சினமிகுந்தால் அறம் கெடும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 13,079 
 
 

கடல் அலைகள் ஆர்ப்பரித்து ஓடி வந்து பரத் கால்களைத் தழுவிச் செல்ல அதை ரசிக்காமல் அவன் சிந்தனை வேறு எங்கோ சுழன்று கொண்டிருந்தது. கடற்கரையில் நடக்கும் எதுவும் அவன் காதுகளில் கேட்கவில்லை. அவன் நண்பன் அழைப்பது மட்டும் அவன் காதில் கேட்டுவிடுமா என்ன?

‘என் காதல்ல உண்மையில்லையா? நான் எங்கத் தப்புச் செஞ்சேன்? நான் எத்தனை தடவ யோசிச்சாலும் என்கிட்ட எந்தத் தப்பும் இல்லையே. ஏன் என்னை வேண்டாம்னு சொன்னா? நான் என்ன வேணும்கிற அளவு சாப்பிட்டுட்டு தூக்கியெறியும் மாங்கொட்டையா? என்னைப் பைத்தியக்காரனா புலம்ப வச்சிட்டு அவ மட்டும் நிம்மதியா இருப்பாளா? இருக்க விடமாட்டேன்.’ பரத்தின் எண்ணங்களும் அலைகள் போல நிலையில்லாமல் இருந்தன.

பலமுறை கூப்பிட்டும் திரும்பி பார்க்காததால் பரத்தின் அருகில் உட்கார்ந்த முத்து அவன் தோளை குலுக்கி, “என்ன? பரத். யாரை? விடமாட்டேன்னு சொல்ற.” பரத் கடைசியாக விடமாட்டேன் என்று அறியாமல் வார்த்தையை வெளியில் சொன்னதைக் கேட்டிருந்தான்.

“வா முத்து, நீ எப்போ வந்த? நீ எப்பவும் வேலை நேரம் முடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்பிடுவ. இன்னைக்குப் பீச்சுக்கு வந்திருக்க.” கூப்பிட்டாலும் வராத முத்து இன்று கடற்கரைக்கு வந்திருக்கானே என்று சந்தேகமாகக் கேட்டான்.

“காலையிலிருந்து உன்னைப் பார்த்துட்டு இருக்கேன் பரத். உன் முகம் சரியில்லை உன் கவனமும் வேலையில் இல்லை. நீ எதையோ நினைச்சு யோசிச்சிட்டு இருக்க.” பரத் வேலையில் கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்த்த முத்து என்னவென்று கேட்கத் தான் வந்திருந்தான்.

“ஒண்ணுமில்லை முத்து, கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதான், வேலையைக் கவனமா பார்க்க முடியலை.” பரத்தின் இதழ்கள் சொன்னாலும் அவன் முகம் அதில் உண்மையில்லை என்பதைக் காட்டியது.

“உனக்கு உடம்பு சரியில்லையா? மனசு சரியில்லையா? என்ன ஆச்சு? பரத். இன்னைக்கு மஞ்சு வரலையா?” பரத் சரியில்லாத்துக்கு மஞ்சுதான் காரணமோ என்று நினைத்து கேட்டான் முத்து.

“அவ இனிமேல் வரவே மாட்டா முத்து. என்னை ஒரேடியா வேண்டாம்ன்னு போய்ட்டா. நான் அவளை விட்டுடுவேனா விடமாட்டேன்.” மஞ்சு மீதுள்ள கோபத்தில் வெறியாகப் பேசினான் பரத்.

“வேண்டாம்ன்னு போனவளை நீ என்ன பண்ணப் போற? அதையே நினைச்சு என்ன ஆகப் போகுது சொல்லு.” முத்து யாதார்த்தமான நிலையை எடுத்துச் சொன்னான்.

“இத்தனை நாள் என்னைக் காதலிக்கிறேன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டு போனவளை சும்மா விடச் சொல்றியா?” ஏமாற்றம் பரத்தை வெறியனாக மாற்றியிருந்தது.

“அவ ஏமாத்தினானு சொல்றதைவிட நீதான் ஏமாந்திருக்கப் பரத். அவளுடைய காதல் உண்மையான்னு தெரியாம காதல்னு நினைச்சு ஏமாந்தது நீதான். உண்மையான காதலை புரிஞ்சிக்காம மற்றவர்களைக் குறை சொல்லாத.” என்றான் முத்து.

“என்ன சொல்ற? முத்து. நான் ஏமாந்தேனா? அப்போ அவ என்கிட்ட உருகி உருகி பேசியது. இதெல்லாம் பார்த்து நான்தான் ஏமாந்து போனேனா?” வெறியில் பேசியவன் சந்தேகமாகக் கேட்டான் பரத்.

“பரத், இப்ப அதைவிடு உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சினை?” முத்து கேட்க.

பரத் பழைய நினைவுக்குச் சென்றான். “பரத், வர ஞாயிற்றுக் கிழமை நாம ஏதாவது ரிசார்ட் போலாமா?” என்றாள் மஞ்சு

“இப்ப அங்க எதுக்கும்மா? அதுவும் ஞாயிற்றுக் கிழமைன்னா வாய்ப்பே இல்லை. அன்னைக்கு ஒரு நாள்தான் வீட்ல இருப்பேன்.” குடும்பத்தினருடன் இருப்பது அவனுக்கு மிகவும் பிடித்தது. அதனால், பரத் வர முடியாது என்றான்.

“என்ன? பரத். ஒரு நாள்தானே இந்த வாரம் மட்டும் வாங்க.” தனக்காக ஒரு நாள் பரத் வரமாட்டானா என்று மஞ்சு நினைத்தாள்.

“உனக்கு நல்லாவே தெரியும். ஞாயிறு மட்டும் வீட்லதான் வெளில போனாலும் குடும்பத்தோடுதான் போவேன்னு. எல்லாம் தெரிஞ்சும் ஏன்மா? கேட்க.” பரத் தன் பழக்கத்தை மாற்றுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தான்.

“தெரியும் பரத். இந்த ஒரு தடவை மட்டும் நாம ரிசார்ட் போலாம். அப்புறம் உங்களைக் கூப்பிடவே மாட்டேன். நாம கல்யாணம் முடிஞ்ச பிறகு பார்த்துக்கலாம்.” மஞ்சுவும் தன் பிடியில் பிடிவாதமாக இருந்தாள்.

“சரி அப்படின்னா ரிசார்ட் வேண்டாம் வேற எங்காவது போலாம்.” ரிசார்ட் பற்றி நன்றாகத் தெரிந்ததாலும் வேறு இடமென்றால் அவளும் தன் முடிவை மாற்றிக் கொள்வாள் என்று நினைத்துச் சொன்னான் பரத்.

“ஏன்? பரத், வேறு எங்க போனாலும் நமக்குத் தனிமை கிடைக்காது. ரிசார்ட்ல நாம தனியா ஜாலியா இருக்கலாம்.” என்றாள் மஞ்சு.

“மஞ்சு, இன்னும் நமக்குக் கல்யாணம் ஆகலை. அதுக்கு முன்னாடி நாம் பீச்ல பார்ப்பதோடு நிறுத்திக்கலாம். அதுதான் நமக்கு நல்லது புரிஞ்சிக்கோ.” நிதர்சனம் உணர்ந்து சொன்னான் பரத்.

“என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. உன் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? பரத்.” மஞ்சுக்கு எல்லாம் தெரிந்தாலும் அவள் பரத்துடன் வெளியில் செல்ல வேண்டுமென்று நினைத்தாலே தவிர மற்ற பிரச்சினைகள் பற்றி யோசிக்கவில்லை.

“யார்? மேல யாருக்கு? நம்பிக்கை இருக்குன்னு முக்கியமில்லை. தேவையில்லாத பிரச்சினைக்கு நாம இடம் கொடுக்க வேண்டாம்ன்னு நினைக்கிறேன் மஞ்சு.” பார்ப்பவர்கள் தவறாக நினைத்துவிடக் கூடாதே என்ற எண்ணம் பரத்திடம் அதிகமிருந்தது.

“அப்படி என்ன? பிரச்சனை வரப் போகுது. நீ எதுக்குத் தேவையில்லாம பயப்படுற?” என்று மஞ்சு கேட்டாள்.

“நீ தெரிஞ்சும் தெரியாத மாதிரி பேசுற மஞ்சு. கல்யாணத்துக்கு முன்னாடி நாம் அங்க போனாப் பார்க்கறவங்க நம்மைத் தப்பா நினைப்பாங்க. உனக்கு இது தெரியாதா?” தேவையில்லாத பேச்சுகளுக்கு ஏன் இடம் கொடுக்கனும். தனக்கு ஒன்று என்றால் அடுத்து தங்கையையும் பாதிக்குமே என்று பிடிவாதமாக இருந்தான்.

“மற்றவர்களுக்காக நாம் இருக்கக் கூடாது. நமக்காக மட்டும்தான் இருக்கனும் பரத்.” பரத் சூழ்நிலையை எடுத்துச் சொல்லியும் மஞ்சு பிடிவாதமாக இருந்தாள்.

“நல்ல பேச்சுதான். ஆனால், அது எல்லா இடத்துக்கும் நேரத்துக்கும் சரியாகாதும்மா. அதுவும் ரிசார்ட் போகனும்ன்னா செலவை யோசிச்சுப் பார்த்தியா? நான் குடும்பத்துக்காக நிறையச் செய்யனும். அதுவரை இந்த மாதிரி தேவையில்லாத செலவு நமக்கு வேண்டாமே.” பரத் தன் நிலையைப் பொறுமையாக எடுத்துச் சொன்னான்.

“ஓ! அப்போ செலவு பண்ண யோசிச்சுதான் அப்படிப் பேசினியா? அதை நேரடியா சொல்லி இருக்கலாமே. அதுக்கு ஏன்? நல்லவன் மாதிரி வேஷம் போடனும்.” மஞ்சு கோபத்தில் வார்த்தைகளை விட.

“நீ என்ன பேசுற? நான் ரெண்டுக்கும் சேர்த்துதான் சொல்றேன். எனக்குத் தங்கச்சியோட படிப்புச் செலவு இருக்கு. அவளுக்கும் நமக்கும் திருமணம் செய்யும் செலவு நமக்குன்னு குடும்பம்ன்னு ஆகிட்டா அதுக்கு இப்பவே சேர்த்து வச்சாதான் முடியும்.” பரத் நடுத்தர வர்க்கத்தின் இயல்பான முறையைப் புரியவைக்க நினைத்தான்.

“என்ன பரத்? இப்பவே செலவு பண்ண இவ்வளவு கணக்குப் பார்க்க. கல்யாணம் முடிஞ்சாக் கணவன்ற உரிமைல எல்லாத்துக்கும் கணக்குப் பார்ப்பியா? என்னால் அப்படி ஒரு வாழ்க்கை வாழ முடியாது பரத்.” அவள் சம்பாத்தியத்தில் விருப்பம் போல் இருந்தவளைக் கூண்டுக்குள் அடைக்க நினைத்தால் இருப்பாளா?

“அப்ப அப்பச் செலவுச் செஞ்சிட்டா எதிர்காலத்துக்குன்னு ஒண்ணும் வேண்டாமா? அவசர தேவைக்குக் கூட நாம இன்னொருத்தரை எதிர்பார்க்கனுமா? நான் நடுத்தர வர்க்க குடும்பம்தான் அதுக்கு ஏத்த மாதிரிதான் என்னால் செலவு செய்ய முடியும்.” குடும்பப் பொறுப்பை உணர்ந்து பேசினான் பரத்.

“இதுதான் உன் முடிவா? என்னால் அப்படி இருக்க முடியாது. ஆசைப்பட்டதை அனுபவிக்கனும் பின்னாடி வரதை வரப்ப பார்த்துக்கலாம். ஆனால், நீ எதிர்காலத்தை நினைச்சு இப்ப அனுபவிக்கிற சந்தோஷத்தை முடியாதுனு சொல்ற. அப்படி என்னால இருக்க முடியாது பரத்.” தன் கோபம் தலைக்கு ஏற பேசினாள் மஞ்சு.

“அதனால், என்ன சொல்ல வர மஞ்சு. இப்ப ரிசார்ட்டுக்குப் போய்தான் ஆகனும்ன்னு சொல்றியா?” பரத்தும் கோபத்தில் கேட்க.

“இல்லை, உன்னோட வாழ்க்கையை என்னால நினைச்சுப் பார்க்க முடியலை. ரெண்டு பேரும் ஒண்ணா வாழ முடியாது பரத்.” எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காதவள் பரத் பின்னாலும் இப்படித்தான் இருப்பான் என்று நினைத்துவிட்டாள்.

“அப்போ உனக்குப் பணம் மட்டும்தான் முக்கியமா? காதல் குடும்பம் இதெல்லாம் முக்கியமில்லையா?” புரியாமல் பேசுகிறாளே என்று ஆதங்கத்தில் கேட்டான் பரத்.

“அதெல்லாம் முக்கியம்தான் அதுக்காக நம்முடைய ஆசைகளுக்குத் தடை போட்டுக்க முடியாது பரத்.” மஞ்சுவும் பிடிகொடுக்காமல் பேசினாள்.

“நான் உன்னுடைய ஆசைக்குத் தடைப் போட சொல்லலையே. இப்போ தேவையில்லை. கல்யாணம் முடியட்டும் நீயும் என் கூடச் சேர்ந்து குடும்பத்தைத் தாங்கு. அப்போ நம் ஆசைக்கு யாரும் தடை போட முடியாதும்மா.”

“ஓ! நான் சம்பாதிப்பதை வச்சுதான் எனக்குச் செலவு செய்வியா? உன் சம்பாத்தியத்தில் எதுவும் செலவு செய்யமாட்ட அப்படித்தானே?” மஞ்சுக்கு தன் ஆசை நிறைவேறவில்லை என்றதும் கோபத்தில் கத்தினாள்.

“நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை. நாம் எல்லாம் ஒரே குடும்பமான பிறகு…” பரத் சொல்லி முடிப்பதற்குள், “உன் குடும்பத்தை நீ தாங்கலாம், நான் தாங்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு?” என்றாள் மஞ்சு

“என்னைக் கல்யாணம் செஞ்சா என் குடும்பத்தை உன் குடும்பமா நினைக்க மாட்டியா?” பரத் கேட்க.

“நமக்குன்னு கல்யாணம் ஆனதும் நீ நான் மட்டும்தான் வேறு யாருக்கும் இடமில்லை.” மஞ்சு சொல்ல.

“என்னைப் பெத்து வளர்த்து படிக்க வச்சுஆளாக்கியவங்களுக்கு நான் தோள் கொடுக்க வேண்டாமா? சுயநலவாதியா உன் பின்னாடி வரச் சொல்றியா?”

“வேண்டாம். நீ என் பின்னாடி வர வேண்டாம். இதுக்கு மேல நீ எதுவும் பேச வேண்டாம். நான் கிளம்பறேன் இனிமேல் உன்னுடன் பேச எனக்கு ஒண்ணுமில்லை. இதோடு எல்லாம் முடிஞ்சு போச்சு.” என்றாள் மஞ்சு.

“நீ இதுவரை என்னைக் காதலிச்சது காதலே இல்லை மஞ்சு. வாழ்க்கைன்னா நீயும் நானும் மட்டும் வாழ்றது இல்லை. யாருமில்லாமல் வாழ்க்கை வாழ முடியுமா? ஏதோ ஒரு வகையில் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழனும்.” என்றான் பரத்.

“அதுக்காக என் ஆசைக்குத் தடை போட்டுட்டு உன்னுடன் வாழ முடியாது.” என்று சென்றுவிட்டாள்.

“பிரச்சினைன்னு எதுவும் இல்லை முத்து. தேவையில்லாம செலவு செய்றா என்னையும் செய்ய வைக்கிறா அதை வேண்டான்னு சொன்னேன். அதுக்கு, இப்பவே இப்படிக் கணக்கு பார்க்க கல்யாணம் செஞ்ச பிறகும் இப்படிதான் செய்வியான்னு சண்டை போட்டா. வாக்குவாதம் பெரிசாயிட்டு அதனால், வேண்டாம்னு போயிட்டா.” என்று தன் நண்பனிடம் சொல்லி முடித்தான் பரத்.

“இது என்ன காதல்? பணத்துக்காகதான் பழகினாளா? இப்போ போனவளை நினைச்சு நீ எதுக்குப் புலம்பிட்டு இருக்க.” முத்து கேட்க.

“இந்த மாதிரி பொண்ணுகளைச் சும்மாவிடக் கூடாது முத்து. இவளுக்குக் கொடுக்கப் போற தண்டனை மற்றவங்களுக்கு ஒரு பாடமா இருக்கனும்.” வெறித்தனமா பேசினான் பரத்.

“சரி அதுக்கு என்ன பண்ண போற? பரத்.”

“அவளைக் கொலைப் பண்ண போறேன். அவளுக்குக் காதலோட வலி என்னன்னு தெரியனும் முத்து.” அதிக ஆத்திரம் மூளையை வேலை செய்யவிடாது. பரத்தின் எண்ணமும் அப்படித்தான் இருந்தது.

“நல்ல யோசனை பரத். அப்படியே செஞ்சிரு. அவளைக் கொலை செஞ்ச பிறகு என்ன? பண்ண போற.” முத்து கேட்க.

“இதோ இந்தக் கடலில் விழுந்து சாகப் போறேன்.”

“அவகிட்ட உன் குடும்பத்தை விட்டுக் கொடுக்காம பேசிட்டு இப்ப நீ எடுத்திருக்கிற முடிவு நல்ல யோசனை. அப்போதான் உன் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்.” முத்து சொல்ல.

“என்ன சொல்ற? முத்து. அவங்களுக்கு எப்படி மகிழ்ச்சியா இருக்கும்.”

“பரத், அங்க இருக்கிற அந்தக் குடும்பத்தைப் பார். அந்தக் குடும்பம் மாதிரிதான் உன் குடும்பமும்.”

“அவங்களை எதுக்குப் பார்க்க சொல்ற? முத்து.” அவர்களைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

“அந்தக் குடும்பத்தில் உன்னை மாதிரி ஒருத்தர் இருக்கிறார். அவர் செய்றதை எல்லாம் கவனி. அவங்க வீடு பக்கத்தில் என்றுதான் நினைக்கிறேன். தினமும் மாலை நேரத்தில் கடற்கரைக்கு வராங்க.”

“அதுகென்ன? முத்து. கடற்கரை பக்கத்தில் வீடு இருந்தா தினமும் வரதான் செய்வாங்க”

“அவர் அவங்க அம்மா அப்பாவை எவ்வளவு அன்பாகக் கவனிக்கிறார். அதே நேரத்தில் கற்பமா இருக்கும் தன் மனைவியையும் பார்த்துக்கிறார். தன் அண்ணனுக்கு உதவியா அவர் தங்கை எல்லாம் செய்றா.”

“அந்த இடத்தில் உன் குடும்பத்தை நினைச்சுப் பார். அந்த மகிழ்வான நேரத்தை உன்னால் உணர முடியலையா? பரத்.”

“முத்து, நீ இப்ப என்ன சொல்ல வர எனக்குப் புரியலை.”

“உங்க அம்மாவை நினைச்சுப் பார். உன்னைப் பத்து மாசம் வயிற்றில் சுமந்து வலியையும் தாங்கிக்கிட்டு உன்னைப் பெத்தாங்க அந்த வலி உனக்குத் தெரியலையா? அதைவிட இந்தப் பொய்யான காதலோட வலிதான் பெரிசா? பரத்.”

“முத்து, அதெல்லாம் எனக்கு எப்படித் தெரியாம இருக்கும். அவ ஏமாத்திட்டாளே முத்து.”

“அந்தப் பெரியவரைப் பார். தன் மகன் செய்றதை எவ்வளவு சந்தோஷமா பார்த்துகிட்டு இருக்கார். அப்பா உன்னைப் படிக்க வச்சதிலிருந்து இன்னைக்கு நாற்பதாயிரம் சம்பளம் வாங்குறீயே அதுக்குள்ள தகுதியை வளர்க்க அவர் பட்ட கஷ்டமும் வலியும் தெரியலயா?”

“என்னைப் படிக்க வைக்கப் பணம் கட்ட முடியாம அதுக்குக் கடன் வாங்கி அந்தக் கடனை அடைக்க அதிக நேரம் வேலை பார்த்தாரே அதை எப்படி? என்னால் மறக்க முடியும் முத்து.”

“அப்பா கஷ்டப்பட்டது உன்னை ஒரு கொலைகாரனாப் பார்க்கவா? பிள்ளைத் தன் தங்கையைப் படிக்க வச்சு நல்ல இடத்தில் அவளைக் கல்யாணம் செஞ்சுக் கொடுப்பன்னு நம்பிக்கையோடு இருக்காங்க. அவங்களுக்கு நீ செய்யப் போற காரியத்தால் ஏற்படும் வலி உனக்குத் தெரியலையா? பரத்.”

“முத்து, அப்ப மஞ்சுவை நான் காதலிச்சு இப்ப பைத்தியகாரன் மாதிரி இருக்கிறேன். உனக்கு அது தெரியலையா?”

“ஆமா! ஆமா! பரத். அந்த வலியைப் பற்றி யோசிக்கிறதுக்கு முன்னாடி உன் தங்கச்சியை நினைச்சுப் பார்த்தியா? அண்ணன் தகப்பானா இருந்து தனக்குச் செய்ய வேண்டிய எல்லாக் கடமையையும் செய்வான். தாய்மாமனா தன் பிள்ளைக்கும் செய்வான்னு நினைச்சிட்டு இருக்கிற உன் தங்கச்சிக்கு நீ செய்யப் போறக் காரியத்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?”

“என்ன? முத்து. அப்பா அம்மா இருக்காங்களே அவளைப் பார்த்துக்க மாட்டாங்களா?”

“பார்த்துப்பாங்க. ஆனால், கொலைகாரனின் தங்கச்சின்னு யாரும் கல்யாணம் செஞ்சிக்க வரமாட்டாங்க. அண்ணனா உனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. அப்படிதானே? அதைவிட உன்னை ஏமாற்றிப் போன எவளோதான் முக்கியம் கூடப் பிறந்த தங்கை முக்கியமில்லை.” முத்துக் கோபத்தில் கேட்க.

“நான் அப்படிச் சொல்லலை முத்து. என் வாழ்நாள் முழுசும் என் கூட வருவான்னு மஞ்சுவைக் காதலிச்சேன். அவளுக்காக எல்லாம் செஞ்சேன். தேவையில்லாததைச் செய்யாதேன்னு சொல்றது தப்பா? அதுக்கு என்னை வேண்டாம்னுச் சொல்லிட்டா. அப்போ அவளுக்குப் பணம்தானே பெரிசாத் தெரிஞ்சி இருக்கு. காதலைவிடப் பணம்தான் பெரிசுன்னு நினைச்சவளை சும்மாவிடச் சொல்றியா?”

“நம்ம கடைசி மூச்சு நிற்கிற வரை நம்ம கூடவே வச்சுக் காப்பாத்துவான்னு நினைச்சிட்டு இருக்கிறவங்களை நீ அனாதையா விட்டுட்டுப் போன பிறகு உன்னைப் பெத்தவங்க படப்போகும் வலி உனக்குத் தெரியலை. உன் தங்கச்சி வாழ்க்கை பெரிசாத் தெரியலை. மஞ்சு செஞ்சதுதான் உனக்குப் பெரிசாத் தெரியுது. போ போய் அவளை எப்படிக் கொலை செய்றதுன்னு யோசி.”

“பாரு அந்தக் குடும்பத்தைப் பாரு. அந்த இடத்தில் உன் குடும்பத்தை நினைச்சுப் பாரு. அந்தச் சின்னப் பொண்ணை உன் தங்கச்சியா நினைச்சுப் பாரு. உன் குடும்பத்தைப் பற்றிய அக்கறை கொஞ்சமாவது இருந்தா புது மனுசனா எந்திரிச்சு வா வீட்டுக்குப் போகலாம். உன் உறவுகளோடு சந்தோஷமாக இரு.” என்றான் முத்துக் கோபமாக.

வெகு நேரம் அமைதியாக அருகில் இருந்த அந்தக் குடும்பத்தையே கவனித்துக் கொண்டிருந்த பரத், ‘இவ்வளவு நேரம் முட்டாளா யோசிச்சிருக்கிறேன். நான் கொலைகாரனா நின்னா என் ஒழுக்கமும் கெடும். குடும்பத்துக்காக அவகிட்ட பேசிட்டுக் கோபத்தில் என் குடும்பத்தையே மறந்துட்டேன். என்னையும் என் குடும்பத்தையும் நேசிப்பவள் கண்டிப்பா வருவா.” என்று சிந்தனையிலிருந்து மீண்டவன் “முத்து, வா வீட்டுக்குப் போகலாம்” என்றான் பரத்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *