“ஆகாஷை மறுபடி எங்கேயாவது மீட் பண்ணியா?” என்றாள் பிரமிளா.
அப்பாடா! ஒரு வழியாகக் கேட்டுவிட்டாள். இந்தக் கேள்வியை அவள் நிச்சயம் கேட்காமல் இருக்க மாட்டாள் என்று அவனுக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்லிக்கொண்டேயிருந்தது. இதோ கேட்டேவிட்டாள்! அதைக் கேட்கும்போது அவள் குரலில் ஏதேனும் ஆர்வம் தென்பட்டதா என்பதை அறிய முற்பட்டான் அருண். ஆனால் ரொம்ப சாதாரணமான குரலில்தான் அவள் அதைக் கேட்டாள். அவள் கேட்காமல் இருந்தால்கூட அவன் ஆகாஷைப் பற்றி அவளிடம் சொல்வதாகத்தான் இருந்தான்.
மத்ய கைலாஸில் கிரீன் சிக்னல் விழுந்ததும் சட்டென்று கியர் மாற்றி காரைக் கிளப்பினான் அருண். சீரான வேகத்தைத் தொட்டுவிட்டு முன்னிருக்கையிலிருந்த அவளைத் திரும்பிப் பார்த்தான். அவளும் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அந்தக் கேள்வியைக் கேட்டதன் மிகப் பெரிய தயக்கத்தோடு அவள் கண்கள் அவனை கூர்ந்து கவனித்ததைப் பார்த்தான். அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“ஏன் சிரிக்கறே? தேவையில்லாத கேள்வியக் கேட்டுட்டனா?” என்றாள். அவன் பதில் சொல்லாமல் மறுபடி சிரித்தது அவளை லேசாய் தர்மசங்கடப் படுத்தியது போலிருந்தது. திடீரென அவள் மெளனமாகி கண்ணாடிக்குப் பின் நகரும் கட்டிட வெளிச்சங்களை வெறிக்க ஆரம்பித்தாள். காருக்குள் ஏதோ எஃப்.எம்-மின் RJ மொக்கைகளுக்கப்புறம் ”கண்கள் இரண்டால்..” என்று ஒரு வழியாய் பாட்டைப் போட்டார்கள்.
“ஆகாஷைப் பத்தி நீ எப்படியும் என்கிட்ட கேட்பேன்னு தெரியும் பிரமி! பரவாயில்லயே.. இத்தனை வருஷம் கழிச்சும் நீ அவனை ஞாபகம் வெச்சிருக்கிற.. கிரேட்! யெஸ்.. ஆகாஷை நான் மறுபடி பாத்தேன். ஆனா அவன் என்ன நிலைமைல இருந்தான் தெரியுமா?” என்றான்.
அவன் அப்படிச் சொன்னது அவளை லேசாய் திடுக்கிட வைத்திருந்தது. குழப்பமாய் அவன் முகம் நோக்கினாள். ஏன் அவனுக்கு என்ன ஆயிற்று என்பதுபோல பார்த்தாள். சாலையிலிருந்து கண்களை எடுக்காமல் காரை ஓட்டியபடியே அருண் சொன்னான். ”எப்படி இருந்தவன்.. எப்படியோ ஆயிட்டான்.”
திடீரென்று அவன் அடுக்கிக்கொண்டேபோன சஸ்பென்ஸின் கனம் தாங்காதவளாக பிரமிளா “அருண்.. இன்னும் இருபது நிமிஷத்தில ஏர்போர்ட் வந்துரும். ஃப்ளைட் ஏறி நான் பெங்களூரூக்குப் போயிருவேன். அப்றம் அங்கிருந்து அமெரிக்கா. அங்க போயிட்டேனா அப்றம் ஒரு மாதிரி அங்கயே ஹஸ்பெண்ட், குழந்தைகள்னு செட்டில் ஆயிருவேன்னு தோணுது. அதான் ப்ளான். சரி கிடைச்ச கேப்ல எல்லா ஃப்ரெண்ட்ஸையும் ஒரு தடவை பாத்துட்டு போயிரலாம்னு வந்தேன்.”
கொஞ்சம் நிறுத்திவிட்டு போக்குவரத்தை வேடிக்கை பார்த்தபடி மேலும் தொடர்ந்தாள். ”ஆகாஷையும் உன்னை மாதிரி நல்ல ஃப்ரெண்டாதான் நினைச்சேன். ஆனா அவன் தான் எம் மேல காதல் அது இதுன்னு ரொம்ப ஸீன் போட்டான். அதான் அவனை கண்டுக்காம விட வேண்டியதா போச்சு. இப்போ ஜஸ்ட் லைக் தட் அவனைப் பத்தி விசாரிக்கலாம்னு தோணிச்சு. எங்க இருக்கான் என்ன பண்றான்னு. அதான் கேட்டேன். அவனுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லு.”
சட்டென்று சாலையைக் கடக்க முயன்ற ஒருவனை ஹார்னால் திட்டிவிட்டு அருண் சொன்னான். “சொல்றேன் பிரமி! அதுக்கு முன்னால என்னோட ஒரு கேள்விக்கு பதில் சொல்லு”
’என்னடா கேள்வி! கேட்டுத்தொலை’ என்கிற மாதிரி அவள் அசுவாரஸ்யமாய் அருணைப் பார்த்தாள்.
அருண் ஸ்டியரிங்கில் தாளம் போட்டபடி “உனக்கு ஆகாஷை ஏன் புடிக்காமப் போச்சு?.” என்றான். “அவன் ரொம்ப நல்ல டைப்பாதானே இருந்தான்?. ரொம்ப அமைதியா அவனுண்டு அவன் வேலையுண்டுன்னு இருப்பான். அவன் பேசினாக் கூட யாருக்கும் கேக்காது. அவ்ளோ ஸாஃப்ட். ஆளு வேற ரொம்ப ஹாண்ட்சம்மா இருப்பான். பொண்ணுங்க எல்லாம் அவன்கிட்ட வழிஞ்சு வழிஞ்சு போய்ப் பேசுவாங்க. ஆனா அவந்தான் பொண்ணுங்கன்னா கொஞ்சம் கூச்சப்படுவான். தங்கமான பையன். எல்லார் கூடவும் ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பான். உன்னை லவ் பண்றேன்னு உங்கிட்ட சொல்றதுக்கு எவ்ளோ தவிச்சான் தெரியுமா? ஆனா அவன் லக்கி ஃபெல்லோ. நல்லவேளை நீ அவன் காதலை ஏத்துகிகிட்டு அவனுக்கு வாழ்வு குடுக்கலை. இப்ப நீ ரெண்டு மடங்கு குண்டாகி மாமி மாதிரி ஆயிட்டே. தப்பிச்சான் அவன்!” என்று பலமாகச் சிரித்தான்.
பிரமிளா அவனை பொய்யாக முறைத்து “இந்த கிண்டலெல்லாம் வேணாம். நீ மட்டும் என்ன?” என்றாள். அப்புறம் கொஞ்சம் ஸீரியசாக நெற்றியைத் தேய்த்து யோசித்தாள். அப்புறம் சொன்னாள்.
”ஆகாஷ் ரொம்ப நல்லவன்தான். அவன் என்னை லவ் பண்றேன்னு தயங்கித் தயங்கி லெட்டர் எழுதினப்போ அவன் மேல லேசா க்ரஷ் மாதிரி ஏதோ ஒரு எழவு எனக்கும்கூட வந்துச்சு. அது சும்மா லேசாதான். ஆனா அவனோட கூச்ச சுபாவம் இருக்கு பாரு. அதான் பிரச்சனையே. ஐயோ! அதான் என்னை எப்பவும் கடுப்பாக்கற விஷயம். அது என்ன பொம்பள ஆம்பளன்னு யார்கிட்ட பேசறதுன்னாலும் அப்படி தயங்கறது?. பொண்ணுங்க கூட பரவால்ல. நேரா நிமிர்ந்து நின்னுகூட பேசமாட்டான் அவன். ஸ்விம்மிங் பூல்-க்கு போனாக் கூட சட்டையை கழட்டக் கூச்சப்படுவான்-னு ராஜூ ஒரு தடவை சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். அது தவிர புவர் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ். அது எனக்கு ஒத்து வரும்னு தோணல. நான் முழுக்க முழுக்க அப்பா கவனிப்பில வளர்ந்த பொண்ணு. அவரோட கம்பீரம், தோரணையெல்லாம் பாத்துப் பழகின பொண்ணு. எங்கேயும் ரொம்ப போல்டா நின்னு பேசுவார். அவர் கண்ணைப் பாத்துப் பேசறதுக்கு அவர் கிட்ட வேலை செஞ்சவங்க ரொம்ப தயங்குவாங்க. அவ்ளோ பவர்ஃபுல். தன் அப்பா மாதிரி இருக்கிற கணவரைத்தான் பொண்ணுங்க விரும்புவாங்கன்னு எங்கேயோ படிச்சிருக்கேன். நானும் அப்படித்தான் விரும்பினேன். ரொம்ப ப்ராக்டிக்கலா அவர் மாதிரி ஒரு ஆளை ஹஸ்பண்டா கற்பனை பண்ணினேன். அதனால ஆகாஷ் மாதிரி கூச்ச சுபாவமான பசங்க எனக்கு கொஞ்சம் அலர்ஜி. அதெல்லாம் என் கேரக்டருக்கு ஒத்து வராதுன்னு தோணிச்சு. அதுவுமில்லாம பெரிசா இந்த காதல் மேல எல்லாம் பிடிப்பு வர்ரதுக்குள்ள அப்பா ஒரு நல்ல பிஸினஸ் மேனா பாத்து கல்யாணமும் பண்ணி வெச்சுட்டார். அப்றம் அவன் என்ன பண்ணினான்னு எனக்கு நிஜமாவே தெரியாது. தாடி விட்டுட்டு அலைஞ்சானா?”
சில நிமிடங்கள் இருவரும் மெளனமாயிருந்தார்கள். கார் கத்திப்பாரா ஜங்ஷனைக் கடந்து விரையும்போது எஃப் எம்மில் அடுத்த பாடலான “அடியே கொல்ல்ல்லுதே”-வை கொஞ்சம் சத்தம் குறைத்தான். பாடலுடன் லேசாய் விசிலடித்தான்.
“பிரமி.. நீ சொல்றது கொஞ்சம் லாஜிக்கலாதான் இருக்கு. இந்த லவ் சமாச்சாரமெல்லாம் ரெண்டு சைடும் இருக்கவேண்டிய அவசியமில்ல. ஆனா அவன் உன்ன நெனச்சு ரொம்ப உருகினான். ஆனா தாடி வளத்தானான்னு ஞாபகமில்ல. நான்கூட அவன் சார்பா உன்கிட்ட பேசலாம்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனா ’தோ’ன்னு சுதாரிக்கறதுக்குள்ள நீ மேரேஜ் இன்விடேஷன் நீட்டிட்டே. ஒண்ணும் செய்ய முடியாம போச்சு. ப்ச்! அவன் உடைஞ்சு போயி ரொம்ப அழுதான்னு நினைக்கிறேன்.”
”ஓ” என்றாள். லேசாய் வருத்தம் சூழ்ந்தமாதிரி ஒரு பாவனைக்கு அவள் முகம் மாறியது.
அதை கவனித்துவிட்டு அருண் அவளிடம் கேட்டான். “ஆனா பிரமி.. உங்கிட்ட ஒண்ணு கேக்கறேன். நீ நினைக்கிற மாதிரி எல்லாரும் எல்லா சமயத்திலேயும் ஒரே மாதிரியே மாறாம அப்படியே இருப்பாங்கன்னு நினைக்கிறியா?”
அருணின் கேள்வி புரியாததுபோல புருவங்களை நெரித்துப் பார்த்தாள். அவன் விளக்குகிற தொணியில் மேலும் சொன்னான்.
”அதாவது.. இப்போ நீ நம்ம ஸ்வாதியை எடுத்துக்கோ.. அவளை மாதிரி பயந்தாங்குள்ளியை உலகத்திலேயே பாக்க முடியாது. அவளுக்கு லேடி தெனாலினு பேர் வெச்சுருந்தோம் ஞாபகமிருக்கா? ரோட்ல தனியா போக பயப்படுவா. யாராவது எப்பவும் அவ கூடப் போகணும். பஸ்ல கண்டக்டர்கிட்ட டிக்கெட் கேக்கறதுக்குகூட பயந்துக்குவா. எப்பவும் எல்லாத்துக்கும் பயம்.”
“தெரியும். அவளுக்கு என்ன இப்ப?”
“அவ திடீர்னு பி.ஈ படிக்கணும்னு முடிவு பண்ணி தஞ்சாவூர் இன்ஜினீயரிங் காலேஜ்ல சேந்தா. நாலு வருஷம் ஹாஸ்டல்-ல தங்கிப் படிச்சா. கோயமுத்தூருக்கும் தஞ்சாவூருக்கும் தனியா ட்ராவல் பண்ணுவா. அப்றம் ஒரு ஸாஃப்ட்வேர் கம்பெனில ஜாயின் பண்ணி அங்கிருந்து ஒரு ப்ராஜக்ட்டுக்கு நியூஜெர்ஸி போயி தனியா ஒரு வருஷம் இருந்தா. அப்பா அம்மாவை எதுத்துக்கிட்டு ஒரு கிறிஷ்டியன் பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டா..”
“ஓ.. ஈஸிட்?. நிஜமாவா? அவளா? எப்ப நடந்தது இதெல்லாம். எனக்குத் தெரியாமயே போச்சு!” மிகுந்த ஆச்சரியத்துடன் பிரமிளா கேட்டாள்.
“அது ஆச்சு நாலஞ்சு வருஷம். நான் என்ன சொல்ல வர்ரேன்னா.. யார் யார் எப்போ எப்படியெல்லாம் மாறுவாங்கன்னு யாராலயும் சொல்ல முடியாது.”
“அப்ப ஆகாஷூம் மாறிட்டான்னு சொல்ல வர்றியா?”
”அஃப்கோர்ஸ்”
மீனம்பாக்கம் விமான நிலையம் வந்துவிட்டிருந்தது. அருண் காரை உள்ளே திருப்பிச் செலுத்தி பார்க்கிங் செய்தான். இன்னும் சம்பாஷணை முடியாததால் இருவரும் காரைவிட்டு இறங்காமல் அப்படியே உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். தொண்டையை செருமிவிட்டு ஒரு புதிரான புன்னகையுடன் “ஆகாஷை நான் பாத்தேன்னு சொன்னேன் இல்லையா?. ஆனால் அவனை நான் நேர்ல பாக்கல.” என்றான்.
“ஓ! அப்றம்?.”
“அவன்தான்னு என்னால நம்பவே முடியல. ஆனா அவனை அப்படிப் பாத்து ஷாக் ஆனேன் பாரு. மை காட்! அதுக்கப்புறம் அவனை ஒரு தடவை டி.வில கூட அதே மாதிரி பாத்தேன். எப்படியிருந்தவன் எப்டியாயிட்டான்னு ஒரே ஆச்சரியம்.”
“ஐயா.. சாமி!.. திரும்பத் திரும்ப இதையே சொல்லாத. சஸ்பென்ஸ் போதும். சீக்கிரம் விஷயத்துக்கு வா!. எனக்கு டைம் ஆகுது”
அருண் தயக்க சிரிப்புடன் “ஒரு நாள் ஒரு கடைல போய் இன்னர் வேர் வாங்கினேன். அதோட பேக்கிங் அட்டைப்பெட்டில…” என்று சொல்லிக்கொண்டே பின் சீட்டிலிருந்து அதை எடுத்தான். “நீ சென்னைக்கு வர்ரேன்னதும் உனக்கு காமிக்கணும்னு எடுத்து வெச்சிருந்தேன். இதப் பாரு இது ஆகாஷ்தான?”
அவன் நீட்டின அட்டைப்பெட்டியின் மேற்புற கவர் டிசைனில் ஆகாஷ் கட்டான வெற்றுடம்புடன் கொஞ்சமும் கூச்சமில்லாமல் இடுப்பில் மட்டும் உள்ளாடை அணிந்து ஸ்டைலாக சிரித்துக் கொண்டிருந்தான்.
– கல்கி – 16.8.2009