து விடுவான். தப்பித் தவறி அருகில் வந்துவிட்டால் அவள் அந்த இடத்தை விட்டுப் போகும் வரை, அவன் ஆடு திருடிய் கள்ளன் மாதிரி விழித்துக் கொண்டிருப்பான்.
ஒரு நாள் ஏதோ ஒரு தஸ்தவேஜுக் கட்டை மறந்து வைத்துவிட்டுக் கோர்ட்டுக்குச் சென்று விட்டார் பராங்குசம். அங்கே சென்றதும் அவருக்கு அதைப் பற்றிய நினைவு வந்தது. உடனே தம்முடன் வந்திருந்த வாஞ்சிநாதனைக் கூப்பிட்டு, “வீட்டுக்குப் போய், மாலினியிடம் சாவி இருக்கிறது; அதை வாங்கி மேஜையைத் திறந்து, அதற்குள்ளிருக்கும் தஸ்தவேஜை எடுத்துக்கொண்டு வா!” என்றார்.
அவருடைய உத்தரவைத் தட்டிப் பேச முடியாத வாஞ்சிநாதனுக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. எப்படியோ மனதைத் திடப்படுத்திக்கொண்டு வீட்டுக்குச் சென்றான். அங்கே சென்றதும் மாலினியை நேரில் பார்த்துச் சாவி கேட்க அவனுக்குத் தைரியம் வரவில்லை. சமையற்காரனைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னான். அவன் அவளிடம் சென்று சாவி கேட்டான். “அவருக்கு நீ என்ன, காரியதரிசியா?” என்று எரிந்து விழுந்தாள் மாலினி.
சமையற்காரன் பதிலுக்கு ஒன்றும் சொல்லாமல் திரும்பி வந்துவிட்டான்.
வாஞ்சிநாதனுக்குத் தர்ம சங்கடமாகப் போய் விட்டது. வந்த வழியே திரும்பிவிடலாமா என்றுகூட நினைத்தான். ஆனால் அவர் அதற்காகக் காத்துக் கொண்டிருப்பாரே?
துணிந்து அவள் அறையின் பக்கம் சென்றான். அந்த அறையின் கதவுக்கு முன்னால் நின்றுகொண்டு, “உங்களிடம் சாவி இருப்பதாக அப்பா சொன்னார்…” என்று ஆரம்பித்தான்.
“நல்ல வேளை! அப்பாத்தானே சொன்னார்? நீங்கள் சொல்லவில்லையே?” என்றாள் அவள்.
“இ…ல்..லை!”
“ஆமாம்; அதற்கு என்ன?”
“அந்தச் சாவியை வாங்கி…”
“அந்தச் சாவியை வாங்கி…”
“மேஜையைத் திறந்தது…”
“மேஜையைத் திறந்து…”
இந்தச் சமயத்தில் சமையற்காரன் ஹாலின் பக்கமாக இருந்து அவர்களை எட்டிப் பார்த்தான். “என்னடா பார்க்கிறே?” என்று அதட்டினாள் மாலினி.
“ஒன்றுமில்லை, அம்மா! ஐயா என்னமோ உங்களுக் குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறாரே, அதைப் பார்க்கிறேன்!” என்று சொல்லி, அவன் ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றான்.
அவன் சென்றதும், “உம் மேஜையைத் திறந்து அதற்குள் உம்மை ஒளிந்து கொள்ளச் சொன்னாராக்கும்!” என்று மீண்டும் ஆரம்பித்தாள் மாலினி.
“இல்லை, தஸ்தவேஜை எடுத்துக்கொண்டு வரச் சொன்னார்!”
“ஓஹோ!” என்று சொல்லிக்கொண்டே அவன் அருகில் மாலினி வந்தாள்.
வாஞ்சிநாதனை வெட்கம் பிடுங்கித் தின்றது. அவன் கையைப் பிசைந்துகொண்டு நின்றான்.
“கைக்குள் என்ன வைத்துக்கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டுவிட்டுச் சிரித்தாள் மாலினி.
“ஒன்றும்… மில்லை!” என்று இழுத்தான் வாஞ்சிநாதன்.
“இத்தனை சங்கோசத்தை வைத்துக்கொண்டு நீர் எப்படித்தான் வக்கீல் தொழில் செய்து கிழிக்கப் போகிறீரோ?” என்று சொல்லிக்கொண்டே மாலினி சாவியை எடுத்து வீசி எறிந்தாள்.
“நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு போ; சாவியைக் கொடுத்தால் சரி !” என்று நினைத்தானோ என்னமோ, உடனே அவன் கீழே விழுந்த சாவியை எடுத்துத் தன் காரியத்தை முடித்துக்கொண்டு எடுத்தான் ஓட்டம்!
கல்யாணமான பிறகு ஒரு நாள், “நீ என்னமோ என்னைக் கல்யாணமே செய்து கொள்ள மாட்டேன் என்று உன் அப்பாவிடம் சாதித்துக் கொண்டிருந்தாயே! கடைசியில் என்னடா என்றால் காலக்கணக்கில் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவர்கள்கூட, இப்படி நம்மைப்போல் நேசமாக இருக்கமாட்டார்கள் போலிருக்கிறதே!” என்றான் வாஞ்சிநாதன்.
“உங்களுக்கு என் அப்பாவைப்பற்றி ஒன்றும் தெரியாது; அதனால்தான் அப்படிச் சொல்கிறீர்கள்! யார் என்ன சொல்கிறார்களோ, அதற்கு நேர்மாறாகச் செய்வது தான் அவருடைய சுபாவம். அப்படித்தான் வேறு நாதியற்ற அவருடைய தங்கையின் மகள் ஒருத்தி இங்கே வளர்ந்து வந்தாள். அவள் உங்களைப்போல் ‘பிராக்டீ’ஸுக்காக வந்திருந்த ஒருவரைக் காதலித்தாள். அவள் இஷ்டப்படி என்னுடைய அப்பா அவளைக் கல்யாணம் செய்து கொடுத்தாரென்று நினைக்கிறீரா? அது தான் கிடையாது. அவருடைய இஷ்டப்படி அவள் விரும்பாத வரனுக்கு அவளைக் கல்யாணம் செய்து கொடுத்தார். அதனால்தான் எனக்கும் உங்களை விட்டு விட்டு வேறு எங்கேயாவது வரன் தேடிவிடப்போகிறாரோ என்று பயந்து, நான் உங்களை விரும்பாதவள்போல் பாசாங்கு செய்தேன்!” என்றாள் மாலினி.
“அப்படியானால் இந்த விஷயத்தில் உனக்கும் எனக்கும் ரொம்ப ஒற்றுமை இருந்திருக்கிறது. அதற்காகத் தானே நானும் ‘நல்ல பிள்ளை’ என்று பெயர் வாங்குவதற்காக அத்தனை சங்கோசத்துடன் நடந்துகொண்டேன்!” என்றான் வாஞ்சிநாதன்.
– முல்லைக் கொடியாள், மூன்றாம் பதிப்பு: 1952, ஸ்டார் பிரசுரம், சென்னை.