கென்னியா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 1, 2022
பார்வையிட்டோர்: 10,502 
 
 

கிறிஸ்தீனா, வீட்டின் கதவைத் திறக்கிற சத்தத்தைக் கேட்வுடனேயே ,தனது இருப்பிடத்திலிருந்து தன் கழுத்தில் கட்டப்பட்ட மணி இசைக்க பெருமகிழ்ச்சியில் ஒருவகையாகக் குலைத்தபடி ஒடி வருகிறாள் கென்னியா.தன் கையில் இருந்த பைகளை வைத்துவிட்டு அவளது நீண்ட காதுகளிடையே தனது கைகளை கோர்த்துத் தடவியபடி அவள் நெற்றிப்பகுதியில் முத்தமிட்டபோது மனதில் ஒருவகையான குளிர்ச்சி பரவுவதை உணருகிறாள் கிறிஸ்தீனா.

கென்னியா சலுக்கி வகையைச் சேர்ந்த பெண் நாய்.

கிறிஸ்தீனாவின் சுற்றுலாத்தளம் எப்பொழுதும் ஆபிரிக்காவாகவே இருக்கும். அப்படி லிபியாவுக்குப்போன போதே இந்த வகை நாயைக் கண்டு காதல் கொண்டாள்.

வேட்டையில் கிறிஸ்தீனாவுக்கு அளவிடமுடியாத ஆர்வம் இருந்தது, தனது வீட்டில் அழகுப் பொருட்களாக அவள் வைத்திருப்பவை பதப்படுத்தப்பட்டு முழு உருவில் அமைந்த விலங்குகளே. புலியின் தலையோடு கூடிய தரை விரிப்பு ,சிறு நரி , ஆமை ,மீன் என மியூசியத்தில் இருக்க வேண்டியவைகளே அவள் வரவேற்பறையையும்,படுக்கையறையையும் நிறைத்திருக்கும். அவளுக்கு குதிரையேற்றத்திலும் நல்ல தேர்ச்சி இருந்தது. குதிரையின் லாடங்களை வீட்டில் வைத்திருந்தால் அதிஷ்டமாம் .அதனாலோ என்னமோ வீட்டின் பல பாகங்களிலும் லாடங்கள் கொழுவப்பட்டிருந்தன.

வேட்டையாடுபவர்களோடு இணைந்து பல தடவைகள் ஆபிரிக்க நாடுகளுக்கு வேட்டையாடக் கிறிஸ்தீனா சென்றிருக்கிறாள். அப்படி மூன்று வருடங்களுக்கு முன்பு லிபியாவுக்கு சென்றுவிட்டு இத்தாலிக்குத் திரும்பியவுடன் முதல் வேலையாக நாய்கள் விற்கும் இடத்துக்குச் சென்று 2000 யூரோக்களைச் செலவிட்டு ஆறு மாதக் குட்டியாக வாங்கி வந்த நாய்தான் கென்னியா. வேட்டை நாயானதால் அதன் டி என் எ யிலேயே வேகமும் குரோதமும் கூடியே கிடந்தன. அதனை வீட்டு நாயாக்குவதற்காக் நாய்களைப் பழக்கும் வகுப்புக்கு அனுப்ப வேண்டியிருந்தது. வகுப்புக்கு போன பின் தன் மூளையில் இருந்த வேட்டைக்கான குண நலங்களான கோபத்தையும் ஆக்கிரோசத்தையும் களற்றி வைத்து விட்டது போல கிறிஸ்தினாவின் கட்டளைக்கு அடங்கி ஒடுங்கி இருக்கிறாள் கென்னியா. இப்பொழுது அவளிடம் கிறிஸ்தினாமீது அன்பும் நன்றியுமே நிரம்பி வழிவாதாக எண்ணத்தோன்றுகிறது. ஆனாலும் இன்றும் கிறிஸ்தீனா கைகாட்டும் எதிரியிடம் தன் பலத்தை முழுவதும் பிரயோகிக்குமானால் எதிரி மரணத்தின் வாசலைத் தொடுவதென்னவோ நிச்சயம் தான்.

நாயைக் கொஞ்சியபடி தனது படுக்கையறைக்கு வந்தாள். கிறிஸ்தீனா. படுக்கை இன்னும் ஒழுங்குபண்ணப்படாமல் அலங்கோலமாகக் கிடந்தது.படுக்கையின் விளிம்பில் நாய் படுப்பதற்காக விரிக்கப்பட்ட துணியில் நாய் மயிர்கள் ஒட்டிக்கொண்டிருந்தன.

கிறிஸ்தீனா மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறாள் என்பதை வெளிப்படுத்துவதாய் நேற்று இரவு அவள் புகைத்துத்தள்ளிய சிகரட் கட்டைகள் கட்டிலுக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த ஆஸ்ரேயில் வழிந்து கொண்டிருந்ததன. உடை மாற்றுவதற்கு அலுமாரியை திறந்த போது ஒழுங்கின்றி அடைந்து வைக்கப்பட்ட உடைகள் சில வழுவி அலுமாரியிலிருந்து கீழே விழுகின்றன.அதில் மார்க்கோவின் ஜீன்ஸ் ஒன்றும் விழுந்திருந்தது கிறிஸ்தீனாவின் கண்களில் படுகிறது.

நேற்று மார்க்கோ அவளோடான தனது உறவை முறித்துக்கொண்டு தனது உடைமைகள் அனைத்தையும் எடுத்துச் சென்ற போதும் இந்த ஜீன்சை மட்டும் மறந்து விட்டுச் சென்றிருக்கிறான்.

ஒரு வருடத்துக்கு முன்னர் கிறிஸ்தீனாவின் தாய் மரியா இறந்துபோனா. கிறிஸ்தீனாவும் மரியாவும் ஒரே அப்பாற்மென்றில் இரு வீடுகளில் வாழ்து வந்தார்கள். ஆயினும் கிறிஸ்தீனாவுக்கு சாப்பாடு கொடுத்து அவளது இதர வேலைகளில் கைகொடுத்து தன்னில் சார்ந்திருக்குமாறு பார்த்துக் கொண்டா மரியா. கணவனை பல வருடங்களுக்கு முன்பே இழந்திருந்த மரியா தன் மகளை தனது அருகாமையிலேயே வைத்திருப்பதன் மூலம் தனது தனிமையைப் போக்கிக் கொண்டா போலும். தாயின் சார்பில் இருந்ததால் தான் என்னமோ தான் முழுமையாகத் தனித்துவிட்டதாக உணர்ந்தாள் கிறிஸ்தீனா. அந்த நேரத்தில் அவளுக்கு துணையாக கென்னியா மட்டுமல்ல ஆறுதலாக இருந்தவன் மார்க்கோவும் தான். கிறிஸ்தீனாவின் அலுவலகத்தில் வேலை செய்த அவன் நட்பு இக்காலப் பகுதியில் தான் காதலாக மாறியது. மரியா இறந்த மூன்றாவது மாதத்தில் இருவரும் கிறிஸ்தீனா விட்டில் கூடி வாழத்தொடங்கி விட்டார்கள்.

கிறிஸ்தீனாவின் நான்காவது காதலன் தான் மார்க்கோ. படிக்கும் காலத்து காதல் முதிர்வற்றதாலோ என்னவோ வந்த வேகத்தில் மறைந்தும் போனது.அதன் பின் அவள் வேட்டைக்குச் செல்லும் போது அந்திரேயா என்ற வேட்டைக்காரனைச் சந்தித்தாள் , அவனிடம் அளப்பரிய அன்பு காட்டினாள். ஆனால் அவன் கிறிஸ்தீனாவை ஆழமாகக் காதலிக்கவில்லை..அந்திரேயாவின் வாழ்வில் வேறொரு பெண் குறுக்கிட்டபோது மிக இலகுவாக கிறிஸ்தீனாவை களட்டிவிட்டான் என்றே சொல்ல வேண்டும். கிறிஸ்தீனாவால் தான் அவன் பிரிவைத் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. மிகவும் மன அழுத்தத்துக்கு உள்ளானது அப்பொழுதுதான். கல்லூரியில் படிக்கும் போது விளையாட்டாக சிகரட் குடிக்கப் பழகியிருந்த அவள் செயின் ஸ்மோக்கர் ஆனது இந்தக் காலத்தில் தான். இன்று நாளொன்றுக்கு மூன்று தொடக்கம் நாலு பெட்டிகள் சிகரட்டை ஊதித்தள்ளுகிறாள்.

ஐந்து வருடங்களுக்கு முன் தனது வீட்டை புதிப்பித்த போது எலக்ரீசியனாக வேலைசெய்த தனியேலையிடம் தோன்றிய காதலும் மிக விரைவாக முறிந்து போக கிறிஸ்தீனாவே காரணமாக இருந்தாள்.உண்மையில் காதல் என்ற போர்வையில் தனது காரியங்களை சாதித்துக்கொள்ளப் பார்த்த கிறிஸ்தீனாவால் போலியான காதலுக்குள் பலகாலங்கள் இருக்க முடியவில்லை.

மார்க்கோவோடு கூடி வாழத் தொடங்கிய போது கிறிஸ்தீனாவுக்கு 41 வயது ஆகியிருந்தது..மார்க்கோ ஏற்கெனவே கலியாணமாகி விவாகரத்து வாங்கியிருந்தான். இரண்டு வளர்ந்த பிள்ளகளுக்கு தந்தை அவன்.

இளமையில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டாத கிறிஸ்தீனாவுக்கு இப்பொழுது அந்த ஆசையும் துளிர்விட்டிருந்தது. தாயின் இறப்புக்குப் பின்னர் தனக்கென நிரந்தரமான உறவு ஒன்று வேண்டும் என மிகவும் ஏங்கினாள்.

ஆரம்பத்தில் மார்க்கோவும் கிறிஸ்தீனாவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள். ஆனால் அவர்களிடையே மனப் பிளவு ஏற்பட நாயும் கிறிஸ்தீனாவின் சுத்தமற்ற தன்மையுமே காரணம் என்றால் நம்புவது கடினந்தான்.

மார்க்கோவுக்கு ஒவ்வாமை நோய் இருந்தது. சில உணவுகள் மட்டுமல்ல தூசும் நாய் பூனை முதலியவற்றின் மயிரும்கூட அவனது உடலுக்கு பாதிப்பைத்தருவனவே. மார்க்கோ மிகவும் தூய்மையை எதிர்பாப்பவனாக இருப்பதற்கு அவனது நோயும் ஒருவகையில் காரணம்தான் . அவன் தனது வீட்டை மிகத்தூய்மையானதாக அழகானதாக வைத்திருப்பான்.

கிறிஸ்தீனாவினை நாயை விற்றுவிட்டு தனது வீட்டில் வந்து வாழுமாறு பலதடவைகள் கேட்டுக் கொண்டிருந்தான்.

ஆனால் கிறிஸ்தீனாவுக் தனது நாயை பிரிந்து வாழுவது முடியாத காரியமாக இருந்தது.

நாயா மார்க்கோவா என்ற போராட்டத்தில் சிலகாலமாகச் சிக்கித்தவித்தவள், நேற்றுத்தான் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

கென்னியா, மார்க்கோ போல நாயா நானா என்று கிறிஸ்தீனாவிடம் உரிமைப் போராட்டம் நடத்தப் போவதில்லை. கென்னியாவின் அன்பு தூய்மையானது .எந்த எதிர்பார்ப்புமற்றது. நாயின் இறுதிக்காலம் வரை தொடரப்போவது.

நாளை அவள் தனக்கேற்ற சரியான துணையைத் தேடிக்கொள்ளக்கூடும். அதுவரை அவள் தனிமையைப் போக்க இந்த நாயொன்றே போதும்.

அவள் காலை உரசி தன் வாஞ்சையை வெளிப்படுத்திக் கொண்டிருந்த கென்னியாவை மீண்டும் இறுக அணைத்துக் கொள்கிறாள் கிறிஸ்தீனா. அந்த அணைப்புக்கு இணையாக அவள் முகத்தை நக்கி தன் அன்பை வெளிப்படுத்துகிறாள் கென்னியா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *