நான் இன்னும் குழந்தையாம்…

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 28,144 
 
 

அம்மா கேன்சரில் போனபிறகு என் நலன் பற்றி வீட்டில் யாருக்கும் அக்கறை கிடையாது. பதிலாக, என்னிடமிருந்து எல்லா உதவிகளையும் எதிர் பார்க்கிறார்கள். நீங்கள் வேலைபார்க்கும் ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கும் கிராமத்துக்கு வர விரும்புகிறேன். உங்கள் காலடியில் விழுந்து கதற வேண்டும்போல் இருக்கிறது. நான் வேலை பார்க்கும் கல்லூரியின் நிர்வாகி இந்த வருடம் என் டிபார்ட்மெண்ட் நல்ல தேர்வைக் காட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதனால் எனக்கு நேரம் கிடைப்பதே அரிதாக இருக்கிறது. நான் அங்கு வர முடியாததற்காக உங்களுக்கு நிறையவே கோபம் வரும். தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.

நான் மன உறுதியற்றவள்; என் குடும்பத்தவரை மறந்துவிடத் திராணியற்றவள் – குடும்பத்தவர்கள் என்னை மறந்துவிட்ட போதிலும். அதனால் என்னை உயிருக்கு உயிராகக் காதலிக்கும் என்னுடைய தெய்வத்தை நான் மறந்து விட்டேன் என்று அர்த்தமில்லை. எனது இதயம் அலை பாய்கிறது; என்றைக்கு நிதானப்படும் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயமாகக் கூற முடியும். நீங்கள் கூறுவது போல், அந்தந்த நேர உத்வேக மனநிலையில் எழுதப்படுவதில்லை இவ்வார்த்தைகள். எனக்கு எப்போதும் உங்கள் நினைவுதான்; என் பக்கத்தில் உங்களைக் கற்பனை செய்து கொள்வதில் மனசுக்கு அலாதி நிம்மதி கிடைக்கிறது!

டியர், நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? உங்கள் உடம்பைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் உங்கள் அம்மா, தங்கைகள் அனைவரும் சுகம்தானே? ஈ மெயிலில் உங்கள் கடிதம் பார்ப்பதற்காகத் துடிப்புடன் காத்திருக்கும், உங்கள் ஷிவானி

அக்காவின் குடும்பம், எதிர்வீட்டு மன்னியின் குடும்பம் இவற்றையெல்லாம் நினைக்கும்போது, எனக்கென ஒரு தனிக் குடும்பத்தைக் கற்பனை செய்வதில் நான் பைத்தியமாகவே ஆகி விடுகிறேன். என் குடும்பம்.. நீங்களும் நானும் அதன் பார்ட்னர்ஸ்! இரண்டு மூன்று அழகான, கவர்ச்சி மிக்க, புத்திசாலியான (அவர்களின் தாயான என்னைப் போல; அப்பாவைப் போல அல்ல!) குட்டிக் குட்டிக் குழந்தைகளின் அன்பிலும், கணவரின் நேசத்திலும் நான் மூழ்கிப் போகிறேன். டியர்! எனக்கு அப்படியொரு வாழ்க்கை கிடைக்குமா? நான் அதற்குத் தகுதி படைத்திருக்கிறேனா?…

டியர், நான் இவ்வுலகில் வாழ விரும்பவில்லை. எனக்கென்று அப்படியொரு வாழ்க்கை கிடைக்கப் போவதுமில்லை. என்னை மறந்து விடுங்கள். என்மீது இரக்கம் காட்டாதீர்கள். அழகான, உண்மையுள்ள, கடமை உணர்வுள்ள, எல்லாவற்றுக்கும் மேலாக உங்களுக்காகத் தன் குடும்பத்தை உதறிவிட்டு வரத் தூணிவுள்ள ஓர் பெண்ணைப் பார்த்து நேசியுங்கள்! உங்கள் வாழ்வாவது மகிழ்ச்சி பெறட்டும்! என்னால் – இந்தக் கோழையால்- உங்கள் வழ்வு பாழாகி விடலாகாது… டியர், நான் பைத்தியக்காரி ஆகிவிட்டேன் என்று நினைக்கிறேன். எனக்கு ஆறுதல் ஏதேனும் கூற நினைத்தீர்களானால், (காதலராக இல்லாவிடினும், ஓர் நண்பராக) நேரில் வாருங்கள். எங்கள் ஹாஸ்டல் விஸிட்டர்ஸ் ஹாலில் நாம் கொஞ்ச நேரம் பேச முடியும். பெண்கள் விடுதி ஆயிற்றே! ஞாயிறு அன்று வந்தீர்களானால், கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில், சினிமா, பார்க் என்று மாலை வரையில் நாம் எங்கும் சென்று வரலாம். உங்கள் முகத்தைப் பார்க்கத் தவிக்கிறேன்; உங்களைத் தொட்டு மகிழத் துடிக்கிறேன்…

உங்கள் மெயில் கிடைத்தது. உங்கள் ஆரம்ப சுகாதார நிலைய மெடிகல் ஆபீசரின் அழகான மகள் அடிக்கடி உங்கள் குவார்ட்டர்சுக்கு வருவதாகவும், இலக்கிய சர்ச்சையில் இருவரும் மூழ்கிவிடுவதாகவும், அவளுடைய அழகும் அறிவும் அற்புதமானதென்றும் இந்த ஆரம்பம் எங்கே போய் முடியுமென்று தெரியவில்லை என்றும் எழுதியிருக்கிறீர்கள்.

கடைசியாக நான் அனுப்பிய கடிதத்தில்தான் வேறு ஓர் பெண்ணை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு எழுதியிருந்தேன். அதை இவ்வளவு விரைவில் செய்து விட்டது குறித்து மிகவும் சந்தோஷம். ஆரம்ப நாளிலிருந்தே பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் உங்களுக்குச் சுறுசுறுப்பு அதிகம். இந்த ஆரம்பம் எங்கே போய் முடியுமெனத் தெரியவில்லை.. என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். நான் சொல்லட்டுமா? அவளை விட அழகான பெண்ணைப் பார்க்காத பட்சத்தில் அவளையே நீங்கள் மணப்பீர்கள்.

நான் கல்லூரி ஒன்றில் லெக்சரராகப் பண்புரிபவள்; பல ஆண்களுடன் பழகத்தான் வேண்டியிருக்கும். என்னை இந்த ஐந்தாறு ஆண்டுகளில் நன்றாகத் தெரிந்திருந்தும் வார்த்தைகளால் கூறு போடுகிறீர்கள். எனக்கு ஓரிரு ஆண் நண்பர்கள் இருப்பதுகூடத் தவறு என்கிறீர்கள். அவர்கள், நேர்மையான, பண்பாடு வழுவாத, கூடப் பிறவாத சகோதரர்கள்-அவ்வளவுதான்! நீங்கள் நினைக்கிறாற்போல் கேவலமான அர்த்தத்தில் அவர்கள் என்னோடு பழகவில்லை. உங்களிடம் எதையும் மறைக்கும் வழக்கமில்லாத நான், என் நண்பர்களைப் பற்றி உங்களுக்கு எழுதியது தவறா? அவர்களைப் பற்றி அறிந்ததால் பொருமி, உங்கள் மெடிகல் ஆபீசர் மகளின் அழகைப் புகழ்ந்து என்னை வாட்டுகிறீர்கள், இல்லையா? மை டியர் சார்! நான் குழந்தையாக இருக்கலாம். ஆனால், உங்கள் குயுக்திகளுக்கு அப்பாற்பட்டவள். எனக்கு உங்கள் டிரிக் புளித்து விட்டது. உங்கள் அதிகாரியின் மகளைப் பெருமையாகப் புகழ்ந்து அதன் மூலம் என்னைத் தூண்டி, ஏய்க்கப் பார்க்கிறீர்களே, வெட்கமாக இல்லை உங்களுக்கு? நீங்கள் நினைக்கிற மாதிரி சீப்பான, ஸில்லியான பெண் இல்லை நான்! இனி நீங்கள் என்னிடமிருந்து ஏதும் கடிதத்தை எதிர்பார்க்காதீர்கள்..`

என் சக தோழிக்கு நீங்கள் அனுப்பிய மெயில் கிடைத்தது. யார் கடிதத்திற்காகவும், யாருக்காகவும் ஏங்கும் நிலையில் நான் இல்லை என்று தெரிவித்திருக்கிறீர்கள்… ஏங்க வேண்டாம் என்பதுதான் என் விருப்பமும். ..

ஆனால், இக்கடிதம் எழுதுவதற்குக் காரணம், என் மனப்பளுதான். அதைக் கூறிக் கொள்ள எனக்கு உங்களை விட்டால் வேறு நாதியில்லை.

நேற்று நானும் லதாவும் சினிமாவுக்குப் போனோம். எங்கள் விடுதிக்குப் பத்து வீடுகள் தள்ளி ஒரு பணக்காரர் இருக்கிறார். அவர் எப்போதுமே பெண்களைக் கண்டால் இளிப்பார். என் மாணவிகள் பலமுறை இதைப்பற்றி என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். நானும் விடுதியிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் போது அந்த ஆளைப் பார்த்திருக்கிறேன். கிழவன் தானே என்று மாணவிகள் புகாரை நான் லட்சியம் செய்யாமல் இருந்தேன். நேற்று அவனும் பிக்சருக்கு வந்திருந்தான். இடைவேளையின் போது என்னைப் பார்த்தான். எனக்குப் பின்சீட்டில் இருந்த தன் நண்பனை இடம் மாற்றி அங்கு உட்கார்ந்து கொண்டான். ஆபாசமான கமெண்ட்களை அள்ளி வீசியபடி அபத்தமாக சத்தமிட்டுச் சிரித்தான். என் இருக்கையைக் காலால் உதைத்தான். என் காதுக்கு அருகில் குனிந்து, “ஸ்வீட்டி, ஸ்வீட் வேணுமா?” என்றான். எனக்குக் கோபம் பிய்த்துக் கொண்டு வந்தது. பின்புறம் திரும்பி, “பெரிய மனுஷன் போல இருக்கிறாய்; நடத்தையில் அப்படிக் காணோமே? இனியொருமுறை வம்பு பண்ணினால், வாய் பேசாது, காலில் இருப்பதுதான் பேசும்!” என்று கத்தினேன். இரண்டு வரிசையில் அமர்ந்திருந்தவர்களுக்கும் அது காதில் தெளிவாக விழுந்திருக்கும். உடனே அவன் தன் சினேகிதனுடன் எழுந்து வெளியே சென்று விட்டான். எப்படியோ துணிந்து பேசிவிட்டேனே யொழிய, பிறகு நான் படம் பார்க்க முடியவில்லை. பயத்தில் உறைந்து விட்டேன். எப்படி விடுதிக்குப் போவது என்று ஒரே பயம். எப்படியோ பஸ் பிடித்து விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

டியர், இனிமேல் நான் வெளியே செல்ல மாட்டேன். சினிமாவுக்குப் போக மாட்டேன். உங்கள் பேச்சைக் கேட்காததற்கு நல்ல தண்டனை. இம்முறை ஏதாவது நடந்தால், நீங்கள்தான் இங்கு வந்து என்னைக் காப்பாற்ற வேண்டியிருக்கும்…

சென்ற வாரம் மூன்று நாட்கள் லீவில் உங்கள் ஊருக்கு வந்து திரும்பிய அன்றிலிருந்து ஒவ்வொரு நொடியும் எனக்கு உங்களைப் பற்றி எண்ணியெண்ணி, பைத்தியமே பிடித்துவிடும் போல இருக்கிறது. நேற்று நானும் லதாவும் சூப்பர் மார்க்கெட் சென்றோம். லதாவுக்குக் கொஞ்சம் மருந்துகள் வாங்க வேண்டியிருந்தது. பிறகு பீடா வாங்கினோம். பீடாவைச் சுவைக்கையில் உங்கள் ஞாபகம் மேலெழுந்தது. ஞாபகம் இருக்கிறதா, நாம் சரண்யாவின் கல்யாண ரிசப்ஷனுக்குப் போய்விட்டு டாக்ஸியில் திரும்பி வரும்பொழுது, கல்யாண வீட்டில் எடுத்து வந்த °வீட் பீடாவை இருவரும் முதன் முதலில் வாயிலிட்டுச் சுவைத்ததும் என்னிடம் நீங்கள் முத்தம் ஒன்று கேட்டபோது, கல்யாணத்துக்கு அப்புறம்தான் என்று நான் கண்டிப்பாகச் சொன்னதும் நீங்கள் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டதும்… நேற்றிரவு முழுவதும் நான் தூங்காமல் உங்களை எண்ணி அழுதேன். இப்போது தலைவலி, லேசாய் ஜுரமும். உங்களை மறக்க நான் என்ன செய்யட்டும் டியர்? உங்கள் ஊரின் அழகான வயல்கள், மலைக்காடுகள், உப்பாற்று அணையில் கடல் போல் தேங்கி நின்ற நீர், வட்டமலை முருகன் கோயில் – எல்லா இடங்களுக்கும் உங்களோடு சென்று ரசித்ததை இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது. வாழ்க்கை முழுவதும் ஒரு விநாடி கூட உங்களை விட்டுப் பிரியாமல் இருக்க அந்த வட்ட மலை முருகன் தான் அருள் புரிய வேண்டும்..

உங்கள் ஊரில் நீங்கள் வேலை பார்க்கும் ஆரம்ப சுகாதார நிலையம் வயல்களுக்கு நடுவில், கற்றாழைச் செடிகள் வேலி போல வளர்க்கப்பட்ட சூழலில் ஏராளமாகப் பாம்புகள் திரிவதாகச் சொன்னீர்கள். இரவில் டார்ச் இல்லாமல் நடக்க வேண்டாம். விடியற்காலையில் ரொம்பப் பனியாக இருக்கிறது. நான் வரும்பொழுது உங்களுக்கு ஜலதோஷம் இருந்தது. நான் படுத்திருந்த அந்த அறையில் ஜன்னலை மூடிவிட்டுப் படுக்கவும். காலையில் எட்டு இட்லிகளாவது நீங்கள் சாப்பிட வேண்டும். காரம் அதிகம் சாப்பிடாதீர்கள். எனக்கு எப்பவும் உங்கள் நினைவாகவே இருக்கிறது. ஏன் இவளுக்கு இவ்வளவு அக்கறை என்று நினைக்க வேண்டாம். நீங்கள் உங்கள் உடம்பைத் தானாகவும் பார்த்துக் கொள்வதில்லை; அம்மா சொன்னாலும் கேட்டு நடப்பதில்லை. எனவே என் பொருளைக் கவனித்துக் கொள்ள நான் அங்கு இல்லாததால், எழுதுகிறேன். தினம் ஒரு மெயிலாவது தட்டி விடவும். மெயில் வரவில்லையென்றால், உங்கள் ஆ°பத்திரியில் நீங்கள் வாங்கித் தந்த அந்தத் தூக்க மாத்திரைகளை நான் சாப்பிட வேண்டியிருக்கும். இதோ இந்த மெயில் கடிதத்தை, நாளைக்காவது உங்களிடமிருந்து மெயில் வராதா என்ற ஏக்கத்துடன் அழுதுகொண்டே முடிக்கிறேன். என் அன்பு இதழ்ப் பரிசுகள்.

கல்லூரி விடுமுறைக்கு சிதம்பரம் வந்திருக்கிறேன். கல்லூரி திறப்பதற்கு முன் பத்துநாள் அங்கு வந்து திரும்ப நினைத்திருக்கிறேன். உங்கள் அம்மா ஒன்றும் தப்பாக நினைக்க மாட்டார்கள் அல்லவா?

இங்கு வீட்டு வேலைகள் எல்லாம் நான்தான். மன்னி வீட்டுக்கும் போவதில்லை. காரணம், வீட்டு வேலைகள் மூலம் உங்களை மறக்கலாம் என்பதே. வருடப் பிறப்பு அன்று நடராஜர் கோவிலுக்குப் போனேன். உங்களுக்கு அந்தக் கோயில் ரொம்பப் பிடிக்கும். அங்கு வந்த கணவன் மனைவி ஜோடிகளைப் பார்த்தப் போது பொறாமையாக இருந்தது. ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடக்கும் தம்பதிகளைப் பார்க்கிற போது, ஏக்கமாக இருந்தது. எனக்கு அதெல்லாம் கொடுத்து வைத்திருக்கிறதோ என்னவோ!

இங்கு வந்தது முதல் அப்பாவின் தொல்லை, கூச்சல், தாங்க முடியவில்லை. என் சம்பளத்தை முழுமையாக அவர் மது குடிக்கவும், சீட்டு ஆடுவதற்கும் கொடுக்க வேண்டுமாம். அவர் சொல்லும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமாம். “சம்பாதிச்சா ஆச்சா? கல்யாணத்துக்கு எங்கிட்ட தானே வந்தாகணும்?” என்று கொக்கரித்தார்.

டியர் ஒரு வேதனையான சம்பவம். இரண்டு நாட்களுக்கு முன் என் அம்மாவின் அண்ணன், எனக்குத் தாய் மாமன் முறையுள்ள சீனு மாமா இங்கு வந்தார். அவர் பார்வையும் அசட்டுச் சிரிப்பும் தாள முடியவில்லை.

அப்பாவும் தங்கைகளும் வீட்டில் இல்லத நேரம் பார்த்து அசடு வழிய, “ஷிவானி, உன்னை என்னால் மறக்க முடியலை. நான் உன்னை ரெண்டாந்தாரமாக் கல்யாணம் செஞ்சுக்கட்டுமா? ஊர்ல எனக்கு நில புலன் நிறைய இருக்குன்ற விஷயம் எல்லாம் உனக்கே தெரியுமே..” என்று உளறியபடியே என் கையைப் பிடித்தார். விருட்டென்று என் கையை இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு பிழியப் பிழிய அழுதேன். எல்லாம் அப்பா கொடுக்கிற இடம்..!

சீனு மாமா ஊருக்குக் கிளம்பி விட்டாலும் அவர் பேச்சு, என் காதில் கொதிக்கிற ஈயக் குழம்பாய் தகிக்கிறது; அவர் தொட்ட என் கையை நெருப்பில் போட்டுப் பொசுக்கி விடலாமா என்று மனசு துடிக்கிறது. அழுது அழுது உடம்பும் சரியில்லை. கடிதம் எழுதுங்கள்; அது ஒன்றே என் மனசுக்கு ஆறுதலைத் தரும் மருந்தாக இருக்கும்..

இதோ! உங்கள் கடிதத்தைப் படித்ததிலிருந்து ஆறாகக் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் எதுவானாலும் அதை மறைத்து நடிக்க எனக்குத் தெரியாத காரணத்தால், இப்படி ஒரு கடிதத்தை நீங்கள் எழுத நேர்ந்து விட்ட கொடுமைக்கு நான் யாரைக் குற்றம் கூறுவது? நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்…

சீனு மாமா, உன் மேலான ஆண் நண்பர்கள், அவர்களின் சகோதரப் பாசம் (!), அன்றைக்கு சினிமாவில் உன் பின்னால் உட்கார்ந்து கேலி பேசிய காலி… இப்படி உலகில் நிறைய உலுத்தர்கள் உண்டு. இவர்களில் சிலர் நல்லவர்கள் என்று நீ வாதாடலாம். என்னைப் பொறுத்தவரை ஓர் பெண்ணுடன் பழகும் எந்த ஆணின் மனத்திலும் அட்லீ°ட் ஒரு சதவிகிதமாவது கள்ள எண்ணம் இல்லாமல் இருக்கும் என்பதை நான் நம்பத் தயாராக இல்லை. சந்தர்ப்பம் கிடைக்காதவரை எல்லோரும் யோக்கியர்கள்தான்! சீனு மாமா போன்ற அயோக்கியர்களை நெருப்பாக மாறி நீ சாடாமல் சகித்திருக்கும்வரை, உன்னை ஓர் நல்ல பெண்ணாகவே என்னால் மதிக்க முடியவில்லை. சீனு மாமாவுக்குப் புத்தி வருகிற மாதிரி, நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்டு, அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டிருந்தால் அல்லது செருப்பால் இரண்டு அடி போட்டிருந்தால், அங்கு பறந்து வந்து நான் உன்னைப் பாராட்டியிருப்பேன். அதற்குத் தைரியம் இல்லையா? அல்லது அவனுடைய நிலபுலன்களும் செல்வாக்கும் உன்னைக் கட்டிப் போட்டு விட்டனவா?…

அன்பே, உங்கள் கடிதத்தை மேலே படிக்க முடியாமல் துக்கம் பீறிட்டுக் கண்ணீராய் வழிகிறது. நான் நல்ல பெண் இல்லை என்று கண்டு பிடித்து விட்டீர்கள் அல்லவா, அதனால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீர் இது!

ஒன்றை மட்டும் உங்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும். சீனு மாமாவின் தம்பிக்கு என் அக்கா வாழ்க்கைப் பட்டிருக்கிறாள். அவரைச் செருப்பால்…. என்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லை. பின்னால் குடும்பத்தில் பல கோளாறுகள் ஏற்படலாம்.

என் கல்லூரி பிரின்ஸிபால் அடிக்கடி கூறுவார்; ஷிவானி, நீ ஒரு குழந்தை! என்று. நான் நிச்சயமாகக் குழந்தைதான். காதலர்களுக்குள் ஒளிவு, மறைவு ரகசியங்கள் இருக்கக் கூடாது என்பார்கள். அது சரியல்ல; கணவன் மனைவியே ஆனாலும் அவர்களுக்கு அந்தரங்கம் வேண்டும். ரகசியங்கள் சில காக்கப்பட வேண்டும். வெளியில், உதட்டளவில் வேண்டுமானால், எந்த ரகசியத்தையும் நான் மறைக்கவில்லை என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் நிச்சயமாக அந்தரங்கம் தேவை. இந்த உண்மை தெரியாத நான் குழந்தைதானே?

நல்ல பெண் நல்ல முடிவுக்கு வந்திருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறீர்கள். உங்கள் வார்த்தைகளை நான் என்றைக்கு மீறியிருக்கிறேன்? உங்கள் ஊரிலிருந்து வரும்போது உங்களிடமிருந்து எடுத்துவந்த தூக்க மாத்திரை பாட்டிலில் இருந்த அத்தனை மாத்திரைகளையும் விழுங்கிவிட்டுத்தான் இந்தக் கடிதத்தைக் கடைசிக் கடைசியாய் உங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். டியர், வயிற்றை என்னமோ செய்கிறது… நெஞ்சு குமட்டுகிறார் போல…

டியர், இப்போது உங்கள் மடி எனக்குத் தேவை. உங்களை இறுக்கி அணைத்துக் கொண்டிருக்கையில் பாழாய்ப் போன இந்த உயிர் பிரியாதா? இந்தப் பிறவியில் வேண்டுமட்டும் கஷ்டத்தை அனுபவித்தாயிற்று. அடுத்த பிறவியிலாவது நாம்…

அவன் முட்டி மோதிக்கொண்டு கதறினான்.

“ஷிவானி! நல்ல முடிவு என்று நான் குறிப்பிட்டது, நம் திருமணத்தையல்லவா? அவசரப்பட்டு விட்டாயே நீ!” என்று அலறிக் கண்ணீர் விட்டு அழுதான்.

(தினமணி கதிர் வார இதழ்)

Print Friendly, PDF & Email

1 thought on “நான் இன்னும் குழந்தையாம்…

  1. கடிதம் மூலமே ஒரு நல்ல கதையைப் படித்த நிறைவுடன் ஆசிரியருக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தி.தா.நா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *