சதுரங்க சூட்சுமம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 24, 2019
பார்வையிட்டோர்: 17,335 
 

(இதற்கு முந்தைய ‘நட்பதிகாரம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது)

அந்த உணர்வுத் தளும்பலில் பொல பொலவென்று இனிய மழைத் துளிகளும் விழுந்தது போலிருந்தது – சற்று தூரத்தில் அவனுக்கு முன்னால் தாழம்பூ வர்ணப் புடவையில் கவிதா போய்க் கொண்டிருந்ததைப் பார்த்ததும். அவள் தன்னைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை குமரேசனுள் உதித்தது. ஆனால் அவளைத் தாண்டிச் செல்லாமல், ஆசிரியரை தாண்டிச் செல்லப் பயப்படுகிற மாணவன் போல கவிதாவின் பின்னால் மிக மெதுவாக நடந்து கொண்டிருந்தான். யதேச்சையாக கவிதா திரும்பிப் பார்க்க மாட்டாளா என்று ஆசைப்பட்டான்!

அவனுடைய மார்புக்குள் மிகப் புதியதாக ஒரு காற்று வீசியது. கவிதா பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்து போவது போலில்லாமல்; அவனுடைய வாழ்க்கையை நோக்கியே நகர்ந்து வருவது போலிருந்தது. அவளுக்குத் தெரியாமல் சாலையைக் கடந்தான். அவளுக்காகத் தான் சாலையைக் கடந்து ஓடி வந்து நிற்கிற சாயல் கொஞ்சம்கூட இல்லாத வெறும் இயல்பில், ஆபீஸ் போக பஸ்ஸ்டாப்பில் நிற்கிற பாவனையில் எங்கேயோ சற்றும் முற்றும் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். கவிதா வருவதெல்லாம் அவனுக்குத் தெரியாதாம்! பஸ் வருகிறதா என்றுதான் கர்ம சிரத்தையாய் அடிக்கடி வாட்சையே பார்த்துக் கொண்டிருக்கிறானாம்…

குமரேசனைத் தவிர, தாற்காலிகமாக வேறு யாருமே இல்லாத அந்த பஸ் ஸ்டாப்பில் வானவில் வெளிச்சம் அவனுக்கு அருகிலேயே வந்துவிட்டது! ஹலோவென்று ஆச்சர்யப்பட்டது! நட்புடன் புன்முறுவல் பூத்தது! குமரேசனுக்கு அந்தக் காலை ஒன்பதரை மணியுடன் ஜென்மமே சாபல்யமடைந்து விட்டது…!

“மிஸ்டர் குமரேசன், யாருக்காவது காத்துக்கிட்டிருக்கீங்களா?”

ஷர்ட்டின் பட்டனைத் திருகிக்கொண்டே, “நோ மேடம், பஸ்ஸுக்காகத்தான் வெயிட் பண்றேன்.”

இதைச் சொல்வதற்குக்கூட நாக்கு குழறியது. கை விரல்களும் லேசாக நடுங்கின.

“சும்மா சொல்லாதீங்க, யாரையோ பாக்கிறதுக்கு பஸ்ஸை மிஸ் பண்ணிட்டு நிக்கறீங்க…”

“நோ நோ அப்படியெல்லாம் கிடையாது மேடம்.” அவசரமாகச் சொன்னான்.

“ஸோ வாட்? ஏன் இதுக்குப்போய் வெட்கப் படறீங்க? உங்களோட கேர்ள் பிரண்ட் வந்தா நானும்தான் பாத்துக்கறேனே..” கவிதா சிரித்தாள்.

அப்போது பஸ் வந்தது. முதலில் கவிதா பஸ்ஸில் ஏறிக்கொள்வதற்காக, சற்றுத் தாமதித்தான் குமரேசன்.

“பரவாயில்லை, வெயிட் பண்ணி பாத்துப் பேசிட்டு அடுத்த பஸ்ல வாங்க. பர்மிஷன் தரேன்.”

சிரித்துக்கொண்டே கவிதா தான் மட்டும் நடந்துபோய் பஸ்ஸில் ஏறிக் கொண்டாள். அதற்குமேல் அந்த பஸ்ஸில் ஏறிக்கொள்ள குமரேசனுக்குத் திராணியில்லை. தர்மசங்கடத்துடன், நடுவீதியில் நிற்பது போன்ற உணர்வில் அவள் சென்ற பஸ்ஸை பார்த்தபடியே நின்றான். வானவில் மறைந்து வெயில் சுள்ளென்று முதுகைத் தாக்கியது…

அவனைச் சோதனைக்கு உள்ளாக்குவது போல அடுத்த பஸ் பத்து நிமிடங்கள் கழித்தே வந்து குமரேசனை எரிச்சலடைய வைத்தது. ஐந்து நிமிடம் தாமதமாகத்தான் ஆபீஸ் போய்ச்சேர முடிந்தது. தன்னுடைய ஸீட்டில் படபடப்புடன் உட்கார்ந்துகொண்டான். கவிதாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட அவனுக்குத் தைரியமில்லை. துல்லியமாக வகிடு தெரியும்படி குனிந்து லேப்டாப்பில் தீவிரமாக ஆழ்ந்திருந்தாள் கவிதா. குமரேசனும் தன்னுடைய லேப்டாப்பைத் திறந்து வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் அவனது மனம் குறுகுறுத்துக்கொண்டே இருந்தது.

கவிதா தன்னிடம் கல்மிஷமே இல்லாமல் விளையாட்டாகத்தான் அப்படிப் பேசினாளா? இல்லை, நெஞ்சுக்குள் ஒரு பாஸ் என்கிற விஷமத்தனத்தை ஜாக்கிரதையாக மறைத்து வைத்திருக்கிறாளா என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அவளுடைய முகத்தைப் பார்த்தால் நிச்சயம் எந்த ஒரு விஷமமும் அவள் மனதில் இருக்க முடியாது என்றுதான் தோன்றியது. இருந்தாலும் அதை எப்படி நிச்சயித்துக் கொள்வது; யாரைக்கேட்டு கவிதாவின் சுபாவத்தைச் சரியாக அறிந்துகொள்வது என்று ஒரேயடியாகக் குழம்பினான். ஆபீஸில் பணி புரியும் யாரிடமும் அவனுக்கு ஆழமான நட்பு கிடையாது. நட்பு இருந்தாலாவது மெதுவாக விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம்.

மதிய சாப்பாட்டுக்கு எழுந்து கொள்கிறபோது, “என்ன பாத்துப் பேசியாச்சா?” என்று அவனை மிகவும் சாதாரணமாகக் கேட்டாள் கவிதா. அவள் அப்படிக் கேட்டது அவனை ஒரு இடிபோலத் தாக்கியது! வாழ்க்கையில் தனக்குப் பெண் சினேகிதியே இல்லையென்ற விசித்திரமான சுய இரக்கத்துடன் குமரேசன் கேன்டீனை நோக்கி நடந்தான். எப்பொழுதும் சாப்பாடு கொண்டு வந்துவிடும் மல்லாரிராவ் அன்று அவனுடன் சேர்ந்து கொண்டார்.

“என்ன மிஸ்டர் மல்லாரிராவ், வீட்ல இருந்து இன்னிக்குச் சாப்பாடு எடுத்திட்டு வரலையா?” சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டான்.

“ஒரே சண்டை ரெண்டு நாளா. சாப்பாடு கிடையாதுன்னு இன்னிக்கி ஸ்டிரைக் பண்ணிட்டா ஆத்துக்காரி. வெளில சொன்னா வெட்கக்கேடு. உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?”

“இன்னும் இல்லை.”

“நான் சொல்றேன்னு வித்தியாசமா நெனைச்சிக்காதீர்! ஒலகத்துல ஆம்பளையா பொறக்கவே கூடாது. தப்பித் தவறி பொறந்துட்டாலும் கல்யாணம் மட்டும் செஞ்சுக்கவேபடாது. அதுக்குமேல என்னைக் கேக்காதீர்.”

குமரேசன் அதற்குமேல் கேட்கவில்லை. பேச்சுவாக்கில் அவரிடம் கவிதா பற்றி ஏதாவது கேட்டுப் பார்க்கலாமா என்று நினைத்துக் கொண்டிருந்த நினைப்பையும் கைவிட்டு விட்டான்.

மதிய நேர உணவிற்குப் பின் வெகுநேரம் கவிதா தன்னுடைய சீட்டிற்குத் திரும்பவில்லை. எம்டியின் அறையில் முக்கிய மீட்டிங்கில் இருந்தாள். நான்கு மணிக்குமேல் திரும்பிய அவள் தன்னுடைய பொருட்களைச் சேகரித்துக் கொள்ளத்தான் வந்தாள். பெரும்பாலும் மாலை அவள் கம்பெனி காரிலேயே திரும்புகிறாள். காரில் கிளம்பி ஹாஸ்டலுக்குத திரும்புவதற்காக வேகமாக அவள் தன் ஸீட்டிற்கு வந்து கொண்டிருக்கையில், அவளுடைய டேபிளில் இருந்த டெலிபோன் ஒலித்தது. சிறிது தள்ளி இருந்த எமல்டா எழுந்துபோய் ரிஸீவரை எடுத்து ஹலோ என்றவள், “மிஸ்டர் குமரேசன் உங்களுக்குத்தான் போன்..” என்றாள்.

தனக்கு யார் போன் செய்கிறார்கள் என்ற ஆச்சர்யத்துடன் ரிஸீவரை வாங்கினான்.

“டேய் நான் சிவா.”

“என்ன திடீர்னு போன்?”

“சும்மா தோனுச்சு. அதுசரி முதலில் போன் எடுத்தது யாரு…சூப்பர்ஸ்டாரா?”

“இல்லை.”

“ஏய் பொய் சொல்லாத.”

“நோ நோ நிஜமா.”

“அப்ப யாரு அது? பொண்ணுதானே அது?”

“ஆமா.”

“ஏண்டா பதில் சொல்றதுக்குக்கூட பயந்து சாகிறே? ஏதாவது விசேஷம் உண்டா ஆலீஸ்ல?”

“ஈவ்னிங் சொல்றேன்.”

அப்போது கவிதா வேகமாய் உள்ளே நுழைந்து அவனருகே வந்துவிட்டாள்.

“ஈவ்னிங் நேரா ரூமுக்கு வராதே. மெரினாவிலே காந்தி சிலை பக்கத்ல மீட் பண்ணுவோம்…”

“ஓயெஸ் மீட் பண்றேன்… வச்சிடட்டுமா?”

ரிஸீவரை மரியாதையுடன் வைத்தான். தன் பொருட்களைச் சேகரித்துக்கொண்ட கவிதா, கிளம்பும் முன் மெல்லிய குரலில் குமரேசனிடம், “வெரி குட். க்வீன் மேரிஸ் எதிர்லேயா? நானும் ஒரு நாளைக்குப் பார்க்காமலா போகப்போறேன் அந்த அழகி யார்னு?”

குமரேசன் தர்ம சங்கடமான பிரமிப்புடன் நாற்காலியில் சாய்ந்தான். தனக்கு ஒரு சினேகிதி இருப்பதாக கவிதா தீர்மானமே செய்துவிட்டாள். மனத்திற்குள் அவனுக்கு சிரிப்புதான் வந்தது. ‘எனக்கு என்ன வேறு வேலை இல்லையா? மெட்ராஸ் வந்ததும் கேர்ள் ப்ரென்ட் வைத்துக் கொள்வதுதான் என்னுடைய வேலையா?’ என்றெல்லாம் தனக்குள் அசட்டுத் தனமாக வினவிச் சிரித்துக்கொண்டான். ஆனால் கவிதாவைப் போன்ற ஒரு நிகரற்ற பெண்ணை சந்திப்பதே பெரிய அதிர்ஷ்டம். உடனே உணர்ச்சிவசப்பட்டு, ஏன் தனக்கான அந்த நிகரற்ற பெண் கவிதாவாகவே இருக்கட்டுமே என்று பிரார்த்தித்தான். ஒருவேளை அது கவிதாவாக இல்லாவிட்டால்? சில நிமிஷங்கள் வெறுமையாக இருந்தவன், அதற்காக இப்போவே தான் கவலைப்பட ஆரம்பிக்க வேண்டாமென்று அந்தக் கவலையை ஒத்தி வைத்தான். இப்போதைய உடனடிக் கவலை கவிதா அவனுக்கு ஒரு சினேகிதி இருப்பதாக நினைப்பதுதான்! இதை எப்படி எதிர் நோக்குவது என்பது பெரிய பிரச்னையாகிவிட்டது போலிருந்தது அவனுக்கு. பிரச்சினையாய் நினைப்பதே பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தப் போகிறதென்று அப்போது குமரேசனுக்குத் தெரியவில்லை.

பிரபஞ்ச சதுரங்கத்தில் காய்களுக்குச் சுதந்திரம் இல்லை; உரிமை இல்லை; பாதுகாப்பு இல்லை; தனியானதோர் வாழ்க்கை இல்லை. எல்லாக் காய்களுமே ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்டுவிட்ட, விதிக்கப் பட்டுவிட்ட கதியில்தான் செலுத்தப் படுகின்றன; வீழ்த்தப் படுகின்றன; நிலை நிறுத்தப் படுகின்றன… வேறு வேறான கால கட்டங்களில்

இந்தக் கட்டத்தில் மிக மிக நுட்பமாக கவிதா – குமரேசன் என்ற காய்களை சூட்சமமான விதியென்னும் மஹாசக்தி ஆச்சரியமான கணிதத்துடன் நகர்த்திவிட்டது. முடிவில் வெற்றி தோல்வி என்ற ஒருதலை உணர்வு தோன்றவே செய்யும். ஆனால் இடையில் நிகழும் ஆட்டம் சுவாரஸ்யமானதும், நிகரற்றமானதும் அல்லவா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *