நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

2
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 15, 2019
பார்வையிட்டோர்: 31,181 
 
 

`ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது, நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்!’

– யாரோ ஒருவன்.

அந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்’ என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான்.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாதித்துச் சம்பாதித்துக் களைத்துப்போன, `வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?’ என போன் அடிக்கும் மனைவிகளால் அலுத்துப்போன, ஆண்டுக்கு ஒருமுறை ஐபோனை மாற்றும் பிள்ளைகளால் வெறுத்துப்போன… நடுத்தர வயதுப் பணக்காரர்கள் அமைதியாக அமர்ந்து குடிக்கும் கார்டன் பார்.

ரவீந்தர், அங்கு தினமும் நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுபவன். ஆங்கிலம், இந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் பாடுவார்கள். கடந்த ஒரு வாரமாக ஒருவன், தினமும் இந்தப் பாடலைப் பாடச் சொல்லி சீட்டு எழுதிக் கொடுக்கிறான். பாடி முடித்தவுடன், ரவீந்தரின் அருகில் வந்து, 500 ரூபாயைக் கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடுவான்.

ரவீந்தர் அவனைத் தேட, அவன் ஒரு மரத்தடியில் இருந்து கையை உயர்த்திக் காட்டினான். அவனுக்கு ஏறத்தாழ 40 வயது இருக்கும். கொஞ்சம் குண்டாக தாடிவைத்த மோகன்லால் போல் இருந்தான். ரவீந்தரைப் பார்த்து, `பாடு…’ என்பதுபோல் கைகாட்டினான். கீபோர்டில் ஜான்,
‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ பாடலுக்கான ப்ரீ-லூடை வாசித்து முடித்தவுடன், ரவீந்தர் பாட ஆரம்பித்தான்.

`நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…

நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி…’ என ரவீந்தர் பாடலுக்குள் நுழைந்து, கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுப்புறத்தை மறந்து, முற்றிலும் அந்தப் பாடலுக்குள் ஆழ்ந்துவிட்டான். `உயிரே… வா…’ எனப் பாடலை முடித்தவுடன், படபடவெனக் கைதட்டும் சத்தம் கேட்டது. அவன்தான். பாரில் அனைவரும் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள். ரவீந்தருக்கு ஆச்சர்யம். `தினமும் அமைதியாக பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவான். இன்று என்ன கைதட்டல்… ரொம்ப ஓவராகக் குடித்துவிட்டானோ?’ என நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவன் எழுந்து மேடையை நோக்கி வந்தான். நடை தள்ளாடியது. மேடைக்கு அருகில் வந்து, “உன் பேர் என்ன?” என்றவனின் குரலில் நிறைபோதைக் குழறல்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி1

“ரவீந்தர்…”

“நோ… இன்னைலேர்ந்து உன் பேரு ஹரிஹரன். இன்னைக்கு நீ ரொம்ப அற்புதமா பாடினே.

சில இடங்கள்ல ஹரிஹரனைத் தாண்டிட்டே…” என்றவனுக்கு நிற்க முடியவில்லை.

ஜானைப் பார்த்து, “நீ தப்பான ஸ்கேல்ல வாசிக்கிற” என்றவனை, ரவீந்தர் ஆச்சர்யமாகப் பார்த்தான். இசை தெரிந்தவன். அவன் பர்ஸை எடுத்துப் பிரித்த பிறகு ஒரு விநாடி யோசித்தான். சட்டென ரவீந்தரின் கையில் பர்ஸைத் திணித்துவிட்டு, திரும்பி நடக்க ஆரம்பித்தான். பர்ஸைத் திறந்துபார்த்த ரவீந்தர் அதிர்ந்தான். உள்ளே ஏகப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுக்கள். பதறிப்போன ரவீந்தர், ஜானிடம், “ஒரு நிமிஷம்…” எனச் சொல்லிவிட்டு, மேடையில் இருந்து வேகமாக இறங்கி ஓடினான். அதற்குள் அவன் தோட்டத்தைவிட்டு வெளியேறி, கடல் மணலுக்குச் சென்றிருந்தான்.

“சார்… சார்…’’ என அவன் பின்னால் ஓடினான் ரவீந்தர். அவன் திரும்பிப் பார்த்துவிட்டு நின்றான். கடல் காற்றில் அவன் முடிகள் கலைந்தாட, அலைச்சத்தம் இரைச்சலாகக் கேட்டது.
“சார்… இதுல நிறையப் பணம் இருக்கு. இவ்ளோ பணம் எனக்கு வேண்டாம்” என ரவீந்தர் பர்ஸை நீட்டினான்.

அவன் பர்ஸை வாங்கியபடி, “உன் பேர் என்ன சொன்ன?” என்றான்.

“ரவீந்தர் சார்… உங்க பேரு?”

“மனோஜ்… மனோஜ்குமார்.”

“நான் ஒண்ணு கேக்கலாமா சார்?”

“கேளு…”

“இந்தப் பாட்டை ஏன் தினமும் கேக்கிறீங்க?”

“ம்ஹ்ம்…” எனச் சிரித்த மனோஜ், “ரவீந்தர்… இது பாட்டு இல்லை. வாழ்க்கை. இளையராஜா வோட ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு வாழ்க்கை” என்றவன், உடனே “நோ…” எனச் சொல்லி இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி விரித்து, “லட்சம் பேரோட வாழ்க்கை… கோடிப் பேரோட வாழ்க்கை” என்றான் சத்தமாக.

“இன்னொரு விஷயம் கேக்கணும். நீங்க… லவ் ஃபெயிலியரா?”

அவன் இந்தப் பேச்சை ஆரம்பித்திருக்கக் கூடாது. `காதல் தோல்வி குடிகாரர்களிடம் சிக்கினால், சிதைத்துச் சின்னாபின்னம் ஆக்கி விடுவார்கள். ஓர் இரவு முழுவதும், `அவ கண்ணு இன்னும் என் கண்ணுலயே நிக்குது’ என்பதை மட்டுமே ஆயிரம் தடவை சொல்லிச் சாகடிப்பார்கள். `நீங்க லவ் பண்ணியிருக்கீங்களா பாஸ்?’ எனக் கேட்டு, தங்கள் காதல் கதையைச்் சொல்வார்கள்…’ என ரவீந்தர் நினைத்து முடிப்பதற்குள், “நீங்க லவ் பண்ணியிருக்கீங்களா ரவீந்தர்?” என்றான் மனோஜ்.

“இல்ல சார்… வீட்டுல பொண்ணு பார்த்துக்கிட்டிருக்காங்க.”

“ம்…” என்ற மனோஜ் கடற்கரையை நோக்கி நடந்தான். ரவீந்தர் அவன் பின்னாலேயே சென்றான். அலைகள் அருகில் வந்தவுடன் மனோஜ் நின்றுவிட்டான். நிலா வெளிச்சத்தில் சத்தமிட்டுக் கொண்டிருந்த கடல் அலைகளைப் பார்த்தான். பேன்ட் பாக்கெட்டில் இருந்த வோட்கா பாட்டிலை எடுத்து மடமடவெனக் குடித்தான். அப்படியே மணலில் அமர்ந்துகொண்டு ரவீந்தரைப் பார்த்து, “இங்க உக்காரு ரவீந்தர்” என்றான்.

ரவீந்தர் தயக்கத்துடன் நின்றான்.

“ஏய்… ஏன் சங்கடப்படுற? நான் பணக்காரன்னு நினைக்க வேண்டாம். இளையராஜா இசை நம்மளை ஒண்ணாக்கிருச்சு. உக்காரு…” என்றவன் மீண்டும் ஒரு மடக்கு குடித்துவிட்டு, “அப்ப எனக்கு சரியா 25 வயசு. நான் கொல்கத்தாவுல இருந்தேன்…” என ஆரம்பித்தான்.

“2000, பிப்ரவரி 22, செவ்வாய்கிழமை. அப்போது கொல்கத்தா, கல்கத்தாவாகத்தான் இருந்தது. தெற்கு கல்கத்தா, ராஸ் பிஹாரி அவென்யூ. தேசப்ரியா பார்க்கில் இருந்த டென்னிஸ் கிளப்பில் பிரமோத் வருவதற்காக நான் காத்திருந்தேன். அப்போது வேகமாக என்னை நோக்கி வந்த பிரமோத், “மனோஜ்… தாராதாரி எஷோ… ப்ரியா தியேட்டரெர் ஷாம்னே ஜமேலா சோல்ச்சே…(வேகமா வா… ப்ரியா தியேட்டர் முன்னாடி கலாட்டா நடக்குது)” என என் கையைப் பிடித்து இழுத்தான்.

“கீ நியே ஜமேலா ஹொச்? (என்ன கலாட்டா?)” என்றேன்.

“உங்க கமல்ஹாசனோட ‘ஹே ராம்’ இந்திப் படத்துக்கு எதிரா…” என வங்காளத்தில் கூறிய பிரமோத், என்னை இழுத்துக்கொண்டு வேகமாக நடந்தான்.

ப்ரியா தியேட்டர் வாசலில் பயங்கர சத்தம். ஏராளமானோர் கையில் காங்கிரஸ் கொடியுடன், `காந்தியை அவதூறாகச் சித்திரிக்கும் `ஹே ராம்’ படத்தைத் தடைசெய்ய வேண்டும்’ எனக் கோஷமிட்டுக்கொண்டிருந்தனர். போலீஸ், “ஷோரே ஜான்… ஷோரே ஜான்…” என தொண்டர்களைத் தள்ளிக்கொண்டிருந்தது. அருகில் சம்பந்தம் இல்லாமல் நான்கைந்து இளம் பெண்கள், ஏதோ, “ஜிபனநந்த தாஸ்…” என்று கத்தினார்கள். அவர்களுக்கு நடுவே ஓர் இளம் பெண், மிரட்சியான கண்களுடன் அங்கு நிலவிய ஆவேசத்துக்குத் துளியும் சம்பந்தம் இல்லாமல் இருந்தாள். ஆனால், அழகாக இருந்தாள். வங்காளப் பெண்களுக்கே உரிய அதீத மேக்கப் இல்லாமல், லாவண்டர் நிற சல்வார் கமீஸில் எளிமையாக இருந்தாள். அவளை பிரமோத்திடம் காண்பித்த நான், “அழகான பெண்கள் போராடுறப்ப, அந்தப் போராட்டத்தின் மதிப்பு அதிகரிக்கும்” என்றேன்.

பிரமோத் சத்தமாகச் சிரித்தான்.

போராட்டக்காரர்கள் திடீரென தியேட்டரை நோக்கி கற்களை வீச, அந்த இடத்தின் சூழல் மாறியது. சிலர் தியேட்டரின் விண்டோ ஃபேன்களை உடைக்க ஆரம்பிக்க,போலீஸ் தடியடியில் இறங்கியது. கும்பல் நாலா பக்கங்களிலும் சிதறி ஓட, போலீஸ் கையில் கிடைத்தவர்களைப் பிடித்து வேனில் ஏற்றியது. கும்பல் எங்களையும் நெருக்கியது. பிரமோத் எங்கே போனான் என்றே தெரியவில்லை. பிரமோத்தைத் தேடியபோதுதான் மீண்டும் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.

அந்த அழகிய, லாவண்டர் நிற சல்வார் கமீஸ் பெண், நான் இருக்கும் திசையை நோக்கி ஓடிவந்தாள். அப்போது போலீஸ் அந்தப் பெண்ணின் தலையில் தடியால் தாக்க… அவள் தலையில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. “ஆ…” என அலறியபடி நின்றுவிட்ட அந்தப் பெண்ணைப் பிடித்து போலீஸ்காரர் இழுக்க, நான் சட்டென அந்த முடிவை எடுத்தேன், அவளை வேனில் ஏற்றவிடக் கூடாது. வேகமாக அவள் அருகே சென்ற நான், அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தேன். “தாராதாரி தௌரே எஷோ… கம் ஃபாஸ்ட்…” எனக் கத்தியபடி ஓடினேன். எங்களோடு பலரும் ஓடி வர, போலீஸ் துரத்தியது. தியேட்டருக்குப் பின்பக்கம்தான் என் வீடு.

எங்கள் வீதிக்குள் நுழைந்த நான், என் வீட்டை நோக்கி ஓடினேன். வேகமாக வீட்டுக் கதவைத் திறந்தேன். அந்தப் பெண்ணைப் பிடித்து வீட்டுக்குள் இழுத்து, கதவைச் சாத்திய பிறகுதான் என் பதற்றம் தணிந்தது. இப்போது நிதானமாக அவளைப் பார்த்தேன். அவள் கண்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து விடுபடவில்லை. அவள் நெற்றியில் ரத்தத்தைப் பார்த்ததும், வேகமாக ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸை எடுத்து வந்தேன். பஞ்சால் ரத்தத்தைத் துடைத்தேன். அவள் கைவிரலை வாயில் வைத்து, தண்ணீர் கேட்டாள். நான் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தேன். வேகவேகமாக அவள் தண்ணீர் குடித்து முடித்தவுடன், காயம்பட்ட இடத்தில் பிளாஸ்திரியை ஒட்டினேன். வலியில் ‘ஸ்…’ என முகத்தைச் சிணுங்கியபோது மேலும் அழகாகத் தெரிந்தவளை, இப்படி சுருக்கமாக வர்ணிக்கலாம். மற்ற அழகிகள் எல்லாம் ‘அழகி’ என்றால், இவள் ‘அழகி.’

“அமர் நாம் மனோஜ்… அப்னார் நாம்?” என நான்தான் பேச்சை ஆரம்பித்தேன்.

“அமோதிதா…”

“அமோதிதா… பியூட்டிஃபுல் நேம்.”

“அமோதிதா மீன்ஸ்… ஹேப்பினஸ்.”

நான் வங்காளத்தில், “எப்போதும் ஹேப்பியா இருக்கவேண்டிய பொண்ணு, இங்க எப்படி போராட்டத்துல? உங்களைப் பார்த்தா, அரசியலுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியலையே” என்றேன்.

“நான் பார்ட்டி ஆள் இல்ல. ‘ஹே ராம்’ படத்துல வர்ற ‘ஜன்மோன் கி ஜ்வாலா’ பாட்டுல (தமிழில் ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’) ஜிபனநந்த தாஸ் கவிதையை ஆபாசமா பிக்சரைஸ் பண்ணியிருக் கிறதா கேள்விப்பட்டு, ஆர்ப்பாட்டம் பண்ண வந்தோம்.”

“அப்படியா… நான் இன்னும் படத்தைப் பார்க்கலை. லிட்ரேச்சர் படிக்கிறீங்களா?”

“லாஸ்ட் இயர் படிச்சு முடிச்சுட்டேன். ஸ்காட்டிஷ் சர்ச் காலேஜ். பி.ஏ ஹானர்ஸ் இன் பெங்காலி. தினமும் அலிப்பூர் நேஷனல் லைப்ரரியில, ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் மீட் பண்ணுவோம். இந்த மாதிரி போராட்டம் நடத்தப்போறாங்கனு கேள்விப்பட்டு வந்தோம்” என்றவள் சட்டென எழுந்தாள்.

“கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டுப் போலாமே…” என்றேன்.

“இல்ல… நான் கிளம்புறேன். நீங்க தனியா இருக்கீங்க.”

“நீங்க பயப்படவேண்டியது இல்ல. நான் காலேஜ் படிக்கிறப்ப, கூடப் படிக்கிற இந்திப் பொண்ணுங்க ராக்கி கட்ட வர்றப்ப, அத்தனை பசங்களும் தலைமறைவாகிடுவாங்க. நான் மட்டும் நானா போய் ராக்கி கட்டிக்குவேன்” என்ற நான் அவள் அருகில் சென்று மெதுவாக, “ஒருத்தரும் நல்லாயிருக்க மாட்டாங்க” என்று கூற, அவள் மெலிதாகச் சிரித்தாள். தொடர்ந்து, “நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணைத் தவிர, இந்த கல்கத்தாவுல இருக்கிற அத்தனை பொண்ணுங்களும் எனக்கு சகோதரிகள். ஆனா, அந்தப் பொண்ணு யாருனு தெரியாததால, இப்போதைக்கு யாரையும் சகோதரியா பார்க்க முடியாது” என்றவுடன் அவள் சத்தமாகச் சிரித்துவிட்டு, “ஆ…” என காயத்தின் மீது ஒட்டியிருந்த பிளாஸ்திரி மீது கைவைத்து அழுத்தினாள்.

“என்னாச்சு?”
“சிரிக்கிறப்ப வலிக்குது. நீங்க மதராஸியா?”

“அசல் சென்னை மதராஸி” என்றபோதுதான் அந்த ஹாலில் இருந்த பியானோவைப் பார்த்த அமோதிதா, “வாவ்…” என வேகமாக பியானோவை நோக்கிச் சென்றாள். முகம் முழுக்க மலர, அந்த யமஹா பியானோவை ஆசையுடன் தடவியபடி, “நான் வாசிச்சுப்பார்க்கட்டுமா?” என்றாள்.

“உங்களுக்கு வாசிக்கத் தெரியுமா?”

“பியானோ கிரேடு ஃபோர். கல்கத்தா ஸ்கூல் ஆஃப் மியூஸிக்ல படிச்சேன். ”

“நான் பியானோ… கிரேடு சிக்ஸ்” என்றவுடன் அவள் கண்களில் மரியாதை. பிறகு, பரபரப்புடன் பியானோவுக்குக் கீழ் இருந்த பெஞ்சை இழுத்து அமர்ந்தாள். கீழே பார்த்து பியானோவின் பெடலில் காலை வைத்துக்கொண்டாள். பிறகு அவள் கீபோர்டில் கையை வைத்து வார்ம்அப் செய்தபோது, பியானோவில் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டு, அமோதிதாவின் கண்கள் லேசாகக் கலங்கியதுபோல் இருந்தன.

“ஹலோ… என்னாச்சு?” என்றேன்.

“பியானோவைக் கையால் தொட்டு ஆறு மாசம் ஆகுது. என் பியானோவை வித்துட்டாங்க. ஸ்டெய்ன்வே அண்ட் சன்ஸ். B 1994 மாடல். Satin ebony colour” என்றவளை நான் ஆச்சர்யத்துடன் பார்த்தேன். இவள் நிச்சயமாக பணக்கார வீட்டுப் பெண். ஸ்டெய்ன்வே அண்ட் சன்ஸ் பியானோ B மாடல், செகண்ட்ஸிலேயே பல லட்சங்கள் இருக்கும்.

“ஏன் வித்துட்டாங்க?”

“கடன். தலை வரைக்கும் கடன் வர இருந்துச்சு. என் பியானோவ வித்து, கழுத்தோடு கடனை நிறுத்திட்டாங்க. கோடீஸ்வரரா இருந்தோம். இப்ப கோடிகள்ல கடன்தான் இருக்கு” என்றவளை அனுதாபத்துடன் பார்த்தபடி, “என்ன பிரச்னை?” என்றேன்.

“பிசினஸ்ல லாஸ்…” என்றவள் பியானோவில் வாசிக்க ஆரம்பித்தாள். என்னை நோக்கி கண்களால் `என்னன்னு தெரியுதா?’ என்றாள். சற்றே யோசித்துவிட்டு, “பீதோவன்… மூன்லைட் ஸொனாட்டா…” என நான் கூற, புன்னகைத்துவிட்டு இசையில் ஆழ்ந்தாள். முழுமையாக வாசித்து முடித்துவிட்டு, “ஹௌ இஸ் இட்?” என்றாள்.

“அங்கங்கே பிசிறு தட்டினாலும் ஓ.கே…” என சத்தம் இல்லாமல் கைதட்டினேன்.

“நீங்க ஏதாச்சும் வாசிங்க” என எழுந்தாள். சற்றே யோசித்த நான், அவள் எந்தப் பாடலை எதிர்த்துப் போராட வந்தாளோ… அதையே வாசிக்க முடிவுசெய்தேன்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி2

சில நிமிடங்கள் வார்ம்அப்… பிறகு C மைனர் கீயில் ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ பாடலின் ப்ரீலூடை வாசிக்க ஆரம்பித்தேன். இடையில் கண்களால், `என்னவெனத் தெரிகிறதா?’ என்றேன். அவள் உதட்டைப் பிதுக்கினாள். முதலில் சாதாரணமாகப் பார்க்க ஆரம்பித்தவள், பிறகு பாடல் வளர வளர பிரமிப்பாகப் பார்த்தாள். கடைசியாக நான் `உயிரே வா…’ என முடித்தவுடன் படபடவெனக் கைதட்டினாள். “Great music and well played…” என என் கையைப் பிடித்துக் குலுக்கினாள்.

“இது வரைக்கும் இதை நான் கேட்டதே இல்லை. யாரோட மியூஸிக்?” என்றாள்.

“நீயே சொல்லு.”

“மார்த்தா?”

“இல்லை.”

“ஆர்தர் ரூபின்ஸ்டெய்ன்?”

“இல்லை… இளையராஜா.”

“யா… கேள்விப்பட்டிருக்கேன். தி கிரேட் மதராஸி மியூஸிக் டைரக்டர்.”

“ஓ.கே… இது எப்படி இருந்துச்சு?”

“ஃபென்ட்டாஸ்ட்டிக். லாட் ஆஃப் மூவ்மென்ட்ஸ்…”

“யெஸ்… அப்புறம் கடைசியில, அந்த B மேஜர் கார்டு… வாவ்… சான்ஸே இல்ல. அதுதான் அந்தப் பாட்டுக்கு ஒரு ஹோல்னெஸைக் கொடுக்குது.”

“யா… யா…”

“இந்தப் பாட்டுக்கு முன்னாடிதான் அந்தக் கவிதை வருது.”

“எந்தக் கவிதை?” என்றாள் சட்டெனப் புரியாமல்.

“இப்ப நீங்க போராட வந்தீங்களே, அந்தக் கவிதை. இந்தப் பாட்டு ‘ஹே ராம்’ படத்துலதான் வருது” என்றவுடன் அவள் முகம் மாறி, “அதை எப்படி எடுத்துருக்காங்கனு தெரியலை. ஆனா, இப்ப இந்தப் பாட்டைக் கேட்டதும், பழைய கோபம் குறைஞ்சிருச்சு…” என்றாள்.

“தி பவர் ஆஃப் மியூஸிக்” என்றேன்.

“எனக்கும் அந்தப் பாட்டை வாசிக்கணும்போல இருக்கு. நோட்ஸ் இருக்கா?”

“நாளைக்கு வாங்க… நான் நோட்ஸ் எழுதி வைக்கிறேன்.”

“சரி… நாளைக்கு இதே டைம் வர்றேன்.”

“நான் தனியாதான் வீட்டுல இருப்பேன்” என்றேன் சிரித்தபடி.

“பரவாயில்ல… உங்க ஃபேமிலி எல்லாம்…” என்று இழுத்தாள்.

“அப்பா டெல்லியில ஐ.ஏ.எஸ் ஆபீஸர். அம்மா… இங்க ஐ.ஆர்.எஸ் ஆபீஸர். ஒரு அண்ணன், அகமதாபாத்ல எம்.பி.ஏ பண்றான். நான் ஸ்கூல் வரைக்கும் சென்னையில பாட்டி வீட்டுல தங்கித்தான் படிச்சேன். காலேஜ் இங்க. எம்.ஏ மாஸ் கம்யூனிகேஷன். ரெண்டு வருஷம் ஹெச்.டி.ஏ-வுல வொர்க் பண்ணினேன். இப்ப சொந்தமா அட்வர்டைஸிங் கம்பெனி தொடங்கிறதுக்காக ஆபீஸ் பாத்துக்கிட்டு இருக்கேன்” என்றேன்.

“ஓ.கே… நாளைக்குப் பார்க்கலாம்” எனக் கிளம்பினாள் அமோதிதா.

மறுநாள்.

வந்தவுடன், “நோட்ஸ் எழுதிட்டீங்களா?” என்றாள்.

நேற்றிரவே நெடுநேரம் கண் விழித்து, போராடி எழுதிவிட்டேன். ஆனால், இதை வைத்துத்தான் அவளிடம் பழக்கத்தை நீட்டிக்கவேண்டும் என்பதால், “இன்னும் இல்லை” என்றேன்.

“அப்ப சரி…” என வேகமாகச் செருப்பை மாட்டினாள்.

“ஹேய்… என்ன கிளம்புறீங்க?”

“பின்ன… நோட்ஸ் எழுதலை. கிளம்புறேன்.”

“இல்லைன்னா என்ன, வேற ஏதாச்சும் பேசலாம்ல?”

“வேற என்ன பேசணும்?”

“ `வாட்டர்’ பட டைரக்டர் தீபா மேத்தா, சி.எம் ஜோதிபாசுவைப் பார்க்கப்போறாங்க. அதைப் பற்றிப் பேசலாம். இல்லைன்னா சவ்ரவ் கங்குலி கேப்டன்ஷிப் பற்றிப் பேசலாம்.”
“ஸாரி… அதைப் பற்றி எல்லாம் எனக்குத் தெரியாது.”

“சரி… உங்களுக்குத் தெரிஞ்ச விஷயத்தைப் பற்றிப் பேசுங்க.”

“ம்…” என்று யோசித்தாள்.

“ஜிபனநந்த தாஸ் பற்றிப் பேசலாமா?” என்றவுடன் “ஜிபனநந்த தாஸா?” என நெளிந்தேன்.

“அதான்… `ஹே ராம்’ பாட்டுல வர்ற அந்தக் கவிதை… ஆகாஷே ஜ்யோட்ஸ்னா.”

“அவரா? ம்… சொல்லுங்க” என்றேன் ஆர்வம் இல்லாமல்.

“வாழும் காலத்துல அதிகம் பேசப்படாத பெங்காலி கவிஞன். நாவல்கூட எழுதியிருக்கார். 1927-ல அவரோட ‘ஜாரோ பாலக்’ கவிதைத் தொகுப்பு வெளிவந்துச்சு. அதுதான் அவரோட முதல் கவிதைத் தொகுப்பு. அப்புறம்… அவரோட ‘ருபாஸி பங்ளா’ கேள்விப்பட்டிருக்கீங்களா? ஆக்ச்சுவலா அது 1934-ல எழுதினது. ஆனா, அவர் இறந்த பிறகு 1957-லதான் புத்தகமா வெளிவந்துச்சு. அதுக்கு ரேப்பர் டிசைன் பண்ணது யார்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க.”

“யார்?”

“தி கிரேட் சத்யஜித் ரே.”

“ஓ..!”

“அந்தக் கவிதையை பங்களாதேஷ் போராட்டத்துக்குக்கூடப் பயன்படுத்தினாங்க. அது வங்காளக் கிராமங்களோட…” என அவள் சொல்லிக்கொண்டே செல்ல, நான் கஷ்டப்பட்டு கொட்டாவியை அடக்கினேன். எனது முகத்தைக் கவனித்த அமோதிதா, “போரடிக்கிறேனா?” என்றாள்.

“சேச்சே…”

“அப்ப சரி… நிறையக் கவிஞர்களைப்போல, இவருக்கும் காதல் தோல்வி. `ஷோவனா’ங்கிற அவரோட சொந்தக்காரப் பொண்ணைக் காதலிச்சார். ஆனா அந்தப் பொண்ணு, கல்யாணம் பண்ணிக்கிற முறை கிடையாது. அதனால அந்த லவ் ஃபெயிலியர் ஆகிருச்சு. அவரோட முதல் தொகுப்பை அந்தப் பொண்ணுக்குத்தான் டெடிகேட் பண்ணியிருக்கார்…” எனத் தொடர, அதற்கு மேல் பொறுக்க முடியாத நான், “அமோதிதா… நௌ வீ ஆர் இன் 2000. வேற ஏதாச்சும் பேசலாமே” என்றவுடன் முகம் மாறிய அமோதிதா, “அப்ப நான் போறேன்” என்றாள்.

“எங்கே?”

“அலிப்பூர் லைப்ரரிக்கு.”

“டெய்லி வீட்டுல இருக்க மாட்டீங்களா?”

“ம்ஹும்… வீடு நரகம். தினமும் கடன்காரங்க வந்து சத்தம்போடுவாங்க. அதனால தினமும் வெளியேதான் சுத்திக்கிட்டிருப்பேன்.”

“நானும் உங்ககூட சுத்தலாமா?”

“தாராளமா சுத்தலாம்.”

சுற்றினோம்… தினம் தினம் சுற்றினோம்.

விக்டோரியா மெமோரியல் ஹாலுக்கு வெளியே இருந்த தோட்டத்தில் நடந்தபடி, “உங்களுக்கு பெங்காலி பெண்களைப் பிடிக்குமா… தமிழ்ப் பெண்களைப் பிடிக்குமா?’’ என்றாள்.

“ஒரு பெங்காலிப் பொண்ணு இந்தக் கேள்வியைக் கேட்டா, பெங்காலிப் பெண் பிடிக்கும்பேன்; தமிழ்ப் பெண் கேட்டா, தமிழ்ப் பெண் பிடிக்கும்பேன்!”

அமோதிதா சத்தமாகச் சிரித்தாள்.

மார்பிள் பேலஸின் பிரமாண்டமான தூணில் சாய்ந்துகொண்டு, “நீங்க யாரையாச்சும் லவ் பண்ணியிருக்கீங்களா?” என்றாள்.

“ஸ்கூல் டேஸ்ல… அதை லவ்வுனு சொல்ல முடியாது. ஒரு பொண்ணு மேல ஒரு சின்ன க்ரஷ். அவளோட ஒவ்வொரு கண்ணுக்குள்ளயும் ரெண்டு ரெண்டு கண்ணு. பார்த்தா மனசுக்குள்ள பூ உதிரும்.

“ `உன் பென்சிலைக் கொஞ்சம் தர்றியா?’னு கேட்டா, `நாம கல்யாணம் பண்ணிக்கலாம் வர்றியா?’னு கேட்ட மாதிரி புல்லரிச்சுப்போயிடும். கிளாஸ்ல சும்மா சும்மா திரும்பி என்னையே பார்ப்பா. ஆனா அப்புறம்… ஒருநாள் என்னைத் தனியா கூப்பிட்டு, ‘உன்னைப் பாத்தா ஆக்ஸிடென்ட்ல செத்துப்போன என் அண்ணன் மாதிரியே இருக்கு. உனக்கு ‘எல்லாமே… என் தங்கச்சி…’ பாட்டு தெரியுமா?’னு கேட்டா.”

“ம்… அப்புறம்” என்றாள் அமோதிதா சிரிப்பை உதட்டுக்குள் அடக்கியபடி.

“வேற வழி… அந்தப் பாட்டைப் பாடிட்டு வந்துட்டேன்.”

அமோதிதா வெடித்துச் சிரித்தாள்.

டிராம் வண்டியில் மெதுவாகச் செல்லும்போது, “இந்த பார்க்லேர்ந்து கிராஸ் பண்றப்பதான்…” என்ற அமோதிதா, “வேண்டாம்… விடுங்க…” என்றாள்.

“பரவாயில்லை… சொல்லு.”

“டிராம் வண்டி மோதி இறந்துபோயிட்டாரு.”

“யாரு?”

“ஜிபனநந்த தாஸ்…” என அவள் கூற, நான் “துர்கா மாதாஜி… என்னைக் காப்பாத்து…” என்றபடி எழுந்து வேறு ஸீட்டில் அமர்ந்துகொண்டேன்.

வேகமாக என் அருகில் வந்து அமர்ந்தபடி, “ஸாரி… ஸாரி…” என்றாள்.

நான், “வாழ்க்கை தினமும் ஏதாவது ஒரு பாடத்தைக் கற்றுத்தருது” என்றேன்.

“யா… யா… இட்ஸ் ட்ரூ. இன்னைக்கி என்ன பாடம் கத்துக்கிட்டீங்க?”

“லிட்ரேச்சர் படிச்ச பொண்ணுங்களோடு பழகக் கூடாது…” என்று கூற, சத்தமாகச் சிரித்த அமோதிதா, “தேங்க் யூ மனோஜ்… நீ என்னை ரொம்ப நாள் கழிச்சு சிரிக்கவைக்கிற. வீட்டுக் கவலையை மறக்கவைக்கிற” என்ற அமோதிதாவை உற்றுப்பார்த்தேன்.

என் வாழ்க்கையின், மிகமிக அழகான நாட்கள் அவை. கடவுளால் சிறகுகள் பொருத்தப்பட்ட, பூக்கள் கோக்கப்பட்ட, நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட… நாட்கள் அவை. பனிப்புகை வீட்டுக்குள் நுழைவதுபோல், அமோதிதா மெள்ள மெள்ள என் மனதுக்குள் நுழைந்து, நாள் முழுவதும் என்னைச் சில்லிட வைத்த தருணங்கள் அவை.

என் காதலை அவளிடம் சொல்ல முடிவெடுத்த பிறகுதான், ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’-யின் பியானோ நோட்ஸ் தாளை அவளிடம் கொடுத்தேன். அமோதிதா வாசிக்க ஆரம்பித்தாள். ப்ரீலூட் முடிந்தவுடன், ராணி முகர்ஜியைவிட அற்புதமான குரலில், அமோதிதா அந்தக் கவிதையை உச்சரிக்க ஆரம்பிக்க… எனக்குச் சிலிர்த்துப்போனது.

“ஆகாஷே ஜ்யோட்ஸ்னாபுலர் பதே சிடா பாகர் கயர் கரம்…” என உச்சரிக்க உச்சரிக்க… அவள் முகம் பரவசமாக மாறி, கண்கள் அந்தரத்தில் ஏக்கத்துடன் சஞ்சரித்தன. அவள் கவிதையை முடித்துவிட்டு “ஆஹாஹஹா… ஆஹாஹஹா…” எனப் பாடலை ஆரம்பித்தாள். அவள் பியானோ வாசிக்க, இருவரும் சேர்ந்தாற்போல் தமிழிலும் இந்தியிலும் மாறி மாறிப் பாடினோம்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

மில்னே கி த்ரிஷ்னா தி மன் மெய்ன்

அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி

அபுனா… ரஹி மனுமெய்ன் கோயி ஹல்ச்சல்… தொடர்ந்து பாடினோம். இரண்டாவது சரணத்தின் முடிவில், `உயிரே… வா…’ என நான் முடித்தபோது, என் உயிர் பியோனோவில் இருந்து எழுந்து என் அருகில் வந்தது. நெருக்கமாக நின்றுகொண்டு அமோதிதா என்னை உற்றுப்பார்த்தாள். அப்போது அவள் கண்களில் தெரிந்த காதலை, கொஞ்சம் முயன்றால் புகைப்படமாக எடுத்துவிடலாம்போல் தோன்றியது. அதற்கு மேல் பொறுக்க முடியாத நான் சட்டென அவளை இழுத்து அணைத்தபடி, “ஐ லவ் யூ… ஐ வான்ட் டு மேரி யூ…” என்றேன். சில விநாடிகள் மௌனமாக என்னை அணைத்து இருந்த அமோதிதா என்ன நினைத்தாளோ… சட்டென என்னிடம் இருந்து விலகினாள். அவள் கண்களில் இப்போது அந்தக் காதல் இல்லை.

“ஸாரி மனோஜ்… உன் காதலை ஏத்துக்கிற சூழ்நிலையில நான் இல்லை” என்றாள் தலையைக் குனிந்தபடி.

சில விநாடிகள் மௌனமாக அவளைப் பார்த்த நான், “நீ என்னைக் காதலிக்கலையா? இல்ல… என் காதலை ஏத்துக்கிற சூழ்நிலையில் இல்லையா?” என்றேன்.

அமோதிதா கண்களைத் துடைத்துக்கொண்டு, “நான் மூழ்கிட்டிருக்கிற கப்பல்ல இருக்கேன் மனோஜ்…” என்றாள்.

“நான் உன் கையைப் பிடிச்சுக் காப்பாத்துவேன் அமோ…”

“என்னைக் காப்பாத்துவ… என் தங்கை, தம்பி, அம்மா, அப்பா… இப்ப எங்க வீடு இருக்கிற சூழ்நிலையில் காதலைப் பற்றி என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது.”

“நீ என்னைக் காதலிக்கலைன்னா விட்ருவேன் அமோ. ஆனா, நீ என்னைக் காதலிக்கிற. ஏத்துக்கத்தான் தயங்குற. ஸோ… ஐ வில் நாட் லீவ் யூ…” என்ற நான், செல்ஃபில் இருந்து அந்த நகைப்பெட்டியை எடுத்தேன். அதில் அஞ்சலி ஜுவல்லர்ஸில் நான் வாங்கிய வளையல்கள் இருந்தன.

“என் காதல் பரிசு…” என அவளிடம் வளையல்களை நீட்டினேன்.

“வேண்டாம். என்னை விட்டுரு…” என்ற அமோதிதா தனது ஹேண்ட்பேக்கை எடுத்துக் கொண்டாள்.

“நோ…” என்ற நான் அவள் ஹேண்ட்பேக்கில் வலுக்கட்டாயமாக அந்த வளையல்களைத் திணித்துவிட்டு, “நல்லா யோசி… ஓ.கே-ன்னா நாளைக்கு இந்த வளையல்களைப் போட்டுட்டு வா. இல்லன்னா எப்பவும் என்னைப் பார்க்க வராத…” என்றேன்.

“மனோஜ்… ப்ளீஸ். நான் சொல்றதைப் புரிஞ்சுக்க…”

“இப்ப நீ போகலாம்…” என்ற நான் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

மறுநாள் காலை, 9 மணிக்கு மேல் எனக்கு போன் செய்த பிரமோத்தின் குரலில் பதற்றம்.

“மனோஜ்… ஒரு ஷாக்கிங் இன்ஃபர்மேஷன். கடன் பிரச்னையால நேத்து கோர்ட்ல, அமோதிதாவோட அப்பா வீட்டை அட்டாச் பண்ணி, ஏலம்விடச் சொல்லிட்டாங்களாம். அதனால…” என இழுத்தான்.
“அதனால?’’

“ஏற்கெனவே நிறையக் கடன்கள். இப்ப வீட்டையும் அட்டாச் பண்ணினதும்… அவங்க விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க” என்றவுடன் அமில ஊசியை யாரோ என் நெஞ்சில் செருகியதுபோல் இருந்தது.

“அமோதிதா?” என்ற என் குரல் குழறியது.

“தெரியலை…” என்ற பிரமோத் போனை வைத்துவிட்டான். நான் பைக்கை எடுத்துக்கொண்டு, அமோதிதாவின் வீடு இருக்கும் இந்துஸ்தான் பார்க் பகுதியை நோக்கிப் பறந்தேன்.

அந்த விக்டோரியன் ஸ்டைல் பங்களா வாசலில் பெரும் கூட்டம். பங்களாவுக்கு முன்பாக இருந்த தோட்டத்தில் திட்டுத்திட்டாக ஜனங்கள். நான் பதற்றத்துடன் தோட்டத்தைக் கடந்து, பங்களா வாசலை நோக்கிச் சென்றேன். வாசலில் போலீஸார் கைகளைக் கோத்து வேலி போட்டிருந்தனர். எங்கு இருந்தோ வந்த பிரமோத், “உள்ள விட மாட்டேங்கிறாங்க மனோஜ்” என்றான்.

வேகமாக அவன் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்த நான், “அமோதிதாவுக்கு என்ன ஆச்சு?” என்றபோது என் குரல் தழுதழுத்தது.

“தெரியலை…. சில பேர் அமோதிதாவோட அப்பா, அம்மா மட்டும் தற்கொலை பண்ணிக்கிட்டதா சொல்றாங்க. கொஞ்ச பேரு எல்லாரும் தற்கொலை…” என்ற பிரமோத்தின் நெஞ்சில் கை வைத்து வேகமாகத் தள்ளினேன். பொங்கிவந்த அழுகையை, உள்ளுக்குள் அழுத்தி அடக்கினேன். அப்போது ஜனங்கள் சலசலப்புடன் பங்களா வாசலை நோக்கிச் செல்ல… நான் திரும்பிப் பார்த்தேன். வீட்டுக்குள் இருந்து ஒரு ஸ்ட்ரெச்சர் வருவது தெரிந்தது. நானும் பிரமோத்தும் வீட்டு வாசலை நோக்கி ஓடினோம். மக்கள் கும்பலாக ஸ்ட்ரெச்சரை நெருங்க… போலீஸ் பெரிய அணைபோல் தடுத்து நிறுத்தியது.

நான் ஆவேசத்துடன் போலீஸைக் கடந்து செல்ல முயற்சிக்க… போலீஸார் என்னை நெட்டித் தள்ளினர். பிரமோத் என்னைப் பிடித்து நிறுத்தினான். முதலில் வந்த ஸ்ட்ரெச்சரில் அமோதிதாவின் அப்பா, அடுத்து வந்த ஸ்ட்ரெச்சரில் அமோதிதாவின் அம்மா. எனக்கு தொண்டையில் ஏதோ செய்து, வாந்தி வருவதுபோல் இருந்தது. அதன் பிறகு, வேறு எந்த ஸ்ட்ரெச்சரும் வராமல் இருக்க, நான் சற்று நிம்மதி ஆனேன். சில நிமிடங்களில் வீட்டுக்குள் இருந்து அடுத்தடுத்து ஸ்ட்ரெச்சர் வர அதிர்ந்தேன்.

அழுவதுபோல் முகம் மாறியிருந்த பிரமோத், என் கையை இறுகப் பிடித்து அழுத்தினான். அந்த மூன்றாவது ஸ்ட்ரெச்சர் நெருங்கியது. அதில் அமோதிதா. என் நெஞ்செல்லாம் வெடித்துச் சிதற, “அமோ…” என நான் பாய்ந்து ஓட, போலீஸ் என்னைத் தடுத்தது. நான் அவர்களைப் பிடித்துத் தள்ளிவிட்டு, ஸ்ட்ரெச்சரை நெருங்கினேன். “அமோ…” என அலறிக்கொண்டே உயிர் அற்ற அவள் உடல் மீது அழுதபடி பாய்ந்தேன். போலீஸ்காரர்கள் மிகவும் சிரமப்பட்டு என்னைப் பிடித்து இழுத்தனர். அப்போது நடந்த தள்ளு முள்ளுவில், ஸ்ட்ரெச்சரில் இருந்த அமோதிதாவின் உடல் நகர்ந்து, சட்டென அவள் கை ஸ்ட்ரெச்சருக்கு வெளியே வர, அதில் நேற்று நான் கொடுத்த வளையல்களை அமோதிதா அணிந்திருந்தாள்.

“அமோதிதா…” என்று நான் அலறிய அலறலில் மொத்த இடமும் அமைதியானது.”

மனோஜ் சொல்லி முடித்தபோது, ரவீந்தரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. மனோஜ் வானத்தை நோக்கியபடி கண்களை மூடியிருந்தான். கண்களின் ஓரம் நீர்த்துளிகள். அலைகளின் சத்தம் இப்போது மெதுவாகத்தான் இருந்தது.

தொடர்ந்து மனோஜ், “என் வளையல்களோடு அவள் கையைப் பார்த்த அந்தக் காட்சி, இன்னும் என் கண்ணுலயே இருக்கு ரவீந்தர். அந்தக் காட்சியை கடவுள் பெர்மனென்ட்டா என் கண்ணுலயே ஃபிக்ஸ் பண்ணிட்டார். அவளை ஆம்புலன்ஸ்ல ஏத்துற வரைக்கும், அந்த வளையல் கை அப்படியே நீட்டிட்டுத்தான் இருந்தது. ஆம்புலன்ஸ்ல ஏத்துன பிறகும், அந்தக் கை வெளியேதான் நீட்டிக்கிட்டு இருந்தது. ஆம்புலன்ஸ் கதவைச் சாத்துறப்பதான் கையை உள்ளே தள்ளினாங்க. இப்பவும் அடிக்கடி கனவுல, அந்த வளையல் கை என் முகத்துல மோதும்…” என்ற மனோஜ் கண்ணீரைத் துடைத்துக்கொண்டான். மீண்டும் வோட்கா பாட்டிலை எடுத்து அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டு, காலி பாட்டிலைத் தூக்கி எறிந்தான்.

இப்போது திரும்பி ரவீந்தரின் முகத்தைப் பார்த்த மனோஜ், “தட் வாஸ் எ பியூட்டிஃபுல் லவ் ரவீந்தர். Love in its purest form. அவ இறந்தப்பவே நானும் இறந்திருக்கணும். ஆனா, இந்தப் பாட்டுதான் எனக்கு உயிர் கொடுத்தது. இந்தப் பாட்டைக் கேட்கிற ஒவ்வொரு முறையும் நான் அவளோடு வாழுறேன். நான் வாழ்றதுக்காகத்தான் இந்தப் பாட்டைக் கேக்கிறேன்…” எனப் பேசி முடித்தான்.

“சார், நீங்க கல்யாணம்…” என ரவீந்தர் இழுத்தான்.

“இல்லை… அவ இறந்த பிறகு, நான் கல்கத்தாவைவிட்டு வரவே இல்லை. இப்ப எங்க பாட்டி உடம்பு சரியில்லாம இருக்காங்கன்னுதான் சென்னை வந்தேன். மரணப்படுக்கையில அவங்க, `நீ கல்யாணம் பண்ணிக்கோ’னு சொன்னப்பகூட `சரி’னு சொல்லலை. மறுபடியும், மறுபடியும் மறக்க நினைச்சாலும், மறக்க முடியாத காதல் அது…” என்ற மனோஜ், நான் கொஞ்சமும் எதிர்பாராதவிதமாக திடீரெனப் பாடினான்…

“நாடகம் முடிந்த பின்னாலும்

நடிப்பின்னும் தொடர்வது என்ன?

ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே…

உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே…

உயிரே வா…’’

– ஜனவரி 2016

Print Friendly, PDF & Email

2 thoughts on “நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *