சேற்றில் மலர்ந்த தாமரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 11,226 
 

(இதைப்புரிந்து கொள்ள இதற்கு முந்திய பாகம் : ஒரு கோலமயிலின் குடியிருப்பு என்ற கதையை வாசிக்கவும்)

பாகம் 2

சிற்றுண்டி பில் கொடுக்க சர்வரிடம் கேட்ட பொழுது என் கையை தடுத்தி மல்லிகாவே அதை வெடுக்கென்று சர்வர் கையிலிருந்து இழுத்துக்கொண்டார். பூப்போன்ற இந்த மங்கைக்கு எத்தனை சோதனைகள், எத்தனை அல்லல்படும் இன்னல்கள் இடற்பாடுகளின் தொடர்ச்சி, பாதுகாப்பற்ற இருப்பிடம் ஒரு நிரந்தரமற்ற கேள்விக்குறியான ஒரு வாழ்க்கை, எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆபத்து காத்துக்கொண்டிருக்கும் ஒரு அகோர சூழ்நிலை. நிம்மதியாக வந்தோமா போனோமா என்ற கலவையற்ற வாழ்வின் அறிகுறியே இல்லாமல், அதே சமயம் மறுபுறம் மல்லிகாவின் நேர்மையான மனநிலை, மற்றவரின் மானம் மரியாதையைப்பற்றி யோசிக்கும் நல்லுள்ளம், தான் கெட்டாலும் அவருடன் பழகிய நண்பரின்பால் இன்சொல்லைத் தவிர யாராலும் இன்னாத கேளாமை என்ற நல்லெண்ணம்…. இந்நினைப்புகளெல்லாம் என் தலையில் வசை பாடிக்கொண்டிருக்கும் சமயம், அவர் இரண்டாம் முறை என்னை தொட்டதும் என் உடலில் ஜில் என்ற ஒரு உணர்வு ஏற்படுவதை உணர்ந்தேன். அவர் மீண்டும் தொடுவாரா என்ற ஏக்கம் இருந்தது, காரணமின்றி மல்லிகாவை தொடுவதற்கும் பயமாக இருந்தது.

“…சர், இத்தனை நாள் எப்பொழுதும் நீங்களும் சங்கர் சாரும் தான் பில் பே செய்தீர்கள், என்னிடத்தில் பணமில்லாமல் நான் இருந்ததில்லை. நூறு ரூபாய்க்கு மேல் என்னிடம் பணம் இருக்கத்தான் செய்தது, அதை நீங்களும் பார்த்திருக்கிறீர்கள், ஆனால் அது என் அம்மாவின் சம்பாத்தியம். அவளைப்பற்றி நீங்கள் அறியாமல் இருந்தாலும் அப்பணத்தைக்கொண்டு உங்களுக்கு சிற்றுண்டி அளிக்க என் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. தெரிந்தால் உங்கள் மனம் வருத்தப்படுமே என்று. அதற்காகவே அடுத்த தெருவில் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, நான் நமது இன்ஸ்டிடியூட்டிற்கு வரும் முன் டியூஷன் சொல்லிக்கொடுத்துவந்தேன். இது நான் சம்பாதித்த பணம். இது என் சொந்த பணம், நேர்வழியில் நான் சம்பாதித்த பணம், ஆகவே, இன்று நானே பில் பே செய்வேன்…” என்று விளக்கமளித்தார். “..ஏன் மல்லிகா இத்தனை சென்டிமெண்ட்டுடன் இருக்கிறீகள், உங்கள் பேச்சும், உங்கள் உயர்ந்த எண்ணங்களும் என்னை வெகுவாக கவர்ந்திருக்கின்றன. நான் நினைக்காத ஒன்றை நினக்கக்கூடும் என்று நீங்கள் நினைத்து நொந்துபோயுள்ளீர்களே.

சங்கருக்கு தெரிந்திருந்த அந்த சர்வர், அவர் சொன்ன பின்னர் பில்லையும் மல்லிகாவிடத்திலிருந்து ஒரு ஐந்து ரூபாய் நோட்டையும் பெற்றுக்கொண்டு, சில்லரை கொண்டு வர சென்றுவிட்டார். “நீங்கள் எப்பொழுது பாம்பே போவதாக உத்தேசம்..” என்று சங்கர் என்னிடம் கேட்டார். “எனக்கு 1 வருடம் கூட ஆகலாம், ஏனெனில், வேலை தேடும் முன்னர் ஷார்ட்ஹேண்ட், டைபிங் பரிட்சை எழுதியாகவேண்டும்.” சில்லரை வந்த பின்னர் அதிலிருந்து மல்லிகா சர்வருக்கு டிப்ஸ் கொடுக்க மறவாமல், 25 பைசா நாணயத்தை பில் தட்டில் விட்டு, மீதி சில்லரையை எடுத்துக்கொண்டார்.

“…ஏதோ பெரிய பாரத்தை இறக்கிவிட்டதாக எனக்குத் தோன்றுகிறது..” என்றார் மல்லிகா.

“25 பைசா டிப்ஸ் பாரமா?” என்று நான் கேட்க, நமக்குள் யாரும் பாரமில்லையே….” என்று கேட்டார் சங்கர்.

“ஐயோ, நான் உங்களைச் சொல்லவில்லை….” என்னை ஏறிட்டு பார்த்த மல்லிகா, “….சர், இவர் எனக்கு பாரமில்லை ஆனால் அபாரம்… இன்றுதான் என் மனதைத் திறந்து நான் புதைத்து பூட்டி வைத்திருந்த என்னுடைய பிற்கால சரித்திரத்தை என் நலம் கருதும் ஒரு நண்பரிடம் அம்பலப்படுத்தியுள்ளேன்.” என்றார் மல்லிகா.

மூவரும் சிரித்த முகத்துடன் வெளியே வந்து நேராக இன்ஸ்டிடியூட்டிற்கு சென்று நமது பாடங்களை கவனித்தோம். ஷார்ட்ஹேண்ட், டைபிங், ஸ்போகன் இங்லிஷ் பாடங்கள் முடிந்ததும் வெளியில் வந்து அரைக்குறை மனதுடன் ஒருவருக்கொருவர் விடை பெற்றோம். மறு நாளிலிருந்து கட்டாயமாக வருவேன் என்று வாக்குறுதியளித்த மல்லிகா தன் கண்கள் மினுங்க சிவந்த கன்னங்களில் குழியுடன் வாய் திறந்து மனதார சிரித்து விடைபெற மீண்டும் தன் கையை நீட்டினார். அவகாசத்தை நழுவவிடாமல் மல்லிகாவின் பூப்போன்ற மிருதுவான கையைப் பற்றிக்கொண்ட நான் வெகு நேரம் அவரை நோக்கியே கழித்தேன். என் பார்வை “நானும் வரவா?” என்று கேட்பதுபோல் இருந்ததோ என்னவோ, “நானே போய்க்கொள்கிறேன்” என்று கூறி தன் கையை மெதுவாக தன்னகப்படுத்திகொண்டார் மல்லிகா. அவர் சென்ற பின்னர், சங்கரும் பெரு மூச்சு விட்டு, இப்பெண்ணுக்கு இறைவந்தான் நல் வாழ்க்கையமைக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு, தானும் விடைபெற்றார். நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் மீண்டும் என் மனதில் ஒவ்வொன்றாக தோன்றி மறைய, நானும் சைக்கிளில் ஏறி வீட்டையடைந்தேன்.

வழி எப்படி கழிந்தது என்ற உணர்வே எனக்கு இல்லாமலிருந்தது. ஒரு இளம்பெண் நம்மிடம் இவ்வளவு ஓபனாக பேசியதே கிடையாது, இளம் பெண் என்ன, கிழவியும் பேசியது கிடையாது. அவர் திருச்சியில் இருந்தது, இங்கே வந்து 10 வருடங்கள் ஆனது எல்லாம் கணக்கிட்டால், அவர் என்னைவிட இரண்டு வயது பெரியவளாக எனக்குத் தோன்றியது. அவர் தன்னைத்தானே அங்கீகரித்துக்கொண்ட விதமும், தன்னம்பிக்கையும் என்னை பெரிதாக கவர்ந்தன. கராராக காணப்பட்ட மல்லிகா, யாருக்கும் சளைத்தவரல்ல, அவர் வீசும் பார்வையே மற்றவரை, சுதாரித்துக்கொள்ளச் செய்யும். ஏதாவது கேள்வி கேட்டால், யோசிக்காமல், கேள்வி முடித்த மறு கணமே பொருத்தமான தனது கருத்தை பதிலாக கூறுவதும், அப்பதிலில் ஒரு திட்டவட்டம் இருப்பதையும் நான் கவனித்தேன்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. நமது நட்பும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக நம் இருவருக்குள் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருந்தது. ஒருத்தருக்கொருவர் பாராமல் இருக்க முடியவில்லை.

உடையில் மல்லிகா அடக்கமாக தென்பட்டாலும், நடை பாவனையில் அவருக்கு ஒரு மிடுக்கு இருந்தது. அவர் பேச்சு கச்சிதமாக அமைந்திருந்தது. அவரை யாரும் ஏமாற்ற முடியாது என்பது உறுதியாக தெரிந்தது. ஆண்களின் நடத்தையாலும், வாழ்வின் பெரும் பாகத்தில் ஆணாதிக்கத்தையும் கண்டு கொண்டிருக்கும் மல்லிகா ஆணின் அன்பை பெற வழியே இல்லாமல் வளர்ந்திருக்கிறார் என்பது தான் உண்மை. அவர் உண்மையான அன்புக்காக ஏங்கி நிற்பதையும் கவனித்தேன். மல்லிகாவின் வளர்ப்புத் தாய் தன்னலமற்ற அரணாக இருந்து, ஊட்டி உடுத்தி வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கியதை யோசிக்கும் பொழுது, இத்தகைய பெண் பிள்ளைகளுக்கு இம்மாதிரியான தாய் கிடைத்தால், அநேகமானோரின் வாழ்வாதாரமே மாறி, சமூகத்தில் அவர்களும் தலை தூக்கி நடக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

மல்லிகா தனது வாழ்க்கைப் படகில் எனக்கு இடம் ஒதுக்கவில்லை என்பதைப்போல் எனக்குத் தோன்றினாலும், அப்படகை கரை சேர்க்க நான் எதாவது செய்ய முடியுமா என யோசித்தேன். முடியும் என்றது என் மனம். சரி, ஒரு நாள் அவரிடம் இன்னும் ஒபனாக பேசி நான் ஏதாவது செய்யமுடியுமா என்று கேட்டுப் பார்ப்போமே, என்று யோசித்தேன். எப்படியும் மல்லிகாவை விட்டு பிரிந்திருக்க என் மனசு இடம் தரவில்லை என்பதையும் கவனித்தேன்.

அன்றொருநாள் சனிக்கிழமையன்று உற்சாகமாக இன்ஸ்டிடியூட்டிற்கு கிளம்பி மல்லிகா வருவதற்குள் முயற்சித்து மலை 6.15க்கு டைப்பிங் முடிக்கையில், அவர் வந்து ஒரு 10 நிமிட ஷார்ட்ஹேண்ட் டிக்டேஷன் முடித்து விட்டிருந்தார். அந்நேரம் யாரோ சங்கருடைய சொந்தக்காரர் வெளியூரிலிருந்து வந்திருக்க, சங்கர் சிக்கிரம் மாலை 6.15 மணிக்கே வீட்டிற்கு கிளம்பி விட்டார். எனவே ஷார்ட்ஹேண்ட் கிலாஸ் முடிவடைந்து மற்ற மாணவ மாணவிகளும் கிளம்பிக்கொண்டிருந்தனர். நானும் மல்லிகாவும் செய்வதறியாது ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்கொண்டோம். நாம் பேசவில்லை, நம் விழிகள் பேசின. மல்லிகா டிக்டேஷன் நோட் செய்ததை ஆங்கிலத்தில் எழுத முற்பட்டுக்கொண்டிருந்தார். நீங்கள் படித்துக்காட்டுங்கள், நான் செக் செய்கிறேன் என்று ஜாடையிலேயே நான் கூற, அவர் சந்தோஷமாய் படிக்க அதை அவர் கொடுத்த புத்தகத்தில் நான் சரி பார்த்துக்கொண்டிருந்தேன். இதைக் கண்ட ஒரு மாணவி, நம் இருவர் முன் நின்று சிறிது நேரம் இருவரையும் கவனித்தார். நாம் நமது பாடத்தில் மும்முரமாக இருக்கவே, குட்நைட் மல்லி, குட்நைட் சர், என்று கூறி விடைபெற்றார். அந்த மாணவியை ஏறெடுத்துப்பார்த்த மல்லிகாவின் முகம் சற்று மாறி கடுமையாக தெரிந்தது. இருப்பினும் அவர் தன்னை சுதாரித்துக்கொண்டு குட்நைட் அண்ட் ஸ்லீப் டைட் சந்திரி, என்று பதில் கூற சந்திரிகா புன்னகைத்துக்கொண்டு வெளியேறினார். சந்திரிகா போவதையே உற்று நோக்கிய மல்லிகா என்னை திரும்பிப்பார்த்தார். இருவரையும் நான் கவனித்துக்கொண்டிருந்ததை கண்டு, சந்திரிகா போன திசையில் திரும்பி, பெண்களுக்கே உண்டான பாணியில் வாயை மூடி இடவலமாக கோணலாக்கி அசைக்க, அந்தக்காட்சி எனக்கு மிக அருமையாக தோன்றியது, சிரித்து விட்டேன். மல்லிகாவும் பதிலுக்கு வாயை கையால் மூடியபடி சிரித்தார். அவர் எழுதியதை படித்து முடித்தார். மிகக்குறைவான கரெக்ஷன்கள் தான். மீண்டும், மௌனம், ஆனால், கண்கள் பேசின. இருவரும் புரிந்து கொண்டு, எழுந்து இன்ஸ்டிடியூட்டிற்கு வெளியே வந்தோம்.

வெளியேவந்ததும் அவரை அரவணைக்க வேண்டும் போல் தோன்றியது. என்ன இது! விசித்திரமான ஆசை! தகாத செயல்களால் மரியாதை கெட்டுப்போகப்போவுது என்று திடுக்கிட்டு உஷார் ஆனேன். வெளியில் வந்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி:

“சந்திரிகாவுடன் நீங்கள் பேசுவீர்களா?” என்பதாக இருந்தது.

“எஸ் நோ வைத்தவிர வேறு ஏதும் பேச வாய்ப்பு இல்லை” என்றேன்.

“ஏன் மல்லிகா என்ன ஆச்சு…” என்று கேட்டேன்.

“நான் சில விஷயங்களைக் கேள்விப்பட்டேன் எனக்கு சற்று பொறாமை இருப்பதாக தோன்றுகிறது. அதான், உங்களிடமே கேட்கிறேன், கேட்கலாமா சர்?.” என்று வினாவினார்.

“உங்களுக்குப் பொறாமையா?! கேளுங்கள்” மல்லிகா என்றேன்.

“வாருங்கள், அந்த ஹோட்டலுக்குப் போய் ஏதாவது சாப்பிடுவோம்”

என்று அவர் கூற, இருவரும் சங்கருடன் செல்லும் ஹோட்டலுக்குப் போய் அதே மேஜை பக்கம் அமர்ந்தோம்.

“….ஏனோ உங்கள் மீது எனக்கு இவ்வளவு அக்கறை, ஆகவே தான் கேட்கிறேன், சந்திரிகா உங்கள் மீது ஒரு கண் வைத்திருக்கிறாள், உங்களுக்குத்தெரியுமா….?” என்று கேட்டார்.

“…தெரியும், ஆனால் நேரடியாக அவள் எதுவும் சொன்னதில்லை. அப்படி சொன்னாலும், நான் நெல்லையில் இருக்கப்போவதில்லை, பாம்பே சென்று விடுவேன், என் குறிக்கோள் தான் எனக்கு இப்பொழுது முக்கியம் என்று கூறிவிடுவேன். நான் உங்களிடம் பேசி பழகுவதால், அவள் என்னை நெருங்க முடியவில்லை. ஆகவே பல விதங்களில் வளைந்து வருகிறாள்.”

“…உங்களுக்கு ஒரு லெட்டர் எழுதி தன் சினேகிதியிடம் கொடுத்து அதை உங்களிடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறாள். அவளுடைய சினேகிதி அதை வாங்க மறுத்து விட்டாள்…. உங்களுக்குத் தெரியுமா சர்?” என்று மல்லிகா ஒரு இரகசியத்தை என்னிடம் கூறினார்.

“இல்லை, இதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னிடமே கொடுத்திருக்கலாமே!! இதில் என்ன இருகிறது? என் இஷ்டத்தை நான் வெளிப்படுத்தியிருப்பேனே.” “…அது போக, நான் ஒரு ஏழை வீட்டுப் பையன், அவளோ பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவள், அத்துடன் ஜாதி, இனம் பார்த்து பெண் கொடுப்பவர்கள், பணம் பணத்தோடு சேரும், இனம் இனத்தோடு சேரும் என்று நடைமொழியுண்டு.” என்றேன்.

“…அப்பொழுது நான்?’ என்று கவலையோடு மல்லிகா கேட்டார்.

“நீங்கள் இருப்பது ஒரு இனம் இல்லை, மல்லிகா. நீங்கள் விருப்பப்பட்டால், வெளியே வர ஆயிரம் வழிகள் உண்டு. இதைத்தான் உங்கள் அம்மாவும் விரும்புகிறார். நீங்கள் யாருடைய தயவுக்கும் அடிமை இல்லை. வேறு இடத்திற்கும் வேறு வேலைக்கும் மாற உங்களுக்கு யாருடைய பர்மிஷனும் தேவையில்லைதானே?”

“…சர் என் வாழ்க்கையே சேற்றில் மூழ்கியிருக்கிறது. நமக்கு விடிவுகாலம் வருமா என்பதே சந்தேகக் குறியாக உள்ளது.”

“…அப்படி நினைக்காதீர்கள் மல்லிகா, நீங்கள் பிறந்து வளர்ந்தது சேற்றில் இருக்கலாம், ஆனால் நீங்களோ ஒரு தாமரை, அதன் இலையில் சேற்றுத் தண்ணீர் ஒட்டவும் ஒட்டாது, தங்கவும் தங்காது. தாமரையைப் பறித்த பின்னர் அதை சேற்றுக்கு மறுபடியும் அனுப்புவதில்லை. உங்கள் அம்மா இத்தொழிலை விட்டு வெளியே வந்து உங்களுக்கு ஒரு நல் வாழ்க்கை அமைத்துக்கொடுக்க சபதம் செய்துள்ளார், இல்லையா? ஆமாம், பாம்பேயில் உங்கள் அம்மாவுக்கு யாரைத்தெரியும்.?” என்று நான் கேட்டேன்.

“அம்மாவின் சித்தி மகள், தன் இரண்டு பிள்ளைகளுடன் அங்கே வசித்து வருகிறார். கணவர் இறந்து விட்டார். அவர் ஏதோ ஒரு ஆலையில் வேலைப் பார்த்து தன் பிள்ளைகளை படிக்க வைத்து இருவரும் ஒரு ஆபிசில் வேலை செய்து இப்பொழுது இருவரும் அம்மாவை கவனித்துக் கொள்கின்றனர். முதலில் அவரிடம் தான் செல்வோம். எனக்கு வேலை கிடைத்த பின்னர், வேறு வீடு மாறிவிடுவோம். ஆமாம், நீங்கள் எங்கே இருக்கப்போகிறீர்கள், பாம்பேயில் உங்களுக்குச் சொந்தம் ஏதாவது உண்டா?.”

“சொந்தம் யாரும் கிடையாது, இதற்குமுன் பாம்பே போனதுமில்லை. என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அத்துடன் ஒரு சமயம் பாம்பேயிலிருந்து ஒரு வேலையாய் இங்கு வந்து போன ஒருவருடைய சந்திப்பினால் அவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது, அவர் என்னை பாம்பே வரும் படியும், வேலை கிடைக்கும் வரை அவர் வீட்டில் தங்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.”

சர்வர் வந்தாச்சு, இரண்டு ரவா தோசைக்கு ஆர்டர் செய்து, மெதுவாகவே கொண்டு வரச்சொல்லி கேட்டுக்கொண்டோம். சங்கருக்கு தெரிந்திருந்த சர்வர், புரிந்து கொண்டு புன்னகைத்தபடி அடுத்த டேபிலுக்கு சென்று விட்டார்.

“சர், நான் ஒன்று கேட்கட்டுமா? பார்வையாலேயே சைகை செய்து கவனத்தைக் கவரும் இந்த கலை எங்கே கற்றீர்கள்….”

“மேடம், நான் ஒன்று சொல்லட்டுமா? ஜாடையிலேயே புரியவைத்து, மனம் கவரும் அந்த கலையை நீங்கள் கற்ற இடத்திலிருந்து….’

இதைக்கேட்டு சிரித்து விட்டார் மல்லிகா. “நான் இதைத்தான் எதிர்ப்பார்த்தேன். சிரிக்கும் உங்கள் அழகே என்னை கவர்ந்திருக்கிறது.” நீங்கள் சிரித்துக்கொண்டே இருங்கள், நான் பார்த்தபடியே இருந்துவிடுகிறேன்.”

“சர், நீங்கள் ஏன் இவ்வளவு நல்லவராக இருக்கிறீர்கள், என் வாழ்வில் ஏன் வந்தீர்கள்.” இதைக்கூறும் பொழுது, மல்லிகாவின் கயல் விழிகள் தூறல் போட ஆரம்பித்தன. மல்லிகாவை என்னுடன் அமரும்படி அழைத்தேன். எழுந்து வந்து என் அருகில் அமர்ந்தார்.

‘…புரிகிறது மல்லிகா, வாழ்க்கையில் உங்களுடன் என்னால் பயணிக்க முடியாது என்பதை நினைவுப்படுத்துகிறீர்கள். மல்லிகா, சில கேள்விகளுக்கு பதிலே இருக்காது, சில கேள்விகளின் பதில் நாள்பட தெரியவரும், உதாரணத்திற்கு, “நீங்கள் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறீகள்… யாருக்காக இந்த சிவந்த மேனியும் பொன்னான மனமும். இனம் தெரியாத யாருக்காகவோ இருக்கும் பொழுது, ஏற்கனவே அறிந்திருப்பவருக்காக ஏன் இருக்கக்கூடாது. விருப்பு வெறுப்பு எல்லாம், நமது மனப்பக்குவத்தைப் பொருத்துதான் உள்ளது மல்லிகா.”

“..அம்மாவிடம் உங்களைப் பற்றிக் கூறினேன். உனக்கு பாதகமில்லாமல் பார்த்துக்கொள், அவரை இங்கே அழைத்து வராதே என்று சொன்னார்.”

“…நீங்கள் ஏற்கனவே என்னை தடுத்துவிட்டீர்கள். நாம் இருவரும் பாம்பே சென்ற பின்னர், அங்கே கோஆபரேட் செய்யலாமே…?

மகிழ்ச்சியுடன் தலையசைத்தார் மல்லிகா, கீழே பார்த்துக்கொண்டே. தான் ஆட மறுத்தாலும் சதையாடும் என்பார்களே, அது போன்று மெதுவாக அவருடைய கை ஒரு முறை மீண்டும் என் கையைப் பற்றிக்கொண்டது. …இம்முறை நீண்ட நேரம்…

மல்லிகாவின் சோகத்தை கலைக்க “…உங்கள் விரல்களா வெண்டைக்காயா….? இவ்வளவு நீளம் !! என்று கூறி பேச்சின் திசையைத் திருப்பும் பொழுது சர்வர் ரவா தோசை கொண்டு வந்தார். பேசிக்கொண்டே உண்ட பின்னர் காப்பிக்கு ஆர்டர் செய்து சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து விட்டோம். “….மல்லிகா, நாளை ஞாயிற்றுக்கிழமை, எனக்கு லீவு நாள், உங்களுக்கு ஆப்ஜெக்ஷன் இல்லையென்றால் நாளை சந்திப்போமா? மல்லிகாவின் கண்களில் இப்பொழுது நட்சத்திரங்கள் மின்ன, அவர் புன்னகைத்த அழகு கண் கொள்ளாக்காட்சியாக அமைந்தது.

“சர், நாளை உங்களுடன் பேசிக்கொண்டேயிருப்பேன். உங்களுடன் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் போல் தோன்றுகிறது.”

“…நான் உங்களை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போல் தோன்றுகிறது…”

“இதை இரண்டாவது தடவையாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். என்ன இது புதிய விதமான அனுபவமாக இருக்கிறதே? நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம், சர்?!”

“நாம் வழி தவறவில்லை மல்லிகா, நமது குறிக்கோள் ஒன்றாக இருப்பதனால் நமது இலக்கையடையவே நாம் கூட்டாக முயற்சிக்கின்றோம். அப்பொழுது நமது மனதை சார்ஜ் செய்ய சற்று சந்தோஷமும் தேவைதானே?” அதைத்தான் தேடுகிறோம்.

“உங்களுக்கு என் மீது காதலா? உண்மையாக சொல்லுங்கள்.”

“..அதைத்தான் நீங்கள் வேண்டாமென்று சொல்லிவிட்டீர்களே. காதல் என்பது சொல்லி வராது. காதலிப்போர் சொல்லிக் காட்டுவதில்லை. தன் நெஞ்சின் துடிப்பை மற்றவருக்கு அறிவிப்பதுமில்லை.”

“..ஆமாம் சொன்னேன். இருப்பினும், என் மனது அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறது.” இது எனக்கு புரியாத புதிராக இருக்கிறது. திடமாக இருந்த என் மனம், உங்கள் பேச்சில் இளக ஆரம்பித்து விட்டது.”

“…ஐயையோ…! மல்லிகா என் மீது குற்றம் சாட்டாதீர்கள். நான் ஒன்றும் மெஸ்மரைஸ் செய்பவனல்ல. உண்மை நிலையை உணரவைப்பவன். ஆகவே, அதைப் பற்றி இப்பொழுது யோசிக்க வேண்டாம். பாம்பே போய் நமது நிலைமைகளைப் பொருத்து முடிவெடுப்போம். எனக்கு 20 வயது தான் ஆகிறது… நான் ஒரு வேலையில் நிலைத்து குடும்பத்தை சமாளிக்க எனக்கு நம்பிக்கை வந்த பின்னர் யாரையும் மணப்பதைப் பற்றி யோசிப்போம்…”

“…யாரையுமா..? அன்று ஒரு வாரம் நான் வராமலிருந்தேனே. நீங்கள் என்னைத் தேடி வந்தீர்களே, என்னிடம் என்ன கேட்டீர்கள்? என்னைப்பெண் பார்க்க யாராவது வந்து விட்டார்களா என்றுதானே? சர் என்னைப் பெண் பார்க்க வரவில்லை, இந்தப் பாவிப் பெண்ணான என்னை ஏற்கனவே பார்த்துவிட்டுத்தான் வந்தார்கள். மணமுடித்துக்கொள்ள இல்லை, விலை பேச…. வேலை முடிந்து என்னை தூக்கி எறிய…. என் ஆர்த்தி எடுக்க பெண்கள் யாரும் வரவில்லை. என் பாடை எடுக்க வந்த அத்தனைப் பேரும் ஆண்களே. அந்த ரகளையில் தான் என் அம்மாவை ஒருத்தன் தலையில் இடித்து விட்டு ஓடிவிட்டான். எப்படி சர் யாரையும் மணந்து கொள்ள முடியும்? யோசித்து வைத்தவரை தானே சர் கட்டிக்கொள்ள முடியும்.?”

“…அதுவும் உண்மைதான். அப்படியென்றால், யாரை யோசித்து வைத்திருப்போமோ அவரை…” இப்பொழுது சரிதானா மல்லிகா?”

“உம்ம்”, என்று மேலும் கீழும் தலையசைத்து ஜாடை செய்தார் மல்லிகா, கீழே நோக்கியபடியே. அவர் நாளுக்கு நாள் சிறிது சிறிதாக என் பக்கம் சாய்வதை கவனித்தேன். “சரி, நாளை எத்தனை மணிக்கு வரட்டும்? 10 மணி ஓகேயா?”

“…எங்கே வரட்டும் சர்.”

‘..இங்கேயே வாருங்கள் டிபன் சாப்பிட்டு எங்கே போவதென்று முடிவெடுப்போம்…”

மறு நாள், சரியாக 10 மணிக்கு டவுனிலுள்ள சைவ ஹோட்டல் பக்கம் சென்றேன். எதிர் திசையில் மல்லிகா அழகான சேலையுடுத்தி, போதுமான மேக்கப்புடன் தோளில் ஒரு பேக் தொங்க அதை இடது கையால் அழுத்தி பிடித்தாற்போல் ஒய்யாரமாக நடந்து வந்துகொண்டிருந்தார். இருவரும் சரியாக ஹோட்டலின் வாசலில் சந்தித்தோம். இருவரும் புன்னகைத்து, ஹெல்லோ என்று கூவிக்கொண்டு, கைகுலுக்கி, உள்ளே சென்றோம். சர்வர் படிக்கட்டைக் காட்டி, மேலே பால்கனிக்கு போகும்படி கேட்டுக்கொண்டார். சரி என்று மேலே சென்றதும் அங்கே இருந்த இரண்டு டேபிள்களில் ஒன்றை நாம் பிடித்துக்கொண்டோம். மேலே வேறு யாரும் வரவில்லை. தனிமையைக் கண்ட மல்லிகா உணர்ச்சிவசப்பட்டு என் மீது சாய்ந்தார். “சர் இன்று நீங்கள் ரொம்பவும் ஸ்மார்ட்டாக தோன்றுகிறீர்கள்.” உங்கள் தோற்றம் எனக்குப் பிடித்திருக்கிறது.

“…நீங்கள் மட்டும் என்னவாம்? சும்மா, அட்டகாசமாக இருக்கிறீர்களே!! ஆயிரம் மலர் கொட்டி, ஒரே மலராக அள்ளியெடுத்த ஒற்றைப்பூங்கொத்தாக விளங்குகிறீர்கள். உங்கள் முகத்தின் ஒவ்வொரு பக்கமும் ஒரு தனி அழகை வெளிப்படுத்துகிறது, மல்லிகா… முடிந்தால் உங்களை கையிலேயே தூக்கி அலையலாம் போல் தோன்றுகிறது….”

மல்லிகாவைத் தாங்கிப் பிடித்தபடியே, இருவரும் நீள் இருக்கையில் அமர்ந்தோம். என் பக்கம் திரும்பிய மல்லிகா என்னையே அரவணைத்துக் கொண்டார். நானும் ஈடு கொடுக்க, சற்று நேரத்தில், படிக்கட்டில் சர்வர் வரும் சத்தம் கேட்டு தளர்ந்து அமர்ந்தோம். இருவருக்கும் வாயிலிருந்து பேச்சே வரவில்லை, ஒருவரை மற்றவர் பார்த்தே ரசித்தோம்.

டிபன் பரிமாறியாகி விட்டது. சுதாரித்துக்கொண்டு நான் கேட்டேன்:

“மல்லிகா நான் ஒன்று கேட்கட்டுமா, நேற்று மாலை இன்ஸ்டிடியூட்டிலிருந்து வெளியே வந்ததும் சந்திரிகாவைப்பற்றி கேட்டீர்களே உங்களுக்கு என்ன தோன்றியது?

“உண்மையைச் சொல்லட்டுமா சர், உங்களை அரவணைக்க என் கைகள் துடித்தன. அத்துடிப்பிலிருந்து மீளத்தான் சந்திரிகாவைப் பற்றிக் கேட்டேன்.”

“…ஓஹ், நம் இருவருக்கும் ஒரே துடிப்புதான் இருந்திருக்கிறது…” ஆச்சரியமாக இருக்கிறதே!

சர்வர் கொண்டு வந்த சுடான இட்லி இரண்டிரண்டு, ஆளுக்கொரு மெதுவடை, பொங்கல், டீ ஆகியவை ஒன்றின்பின் ஒன்றாக உண்டு களித்தோம். பொங்கலின் ஒரு கவளம் எடுத்து மல்லிகாவின் வாய்க்கருகில் நான் கொண்டு செல்ல அவர் என் கையால் ருசித்து சாப்பிட்டார். இதை விட ஆச்சரியம் என்னவென்றால், என் கீழ் உதட்டில் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு பொங்கல் அரிசி பருவை தன் கையால் எடுத்து அதை நான் கவனிக்கும் முன் உண்டு களித்தார். இந்த செய்கை மல்லிகாவின் இதழ்களை சுவைக்க எனக்கு லைசென்ஸ் கிடைத்தது போல் தோன்றியது. முயற்சிக்கலாமா என்று நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே, அவர் தன் வலது கரத்தை என் கழுத்தில் சுற்றி வளைத்து தனது ரோஜா இதழ்களை என் உதட்டில் பதித்து அதை சுவைத்து விட்டார். நானும் அதையே தொடர்ந்து செய்ய, சற்றும் எதிர்பாராமல் நடந்த இந்த நிகழ்சியினால் இருவரும் பரவசமடைந்தோம். அவருடைய இதழ்கள் ரோஜாவின் இதழ்களைப்போல் பின்க் ஆகிவிட்டன. நெஞ்சங்கள் படபடக்க அவர் என் இடதுகையை இழுத்து, தன் நெஞ்சுடன் இருக்கமாக அழுத்திப் பிடித்துக்கோண்டார்.

அவ்வளவுதான், அத்துடன் நமக்கிடையில் இருந்த தூரம் முடிவடைந்தது. இன்விடேஷன் கிடைத்துவிட்டது. நம் கைகளிலும் கால்களிலும் இடப்பட்டிருந்த இன்விசிபல் சங்கிலிகள் அறுந்து விழுந்தன. இஷ்டம் போல் விளையாட அத்தனை கதவுகளும் திறக்கப்பட்டுவிட்டன. ஒன்றுக்குள் ஒன்றாய் கலந்துவிட அழைப்பு விடப்பட்டது. மல்லிகாவின் கைகள் என்னை சீண்ட அதையே நான் பதிலுக்கு ஈடு கொடுக்க பரஸ்பரமாக அவர் கைகளை நான் மன்னித்தேன், என் கைகளை மல்லிகா மன்னித்தார். பேச்சு மூச்சின்றியும் டயலாக் இன்றியும் நமது ரீல் ஓடிக்கொண்டிருந்தது. மனதின் சிற்றுண்டியும் முடித்தாகிவிட்டது.

இருவரும் பில் பே செய்து மெதுவாக எழுந்து வெளியே வந்தோம். மேக மூட்டமாக இருந்தபடியால் டவுனிலிருந்து ஜங்ஷனுக்கு பேசிக்கொண்டே நடந்து சென்றோம்.

பாகம் 3 -ல் (பெண் வீணை) தொடரும்……

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *