கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 20,818 
 
 

முதல் காதல் எத்தனை வயதில் என்று கேட்கும் நண்பர்களுக்கு மட்டுமல்ல எனக்கே என் கண்களில் தெறிக்கிறது ஒரு நக்ஷத்திர ஆச்சர்யம். 3 வயதில் என்ற என்னுடைய பதிலுக்கு வேறு என்ன செய்ய முடியும் ? நினைவுக்கே வராத அந்த வயதில் நான் பார்த்தாக இரண்டு பேர் மட்டுமே நினைவில் இருக்கிறார்கள். ஒன்று. அழ அழ அம்மாவிடம் என்னை விட்டு சென்ற அம்மாச்சி. மற்றொன்று, இலங்கை பயங்கரம் பற்றிய கண்காட்சி ஒன்றில் அப்பா கை நீட்டி சுட்டி காண்பித்த புலியுடன் நின்று கொண்டிருந்த இளம் வயது பிரபாகரன். பார்த்தவுடன் என்ன தோன்றியது என்று ஞாபகம் இல்லை. ஆனால் ஞாபகம் தெரிந்த முதல் நாளில் அன்பையும் தோன்ற வைத்த முதல் மனிதர். வயதானவர்கள் கூடி நிற்கும் கூட்டத்தில் வேடிக்கை பொருளாக என்னை வைத்து விளையாடும் சிறு வயதில் கூட “யாரை கல்யாணம் செய்து கொள்ள போகிறாய் ” என்ற கேள்விக்கு தெரிந்தோ தெரியாமலோ பிரபாகரன் என்றே வெட்கத்துடன் பதில் வந்திருக்கிறது என்னிடமிருந்து. பிரபாகரன் ஏன் என்று கேட்பவர்களுக்கு காரணம் எனக்கு தெரியவில்லை என்பது மட்டும்தான் பதிலாக இருந்திருக்கிறது. காதல் என்ன காரணம் சொல்லி கொண்டா வருகிறது ? காரணமே இல்லாமல் என்னை எப்போதும் சுற்றி சுழலும் உரிமையை காதல் தானாகவே எடுத்து கொண்டிருந்தது. நினைவு தெரிந்த முதல் காதல் என்பது 15 வயதில் என்றாலும் அதற்க்கு முன்னதாகவே காதலே என்னை சுற்றி சுற்றி அலைந்து கொண்டிருந்தது எதற்கு என்று தெரியவில்லை.

7 வகுப்பு படித்து கொண்டிருந்த பாவாடை சட்டை காலத்தில் , டிபன் பாக்ஸ் கழுவும் இடத்தில் வைத்து ஐ லவ் யூ சொன்ன 12 -ம் வகுப்பு ஸ்ரீராம் அண்ணனை இன்னும் மறக்கவில்லை. அவன் சொன்னதை நான் புரிவதற்கே எனக்கு 3 நாட்கள் ஆகி இருந்தன. இதை என்ன செய்வது என்று தெரியாமல் அல்லாடி பெஞ்ச்சில் எனது அருகில் அமர்ந்திருந்த பார்வதியிடம் மெதுவாக சொன்னபோது , அடுத்த சில வருடங்களுக்கு அவள் என்னுடன் பேசாமல் இருப்பாள் எனபது எனக்கு தெரிந்திருக்கவில்லை . பின் ஒரு நாளில் ரமா ப்ரபாதான் சொன்னாள், ஸ்ரீராமை, பார்வதி விரும்புகிறாள் என்று. அதன் பிறகு நான்காவது பெஞ்ச்சில் இருந்து 5 -வது பெஞ்ச்சுக்கு மாறி இருந்தேன் நான். 9 -ம் வகுப்பு தருணத்தில் ஸ்ரீராம் மேற்படிப்பு படித்த அந்த பொறியியல் கல்லூரியின் கண்காட்சி ஒன்றுக்கு எங்கள் பள்ளியில் இருந்து சென்றிருந்தோம். மெக்கானிக்கல் பிரிவில் நின்றிருந்த ஸ்ரீராமை நானும் பார்வதியும் ஒன்றாக பார்த்த அந்த தருணத்தில் அங்கு உண்மையிலேயே காதல் காற்று சுழன்றடித்து வீசியது. கிளம்பும் நேரத்தில் பேருந்து வரை வந்து ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த என்னிடம் “என்ன லவ் பண்றியா” என்று மறுபடியும் கேட்ட ஸ்ரீராமுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை இப்போது வரைக்கும். பார்வதிக்கான ஸ்ரீராமை நான் என்ன செய்வது ?. செவ்வந்தி பூவுடன் சைக்கிளில் துரத்திய சண்முகவேல், என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னோட காஷ்மீர் வந்துடறியா என்று விடுமுறைக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் வழி மறித்து கேட்ட மிலிட்டரி முத்துராசு, சிவப்பு ஸ்கெட்ச் பேனாவால் எழுதிய காதல் கடிதத்தை , ரத்தத்தில் எழுதியது என்று சொல்லி மறுக்க மறுக்க, கையில் திணித்து போன பிரதீப் என இவர்கள் எல்லோருக்கும் அந்த பதின் வயதில் வழக்கமாக அனைத்து பெண்களும் செய்யும் மூர்க்கத்தனமான செய்கைகளில் இருந்து தவிர்த்து ஒரு சிநேகமான புன்னகையை தர முடிந்ததற்கு என்னை சுற்றிய காதலே காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்படி காதல் என்னை துரத்தி துரத்தி காதலித்து கொண்டிருந்த ஒரு நேரத்தில் எனக்கே தெரியாமல் நான் காதலிக்க ஆரம்பித்தது சக்தியை. 10 – ம் வகுப்பு பொது தேர்வுக்காக, பள்ளி தொடங்கிய சில நாட்களிலேயே காலையிலும் மாலையிலும் தெரு தெருவாக டியுஷனுக்கு அலைந்து கொண்டிருந்த நேரம். மழையும், காற்றுமாக இருந்த ஒரு மாலை நேரத்தில் சைக்கிள் செயினில் சிக்கி கொண்ட என் பாவடையை எடுக்க தெரியாமல் தயக்கத்துடனும் பயத்துடனும் நின்று கொண்டிருந்த ஒரு மிக தர்மசங்கடமான சூழ்நிலையில் அறிமுகமானவன்தான் சக்தி. மழை இல்லாத நாட்களில் இப்படி ஒன்று நேர்ந்தால் பாவாடையை கிழித்து எடுக்கும் தைரியம் எனக்கு உண்டு என்றாலும் தோழமையற்ற தனிமை என் பயத்தை அதிகரித்து விட்டது. அப்படி ஒரு பொழுதில் மழையையும் பொருட்படுத்தாமல் பொறுமையாக செயினில் சிக்கி இருந்த பாவாடையை எடுத்து விட்ட பொழுதில் அவனுக்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் சைக்கிளில் ஏறி சென்றிருந்தேன். அதன் பிறகு அவனை பற்றிய நினைவும் இல்லை.

ஒரு மார்கழி மாத அதிகாலையில், வெளிச்சத்தின் ஒரு துளி கூட வந்திராத 5 மணிக்கு டியுஷன் செல்வதற்காக வீட்டை விட்டு கிளம்பிய போது ஏதோ ஒன்று தோன்ற எதேச்சையாக திரும்பி பார்த்தேன். அருகில் இருந்த டி கடையில் மஞ்சள் விளக்கின் கீழ் தெரிந்த அந்த முகம், சட்டென்று குளிர் கிளப்பியது மனதிற்குள். மழையோடும் காற்றோடும் அறிமுகமானவன் அவன் என்பது நினைப்புக்குள் வந்தது.

என்ன செய்வதென்று தெரியாமல் சைக்கிள் எடுத்து கிளம்பிய சற்று நேரத்தில், யாருமற்ற சாலையில் கூடவே வந்து கொண்டிருந்தான் அவன் சைக்கிளில். ஒரு சிநேக புன்னகை எங்கள் இருவரிடத்திலும்.

பாக்யலக்ஷ்மி தான உன் பேரு ? என்றான்

எப்பிடி தெரியும் ? என்றேன்

பிரவுன் அட்டை போட்டு பளிச்சென்று லேபில் ஒட்டி ஜம்மென்று இருந்த டியுஷன் நோட்டில் கொட்டை எழுத்தில் எழுதியிருந்த பெயரை சுட்டி காட்டினான்.

என் பேரு சக்தி. இங்க இன்ஜினியரிங் காலேஜ்ல செகண்ட் இயர் ட்ரிப்பில் ஈ (எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஜினியரிங் ) படிக்கிறேன் என்றபடியே நீ என்ன படிக்கிற ? என்றான். டென்த் என்றேன். பப்ளிக் எக்ஸாம் தானே. ஒழுங்கா படி என்றபடி கிளம்பி சென்று விட்டான்.

யார்ரா இவன் ? எங்க இருந்து வந்தான் ? எதுக்கு என் படிப்பு மேல இவ்ளோ அக்கறை காமிக்கிறான் என்றல்லாம் ஆச்சர்யம் தோன்ற அதற்க்கு பதில் கிடைக்காது என்கிற நினைப்புடனேயே டியுஷனுக்கு கிளம்பினேன். அப்புறம் தெரிந்தது. என் வீட்டு பின்னால் உள்ள என் தோழி ஒருத்தியின் வீட்டில் வாடகைக்கு குடி இருக்கிறான். சொந்த ஊர் நாமக்கல். இங்கு படிப்பதற்காக வந்திருக்கிறான். படிப்பில் புலி. அவளுக்கு மட்டுமல்ல அந்த தெருவுக்கே இவன்தான் வாத்தியார் என்பது எல்லாம். என்னை எங்கு பார்த்தான் ? அந்த மழை நாளில்தான ? என்றால் என்னால் அதை நம்ப முடியவில்லை. என்னை அவன் நெடு நாட்களாக பின் தொடர்ந்திருபான் என்று உள் மனம் சொன்னது.

இப்படியான குழப்பங்களுக்கு மத்தியில் ஒரு நாள் நடு ரோட்டில் வழிமறித்து உன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொடு என்றான் ?
எதுக்கு ? முடியாது என்றேன்

என் பிரெண்ட்ஸ் எல்லாம் பாக்கணும் சொல்றாங்க ?

அதெல்லாம் முடுயாது என்றபடியே நான் கிளம்ப..சைக்கிள் பிடித்து நிப்பாட்டினான். ப்ளீஸ் ப்ளீஸ் ஒரு அஞ்சு நிமிஷம் அப்படியே நில்லு ப்ளீஸ் என்றபடியே விட்டு போனான். 5 நிமிடத்தில் திரும்பி வந்து இப்ப போ என்றான் .

என்ன ஏதென்று கேட்காமல் ஓடி போனேன். மறுநாள் அதிகாலையில் வழக்கம் போல் டி கடையில் காத்திருந்தான். டியுஷனுக்கு போகையில் கேட்டான். நேத்து ஏன் நிக்க சொனேன்-னு கேக்க மாட்டியா என்றான்.

தேவை இல்ல என்றேன்

கேக்கணும் என்றபடியே என் பிரெண்ட்ஸ் எல்லாம் கொஞ்சம் தள்ளி நின்னுட்டு இருந்தாங்க. அவங்க கிட்ட உன்ன காமிக்க்ரதுக்காகத்தான் நிக்க சொன்னேன் என்றான். லூசா நீயி ! என்றபடி கடுப்பாகி சைக்கிள் எடுத்து கிளம்பி சென்றேன்.
என் பள்ளியின் 50 -வது ஆண்டு கொண்டாட்டங்களில் பொதுமக்களும் கலந்த கொண்ட சில நாட்களில் கல்லூரிக்கு விடுமுறை இட்டு வந்திருந்தான். வலுக்கட்டாயமாக என்னை அவனுடைய பெர்சனல் கைடாகவும் பயன்படுத்தி பள்ளியின் ஒவ்வொரு அறையையும் சுற்றி காட்ட வைத்தான். உடன் வந்திருந்த நண்பர்களிடம் இது பாக்கி என்று அறிமுகம் செய்தான். அதன் பின் அவன் நண்பர்களுக்கும் சேர்த்தே வலுக்கட்டாயமாக ஒரு புன்னகை செலவழிக்க வேண்டி இருண்டது.

பொது தேர்வுகளின் போது ஒவ்வொரு தேர்வுக்கும் மறக்காமல் நேரில் வந்து வாழ்த்து சொல்லி போனான். எனக்கு பரிட்ச்சைகள் முடிய, அவனுக்கும் செமெஸ்டர் முடிந்தது. ஆண்டு விடுமுறையின் போது சக்தி அவனுடைய சொந்த ஊரான நாமக்கலுக்கு சென்றிருந்தான். நான் அம்மாச்சியின் ஊருக்கு சென்றேன். மறுபடி பள்ளி தொடங்கிய முதல் நாளில் டான் என்று சொல்லி வைத்தார் போல வந்து நின்றான்.

11 -ம் வகுப்பிற்கு தாவணி அணிய வேண்டும் என்பதால் பாவாடை சட்டையில் இருந்து மாறி தாவணிக்கு வந்திருந்தேன். அழகாக இருக்கிறாய் என்று ஊரே சொன்னபோதும் ,என்னை பார்த்து லேசான ஆச்சர்யம் மட்டுமே காட்டினான்.

மார்க் எத்தன என்றான் ? நேரடியாக.

சொன்னதும் பரவால்ல மக்கு பிளாஸ்திரி அப்பிடின்னு நினச்சேன் என்றபடியே ஒரு பேனா எடுத்து கொடுத்தான்.

நான் என்ன சின்னபொண்ணா? வேண்டாம் என்றேன் ? பையில் திணித்து போனான் .

அடுத்த ஆண்டு எனக்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வும், அவனுக்கு கடைசி வருட தேர்வும் நெருங்கியதால் பார்த்து கொள்வது என்பது சிரமம் ஆனது. எனக்கு அப்போதும் பெரிதாக எந்த வருத்தமும் தோன்றவில்லை. கடைசியாக பரிட்ச்சைக்கும் முன்னால் பார்த்து இருவரும் ஆல் தி பெஸ்ட் சொல்லி கொண்டோம். அப்போது நான் வீடு மாற்றி வேறு இடத்திற்கு போக அதன் பின் சந்திப்பு என்பது நிகழவே இல்லை.

பரிட்ச்சை முடிந்த ஒரு தினத்தில் அவன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான என் பள்ளி தோழியிடம் சொல்லி அனுப்பிருந்தான் ஊருக்கு கிளம்புகிறான் என்றும் பார்க்க வர வேண்டும் என்றும். சட்டென்று முதல் முதாலாக ஒரு பயத்தையும் வலியையும் ஒரு சேர உணர்ந்தேன். இனிமேல் அவனை பார்க்க முடிய போவதில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. இத்தனை நாளும் அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையின் காரணமாகவே அவனை தேடாமல் இருந்திருக்கிறேன் என்பதும் அந்த நொடியில் மட்டுமே புரிந்தது. அவன் இல்லாத இனி வரும் வருடங்கள் என்ன ஆக போகிறது என்று அப்போது புரியவில்லை. கடைசி வார்த்தையாக வெறுமே போய் வருகிறேன் என்று மட்டும் சொல்லி சென்று விட்டால் என்கிற நினைப்பே என்னுடைய பயத்தை அதிகரித்து. இது வரையிலும் அவன் என்னிடம் எதுவுமே சொல்லவே இல்லையே… மற்றவர்கள் போல் கூட வேண்டாம்…குறைந்தபட்சம் வார்த்தையில் கூட சொல்லியது இல்லையே விரும்புகிறேன் என்று? இப்படி எல்லாம் யோசித்து என்னுடைய பதின் வயது மூளை குழம்பி கொண்டிருக்கையில் தான் தெரிந்தது நான் அவனை விரும்பியது. அந்த நிமிடம் தெளிவாக முடிவெடுத்தேன் வலி தாங்கினாலும் பரவாயில்லை அவனை பார்க்க செல்ல கூடாது என்று.

என்ன செய்வான் ஏன் செய்வான் என்று எப்போதும் யூகிக்க முடியாதவனாகவே இருந்திருக்கிறான் அவன். ஒரு திடீர் மழையை போல, வெயில் நேர இடியை போல , இப்படி. ஏன் என்று கேட்க முடியாது. பதிலும் வராது. அது போல இப்போதும் என் தலை தடவி “போய்ட்டு வரேன் , நல்லா படி , ப்ரொபெஷனல் காலேஜ் போ ” என்று வழக்கம் போல ஒரு குழந்தையை போல பாவித்து சொல்லி கிளம்பினான் என்றால்?????? அவன் வாயில் இருந்து வெறும் போய் வருகிறேன் என்கிற வார்த்தை மட்டும் கேட்கும் தைரியம் அந்த வயதில் வந்திருக்கவில்லை. அதை விட அவன் என்னை விரும்பி இருக்கிறான் என்ற நம்பிக்கையுடன் போகாமல் இருப்பது மேல் என்று தோன்றியது. போகவும் இல்லை.

வலி தாங்க பழகி கொண்டேன். காதல் சுற்றி சுற்றி வலம் ஒருத்திக்கு வலி தாங்குவது கடினமா என்ன ???? போகாததற்கு காரணம் கேட்டால் இப்போதும் சொல்ல தெரியாது. கல்லூரியும் வேலையுமாக காதலும் இப்போது பழகி கொண்டது.

என்னை கடக்கும், என்னை ஆச்சர்யபடுத்தும் , என்னை நெகிழ்ச்சியூட்டும், அத்தனை பேர் மீதும் காதல் வழிந்தோடுகிறது இப்போது. திகட்ட திகட்ட காதல் செய்வதும் வலிக்க வலிக்க சோகம் சுமப்பதும் வழக்கமான ஒன்றாக இருந்தாலும் காதல் மீதான காதல் மட்டும் எப்போதும் குறைவதில்லை. நாமாகவே தேடி போகவில்லை என்றாலும் தானாகவே தேடி தேடி துரத்தும் காதலை விரும்பாமல் எப்படி வெறுப்பது ?

ஆனாலும் இப்போதும் சக்தியின் காதல் மட்டுமே என்னை தேவதையாக உணர வைக்கும் காதலாக இருக்கிறது. யூகிக்க முடியாத மாயாவியாக அவன் இருந்ததினாலோ என்னவோ.

– இத்துடன் 2010 -ம் ஆண்டு “சூர்ய கதிர்” மாத இதழின் நவம்பர் மாத இதழில் வெளியான கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *