சில நேரங்களில் சில பெண்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 14,897 
 

அவள் பெயர் டாக்டர் அமுதா.

சென்னை யுனிவர்சிட்டியில் ஆங்கில விரிவுரையாளர். வயது முப்பத்தைந்து. திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை. காரணம் அவளுக்கு ஏற்றவன் இன்னமும் கிடைக்கவில்லையாம்.

டாக்டர் அமுதா மிகவும் வித்தியாசமானவள். உண்மைதான் பேசுவாள். அதையும் முகத்தில் அடித்தமாதிரி சொல்லுவாள். ஆனந்த நிலையின் அடிப்படையே தனக்குத்தானே உண்மையாக இருப்பதுதான் என்பாள்.

திறமையாகவும், நன்றாகவும் பேசுவாள். அவளுடைய பதில்கள் தண்ணீர் தெறிப்பாகத்தான் இருக்கும். யாரிடமும் எதற்காகவும் தயை தாட்சண்யம் காட்ட மாட்டாள். இரக்கமே படமாட்டாள்.

இதனாலேயே யுனிவர்சிட்டியில் வேலைபார்க்கும் மற்ற பெண்கள் அவளிடமிருந்து சற்று ஒதுங்கியே இருப்பார்கள்.

ஒருமுறை அவளிடம் சக விரிவுரையாளர், மத சம்பந்தமான புத்தகங்கள் சிலவற்றை அவளிடம் கொடுக்க முற்பட்டாள்.

“என்னத்துக்கு இந்தப் புத்தகங்கள்?”

“நம் மதத்தோட அர்த்தங்களை தெரிஞ்சுக்கிறது நல்லதுதானே?”

“அர்த்தம்னா?”

வந்தவளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

“இன் ட்ரூ சென்ஸ் – ஆல் மீனிங்ஸ் ஆர் மீனிங்லெஸ். அதான் நான் சொல்றது. உன்னோட சென்ஸ்படி எல்லாத்துக்குமே அர்த்தம் இருக்கு. இந்த அர்த்தமெல்லாம் என்னன்னாக்க, ஒரு வார்த்தைக்கு இன்னொரு வார்த்தை; ஒரு ஐடியாவிற்கு அனதர் ஒன் ஐடியா… அவ்வளவுதானே?

ஒரு ஐடியா என்கிறது ஒரு கற்பனை. ஒரு வார்த்தைங்கறது வெறும் ஸிம்பல். அப்புறம் என்னத்துக்கு ஒவ்வொண்ணுக்கும் ஒரு அர்த்தம் சொல்லிக்கொண்டு வாழ்க்கையையே அர்த்தமில்லாம ஆக்கிண்டு? அதனாலதான் நீ கொடுத்த புக்ஸ் எதுவும் வேணாம்னு சொல்றேன். எந்த மதங்களோட அர்த்தங்களையும் நான் தெரிஞ்சுக்கலை. ஆனா, மதம்னா என்னான்னு புரிஞ்சுண்டிருக்கேன். ஆனா நீங்க மதத்தோட அர்த்தங்களைத்தான் புரிஞ்கிட்டீங்க. மதம்னா என்னன்னு புரிஞ்சுக்கலை..”

“தெரிஞ்சுக்கிறது வேற, புரிஞ்சுக்கிறது வேறயா?”

“தெரிஞ்சுக்கிறது என்பது வெறும் நாலெட்ஜ் கேதரிங்தான்… ஐ மீன் நோன் இஸ் மியர் நாலெட்ஜ். பட் அண்டர்ஸ்டாண்டிங் இஸ் நாட் அட் ஆல் எ நாலெட்ஜ். இட் இஸ் விஸ்டம், அதாவது ஞானம். நாலெட்ஜை யாரும் யாருக்கும் கம்யூனிகேட் பண்ணிடலாம். ஆனா, ஞானத்தை மட்டும் நீ யாருக்குமே கம்யூனிகேட் பண்ண முடியாது.”

வந்தவள் டாக்டர் அமுதாவை அதிசயமாகப் பார்த்தாள்.

தாட்சண்யமே இல்லாமல் அவள் இப்படிப் பேசுவதுதான் பலரின் மன நிலையைக் காயப்படுத்தி விடுகிறது. .

அமுதாவின் அபிமானம் குறியீடு அற்றது. சமூக அர்த்தங்கள் இழந்தது. எந்தத் தனிநபருக்கும் என்ற பிரத்தியேகத் தளங்கள் இல்லாத பிரபஞ்ச வீச்சு அவள்.

இப்படிப்பட்ட அமுதாவை அவளின் கீழ் பணிபுரியும் சரவணன் என்கிற இருபத்தியெட்டு வயது ரிசர்ச் அசிஸ்டென்ட் கடந்த ஒரு வருடமாகத் தன் மனதிற்குள் நினைத்து நினைத்து ஏங்குகிறான்.

அதன் முதல் படியாக அவளிடம் நட்புடன் பழக ஆரம்பித்தான். அமுதாவும் அவனிடம் இயல்பாக நல்ல நட்புடன் பழகினாள். இருவரும் நிறைய விஷயங்களை மனம்விட்டு அலச முற்பட்டார்கள். நாளடைவில் அவர்களிடம் நட்புச் சார்ந்த நெருக்கம் அதிகமானது.

சரவணன் அதிகாலை வேளைகளில் அவளுடன் கடற்கரையில் சூரிய உதயம் பார்த்தான்; அடிவானத்து வர்ணக் கலவையை அவளுடன் சேர்ந்து ரசித்தான்; அணிவகுத்துப் பறந்து செல்லும் வெள்ளைக் கொக்குகளை கண்டு அதிசயித்தான்; அவளுடன் கடற்கரை மணலில் நண்டுகளின் கால் தடங்களைக் கண்டு பூரித்தான். அவளின் ரசனைகளும், அறிவு சார்ந்த பேச்சுக்களும் அவனை அவள்பால் கிறக்கமுறச் செய்தன.

அவளின் அருகாமையினால் அவனுள் ஏதோ ஒன்று திறந்துகொண்டது. விவரிக்கத் தெரியாத பவித்ரமான இனிய காதல் அவளுக்காக பரந்து விரிந்து மலர்ந்திருந்தது. அவளை மிகவும் நெருங்கிவிட்டதாக நம்பினான்.

தான் ஒருவன்தான் அவளை நன்கு புரிந்துகொண்டிருப்பதாக ஒருநாள் அவளிடம் பெருமையுடன் சொன்னான்.

“நோ நோ சரவணன், நீ இன்னும் என்னை சரியா புரிஞ்சுக்கலை… ஆனா புரிஞ்சுக்கணும்ங்கற உண்மையான ஆசைமட்டும் உன்னிடம் நிறைய இருக்கு. அதை நான் ஒத்துக்கறேன்.”

நாளடைவில் சரவணனின் மன நிலையில், இவளைப் போன்ற பெண்ணுடன்தான் தன்னால் வாழமுடியும் என்கிற பிரமை கனமாகப் படர்ந்துவிட்டது. இவளை மாதிரி இன்னொரு அமுதா எங்கேயும் கிடைக்கமாட்டாள் என்று தீவிரமாக நம்பினான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை…

மாலையில் இருவரும் கடற்கரையில் நடந்தனர்.

சரவணனின் காதல் மனநிலை புரியாத அமுதா அவனிடம், “உனக்கு எப்ப கல்யாணம்?” என்று கேட்டாள்.

“மனைவி என்கிறவ கொஞ்சமாவது இன்டலக்சுவலா இருக்கணும் எனக்கு… உங்களை மாதிரி.”

“இன்டலக்சுவல் என்கிறதெல்லாம் வெறும் ஹிப்பாக்ரஸி சரவணன். அதையெல்லாம் சீரியஸா எடுத்துக்காதே. இக்னரன்ஸ் அண்ட் இன்டலக்ட், ரெண்டுமே டூ சைட்ஸ் ஆப் த சேம் காய்ன். நீயும் கூட இன்டலக்சுவலா இருக்கிறதுக்கு ட்ரை பண்ணாத… “

“இப்படிப் பேசினா எப்படி டாக்டர் அமுதா?”

“ஸாரி சரவணா, உனக்கு பிடிச்சமாதிரியெல்லாம் எனக்குப் பேசத்தெரியாது. நீ கல்யாணம் செய்துக்கோ அல்லது செய்துக்காத. அது உன் இஷ்டம். ஆனா எத்தனைக்கெத்தனை ஒரு விஷயத்த நீ எஸ்கேப் பண்றயோ, அத்தனைக்கத்தனை அது உன்னைத் துரத்திண்டுதான் வரும்…அதை மட்டும் மறந்துடாதே.”

பரவசம்மிக்க ஒரு பதட்டத்துடன், “உங்களுக்காக நான் எந்தத் தியாகமும் செய்வேன் அமுதா…” என்றான்.

“முட்டாள் மாதிரிப் பேசாத. நீயும் சமயத்துல ஸ்லிப் ஆயிடற சரவணா. என்னிக்காவது ஆண்-பெண் அப்படின்னு நான் பிரிச்சுப் பேசியிருக்கேனா? எனக்கு அந்த மாதிரியெல்லாம் நினைப்பே வந்தது கிடையாது சரவணா. அது மட்டுமில்லை, நான் ஒரு பெண் என்கிற காம்ப்ளக்ஸ்ஸும் எனக்கு கிடையாது.

“………………..”

“ஆண்-பெண்ங்கற பேதமே எனக்குக் கிடையாது; பிடிச்சவா, பிடிக்காதவான்னு எனக்குள்ள பிரிவே கிடையாது. அப்படியெல்லாம் இருக்கிறது வெறும் செல்பிஷ்தான் சரவணா. உன்கிட்ட இப்படிப் பேசறது பற்றி எனக்கு வருத்தம் கிடையாது. அப்படி நான் வருத்தப்பட்டா என்னை நீ ரெகக்னைஸ் பண்ணனும்னு நான் எதிர்பாக்கறதா அர்த்தம் ஆயிடும்.

இதைச் சொன்னபோது, அவள் கண்கள் ஜோதியின் ஒளியாகச் சுடர்விட்டது; பரிவு கசியும் அந்தக் கண்களைக் காண சரவணின் உணர்வு வெள்ளம் கரை மீறியது. எதிரில் சமுத்திரமே திறந்தார் போலிருந்தது; புதியதொரு வானம் விரிந்திருந்தது; அவளின்மேல் அவனுக்கு காதல் மலர்ந்துவிட்ட அற்புதம் சூரியனாக ஒளிர்ந்தது.

பொங்கிச் சுரந்த காதலில் கட்டுக்கடங்காமல் அவனிடமிருந்து வார்த்தைகள் சொரிந்தன.

“ஸாரி டாக்டர் அமுதா, இனிமேலும் என்னால என்னையே எமாத்த முடியல. சொல்லாம இருக்க முடியல… இந்த உலகத்ல நான் காதலிக்கிற ஒரேபெண் நீங்கதான் அமுதா; ஐ லவ் யூ, ஐ லவ் யூ இம்மென்ஸ்லி…”

ஒரு வினாடியில் தன்னை இழந்து காதலைக் கொட்டிவிட்ட பதட்டத்தில் அவன் உடம்பெல்லாம் வியர்த்து படபடப்பு ஏற்பட்டது.

ஆனால் அமுதாவின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.

நிதானமாக அவனைப் பார்த்து, “என்னை நீ லவ் பண்றதா சொன்ன. அது எனக்கு ரொம்பச் சந்தோஷம். இன்ஹிபிஷன் இல்லாம இதைச் சொல்றதுக்கே ஒரு ஹான்ஸ்டி வேணும் சரவணா. நானும்தான் உன்னை லவ் பண்றேன். ஆனா, நீ என்னை லவ் பண்றதா சொன்ன சென்ஸ் வேற! நீ என்னை மட்டும்தான் லவ் பண்ற.

“இதனோட உண்மை என்னன்னா, உன்னோட பெண் பற்றிய ஐடியல்ஸோட மொத்த உருவமா நான் இருக்கிறதனாலேதான் என்னை மட்டும் நீ லவ் பண்றே! உன்னோட ஐடியல்ஸ் என்கிறது என்னவாம்? எல்லாம் நீயேதான். நீ வேற, உன்னோட ஐடியல்ஸ் வேற இல்லை. ஸோ, உன்னோட ஐடியல்ஸோட ஒரு உருவத்தை நீ லவ் பண்றதுங்கறது உன்னையே நீ லவ் பண்றதுதானே தவிர வேற ஒண்ணுமில்ல. இஸிட் லவ்? நோ… இட் இஸ் நாட்.

“ஆனா, நானும் உன்னை லவ் பண்றதா சொன்னேனே, அது என்னோட ஐடியல் இல்லை. ஐடியல் என்கிறது ஒரு கற்பனைதான். எதுக்காக ஒரு கற்பனையை, இல்லாத ஒண்ணை பெரிசா நினைச்சுண்டு அதையே துரத்திண்டு ஏன் அலையணும்? பிரத்தியட்ச உண்மையை நம்மால் ஒத்துக்க முடியலை. அதான் ரீஸன். உண்மையை மறுக்கிறோம். அதை விட்டு மூவ் ஆகிறோம். இதுதான் பேஸிக்!

“உண்மையை விட்டு மூவ் ஆகிறதுதான் ஆசை. அதனால என்னை மட்டும் லவ் பண்றதா இனிமே சொல்லாத. நானும் உன்னை லவ் பண்றேன். ஆனா உன்னை மட்டுமல்ல; இந்தக் கடலை லவ் பண்றேன்; அந்தச் சூரியனை, மிதந்து போகிற மேகத்தை, பறந்து திரியற பறவையை, ஆடி அசையற பூவை, மண் வாசனையுடன் மழையை, இசைக்குயில் லதா மங்கேஷ்கரை – இப்படிப் பேதமே இல்லாம எல்லோரையும் எல்லாத்தையும் நான் லவ் பண்றேன். இந்த அன்பில் சாய்ஸ் கிடையாது. சாய்ஸே இல்லாத, நோக்கமே இல்லாத டோட்டல் அவேர்நெஸ்தான் லவ். வேர் தேர் இஸ் டோட்டல் அவர்நெஸ், தேர் இஸ் நோ செல்ப் அட் ஆல். ஆனா நீ சொன்னியே என்னை லவ் பண்றதா அது உன்னோட வெறும் செல்ப் ப்ரொஜெக்ஷன்தான். இதுக்கு மேல நான் உனக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைக்கிறது சொல்லு?”

அர்த்தங்கள் அரூபமாக, சூரிய உண்மையாக, உண்மைகள் விஸ்வரூபமாகத் தன் முன்னால் தெரிய, அமுதாவுடன் சோகம் கப்பிய முகத்துடன் திரும்பி நடந்தான்.

நினைக்க நினைக்க அவனுக்கு மனசே ஆறவில்லை.

நன்றாக இருட்டிவிட்டது.

சில நேரங்களில் சில பெண்கள் என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *