சென்னை “ஸிடி ஸென்டரில்” முன்னாள் தோழி சந்தியாவை பார்க்கப் போகிறோம் என்பதை இந்து எதிர்பார்க்கவே இல்லை: அதுவும் சந்தியாவை அவள் கணவன் முரளியுடன். “ஒடிஸி’ புத்தகக் கடையில் ஏதோ புத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்த இந்துவின் தோளைத் தட்டினாள் சந்தியா.
“ஹாய்… வாட் எ ப்ளஸன்ட் ஸர்ப்ரஸ்… நீ எப்படி இந்தியா வந்தாய்?’ என்றாள் இந்து ஆச்சர்யத்துடன்.
“எல்லோரும் கல்யாணம் பண்ணிண்டு யு.எஸ். போகணுமா? ஃபார் எ சேஞ்ச் நான் கல்யாணம் பண்ணிண்டு யு.எஸ்.ஸிலிருந்து இந்தியா, குறிப்பாக சென்னைக்கு வந்து விட்டேன்” என்றாள் சந்தியா சிரித்தபடி.
“மைகாட்… ஐந்து வருஷத்தில் நீ மாறவேயில்லை… அதே ஸ்லிம் ஃபிகர்…அழகு… தனியாகவா வந்திருக்கே… உன் ஹஸ்பண்ட் எங்கே…?”
“அதோ… அங்கே ஃபர்ப்யூம் வாங்கிக் கொண்டிருக்கிறார்… நான் தான் அங்கிருந்து உன்னைப் பார்த்தேன்… பக்கத்தில் வந்து பார்த்தால் சாட்சாத் இந்துவேதான்… என்னைச் சொல்றயே… நீயும் அதே ஸ்லிம் ஸ்வெல்ட் பிகர்தானே மெய்ன்டெய்ன் பண்றே?” என்றாள் சந்தியா…
சந்தியா காட்டிய திசையில் பார்த்த இந்துவுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அது என்ன என்பதை அப்புறம் பார்க்கலாம்.
“என்னடி… நீ எங்க தனியாகவா வந்திருக்கே… உனக்கும் மேரேஜ் ஆனதா கேள்விப் பட்டேன்…’ என்று சீண்டினாள் சந்தியா.
“ஹ்ம்… யெஸ்… நானும் தனியாக வரவில்லை.. என் கணவர் அதோ அந்த லிட்ரேசர் ஸெக்ஷனில் புத்தகம் பார்த்துக் கொண்டிருக்கிறார்…’ என்று கை காட்டினாள் இந்து. அதற்குள் பர்ஃயூம் வாங்கிவிட்ட தன் கணவன் சுற்றிச் சுற்றித் தன்னைத் தேடுவதை கவனித்த சந்தியா, “வா இந்து… உன்னை முரளிக்கு அறிமுகம் பண்ணி வைக்கிறேன்…’ என்று கையைப் பிடித்து இழுத்தாள்.
: 2 :
“இரு… இரு… ஒரு ஸெகன்ட்… நான் குமாரையும் அழைத்துக் கொண்டு வருகிறேன்…’ என்று சந்தியாவின் கைகளை விலக்கினாள் இந்து.
“குமாரா…?”
“யெஸ்… அதுதான் என் ஹப்பி…” என்று புன்னகையுடன் சொன்ன இந்து
மூன்று புத்தக வரிசைகள் தள்ளி நின்று ஏதோவொரு புத்தகத்தைத் தீவிரமாகப் புரட்டிக் கொண்டிருந்த தன் கணவனை நோக்கிச் சென்றாள்.
“குமார்… கம்… லெட்ஸ் மீட் மை காலேஜ் ப்ரன்ட் சந்தியா…” என்று அவன்
கையைப் பற்றி இழுத்துக் கொண்டு சந்தியா சென்ற திசையில் நடந்தாள்.
“முரளி… மீட் மை ஃப்ரண்ட் இந்து… அது அவள் ஹஸ்பன்ட் குமார்…” என்று குமாரையும், இந்துவையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தாள்.
“ஹாய்:
“ஹலோ…”
“ஐ’ம் குமார்… பிரேம் குமார்…”
“ஐம்… முரளி… முரளி கிருஷ்ணா…”
பரஸ்பர அறிமுகம் முடிந்ததும் தாங்கள் நால்வருமே ஐனாக்ஸில் படம் பார்க்க வந்திருப்பதை அறிந்து கொண்டனர்.
இந்து – குமார் ஜோடி படம் பார்த்து விட்டு வந்திருந்தனர். முரளி – சந்தியா படத்திற்குப் போக நேரம் இருந்ததால் அருகில் இருந்த “சங்கீதா’வில் காபி
குடிக்கலாமே என்று முரளி கேட்க மற்ற மூவரும் ஏற்றுக் கொண்டனர்.
ஹோட்டலின் உள்ளே சென்று அமர்ந்தபின் சட்’டென்று ஓர் மௌனம் நிலவியது. அதைக் கலைக்கும் வகையில் குமார்தான் சந்தியாவைப் பார்த்து “சந்தியா… உங்களுக்கு காதல் கல்யாணமா இல்லை அரேஞ்ஜ்ட் மாரேஜா?” என்று கேட்டான். அவனைப் பார்த்துப் பின் புன்னகையுடன் “என் அம்மா – அப்பா பார்த்து பண்ணி வைத்த கல்யாணம்தான்…’ என்றாள். தொடர்ந்து,
“உங்களுடையது எப்படி? என்ன இந்து அந்தக் காலத்தில் நீ ரொம்ப ரொமான்டிக்கான ஆளாச்சே…?” என்று கொக்கி போட்டாள் சந்தியா.
இந்து ஓர் கணம் திடுக்கிட்டாலும், தன்னை சமாளித்துக் கொண்டு புன்னகையுடன் “எங்களுடையதும் அரேஞ்ஜ்ட் மாரேஜ்தான்” என்றாள்.
தொடர்ந்து, “பட்… குமார் லவ்ஸ் மீ எ லாட்…’ என்றாள் சிரித்தபடி.
“யு மீன் ஐ டோன்ட் லவ் முரளி?” என்ற சந்தியா, “யு நோ… முரளியும், நானும் “மேட் ஃபார் ஈச் அதர் ஆக்கும்” என்றாள் அழுத்தமாக.
“யெஸ்… யெஸ்…’ என்று சிரித்தபடி அவளை ஆமோதித்தான் முரளி.
பின் பேச்சு தொடர்ச்சியாக அவர்கள் பார்த்து விட்டு வந்த படத்தையும், பார்க்கப் போகும் படத்தைப் பற்றியும் சுற்றிச் சுழன்றது.
இதற்குள் முரளியும், குமாரும் தங்கள் தங்கள் வேலைகளைப் பற்றிப் பேசிக் கொள்ள, சந்தியாவும், இந்துவும் தங்கள் கல்லூரி நாட்களைப் பற்றிப் பேசிக் கொள்ள, சந்தியாவும், இந்துவும் தங்கள் கல்லூரி நாட்களைப் பற்றியும், தங்களது இதர தோழர் – தோழிகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்.
கிளம்பும் போது ஒருவருக்கொருவர் தொலைபேசி எண்களைப் பரிமாறிக் கொண்டு “வீட்டுக்கு ஒரு நாள் கட்டாயம் வர வேண்டும்’ என்று அன்புக் கட்டளையிட்டுக் கொண்டு பிரிந்தனர்.
காரில் வரும் போது குமார் இந்துவிடம் கேட்டான்.
“உன் தோழி சந்தியா கொஞ்சம் கர்வம் பிடித்தவள் போல் இருக்கிறதே?” என்றான்.
குமாரை முறைத்துப் பார்த்தாள் இந்து. “எதை வைத்து அப்படியொரு முடிவு
எடுத்தே குமார்?” என்றாள் உஷ்ணமாக.
“ஸாரி… ஸாரி… ஏதோ என் மனசுக்கு அவள் பேசுகிற பழகற தோரணையில்
பார்த்து தோணிச்சு…. அதனால்தான் கேட்டேன்…” என்றான் குமார் சமாதானமாக.
: 3 :
“யு…ஸீ… அவள் குடும்பம்…. அவ அப்பா அம்மா யு.எஸ்.லே ஸெட்டில் ஆனவங்க… அப்படியிருந்தும் ஒரு இந்திய மாப்பிள்ளையைப் பார்த்து அவனைப் பிடித்துப் போய் அவங்க இஷ்டப்படி கல்யாணம் பண்ணிண்டு இந்தியாவில் வந்து இருக்காளே… அது போறாதா… அவ கர்வம் பிடிச்சவ இல்லைன்னு நிரூபிக்க…?” என்றாள் இந்து.
“யெஸ்… நிஜம்தான்…” என்று சுருக்கமாக பதில் சொல்லிவிட்டுக் காரை செலுத்துவதில் கவனம் செலுத்தினான் குமார்.
“நல்ல வேளை… நானும், சந்தியாவும் ஒரு காலத்தில் காதலர்கள். ஆனால் ஜாதிப் பிரச்னையால் கல்யாணம் நடக்கவில்லை… காதலை, முறித்துக் கொண்டோம்” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். அதோடு “தாங்க்ஸ்…சந்தியா… என்னைத் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளாமல் இருந்ததற்கு…’ என்று மனசுக்குள் நன்றி செலுத்தினான்.
அதே சமயம் “நல்ல வேளை…. முரளியும், நானும் ஒரு காலத்தில் காதலர்கள்…அந்தஸ்து காரணமாக முறிந்து போன காதலை மறந்து இன்று வாழும்போது இது போன்றதொரு இக்கட்டான சூழலில் அவனை என் தோழியின் கணவனாகப் பார்க்க நேரிடும் என்று கனவிலும் நினைக்கவில்லையே. நம் பழைய உறவைத் தெரிந்த மாதிரி காட்டாமல் அமைதி காத்து, உன்னையும், உன் வாழ்க்கையையும், என்னையும் என் வாழ்க்கையையும் காப்பாற்றி உனக்கு நன்றி முரளி…’ என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாள் இந்து.
···
படம் பார்த்து முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பும் போது முரளி சந்தியாவிடம் சொன்னான்.
“சந்தியா… கல்யாணம் பண்ணிக் கொள்ளும்போது நான் உன்னிடம் ஒன்று
சொன்னேன்… நினைவிருக்கிறதா?’ என்றான்.
: 4 :
“ம்… ஆமாம்… நமக்கு மத்தியில் எந்த ரகசியமும் வேண்டாம்… உண்மையாக ஒருவருக்கொருவர் இருப்போம் என்று’ அதற்கென்ன…?”
“நான் கல்யாணத்திற்கு முன் ஒரு பெண்ணைக் காதலித்தேன் என்று சொன்னேன்…’ என்றான் முரளி.
“ம்….”
“உன் ஃப்ரண்ட் இந்துதான் அந்தப் பெண்…’
“அப்படியா….’ என்று வியப்புடன் கேட்ட சந்தியா “நானும் உன்னிடம் அதே போல் ஒரு கன்ஃபஷன் செய்ய வேண்டும்’ என்றாள்.
“அது என்ன…?’
“குமார்தான் என் மாஜி காதலன்’ என்றாள் சந்தியா.
ஓர் விநாடி ஒருவரயொருவர் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்ட இருவரும் “வாட் எ ஸட்ரேஞ் கோ இன்ஸிடன்ஸ்’ என்று ஒரே சமயத்தில் சொல்லி விட்டு உரக்கச் சிரித்தனர்.