அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5
நேரம்: 06:12:01 சனிக்கிழமை
‘ஹலோ…!’
‘மைக்கேல்! லாரிஸா ஹியர்!’
‘ம்…!’ என்றான் அந்தக் குரலைக் கேட்டதும்.
‘உன்னைத் தொந்தரவு படுத்திறேனா மைக்கேல்?’
‘……… ‘ என்ன சொல்வது என்று தெரியாமல் மைக்கேல் தயங்கினான்.
‘என்ன மைக்கேல் மௌனமாயிட்டாய்?’
‘இல்லை அப்படி ஒன்றுமில்லை!’
‘டிவி செய்தியில் என்னென்னவோ எல்லாம் சொல்லுறாங்க, எனக்குப் பயமாயிருக்கு மைக்கேல்!’
‘பயப்படாமல் இரு லாரிஸா, இந்த நேரத்தில் தான் உனக்கு மனதில் உறுதி வேண்டும்!’
‘எப்படி பயப்படாமல் இருப்பது மைக்கேல்? அவரை நினைச்சா பயமாயிருக்கு, அவர் உயிரோடு இருப்பாரா மைக்கேல்?’ ஒரு குழந்தை போல தேம்பியபடி கேட்டாள்.
‘நாங்க அப்படித் தான் நம்பறோம். அவங்களுக்கு இருபத்தி நான்கு மணித்தியாலத்திற்குத் தேவையான ஆக்ஸிஜன் இன்னமும் இருக்கு. அதனாலே பயப்படத் தேவையில்லை!’
‘அதற்கு முன்னே நீ அந்த ஸ்பாட்டுக்கு போயிடுவியா?’
‘ஆமாம்!’
‘காலநிலை சரியில்லை என்று சொல்லுறாங்களே?’
‘ஆமாம் அவங்க சொல்லட்டும், ஆனால் என்ன நடந்தாலும் உதவிக்குப் போறதாய் நான் முடிவெடுத்திட்டேன்!’
‘நீ நினைச்சால் எதையும் சாதிப்பாய் மைக்கேல், ஆனால் உன்னை நினைச்சால் தான் எனக்குக் கவலையாயிருக்கு!’
‘ஏன்?’
‘இந்தப் பயங்கரச் சூறாவளியில் நீ சிக்கிவிடுவாயோ என்று தான் எனக்குப் பயமாயிருக்கு!’
மைக்கேல் விரக்தியாச் சிரித்தான். அவனது சிரிப்பில் ஏளனம் தெரிந்தது.
‘ஏன் மைக்கேல் நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?’
‘இல்லை! இந்த மைக்கேலுக்காக இரக்கப்படவும் உன் மனசின் ஒரு மூலையில் இடம் ஒதுக்கியிருக்கியே, அதை நினைச்சா..’
‘மைக்கேல், ப்ளீஸ்.. பழசை எல்லாம் சொல்லிக் காட்டி என்னை வார்த்தைகளால் கொல்லாதே!’
‘நீ மட்டும் என்னை உயிரோடு கொல்லலையா?’
‘பழி தீர்க்க இதுவல்ல நேரம் மைக்கேல்!’
அவள் கேவுவதும் விம்மி வெடிப்பதும் தொலைபேசியில் அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. ஒரு பெண்ணின் துயரம் கோபம் அவலம் ஆற்றாமை எல்லாமே அந்த அழுகையில் வெளிப்பட்டது.
ஏனோ அவள் கண்ணில் நீர் வடிந்தால் இப்போதும் இவன் நெஞ்சம் துடித்துப் போய்விடுகிறது!
‘லாரிஸா மை டார்லிங்! நீ அழக்கூடாது!’
‘எ…..என்ன சொன்னாய் மைக்கேல்?’
‘அழாதேன்னு சொன்னேன்!’
‘இல்லை! நீ வேறு ஏதோ சொன்னாய்!’
‘டார்லிங் என்றேன்’
‘வேண்டாம் மைக்கேல், அப்படியெல்லாம் என்னை அழைத்துப் பழைய நினைவுகளை மீட்டுக் கொண்டு வராதே!’
‘நீ மறந்திருக்கலாம் லாரிஸா ஆனால் நான் எதையும் மறக்கலையே!’
‘எனக்கு ஏழு வயசில பெண்ணொருத்தி இருக்கா! மூடிவைத்த நினைவுகளை மீண்டும் கிளறி என்னைச் சஞ்சலப் படுத்தாதே பிளீஸ்!’
‘இல்லை உன் மனதை நோகடிக்க வேண்டும் என்று நான் எப்பொழுதும் நினைத்ததில்லை!’
‘எட்டு வருடமாய் நான் நல்ல மனைவியாய் வாழ்ந்து விட்டேன்! எனக்காக இல்லாவிட்டாலும் என் மகளுக்காகவாவது அவர் திரும்பி வரணும். அவள் அப்பா செல்லம். அவளுக்கு அப்பா வேணும் மைக்கேல்!’
‘என்னாலே முடிந்ததைச் செய்வேன் லாரிஸா!’
‘கொஞ்சம் இரு, என் பெண்ணு உங்கிட்ட கொஞ்சம் பேசணுமாம்!’
சிறிது நேர அமைதிக்குப் பின் தொலைபேசி கைமாறியது.
‘ஹலோ அங்கிள்.. திரேஸா ஹியர்!’
‘என்னம்மா..?’ அவனது குரலில் ஈரம் சுரந்தது.
‘எங்கப்பா திரும்பி வருவாரா அங்கிள்?’
‘கண்டிப்பா வருவாரம்மா.’
‘அவர் உயிரோடு இருக்கமாட்டார் என்று அடுத்த வீட்டுக்காரங்க பேசிக்கிறாங்கன்னு என்னோட சினேகிதி சொல்லுறா, அதெல்லாம் பொய் தானே அங்கிள்?’
‘வதந்திகளை நம்பக்கூடாதம்மா!’
‘அப்போ டிவி நியூஸில் உயிரோடு இருக்கிறாங்களா இல்லையா என்று நிச்சயம் சொல்ல முடியாதுன்னு சொன்னாங்களே!’
‘உள்ளே உயிரோடு இருப்பதாக எங்களுக்கு எஸ்.ஓ.எஸ் செய்தி வந்திருக்கே! நாங்க நம்பிக்கையைக் கைவிடல்லை, அதனாலே அவங்களை மீட்க நாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிறோம்.’
‘புயலடிக்கும் போது கடலுக்குப் போகப் பயமில்லையா அங்கிள்?’
‘பயம்தான்! பயந்தா உங்க அப்பாவை எப்படிக் காப்பாற்றுவதாம்?’
‘நீங்க ரொம்ப நல்ல அங்கிள், உங்களுக்கு நான் என்ன தரட்டும்?’
‘எனக்கா? சரி என்ன கொடுப்பாய்?’
‘ஒரு முத்தம் தரட்டுமா?’
‘அங்கேயிருந்தா? எப்படி?’
‘உ…ம்மா’ என்ற சத்தத்தோடு அவள் மறுமுனையில் இருந்து தொலைபேசிக்குள்ளால் ஒரு நீண்ட முத்தம் கொடுத்தாள். அந்தக் குழந்தையின் முத்தத்தில் அவன் நெகிழ்ந்து போனான்.
‘ஸ்வீட் கிஸ்! ரொம்பத் தாங்ஸ்ம்மா, உன்னோட நல்ல மனசிற்கு உன் அப்பா நிச்சயம் திரும்பி வருவாரம்மா!’
‘நீங்களும் அப்பாவோட எங்க வீட்டிற்குக் கட்டாயம் வரணும், சரியா அங்கிள்?’
‘சரிம்மா கட்டாயம் வர்றேன்!’
‘நான் காத்திருப்பேன் அங்கிள்!’
‘ஓ…கே ப்றமிஸ்!’
ரிசீவரை வைத்துவிட்டு அப்பாவிற்காக ஏங்கும் அந்தச் சிறுமியின் பாசத்தை நினைத்து ஒரு கணம் நெகிழ்ந்து போனான். பாசமுள்ள அந்தக் குழந்தைக்காகவாவது எப்படியும் அதன் தகப்பனை மீட்டுக் கொண்டு வரவேண்டும் என்ற உணர்வு ஒரு வெறியாய் அவன் உள்ளத்தில் ஏற்பட்டது.
நேரம்: 07:20:28 சனிக்கிழமை
சுமார் நூறு மைல்களுக்கு அப்பால் மையம் கொண்டிருந்த சூறாவளி வடக்கு நோக்கி மெல்ல நகர்வதாக வானொலி அறிவித்தது.
காலையில் மைக்கேல் கடலை நோட்டம் விட்டான். காற்றின் வேகம் தணிந்ததால் கடற் கொந்தளிப்பு சிறிது குறைந்திருந்தது. ஆனாலும் எந்த நேரமும் மீண்டும் ஆர்ப்பரிக்கலாம் என்பது போல வானம் இருண்டு மழை பெய்து கொண்டிருந்தது.
காலநிலை தங்களுக்குச் சாதகமாக சிறிது மாறியதால் மீட்புக்குழுவிற்கு பயணத்தைத் தொடரலாம் என்ற உற்சாகம் பீறிட்டுக் கொண்டு வந்தது. ஆபத்தில் அகப்பட்டு இருப்பவர்களை உயிரோடு மீட்டுக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் மீண்டும் துளிர்த்தது. அந்த உற்சாகத்தோடு எல்லா ஆயத்தங்களையும் அவசரமாச் செய்தார்கள். அவர்கள் துறைமுகத்தை விட்டுப் புறப்படும் சமயம் மைக்கேலுக்கு மீண்டும் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. இந்த அழைப்பு நிச்சயமாக பாதுகாப்பு அமைச்சரிடம் இருந்து தான் என்று மைக்கேல் நினைத்தான். உயர் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு எதிர்பாராமல் திடீரெனத் தனக்குக் கிடைத்திருப்பதை எண்ணிப் பெருமைப்பட்டான்.
‘ஹலோ! மைக்கேல் ஹியர்….!’
‘ஹாய் மைக்கேல்! நான் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் பேசறேன்..’
‘குட்மார்னிங்! சொல்லுங்க சார்.’
‘நீங்க புறப்பட ஆயத்தமா?’
‘ஆமா ஸார் எல்லாம் ரெடி, நாங்க இன்னும் சிறிது நேரத்தில் புறப்பட இருக்கிறோம்.’
‘காலநிலையால் உங்க பயணத்திற்கு ஒன்றும் பாதிப்பில்லையே?’
‘இல்லை சார், காலநிலை எப்படி இருந்தால் என்ன? நாங்கள் அவர்களை மீட்கப் புறப்பட்டு விட்டோம். இனி அவர்களோடு தான் திரும்பி வருவோம்.’
‘மைக்கேல் நீ தானே சப்மரீன் கதவைத் திறக்கப் போகிறாய்?’
‘ஆமாம் சார், நான் தான் திறக்கப் போகிறேன். என்னோடு ஷேர்மனும் உதவிக்கு வருகிறான்.’
‘தற்செயலாக திறக்க முடியாவிட்டால் என்ன செய்வாய்?’
‘இல்லை, கதவில் எந்த சேதமும் இல்லை. எனவே கதவைத் திறப்பதில் எவ்வித கஷ்டமும் இருக்காது என்று தான் நம்புகின்றேன். ஏனென்றால் ஏற்கனவே இப்படியான கதவுகளைத் திறப்பதற்குப் போதுமான பயிற்சி எடுத்திருக்கிறேன்.’
‘அப்படி என்றால் எப்படியும் கதவைத் திறந்து விடலாம் என்கிறாய்?’
‘ஆமாம், முடியும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கு! நீங்க கொடுக்கும் ஊக்கமும் உட்சாகமும் தான் எங்களுக்கு அந்தத் துணிவைத் தருகின்றது.’
‘நல்லது! உன்னுடைய துணிவை உண்மையாகவே பாராட்டுகின்றேன். ஆனால் இப்போ நான் சொல்வதை நீ கொஞ்சம் கவனமாகக் கேட்கவேண்டும்.’
‘நிச்சயமாக…. சொல்லுங்க சார்’
‘இந்த ரகசியம் எங்களுக்குள்ளேயே இருக்க வேண்டும். நான் சொன்னபடி நீ செய்ய வேண்டும்’
‘நாட்டின் நன்மைக்காக எதையும் செய்வேன்.’
‘அப்படி என்றால் எந்தக் காரணம் கொண்டும் நீ சப்மரீன் கதவைத் திறக்க வேண்டாம். கதவைத் திறக்க முயற்சிப்பது போல நீ பாசாங்கு செய்தால் போதும்.’
‘ச.. சார்! என்ன சார் சொல்…..றீங்க?’ அவன் அவர் சொல்வதை நம்பமுடியாமல் அதிர்ந்து போய்க் கேட்டான்.
‘ஏன்.. சார்..?’ என்ற அவனது கேள்வியின் விடை அவனை அதிரவைத்தது.
– தொடரும்…
– நீர்மூழ்கி…! நீரில் மூழ்கி…! (குறுநாவல்), முதற் பதிப்பு: 2020, ஆனந்தவிகடன் பவழவிழா குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற கதை.