சனிக்கிழமை சாயங்காலம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 14,927 
 
 

நடப்பது எதுவும் உவப்பாகவே இல்லை. என்னைப் புரிந்துகொள்ளாமல் அவள் அந்த நிர்மலா என்னைப் புறக்கணிப்பதாகவே உணர்கிறேன்.

‘நிர்மலா யார்? எதன்பொருட்டு என்னோடு உறவாடுகிறாள்? அவளுக்கும் எனக்குமான ஆதித் தொடர்பு என்ன?’ என்றெல்லாம் ஆராயும் அவசியமே இல்லை. விடை எளிது. அவள் என்னுடன் ‘தி மியாமி சொல்யூஷன்’ நிறுவனத்தில் வேலையாக இருக்கிறாள். சாப்ட்வேர் இன்ஜினீயர். என் நாற்காலியிலிருந்து மூன்று முழத் தொலைவு!

நிர்மலா என் விஷயத்தில் அத்துமீறி நுழைந்து விட்டாள் என்று குற்றம்சாட்ட முடியவில்லை. ஒருவிதத்தில் நானும் குற்றவாளியே! நிர்மலா வைப் புரிந்துகொள்வதில் எனக்கு ஏகப்பட்ட சிக்கல்கள். அல்லது, அப்படி நினைத்துக் கொண்டேனோ… தெரியவில்லை! ஒன்றுமட்டும் உண்மை. மனதை அடகுவைத்துவிட்டால், அடுத்தகட்டம் தடுமாற்றமே!

நிர்மலா, அழகி கிடையாது. சராசரிக்கும் கீழான முகத்தோற்றம். நிறமும் உயரமும் குறைவு. இப்போது நம்புவீர்களா?

என் நண்பர்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். அதை விமர்சனம் என்றோ, கரிசனம் என்றோ சொல்ல முடியாது. அந்தக் கருத்துக்கள் எல்லாம் அவர்களின் இயலாமையின் வெளிப்பாடுதான். ”போயும் போயும் இவளாடா கிடைச்சா? வேற ஆளே கெடைக்கலையா?” என்றால் என்ன அர்த்தம்?

நான் அடிக்கடி நிர்மலாவைப் பார்த்துப் புன்னகைப்பேன். அவளும் அதை நிராகரிக்காமல் ஏற்றுக்கொண்டதன் அடையாளமாகச் சிரிப்பாள். அந்தச் சிரிப்பை இன்னதென்று வகைப்படுத்திவிட முடியாது. சில கணங்கள், அவளின் புன்னகையில் ஒருவித வசீகரம் தென்படும். அந்த நிமிடம் அதை எதிர்கொள்ளும்போது கூச்சமாகக்கூட இருக்கும். இது ஒரு தூண்டில்!

பெரும்பாலான நேரங்களில் அவள் என்னைத் திணறடித்துவிடுவாள். நான் பேசுவதைக் கேட்பாள். ஆனால், எந்த முகபாவமும் காட்டாமல் கேட்டுக்கொண்டு இருந்தால்? நான் அவளுக்கு மிக நெருக்கமாக இருப்பதாக உணரும் சந்தர்ப்பங்களை இப்படித்தான் புஸ்ஸென்று ஊதி அணைத்துவிடுவாள்.

இப்போது இன்னொரு உபாயமும் கைக்கொள்கிறாள். அடிக்கடி தன் பார்வையை கைக்கடிகாரத்துக்குத் திருப்புகிறாள். அடிபட்ட நாய் மாதிரி என் மனம் குரைத்துக்கொண்டு திரியும். இதை அவளிடமே கூறியிருக்கிறேன். ‘ஏதோ ஒன்றுக்கு என் மனம் அலைபடுகிறது’ என்றேன். அவள், ‘ஏதோ ஒன்றுக்கல்ல’ என்று திமிராகச் சொல்லிவிட்டு எழுந்துகொள்வாள். அன்று பகல் சாப்பாட்டுக்கு என்னைத் தவிர்த்துவிட்டு, எவனுடனாவது போய் உட்கார்ந்துகொள்வாள். எனக்குத் தலை வெடித்து விடும்.

மூக்குக்குக் கீழே வேர்வைக் கொப்புளங்களுடன் அவள் அந்தக் கருவாச்சி, ‘ஹலோ! என்ன கோபமா?’ என்று கோணலாக வந்து நிற்பாள். சட்டென்று எல்லாம் வடிந்துவிடும். இதுதான் என் மிகப் பெரிய பலவீனம்.

எல்லோரும் சொல்வதைப் போல, போயும் போயும் இவளோடு எதற்காக நான் குலாவிக்கொண்டு அலைய வேண்டும்? அந்த விடை தெரிந்துவிட்டால், விளையாட்டு முடிந்துவிடும்!

என் நீண்ட நாள் ஆசை… காபி ஷாப்பில் அவளுக்கு மிக அருகில் பெர்ப்யூம் வாசம் கலந்த அவளுடைய வாசத்தை நுகர்ந்துகொண்டு, எந்தக் கண்ணாமூச்சி விளையாட்டுமின்றி அவளை நான் கண்டுகொள்ளவேண்டும். அந்த ஆவேசமும் பரபரப்பும்தான் இந்த நிமிடம் வரை என்னை இயக்கிக்கொண்டு இருக்கிறது.

இப்போது அவள் என்னைப் போல பல இன்டெலக்சுவல்களுடன் உலாவுகிறாள், விவாதிக்கிறாள். அந்தப் பாவிகளுக்காக என்னிடம் பரிந்துகொண்டு வருகிறாள். அப்போது நான் அவள் மீது உரிமையை நாட்டிக்கொள்ளத் துடிக்கும் வாயில்லாப் பூச்சியாகிவிடுவேன்!

‘உன்னை நான் நேசிக்கிறேன்’ என்று உளறக்கூடிய ஒரு கட்டத்தை நான் மெள்ள மெள்ள நெருங்கிக்கொண்டு இருக்கிறேன். இது அவளுக்கும் தெரியும். பிரச்னைகளைத் தவிர்க்கவா முடியும்? இன்று இல்லாவிட்டால் நாளை! இல்லை, என்றோ ஒரு நாள்!

ஆரம்பத்திலிருந்தே அவளை நான் ஒரு ரகசியம் போல் காத்துவந்தேன். இப்போது என்னைப் பற்றி ஒரு மாதிரி பேச்சுக் கிளம்பியிருப்பதாக அறிகிறேன். அப்படிப் பேசுபவர்களை என்னால் என்ன செய்ய முடியும்? செய்யட்டும்!

என் அறைக் கதவைத் தட்டும் ஓசை. ‘யெஸ்’ என்ற ஒலிப்பு முடியுமுன்னே, கதவு படீர்! நிர்மலாதான். ”குட் நியூஸ்!” என்று கூறிக்கொண்டே வந்தாள்.

”யாருக்கு?” சட்டென்று கேட்டுவிட்டேன்.

அவள் பார்வை சட்டென்று தளர்ந்தது. தோற்றுப்போனவள் போல் நின்றாள்.

”சொல்லு!”

”நான் டீம் லீடராகிட்டேன்!”

”ஸோ வாட்?”

”உனக்கு என்ன ஆச்சு?” என்று சீறினாள்.

”ராவோட வேலையா? ராத்திரி இல்லே! ராவ்… ராவ்… அவனோட வேலையா?”

”ஏன், என் திறமை மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?”

”இருக்கலாம். ஆனா, ராவ் உனக்கு நெருக்கமானவனா மாறிட்டு வரான்!”

”நீ என்னை அவமானப்படுத்திட்டே!” அவள் அலறிவிட்டு விலகிப் போய்விட்டாள்.

நான் தோள்களைக் குலுக்கிக்கொண்டேன். அவளுடன் நான் உணர்ந்தது எரிச்சல்தான். ஏமாற்றமல்ல. ‘டீம் லீடர்’ என்பது அவள் அளவில் ஒரு பிஸ்கோத்து. எனக்குத் தெரியும்… அவள் மகா திறமைசாலி! ஆனாலும், என் ஈகோ வீறிட்டுவிட்டது. அவள் டைடல் பார்க்கில் இருந்து, வடபழனி போவதை என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஏனென்றால், இந்தச் சனியன் பிடித்த ராவ் அவளை உரசிக்கொண்டேதான் நடப்பான். அதை நினைத்துச் சங்கடப்படுவானேன்? என் முகச் சுளிப்பை அவள் புரிந்துகொண்டு இருப்பாள்.

நான் எதிர்பார்த்தபடி, அடுத்த நாள் ஒரு வீக் எண்டின் தொடக்கம். நான் பைக்கைக் கிளப்புவதற்கு முன், எனக்காகக் காத்திருப்பவள் போல் வந்து சேர்ந்தாள். உள் மனம் அதை ரசித்தாலும், ஆனந்தமாக அனுபவித்தாலும்… நான் அவளை முகச் சுளிப்புடன்தான் பார்த்தேன்.

”உனக்கு என்னதான் ஆச்சு?” என்றாள்.

”என்ன ஆகணும்னு எதிர்பார்க்கிறே?”

”திடீர்னு என்ன கோபம்?”

நான் எங்கோ பார்த்தேன்.

”யு ஆர் வெரி ஸ்மார்ட்!”

இதிலெல்லாம் நான் ஏமாற மாட்டேன் என்பது போல அவளைப் பார்த்தேன்.

”அட, ராமா!”

”என்னது… ராவா?”

அவள் முகம் சட்டென்று சிறுத்து விட்டது.

”நீ என்னைக் கேவலப்படுத்துறே!”

”நீ மட்டும்..?”

”உன்னை அறிவுஜீவி, இன்டெலக்சுவல்னு நெனைச்சேன்!”

”அதை யார் கெடுத்தது?”

”நீதான்! வேறு யார் கெடுக்க முடியும்?”

”ராவ்..?”

”அவன், என் மாஜி டீம் லீடர். தட்ஸ் ஆல்!”

”அவன் டை அடிக்கிறான்; பான் பராக் போடுறான்…”

”எனக்கென்ன?”

”நிஜம்மா?”

”அவன் செத்தாக்கூட எனக்கென்ன?”

”ரியல்லி?”

”யெஸ்!”

சட்டென்று ஒரு வடிகால் கிடைத்துவிட்டது போல் இருந்தது. நாக்கில் ஒரு ருசி தட்டுப்பட்டது. அதை வெளிக்காட்டிச் சாதாரணமாக்கிக்கொள்ளக் கூடாது. மாறாக, என் திடத்தைக் காட்டிவிட வேண்டும் என்கிற ஆவேசம். பரீட்சையில் பாஸாகிவிட்ட உணர்வு. ஆனாலும், என் முகத்தை சீரியஸாக வைத்துக்கொள்வதில் கவனமாக இருந்தேன். எங்களைச் சுற்றிலும் ஒரு பெரும் கூட்டம் வீட்டுக்குக் கிளம்ப, வீக் எண்டைக் கொண்டாடத் தயாராகிவிட்ட கூட்டம். போக்குவரத்தைச் சீர்செய்யும் ஆசாமியின் விசில் சத்தம் என் காதில் ஏறவே இல்லை!

சட்டென்று என் பைக்கில் ஏறிக்கொண்டாள். அவள் ஏறிய வேகமும், வண்டி கிளம்பிய வேகமும் என் நினைவில் இருந்து தப்பிவிட்டது. என் முகத்தில் ஒளி ஏறிற்று. எந்தக் கவலையுமற்ற சிறு பையனாக மாறிவிட்டேன். அவள் என்னை மிக நெருங்கி உட்கார்ந்திருப்பதை முதுகில் உணர்ந்தேன். நானோ அவளோ, எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், இருவருக்குமிடையே நெருக்கமான உறவு நிலவுவதை உணர்ந்தேன். என் அதிர்ஷ்டத்தை என்னால் நம்ப முடியவில்லை.

நடுவில், திருவான்மியூர் திருப்பம் திரும்பி, மகாபலிபுரம் சாலையை நோக்கிச் செல்லும்போது, லேசாக அவள் சிரிப்பது போல் தெரிந்தது. ‘எங்கே போறே?’ என்று அவள் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை. ஆனால், அது எங்கள் வழக்கமான ரூட் அல்ல!

மகாபலிபுரம் சாலையில் திருவிடந்தை தாண்டி, ஒரு சவுக்குத் தோப்பை ஒட்டிய பிரசித்தி பெற்ற அந்த ஓட்டல் வாசலில் போய் வண்டியை நிறுத்தினேன். கலைந்த தலையைச் சரிசெய்துகொண்டே, முகத்தைப் பார்த்தாள். லேசான களைப்பு… கொஞ்சம் கலவரம்… சற்று நேரம் மௌனம்.

பிறகு, ”பாத்ரூம் போகணும்” என்றாள். நான் அவளை அந்த ஓட்டலுக்குள் அழைத்துச் சென்றேன். எங்களைப் போல இரண்டு மூன்று ஜோடிகள் அங்கு காத்திருந்தார்கள். ரிசப்ஷனில் இருந்தவர்கள் என்னைச் சட்டை செய்யவே இல்லை. அவர்கள் செயல்களில் நாசூக்கும் நளினமும் தெரிந்தது.

அங்கு காத்திருப்போர்கள், வருபவர்கள், செல்பவர்கள் மாறி மாறி எங்களை நோட்டமிட்டவாறு இருந்தார்கள். நேரம் கடந்துகொண்டே இருந்தது. எனக்கு எரிச்சல் தட்டும்போது, அவன் ஒரு பேரேட்டை என் பக்கம் திருப்பி, மூடி இல்லாத பேனாவைத் தந்தான். நான் ஏதோ விலாசத்தை எழுதி வைத்தேன். அவன் என்னிடம் கேட்ட பணத்தை பிரக்ஞையற்று எடுத்து நீட்டினேன். எந்தவித லக்கேஜும் இல்லாமல் இருந்த எங்களை, ஒரு சிறுவன் உற்சாகத்துடன் 109க்கு அழைத்துச் சென்றான்.

நிறையப் பேச வேண்டும், இதுவரை பேச முடியாததை, பேசத் தயங்கியதைப் பேசிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவளுக்கும் ஏறக்குறைய அதே மனநிலைதான்.

ஆனால், அந்த ஓட்டல் அறைக்குள் சென்றதும், நாங்கள் உருவாக்கிக்கொண்ட அந்தத் தனிமையில், அந்த மௌன நெருக்கத்தில் எங்கள் உணர்வுகள், மறைக்கப்பட்ட உணர்வுகள், மேற்பூச்சால் வசீகரமிழந்து கிடந்த உணர்வுகள் வீறிடத் தொடங்கின. எந்தப் பொய்யும் பாவனையும் பம்மாத்தும் இல்லாமல் உணர்வுகள் கட்டவிழ்ந்தன. நான் ஆணாகவும், அவள் பெண்ணாகவும் மட்டும் இருந்தோம். வாழ்வின் இயல்பான தருணம் அதுதான் என்பதை உணர்ந்தோம். ஆனால், இயல்பாக இருக்க முடியவில்லை.

சில கணங்கள்தான், அந்த எல்லையற்ற வெளியில் உலாவி உலர்ந்தோம். இருவருமே மாற்று உடை எடுத்து வரவில்லை. பிரச்னை அதுவல்ல. உடல் அயர்ச்சியில், வேர்வைப் பிசுபிசுப்பில், குளிக்க வேண்டும் போல் இருந்தது. குளித்து முடித்ததும், இருவருக்குமே கபகபவென்று பசித்தது.

தமிழ் சினிமாக்களில் வரும் காட்சிகள் போல, நிர்மலா தன் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு, அழிந்த பொட்டும் கலைந்த கூந்தலுமாகக் கதறிவிடுவாளோ என்று நினைத்தேன். அப்படி ஒன்றும் நேரவில்லை!

”நீ ரொம்ப டென்ஷனா இருக்கிறாப்ல தெரியுது” என்றாள். மிகச் சாதாரணமாக அவள் கேட்டது, என்னை ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையில் தள்ளியது.

சாப்பிட்டு முடித்தோம். அப்போதைக்குப் பசி அடங்கினாற் போல் ஓர் உணர்வு! அதன் பின் எங்கள் உரையாடல் மிக மிகச் சாதாரணமாக நிகழ்ந்தது. ”என்னை எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறே?” என்றோ, ”என்னைக் கைவிட்டுட மாட்டியே?” என்றோ அவள் கேட்பாள் என்று பயந்தேன். கடைசி வரை அவள் அப்படிக் கேட்கவே இல்லை. நானும் சொல்லவில்லை.

நடு இரவுக்கு முன், நல்ல பிள்ளைகளாக அவரவர் வீடுகளுக்குத் திரும்பிவிட்டோம்!

– 26th டிசம்பர் 2007

Print Friendly, PDF & Email

1 thought on “சனிக்கிழமை சாயங்காலம்

  1. இப்படியும் இருக்கிறார்கள்..அவரவர் பசிக்கு ஒவ்வொரு வித வலை.வலை வீசு நான் விழுவதும் விழாததும் என் இஷ்டம்.வலை வீசாமல் இருந்து விடாதே இதுதான் இன்றைய நிஜம்.அதை பாரதி பாலன் மிக அழகாக படம் பிடித்திருக்கிறார்.வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *