நொந்தலாலா!

2
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 12,908 
 
 

‘தானெரிந்த சாம்பலைத் தானள்ளிப் பூசியவருண்டோ… நானள்ளிப் பூசினேனடி கண்ணம்மா, நானள்ளிப் பூசினேனடி’ என கீர்த்தனாவின் மண நாளன்று மடங்கிப் படுத்து மதியழகன் கவிதை எழுதினான். கூடிய விரைவில் அவன் மதியழகச் சித்தராய் மாறப்போகிறான் என்பதற்கு அந்தக் கவிதை கட்டியங் கூறியது. அதன்படியே காட்சி மாறியது. இப்போது திருவண்ணாமலையில் திக்குகளற்றுத் திரியும் சாமியார்கள் கூட்டத்தில் மதியும் ஒருவன்.

கலகக்காரன், கடவுள் மறுப்பாளனான மதி ஒரு கவளம் புளியோதரைக்கு அன்னதான மண்டபம் ஒன்றில் நிற்கிறான். சூனியத்தின் மைதானத்தில் இலக்கற்ற பந்தைப் போல உருள்கிறது இந்த இரவு. காற்றில், ஒரு சாமியாரின் பிரசங்கம் பியானோவின் இசைக்கற்றை போலக் கரைந்துகொண்டு இருக்கிறது.

‘‘டியர் ஃப்ரெண்ட்ஸ். ஒரு கை ஓசையிடுமா? இதோ ஓசையிடுவதை உற்றுக் கேளுங்கள். உலகம் முழுவதும் நிரந்தரமாய் நிறைந்திருக்கிற இந்த இசையின் பெயர் மௌனம். உற்றுக் கேளுங்கள்…’’ – அழைத்தார் சாமியார். உற்றுக் கேட்டான் மதியழகன். கீர்த்தனாவின் மௌனத்திலிருந்து பல்லாயிரம் பறையலிகள், லட்சோப லட்ச மந்திர உச்சாடனங்கள், கோடானுகோடி கோயில் மணிகள் எழுந்து வந்தன. இந்த பிரபஞ்சத்தின் எல்லா ஒலிகளும் மொழிகளும் சொற்களும் காதலுக்காகத்தான் படைக்கப்பட்டன என நினைத்தான். மறுகணமே, எல்லாவற்றையும் அதே காதல்தான் கொன்றது எனத் தோன்றியது.

அவனிடம் கீர்த்தனா பேசிய முதல் வார்த்தை என்ன? ஃப்ளாஷ்பேக்கைத் தவிர மதியிடம் என்ன இருக்கிறது… கேட்டுத் தொலைப்போம்.

திருப்பூர் அரசு மருத்துவமனை வராந்தா வில் உட்கார்ந்திருந்த மதியழகனிடம், நர்ஸ் உடையில் வந்து நின்ற கீர்த்தனா கேட்ட முதல் வார்த்தை, ‘‘நீங்கதான் பேஷன்ட்டா?’’

‘‘இல்ல… இல்ல… தோழர் அங்கே இருக்கார்’’ என அவன் பதற்றமாக வாசலுக்கு ஓட, அங்கே ரத்தம் வழிய உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தார் தோழர் அருள். ரெட்டிபாளையத்தில் அன்று காலை நடந்த ஓர் அரசியல் தாக்குதலில் எதிரிகளால் நடுரோட்டில் அடித்து நொறுக்கப்பட்டார். நல்லவேளையாக எதிரிகள் மாகாண ஆயுதமான அரிவாளோடு வராமல் மிதவாத ஆயுதமான உருட்டுக்கட்டைகளோடு வந்ததால், தாக்குதல் இந்த அளவில் முடிந்தது. மதியும் மற்ற தோழர்களும் இடையில் வந்து முக்கு கடை வரை சீறிய டாடா சுமோவைத் துரத்தித் திரும்பினர்.

‘‘பேஷன்ட்டுக்கு நீங்க என்ன வேணும்?’’-மதியின் முன்பு மறுபடி நின்றிருந்தாள் கீர்த்தனா. அப்போது தான் அவளைக் கவனித்தான். பார்த்த கணத்தில் நர்ஸ்களும் டீச்சர்களும் பிரத்யேகமான முகத்தைப் பெற்றி ருக்கிறார்கள் என ஃபீல் பண்ணினான். கருணையும் கர்வமும் கலந்து மிளிரும் முகம்.

‘‘எங்க தோழரு அவர்!’’

‘‘ஓ… ஃப்ரெண்டா! சரி, அவர் குடும்பமெல்லாம் எங்கே?’’

‘‘அவருக்கு குடும்பம்னு யாரும் கிடையாதுங்க. என்ன இருந்தாலும் கட்சி வந்து நிக்கும். பரவாயில்ல, சொல்லுங்க!’’

‘‘முதுகுல நல்லா அடிபட்டிருக்கு. ஒரு வாரம் இங்கே பெட்ல இருக்கணும். இந்த மருந்தெல்லாம் வாங்கிட்டு வந்துடுங்க’’ என்றாள்.

அம்மா, அப்பா, இரண்டு அண்ணன் அண்ணிகளுடன் அது வீடா, சாயப் பட்டறையா எனக் கண்டறிய முடியா பிரதேசத்தில் வாழ்ந்து வந்தான் மதியழகன். சாயக் கரைசல்கள் சாக்கடை யாய் ஓடும் தெருக்களில் செந்நிற சிந்தனைகள் வளர்த்தான். அந்த ஏரியா வில் கடைசியாக மூடப்பட்ட பஞ்சாலையின் கடைசித் தொழிலாளி அவன்தான். அங்கிருந்தபோதுதான் தோழர்களோடு பழக்கம். சொந்தமாகத் தறி ஓட்ட ஆரம்பித்தான். இப்போது குடும்பமென்று யாருமற்ற தோழருக்கு மருத்துவமனையில் ஒரு வாரம் உடனிருந்து உதவும் பொறுப்பை உளப் பூர்வமாய் ஏற்றிருக்கிறான்.

கீர்த்தனாதான் தோழரும், துணையாய் அவனும் இருந்த வார்டுக்கு நர்ஸ். உலகம் அழிந்தபோது மரப்பேழையில் தப்பிய நோவாவுக்கு, பூமியில் அமைதி திரும்பிவிட்டதைச் சொல்ல நெல்மணியோடு வந்த வெண்புறா மாதிரி வந்தாள். அப்போதுதான் சிகரெட் பிடித்துவிட்டு குப்பென்று கோல்ட் ஃபில்டர் திருப்புகழ் மணக்க வந்தான் மதி. கீர்த்தனா ஊசி போட ஏதுவாக தோழரின் கையைப் பிடித்து உதவினான். ஊசி போட்டு நிமிர்ந்தவள், ‘‘எக்ஸ்க்யூஸ் மீ… உங்க பேரு?’’ என இழுத்தாள்.

‘‘மதியழகங்க.’’

‘‘ம்… மதியழகன். சிகரெட் பிடிச்சா கொஞ்ச நேரம் கழிச்சு உள்ளே வாங்க, சரியா?’’

‘‘சரிங்க… ஸாரிங்க!’’

கொஞ்ச தூரம் சென்று திரும்பி, ‘‘சிகரட்டே பிடிக்காம வந்தீங்கன்னா இன்னும் நல்லது’’ எனச் சிரித்தாள். தீர்ந்த சிகரெட் மாதிரி மதியை மிதித்த சிரிப்பு. நடந்த உரையாடலை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தான். வாயை கூட்ஸ் வண்டியாக்கி ‘உஃப்’பென்று உள்ளங்கையில் ஊதிப்பார்த் தான். வெளியே போய் வாசனைப் பாக்கு வாங்கி ஆவேசமாக மென்றான். என்ன செய்தாலும் எவ்வளவு நினைத்தாலும் கடைசியில் மிச்சமாகி நின்றது அந்தச் சிரிப்பு.

அவளது சிறு சிரிப்பில் நீண்ட தூரிகை இரவிலும் அழியாத வானவில்லை அவன் வானத்தில் வரைந்தது. மற்றொரு வாள் நீண்டு வானத்தையே கிழித்தது. மறுநாள் சிகரெட் புகைக்காமல் அவளுக்காகக் காத்திருந்தான்.

‘‘ப்ளீஸ், கொஞ்சம் வாங்களேன்…’’ என பதற்றமாய் வந்தாள் கீர்த்தனா. வெளியே நெஞ்சுக்கூடு விம்மித் துடிக்கும் முதியவரை ஒருவர் தாங்கிக்கொண்டு நின்றார். அவரை மதியும் சேர்ந்து ஸ்ட்ரெச்சரில் ஏற்றி தூக்கி வந்தனர். ‘‘யாரு… என்னானு தெரியலீங்க. ஆட்டோல ஏறினவரு பொசுக்குனு நெஞ்சப் புடிச்சிக்கிட்டுப் படுத்துட்டாரு’’ எனக் கொண்டு வந்தவர் புலம்பினார். கீர்த்தனாவின் ஒரே பார்வையில் ஓடும்பிள்ளையாகி மருந்துக்கும், இன்னபிற உதவிகளுக் கும் உதவிக்கரம் நீட்டினான் மதி.

‘‘ரொம்ப தேங்க்ஸ் மதியழகன். இதெல்லாம் உங்களுக்கு புண்ணிய மாப் போகும்!’’ -மருத்துவமனை வளாகத்தில் பழுத்த சருகுகள் வேர் மூடும் அரச மரத்தின் கீழ் நின்றார் கள் இருவரும். இந்த இடத்தில், ‘‘நான் என் கடமையைத்தானே செஞ்சேன்!’’ என்கிற டயலாக்கை தான் ஹீரோவாகப்பட்ட மதி பேசியிருக்க வேண்டும். ஆனால் அவன், ‘‘அட, புண்ணியமாவது ஒண்ணாவது. மார்க்ஸ் என்ன சொல்லியிருக்காருன்னா…’’ என ஆரம்பித்து, சரமாரியாக அரசியல் பேசினான். உரையாடல் நீண்டது. அவளது ஆச்சர்யமும் அவனது ஆவேசமும் மிக அழகாக ஒரு புள்ளி யில் இணைந்தது. உரையாடலின் முடிவில் கீர்த்தனா கேட்டாள், ‘‘இவ்வளவு நேரம் எப்படி சிகரெட் பிடிக்காம இருக்கீங்க?’’

ஒரு கணம் தடுமாறிச் சுதாரித்து அவன் சிரிக்க, அவளும் குரலெடுத் துச் சிரிக்க, மதி மயங்கினான் மதி. மறுநாள், வராந்தாவில் அங்கேயும் இங்கேயும் நடக்கும்போதெல்லாம் வார்டுக்குள் இருக்கும் மதியழகனுக் குப் பார்வையை வீசினாள் கீர்த்தி. ‘அதெல்லாம் நாய்க்குப் போடுற பிஸ்கட் மாதிரி மாப்ள’ என அனுபவஸ்தர்கள் சொல்லக் கூடும். ஆனால், அதுவரை அவன் பார்த்திராத பார்வை அது. இரக்கத்தின் ஜீவிதமா, இரை குத்தும் ஆயுதமா… ஏதென்று தெரியாமல் ஆன்மாவை உலுக்கும் பார்வை! இவனும் பார்த்தான். இரண்டு பார்வைகள் மோத மோத மொழியற்ற உலகில் சஞ்சரித்தான். ‘ஐ லவ் யூ கீர்த்தனா’ என எச்சில் கறை படிந்த கழிவறைக் கண்ணாடியில் சொல்லிப் பார்த்தான். இருவரும் அரச மரத்தடியில் பேசினார்கள். கேன்டீனில் தேநீர் பருகினார்கள். விஷம் குடித்து வந்த ஒருவர் செத்துப் போக, உறவினர்களின் கதறல் களுக்கிடையே பேரன்புடன் பார்த்துக் கொண்டார்கள். மதியின் கனவில் கல்யாணம் முடிந்து, வியர்வையும் மல்லிகையும் கலந்து மணக்கும் அறைக்குள் கண்ணாமூச்சி ஆடினார் கள். ரத்தினச்சுருக்கமாகச் சொல்வதென்றால், முத்திப் போச்சு!

பத்து நாட்கள் கழித்து, தோழர் டிஸ்சார்ஜ் ஆனார். ஆனால், மதியழகனுக்குக் காதல் காய்ச்சல் உச்சத்தில் அடித்தது. கீர்த்தியின் கை பட்ட தெர்மாமீட்டரில் ஆயிரம் கோடையெனத் தகித்தது அவனது காதல். ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறும்போது செல் நம்பர்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.

அன்று இரவே அடிவயிற் றில் பந்து உருள, செல்லை எடுத்து அவளுக்குப் பேச நினைத்தான். ‘வழியல் கேஸ்’ என்ற இளங்கலைப் பட்டத்தை வழங்கிவிடு வாளோ எனப் பயந்து ‘அவளே பேசட்டுமே’ என்ற முதுகலை முடிவை எடுத்தான். கீர்த்தியின் கையை இறுகக் கோத்து தோளில் சாய்ந்து காதில் வெப்ப மூச்சு விடுவ தான கனவில் அவன் ஆழ்ந் திருந்த வேளையில், செல் மூன்று முறை ‘பீப்’ எனச் சிணுங்கியது. அது கனவுக் கான பின்னணி இசை என நினைத்தான்.

அதுவும் இளையராஜா அல்லது மொஸார்ட்டினு டையது. ஆனால், நள்ளிரவு விழிப்பில் செல் பார்க்க மூன்று மெசேஜ்கள் ரிஸீவ் ஆகியிருந்தன. குட்நைட் டோடு பனித்துளி உருளும் மூன்று ரோஜாக்களை மலரச் செய்திருந்தாள் கீர்த்தி. தூக்கம் கெட்டான். தலை யணையைத் தூக்கிப்போட்டு உதைத்தான். மணி மூணு சொச்சம் இருந்தபோது ஒரு வேகத்தில் ‘ஐ டூ குட்நைட்’ என பட்லர் கம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் மெஸேஜைத் தட்டி விட்டான். உலகமும் இதய மும் ‘பீப்’ என்றே துடிப்பதாய் கலக்கமுற்றான். விடிய விடிய வெறித்தான் செல்லை! பதிலில்லை.

காலையில் எழுந்து பாத்ரூம் சென்று சிவந்த கண்களுடன் செல் பார்த் தால் கீர்த்தி எண்ணிலிருந்து இரண்டு மிஸ்டு கால். ‘அய்யகோ… இதென்ன சோதனை?’ எனப் பதற்ற மாகி, அவசரமாக அவள் நம்பருக்கு அழுத்தினான்.

‘‘ஹலோ… ஸாரிங்க. தூங்கிட்டேங்க.’’

‘‘எனக்கு செம கோபம் தெரியுமா? இனிமே போனே பண்ண வேண்டாம்னு நினைச்சேன்!’’

‘‘அய்யோ… உங்க போனை எடுக்கறதைவிட எனக்கென்னங்க வேலை. ஸாரி… தூங்கிட்டேன்!’’

‘‘அது சரி… அது என்ன மூணு மணிக்கு குட்நைட்? குட்மார்னிங்ல சொல்லணும்.’’

‘‘திடீர்னு முழிச்சேனா… டைம் பார்க் காமலே மெசேஜ் கொடுத்துட்டேங்க.’’

‘‘நைட்டெல்லாம் தூங்காம காலையில எட்டு மணி வரைக்கும் தூங்குறது. இனிமே ஒழுங்கா சீக்கிரம் எழுந்திரிங்க!’’ என்ற போது கீர்த்தியின் குரலில் கொப்பளித்த உரிமை, பேதலித்த மதியின் மனசைப் பேயாடவைத்தது.

அன்று இரவு ‘மங்கி எஸ்.எம்.எஸ். படிச்சிட்டிருக்கு’ என அவள் மெஸேஜ் அனுப்ப, ‘மயில் எஸ்.எம்.எஸ். அனுப்பிச்சிருக்கு’ எனப் பதிலுரைத்தான் இவன். நட்சத்திரங்களாலான இதயத்தை அனுப்பினான் இவன். ஜோடிப் புறாக்களை அனுப்பினாள் அவள். ‘இது என்னடா புது இம்சை?’ எனத் திருப்பூரின் செல் டவர்கள் செல்லக் கோபத்துடன் அனுப்பிய செண்டிங் மெஸேஜ்களால் காற்றலை காதல் அலையானது.

பொதுவாக, மாதத்தின் இருபது நாட்கள் அவுட் கோயிங் அறுந்து சிலுவையில் அறையப்படும் மதியின் செல், மூன்றாம் நாள் இயேசுவென முப்பது நாளும் உயிர்த்திருந்தது. தினசரி போனில் பேசினார்கள். இரவில் வெகு நேரம் சிரித்தார்கள். ‘இப்பதான் உங்களை நினைச்சேன்’, ‘எப்படா உங்களைப் பாப்போம்னு இருக்கு’, ‘ஏன் கனவுலயெல்லாம் வந்து பயமுறுத்தறீங்க?’ எனப் பேச்சிடையே கீர்த்தி வீசிய வார்த்தைகளின் வசீகர அர்த்தங்கள் ‘வா வா’வென அழைக்க, தூக்கமின்றி துரத்தினான். காலை, சாலை, மாலை, பின்னிரவின் வாடை யிலும் அவள் உடனிருப்பதான பாவனைகளோடு பித்தேறி மகிழ்வுற்றான்.

கீர்த்தியின் சிறு சொல்லில் அவனுக் குள் பெரும்பூ மலர்ந்தது. மறு சொல்லில் மலர் சருகாகி உதிர்ந்தது. பேசாப் பொழுதின் மௌனமோ செடியாகிக் காயும் கனியும் வளர்த்தது. அவளது உதடுகள் பெரும் காடாக, அதில் வழி தவறிய ஆடெனத் திசை மறந்து திரிந்தான் மதி.

காதலில் காலம் உருள்வதில்லை. மாறாகத் திரள்கிறது. நாட்கள் திரண்டன. வில்லன் வராத காதல் கதைகள் வி.ஐ.பி. வராத புத்தக வெளியீட்டு விழா அல்லவா? கீர்த்தி வேலை பார்த்த ஆஸ்பத்திரியில் ஒரு சுமாரான பிரம்மச்சாரி டாக்டர் புதிதாகச் சேர்ந்தான். சுமாராக என்பது மதியின் மதிப்பீடு. ஆனாலும் பிரம்மச்சாரி ப்ளஸ் டாக்டர் என்பதை அடிக்கோடிட்டு அடிவயிறு கலங்கி னான். இவன் போகும் பல நேரங்களில் கீர்த்தி அந்த டாக்டரோடு சந்தோஷ மாகப் பேசிக்கொண்டு இருந்தாள். அந்தப் பயலோ கூரிய விழி நோக்கும், வாய் நிறைய ஜோக்குமாய் அவளுக்கு மலர் வீசினான். மதிக்கோ ஊசி போடுவது மாதிரியான ஒரு புன்னகையை எறிந்தான்.

அவர்கள் பேசும்போது மதிக்கு நெஞ்சு வெந்து தணிந்தது. ‘சண்டாளி! இவ ஏன் இப்படிப் பேசறா?’ எனக் கடுப்பில் சாலைக் கற்களை எத்தி, சற்றைக்கெல்லாம், ‘என் கீர்த்தி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு’ என ஓரமாய் உட்கார்ந்து தியானித்தான். ‘ஒருவேளை… நம்மளை வெறுப்பேத்தற துக்காகப் பண்றாளோ? ஐ லவ் யூ சொல்லாம சும்மா பேசிட்டிருக் கானேனு டார்ச்சர் பண்றாளோ’ என என்னென்னவோ யோசித்து, காலம் மறந்த பெண்டுலமாய் கலங்கி அலைவுற்றான். ஆனால், அன்றைக்கு இரவே கீர்த்தி பேசும் ஒரு வார்த்தையில், பிஸ்கட்டுக்காகத் தாவிக் குதிக்கும் நாயாகிவிடும் அவன் மனசு.

ஒரு நாள் கீர்த்தியிடமிருந்து போன். மதியை உடனே ஆஸ்பத்திரிக்கு வரச் சொன்னாள். இவன் போனபோது கத்தரிப்பூ நிற சுடிதார், மல்லிப்பூ, புது வளையல் என எளிய அலங்காரத்தில் நின்றாள். ‘‘வாங்க ஒரு இடத்துக்குப் போகலாம்’’ என இவன் பைக்கில் ஏறியவள், ஒரு பரிசுப் பொருளகம் சென்றாள். காவியத்தன்மை வேலைப் பாடுகள் நிறைந்த ஒரு போட்டோ ஸ்டாண்டை வாங்கி கலர் பேப்பர் சுற்றினாள். மேலே ‘பெஸ்ட் விஷஸ்’& எழுதி கீழே ‘கீர்த்தனா & மதி’ என எழுதினாள். நேராக ஒரு கல்யாண மண்டபத்துக்குப் போனார்கள். அந்த சுமாரான டாக்டருக்குக் கல்யாணம். கோட்டும் சூட்டுமாய் மணப் பெண்ணோடு அவனைக் கண்ட கணத்தில் மதியின் கண்கள் மோட்சம் அடைந்தன. அவளோடு மேடையேறிப் பரிசு தந்து எப்படி முகத்தை வைத்துக்கொள்வது எனக் குழம்பி கேவலமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தான். ஆர்கெஸ்ட் டர்கள் ‘புது வெள்ளை மழை’ பாடலை பாடிக்கொண்டு இருக்க, பந்தியில் இருவரும் அருகருகே அமர்ந்தனர். ஒரு கணம் கோட் சூட்டுடன் அவனே மணமகனாக, கீர்த்தி மணப் பெண்ணாகத் தோன்றினர். மறுகணம் அவன் அரவிந்சாமியாக, அவள் மதுபாலாவாக பனிமலையில் உருண்டார்கள். ‘உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது’.

‘ஒழிந்தான் எதிரி’ என்று திரும்பு கிற வழியில் காதலைச் சொல்லிவிட ரெடியானான் மதி. பயபுள்ளைக்கு கையும் குரலும் நடுங்கின. ‘‘கீர்த்தனா… உங்க கல்யாணம் எப்போ?’’ ‘‘கல்யாணமா… ஏன், நீங்க வந்து பண்ணிவைக்கப் போறீங்களா?’’ ‘‘அட, மாப்ள யார்னு சொல்லுங்க, ஆள் வெச்சுத் தூக்கிடுவோம்!’’

‘‘ம்… ஆச தோச… அதுக் குள்ள கல்யாணம் பண்ணிட்டு கஷ்டப்படவா? எவனாவது இளிச்சவாயனாப் பார்த்து லவ் பண்ணி அப்புறம்தான் கல்யாணம்’’& அவள் சிரிக்கும்போது ஆஸ்பத்திரி வந்திருந்தது.

இரவு நண்பனோடு சளப் சளப்பென பீர் குடித்தான். உலகம் பஞ்சுப் பொதியென மாறி மிதந்தது. ‘ம்… ஆச தோச’ என்ற அசரீரி மனக் குகை சங்கீதமாகியது. சட்டை சாம்பார் வண்ணமானது. தலை ராட்டின மாடியது. வாயில் எச்சில் பிரசாதம் வடிந்தது. மறுநாள் காதலைச் சொல்லியே தீர்வதென முடிவெடுத்து நண்பனிடம் சத்தியம் செய்து தூங்கிப் போனான்.

மறுநாள், மதியின் அப்பா செத்துப் போனார். சாயத் தீற்றல்கள் படர்ந்த முற்றத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந் தார். அந்த வீட்டிலிருந்த ஒரு தறி மௌனமாய் கிடப்பது மாதிரி இருந்தது அவரது அசைவற்ற உடல். ‘எந் தங்கமே’ என மதியின் அம்மா ஓலமிட் டாள். முழு உடலும் கிடுகிடுவென நடுங்கக் கதறிய மதியை நண்பர்கள் இழுத்து அறைக்குள் தள்ளினர். அப்பாவும் செத்துப்போவார் என அவன் யோசிக்காமலேயே இருந்துவிட்டான். இனி அப்பா இல்லை என்ற எளிய உண்மை அவனை பெரும் பீதியடையச் செய்தது.

அப்பாவின் முகத்தை யோசித்தால் ஏதேதோ தோன்றி கீர்த்தியின் முகம் மங்கலாக வந்து வந்து போனது. தலை கனக்க அப்படியே கிடந்தான். கொள்ளி வைத்துவிட்டு மொட்டைத் தலையோடு திரும்பிய போது, வீட்டு வாசலில் நின்றிருந்தாள் கீர்த்தி. ‘‘கவலைப்படாதீங்க மதி. நீங்கதான் அம்மாவுக்குத் தைரியம் சொல்லணும். இனிமே அவங்கதான் முக்கியம். சரியா?’’ என்றாள்.

அடுத்த பத்து நாளைக்கு வீட்டு வேலையில் மூழ்கிப் போனான் மதி. கருமாதி காரிய வேலையாக ஓடி ஓடி வந்தான். இடையில் ஒரு முறை கீர்த்தி யிடம் போனில் பேசினான். அதன் பிறகு, எப்போது போன் பண்ணினா லும் அவள் நம்பர் ஸ்விட்ச் ஆஃபி லேயே இருந்தது. ஒரு முறை அவன் போன போது ஆஸ்பத்திரி யிலும் அவள் இல்லை. அவளைப் பார்த்து காதலைச் சொல்லி அழ வேண்டும் போலிருந்தது. கட்டிப் பிடித்து ‘உன்னைத் தான்டி லவ் பண்றேன்’ என கதற மனம் தவித்தது.

ஒரு மாதம் ஆயிற்று. கருமாதி முடிந்து அமைதி திரும்பி இயல்பு வாழ்க்கைக்கு வந்திருந்தான் மதி. கீர்த்தியைப் பார்க்கவே முடியவில்லை. ஆனாலும், இரவில் அவள் கனவில்லாமல் அவனால் தூங்க முடியவில்லை.

ஒரு நாள் காங்கேயம் கூட்டுறவு சொஸைட்டியில் நின்றிருந்தான் மதி. சற்று நேரத்தில் மஞ்சள் நிற பூ டிஸைன் கம்பிகள் வழியே கீர்த்தி ஒருவரோடு வரக் கண்டான். அவசரமாக வெளியே வந்தான். இலைகள் அற்ற மொட்டைப் புங்கை யின் கீழ் நடந்தது கடைசி சந்திப்பு. பக்கத்தில் நின்றிருந்த வரைக் காட்டி, ‘‘இவர் எங்க மாமா. அம்மா வோட தம்பி’’ என்றவள், அவரிடம் திரும்பி ‘‘இவர் மதி… எனக்குத் தெரிஞ்சவர்’’ என்றாள். சத்தமிட்ட செல்லை எடுத்து அவர் நகர்ந்து செல்ல, ‘‘என் நம்ப ருக்கு ட்ரை பண்ணீங் களா. ஸாரி! நான் நம்பர் மாத்திட்டேன். அவர் வெச்சிருந்த இன்னொரு மொபைலை எனக்குக் கொடுத்துட்டாரு’’ என்றாள் வந்தவரைக் காட்டி. அவர் வந்ததும் கைப்பையிலிருந்து கல்யாணப் பத்திரிகையை எடுத்து, இருவருமாக நீட்டி னார்கள்.

ஒரு முறை நிமிர்ந்து அவள் முகத்தைப் பூரணமாய்ப் பார்த்தான். பல கோடி வருடங்களாய் மீட்டாமல் நிற்கும் ஒரு வீணை, விரல்களின் உதிரம் தீண்டா கள்ளிச் செடி, நூற்றாண்டுகளாய் பெயர் சூட்டப்படாத காட்டுப் பூ, கண்டெடுக்கப்படாத மண்டையோடு… ரகசியத் தின் ஒளி மிளிர்ந்தது அவள் முகத்தில். அவள் சென்றாள். இவன் வந்தான்.

அவள் கல்யாணத்துக்கு அவன் போகவில்லை. அன்று கீர்த்தியைக் கொலை செய்துவிடலாமா என ஒரு நொடி நினைத்தான். அப்படி நினைத்ததற்காக வெகுநேரம் அழுதான். தறியிலேயே கிடந்தான். தறியின் சத்தம் அவன் மூளையின் அடுக்குகளில் ஓயாத அதிர்வாய்ப் படிந்துபோனது. கீர்த்தியின் குரல் தடதடவென கூடவே துடித்தது. தவித்தலைந்தான்.

புரிந்துகொள்ளாத, நிராகரிக்கப்பட்ட, வெளிப்படுத்தாத ஒரு அன்பு தூங்காமல் கிடக்கிறது, அளவில்லாமல் குடிக்கிறது, காயாத கண்ணீர்த் துளிகளை வடிக்கிறது. திசையற்ற பெருவெளியில் தேம்பித் தவிக்கிறது… திருவண்ணாமலைக்கு ஓடிப் போகிறது.

மதி திருவண்ணாமலைக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.

இன்று கிரிவலத்துக்கு மறுநாள். அந்தியில் அடிவாரக் கோயிலின் தூணொன்றில் உட்கார்ந்திருக்கிறான். காவி வேட்டி யும் முகம் மூடிய தாடியுமாய் அந்தியைப் பார்க்கிறான். கூட்டத்துக்கு நடுவே கோயிலுக்குள் வருகிறாள் கீர்த்தி. இடுப்பில் ஒரு குழந்தையும் மாமன் புருஷனுமாய் யாரோ மாதிரி வருகிறாள். நிறமிழந்த ஓவியம் போல, ஆனால், ரகசியத்தின் ஒளி குன்றாத முகத்தோடு வருகிறாள். குடும்பமாய் தரிசனத்துக்குப் போகிறாள். பின்னால் போய் நின்றான் மதி. குழந்தைக்கு இவன் பெயரை வைக்கவில்லை கீர்த்தனா. பிரசாத் என வைத்திருந்தார்கள். மாமனார் பெயராக இருக்கக் கூடும்.

அர்ச்சனை முடிந்து கை நிறையச் சில்லறைக் காசுகளோடு திரும்பியது கீர்த்தியின் குடும்பம். குழந்தை மதியை நோக்கிக் கையை நீட்டியது. ஒரு கணம் திடுக்கிட்ட மதி சட்டென்று திரும்பி தெருவில் இறங்கி ஓட ஆரம்பித்தான்!

– ஏப்ரல் 2006

Print Friendly, PDF & Email

2 thoughts on “நொந்தலாலா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *