படியில் ஏறிக்கொண்டிருந்தபோது வழக்கம் போலதான் நடந்தார். என்றாலும், இன்று ஏதோ இனம்புரியாத ஒரு பதட்டம் மதியிடம் இருந்தது. அதுபோன்ற அவஸ்தையை அதற்குமுன் பலமுறை அனுபவித்திருக்கிறார். என்றாலும் இனி அவரால் அப்படி இருக்க முடியாது. ஏன் இருக்கவும் கூடாது என்பது அவருக்கு நன்கு தெரியும். ஆனால், “அப்படி இருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம்” என்று அவர் எதிர்பார்க்காமல் இல்லை. அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என்று திடமாக முடிவெடுத்திருந்தார். அதுதான் அவருடைய வாழ்வின் முதல் ஆசை. ஏன் அதுதான் வாழ்வின் லட்சியமும் கூட. ஆனால் எல்லாம் முடிந்து போனது.
தொடக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு ஒன்று இருக்கத்தானே செய்யும். ஆனால் தொடக்கத்திலே முடிவு இருந்தால், “நல்லதுதான்” என்று ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. அப்போது அல்ல இப்போதும் கூட அவர் அப்படி இருந்தார்.
ஆனால் இன்று ஏனோ ஒரு சின்ன உறுத்தல் அவரைத் தடுமாறச் செய்தது. புரியாத ஒரு பதட்டம். நடையின் வேகம் குறைவதைக் கூட அவரால் கவனிக்க முடியாத அளவு அதன் வீரியம் இருந்தது. கடைசி படியில் காலெடுத்து வைத்தவரால் அதை நிஜம் என்று ஒரு நிமிடம் நம்ப முடியவில்லை.
இதயம் போன்ற உருவம். அதன் நடுவில் ஒரு கோடு அம்புகுறி போல். அதன் இருபுறமும் இரு பெயர்கள் அழகாய் எழுதப்பட்டிருந்தன. அவை ஒன்றினுள் ஒன்றாய்க் கலந்திருந்தன. சப்பாத்திக்கள்ளியின் முற்களுக்கிடையில் எழுதப்பட்டிருந்த இரு பெயரை அவள் காட்டினாள். ஒரு புன்சிரிப்புடன் அப்பெயர்களைத் தன்னுடைய கை விரல்களால் தடவியவர் அவளது முகத்தை உற்றுப் பார்த்தார்.
அந்தப் பார்வையின் அர்த்தம் அவருக்கு இப்போதும் விளங்கவில்லை.
அடை மழை.
ஆற்றில் பால்போல் வெள்ளம் கரைபுரண்டோடியது. ஆற்றில் வெள்ளம் வருவதை டிவியில் காட்டப்பட்ட செய்தியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டார் மதி. ஏழரை ஆண்டுகளுக்கு முன் ஆற்றில் வெள்ளம் வந்த போது ஓடோடிப் போய் மக்களுடன் மக்களாய் நின்று அதைக் கண்டு ரசித்த நினைவு வந்தாலும் அதை அவரால் இப்போது பெரிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் இப்போது கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது ஆறு. அதுவும் நூறாண்டுகள் கழித்துதான் அவ்வாறு போவதாகச் செய்தியில் விவரணைகள் வேறு போய்க் கொண்டிருந்தன. கனமழையின் காரணமாக இரு நாட்களுக்குப் பள்ளி கல்லூரிகளுடன் சேர்த்து அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாய விடுமுறையை அறிவிக்க அரசு முன்வந்து விட்டது.
நான்கு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு சுள்ளென்று சூரியன் கிழக்கில் உதித்தான். மதியின் புறப்பாடு புதுதெம்புடன் பள்ளி முடிந்து வீட்டிற்குக் கிளம்பும் பள்ளிச் சிறார்களின் துள்ளல் போல் இருந்தது. எதிரே நின்றவளைப் பார்த்தும் பாராதவனாய்க் கடந்து சென்றார். அவள் பின்னாலே தொடர்ந்தாள். அவரைப் பாய்ந்து சென்று அணைத்துக் கொள்ள வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் அவள் அவ்வாறு செய்யவில்லை. அதற்கான இடம் இதுவன்று என்று அவள் நினைத்தாலோ என்னவோ? ஆனால் அவர் அவ்வாறுதான் செய்தார். அவளை இறுகப் பற்றினார். எவ்வளவு என்றால், தன்னுடைய ஏக்கம் தீருமளவு. அவர் செய்தது அவளுக்குத் தெரியாது. விரைப்பாக நடந்துகொண்டிருந்தவாறே அல்லவா அவர் அவ்வாறு செய்தார். அவளுக்கு மட்டுமல்ல அங்கிருந்த யாருக்குமே அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எப்போதும் சிரிப்பை உதிர்க்கப் பழகிய முகம் சோகத்தை மறைக்கும் முகமூடியாகத் தனக்கு வாய்த்ததை எண்ணி அவர் பெருமைபட்டுக் கொண்டதும் உண்டு.
அவள் ஆறுவருடங்கள் காத்திருக்கச் சொன்னாள். அது அப்போது. அவளை அவளது நினைவுகளை முற்றாகத் தன்னுள் சுவாசித்த போது.
இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது சரியாக அவளைப் பிரிந்து ஏழு ஆண்டுகள் ஆறுமாதங்கள் அன்றுடன் முடிவதை அறிந்துகொள்ள முடிந்ததுமதியால். அவள் ஆறு ஆண்டுகள் கழித்து வருவதாக முன்பு சொன்னது நினைவுக்கு வந்தது. ஆனால் அது ஒன்றும் அவருக்குப் பெரிய வியப்பைத் தரவில்லை.
அடர்ந்த காடு. வெயில் காலத்திலும் தென்றல் முடியைச் சிலிர்க்கச் செய்யும். துன்பத்தில் இருப்பவர்களுக்கு இன்பத்தின் நுழைவு வாயில் அங்குதான் ஆரம்பிக்கிறது. இது இன்று நேற்றல்ல ரெண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளாய் தொடரும் நியதி. இதைப் பற்றி இப்போது யாரும் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அவனருக்கு அது பற்றி ஏதும் தெரியாத நிலையில் வந்தாலும் பிறகு தெரிந்துகொண்டார். அவனது வருகையும் முன்னோர்களில் வழியைப் பின்பற்றிய ஒன்று என்று.
அடர்ந்த வனத்தின் மையத்தில் நிலைகொண்டிருந்தது தத்துவப் பள்ளி. அவர் அந்தப் பள்ளியில் சேர்ந்தபோது எதிர்காலம் பற்றிய எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தார். தீடீரென்று அவருக்கு அவள் மீது எப்படி ஒரு நெருக்கம் வந்தது என்று அவராலே நம்ப முடியவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் மதுமிதாவைக் காதலிப்பதே அவருடைய நண்பன் மாணிக்கம் சொல்லித்தான் தெரிந்து கொண்டார். அப்பொழுதும் அவருக்கு நம்பிக்கை வரவில்லை. ஏன் அவளிடம் இருந்து “சம்மதம்” என்ற வார்த்தை வரும்வரை கூட அவர் நம்பத் தயாராகவில்லை. தன்னையும் ஒரு பெண் காதலிக்கிறாளா? என்ற கேள்வி இன்றும் அவருடைய மனதில் ஆழமாகப் பதிந்தே இருக்கிறது.
“ரொட்டித்துண்டுடன் பாலும் கிடைக்கும்” எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது மதி படித்த புத்தகம். அந்தப் புத்தகம் அப்போது மிகவும் அமோகமாக விற்பனை ஆன புத்தகங்களில் ஒன்று. ஆனால் அதைப் படிக்க ஆரம்பித்த சில நாட்களில் அதன் பயன்பாடு தன்னைவிட தன்னுடைய அம்மாவுக்கு நன்றாப் புரிந்ததை எண்ணி மகிழ்ந்தார். புத்தகத்தின் தாள்கள் அடுப்பின் பசிக்கு வெகுவிரைவாகவே இறையானது. அதைப் பற்றி அவன் ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. அதன் பிறகு அவர் வீட்டின் அடுப்பு அதுபோன்ற பல புத்தகங்களைக் கபளிகரம் செய்தது. அவற்றில் “பாலை நதியில் ஊற்று கோமியத்தை வாயில் ஊற்று” என்ற புத்தகம் அவரது மேற்பார்வையிலே இறையாக அளிக்கப்பட்டது. அதை போட்டதுதான் அவருடைய வாழ்க்கையைத் திருப்பிப் போட்டது. ஏழு குதிரைகைள் பூட்டிய தேரின் நிழலில் தனியாகச் சென்று கொண்டிருந்த அவர் அதன்பிறகு நிறைய சிந்திக்க ஆரம்பித்தார். சிந்தித்தார் என்பதைவிட சிந்திக்க நிர்பந்திக்கப்ட்டார் என்று கூறுவதுதான் மிகச்சரியாக இருக்கும். ஏனெனில் அவர் புறக்கணித்த அல்லது அவரைப் புறக்கணித்த விசயங்கள் அவரை அப்படிச் சிந்திக்க வைத்தன. அவர் மட்டுமல்ல அவருடைய முன்னோர்கள் பலர் அவ்வாறுதான் சிந்திக்கத் தூண்டப்பட்டனர். அதனால் அவர் வாழக்கைப் பயணம் ஒன்றும் பெருசாக வியப்பதற்குரியதாக இருக்க முடியாதுதான் என்றாலும், ஏராளமான திருப்பங்களையும் மேடுபள்ளங்களையும் கொண்டிருந்தது. அவை அவருக்குத் தந்த பாடம். அவரை வழிநெடுக விடாமல் மீண்டும் மீண்டும் பரிசோதித்தே வந்தன. அவர்களுடைய முன்னோர்கள் சென்ற வழி போலவே கரடு முரடாக இருப்பதாக உணர்ந்தாரவர்.
ஒருநாள் பொட்டுவைத்துக்கொள்ளும் பழக்கத்தைத் தன் தயாரிடமிருந்து மறந்துபோன மதுமிதாவின் நெற்றியில் திலகமிட்டு அழகு பார்த்தார் மதி. முன்பு இருந்ததைவிட அவள் மிகவும் அழகாகத் தெரிந்தாள். அப்போது அவருக்குத் தோன்றியது, “உண்மையில் அவளது நெற்றியில் திலகம்தான் அழகு பெற்றுள்ளதோ என்று”.
அதன் பிறகு பல முறை தன்னுடைய மனதிடம் கேட்டிருக்கிறார் “ஏன் அவளைப் பொட்டுவைத்து அழகு பார்க்க வேண்டும் என்று அன்று தோன்றியது”. ஆனால் அந்தக் கேள்வியும் விடையற்ற கேள்வியின் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டது.
ஆனால் இருந்தும் நான் ஏன் அவளிடம் அதை எதிர்பார்த்தேன்? இப்போதும் ஏன் அதையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்? அவள் பொட்டு வைத்திருந்தாள் ஏன் எனக்கு அழகாகத் தெரிகிறாள்? அவளை நான் ஏன் அப்போது வற்புறுத்தினேன்.? அவளும் ஏன் அப்போது என் பேச்சைத் தட்டாமல் கேட்டாள்? தலைக்குக் குளித்துவிட்டுப் பொட்டுவைத்துக் கொண்டு வந்தாள்? பார்ப்பதற்குத் தன்னுடைய சமூகம் கட்டமைத்திருக்கும் “தேவதை” என்ற பெயரின் படிமத்தைத் தன் கண்களுக்கு ஏன் தந்தாள் என்பன போன்ற கேள்விகள் இன்றும் அவனை மென்றுதின்று கொண்டுதான் இருந்தன.
அதற்கான காரணம் தெரியாது என்பது ஒரு புறமிருக்கட்டும். இவள் அவளா? என்ற புதுகேள்வி அல்லவா இப்போது மதிக்கு உதித்தது. அதுதான் இப்போது டுவிஸ்ட்டே. ஆனால் அவரால் அவளா இவள்? அல்லது இவள் வேறு அவள் வேறா? என்ற வினாக்கள் குறித்து அவளைப் பார்க்கும்போது மட்டும் யோசிப்பதேயில்லை. ஏனெனில் அவளைப் பார்க்கும்போது அவர் அவராகவே இருப்பதில்லை. அவளது நினைவு போல் அதுவும் இன்னும் அவரிடமிருந்து நீங்கவில்லை.
இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம், “அவளைப் பிரிந்திருக்கக் கூடாதுதான்” என்று நினைப்பார். அப்போது அவரது கண்முன்னே அவள் முகம் பிரகாசமாகத் தோன்றும். அதை அழிக்க முயல்கையில் அதுவே அவளை அருகில் சேர்க்கும். அழிவின் முடிவில் ஆரம்பம் இருப்பது இயற்கையின் நியதிதானே.
தற்செயலாக அல்லவா மதுமிதாவை இன்று தன்னுடைய அலுவலகத்தில் பார்த்தார்.
“அவளைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய திட்டம் இரு முறை தோற்றதோ” என்றுகூட அப்போது மதிக்குத் தோன்றியது. உண்மையில் அவர் அப்படி யோசிப்பதில் நியாயம் இல்லை. அப்படி நடக்கமுடியாது. அதை அவர் நம்பவும் தயராக இல்லை. என்றாலும், நம்பாமல் இருப்பதற்கான சாத்தியப்பாடுகளை விட நம்பும்படியான சாத்தியப்பாடுகளே அப்போது அதிகம் இருந்தன.
அவளைப் பிரிந்த இடைவெளியில் இரண்டு மூன்று நிறுவனங்களில் பணிமாறுதல் பெற்றிருந்தார். அதை விட முக்கியமான விசயம் தற்போது வேலை செய்யும் நிறுவனத்திற்கு வந்த பிறகுகூட பெரிய நிறுவனங்களில் இருந்து சில வாய்ப்புகள் தேடி வரத்தான் செய்தன. தற்போது வாங்கும் சம்பளத்தை விட இருமடங்கு சம்பளம். உயர்ந்த பதவி எனப் பல சலுகைகள் கிடைக்கும் என்ற போதிலும் ஏனோ அந்நிறுவனங்களை மதியால் ஏற்கமுடியவில்லை.
அத்துடன் இருமுறை தற்கொலை முயற்சியில் வேறு தோற்றுப்போயிருந்தார். தோற்றுப்போனார் என்பதைவிட எமனது கருணையைப் பெற்றார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அதனால்தான் அவருக்கு நீண்ட ஆயுள் பரிசாகக் கிடைத்தது. அவர் வாழ விரும்பவில்லை. ஆனால் வாழக் கட்டாயப்படுத்தப்பட்டார்.
அந்தக் கட்டாயத்திற்குக் காரணம், “இன்று மதுமிதாவைச் சந்திப்பதற்கான முன்னேற்பாடோ என்னவோ” என்று தோன்றியது. அவளை ஒவ்வொரு முறை கடந்து செல்லும் போதும் அவ்வாறான சிந்தனை தோன்றி மறைவது வாடிக்கையானது.
இருபத்திரெண்டு படிகளை நடந்து களைப்புடன் வலப்பாக்கத் திருப்பத்தில் அவளைக் கடந்துசெல்லும் ஒவ்வொரு முறையும் அவருக்கு அந்த நினைப்பு தோன்றி மறைவதை ஒரு சாதாரண நிகழ்வாகக் கடந்து போக முடியவில்லை. என்றால், அவ்வாறுதான் செய்ய நேர்ந்தது.
மதுமிதா ஒன்றும் அவ்வளவு பெரிய அழகி இல்லைதான். ஆனால் மதிக்கு அழகாகவே தெரிந்தாள். கல்லூரியில் நண்பர்கள் அவரைக் கேலி செய்வதுண்டு “அவளிடம் அப்படி என்ன இருக்குன்னு அவள் பின்னாலே வால்புடிச்சிட்டு போறன்னு”. அவ்வாறான வேளைகளில் சிறு புன்னகையை மட்டும் பதிலாக வெளிப்படுத்துவான்.
பிறகு மனதிற்குள் நினைத்துக்கொள்வார், “அழகு என்பதற்கு ஏதாவது விளக்கம் இருக்கிறதா என்ன?” என்று. அப்போது ஒரு சில் பீர் குடித்தது போல் இருக்கும் அவருக்கு.
சில வேளை அவரது முக பாவனையைப் பார்த்து “ போதும் பா! இவனிடம் பேசுவது வீண் வேலை” என்று அவரைக் கேலி செய்வதை விடுத்து வேறு டாப்பிக்குக் போய்விடுவார்கள் நண்பர்கள்.
ஆனால் இன்று அப்படி அவளைப் பற்றி யாரும் கேலி செய்து விடமுடியாது. அப்படி கேலி செய்வதற்கான தேவை இன்று எழவும் இல்லை. ஏனெனில் அவளைத் தான் பார்ப்பதன் அர்த்தம் தனக்கே சரியாக விளங்காதபோது யார்தான் அப்படித் தன்னைக் கேலி செய்துவிடமுடியும் என்று திடமாக நம்பினார்.
மதி வேலை செய்யும் நிறுவனத்தின் வைரவிழா கொண்டாட்ட வேலைகள் மும்முறமாகத் தொடங்கின. அதற்கான அறிவிப்பு மதியிடம் கொண்டுவந்து கொடுத்த சுரேஷ் “வாழ்த்துகள் சார்” என்று கையை நீட்டினான். எதற்கென்று தெரியாவிட்டாலும், தன்னுடைய கைய நீட்டி குலுக்கினார் நாகரீகம் கருதி. அவருடைய முக பாவனையைப் புரிந்தவனாய் “சார் இதுவரை நீங்கள் ஒரு நாள் கூட அலுவலகத்திற்கு லீவே போடல…. அதற்காக உங்கள கௌரவப் படுத்த போறாங்கலாம்….” என்று மகிழ்ந்தான் அவன் .
அவன் போன பிறகு மதி நாற்காலியில் சாய்ந்தார். தான் சேர்ந்த இரண்டாவது மாதம்தான் பொன்விழா கோலகலமாக நடந்தது. அதற்குள் 25 ஆண்டுகள் கழிந்து போனதா! என்ற ஆச்சரியம் அவரை ஒரேயடியாய் அமுக்கியது. தன்னுடைய முகத்தைக் கண்ணாடியில் உற்றுப் பார்த்தார். ஒரு புன்னகை பிறந்தது. பிறந்த வேகத்திலே அது இறந்தது.
வைர விழா கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஒரு வார கால கட்டாய விடுப்பிற்குப் பிறகு அலுவலகம் மீண்டும் செயல்பட ஆரம்பித்தது.
அலுவலகத்திற்குப் போன மதிக்கு புதிய மாற்றங்கள் பல தென்பட்டன. அதில் முக்கியமானது. படிக்கட்டுகளுக்கு மாற்றாக லிப்ட் வசதி செய்யப்பட்டிருந்துதான். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
இனி மெனக்கெட படிக்கட்டுகளில் நடக்க வேண்டிய தேவை இருக்காது என்று நினைத்தார். தேவைப்பட்டால் அல்லது விரும்பினால் நடக்கலாம் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு லிப்ட். அதாவது இது அல்லது அது என்ற ரெண்டு ஆப்சன்ஸ். இது கூட நல்லா இருக்கே என்று தோன்றியது. அதே சிந்தனையுடன் முதல் முறையாக லிப்டில் சென்றார்.
படிக்கட்டிற்கு நேர் எதிரில் சற்று தள்ளி லிப்ட் இருந்ததால், இப்போது தன்னுடைய இடத்திற்கு இடப்பக்கம் திரும்பி நடக்க வேண்டியிருந்தது. என்றாலும், தான் வழக்கமாகச் சந்திக்கும் மதுமிதாவவை இன்றும் சந்திக்க தவறவில்லை. ஆனால் அவருடைய பார்வையில் இன்று ஒரு சின்ன மாற்றம் இருந்தது. அவள் இளமையாகத் தெரிந்தாள். ஆனால் இப்போது மதிக்கு வயது 58 முடிந்திருந்தது.
“அந்த சிந்தனை அவருக்கு இன்று எப்படித் தோன்றியது? என்று மட்டுமல்ல ஏன் தோன்றியது என்றும் தெரியவில்லை. அதை அவளிடமே கேட்டுவிடலாமா?” என்றும் நினைத்தார். ஆனால், “எப்படி கேட்பது? அவ்வாறு கேட்டால் அவள் வருத்தப்படுவாளோ என்னவோ” என்று நினைத்து வழக்கத்திற்கு மாறாக ஏதும் பேசாமல் அங்கிருந்து சத்தமின்றி நகர்ந்தார்.
அலுவலகத்தினுள்ளே நுழைந்தவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சிக் காத்திருந்தது.
அவருடைய இருக்கையில் வேறு யாரோ ஒருவர் அமர்ந்து பரபரப்பாக ஒரு பைலை ஆராய்ந்து கொண்டிருந்தார்.
அவருடைய டேபில் மேல் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்ட புதிய பெயர் பலகை ஒன்று பிரகாசமாய் இருந்தது.
அதை உற்றுப்பார்த்த மதியின் உதடுகள் “மதுமிதா…. மதுமிதா….” என்று உச்சரித்தன.
அலுவலகத்தில் எல்லோரும் புதிதாய்ப் பொறுப்பேற்றுக்கொண்ட மதுமிதாவை வாழ்த்திவிட்டுத் தம்முடைய இருக்கைக்குச் சென்றார்கள். அவர்களுடைய வாழ்த்துகளை ஏற்குமுகமாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருந்தார் மதுமிதா.
முக்கால் பாகம் நறைத்திருந்த கூந்தலும் முகத்திற்குப் போட்டிருந்த மேக்கப்பையும் மீறி தெரிந்த சுருக்கங்களும் வயது ஐம்பது ஐம்பைத்தைந்து இருக்கும் என்று தெளிவாகக் காட்டின. ஏறக்குறை தன்னுடைய வயசொத்த அந்த நபருக்கு மதியும் தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
ஆனால் அதை அவள் ஏற்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
புதிதாகப் பொறுப்பேற்ற மதுமிதா மட்டுமல்ல அலுவலகத்தில் இருந்த வேறு யாரும் கூட அப்போது மதியைப் பார்க்கவில்லை.
அதனால் அவர் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பினார்.
படிக்கட்டை நோக்கி நடக்க ஆரம்பித்த அவருடைய கால்கள் வேகமெடுத்தன. படிக்கட்டை நெருங்கிய போது அவர் தன்னுடைய மதுமிதாவைப் பார்த்து வழக்கம் போல சிரித்த முகத்துடன் கையசைத்தார்.
அதுதான் அவர் அலுவலகத்திற்குக் கடைசியாக வந்தது. அதன் பிறகு நான் அவரை அங்குப் பார்க்கவே இல்லை…
நான் யார் என்று கேட்கறீர்களா?
நான் தான் மதுமிதாவின் ஆவி…