தாஜ்மகாலில் ஒரு நிலா

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 20, 2022
பார்வையிட்டோர்: 20,822 
 
 

அவள் என்னைக் கடந்து சென்ற போது மெல்லிய சுகந்தம் காற்றில் கலந்து என்னைத் தழுவிச் சென்றது. என்னைத் தழுவிச் சென்றதா அல்லது எனக்குள் கலந்து விட்டதா தெரியவில்லை.

அந்தக் கணமே அவளுக்கும் அந்த சுகந்தத்திற்குமான தொடர்பு எனக்குள் ஏற்பட்டு விட்டிருந்தது. சண்கிளாஸ் அணிந்திருந்த அவள் தாயாரின் தோளை ஒற்றைக்கையால் பற்றியபடி திடீரென கூட்டத்தில் மறைந்து போயிருந்தாள்.

அவள் நினைவு வரும்போதெல்லாம், அந்த சுகந்தம் நாசியில்கலந்து மூளைக்குள் நுழைந்து எனக்கு ஏதேதோ இன்ப உணர்வுகளை ஏற்படுத்தியது. அவளை மீண்டும் காணமுடியமா என்ற ஏக்கமும் எனக்குள் எழுந்தது.

என்னிடம் நல்ல விலை உயர்ந்த கமெரா இருந்தது. நான் தாஜ்மகாலை சூம் பண்ணி படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அந்த சுகந்தம் மீண்டும் காற்றில் கலந்து என்னைத் தொட்டது.

‘எக்ஸ்யூஸ் மீ’ என்ற ஆண்குரல் பின்பக்கமாகக் கேட்டது. வியூபைண்டரில் இருந்த பார்வையை குரல் வந்த திசை நோக்கித் திருப்பினேன். என் நினைவில் யாரைச் சுமந்தேனோ, அவளேதான் பின்னால் நின்றாள்.

அவளுக்கருகே பெற்றோராக இருக்கலாம், தாயும் தந்தையுமாக இருவர் நின்று கொண்டிருந்தார்கள். இப்பொழுதும் தாயின் தோளைப் பற்றியபடி அவள் நின்றுகொண்டிருந்தாள்.

ஆகா, எத்தனை அழகு என்று அவள் முகத்தைப் பார்த்து வியந்த எனக்கு, அப்போது தான் தெரிந்தது அழகைக் கொடுத்த இறைவன் அவளது கண்ணைப் பறித்து விட்டானே என்று. காரணம், அவளது கண்ணைக் கறுப்புத் துணியால் கட்டியிருந்தார்கள். அதை மறைக்க, அதற்கு மேல்தான் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தாள்.

அதற்கும் இறைவனைத்தான் திட்டித் தீர்த்தேன். வேறுயாரைத் திட்டமுடியம். ஏதாவது இப்படியான குறைகள் உள்ளவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஆண்டவன் மேல்தான் எனக்குக் கோபம் வருகின்றது. இந்த அழகுத் தேவதையால் இயற்கை அழகைப் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் என் மனசு தவித்தது.

இங்கே தாஜ்மகாலைப் பார்க்க வருமுன், மும்தாஜ் மகாலைப் பற்றி ஏற்கனவே அறிந்து வைத்திருந்தேன். சில சமயங்களில் சிறுவயதில் படித்த அனார்க்கலியின் கதையும் நினைவில் வரும். சாஜகான், மும்தாஜ் மகாலின் நினைவாகக் கட்டிய மாளிகைதான் தாஜ்மகால் என்று கேள்விப்பட்ட போது அவர்களை இளம் காதலர்கள் என்றுதான் முதலில் எண்ணியிருந்தேன்.

ஆனால் அவர்களின் வரலாற்றை அறிந்த போதுதான் பதின்னான்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்தவள் மும்தாஜ் மகால் என்பதை அறிந்தேன். அப்போதுதான் காதலுக்கு வயதில்லை என்ற உண்மையும் எனக்குப் புரியலாயிற்று. எல்லோருக்கும் மும்தாஜ் மகாலுக்காகக் கட்டிய காதல் சமாதி தான் நினைவில் நிற்கும்.

ஆனாலும் தாஜ்மகாலை நேரடியாகப் பார்த்த போது எனக்குள் அது ஒரு சமாதி என்ற எண்ணமே ஏற்படவில்லை. கடந்தகால சரித்திரத்தை தாஜ்மகால் நினைவூட்டினாலும் காலம் விரைவாக ஓடிவிட்டதில் அது காதலர்களுக்கான ஒரு அழகு மாளிகையாகவே எனக்குத் தெரிந்தது.

காலையில் இருந்து அங்கே தான் இருந்தேன். அதிகாலையில் பார்த்தபோது பிங் நிறமாகத் தாஜ்மகால் காட்சி தந்தது. மதிய நேரம் உணவருந்திவிட்டு வந்தபோது, பால்போல வெள்ளை நிறமாகக் காட்சி தந்தது. நிலாக்காலத்தில் இரவிலே தங்க நிறத்தில் காட்சி தருமாம். புரியவில்லை, இந்த நிற மாற்றங்கள் எல்லாம் பெண்களின் மனவோட்டத்தை காட்டுவதற்காகவா?

‘ஸார் எங்களை ஒரு படம் எடுக்க முடியுமா?’ என்று தகப்பன் கேட்டார். சரி என்று சொல்லிப் படத்தை எடுத்தேன். படம் எடுக்கும்போது பார்வையற்ற அந்தப் பெண் மீது இரக்கம் ஏற்பட்டது. ‘கடவுளே, யார் யாருக்கோ எல்லாம் எதையெதையோ கொடுக்கும் நீ இந்தப் பாவப்பட்ட பெண்ணுக்குப் பார்வையைக் கொடுக்கக் கூடாதா?’ மனதார அவளுக்காக வேண்டிக் கொண்டேன்.

‘ஸார் இவ்யூ டோன்ட் மைன்ட் இன்னும் ஒரு படம் எடுப்பீங்களா?’

உதவி என்று கேட்டவங்களுக்கு உதவி செய்யப் போனால், விமாட்டாங்கபோல என்று நினைத்துக் கொண்டு ‘சரி எடுக்கிறேன்’ என்றேன்.

ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டுப் பெண் அணிந்திருந்த கண்ணாடியை அகற்றி கண்கட்டைக் கழற்றிவிட்டார் தந்தை.

அவளது இமைகள் பட்டாம் பூச்சியாய் படபடக்க, விழிகள் ஆச்சரியமாய் தாஜ்மகாலைப் பார்க்க, கமெராவோ கிளிக் கிளிக் என்று படம் பிடித்துக் கொண்டது.

எனக்குள் இன்ப அதிர்ச்சி. இருண்டு போன உலகத்தை இவளால் பார்க்க முடிகிறதா? அப்படி என்றால் இந்தப் பெண்ணுக்குக் கண் தெரியுமா?

வாய் மூடாது வைத்த விழி அசையாது, அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவள் சட்டென்று சதாரித்துக் கொண்டாள். வெட்கப்பட்டு உதட்டில் மெல்லிய புன்னகையோடு தலை குனிந்தாள். நான் வேடிக்கை பார்த்தேன். அவளால் நம்பமுடியாமல் ‘வாவ்’ என்றாள். கண்கட்டி கண்ணாமூச்சி விளையாட்டுப்போல, ஒரு கணம் ஏமாந்தது நானாக இருந்தேன். ஆனாலும் அவளது மகிழ்ச்சியில் நானும் கலந்து கொண்டு புன்னகை உதிர்த்தேன். ஆண்டவன் ஏதோ எனது வேண்டுகோளை நிறைவேற்றி வைத்தது போல, அவளைப் பார்த்து,

‘ஸொறி, உங்களுக்குக் கண் தெரியுமா?’ ஆச்சரியத்தோடு கேட்டேன்.

அவள் என்னை ஏறஇறங்கப் பார்த்தாள்.

‘கண் தெரியாது என்று யார் சொன்னாங்க?’ என்றாள்.

‘இல்லை, கண் கட்டியிருந்ததால் நான் அப்படி நினைச்சு உங்களுக்காக ஆண்டவன் கிட்ட வேண்டிக்கிட்டேன்’

‘வேண்டிக்கிட்டீங்களா.. எனக்காகவா? என்னவென்று?’ கேலியாகக் கேட்டாள்.

‘உங்களுக்குப் பார்வையைக் கொடுத்திடு என்று’

இதுவரை வேடிக்கையாய் பேசியவள் ஒரு கணம் நிறுத்தி என்னை உற்றுப் பார்த்தாள்.

‘உண்மையாகவே வேண்டிக்கிட்டீங்களா?’

‘ஆமா..!’ என்றேன்.

‘தாங்ஸ்’ என்றாள்

‘எதுக்கு?’

‘யாரென்றே தெரியாத எனக்காக வேண்டிக் கொண்டீங்களே அதுக்குதான்’ என்றாள்.

அவள்மேல் தப்பில்லை, அவளுக்கு கண் தெரியாது என்று நானாகவே எடுத்த முடிவுதானே, அதனாலே நானே என்னை சமாதானப் படுத்திக் கொண்டேன். யாரோ சொன்னார்கள் என்பதற்றகாக, ‘சேப்பிறைஸாய்’ தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும் என்பதால்தான் அப்படிக் கண்ணைக்கட்டிக் கொண்டு வந்தாளாம்.

அப்புறம் அவள் தனது படங்களை அனுப்பிவிடும்படி தனது முகவரியைக் கொடுத்தாள். செல்பேசி இலக்கத்தையும் மாற்றிக் கொண்டோம். பிரிய மனமில்லாது பிரிந்தோம்.

காலம் விரைவாக ஓடியது. எங்கள் உறவு செல்பேசி மூலமும், முகநூல் மூலமும் நெருக்கமாகி மீண்டும் சந்திக்க விரும்பினோம். அவள்தான் சந்திக்கும் இடமாக தாஜ்மகாலைத் தெரிவு செய்தாள். ஏற்கனவே இருவரும் பார்த்த இடமாக இருந்தாலும் எங்களை ஒன்று சேர்த்து வைத்த இடம் என்பதால் இருவரும் ஆவலோடு அங்கே சென்றோம்.

நாள் முழுவதும் அங்கேயே செலவிட்டோம். தாஜ்மகாலின் பிரமாண்டமான யன்னலுக்குக் கீழே உள்ள படியில் உட்கார்ந்திருந்து எதிர் காலம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு சந்தர்பத்தில் அவள்தான் கேட்டாள்,

‘என்னைத் திருமணம் செய்வீங்களா?’

நான் நினைத்ததையே அவளும் கேட்டதில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ‘நான் நினைப்பதும் நீ நினைப்பதும் ஒன்றானதில், நான் நீயாகவும் நீ நானாகவும் மாறி;, நாமாகிவிட்டோம்!’

‘நானும் அதைத்தான் கேட்க நினைத்தேன், நீ முந்திவிட்டாய்!’ என்றேன்.

‘அப்போ, சம்மதமா..?’ என்றாள்.

‘தாலி கட்டவா?’ என்றேன்.

திருமணம் என்பது பாதுகாப்பான ஒரு பந்தம். அவ்வளவுதான், ஆனால் அதைவிட முக்கியமானது இருவரின் மனமும் ஒன்றுபடுவது. அதன் மூலம் ஒருவருக் கொருவரான புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வது. காதலர்களுக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் அதுவே அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வழிவகுக்கும்.

எங்கே எப்படி எத்தனை பேருக்கு முன்னால் திருமணம் செய்து கொள்கிறோம் என்பதெல்லாம் முக்கியமல்ல, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்கிறோமா என்பதில்தான் எதிர்கால வாழ்க்ககையின் சுபீட்சம் தங்கி இருக்கின்றது.

சாஜகானும் மும்தாஜ் மகாலும் உண்மையிலே ஒருவரை ஒருவர் காதலித்திருந்தால், சமாதியாகி இருக்கும் அவர்கள் எங்கள் காதலையும் வாழ்த்துவார்கள் என்பதில் எங்களுக்குச் சந்தேகமேயில்லை. எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை, ‘கட்டுங்கள் தாலியை’ என்பதுபோல, கழுத்தை அழகாக மெல்லச் சரித்தாள்.

ஒரு கணம் தயங்கிய நான் காதலைச் சொல்ல, மஞ்சள் கயிறாய் நினைத்துக் கொண்டு, எனது செயினைக் கழற்றி அவள் கழுத்தில் அணிந்து விட்டேன். கைகளில் கண்ணீர் துளி ஒன்று விழுந்து தெறித்தது.

ஏனோ சுடவில்லை, ஜில் என்று குளிர்ந்தது. இருவர் மனசையும் குளிர வைத்த ஆனந்தக் கண்ணீர் அல்லவா அது. கைகளைப் பற்றியபடி வாசல் வரை நடந்து வந்தோமா இல்லை மிதந்து வந்தோமா தெரியவில்லை.

வாசலில் நின்று திரும்பிப் பார்த்து தாஜ்மகாலின் அழகை ரசித்தோம். காதலுக்குக் கண் இல்லை என்பார்கள், எல்லோருக்கும் கல்லறையாகத் தெரிந்த தாஜ்மகால் எங்கள் கண்களுக்கு மட்டும் மணவறையாகத் தெரிந்தது.

குரு அரவிந்தன் கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம் எழுதுவதுடன் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனங்கள், மற்றும் நாடகங்களும் எழுதி வருகிறார். வாழ்க்கைக் குறிப்பு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை பெயர் அருணசலம் குருநாதபிள்ளை. காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். எழுத்துத் துறையில் இவரின் சிறுகதைகள், தென்னிந்திய சஞ்சிகைகளான ஆனந்த…மேலும் படிக்க...

2 thoughts on “தாஜ்மகாலில் ஒரு நிலா

  1. காதல் என்பது எங்கேயும் எப்போதும் யாரிடமிருந்தும் வெளிப்படலாம் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் குரு அரவிதன் அவர்கள்.

  2. புறக்கண்பார்வை, அகக்கண் பார்வை இரண்டையும் அழகாய் இணைத்த இந்தக் காதல் கதை மிக அற்புதம்.
    திருமணம் என்பது பாதுகாப்பான ஒரு பந்தம். அவ்வளவுதான், ஆனால் அதைவிட முக்கியமானது
    இருவரின் மனமும் ஒன்றுபடுவது. அதன் மூலம் ஒருவருக்
    கொருவரான புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வது. காதலர்களுக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் அதுவே அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வழிவகுக்கும்.
    என்ற மிகப்பெரிய உண்மையை சிறுகதை மூலம் வெளியிட்ட ஆசிரியருக்கு என் வணக்கங்கள்.
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *