போதை ஞானப் புத்தன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 12,525 
 
 

”நல்லா கேட்டுக்கடே… இப்படியே மேக்கப் பாத்துப் போனியன்னா, கேட்டு வரும். உம்பாட்டுக்கு ‘குருவி’ விஜய் மாறிக்கே பறந்து ரயிலுக்குள்ள பூந்து போயிடலாம்னு ஓடாத. பொறுத்துப் போ! தாண்டி பீச்சாங்கைப் பக்கம் திரும்பி நேராப் போனியன்னா, அந்தச் சாலை குறுக்குத் துறையிலக் கொண்டுவிடும். அங்கதான் அவ குளிச்சுக் கிட்டிருப்பா. உன் தொரட்டிக் கண்ணை வெச்சுத் தூண்டி போடாம, மூஞ்சைப் பொத்திக்கிட்டு குடுத்துட்டுத் திரும்பிப் பார்க்காம ஓடியாந்திரணும். வெளங்கு தாடே?”

குதூகலம் நிரம்பிய குரலில், ஒருவித பெருமித மின்னல் முப்பிடாதியின் முகத்தில் பளிச்சிட்டது. பையன் தருவதை வாங்கிய பின் சில்வியாவின் முக பாவனைகள் என்ன விதமாக இருக்கும் எனக் கற்பனை செய்கையில் சிலிர்ப்பாக இருந்தது. குறுக்குத்துறைத் தண்ணீரில் கூட்டம் கூட்டமாக வலசை போகும் மீன்களைத் தன் கண்களாகக் கற்பனை செய்து, ஆயிரமாயிரம் கண்களால் சில்வியாவைத் தரிசித்து மகிழ்ந்தான்.

தான் இத்தனை துணிச்சல் உள்ளவனாக மாறிப்போன அதியசத்தை அவனா லேயே நம்ப முடியவில்லை. திடீரென்று எல்லோரிடமும் குரல் உயர்த்திப் பேசியதாக உணர்ந்தான். நடை, உடை, பாவனை மாறிப் போனான். எல்லாம் இந்தக் கருமம் புடிச்ச காதல் செய்கிற மாயம். அதுவும் சாதாக் காதல் இல்லை… கள்ளக் காதல்!

”சவம்! காதலிக்க ஒருத்தி சிக்குறதே பெரும்பாடு. இதுல என்ன எழவு நல்ல காதல்… கள்ளக் காதல்? நீ என்ன தாசில்தாராடே, காதலுக்கு சீல் வெச்சு சர்டிஃபிகேட் குடுக்க..? ஒங்க சோலியப் பாத்துக்கிட்டுப் போங்கடே!”

அவனைச் சொல்லிக் குற்றமில்லை. இந்தத்தண்டி திருநெல்வேலியில் அவன் காதலிக்க ஒரு பெண் கிடைக்காமல் போனது யார் செய்த குற்றம்? அவனும் லாலாக் கடை முக்கில் நாலு மாசம், சிந்து பூந்துறை சந்துகளில் சில காலம், கொக்கரக் குளம் ஆற்றங்கரையில் கொஞ்ச நாட்கள் எனத் தன் உழைப்பின் உயர் எல்லை வரைக்கும் தத்தித்தான் பார்த்தான். எந்தச் சிறுக்கியும் சீண்டவில்லையென்றால் சவம், வேறு என்னதான் செய்து தொலைப்பது?

அவனுக்கும் ஒரு மாமன் மகள் இருக்கிறாள். மரியம் ஜோசபின் என்று பெற்றோரால் இடப்பட்ட அவளது பெயர் ஏனோ இவனுக்குப் பிடிக்கவில்லை; அல்லது வாயில் நுழையவில்லை. இவன் வைத்த பெயர் சிலுக்கு. கருப்பட்டி மிட்டாய் கலருடன் பூப்போட்ட சுடிதாரை விரும்பி அணியும் சிலுக்கு, தற்சமயம் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவின் பிரமாண்ட துணிக் கடையில் விற்பனைப் பெண் ணாகப் பணிபுரிகிறாள். டைட் ஜீன்ஸூம், அதைவிட டைட்டான டி-ஷர்ட்டுமாகக் கடைக்கு வரும் சென்னைப் பெண்களின் பேரழகில் மயங்கி நிற்பது அவளது தின வாழ்வின் குறிப்புகள். ”ஞாத்திக்கெழம ஊருக்குப் போகுதேன். உன் மச்சானுக்கு ஏதும் சேதி இருக்கா?” என ஷர்ட் பிட்ஸ் எடுக்க வரும் குணசேகரன் லிஃப்ட்டுக்குப் போகும் வழியில் அவளை அடிக்கடி கிண்டல் செய்வான். அவனும் திருநெல்வேலிதான். ஆனால், வாரத்துக்கு ஒருக்க அவனைப் பார்ப்பதே பெரிய விஷயம். மூன்றாவது மாடிக்குக் காலையில் போனால், இரவு 10 மணிக்குதான் வெளியே வர முடியும்.

பொம்மைகள் அணிந்திருக்கும் உடைகளைத் தினமும் கழற்றி மாற்ற வேண்டிய பொறுப்பு அவளுக்கும், ஆறுமுகனேரி மாரிச்செல்விக்கும் வழங்கப்பட்டு இருந்தது. கூட்டம் குறைந்த இரவின் பொழுதொன்றில் சிலுக்கின் மனதில் திட்டம் உதித்தது. மாரிச்செல்வி ஓடிப் போய் பொம்மை தூக்கி வந்தாள். இப்போது ஜீன்ஸூம் டி-ஷர்ட்டும் மாரிச்செல்வியின் உடம்பை ஆக்கிரமித்திருந்தன. அவளுக்கானால் முகம்கொள்ளாச் சிரிப்பாணி. ‘சூப்பரா இருக்குடி’ என மாரிச்செல்வி சொன்னாலும், ஜீன்ஸ், டி-ஷர்ட்டில் தான் எப்படி இருப்போம் என தன்னைத்தானே பார்க்கும் ஆர்வம். ஆனால், டிரையல் ரூம் அந்தப் பக்கம் இருக்கிறது. போனால், மத்த புள்ளைகள் பார்த்துப் போட்டுக்கொடுத்துவிடும். திடீரென்று மாரிச்செல்வி ஓடிப்போய் ஒரு சுடிதார் தூக்கி வந்தாள். பிரித்ததும் அதன் முன் பகுதியில் ஒரு ரூபாய் சைஸூக்குக் கண்ணாடிகள் பதிக்கப்பட்டு இருந்தன. அதில் தன் உடம்பின் அங்கங்களை பிட்டு பிட்டாகப் பார்த்துப் பரவசப்பட்டாள் சிலுக்கு. அவள் பரம்பரையில் முதன்முதலாக ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்த பொம்பளைப் பிள்ளை அவள்தான். இந்த எதிர்க் கலாசாரச் செயல்பாட்டின் அரசியலை அவள் அறிந்திருக்கவில்லை என்றாலும், ஆனந்தத்தின் உச்சத்தில் இருந்தாள் சிலுக்கு. விட்டால் அவள் அழுதுவிடவும் கூடும். பிறகு, அதே உடை மாரிச்செல்வியின் உடம்புக்கு மாறி, கண்ணாடி பிரதிபலித்தது.

குடோன் அறையின் குழல் விளக்கு வெளிச்சத்தில் நடந்த இந்தச் சம்பவம் மற்றவர்களுக்குத் தெரியாமல் போனதுதான் ஆச்சர்யம். அதன் பிறகு சிலுக்கின் மனது, தான் ஜீன்ஸ் அணிந்தவள் என்கிற பெருமிதத்தில் மிதந்தது. ஆனால், அவளுக்கு முப்பிடாதி மீது ஒருபோதும் காதல் வந்ததில்லை. அது ஏன் என அவளுக்கும் தெரியவில்லை. அவன் அனுப்பும் குறுஞ்செய்திகளை அவள் பெரும்பாலும் புறக்கணிப்பாள். தன் தகுதிக்கு மீறி முப்பிடாதி ஆசைகொள்வதன் பின்னுள்ள அதிகாரத்தை அவளது எளிய மனது உணர்ந்துகொள்ளச் சிரமப்பட்டது. ஆனாலும், இப்போதும் சிலுக்கு அவனது சாய்ஸில் இருக்கிறாள்.

இதற்கிடையே இடைக்கால நிவாரணமாக வந்தவள்தான் அந்த தச்சநல்லூர் சுடிதார். ரொம்பக் காலம் வரைக்கும் போக்குக் காட்டினாள். ‘மாட்டுனான்டா மச்சான்’ என்று கூட்டாளிகள் குதூகலித்த நாளில், பீர் பாட்டில்கள் நுரை பொங்கின. ‘நீ பச்சை கலர் கர்ச்சீப் வெச்சிருக்க. அவ உன்னைப் பச்சை பச்சையாத் திட்டுறா. குட் காம்பினேஷன்’ என்று ‘காதல்’ படத்தின் மேன்ஷன் டைரக்டர் போல கூட்டாளிகள் உசுப்பேற்றிய தினங்களில், முப்பிடாதி தேரிக்காடுகளில் ஒரு பாட்டம் டூயட் பாடி முடித்திருந்தான். இன்டர்வெல் பிளாக்கில் எழுந்து பார்த் தால், தச்சநல்லூர் ஜிங்குச்சான் ஒரு தினுசாகப் பார்த்தாள்; இவனை அல்ல, இவன் கூடவே சுற்றிய இன்னொருவனை. முப்பிடாதி வெறுத்துப் போனான். ‘எங்கே கடித்து வைத்துவிடுவானோ’ என்ற பயத்தில், காதல் வயப்பட்டவன் இவனிடமிருந்து ஒதுங்கி விலகினான்.

வண்ணாரப்பேட்டை ரவுண்டானாவிலிருந்து தச்சநல்லூர் வரும் வழியில் இடதுபுறமாக இருக்கும் அரசு மதுபானக் கடை அன்று இரவு முப்பிடாதியின் வருகை யைத் தன் பேரேட்டில் குறித்துக்கொண்டது. இரவு 10 மணிக்கு மேல் மதுக் கடைகளை மூடச் சொன்ன அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கை தார்மிக ரீதியாகக் கண்டிக்கும்பொருட்டு, வாசலில் இருக்கும் புங்க மரத்தின் கீழ் அமர்ந்து, இரவு முழுவதும் குடித்துக்கொண்டே இருப்பது என்ற முடிவுக்கு வந்தான்.

பையில் இருந்த பணம் முழுவதும் மதுவாகவும், காரக்கடலை, நேந்திரம் சிப்ஸ் மற்றும் வாட்டர் பாக்கெட்டுகளுமாக உருமாறின. இப்போது இந்தக் கணம் உலகின் துயர்மிகு உயிர் தான்தான் என ஐயம் திரிபற நம்பினான். ரம் கொஞ்சம், பெப்ஸி கொஞ்சம், மீதிக்குத் தண்ணீர் என்று அந்தப் போதையிலும் சிறப்பான கலவையில் ஒரு ரவுண்ட் அடித்து நிமிர்ந்து, கடைவாயில் வழிந்த கசப்புத் திரவத்தைப் புறங் கையால் துடைக்கையில் வொயர் ஒன்று தட்டுப்பட்டது. இயர் போன். எடுத்து எஃப்.எம். ரேடியோவைத் திறந்தான்.

”வயித்தை மட்டும் நிரப்பிக்கிட்டு ஐம்புலனும் பட்டினியாக் கிடந்தா யாருக்கு லாபம்? லஞ்சுக்கொரு மஞ்சுளாவும் டின்னருக்கு வெண்ணிலாவும் இருந்தா இளமைக்கு யோகம்…” – கண்ணடித்து, கை நீட்டிக் கூப்பிடும் பாவனையில் தச்சநல்லூர்க்காரியும், பின்னாடியே சிலுக்கும் எதிரில் நிற்பதாகவே அந்தப் பாடல் அவனை எண்ண வைத்தது. புஜங்களை உயர்த்திக் கட்டுக்கோப்பான தன் உடம்பை ஒரு கணம் மெச்சிக் கொண்டான். மஞ்சுளா, வெண்ணிலா என்ற பெயர்களை அவன் உதடு கள் பெருங்காதலுடன் மறுபடியும் மறுபடியும் உச்சரிக்க முற்பட்டன. அவன் கால் பட்டு பாட்டில் ஒன்று உடைந்து சிதறிச் சிரித்தது. முப்பிடாதியின் இந்த அவஸ்தைகள் கிரேஸ் கருணாஸூக்குப் புரியவே இல்லை.

‘உலகம் இன்பத்துக்கு ஏங்கிக் கிடக்கு…
ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறிக் கிடக்கு…
தப்புகள் இல்லை என்றால் தத்துவம் இல்லையடா…
தத்துவம் கிடைக்கட்டுமே தப்பு செய்யேன்டா!’

முப்பிடாதி படாரென்று ஃப்ரீஸ் ஆனான். அவனை இத்தனை காலமாக அமிழ்த்திய அனைத்து தார்மிகப் பயங்களுக்கும் ஒருவிதமான தர்க்க நியாயத்தைக் கண்டடைந்துவிட்டான். கட்டுகள் அவிழும் சத் தத்தை உணர்ந்தான். ஒழுக்கத்தின் வரையறைகள் ஊருக்கு ஊர் மாறிக் கிடப்பதையும், உலகம் இன்பத்துக்கு ஏங்கிக் கிடப்பதையும் இத்தனை நாள் உணர முடியாமல் இருந்தமைக்காகக் குற்றவுணர்ச்சி அடைந்தான். அவ்விதம் தன்னை உணரவிடாமல் தடுத்த திரைகளின்பால் கணக்கற்ற கடுப்பு வந்தது. குழந்தைத்தனமான காரணங்களால் தன்னால் புறந் தள்ளப்பட்ட வாய்ப்புகளை எண்ணி எண்ணித் துயருற்றான். தன் வாழ்நாள் முழுவதையும் செலவழித்து, ஜே.ஜே. கண்டுணர்ந்த உள்ளளித் தரிசனத்தை ‘சீனாதானா’ பாடலில் ரகசியா அவனுக்கு வழங்கினாள்.

முப்பிடாதியின் கண்களில் இருந்து கரகரவென நீர்த் துளிகள் வெளியேறின. கண்ணீரின் உப்பு கலந்த நான்காவது ரவுண்ட் திரவம் அவன் எதிரே இருந்தது. எடுத்துக் குடிக்க நிமிர்ந்த நொடியில் டாஸ்மாக் சூப்பர்வைஸர் கடையைப் பூட்டிவிட்டு டி.வி.எஸ். எக்ஸெல் சூப்பரை உருட்டி வந்தார்.

”அண்ணாச்சியோவ்…”

‘என்ன..?’ என்பது போல் சூப்பர்வைஸரின் தலை திரும்பியது.

‘லஞ்சுக்கொரு மஞ்சுளாவும் டின்னருக்கு வெண்ணிலாவும் இருந்தா இளமைக்கு யோகம்’ கரகரத்த குரலில் பாடியபடிக்கு டான்ஸ் ஆடிய முப்பிடாதியைக் கண்றாவியான ஒரு துளி ஏளனப் பார்வையுடன் கடந்தார். அவர் சர்வீஸூக்கு இவனெல்லாம் எறும்பு ஒண்ணுக்கு விட்டதைப் போல ஒன்றுமே இல்லை. ஆனால், ‘எல்லாப் போதைக் காரனும் போதையில் இருக்கும்போது, அந்த நொடியில் தன்னைவிட அதிக போதையில் வேறு எவனும் இருக்க முடியாது என்ற இறுமாப் பில்தான் திரிவான்’ என்ற ‘பாட்டில் இடக்கை திருகு விதி’ அடிப் படையில் முப்பிடாதியும் அவ்விதமே தொழிற்பட் டான்.

எதிரேயிருந்த என்.ஹெச்-7 நெடுஞ்சாலையில் காற்றாலைப் பாகங்களைச் சுமந்தபடி காவல்கிணறு நோக்கிக் கடந்து சென்ற 30 டயர்கள் கொண்ட நீண்ட லாரியை நோக்கிக் காறித் துப்பினான். திடீரென்று அழுதான். ஒரு குவார்ட்டரில் பாதியளவு சரக்கு இன்னும் மிச்சம் இருந்தது. எடுத்து மூடி, புங்க மரத்து இடுக்கில் சொருகியவன், தான் அடுத்த முறை இங்கே வரும்வரைக்கும் அது அதே இடத்தில் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து பாட்டிலுடன் விடிய விடியப் பேச்சுவார்த்தை நடத்தினான். இரவின் அடர்த்தியான இருட்டு அவனது போதைக்கு சைட்-டிஷ்ஷானது.

அதன் பிறகு, தச்சநல்லூர் என்ற ஏரியாவே அவனுக்கு வெறுப்பு உமிழ்வதாக இருந்தது. புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கினான். எந்த ஃபிகர், எத்தனை மணிக்கு, எந்த இடத்தை க்ராஸ் செய்வாள் எனக் கணக்கெடுப்பது, ‘உங்க காது ரொம்ப அழகாயிருக்கு’ என்று கூச்சமே இல்லாமல் புளுகுவது போன்ற கருமாந்திரத்தை எல்லாம் விட்டொழித்தான். அவனது ஒரே நோக்கம் யாரையாச்சும் ‘கரெக்ட்’ செய்வது என்பதாக மாறிப்போனது. இன்ஃபாக்ட், இதற்கு முன்பும் அதுதான் நோக்கமாக இருந்தது என்றாலும், அது இத்தனை வெளிப்படையானது இல்லை. ஆனாலும், அவனது நோக்கம் நிறைவேறியபாடில்லை. அவனும் விடுவதாக இல்லை. தீராத வேட்கையில் கண்ணுக்குப் புலப்படாத மாயக் கணமொன்றில், முப்பிடாதி கண்டுணர்ந்த தேவதைகளின் தேவதைதான் சில்வியா.

சில்வியா மீது அவன் காதல்கொண்டு சரியாக 8.30 மணி நேரம் ஆகிறது. அருள்மிகு சுடலையாண்டவர் கோயில் கொடை விழாவின் நான்காவது நாளில், அதாவது நேற்று இரவு 11.30 மணிக்கு தாமிரபரணி ஆற்றின் கரையோரம் சிந்துபூந்துறையில் அவளைச் சந்திக்க நேர்ந்தது. முப்பதை ஒட்டிய வயதிருக்கலாம். தாழம்பூ நிறத்தில் அவள் உடுத்தியிருந்த சேலை, திருவிழாவின் பளபளா வண்ணங்களில் ஜாலம் காட்டியது. இடது கையில் பெரிய பலூன் வைத்திருந்தாள். வலது கையில் ரோஸ் நிற சேமியா ஐஸ். இவன் பேக்கு மாதிரி அவளையே சுற்றிச் சுற்றி வந்ததை சில்வியா ஓரக் கண்ணால் அல்ல… முழுக் கண்ணாலேயே பார்த்தாள். பார்த்துக்கொண்டே இருந்தாள். ‘கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்ன…’ ஒருவித நளினப் புன்னகையுடன் முப்பிடாதி பாடினான்.

”ஏய்! நில்லு…”

சட்டென அட்டென்ஷனில் நின்றான்.

”நானும் அப்பத்திலேர்ந்து பாக்கேன்… உத்து உத்துப் பாக்க… என்னல வேணும்..?”

‘அய்! பேசிவிட்டாள்..!’ அவளது குரல்தான் எத்தனை சௌந்தர்யமாக இருக்கிறது. ‘இன்னிசை அளபடையே… அமுதே… இயற்கையின் நன்கொடையே!’

அவன் ஒரு தினுசாகப் பார்த்துக்கொண்டே இருந்த விதமும், ஒரு கையை முன்னோக்கி நீட்டியிருந்த விதமும் சில்வியாவுக்கு எப்படித் தோன்றியது எனத் தெரியவில்லை. கையிலிருந்த சேமியா ஐஸை அவனை நோக்கி நீட்டினாள். தாவிப் பிடித்துக் கிட்டத்தட்ட பறிக்க முற்பட்டான். ஆனால், சில்வியா அத்தனை சீக்கிரம் ஐஸைக் கொடுத்துவிடவில்லை. இறுகப் பற்றியிருந்தாள்.

”மூணு ரூவா! ஓ.சி-யில சேமியா ஐஸ் உங்கப்பனா குடுப்பான்” என்றவளின் கரங்கள், முப்பிடாதியின் சட்டைப் பாக்கெட்டில் எட்டிப் பார்த்த பத்து ரூபாயைக் கைப்பற்றி இருந்தது. இப்போது ஐஸ் அவனிடம். சில்வியா சில்லறை தேடினாள். அதற்குள் முப்பிடாதி காணாமல் போயிருந்தான். ஆனாலும், அவளது கழுத் திலிருந்து எட்டிப் பார்த்து ஹாய் சொன்ன தாலியை அவன் கவனிக்கத் தவறவில்லை. அன்று இரவு விடியும் வரைக்கும் விழித்திருந்து, சில்வியாவுக்கு முப்பிடாதி எழுதிய கள்ளக் காதல் கடிதம் இவ்விதமாக இருந்தது.

”பூனைக் குட்டியின் ரோமம் போலே என்னிடம் இருக்கும் மிகுதியான அன்பு, ஆவியாகி மேற்குத் தொடர்ச்சி மலையிடுக்குகளில் பதுங்கிக்கொள்கிறது என்றுதான் நேற்று வரை நினைத்தேன். சிந்துபூந்துறையிலும் தஞ்சம் புகுந்திருப்பதை நேற்றிரவுதான் கண்டுகொண்டேன். சுடலையாண்டவருக்கு நன்றி… உனக்கும்!”

இந்த மேன்மை தாங்கிய கடிதத்தைத் தாங்கியபடிதான் அந்தப் பையன் இப்போது குறுக்குத்துறை குளியல் கரைக்குப் போயிருக்கிறான். இவன் ரெட்டைப் பாலத்துக்கும் கொஞ்சம் தள்ளிக் காத்திருந்தான். பையன் வந்தான். அவனிடம் ஒரு கடிதம் இருந்தது. அதாவது, முப்பிடாதி அப்படி நினைத்தான். ஆனால், கடிதம் இல்லை. ஹமாம் சோப்பின் உள்புற வெள்ளைக் கவரில் முகத்துக்குத் தேய்க்கும் மஞ்சள்கொண்டு எழுதியிருந்தாள். ‘பண்றது கள்ளக் காதல்… இதுல என்ன எழவுக் கவிதை வேற..?’ வார்த்தைகளின் கீழே ‘சில்வியா குண்டலகேசி’ என்ற கையெழுத்தும் இருந்தது.

இவனுக்கு இப்போது தான் என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை. சில்வியாவின் சிக்னலைப் புரிந்துகொள்ள முடியாத கையறு நிலையில், வண்ணாரப் பேட்டை அரசு மதுபானக் கடை ஒன்றில் இந்த அகால வேளையில் பாடிக்கொண்டு இருக்கிறான்… ‘லஞ்சுக்கொரு மஞ்சுளாவும், டின்னருக்கு வெண்ணிலாவும் இருந்தா இளமைக்கு யோகம்!’

– 08-04-09

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *