சத்யாவைத் தேடி…!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: April 12, 2019
பார்வையிட்டோர்: 27,237 
 
 

நிறுத்தத்திலிருந்து விலகி சற்றுத் தள்ளிப் பேருந்து நின்றபோது கீழே குதித்தான் மனோபாலா. பிறகுதான் உணர முடிந்தது படி சற்று உயரம் என்று. இறங்கிய வேகத்தில் நிதானிக்கும்முன் ஆட்டோ ஒன்று உரசுவது போல் கடந்து சென்றது. கவனிக்காமல் இறங்கிவிட்டோமா அல்லது இடிக்காமல் கடந்து விடலாம் என்று அது பறக்கிறதா தெரியவில்லை. மனக் கலக்கத்தோடேயே எந்தக் காரியம் செய்தாலும் இப்படித்தான் நிதானமில்லாமல் இருக்கும், அவ்வப்போதைய வேலைகளில் கவனமிருக்க வேண்டும். பயணத்திற்காக, தான் கிளம்பியதிலிருந்தே இப்படித்தான் இருக்கிறோமோ என்று நினைத்தான். இனி கவனத்தை ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும். வந்த வேலை முடியும்வரை அது மிக முக்கியம்.

முற்றிலும் புதிய இடம். இதுவரை அம்மாதிரி ஒரு பகுதிக்கு வந்ததில்லை. ஓரமாய் நின்று நிதானித்து சுற்றிலும் பார்த்துக் கொண்டான். காலை ஏழு மணிக்கே மிகுந்த பரபரப்புக் கூடியிருந்தது. நெருக்கமான கடைகளுக்கு முன்னே குப்பைகள் சிதறிக் கிடந்தன. சிதறலாக சனக் கூட்டம். நிறைய இடத்தில் எச்சிலும், செங்காவி உமிழலும். ஈக்கள் மொய்த்துக் கிடந்ததுமாய் பார்வைக்குப் பட்டு முகம் சுளிக்க வைத்தது. எதிலும் மிதிக்காமல் நிற்கவே ஒரு அலசல் தேவைப்பட்டது. வந்து நிற்கும் பேருந்துகளையும், கூட்டத்தையும், தான் செல்ல வேண்டிய வண்டிதானா என்கிற தேடுதலையும், முகத்தில் கலக்கத்தோடு பலர் நிகழ்த்திக் கொண்டிருப்பதும், திடுபுடுவென்று ஓடுவதும், பின் ஏமாற்றத்தோடு வந்து நிற்பதும், ஒரு கால் வைத்தால் போதும் என்று வயதுக்கு மீறிய எழுச்சியோடு போய்த் தொற்றுவதும், தவறி ஏறிய வண்டி என்கிற ஏமாற்றத்தோடு தடுமாறிக் குதிப்பதும், எல்லாமும் இங்கே இப்படித்தான் என்பதுபோல் வேடிக்கை பார்க்கும் சனங்களுக்கு மத்தியிலான பரபரப்பில் இவன் கண்கள் அந்தப் பகுதியை மீண்டும் மீண்டும் அலசிக் கொண்டிருந்தன.

குறுக்கே சாலை பிரிக்கப்பட்டு மரங்கள் நடப்பட்டிருந்தன. சில வளர்ந்தும், நிறையச் செடிகள் கருகியும் காணப்பட்டன. கருகிய செடிகளின் நடுவே காலைப் பதித்துக் கடந்து கொண்டிருந்தார்கள் பலர். அப்படிக் கடக்கையில் வேகமெடுத்து வரும் ஊர்திகளைத் தவிர்க்க முயல்கையில் எவரேனும் சிக்கிக் கொள்ள இயலும் என்பதாக இவன் மனம் பதைபதைத்தது. அந்தப் பகுதியில் இறங்குபவர்கள் எல்லாருமே எதிர்வரிசை நோக்கியே சென்றார்கள். சாலையைக் கடந்த பின்னாலும் ரயில்வே கிராசிங் இருந்தது. அதையும் கவனமாய்க் கடக்க வேண்டிய நிலை. ஐந்து நிமிடத்திற்கொரு முறை அடைத்து அடைத்துத் திறக்கும் வழியில் அது சாத்தியமாகாது என்று எந்நேரமும் அந்த இரும்பு கேட்கள் அடைத்தே கிடந்தன. ஓரமாக S வடிவத்தில் இரும்புக்கிராதி வழியே ஆட்கள் போவதும் வருவதுமாய் இருந்தனர். ரயில் வந்தால் கவனமாய் நின்றுகொள்வதும், பின் நகருவதுமாய் ஓய்வில்லாமல் பாதை நிரம்பி வழிந்தது.

பேருந்துகளின் இரைச்சல்களுக்கு நடுவே எதையும் பொருட்படுத்தாமல் தன் வழியுண்டு என மின்சார ரயில் தடதடவென்று விரைந்து கொண்டிருப்பதும், சமயங்களில் வெளியூரிலிருந்து வரும் அதிவேக ரயில்களும் கடந்து செல்வதும், பொழுது போவதற்கு அங்கே போடப்பட்டிருக்கும் சாலை ஓரப் பேருந்து நிறுத்த அறைகளில் அமர்ந்திருந்து வேடிக்கை பார்த்தாலே போதும் என்று தோன்றியது.

அந்தப் பரபரப்பில்தான் அவள் தினமும் வந்து செல்ல வேண்டும். நாளைக்கு ஒரு முறையேனும் அவள் வந்துதான் ஆக வேண்டியிருக்கும். ரயில்வே கிராசிங்கையும், இந்த வண்டி நிறுத்தங்களையும், சாலையையும் கடந்தால்தான் காய்கறிச் சந்தை. இருக்கும் கசகசவென்ற கூட்டம் இங்கிருந்தே இவனைச் சங்கடப்படுத்தியது. குறுகிய இடைவெளியில் இரு வரிசைக் கடைகளுக்கு நடுவே ஆட்கள் போவதும், வருவதுமாய் இருந்தனர். அந்தக் கூட்டத்தில் அவள் இருந்தால்? இத்தனை காலை வேளையில் வந்திருக்கக் கூடுமா? அவளின் வாழுமிடமாக இந்த இடம் எப்படி அமைந்தது? காலம் இங்கே கொண்டு தள்ளியிருக்கிறதே! திருமணமாகிக் குடும்பத்தோடு இருப்பாளா, தனியளாய் வாழ்வாளா? வேலை எதுவும் பார்ப்பாளா அல்லது வீட்டு மனைவியாய்க் காலம் கழிக்கிறாளா? எந்த நிலையில் அவளைச் சந்திக்க நேரிடும்? இடம் மட்டுமே இது என்று தெரிந்த அளவில் இப்படி வந்தது சரியா? அமைதியாய் இருக்கும் அவள் வாழ்வில் தனது வருகையால் அநாவசியமாய்ப் புயல் கிளம்பி விட்டால்? அவள் கணவனோடு சந்திக்க நேர்ந்தால் தன்னை என்னவென்று சொல்லிக் கொள்வது? உடன் படித்தவன் என்றா? ஒரே ஊர்க்காரன் என்றா? பக்கத்து வீட்டுப் பழக்கம் என்றா? எப்படி? தனது இந்த வருகை பிரச்னையில்லாமல் அமையுமா? அவளுக்கு ஏதேனும் உதவிசெய்தல் போல் ஆகுமா?

ரயில்வே கிராசிங்கிற்கு அப்புறம் தென்பட்ட வீடுகளைப் பார்த்தபோது புதிதாய்த் தோன்றிய நகர்ப்புறமாய் இருக்கலாமோ என்று நினைத்தான். நிறைய வீடுகள் பழசாய்த் தோற்றமளிப்பதை வைத்து அதுவும் ஒரு பழகிப் புழங்கிப் போன பழைய பகுதிதான் என்று தோன்றியது. அங்கே தென்படும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அது பழசு. ஆனால் அது தனக்குப் புதுசு. முற்றிலும் புதுசு. வேற்று மாநிலத்தில் பணிபுரியும், வாழும் தனக்கு அது அப்படித்தானே இருக்க முடியும்? எத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டன தாய் மண்ணை மிதித்து? பெரு நகரத்தின் இத்தனை தூரத்திற்கப்பாலும் சனங்கள் நம்பிக்கையோடு வந்து குடியிருப்பதும், இதுவும் நகரம்தான் என்பது போலும், அல்லது நகரமாய் நீட்டித்து விடவேண்டியதுதான் என்கிற தீர்மானத்திலும், வண்டி ஏறினால் அரைமணிதான் என்ற நோக்கில் ஒவ்வொருவரும் பறந்து கொண்டிருப்பதும், இந்தப் புதிய நகரத்தில் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல், உத்தேசமாய்ச் சொல்லக் கூட ஒரு முகவரி எதுவும் இன்றி ஏதோ ஒரு உத்வேகத்தில் உந்தப்பட்டு, தான் கிளம்பி வந்திருப்பதும், வந்ததும், வராததுமாக அந்த மார்க்கெட்டில் அவள் தென்படுவாளா என்று தேட முனைவதும், என்னவொரு போக்கு இது ?

எந்த அடையாளத்தை வைத்து அவளை அறிவது? அந்தக் கறுப்பு நிறத்தையா? அல்லது அவளின் அந்த அழகிய பிளந்த வாய் வெகுளிச் சிரிப்பையா? அல்லது அந்த மறக்க முடியாத செதுக்கினாற் போன்றதான நீரோடை நெளிவு கொண்ட உடலமைப்பையா? இன்றைக்கும் அந்த வடிவம் அப்படியே சிதறாமல் இருக்குமா? ஓடி வந்து பின்புறமாய் இறுக்கியபோது கொஞ்சமும் முகம் சுழிக்காமல் இதமாய் வளைந்து கொடுத்து ரசித்து ஒத்துழைப்பாளே….அதே சத்யா கிடைப்பாளா இன்றும்? அப்படியே கிடைத்தாலும் அதே அணுகுமுறை தெரியுமா இன்றைக்கும்? அது எப்படி சாத்தியம்? என்ன நினைப்பு இது?அப்படி ஒரு எண்ணத்திலா தான் புறப்பட்டு வந்தது? மனசாட்சி இது நாள்வரை அந்த வழியிலா பயணித்திருந்தது? வாழ்க்கை எப்படியெல்லாம் அவளைப் புரட்டிப் போட்டிருக்குமோ? முகம் கொடுத்தாவது பேசுவாளா? பேசுவது இருக்கட்டும், பார்க்கவாவது செய்வாளா? அல்லது இழுத்துக் கதவை மூடுவாளா? இத்தனை காலம் கழித்து இவன் ஏன் வந்து இப்போது குறுக்கிடுகிறான் என்று நினைப்பாளோ? இவனால் உண்டாகும் புதிய குழப்பம் தேவையா என்று விலகினால்?

எப்படியும் அவளை அங்கே பார்த்து விட முடியும் என்பதாய் மனதின் மூலையில் ஏதோவொரு எண்ணம் உந்தி உந்தி அவனைத் தள்ளிக் கொண்டிருந்தது. அவளைக் கண்டு சில நிமிடங்களேனும் பேசி விட்டால் அது நாள் வரை தன் மனத்தை அறுத்துக் கொண்டிருந்த பாரம் நீங்கும். அதன் பின் தான் மனக் கிலேசம் அற்றவனாய் சுதந்திரமாய் இயங்கலாம். அதற்கு வழி பிறக்குமா? அவளைச் சந்திப்பேனா? அல்லது தளர்ந்து போய் இப்படியே திரும்பி விடுவேனா?

சத்யா….என்று அவனையறியாமல் வாய் அவள் பெயரைச் சொல்லிப் பார்த்துக் கொண்டது. மனோ…என்னோட மனோ….அவளும்தான் வாய்நிறையச் சொல்வாளே….கன்னத்தைக் கிள்ளிக் கிள்ளிச் சொல்வாளே…என்னைக் குழந்தையாய் நினைத்து அள்ளிக் கொள்வாளே…மடில படுத்துக்கோ என்பாளே….தாயின் அரவணைப்பிற்குப் பிறகு மனதார உணர்ந்த அடுத்த சுகம் அதுதானே…அந்த அளவுக்கு அவளுக்கு என்னிடம் அப்படி என்ன ஈர்ப்பு? எந்த சிறப்புத் திறமையும் இல்லாத சாதாரணனான நான் எப்படி அவளின் பிரியத்திற்குரியவனாக ஆனேன்? என்னையே குறிவைத்துக் குறிவைத்து வந்தாளே? என்னை விட அழகான, புத்திசாலியான, சுறுசுறுப்பான, நிறைய இளைஞர்கள் இருந்தார்களே அப்போது…என் நண்பர்களாக இருந்த அந்தப் பலரிடம் இல்லாத, கிடைக்காத ஈர்ப்பு அப்படி என்ன கிடைத்தது என்னிடம்? அவர்களுக்கு மத்தியில் நான் எப்படி அவள் மனதில் அடையாளப்படுத்தப்பட்டேன்? எனக்கும் கூடவா ஒரு பெண்ணின் கருணை கிடைத்தது? அவள் என்னிடம் வைத்தது கருணையா, அன்பா? கருணை கொள்ளும் அளவுக்கு நான் ஏதேனும் குறையுள்ளவனா என்ன? ஒரு வேளை எங்கள் வீட்டு வறுமை அவளை ஈர்த்து என்பால் நெருங்க விட்டதோ? அந்த வறுமையிலும் செம்மையாய்த் திகழும் என் வீட்டு நிகழ்வுகள் அவளைப் பக்கமாய் நெருங்கி வரச்செய்ததோ? சத்யா…என் வாழ்க்கையின் வசந்தமாய் வந்த நீ இப்போது எங்கிருக்கிறாய்? உன்னை இந்தப் பாவி கண்டு பாவ மன்னிப்புப் பெறுவேனா? நீ என் கண்ணுக்குப் படுவாயா? உன் கருணை மிகு கண்கள் என்னை ரட்சிக்குமா?

உன்னப்பத்தித் தெரிஞ்சிக்கலாம்னுதான் முயற்சி பண்ணேன்…நடக்கலியே….அந்தளவுக்கு நா என்ன தப்புப் பண்ணினேன். நீயும் நானும் பழகினது ஒரு தப்பா? நானென்ன உன்னைக் கெடுத்துட்டா கைவிட்டேன்? ஏதாச்சும் தப்புப் பண்ணிட்டா ஓடப் பார்த்தேன்? சீக்கிரம் வந்துடறேன்னு சொல்லிட்டுத்தானே கிடைச்ச வேலையை ஏத்துக்கக் கிளம்பிப் போனேன்….அதுக்குள்ளேயும் நம்ம பழக்கம் உன் வீட்டுக்கு எப்டித் தெரிஞ்சிது? அந்த தனம் சொல்லியிருப்பாளோ? அவதானே ஒரு நாள் நம்ம நிழலைப் பார்த்தா? ரூமுக்குள்ள ஒதுங்கின நாம, கதவைச் சாத்த மறந்து போக, அதோட உயரத்துக்கு உறால்ல தெரிஞ்ச நம்ம நெருக்கத்தைக் கண்டுட்டு அவதான் சொல்லியிருப்பாளோ…? நீதான் உடனே ஓடிட்டியே…அதுதானே தப்பாப் போச்சு அன்னிக்கு….? அந்த வேலைக்காரி சொல்லலைன்னா நிச்சயம் யாருக்கும் தெரிஞ்சிருக்காதே…நீயும் காத்திட்டிருந்திருப்பே…நானும் ஓடி வந்திருப்பனே சீக்கிரம்….பாவி…எல்லாம் அவளால கெட்டுது….அவளே நேரடியா நம்மைக் கண்டிச்சிருந்தாக் கூடப் பரவால்லியே…போய்ப் போட்டுல்ல கொடுத்துட்டா…..

“இருக்கானா அவன்….ஒழுங்கா இருக்கச் சொல்லு…இப்ப எதுக்கு எந்தங்கை அட்ரசைக் கேட்கிறான்…?

அவன் கேட்கலடா …நாந்தான். அவனை எதுக்கு இழுக்கிறே?

ட்டே…விடாதடா…! உன்னைப் பத்தித் தெரியாதா? நீ அவனுக்குக் கொக்கில்ல…..உனக்கெதுக்கு…நீ இந்த சைடு….அவ இருக்கிறதோ மெட்ராசு…. தெரிஞ்சிட்டு என்ன பண்ணப் போற…அவளப்போயிப் பார்க்கிற ஜோலியெல்லாம் வச்சிக்காதே….

சும்மாத்தாம்ப்பா கேட்டேன்…ஸ்கூல்ல ஒண்ணாப் படிச்சமேன்னு …இஷ்டம்னா சொல்லு…இல்லன்னா விடு…அவ்வளவுதானே…..

தெரியுண்டா உன்னப்பத்தியும்…உடனே முறுக்கிக்கிறேல்ல…..இன்னம் அப்டியேதாண்டா இருக்கீங்க எல்லாரும்….எவனும் மாறல்ல…..கல்யாணம் பண்ணி, குழந்தைக பெத்து என்னடா பிரயோசனம்…?

இத்தன வருஷம் கழிச்சு இன்னைக்குத்தான் பார்த்திருக்கோம்…அதுவும் நம்ம ஊர் சாமி கோயில்ல வச்சி….நாம சந்திச்சி இன்னும் ஒரு மணி கூட ஆகல்ல…அதுக்குள்ள இப்டியெல்லாம் பேசுற…?

சாமி கும்பிட வந்தா அந்த வேலய மட்டும் பார்க்கணும்டா… இதென்ன விசாரிப்பு…..அதான் அவன் சொல்லி விட்டானான்னு கேட்டேன்….எனக்குத் தெரியாதா ஒங்க ரெண்டு பேரோட நெருக்கம்….அவுங்கம்மா செத்துப் போயிட்டதுனாலதான கோயிலுக்கு வரல… …அதுவும் தெரியும் எனக்கு… எப்டித் தெரியும்னு கேட்காதே…உன்கிட்ட சொல்லணும்ங்கிற அவசியமில்லே… அவுங்க தெய்வம்டா…அவுங்க கையால எத்தனை வாட்டி சாப்டிருப்பேன்…சோறு போட்டவங்களை மறக்க முடியுமா? அவுங்க பையன்ங்கிறதுனாலதான் இவன் தப்பிச்சான்….இல்லன்னா மாட்டுனான்……அன்னைக்கெல்லாம் எங்க வீட்டுல இருந்த கொந்தளிப்புக்கு…தெருவுல இழுத்துப் போட்டு மிதிச்சிருப்பேன் அவன….பிழைச்சுப் போனான்…இந்த வருஷம் வந்திருந்தான் அவன்தான் பலி ….இன்னைக்கும் எங்கியோ நடமாடிட்டிருக்கான்னா அதுக்கு எந்தங்கைதான் காரணமாக்கும்….அவ சொல்லுக்காகப் பிழைச்சான்…அவ்ளவுதான்…

நீ பேசுறது ரொம்ப ஓவர்டா…உன் மனசையே கேட்டுப்பாரு…அந்தளவுக்கு அவன் அப்டி என்னடா பண்ணினான்? ரொம்பத் தெறிக்கிறே? அவ்வளவுதான் சொல்வேன்…இவன் இதோடு முடித்துக் கொண்டான்.

அவன் பாஷையே நல்லால்லடா….. சொல்லப் போனா அவனல்லாம் கோயிலுக்குள்ளயே விடக்கூடாதுடா…. ….அந்தப் பேச்சுப் பேசுறாண்டா…தண்ணி போட்டுட்டு தெருவுல சளம்புறாண்டா…பார்க்கிறவங்க என்னன்னு நினைப்பாங்க… எல்லாரும் புதுமுகங்க…ஒருத்தன் கூடப் பழைய ஆளுங்க இல்ல…அத்தனையும் டெல்லி, பாம்பே, வெளிநாடுன்னு குடிபெயர்ந்தாச்சு…வீடுகல்லாம் பாழடைஞ்சு கெடக்கு. எவனும் இல்ல. அத்தனையும் பழைய கதை பேசிட்டு நிக்குது…கேட்கத்தான் ஆளில்லை. ஆனாலும் கோயில் விசேஷத்துக்குன்னு கூடியிருக்குறவங்க, பழைய ஆசாமிகதானே…? உருவம் மாறியிருக்கலாம். உள்ளம் அப்டியேதானே இருக்கும்? நாலுக்கு இரண்டாவது கவனிப்பான்ல…?

பாலுவையே உறுத்துப் பார்த்தான் மனோ.

என்ன ஏண்டா முறைக்கிற? என்றான் அவன்.

நீயே கதை விடுறியோன்னு தோணுது எனக்கு…அவன்ட்ட நயமாப் பேசி ஒரு அட்ரச வாங்கிட்டு வர முடில்ல உன்னால… என்னா ஆளுடா?எத்தனை வருஷம் பழகியிருக்க? அவனோட முரட்டு குணம் உனக்குத் தெரியாதா? அதுக்கேத்தா மாதிரிப் பேச மாட்டியா? எடுத்த எடுப்பிலயே அட்ரசக் குடுன்னா கேட்ப? அதான் மாட்டேன்ருக்கான்…அது என்னவோ கெடக்கட்டும்…கடைசியா சத்யா அட்ரசைக் கொடுத்தானா இல்லயா..? அத மொதச் சொல்லு…. –மனது அடித்துக் கொண்டது. எப்படியும் பாலகிருஷ்ணன் வாங்கி வந்திருப்பான் என்று ஒரு நம்பிக்கை. எப்பொழுதும் தன் செயலை உயர்த்திச் சொல்லிக் கொள்பவன் அவன். ரொம்பவும் சிரமப்பட்டு, உனக்காக இத்தனை பாடு என்பதுபோல் முன் வைப்பான்.

அதல்லாம் மாட்டன்னுட்டான். நல்லவேளைடா….உன் இருப்பிடத்தைக் கேட்கல அவன்….அத நினை….கேட்கத் தோணலியா…விரும்பலியா தெரில….அவ தாம்பரத்துக்கு அடுத்து இருக்கிற ஊர்லதான் இருக்கான்னு சொன்னமாதிரித்தான் இருந்தது.….அவ்வளவுதான்..அதுக்கும் மேலே எதுவும் பெயரலை அவங்கிட்ட…அதையும் கூட என்னவோ ஒரு வேகத்துல உளறிட்டான்…அதுனாலதான் சட்டுன்னு நிறுத்திக்கிட்டான்…அவன்ட்டப் போயி அதுக்கும்மேலே என்னத்தைக் கேட்குறது? .நீ மட்டும் எங்கூட வந்திருந்தேன்னு வச்சிக்க….உன்னை உண்டு இல்லன்னு பண்ணியிருப்பான் வந்திருந்த நாலு பேர் முன்னால ஊர் சிரிச்சிருக்கும் …இன்னும் அந்தக் கோபம் தணிஞ்ச மாதிரித் தெரில… …..மனசுல பழி வச்ச மாதிரி…

நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது மனோவிடமிருந்து. மனதுக்குள் பிடிவாதம் பிறந்தது. அடுத்த ஒரு மாதத்திற்குள் சத்யாவைப் பார்த்து முடிப்பது என்பதுதான் அது. அப்போதே முடிவெடுத்துவிட்டான். தாம்பரத்தை அடுத்த பகுதி. அது ஒன்று போதும். முதலில் இங்கே அலசுவோம். விடப்போவதில்லை. தேடிப் பார்ப்போம்…பலனில்லையென்றால் அடுத்த முயற்சி பிறகு.

ஐந்து விரல்களும் அப்படியே பதிந்த அந்தப் புசுபுசுக் கன்னம். அவன் யார் அப்படிச் செய்வதற்கு? எப்படி அந்தளவுக்கான உரிமையை அவனுக்கு வழங்கினார்கள்? கிறுக்கா அவர்களுக்கு? அவள் தாய் எப்படி அதனைப் பொறுத்தாள்? அப்படியென்ன சிறப்பு உரிமை அவனுக்கு? அந்தக் குடும்பத்தைத் தூக்கி நிறுத்துபவனா அவன்? வீட்டுக்கு தினமும் வந்து செல்பவனுக்கே அந்த அளவுக்கான சுதந்திரம் இருக்குமானால் அதுநாள் வரை அவளோடு பழகிய தனக்கு எந்தளவுக்கு உரிமை கிடைக்க வேண்டும். கிடைத்திருந்தால்தான் கதை வேறாகியிருக்குமே? இது நடக்கவே வாய்ப்பில்லையே? ஒரு மூன்றாமவன் அந்தக் குடும்பத்தோடு நெருங்க முடிவது எப்படி? அவள் அண்ணன் அந்த நபர் மீது வைக்கும் நம்பிக்கை ஏன் தன் மீது விழவில்லை அவனுக்கு? இத்தனைக்கும் இளம் பிராயம் முதல் ஒன்றாகப் பழகியவர்கள்தானே? ஒரே தெருவில், அடுத்தடுத்த வீடுகளில் வசித்தவர்கள்தானே? கொடுக்கல் வாங்கல்களோடு ஒட்டும் உறவுமாய் இருந்தவர்கள்தானே? ஏன் அப்படி ஒரு திடீர் பகை பிறந்தது? தவறு என்று உணரத் தலைப்பட்டால் நேரடியாய் கூப்பிட்டுக் கேட்டிருக்கலாமே? உடனே முடிந்து போயிருக்குமே? அது என்ன, அந்த அவன் அவளைக் கண்டிப்பதாய் மட்டும் விஷயம் முடிந்து போனது? அதோடு எப்படி அவர்கள் திருப்தி ஆனார்கள்? என்னை ஏன் அழைத்து எதுவும் கேட்கவில்லை? ஊருக்கே தெரிந்து போகும் என்கிற பயமோ? அவன் எப்படி அந்தக் குடும்பத்தோடு அவ்வளவு நெருங்கினான். நட்பு ரீதியில் உள்ளே நுழைந்தவன் இந்த அளவுக்கு ஒட்டுதல் ஆனது எப்படி?

நீ பேசாம இரு சத்யா….இது ரொம்ப அநியாயம். உன்னை அடிக்கிறதுக்கு அவன் யாரு? கண்டிக்கிறதுன்னா அதுக்கு ஒரு முறை இல்லையா? உங்க வீட்டுல உங்க அம்மா அண்ணனுக்கு மூளை இருக்கா இல்லையா? உங்க குடும்ப நண்பர்னா அதுக்கும் ஒரு அளவு இல்லையா? உங்க அம்மா எப்டி இதைப் பார்த்திட்டிருந்தாங்க…அவுங்க மனசு துடிக்கலையா? எப்படி இவ்வளவு உரிமை கிடைச்சது அந்தாளுக்கு? அவரென்ன உங்க குடும்பத்தைக் காப்பாத்துறாரா…? உங்கம்மாவே கூட உன்னை இப்டி அடிச்சிருந்தாப் பரவாயில்லையே….ஒரு மூணாமத்தவன் கை வைக்கிறதை பார்த்திட்டு நிக்கலாமா? உங்க அண்ணனுக்கு அறிவிருக்கா இல்லியா? அப்டி என்ன நெருக்கம் உங்கண்ணனுக்கும், அவனுக்கும்?

மனோ….தயவுசெஞ்சு நா சொல்றதக் கேளு ….இது உன் மேல விழ வேண்டிய அடி….நல்லாத் தெரிஞ்சிக்கோ….என்ன காரணத்தினாலயோ உடனே என்னை நோக்கிப் பாய்ஞ்சிடுச்சி…அவுங்க பேசின தொனியே வேற…அது சட்னு இப்டி திசை மாறி நின்னுடுச்சி…அவ்வளவுதான்…..அதுக்கும் காரணம் இல்லாம இல்லை….கொஞ்சம் நிதானமா யோசி…..உன் அப்பா, அம்மாவோட கௌரவந்தான் அதுக்கு முக்கியமான காரணம்னு எனக்குத் தோணுது…கௌரவம் ஜாதியைக் காப்பாத்துது….மதிப்பளிச்சு ஒதுங்க வைக்குது….மரியாதைகொடுத்துநிக்குது…….அதைஉணர்ந்துக்கோ.விட்டிடு…இதோடவிட்டிடு….மேற்கொண்டுவளர்க்காதே…அவ்வளவுதான்சொல்வேன்…வளர்த்தே… அப்றம் நா தற்கொலைதான் பண்ணிக்கணும்…….

சத்யா…நீ என்ன சொல்றே….?

ஆமா…அப்டித்தான்……இது அங்கதான் போய் நிற்கும், அப்டித்தான் முடியும் – அழுத்தமாய் விழுந்த வார்த்தைகள்.

துடித்துப் போனான் இவன். எத்தனை உணர்ந்து சொல்கிறாள்?

சந்தையை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தான் மனோ. எத்தனையோ பெண்களின் முகங்கள். அதில் அவனின் சத்யா இல்லை. நம்பிக்கையோடு வந்தாயிற்று. இன்றைய பொழுது இங்கேதான். எப்படியும் காணாமல் செல்வதில்லை. நினைத்துக் கொண்டே ரயில்வே கிராசிங்கைக் கடந்தான். நெடுகத் தெரிந்த நீண்ட சாலையில் கால் பதித்து நடக்க ஆரம்பித்தான். இருபுறமும் கடைகள். இடையிடையே வலதும் இடதுமாகப் பிரியும் பாதைகள். முதலில் எதுவரை இந்த ரோடு போகும் என்று நோக்கினான்., பிறகு வலது அல்லது இடது புறங்களை அலசுவோம் என்று தீர்மானித்துக் கொண்டான். நடந்துகொண்டே இருந்தபோது தூரத்தே ஒரு கோயில் தென்பட்டது. அந்தச் சாலை முட்டும் இடத்தில் கோயில் அமைந்திருந்தது. ஒவ்வொரு கடையின் வாயிலிலும் கூடை நிறையப் பூக்களை வைத்துக் கொண்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். தொடுக்கப்பட்ட பூக்கள் சற்றே வாட்டமாய்த் தெரிந்தது. விட்டு விட்டுத் தொடுக்கப்பட்டிருப்பதாய்த் தோன்றியது. மல்லிகையைச் செண்டுபோல் கோர்த்துக் கோர்த்து நெருக்கமாய்த் தொடுத்து, நூறே நூறு மட்டும் வாங்கி அவள் தலையில் வைத்தால் எத்தனை திருப்தி அவளுக்குத்தான். சந்தோஷம் பொங்குமே சத்யாவுக்கு.

வெறுமே அஞ்சு ரூபாதான்

இருக்கட்டுமே… என்னை நெனச்சித்தானே வாங்கினே…அதான் எனக்கு வேணும்…

இதெல்லாம் வாங்கிக் கொடுக்கணும்னு உனக்கு எப்படித் தோணுது? எனக்கு எப்பவுமே மல்லிகைதான் பிடிக்கும். கூடை நிறையக் கனகாம்பரம் இருந்தாலும், ஓரத்துல கொஞ்சம் மல்லி வச்சிருந்தாங்கன்னா அதைத்தான் வாங்குவேன். அந்தக் கொஞ்சம் கூடை மொத்தத்தையும் மணக்க வைக்கும். சமயங்கள்ல கனகாம்பரம் வாங்கினேன்னு வச்சிக்கோ…அதுல கூட மல்லி மணம்தான் இருக்கும்…ராத்திரி அவிழ்த்து வைக்காம தலைக்கு வச்சமேனிக்கே படுத்திருக்கைல அந்த மணம் தர்ற சுகம் இருக்கே…அது உன்னை ஞாபகப்படுத்தும்…என்னை மறந்து மனோ, மனோன்னு உளறிடுவேனோன்னு பயமாயிருக்கும். ஏன்னா பக்கத்துல அம்மா படுத்திருப்பாங்க…இதென்னடிபுதுப் பழக்கம்னு ஒரு நா அம்மா என்னைத் திட்டிட்டு சந்தேகத்தோட பார்த்தாங்க…மல்லியைப் பிடுங்கி வெளியே எறிஞ்சிட்டாங்க…புரிஞ்சிக்கிட்டாங்களோன்னு எனக்கு பயம்மாப் போச்சு…அம்மாவுக்கு எப்பவுமே எடுத்ததுக்கெல்லாம் சந்தேகம்தான். சமீப காலமா என் பேர்ல குறியா இருக்காங்க…ஏன்னு தெரில…அண்ணன் கூடவே வருமே அவர் ஃபெரெண்டு…அவர்கிட்ட அம்மா அத்தனை உரிமையோட பழகுறதும் எனக்குப் பிடிக்கல்லே…எதையோ மனசில வச்சிட்டே அனுமதிக்கிற மாதிரி இருக்குது…எங்கண்ணன் மாதிரி அவரும் ஒரு பிள்ளை போலத்தானே…எங்க வீட்டுக்கு ரொம்ப உதவி செய்யுறாருங்கிறதுக்காக அடுப்படிவரைக்கும் போற உரிமை எப்படி வந்திச்சுன்னுதான் தெரில…எந்தங்கை சாலா வேறே அவர் முன்னாடி போயி இளி இளின்னு இளிக்கிறா…அடிக்கடி தொட்டுத் தொட்டு வேறே பேசுறாரு…அது எனக்கு அறவே பிடிக்கலை…ஆனா சொல்ல முடில….ஒரு நா என் கன்னத்தைத் தட்டிப் பேசினாரு….அப்போ அம்மா பேசாமத்தான் இருந்தாங்க…நா முறைச்ச முறைல ஆள் பயந்திட்டான். என் தங்கை பழக்கந்தான் எனக்குப் பயமா இருக்கு… அன்னைக்கும் அம்மா பேசாமத்தான் இருக்காங்க…ஒரு வேளை அவனும் ஒரு பிள்ளைமாதிரிதானேன்னு நினைக்கிறாங்களோன்னு தோணுது…

அந்த சாலா என்ன ஆனாள்? அவளுக்குக் கல்யாணம் ஆயிற்றா? எங்கிருக்கிறாள் அவள்? எதுவுமே அறியப்படுவதற்கு முன்னால் இடம் பெயர்ந்தாயிற்று. அவர்களும்தானே ஊர் விட்டுப் போய்விட்டார்கள்?அம்மாவிடம் கேட்டபோது கூட தெரியாது என்றுவிட்டாளே? ஒரு வேளை அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்குமோ? ஏய்..மனோ….ஏய்…ஏய்… என்று ஒருமையில் எவ்வளவு குறும்பாகத் தெறித்து நிற்பாள் அந்த சாலா.

உங்க அப்பா அம்மாவைக் கூட்டிட்டுப் போய் உன் கூட வச்சிக்கப்போறே…உங்க குடும்பமே இடம் மாறுது…நாங்கதான் என்ன செய்யப் போறோம்னு தெரில…அப்பா சிதம்பரத்துல கோயிலே கதின்னு கிடக்கார். எப்பவாவது ஒரு நாளைக்கு வந்திட்டு எல்லார் கண்ணுலயும் படுறதுக்கு முன்னாடி கிளம்பிப் போயிடறார்…அவர் வருமானம் போதவேயில்லை எங்க குடும்பத்துக்கு…எல்லாம் எங்க அம்மாதான். அங்க இங்கன்னு கடன உடன வாங்கியும், பல வீட்டுல வேல செய்தும் எங்க குடும்பம் ஓடுது…எங்கப்பாட்ட எதையும் சொல்ல மாட்டாங்க அம்மா…அவரும் கேட்க மாட்டார். என்னால இவ்வளவுதான் முடியும்னுட்டுப் போயிடறார். பாதி நாள் கோயில் பிரசாதத்துலயே கழியுது என் பாடுங்கிறார். எப்பயாவது பணம் அனுப்புவார்…எதுக்குமே பத்தாது அது…அம்மா இத அனுப்பாட்டா என்னன்னு புலம்புவா…என்னவோ இருந்திட்டிருக்கோம் நாங்க…மனசுக்கு ஆறுதலா நீ இருந்தே…இப்போ நீயும் போறே…உன்னை நான் தடுக்க முடியுமா? உன் குடும்பம் உனக்கு…உனக்கும் பொறுப்பு இருக்கே…உன் தங்கைகளை நீ கரையேத்த வேண்டாமா…அப்பிடியிருக்கிறப்போ நாம பழகினத எப்டி வாய்விட்டுச் சொல்ல முடியும்? எல்லாருக்கும் முந்தி எனக்குக் கல்யாணத்த முடின்னு சொல்றது நியாயமா இருக்குமா? அது பொறுப்பான செயலாகுமா? உன்னை நான் வற்புறுத்த மாட்டேன்…காலம் கனிஞ்சு வந்தா வரட்டும்…இல்லன்னா இல்லதான்…என்னைத் தயவுசெய்து மறந்திடாதே….அத மட்டும்தான் நா சொல்வேன்…கூடிய மட்டும் காலத்தைத் தாழ்த்தி உனக்காக நான் காத்திருப்பேன்…அந்த உறுதிய மட்டும்தான் நான் உனக்குத் தர முடியும்…என்னை மறக்காம நீ இருந்து, நாம ஒண்ணு சேர்றது நடந்தா நடக்கட்டும்…இல்லன்னா என்ன செய்ய முடியும்? எங்க வீட்ல அவசர முடிவு எதுவும் எடுத்தாங்கன்னா என்னால ஒண்ணும் செய்ய முடியாது. ஆனா ஒண்ணு…உன் நினைவோடவே நான் இருப்பேன்….அதை யாராலும் அழிக்க முடியாது. அந்த நெனப்பு உனக்கு இருந்தா சரி….

காலம் தன்னை எப்படிப் புரட்டிப் போட்டு விட்டது? எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்து விட்டதே? வாழ்நாள் பூராவும் வறுமையிலேயே உழன்று உழன்று மருகிப் போனதனால் வந்த முடிவுதானே என் முடிவு? தாய் தந்தையரின் ஓயாத ஒழியாத உழைப்பையும், கஷ்டத்தையும் கண்டு உருகித்தானே முடிவை மாற்றிக் கொண்டது. அப்பப்பா…போதுமைய்யா…இனி மனிதனால் பொருளாதாரக் கஷ்டம் படவே முடியாது….அஞ்சுக்கும் பத்துக்கும் ஆலாய்ப் பறந்தது போதும்…கடன், கடன் என்று அரிசிக்கும், பருப்புக்கும், அன்றாட உபயோகத்தின் ஒவ்வொரு பொருளுக்கும் கையில் பையைத் தூக்கிக் கொண்டு அலைந்து, வாயிழந்து, விரட்டப்பட்டு, வெறுமே திரும்பி அவமானப்பட்டது போதும். இந்த வாழ்க்கையின் ஆதாரம் நிதி. அதுதானே இந்தப் பாடு படுத்துகிறது நம்மை. அதை எப்படியும் நிரம்ப சம்பாதித்தாக வேண்டும். போதும் போதும் என்கிற அளவுக்குச் சேர்த்தாக வேண்டும். நாலு பேருக்குக் கொடுக்கும் அளவுக்கு உயர்ந்தாக வேண்டும். எவனிடமும் போய் எதற்கும் நிற்காத தலை நிமிர்ந்த நிலை வேண்டும். அதுவரை ஓய்வில்லை, ஒழிவில்லை. அது ஒன்றுதான் குறி. அது ஒன்றுதான் இலக்கு. முடிவில்லாத இலக்கு. முற்றுப் புள்ளி இடாத இலக்கு. காலம் என்னைப் பார்த்துச் சிரித்தது போக காலத்தைப் பார்த்து நான் சிரிக்க வேண்டும். என் தாய் தந்தையரை உயரே அமர்த்தி போஷிக்க வேண்டும். நான் உழைத்து வெற்றி கண்ட வாழ்க்கையை என் செல்வங்கள் மூலம் காணுங்கள் என்று அவர்கள் உலகுக்குப் பறைசாற்ற வேண்டும். இதுவே இனி என் லட்சியம்…என் வெற்றி….அதுவரை ஓய்வில்லை…ஒழிவில்லை….பிற எந்த இன்பங்களிலும் நாட்டம் கொள்வதில்லை. வெற்றிப்படியை மிதித்த பின்தான் வேறு எண்ணங்கள்….

எப்படி வெறி கொள்ளச் செய்து விட்டது? அது தன்னின் தவறா? வாழ்க்கையை வெற்றி கொள்ளப் போராடியது குற்றமா? எதுவும் குற்றமில்லை. ஆனால் அந்த ஆழத்தில் அமிழ்ந்து போய் அவளை அடியோடு மறந்து போனதுதான் மன்னிக்க முடியாத குற்றம். பணத்தை மையமாக வைத்து எங்கெல்லாம் செயல்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் தவறுகள் சகஜம் என்பது உண்மைதானோ? இதுவும் மனசாட்சியை மறந்த தவறுதானே? வாழ்க்கையின் ஒரு காரணியான அது தன் பின்னே வருவதற்குப் பதிலாக தனக்கு வழிகாட்ட ஆரம்பித்துத் தன்னைச் சிதிலப்படுத்தி விட்டதோ? பாடு பட்டு வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் மகிழ்ச்சிக்காக, நிம்மதிக்காக, அவர்களின் கடைசிக்காலம் ஆனந்தமாய்க் கழிய வேண்டுமென்பதற்காக, அம்மாவின் பால்ய காலப் பழக்கம் தந்த வாக்குறுதியைக் காப்பதற்காக, அத்தை மகள் சுகன்யாவை மணந்து என் பிரியமான சத்யாவைத் துறந்து விட்டேனே…? என்னையே நம்பியிருந்த அவளை என்னவாயிற்று என்று ஒரு பொருட்டாக மதிக்கக் கூட அல்லாமல் கை விட்டு விட்டேனே? இந்தப் பாபத்திற்கு எனக்கு மன்னிப்பு ஏது? இன்று எந்த முகத்தோடு அவளைக் காண இப்படி அலைகின்றேன்?

கையில் கிடைத்தது தங்கவில்லை என்பதற்காகவா? மகனின் வாழ்வு ஆரம்பிக்கும் முன் கருகிவிட்டதுபோல் ஆகிவிட்டதே? என்று மருகி மருகித் தன் இன்னுயிரைத் துறந்தாளே என் தாய்…! அவளை இருத்தி மகிழ்விக்க இல்லாது போனாளே…! என் சத்யாவைப்பற்றிச் சொல்லியிருந்தால் முதலிலேயே ஏற்றிருப்பாளோ? அல்லது இப்பொழுதாவது வாய் திறந்திருந்தால் மகிழ்ந்திருப்பாளோ? எதுவுமே கிட்டாமல் போயிற்றே எனக்கு? வாழ்க்கையே வெறுத்து, இனி நான் இப்படித்தான் இருந்தாக வேண்டும் அதுதான் எனக்கான தண்டனை என்று எனக்கு நானே வரித்துக் கொண்டு கழிக்கிறேனே…இப்பொழுது மட்டும் எந்த முகத்தோடு அவளைப் பார்க்க இப்படி வந்து கொண்டிருக்கிறேன்? மனதின் எந்த மூலையில் தோன்றிய மறுஆசை இது? வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்ள மன அவசங்கள் போடும் நாடகமா இது?

கோயிலைத் தாண்டிய பின் புறத் தெருவில் நுழைந்த கணத்தில் அந்தக் குறிப்பிட்ட வீட்டின் முன் அவனையறியாமல் கால்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன? யார் அது? என் சத்யாவா? அவளைக் கண்டுபிடித்து விட்டேனா? உறுதிபடப் புறப்பட்டு வந்ததுபோல அவள் கிடைத்து விடுகிறாளா? காலம் எனக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றதா? என் சத்யா என் கண்ணில் மீண்டும் படுவது எனக்காகத்தானா?

அதென்ன உன் சத்யா? அப்படிச் சொல்லிக் கொள்ள உனக்கு ஏது உரிமை? அதற்கான தகுதி உனக்கு உண்டு என்று உன் பாழும் மனது சொல்கிறதா? அப்படிச் சொன்னால் அது சரியா? நீதான் உன் மனதுக்கே துரோகம் செய்தவனாயிற்றே? உன் எண்ணங்களுக்குத் தூயவனாய் என்றேனும் நீ இருந்திருக்கிறாயா?

மின்னல் கொடியாய் ஒடிந்து விழுவதுபோல் மெலிந்து நசிந்து நிற்கும் ஒரு பெண்ணின் தோற்றம். யார் அது? நினைத்தபடியே சத்யாதானா? அவளா இது? அவள்தான் இது என்பதற்கு இன்று எதை அடையாளமாகச் சொல்வது? என் மனது இந்தக் கணத்தில் இப்படி நினைக்கிறதே அந்த மன ஓவியத்தை சாட்சியாக வைத்துச் சொல்கிறேனா? அவள்தானா இது? நம்ப மறுக்கிறதே…! புரட்டிப் போட்ட வாழ்க்கையில் ஒருத்தி இப்படியா நசிந்து போவாள்? கலைந்த ஓவியத்தின் கலங்கலான மங்கிய காட்சியாகத் தென்படுகிறாளே? இறைவா… இப்படி அவளைக் காணுவதற்கா இத்தனை பிரயத்தனப்பட்டு வந்தேன்? என்ன ஒரு அமைதி அந்தக் கண்களில்? என்ன ஒரு நிச்சலனமான புன்னகை?

என்ன அதிசயம் இன்றைக்கு? மனோவையா நான் பார்க்கிறேன்? இத்தனை காலம் கழிச்சி உன்னைப் பார்க்கிறதுக்குக் கூடக் கடவுள் எனக்கு வாய்ப்பளிக்கிறானா…? உண்மையிலேயே இந்த அதிசயம் இன்னைக்கு நடந்துடுத்தா? என் கண்களையே என்னால நம்ப முடியலையே? வா உள்ளே…சும்மா வா….எதுக்குத் தயங்குறே? வா…வா…எல்லாம் தாண்டி வந்தாச்சு…இனிமே என்ன பயம்? எதுக்குத் தயக்கம்? வீட்டுக்குள்ள வா…

தயங்கித் தயங்கி அடியெடுத்து வைத்து நடு உறாலுக்குள் நுழைகிறேன். நாற்காலியை இழுத்துப் போட்டு உட்காரு…இதோ வந்திடறேன்…என்றுவிட்டு உள்ளே போகிறாள். ஒரு நிமிடம் கூட அவளை முழுவதுமாய்த் தரிசிக்கவில்லை. அதற்குள் மறைந்து விட்டாள் என் சத்யா. நான் அவளின் வாழுமிடத்திலே தனித்து விடப்பட்டேன் அந்தக் கணத்தில்.

அங்கே, நேர் எதிராய், தொலைபேசி வைக்கப்பட்டிருந்த அந்த மேஜையில் அது…! உற்று நோக்குகிறேன் அதை…! சற்றே நெருங்கிப் பார்க்கையில்தான் தெரிய ஆரம்பிக்கிறது. அவளும் அந்த அவனும். ஒரு கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில்.. அந்த முகத்தில் படர்ந்திருக்கும் பரந்த அகலமான பளீர்ச் சிரிப்பு. எதையோ வெற்றி கொண்டதுபோலான ஒரு தோற்றப் பொலிவு. அதைச் சிறிதும் ஏற்காத வகையில் அருகில் அவளின் அமைதியை அறிவிக்காத கலங்கிய முகம். அது அந்த அவன்.. அவள் குடும்பத்தால் உரிமையோடு ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த மூன்றாமவன். சத்யாவால் சட்டென்று நிராகரிக்கப்பட்ட மூன்றாமவன். இப்பொழுது அவளோடு ஒன்றானவன். ஒன்றாகி நிற்பவன்.

அவள் சொன்னாள். பார்த்தியா இதை? யாருன்னு தெரியுதா?- விரக்தியான புன்னகைதான் சத்யாவின் உதட்டில். காலம் கசந்துபோனதின் அடையாளம். கசப்பு ஜீரணிக்கப்பட்டுவிட்டதின் தெறிப்பு. நிரந்தரமாய் முகத்தில் படிந்துவிட்ட அடையாளக் கோடுகள் அமைந்த வாழ்க்கையின் வரைபடமாய்.கண் சிமிட்டாமல் வெறித்து நோக்கியவனாய் அசையாமல் இருந்தான் இவன். .

தெரில?.உனக்குத்தெரிஞ்சவர்தான்.ரொம்பவருஷமாச்சே…மறந்திருப்பே…. இவர்தான் இப்போ என்னை இங்கே வச்சிக்கிட்டிருக்கிறவர்….நல்லா உற்றுப் பாரு, யாருன்னு புரியும்…..- அவள் உதட்டில் நெளிவது குறும்பா, விரக்தியா….? இல்லை வேதனையா?

உறைந்து போனவனாய் பேச வார்த்தைகள் வராமல் அமர்ந்திருந்தான் மனோ. தொண்டையில் என்னவோ அடைக்கிறது அவனுக்கு. கண்கள் மெல்லக் குளம் கட்டத் தொடங்குகின்றன. எச்சிலை விழுங்கி, பற்களை இறுக்கி, நிறுத்திக் கொள்ள முயல்கிறான். என்ன சொல்கிறாள் இவள்? இந்தப் பேச்சின் பொருள்தான் என்ன? எதற்காக இப்படிச் சொல்கிறாள்?

அந்த நேரத்திய எதிர்பாராத அவனின் வருகைக்கான மன நிறைவோடு, நேர் எதிரில் அமர்ந்தவளாய், கண்களில் சற்றும் குறையாத அதே பழைய அன்பு ஊற்றெடுக்க, புடவைத்தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டு,ஏதோவொரு துக்கத்தைக் கட்டுப்படுத்தியவள்போல், அவனிடமிருந்து வெளிப்படவிருக்கும் அடுத்த வார்த்தைகளுக்காகக் காத்திருக்கலானாள் சத்யா.

Print Friendly, PDF & Email

1 thought on “சத்யாவைத் தேடி…!

  1. அண்ணா.
    காலம் கடந்து என் கண்ணத்தில் வழியும் இந்த கண்ணீர் .வழிந்தோடிய என் வாழ்வின் வழித்தடப்பயணங்களுக்கு உயிர் கொடுத்தது. இதுவரை நான் சேமித்து கிடத்தி தாழ்த்தி வைத்தத என் கண்ணீரின் பலம் என் கருவிழி அணையை உடைத்தெறிந்தது. ஆம் நானும் உன் கதையின் கதாநாயகன் தான் அவனுக்கும் எனக்கும் ஒரு வித்யாசம் அவன் சத்யா நிஜத்தை கண்டுபிடித்துவிட்டான். நான் என் நிழழோடு நடித்துக்கொள்கிறேன் தெரியாதது போல். சுய வார்த்தையை பகிர்கிறேன் முதல் முறை உன் வார்த்தை என் வலிகளுக்கு உயிர் காற்று கொடுத்தால் கண்ணீரோடு அண்ணா .
    ‌‌‌‌. நன்றி. ராஜேஷ் தர்மர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *