மஞ்சள் குளித்த மாலைப்பொழுதில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 5, 2020
பார்வையிட்டோர்: 25,106 
 

மஞ்சள் குளித்து சிவந்த வானமானது சூரியன் கடலை நோக்கி மெல்ல இறங்க இறங்க மேலும் சிவந்து கொண்டிருந்தது. அந்த வானம் சிவந்து கொண்டிருப்பதைப் போலவே நிரோஷனின் மனதும் சிவந்து கொதித்துக் கொண்டிருந்தது. அவன் அந்த கடற்கரைக்கு வந்து பத்து நிமிடங்கள் ஆகின்றன. சரியாக ஐந்தரை மணிக்கு வந்துவிடுவேன் என்று கூறிய வசந்தாவை இன்னும் காணவில்லை. இந்தப் பத்து

நிமிடங்களாக அவன் மனம் “தவியோ தவி” என்று தவித்துக் கொண்டிருந்தது .

அவள் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அவன் மனதை முள் கொண்டு குத்துவது போல் அத்தனை வலியாக இருந்தது . நிரோஷனும் வசந்தாவும் கடந்த ஆறு மாத காலமாகவே மிக நெருக்கமாக காதலித்து வந்தார்கள். அண்மைக்காலமாகவே ஒவ்வொரு நாளும்

அந்த கடற்கரையில் சந்தித்து அலவலாவி பேசிக்கொள்வார்கள். அவளை ஒருநாள் சந்திக்காமல் விட்டால்கூட நிரோஷனால் தூங்க முடியாது. அவளுக்கும் கூட அப்படித்தான். அவர்கள் பிரிந்து இருக்கும் ஒவ்வொரு கணத்தையும் பெருமூச்சு விட்டு ஏக்கத்துடன் கழித்தனர்.

அன்று அவனுக்கு ஏக்கமும் பெருமூச்சும் அதிகரித்திருந்தமைக்கு காரணம் அன்றைய தினம் அவளுக்கு தன் காதலின் பரிசாக ஒரு முத்தம் கொடுத்து விட வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டு அவன் வந்திருந்தான். அதனால் அவளை சந்திக்கும் வரை அவனுக்கு இருப்பு கொள்ள முடியாமல் இருந்தது.

மறுபுறம் அவள் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தன்னை அவள் ஏமாற்று கிறாள் என்று கோபமடைந்து மனதுக்குள்ளேயே அவளை திட்டித் தீர்க்கவும் அவன் தவறவில்லை .ஒருவாறு 15 நிமிடங்கள் அவனை தவிக்க வைத்து விட்டு அவள் வந்து சேர்ந்தாள். அவள் ஓடி வந்து அவன் கைகளை பிடித்துக்கொண்டு தான் வர தாமதமேற்பட்டதற்கு மன்னிப்புக் கேட்டு காரணம் கூறியபோதும் அவன் மனம் அவளை மன்னிக்கவில்லை . அவன் அவளைத் தண்டிப்பதாக நினைத்து மற்ற பக்கம் திரும்பிக் கொண்டு தன்னையே தண்டித்துக் கொண்டான். ஒருவாறு சமாதானம் கொண்டு அவர்கள் ஒருவரை ஒருவர் நெருங்கி அமர்ந்தனர்.

இதற்கிடையில் சூரியன் கடலுக்குள் சற்றே மறைய அவ்விடத்தில் கருமை படர்ந்திருந்தது . சற்றுத் தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு மனித உருவங்களை தெளிவாக பார்க்க முடியாத அளவுக்கு வெளிச்சம் மங்கிக் காணப்பட்டது . இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட நிரோஷன் தான் வீட்டில் செய்துகொண்டு வந்தருந்த ஒத்திகையை மனதில் ஞாபகப்படுத்திக் கொண்டு ” அன்று அவளுக்கு ஒரு மறக்கமுடியாத காதல் பரிசு கொடுக்கப் போவதாகக் ” கூறினான்.

அவள் “அது என்ன பரிசு ” என்று கேட்பதற்கு முன்னமேயே அவள் முகத்தை தன்னருகில் வளைத்து அவள் எதிர்பார்க்காத விதத்தில் அவள் உதடுகளில் அழுத்தி முத்தம் ஒன்றைக் கொடுத்தான். இந்தத் திடீர் செயலால் வசந்தா நிலைகுலைந்து போனாள். இதனை அவள் ஒரு போதும் எதிர்பார்த்திருக்கவில்லை .

அதிர்ச்சி மேலீட்டால் மிகுந்த திகைப்படைந்த அவளின் மனம் பட படத்துக்கொண்டது. சடுதியாக அவள் மனதில் இனம்புரியாத கோப ஒன்றும் ஏற்பட்டது . ” இனிமேல் எந்தக் காரணத்தைக் கொண்டும் தன்னுடன் அவன் பேசக்கூடாது” என்று கோபமாகக் கூறிவிட்டு எழுந்திருந்து விருட்டென அவ்விடத்தி லிருந்து போய்விட்டாள்.

எல்லாமே ஒரு நாடகம் போல் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நடந்து முடிந்து போய் விட்டன . நிரோஷன் ஏதோ பெரும் தவறை செய்து விட்டவன் போல் மனதில் குற்ற உணர்வு மேம்பட்டவனாக உடம்பையும் மனதையும் கூனிக் குறுகிக் கொண்டு அவ்விடத்திலேயே நீண்ட நேரம் அமர்ந்திருந்தான். அந்தச் செயலை அவள் ஏன் அவ்வளவு பெரிது படுத்தினாள் என்பதனை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை .

அவர்கள் இருவருக் கிடையிலும் காணப்பட்ட அந்த பெரும் காதலுக்கிடையில் இந்த சிறிய முத்தம் எவ்வாறு இப்படி ஒரு பெரிய பாராங் கல்லாய் வந்து விழுந்தது என்பதை அவனால் விளங்கிக்கொள்ள முடியவில்லை . ” சரி , அவள் தானாகவே தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டு தன்னைத் தேடி வந்துவிடுவாள்” என்று மனதைத் தேற்றிக் கொண்டு நிரோஷன் அங்கிருந்து வீட்டுக்கு வந்து சேர்த்தான் .

ஆனால் அடுத்தடுத்து வந்த நாட்களிலும் அவளிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லை . தொலைபேசி மூலமும் அவளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை . அவள் சிம்கார்டை மாற்றி வேறு காட் போட்டிருக்க வேண்டும் . அவள் வேண்டும் என்றே தன்னை பழி வாங்குகிறாள் என்று அவன் மனம் குமைந்து குமைந்து ஏங்கிப் பெருமூச்சு விட்டது . அவனுக்கு உண்ணவோ குடிக்கவோ மனம் வரவில்லை . அவன் சோர்ந்து போய் கட்டிலில் சரிந்து விழுந்து கிடந்தான். தன் வாழ்வில் எல்லாமே முற்றுப்பெற்று போய்விட்டதோ என்ற ஒரு சூனிய மனநிலை அவனைப் பிடித்து ஆக்கிரமித்துக் கொண்டது. அவன் எவ்வளவு கடுமையாக முயற்சி செய்த போதும் உறக்கம் என்பது அவன் கண்களை நாட மறுத்தது . அவன் வெறும் தண்ணீரை மாத்திரமே குடித்துக் கொண்டு மல்லாந்து விழுந்து கிடந்தான்.

வசந்தாவின் நிலைமையும் அங்கே சந்தோஷமானதாக இருக்கவில்லை. அன்று மாலை கடற்கரையில் அவளும் நிரோஷனும் சந்தித்துக் கொண்டபோது நிரோஷன் அவள்

உதடுகளில் முத்த மிட்டதை ஒரு அத்துமீறிய செயல் என்று கருதி ஆத்திரத்தில் ” இனிமேல் தன்னுடன் பேச வேண்டாம் ” என்று கூறிவிட்டு அவள் வந்துவிட்ட போதும் , அப்படி தான் செய்தது சரியா ? என்ற குற்ற உணர்வு அவள் மனதை வதைக்க ஆரம்பித்தது . வசந்தா மீது நிரோஷன் எந்த அளவுக்கு காதல் கொண்டிருந்தான் என்பதை அவள் நன்கு அறிவாள் . அப்படியானால் அன்று நிரோஷன் மீது அப்படி ஏன் ஒரு கோபம் தனக்கு ஏற்பட்டது என்பதை நினைக்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது . ஏதோ ஒரு சடுதியான மனவெழுச்சி காரணமாக அவள் அப்படி செய்துவிட்டாள். ஆனால் பின்னர் அதனை நினைத்து நினைத்து அவளும் தன்னையே வருத்திக் கொண்டாள். ஆனால் அவள் மனம் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு அவனுடன் சமாதானத்துக்கு சென்றுவிட ஒத்துக் கொள்ளவில்லை . அவள் இரண்டும் கெட்ட நிலையில் தவித்துக் கொண்டிருந்தாள் . ஆனால் உடனேயே ஓடிச்சென்று நிரோசன் மார்பில் சாய்ந்து கட்டியணைத்து கதறி அழுக விட வேண்டுமென்று அவள் மனம் அவளது பிடரியைப் பிடித்து உந்தித் தள்ளியது. ஆனால் பிடிவாதம் கொண்ட அவளது மற்றொரு மனமோ அப்படி செய்து விடாதே , அவன் செய்த செயலுக்கு அது அவனுக்கு ஒரு தண்டனையாக இருக்கட்டும் என்று பின்னால் பிடித்து தள்ளியது .

இப்படியாக அவள் அந்த மனப் போராட்டத்தில் இருந்து விடுபட இரண்டு வாரங்கள் கழிந்து விட்டன.

அடுத்த நாள் ஒரு திங்கட்கிழமை. அதிகாலையில் அவள் கண்விழித்து எழுந்தபோது அவள் மனம் தெளிவாக இருந்தது . இன்று எப்படியாவது நிரோசனை சந்தித்து தன் உள்ளக் கிடக்கைகளை கொட்டித் தீர்த்து விடுவது என்று அவள் தீர்மானித்தாள் . அந்த நினைப்பு அவளை புதுமணப் பெண்ணைப் போல் துள்ளச் செய்தது . குளித்து தன்னை அலங்கரித்துக் கொண்டு ஆற அமர அவசரமின்றி அவள் புறப்பட்டுச் சென்றாள். அப்பொழுதுதான் அவளுக்கு நிரோஷனைப் பற்றிய அக்கறையும் பரிவும் தோன்றியது . இந்த இரண்டு வாரங்களாக தன்னை அவன் பார்க்காமல், பேசாமல் , ஒரு செய்தியும் அறிந்துகொள்ளாமல் எப்படியெல்லாம் தவித்திருப்பான் என்று யோசித்துப் பார்த்தாள். நிச்சயமாக அவளது இந்த பிரிவை அவனால் இலகுவாக எடுத்துக் கொண்டிருக்க முடியாது என்று அவளுக்கு நிச்சயமாக தெரிந்தது .

ஒரு கணம் அவளது மனது துணுக்குற்று ” படீர் ” என்று அடித்துக்கொண்டது .

அவள் தான் பிரயாணம் செய்து கொண்டிருந்த 3 வீல் வாகனத்தை வேகமாக ஓட்டும்படி சாரதி யிடம் கூறினாள் . அவளது மனம் மீண்டும் சலனமுற்றது.

அவளது மனதில் தோன்றி இருந்து எல்லா சந்தோஷங்களும் திடீரென எங்கோ ஓடி மறைந்து விட்டன. அவள் இதுவரை நிரோஷனின் பக்கத்திலிருந்த நியாயங்களை கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்காமல் இருந்தது தான் செய்த மிகப்பெரிய தவறு என்று கருதினாள். அவள் அதனை உணர்ந்தபோது காலம் கடந்து போயிருந்தது .

அவள் நிரோஷனின் வீட்டுக்குச் செல்லும் பாதையில் திரும்பியபோது அங்கே சுவரில் ஒட்டப்பட்டிருந்த ஒரு மரண அறிவித்தலை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் . அதில் நிரோஷனின் படத்தைப் போட்டு மரண அறிவித்தல் ஒன்று பிரசுரிக்கப் பட்டிருந்தது. மேலே கயிற்றில் வெள்ளைக் கொடிகளும் தொங்கிக் கொண்டிருந்தன. அவள் தலை இலேசாக சுற்றத் தொடங்கியது. கண்களும் இருண்டு கொண்டுவந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *