சுகந்தியின் காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 12,743 
 
 

அப்பாவுக்கும், அம்மாவுக்கும் மணிவண்ணனைப் பிடிக்காதது சுகந்திக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது.

வங்கியில் தன்னுடன் வேலைசெய்யும் அவனை கடந்த இரண்டு வருடங்களாகக் காதலிக்கிறாள். அவனுக்கு போனவாரம் மதுரையிலிருந்து சென்னைக்கு ப்ரமோஷனுடன் டிரான்ஸ்பர் ஆகிவிட்டது. சென்னை செல்லும்முன் அவனை வீட்டிற்கு ஒருமுறை அழைத்துவந்து தன் பெற்றோர்களிடம் ஒரு சக ஊழியனாக அறிமுகம் செய்து வைத்தாள்.

அதுதான் தப்பாகிவிட்டது.

அவன் வீட்டுக்கு வந்து போனவுடன் அப்பா, “கூட வேலை பார்ப்பவன் மட்டும்தானா; இல்லை எதிர்காலத்தில் கூடவே வாழப்போகிறவனா?” என்று குதர்க்கமாகக் கேட்டார். அம்மா உடனிருந்தாள்.

சுகந்தி அசரவில்லை. சூடாக, “இவர்தாம்பா என் வருங்காலக் கணவர். அவருக்கு இப்ப ப்ரோமோஷன்ல சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆயிடுச்சு. அவர் சென்னை போறதுக்கு முன்னால உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.” என்றாள்.

“அதானே பார்த்தேன்….என் கணக்கு தப்பாகப் போகாதே! சாரதா பாத்தியா உன் பொண்ணு என்ன காரியம் பண்ணிட்டு வந்து நிக்கறான்னு?”

“மூத்தவ வசந்தியை படிச்சவுடனே மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செஞ்சு வச்சமாதிரி இவளுக்கும் நாம செய்திருக்கணும்….இவள மேல படிக்கவச்சு, ஒரு பாங்க்லயும் கைநிறைய சம்பளத்தோட நீங்க வேல வாங்கிக் குடுத்தீங்க. அதான் தப்பாகிப் போச்சு, இப்ப துளிர்த்து நிக்கறா…”

“அம்மா ப்ளீஸ்….கல்யாணம் எனக்கா, உனக்கா? என் கல்யாணத்தில் என் சந்தோஷம் எனக்குத்தானே முக்கியம்?”

அப்பா, “அதெல்லாம் சரிதான்…ஆனா இவனைப் பார்த்தாலே நல்லவன் மாதிரி இல்லைம்மா. நீ அவனைக் காதலிச்சு அவன்கிட்ட ஏமாந்துட்டு வந்து கண்ணை கசக்கினேன்னா நாங்கதானே உனக்கு இருக்கோம்? அதுனால இது ஒரு எச்சரிக்கை உணர்வு….அவன எங்களுக்குப் பிடிக்கவில்லை.” என்றார்.

அவ்வளவுதான். அதன்பிறகு கடந்த இரண்டு நாட்களாக அம்மா இவளிடம் சரியாகப் பேசுவதில்லை. அப்பா எப்போதும் ஈஸிச்சேரில் அமர்ந்துகொண்டு மோட்டுவளையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். பாவம் அவருக்கு பயங்கர ஷுகர். பி.பி வேறு. அத்துடன் தொடர்ந்து சிகரெட் புகைத்ததினால் காங்ரின் ஏற்பட்டு, சென்றவருடம் அவர் வலதுகாலின் பாதிப் பாதத்தை வெட்டி எடுத்துவிட்டனர். இப்போது சிகரெட்டை நிறுத்திவிட்டார். வலதுகாலை நொண்டியபடி நடக்கிறார். எப்போதும் சோர்வுடன் காணப்படுகிறார்.

மணிவண்ணனுடனான காதல் வீட்டிற்கு தெரிந்ததும், தன் வீட்டிலேயே ஒரு வேற்று மனுஷியாக சுகந்தி உலா வந்தாள். மெளனத்திலும், பரிபாஷையிலும் பெரும்பாலான நேரங்கள் கடந்தன.

மணிவண்ணன் சென்னைக்குப் போய்விட்டதுவேறு அவளுக்கு வருத்தமாக இருந்தது. வேலைப்பளு காரணமாக அவன் தன்னுடன் தொடர்பில் இல்லையென்று அவனை நினைத்து ஏங்கினாள்.

வங்கி வேலை முடிந்து அன்று மாலை விட்டுக்கு வந்ததும் அம்மா மறுபடியும் கத்த ஆரம்பித்தாள்.

“எத்தனை நாட்களாக இந்த அசிங்கம்? காதல் கத்தரிக்காயெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்படாது. கேக்கறவங்களுக்கு எங்களால பதிலும் சொல்ல முடியாது. உங்கப்பா ஒரு மானஸ்தர். தூக்குல தொங்கிருவாறு.

வீணா குடும்பக் கெளரவத்தை நாசமாக்கி, எல்லோருடைய நிம்மதியையும் கெடுத்திடாத. அவ்வளவுதான் சொல்வேன் சுகு… எங்களுக்கு நீ செய்யறது பிடிக்கல, பிடிக்கல, பிடிக்கல.”

ஹிஸ்டீரியா வந்தமாதிரி கத்திவிட்டு சமையலறைக்குள் சென்றுவிட்டாள். தினமும் காப்பி கலந்து எடுத்துவரும் அம்மா அன்று வரவில்லை. இதற்கெல்லாம் சுகந்தி அசராமல், தன் காதலில் உறுதியாக இருந்தாள்.

‘எல்லா அம்மா அப்பாக்களும் பண்ணும் அலம்பல்தானே இவர்களும் பண்ணுகிறார்கள்! பண்ணட்டும்….என் மணிவண்ணனை நான் எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டேன். போராட்டம்தானே காதல்!’

என்று நினைத்துக்கொண்டு, மெல்ல சமையல் அறைக்குப் போனாள்.

இவளைப் பார்த்ததும் அம்மா முகத்தைத் திருப்பிக்கொண்டு விருட்டென்று வெளியேறினாள். சுகந்தி தனக்கு மட்டும் சூடாக காப்பி கலந்து, வெளியே கூடத்துக்கு வந்து உட்கார்ந்துகொண்டு உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தாள்.

எவரும் இவளிடம் பேசாததால் மொட்டைமாடிக்குச் சென்று நிறைய யோசித்தாள்.

அவளுக்கு காதலின் இனிமையும் வேண்டியிருந்தது; பிறந்து வளர்ந்த குடும்பத்தின் அரவணைப்பும் தேவைப்பட்டது. இந்த இரண்டு பக்கங்களின் எந்த ஒன்றையும் இழக்காமல் வெற்றி பெறுவது எப்படி? உணர்ச்சி வசப்படாமல் செயல்பட வேண்டும். ஒருமுறை அம்மாவிடம் நயமாகப் பேசிப் பார்த்தால் என்னவென்று தோன்றியது.

கீழே இறங்கிச் சென்றாள்.

அம்மாவும், அப்பாவும் இவளைப் பார்த்ததும் மெளனமாயினர்.

“இப்ப எதுக்கும்மா இவ்வளவு கோபம்? நான் என்ன ஓடிப்போய் அவர கல்யாணம் பண்ணிகிட்டு மாலையும் கழுத்துமாவா வந்துட்டேன்?”

“ஓஹோ…. இன்னும் அதுவேற பாக்கியிருக்கா?”

அப்பா நிதானமாக, “நமக்குள்ள ஒரு டீல் வச்சுக்கலாம்….வருகிற டிசம்பர் கடைசில உன் அக்கா வசந்தியின் குழந்தை விபாவின் முதல்வருட பிறந்தநாள் வருகிறது. அதைச் சம்பந்தி வீட்டார்கள் தடபுடலாக செய்யத் திட்டமிட்டுள்ளார்கள். அதற்கு நம் உறவினர்களும் ஒன்று கூடுவார்கள்.

அதுவரை சுகு நீ உன் காதலைப்பற்றி யாரிடமும் மூச்சுவிடாது அமைதி காக்க வேண்டும். சில நேரங்களில் பிரச்சினையை தள்ளிப்போட்டாலே நல்ல முடிவு ஏற்படும். அதன்பிறகு நாம் மூவரும் ஒன்றுகூடி ஒருநல்ல முடிவெடுக்கலாம். நமக்கு காலம் நல்ல பதில் சொல்லும்.” என்றார்.

சுகந்திக்கும், சாரதாவுக்கும் இந்த யோசனை சரியாகப் பட்டது.

அம்மா அதன்பிறகு சகஜமாகத் தெரிந்தாள்.

ஆனால் சுகந்தியின் போதாத காலம், சென்னை சென்ற மணிவண்ணன் அவளைத் தொடர்பு கொள்ளவில்லை. அதுவாவது பரவாயில்லை….இவள் தொடர்புகொள்ள முயற்சித்தாலும் லைன் கிடைக்கவில்லை. அவன் தன் மொபைல் நம்பரை ப்ளாக் செய்து வைத்திருப்பது புரிந்தது. தன் நெருங்கிய வங்கி தோழியின் நம்பரிலிருந்து அவனிடம் பேசியபோது அவளிடம் எரிந்து விழுந்தான். விட்டேத்தியாக பதில் சொன்னான்.

சுகந்திக்கும் சுயகெளரவம், ஈகோ எல்லாம் இருந்ததால், அவன் தன்னிடம் பேசாதவரை தானும் அவனிடம் பேசாமலிருக்க முடிவுசெய்தாள்.

மூன்று மாதங்கள் சென்றன.

அக்டோபர் இரண்டாவது வாரத்தில் மணிவண்ணனின் திருமணப் பத்திரிக்கை அவளது வங்கி தோழிக்கு போஸ்ட்டில் வந்தது. அக்டோபர் இறுதியில் அவனுக்கு கல்யாணம்.

அவள் உடனே பதறியடித்துக்கொண்டு சுகந்தியிடம் ஓடிவந்து அந்தப் பத்திரிக்கையை காண்பித்தாள். சுகந்தி கொதித்துப்போனாள். மறுநாளே சென்னைக்கு கிளம்பி அவனை நேரில் பார்த்து நான்கு வார்த்தைகள் சூடாக கேட்டுவிட்டு, மூஞ்சியில் காறித்துப்ப வேண்டும் என்று முடிவுசெய்து, உடனே வோல்வோ பஸ்ஸில் அவளுக்கும் தோழிக்கும் டிக்கெட் ஆன்லைனில் பதிவு செய்துகொண்டாள்.

வங்கியில் வேலைசெய்யும் மேலும் இரண்டு மூன்று பேருக்கு அவன் பத்திரிக்கை அனுப்பியதால் எல்லோரும் சுகந்தியை பரிதாபமாகப் பார்த்தனர். ஏகடியம் பேசினார்.

சுகந்தி பெருத்த ஏமாற்றத்துடன் வீட்டிற்கு வந்தாள்.

தான் மறுநாள் சென்னைக்கு போவதாகவும், மணிவண்ணனை சூடாக நான்கு வார்த்தைகள் பேசினால்தான் மனசு ஆறும் என்று சொல்லி அந்தப் பத்திரிக்கையை அப்பாவிடம் காண்பித்தாள்.

அப்பா நிதானமாகப் பத்திரிக்கையைப் படித்துப் பார்த்துவிட்டு, “நான்தான் சொன்னேனே….அவன நம்பாதேன்னு. இப்ப நீ எதுக்கு சென்னைக்கு போகணும்? அவனிடம் என்னத்தைச் சொல்லி எதை நிரூபிக்கப் போகிறாய்? வீணாக உன்நேரமும், பணமும்தான் வேஸ்ட். உனக்கு அலைச்சல் வேறு….பாவம் அவனுக்கு சென்னையில் என்ன கம்பல்ஷனோ, அவன் பக்கம் எத்தனை நியாயங்களோ….அவனை அப்படியே விட்டுவிட்டு உன் வேலையில் கவனம் செலுத்தும்மா….பல ஏமாற்றங்கள் காலப்போக்கில் நம்மைக் கடந்துசென்றால் நார்மலாகி விடுவோம். அதில் இதுவும் ஒன்று.”

சுகந்தி விசித்து அழுதாள்.

“நீ எப்ப என்னிடம் அவன் சென்னைக்கு ப்ரமோஷனில் போகிறான் என்று சொன்னியோ அன்னிக்கே எனக்குத் தெரியும்மா அவன் உன்னைக் கை விட்டு விடுவான்னு…..ஏன்னா, ஆண்களின் காதலுக்கு, காதலியின் அருகாமை மிக அவசியம். அது இல்லையென்றால் அந்தக் காதல் செத்துவிடும். அவுட் ஆப் சைட் அவுட் ஆப் மைன்ட்.”

அம்மா “நீ கவலையோ வருத்தமோ படாத சுகந்தி. உன் மனசாட்சிக்கு எல்லா உண்மைகளும் தெரியும். நீ ஒரு தப்பும் செய்யல. காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விட்டதே என்று சந்தோஷப்படு.” என்றாள்

அப்பா, “இப்பவாவது சில உண்மைகளைப் புரிஞ்சுக்கோம்மா. பெரும்பாலான ஆண்களுக்கு காதல் என்பது மிகவும் மேம்போக்கான விஷயம். காதலில் பெண்களுக்கு இருக்கும் வீரியமும், ஆழமும், நேர்மையும், தைரியமும் ஆண்களுக்கு கிடையாதும்மா. பெண்கள், காதலில் கனன்றுகொண்டிருக்கும் நெருப்பு; ஆண்கள், காதலில் நமுத்துப்போன மத்தாப்பு. சில சமயங்களில் பற்றிக்கொள்ளும்; பல சமயங்களில் புஸுபுஸுத்து விடும்.

“ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணின் மீது, அவள் தன்னிடம் காதலில் விழும்வரைதான் சுவாரஸ்யம். அது மட்டும்தான் அவனுடைய இலக்கு. அதன்பிறகு அவள்மீது வெற்றிக்கொடி நாட்டிவிட்டதாக அவனுக்கு ஒரு இறுமாப்பு. இவ என்னோட ஆளு என்று நண்பர்களிடம் பீற்றிக்கொள்வான். ஆனால் அவனை நம்பி அந்தப் பெண்தான் பாவம் அவனை நினைத்து நினைத்து உருகுவாள். அவனுடன் தன் வாழ்க்கையை இணைத்து ஏராளமான கற்பனையில் மிதப்பாள். அந்தக் காதல் நிறைவேறாமல் போகும்போது அந்தப்பெண் அடையும் ஏமாற்றமும், மன வேதனையும் சொல்லில் அடங்காதும்மா….இந்த மாதிரி துன்பங்களை சந்தித்து, அதன்பிறகு திருமணமே செய்துகொள்ளாமல், ஆண்கள் என்றாலே வெறுத்து ஒதுங்கும் பெண்கள் நம் சமுதாயத்தில் பலர் இருக்கிறார்கள்.

“……………………..”

“உதாரணமாக பாரதரத்னாவே வாங்கிய பிரபல ஹிந்தி சினிமாப்பாடகி லதாமங்கேஷ்கர். அவர் தன் இளம்வயதில் அப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ப்ரசிடண்டாக இருந்த ராஜ்சிங்துங்கார்பூர் என்பவரை உயிருக்குயிராக காதலித்தார். அந்தக்காதல் ஏனோ நிறைவேறவில்லை. அதன்பிறகு அவர் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர் தற்போது 87 வயதிலும் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இது எவ்வளவு பெரிய சோகம்? இப்படி எத்தனையோ பெண்கள். ஆனால் நீ அதுமாதிரி எதுவும் செய்துவிடாதே.”

“ச்சீ…ச்சீ கண்டிப்பாக மாட்டேன்பா…நான் இந்தக் காலத்துப் படித்தபெண். எனக்கு தற்போது மனசு மிகவும் லேசாகிவிட்டது. நீங்கள் பார்க்கும் ஒருத்தரை நான் திருமணம் செய்து கொள்கிறேன் அப்பா.”

“ரொம்ப சந்தோஷம் சுகந்தி.”

“நீங்க எப்படிப்பா இதல்லாம் இவ்வளவு க்ளாரிட்டியோட பேசறீங்க?”

“எல்லாம் அனுபவம் சுகந்தி. உன் அம்மாவைக் கல்யாணம் செய்து கொள்ளும் முன் நான் மூன்று பெண்களைக் காதலித்தேன். அதில் என்னிடம் நேர்மை இல்லை. அந்தப் பாவங்கள் அனைத்துக்கும் சேர்த்து ஒருபெரிய தண்டனையாகத்தான் என்னுடைய வலது காலில் பாதியை நான் இழந்தேன். உடம்பெல்லாம் வியாதியுடன் சிரமப்படுகிறேன். இறப்பதற்கு முன் உன்னுடைய கல்யாணத்தையும் பாத்துட்டேன்னா நிம்மதியாக இறப்பேன்.”

அம்மா கிண்டலாக, “அந்த மூன்றுபேருக்கும் யோகம் இருந்திச்சு… தப்பிச்சுட்டாங்க.” என்றாள்.

சுகந்தியைக் கட்டிக்கொண்டு “நீ என் பொண்ணுடி….எந்தத் தப்பும் பண்ண மாட்டே…. வா பால் பாயசம் பண்ணித் தருகிறேன்” என்று அவளை சமையலறைக்குள் இழுத்துச் சென்றாள்.

அப்பா சொன்னமாதிரி, டிசம்பர் மாதக் காத்திருத்தலுக்கு அவசியமே இல்லாது போயிற்று. காலம் அக்டோபரிலேயே சுகந்திக்கு சரியான பதிலைச் சொல்லிவிட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *